இராமநாதபுர மாவட்ட மண்ணில் சங்கப்புலவர்கள் முதல் முந்தைய நூற்றாண்டுப் புலவர்கள் வரை பலர் காணப்பட்டுள்ளனர்.  ஏனெனில் சங்கம் வைத்து தமிழ்வளர்த்த மதுரை மண்ணிற்குரிய புலமைத்திறன்  மண்சார்ந்த உறவுநிலையின் தாக்கம் பரவப்பட்டமையால் கவிபாடும் புலமைகளாக வெளிப்பட்டுள்ளனர். மண்ணைப் பொறுத்தே மக்கள். மண்வளம் செழித்தோங்கியதால் கவிவளமும் வளப்பமாயின. இறுதியாக அரைநூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் கணக்கிலடங்காப் புலவர் பெருமக்கள் வாழ்ந்தும், இலக்கியம் படைத்தும் சென்றுள்ளனர். அவ்வகையில் சுப்பையாபிள்ளையின் புவனேந்திர காவியம் எனும் நூல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் 1908 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  சுப்பையாபிள்ளை பற்றியும் இந்நூல் பற்றியும் விளக்கி எடுத்துரைப்பதாக  இக்கட்டுரை அமைந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் கடந்த நூற்றாண்டில் பல்வேறுபட்ட புலவர்கள் வாழ்ந்துள்ளனர். கூர்ந்த மதிநுட்பமும் அளவற்ற தமிழ்மீது கொண்ட வேட்கையும் பிரதிபலித்ததின் விளைவாக இலக்கியங்களாகப் பரிணமித்துள்ளன. அவ்வரிசையில் சரவணப்பெருமாள் கவிராயர், ஆறுமுகம்பிள்ளை, சொஸ்திகைப் புலவர், பிச்சைப் புலவர், ஐயாத்துரைப் பிள்ளை, நல்லவீரப்ப பிள்ளை, தெய்வநாயகம் பிள்ளை, பொன்னம்பலப் புலவர், சுப்பிரமணிய பிள்ளை, கல்யாணசுந்தரம் பிள்ளை, முத்து இருளப்பப் பிள்ளை, ஆறுமுகப் புலவர், இராமலிங்கம் பிள்ளை, முதுகுளத்தூர் புலவர் ஒருவர் (பெயர் தெரியாதவர்) முதலான புலவர் பெருமான்கள் இம்மண்ணில் பிறந்து பல இலக்கியங்களைப் படைத்துப் பெருமை சேர்த்துள்ளனர்.

மேற்சுட்டிய புலவர்கள் பற்றியும் அவர்கள் இயற்றிய நூல்கள் பற்றிய செய்திகளும் கிடைக்க அரிதாக அமைகின்றன. புலவர்களின் சந்ததினரிடம் நேரடியாகச் சென்று கள ஆய்வில் கேட்டாலும் போதுமான சான்றுகள் கிடைக்கப் பெறுவதில்லை. முதுகுளத்தூரில் பிறந்த புலவர்களின் வரலாற்றையும் படைப்புகளையும் வெளிக்கொணரப் பல்வேறு கட்டங்களில் முயற்சியெடுப்பினும் தோல்வி நிலையினையே அடையமுடிகிறது. புலவர் சார்ந்த உறவுகளை நாடினாலும் முழுமையான தரவுகள் கிடைக்காதது கவலைக்குரியதாகும். முதுகுளத்தூர் புலவர்களின் அடிச்சுவடுகள் களையப்பட்டு வெற்றுக்கோடுகளாக காணப்படுகின்றன.

சுப்பையா பிள்ளை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தெய்வப்புலமை பெற்றவராக விளங்கியிருந்த நல்லவீரப்பப் பிள்ளை என்பவருடைய பெயரனாகத் தோன்றியவர் சுப்பையாபிள்ளை என்னும் வித்தியானந்த சுவாமிகள் ஆவார்.  இவரது தந்தை இராமசாமிப் பிள்ளை. துவாத்திரிம் தசாவதானி சரவணப்பெருமாட் கவிராயருக்கு இவர் மருமகர். ஆதிநல்லவீரப்பபிள்ளை என அழைக்கப்படுபவர் இவரது தந்தையின் தாத்தா ஆவார். இவர் எழுதிய நூல் கொடுமளூர்க் குறவஞ்சி. இவ்வாறு கவிபாடும் புலவர் குடியில் பிறந்த சுப்பையாபிள்ளை செந்தமிழில் செய்யுள் பாடி மதுரகவிஎன்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

மதுரகவி யாதெனில், கவிதை புனையும் புலமையை வெளிப்படுத்தும் ஒரு பாங்கு. ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்னும் நான்கு வகைப் புலமைகளில் பலர் சிறப்புற்று விளங்கிய புலமைநெறி என விளக்கம் தருகிறது விக்கிப்பீடியா.

சேதுபதி மன்னர்களது பரிசுகளும் பாராட்டுகளும் பெற்ற தமிழ்ப் புலவர்களில் சுப்பைபிள்ளையும் அடங்குவார். மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி ஆட்சிக்காலத்தில் (கி.பி.1911-1929)  தனிப்பாடல்கள் பாடிப் பரிசில் பெற்றுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. (சேதுபதி மன்னர் வரலாறு, .196)

புவனேந்திர காவியம்

          முத்துராமலிங்க சேதுபதியின் பொருளுதவியால் மதுரைத் தமிழ்ச்சங்க அச்சியந்திர சாலையில் இந்நூல் 1908 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. ஐம்பத்து மூன்று (53) படலங்கள், மூவாயிரத்துத் தொண்ணூற்றாறு (3096) பாடல்கள் கொண்டு அமைக்கப்பட்டு முந்நூற்றியறுபது (360) பக்கங்களுடன் திகழ்கின்றது இந்நூல்.

நாட்டுப்படலம் (45), நகரப்படலம் (55), அரசியற்படலம் (34), தாலபுரந்தரன் தவசுப்படலம் (26), மகார் உற்பத்திப்படலம் (81), மந்திராலோசனைப் படலம் (86), நகர்நீங்குபடலம் (29), வளங்காண்படலம் (35), சோலையைக் கண்ணுற்ற படலம் (33), அசனங்குணர்தற்கேகு படலம் (26), நாகம் வெட்டிய படலம் (41), பூலோகரம்பையைக் கண்ணுற்ற படலம் (119), வரலாறு கூறிய படலம் (21), மந்திரி சோக படலம் (38), அரண் சோக படலம் (46), விஜயதரன் வேட்டைப் படலம் (45), பூலோகரம்பையின் வடிவுரைத்த படலம் (30), விசையதரன் மோகமுற்ற படலம் (17), புவனேந்திரன் முனிவுற்ற படலம் (31), புனல்குளியோடு படலம் (61), விசையதரன் கைக்கிளைப் படலம் (40), வஞ்சனைப் படலம் (143), பூலோகரம்பை சோகப்படலம் (57), பெண்ணழைத்த படலம் (83), பூலோகரம்பை பூசாவிதிப் படலம் (92), புவனேந்திரனுயிர் பெற்ற படலம் (35), பூலொகரம்பையைத் தேடவிட்டபடலம் (42), எழுச்சிப் படலம் (33), வெங்கட்டம்மால் காவற் படலம் (60), சமர்த்தன்றூதுப்படலம் (96), புவனேந்திரன் கேள்விப் படலம் (25), புவனேந்திரன் படையெழுச்சிப் படலம் (25), தருமன் தசமுகன் கதையுரைத்த படலம் (196), படைத்தலைவர் வதைப்படலம் (18), சித்திர கேசரிசிங்கன் வதைப்படலம் (212), விஜயதரன் சோகப்படலம் (42), வீரசிங்கன் விசையதரன் படலம் (298), ஈமவிதிப்படலம் (22), தருமன் பட்டாபிஷேகப்படலம் (41), விரிஞ்ச நகரடைந்த படலம் (21), தாலபுரந்தரன் விரிஞ்ச நகரடைந்த படலம் (14), திருக்கலியாணப் படலம் (78), தன்னகர் சென்ற படலம் (34), மீட்சிப்படலம் (19), கார்க்கோடகன் வதைப்படலம் (57), புத்திசிகாமணிக் கிடையூறுற்ற படலம் (56), புத்திசிகாமணி கல்லுருவான படலம் (53), புத்திசிகாமணிக் கல்லுருக்கழிந்த படலம் (13), புவனேந்திரன் முடிசூடு படலம் (15) எனும் அமபத்தி மூண்ரு படலங்களில் காணப்பெறுகின்றன.

பா வகையும் அமைப்பு முறையும்

இக்காவியம் விருத்தப்பாவால் பாடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இக்காவியத்திற்குச் சாற்றுகவி  பாடிய ஏழு புலவர்பெருமான்களில் இரு புலவர்களைத் தவிர ஏனைய புலவர்கள் விருத்தப்பா வகையில் பாடியுள்ளனர்.

அனைத்துப் பாடல்களும் விருத்தப்பா என்ற போதிலும் அதை எடுத்துரைக்கும் முறையில் மூன்று வகைகளில் பாக்களைச் சீர்பிரித்து அமைக்கப்பட்டுள்ளன.  அவையாவன:

பா அமைப்பு முறை: 1                 

தன்மகன் பாற்கூறுத லுந்தங்கள் குலத்தொருவனைப் பொய்ச்சனகியாக்கிப்

பொன்னகர் விட்டெழுந்து வடபாற் போனமாருதிபாற்பு கன்றுகாட்டி

மின்வடிவா ளாலெறிந்து மாறிநிகும்பலை புகுந்தான் விறலோனங்கண்

மன்னவன் யாற்சொல மருகுந்தன்மை கண்டுவீடணன் போய்வந்துசொல்ல

 • (தருமன் தசமுகன் கதையுரைத்த படலம் :166)

மேற்கண்ட பாவகையானது நீண்ட சீர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும்.

பா அமைப்பு முறை: 2

                   உலகமெலாந் தன்னுளத் திலடக்கிச்சு த்த

                             வொளியானவெறு வெளியை யுணர்ந்து நித்தங்

                   கலலமிலா திருந்து சுகம் பெற்றவன்பர்

                             கண்மணியை யானந்தக் கடலை மெய்யின்

                   றிலகமென விளங்கிய பொன் மலையைவானத்

                             தெள்ளமுதைக் கற்கண்டதைத் தேனைப்பாலை

                   யிலகைய தென்மணிமாடக் கூடன் மேவு

                             மெம்மிறையை யெப்போது மேத்திவாழ் வாம்

 • (சமர்த்தன் தூதுப்படலம்: 1)

மேற்கண்ட பாவைகயானது சிறிய அடிகளால் எட்டுச் சீர்களைக் கொண்டு அமைக்கப்பெற்றுள்ளது.

பா அமைப்பு முறை: 3

புவனவிந்திர னெனப்புலி யெலாம்புகழ் 

                   நவம்விளம்பிய திருநாயகன் றனக்

                   குவமையெவ்வு லகினுமுரைக்க நேருமோ

                   தவமெலாந்தனை விலகாது தாங்கினான்

 • (தருமன் நீதியுரைத்த படலம்:1)

மேற்கண்ட பாவகை குறைந்த சீர்களில் நான்கு அடிகளில் அமைக்கப் பெற்றுள்ளது. ஆக, சீர், அடி போன்றவை மாறினாலும் இவை அனைத்தும் விருத்தப்பா வடிவில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

சாற்றுக்கவியும் பாடியோரும்

நூலொன்று வெளியிடுவதற்கு முன் தொடர்புடைய புலமைவாதிகளிடம் நூல் குறித்தான கருத்தாக்கங்களையோ அல்லது மதிப்பீடுகளையோ பெற விழைவது நூலுக்கு அணிசேர்க்கும்.  ஒரு நூலுக்கு முகவுரை, பதிகம், அணிந்துரை, புறவுரை, தந்துரை, புனைந்துரை போன்றவை இடம்பெற வேண்டுமென்பதைப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலில் ,

முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்

                        புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்  – (நன். எழுத்து.1)

எனப் பவணந்தியார் எடுத்துரைக்கின்றார்.

நூலின் பெருமைகளை அந்நூலுக்கு அணிவிப்பது அணிந்துரை. நூலைப் பற்றிய புனைந்துரை கூறுவது புனைந்துரை. நூலில் கூறப்படாத பொருளைப் பற்றிக் கூறுவது புறவுரை. நூலில் சொல்லப்பட்டுள்ள  பொருள் அல்லாதவற்றைத் தந்து  விளக்குவது தந்துரை.

சாற்றுக்கவி என்பது முந்தைய காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காகப் பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதையாகும்.

இக்காவியத்திற்கு தசாவதானி சரவணப்பெருமாள் கவிராயர், சோடசாவதானி வேலாயுதக் கவிராயர், அட்டவதானி கல்யாண சுந்தரம்பிள்ளை, சித்திரகவி எம்.தெய்வநாயகம்பிள்ளை, வெண்பாச்சிலேடைப்புலி வேம்பத்தூர் பிச்சுபாரதியவர், சர்க்கரை ராமசாமிப் புலவர், தமிழ்ச்சங்க கவிவித்துவான் சதாசிவம்பிள்ளை ஆகியோர் சாற்றுக்கவியும், நான்காம் தமிழ்ச் சங்க வித்வான் சோதுகுடி எம்.கே. அப்துல் காதிறு ராவுத்தர் சிறப்புப் பாயிரமும் பாடியுள்ளனர்.

. தசாவதானி சின்ன சரவணப்பெருமாள் கவிராயர்

சரவணப் பெருமாள் கவிராயர் இருவர் உண்டு.

 1. அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர்
 2. தசாவதானி சிறிய சரவணப்பெருமாள் கவிராயர்

அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர் முதுகுளத்தூரில் பிறந்தவர். சிவஞானயோகிகளின் மாணாக்கருளொருவராகிய சோமசுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். இவர் கல்வியில் தேர்ச்சியுற்று அட்டாவதானம் செய்து சேது சமஸ்தான வித்துவானாயிருந்தார். (தனிப்பாடல் திரட்டு, .542)

இராமநாதபுரம் சமஸ்தானம் மகாவித்துவான் துவாத்திரிம் தசாவதானி சிறிய சரவணப்பெருமாள் கவிராயர் முதுகுளத்தூரில் பிறந்தவர். இவர் சேதுநாட்டின் புலவர் பரம்பரையைச் சேர்ந்தவர். அஷ்டாவதானம் ஆதி சரவணப்பெருமாட் கவிராயரின் பேரர். தான் இயற்றிய சேதுபதி விறலிவிடுதூது எனும் நூலில் தன்னைப் பற்றிப் பின்வரும் அடிகளில் பேசுகின்றார்.

”………..  ஆதி முதுகுளத்தூர்

          மேவுவடி வேலன் அருள் மேவிவளர்நாவலவ

          தீர அவதானம் செய்சரவ ணப்பெருமாள்

          பேரன்ன வந்த பிரபலவான்சாரம்

          தரும்துவாத்  ரிம்சதாவ தானிபுல வோர்யா

          வருந்துதிக்கும் பூங்கணைவில் மாரன்திருந்தும் எழில்

          நாடு புகழ்சரவணப்பெருமாள்’’ (முன்னுரை -vii)

திருச்சுழிய அந்தாதி, புவனேந்திர அம்மானை, கயறகண்ணி மாலை, கந்தவருக்கச் சந்த வெண்பா, குன்றக்குடிச் சிலேடை வெண்பா முதலிய நூற்களைப் படைத்துள்ளார். தமிழ்ப் பற்றும் அறப்பற்றும் பெரிதும்கொண்ட இவர் இக்காவியத்திற்கு சாற்றுக்காவியத்திற்கு,

கலைமகளுக்கொரு மகனிங்கினெனச் சொலலேன துமருமக னாங்கன்னற்

          சிலைமகனுக்குக் கழகுதவும் முதுகுளத்தூர்ச் சுப்பயவேள் தெளிந்துகற்ற

          நிலைவிளங்கப் பலகலையி னெறியாய்வுற் றொருங்குபட நிரைத்தேமுன்னீ

          ருலகமெலாம்புதுமை தரப்புவனேந்திர காவியமின்றுரை செய்தானே

எனப் பாடியுள்ளார்.

. சோடசாவதானி வேலாயுதக் கவிராயர்

ஒரே நேரத்தில் பதினாறு விடயங்களை அவதானிக்கும் ஆற்றலுடையவரை சோடசாவதானி என அழைப்பர். இவர் சமஸ்தான வித்துவானாவார். இக்காவியத்திற்கு,

          கல்லார்க ளெளிதினிற் கற்றிடக்கற்றாரிது போலுங்கற்க நாமோ

          வல்லாரென்ற திசயிருப்பமனுநீதி நெறிக்கியது வோர்வரம்பாமென்னத்

          தொல்லாரும்பு வனேந்திரகாவிய மென்றாருபுது நூற்சொற்றான்மற்றை

          யெல்லாநூலும் பழநூலெனப்பு கலச்சுப்பயவேளிசை வலோனே

எனும் அடிகளில் சாற்றுக் கவி பாடியுள்ளார்.

. அட்டாவதானி கல்யாணசுந்தரம்பிள்ளை

ஒரே நேரத்தில் எட்டு வேலைகளைக் கவனித்துச் செய்யக் கூடியவரை அட்டாவதானி என்பர். இவர் முதுகுளத்தூரில் பிறந்தவர். மெய்யரிச் சந்திர நாடகம் (1905) எனும் நூலை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சுப்பையாபிள்ளையை  பாக்கியவான் எனவும், முதுகுளத்தூர் எனும் ஊரிற்கு உயர்ந்த கர்ணன் போல் செஞ்சொல் கொண்டவர் எனப் பாடியுள்ளார். இதனை,

நோக்கிய கண்களிப்பேற நுவன் றிடுநாவினிப் பேறநுவன் மற்றோர்க

          ளாக்கிய நூல்கசப்பேறப் புவனேந்திர காவியமின்றறைந்தானெங்கள்

          பாக்கியவான் முதுகுளத்தூர்ப் பதிநிலைமைக்குயர் கர்னன்பால்போற்செஞ்

          சொல் வாக்கியுயர் சுப்பயவேள் மலர்வேதனாவிலுரை வாணிமாதோ

எனும் சாற்றுக்கவிவழி அறியலாம்.

. சித்திரகவி எம்.தெய்வநாயகம் பிள்ளை

நால்வகைக் கவிகளுள் ஒருவகை சித்திரக்கவி. சித்திரகவியை அணியிலார் சொல்லணியில் அமைத்தனர். இதனை மிறைக்கவியென்றும் கூறுவர். சோமூர்த்தி, கூடசதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாகபந்தம், வினாவுத்தரம், காதைகாப்பு, கரந்துறைச் செய்யுள், சக்கரம், சுழிகுளம், அருப்பதோபத்திரம், அக்கரச்சதகம் முதலியவை.

முதுகுளத்தூரைச் சேர்ந்த இவர் தமிழ்ச்சங்க வித்துவான் ஆவார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்ற இவர் சித்திரகவிகள் இயற்றுவதில் வல்லவர். வெண்ணீர்வாய்க்கால் கா.கூ.வேலாயுதப்புலவர் இயற்றிய திருப்பாடல் திரட்டு எனும் நூலிற்குச் சாற்றுக்கவி(23.05.1910) பாடியுள்ளார். இக்காவியத்திற்கு நான்கு பாக்களில் சுப்பையாபிள்ளையை, விவாதங்களைத் தீர்க்கநின்ற தர்மகர்த்தா’, ‘விருத்தங்களைப் பாடுவதில் நற்கவி’  ‘நவீன கற்பி’, ‘தாலங்காரப் பிரசங்கி எனப் பாடியுள்ளார்.

சுப்பையாபிள்ளையவர்களை வாதங்களைத் தீர்க்கவந்த தீர்க்கதரிசி எனவும், விருத்தங்களைப் பாடுவதில் சிறந்தவரெனவும் அவர் பாடிய காவியத்தை பெருமிதப் படுத்தித் தம் சாற்றுக்கவியில் உரைத்துள்ளார்.

சேதுசமஸ் தானத்தைச் சேர்ந்த முதுகுளத்தூர்

                        ராதிக்கிரா மாந்தரகளின் விவாதங்

                        களைத்தீர்க்கா நின்றதர்ம கர்த்தாவிருத்தங்

                        களைப்பாடு வதிற்கவி

 

                    சக்ரவர்த்தியான கம்பனுக்குச் சமானங்கொத்

                        துக்கணக்குப் பாத்யசுபயோகிமுக்கணனை

                        யேசியவன் பிர்மாவிஷ்ணு யேசுமகமூதெனும்

                        தாசம்ப்ர தாயச்சமா

 

தானநிர்மாணந் தெரிந்த தத்துவ விசாரியெனம்

                        மானருமையாய்ப் பெற்றமைத்துனர்வீனகற்பி

                        தாலங்காரப்ரசங்கி சற்சனர்சினேகரிந்த்ர

                        சாலவல்லவர் மஹாராஜ

 

ராஜஸ்ரீ சுப்பையாபிள்ளையவர்கள் ராஜ

                        ராஜன் புவனேந்த்ர ராஜனதுவீசுபுகழ்

                        பெற்றகதையைப் பந்தமாயியற்றினார்களைக்

                        கற்றவர்கண் ணென்று சொன்னார்கள்

. வெண்பாச் சிலேடைப்புலி வேம்பத்தூர் பிச்சுவையர் (1882-1921)

          இவருடைய வழிமுறையினர் கல்விச் சிறப்புடையவர்களாய் இருந்தமையால் ‘பாரதி’ எனும் சிறப்புப் பெயர் பெற்றனர். பாரதி எனும் சொல்லிற்கு  பண்டிதன்எனும் விளக்கத்தை முன் வைக்கின்றது தமிழ் விக்சனரி.  செளந்தரிய லஹரியை தமிழாக்கம் செய்த வேம்பத்தூர் வீரை கவிராஜ பண்டிதர் பரம்பரையில் பிறந்தவர். இவரின் தந்தை ’சாம ஆண்டி ஐயர்’ எனும் புலவர் ஆவார்.

’இவர் சிலேடைச் செய்யுட்களை விரைவாக இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தமையால் சிலேடைப்புலி பிச்சுவையார் என அழைக்கப்பெற்றார்.’ (தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம், தொகுதி – மூன்று, ப.355)

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணவரான வன்தொண்டரிடத்தில் கல்வி கற்றுத் தன் கவித்திறமையை வளர்த்துக் கொண்டார். முறையூர் சண்முகம் செட்டியார், பாஸ்கர சேதுபதி மன்னர், சிவகங்கை நாட்டுத் தலைவர் முத்துவடுகநாதர் போன்றவர்களிடம்  செய்யுள் இயற்றி பரிசில்களையும், நன்கொடைகளையும் பெற்றுத் தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். பாஸ்கர சேதுபதி மன்னரின் அரசவையில் ஆஸ்தான புலவராய்த் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை சோமசுந்தரப் பெருமாளுக்கும் திங்களுக்கும் சிலேடையாக ஒரு வெண்பாவும், மீனாட்சி அம்மைக்கும் திருமண மண்டபத்திற்கும் சிலேடையாக ஒரு வெண்பாவும் பாடியுள்ளார். முத்துவடுகநாதரின் அவைக்களப் புலவராக அமர்ந்து அவர்மீது காதல் பிரபந்தம் என்ற நூலைப் பாடியுள்ளார்.

இயற்றிய நூல்கள்

 1. ஜெய சிந்தாமணி விநாயகர் பதிகம்
 2. திருப்பரங்குன்ற முருகன்மேற் பாடிய சிந்து
 3. தடுத்தான்மாலை
 4. ராஜராஜேஸ்வரி பதிகம்
 5. பனங்குடி பெரிய நாயகியம்மை பதிகம்
 6. மதுரை நிரோட்டக யமகவந்தாதி
 7. பொன்மாரிச் சிலேடை வெண்பா மாலை
 8. வல்லைக் கும்மி, உமையாண்டாள் கும்மி
 9. ஸ்ரீ சிருங்கேரி ஆச்சாரியர் பதிகம்
 10. அரிமளம் சிவானந்த சுவாமிகள் பதிகம்
 11. சங்கராச்சாரியார் பதிகம்
 12. குன்றக்குடி சண்முகநாதர் உலா

சுப்பையாபிள்ளை இயற்றிய புவனேந்திர காவியத்திற்குப் பாடிய சாற்றுக்கவி பின்வருமாறு:

சீரார் முதுகுளத்தூர்ச் செல்வனுயர் மால்முருகன்

 பேரார் தருசுப்பிர மணுயனேராரும்

சீலப் புவனேந்திரன் கதையைச் செப்பினன்கூர்

தாலத்தார் கொண்டாடத்தான்

. இராமசாமிப் புலவர்

          இராமநாதபுரம் சமஸ்தான வித்துவான் சர்க்கரைப்புலவர் மரபில் உதித்தவரும், சோடக்குடி சேதுப்புலவரின் குமாரரும், மன்னார்குடி காலேஜ் தலைமை யாசிரியருமான சர்க்கரை இராமசாமிப் புலவர் இக்காவியத்திற்குச் சாற்றுக்கவிப் பாடியுள்ளார். இக்காவியச் சாற்றுக்கவியில் சுப்பையாபிள்ளையை முக்கனித்தேன், வானமுதுப்புலவர் என்று அவரது கவிச்சிறப்பை புகழ்ந்துள்ளார். அதனை,

முக்கனித்தேன் வானமுதெனப்புலவர் முடிதுளக்கிச் செவியேற்கத்

            தக்கவர்புகழு முதுகுளத்தூர்வாழ் தருதமிழுணர்ந்த சற்குணனித்

            திக்கெலாம்வியந்து செப்பிடப்புவனேந்திரன் கதைபாடினன் குகனன்

            பர்க்கெலாமினிய சுப்பையாவேளென் பாலுமிக்குறை வுடையோனே

எனும் அடிகளில் அறிய முடிகிறது.

. சதாசிவம்பிள்ளை

           இவர் நாகை நீலலோஜனிப் பத்திராதிபதிரும், தமிழ்ச்சங்க வித்துவானும் ஆவார். புவனேந்திர காவியத்திற்கு சாற்றுக்கவியில், சுப்பையாபிள்ளையவர்களை “செந்தே மணக்கும் முதுகுளத்தூர்” எனப் பாடியுள்ளார். இதனை,

பூமணக்கும் புவனேந்திரன் புகழ்மணக்குங் காவியத்தைப் புலவோர்தங்கள்

            நாமணக்கச் செவிமணக்க நல்லறிவெலாமணக்க நக்லிணான்செந்

            தேமணக்கு முதுகுளத்தூர்த் திசைமணக்கும் புகழான்செல்வமிக்கு

            மாமணக்குஞ் சுப்பையாவாய் மணக்குந்திருப்பெயர் கொண்மகிமையோனே

எனும் அடிகள் மூலம் அறியலாம்.

. எம்.கே.எம். அப்துல்காதிறு ராவுத்தர்

          சிவகங்கைத் தாலூகா போர்டுமெம்பராகவும், இராமநாதபுரம் விவசாயசங்க நிர்வாக சபை மெம்பர்களிலொருவரும், இளையான்குடி மாஜிஸ்பெஷல் மாஜிஸ்திரேட்டும், நான்காம் தமிழ்ச்சங்க வித்துவான்களில் ஒருவராகவும் திகழ்ந்தவராவார்.

இளையான்குடிக்கு அருகிலுள்ள சோதுக்குடி என்னும் ஊரில் பிறந்தவர். குலாம் காதிறு நாவலரிடம் தமிழ் பயின்றார். ஆங்கில மொழியையும் நன்கு கற்றறிந்தவர். சேது மன்னரது அரிய நட்பினைப் பெற்றவராகத் திகழ்ந்துள்ளார். மன்னரது உயர்ந்த உள்ளத்தையும் உன்னத செயல்களையும் கண்டு மனம் நெகிழ்ந்த காரணத்தால் தாம் பாடிய மதுரைத் தமிழ்ச்சங்க மான்மியம் எனும் சிற்றிலக்கியத்தில் சேதுபதிகளது செழுங்கெழு குடியையும், கொடைப் பெருமைகளையும் பாடியுள்ளார். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். அவை,

 1. மகுமூது பஞ்சரத்தினம்
 2. மதுரைத் தமிழ்ச் சங்க மான்மியம்
 3. நாமகள் நவமணிமாலை
 4. சோதுக்குடிச் சிங்கார வழிநடைச் சிந்து
 5. கட்டோம்பு அத்திவா வழிநடைச்சிந்து
 6. நாகூர் நாயகர் கீர்த்தனாரத்தினம்

என்பன.

புவனேந்திர காவியத்திற்குப் பன்னிரண்டு பாடல்களில் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். பாடப்பட்ட பன்னிரண்டு பாடல்களில் சுப்பையா பிள்ளையின் ஊர், பிறப்பு, சிறப்பு போன்றவற்றைக் காணமுடிகிறது.

முதலிரு பாடல்களில் பாண்டி நாட்டின் சிறப்பு, சேதுபதி மன்னனின் சிறப்பினைக் கூறும்விதமாக

நாமருவுஞ் சுவைவேட்டு மீட்டுவரும் வளப்பாண்டி நாட்டினோர்பால்

தென்னாட்டுக் கணியாகுஞ் சேதுபதி மன்னரவை சிறப்பு மேவும்

எனப் பாடியுள்ளார்.

மூன்றாவது பாடலில் முதுகுளத்தூர் மன்ணில் வாழ்ந்த புலவரான சரவணப்பெருமாள் கவிராயரை,

          வண்டமிழ்நா வலர் பலருட் சிறந்தசர வணப்பெருமாள் வலவன் முன்னே

விண்டபுவனேந்திரனம் மானையெனு முன்னூலை விரும்பி யாய்ந்துட்

போற்றும் விதமாகப் பாடியுள்ளார்.

அடுத்த மூன்று பாடல்களில்  சேதுபதி மன்னர்களான பாஸ்கர சேதுபதி, ராஜராஜேஸ்வரி, முத்துராமலிங்க சேதுபதி போன்றோரைப் புகழும் விதமாக வரிசைப்படுத்தி

          மற்றதனுக் குற்றபெயர் புவனேந்த்ர காவியமா வழுத்தி முன்னஞ்          சொற்றபுகழ்ச் சேதுபதி மன்னர்குலப் பாற்கடலிற் றோன்று தோன்ற

            லூற்றதரு நீதிமணியா னோருருக்கொண் டெனக் கொடையாலோஞ்குசீர்த்தி

            பெற்றிருந்த பாற்கரரா ஜன்புரிந்த பெருந்தவத்தாற் பிறந்த செல்வன்

 

            தேசமுழு வதும் புகழுந் தன்மரபு மன்னர்குல தெய்வ மென்றே

            நேசமுடன் பணிபுரியும் ராஜரா ஜேசுவர் நெடுந்தாட் கஞ்சம்

            வாசமுறு மணமேவி யருள்வாரி யிடைமூழ்கி வளர்தற் கேற்ப

            ராஜரா ஜேசுவர துரையென்னப் புகலருமை நாம பூமன்

 

            போற்றிசெயும் பொலங்கழலான் புந்தியினாற் கருணையினாற் புகழா லன்பா

            லேற்றமிகு மகிபன்முத்து ராமலிங்க சேதுபதி யினிது கேட்ப

எனப் பாடியுள்ளார்.

முதுகுளத்தூ ரெனப்பகருந் தென்குளந்தை யிலங்க வாழ்வோன்

புலவரவர் பிறந்த (தற்போதைய) முதுகுளத்தூர் எனும் ஊரிற்கு முந்தைய பெயர் தென்குளந்தாபுரி என அழைக்கப்பட்டு வந்ததென மேற்சுட்டிய அடி மூலம் அறியமுடிகிறது.

புலவரவர் பல நூற்களைக் கற்றறிந்தவரெனவும், கவிகள் இயற்றியவதில் சிறப்புமிக்கவர் என்பதையும் பகரும் விதமாக

பொங்கும்பெரும் பேர்படைத்தான் பன்னூலுங் கற்றறிந்த புலமை யாளன்

எனும் அடியினைக் குறிப்பிட்டுள்ளார்.

          புலவரவர்களின் பரம்பரையைச் சிறப்பிக்கும் வண்ணம் அவரது தந்தை இராமசாமிப்பிள்ளை, அவரது தாத்தா ஆதிநல்லவீரப்பப் பிள்ளையைப் பற்றி எடுத்துக்கூறி கவிமழை பொழியும் வாக்குக்குரியோர் என்கிறார்.

திருந்துதெய்வப் புலமைநல்ல வீரப்பக் குரிசில்பவுத் திரனாஞ் செம்மல்

            முருந்தனைய நகைமடவார் மடலெழுது வடிவழகன் முதியோர் நெஞ்சு

            ளிருந்துவஅர் தருராம சாமிமகீ பதிதவத்தா லெய்து மெய்யன்

            பொருந்துபெரு மழைவானஞ் சொரிந்ததெனக் கவிமாரி பொழியும் வாக்கான்

புலவரவர்களின் கல்வி ஞானத்தை போற்றும் விதமாகவும், செய்யுள் இயற்றுவதில் கவிச்சிங்கமாய்த் திகழ்ந்து சுவைமிகு பாடல்களை இயற்றுவதில் வல்லவர் என்பதை ,

          குப்பையாம் பிறநூலென் ற்றிந்தறநூன் முழுதறியுங் குணவான் யாண்டுந்

          தப்பையாய் தருபுலவர் தலைவணங்க நவைசிறிதுஞ் சாரா மேலோன்

          சுப்பையா பிள்ளையெனுங் கவிச்சிங்க மிவன்பாடற் சுவையை நோக்கி

          ணோப்பயாங் கண்டதிலையெனப் புவன முழுவதுமின்று வந்தமாதோ

எனும் அடிகளின் மூலம் அறியலாம்.

சுப்பையாபிள்ளையின் இறுதி வாழ்க்கை

காசிக்கு நடைபயணம் சென்று காசி குருநாதரிடம் தீட்சை பெற்றுள்ளார். காசியிலிருந்து படிக லிங்கத்தைக் கொண்டு வந்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகிலுள்ள இடத்தில் மடம்  (தற்போது வழக்கில் உள்ளது) ஒன்றை ஏற்படுத்தினார். 1918ஆம் ஆண்டு மடத்தைப் புனரமைத்தல் தொடர்பாக கைப்பிரதி அடிக்கப்பட்டதென அறிய முடிகிறது. அதன்பின்னர் 1920 ஆம் ஆண்டில் அவரது குடும்பத்தார் குருபூஜை நடத்தியுள்ளனர். ஆக இடைப்பட்ட ஆண்டான 1919 ஆம் ஆண்டில் இவர் இறந்திருக்கலாமென யூகிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் சுப்பையாபிள்ளையவர்கள் தோற்றுவித்த மடத்தை மீண்டும் தொடங்கி இறைப்பணி யாற்றுவோமென அவரது சந்ததினர் கூறுகின்றனர். இவரைப்போல் மறைந்து கிடக்கும் பல்வேறு புலவர்களின் படைப்புகளையும் வரலாற்றையும் வெளிக்கொணர்வது தமிழர்தம் கடமையாகும்.

துணைநூற்பட்டியல்

 • அறிவொளி,அ, (உ.ஆ), 2008, தனிப்பாடல் திரட்டு, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
 • இராமசாமிப் புலவர்,சு.அ, 1960, தமிழ்ப் புலவர் வரிசை (பகுதி-1), சைவ சித்தாதந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை..
 • …………………………., 1960, தமிழ்ப் புலவர் வரிசை (பகுதி-2), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
 • …………………………., 1960, தமிழ்ப் புலவர் வரிசை (பகுதி-3), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
 • …………………………., 1960, தமிழ்ப் புலவர் வரிசை (பகுதி 5), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
 • கந்தையா .ந.சி, 2003, தமிழ்ப் புலவர் அகராதி, அமிழ்தம் பதிப்பகம், சென்னை.
 • சிரஞ்சீவி (பதி.), 2005, சேதுபதி விறலிவிடு தூது, பிரேமா பிரசுரம், சென்னை.
 • சுப்பிரமணியபிள்ளை.கா, 1953, இலக்கிய வரலாறு (பகுதி-2), ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை.
 • சுப்பையாபிள்ளை, 1908, புவனேந்திர காவியம், மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை.
 • சொக்கலிங்கன் ராய. (பதி.), 1947, சேதுபதி விறலிவிடுதூது, இலக்கியப் பதிப்பகம், காரைக்குடி.
 • பழநியப்பன் .வெ, & பழநி.உ, (தொ.ஆ.), 1989, தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம், (தொகுதி 3), அண்ணாமலைப் பலகலைக்கழகம்.
 • வைத்தியநாதன். எச் (பதி.), 2000, பிற்காலப் புலவர்கள், உ.வே.சா, நூல்நிலையம், சென்னை.
 • கள ஆய்வு: நடராசன்,  முதுகுளத்தூர்.

சே.முனியசாமி

தமிழ் – உதவிப் பேராசிரியர்

ஜெ.பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

அகரக்கட்டு, தென்காசி

திருநெல்வேலி மாவட்டம்