நூல் : ஜன்மா, ஆசிரியர்  : முத்துவேலழகன், பதிப்பு : கௌமாரா புத்தக மையம், திருச்சி, பதிப்பாண்டு  : 2015 (எட்டாம் பதிப்பு), விலை  : உரூபாய் 80/-

மகாபாரதக் கதைக் களனில் அம்பை என்ற பாத்திரம் இந்நாடக நூலுக்கு மையப் பாத்திரமாய் அமைகின்றது. நாடகத் தொடக்கமே விறுவிறுப்பாய் ஒரு காட்சியை நம் மனக்கண்முன் நிறுத்துகின்றது. ஆம்பிரா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு மாளிகை. சூதகனுக்காக மயன் அமைத்துத் தந்த மோகனக் கலைக் கூடம். அங்கு ஒற்றைக் காலில் கட்டைவிரல் மேல் நின்று சிவமந்திரம் சொல்லிக் கொண்டிருக்கும் ஒருபெண் உயிளிர்ஒடுக்கத்திற்காக மரண தவம் செய்யும் அப்பெண் யாராக இருக்கும் எனச் சூதகன் யோசிக்கின்றான். அவள் தன்னை அம்பை என அறிமுகமாகின்றாள்.

இங்ஙனம் குதிரை ஓட்டம் போல் லாவகமாக அழகாக ஆர்வத்தைத் தூண்டி ஒரே மூச்சில் படிக்க வைக்கும் தொடக்கம்.

அம்பை தன்னைப் பற்றிக் கூறுகையில் நான் அடிபட்ட அரவம். கொடியவனின் உயிரைக் குடிக்கும் வகையில் சட்டை உரித்துக்கொண்டே இருப்பேன். பெண் இனத்தின் மேன்மையெல்லாம் பூக்காமல் காய்க்காமல் புழுதிபட வைத்துவிட்ட புல்லியனை வெல்லமுடியாத இப்பிறவி வேண்டாம். சிவன் வருவான் இன்னொரு பிறவி தருவான். எனக்கு ஏற்பட்ட பகை என் பெண்மைக்கு மட்டுமல்ல, பெண் இனத்திற்கே ஏற்பட்ட பகை எனத் தொடங்குகின்றது இந்நாடகம். தான் காசிராசனின் மூத்தமகள் அம்பை எனவும், இளையவர்கள் அம்பிகா, அம்பாலிகா எனவும், அம்பை சால்வனைக் காதலிப்பதாகவும், காசிராசன் சுயம் வரத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் நாடகக் கதை நீள்கின்றது.

அம்பைக்கும், சால்வனுக்கும் வாக்குவாதம் நடைபெறுகிறது. பாரத வர்ஷத்தின் கலாச்சாரத்தில் 1.பிரமமம் 2.தைவம் 3.பிரஜாபத்யம் 4.ஆரிஷம் 5.ஆசுரம் 6.காந்தர்வம் 7.பைசாசம் 8.ராக்கதம். இதில் சுயம்வரம் எங்கே இருக்கின்றது. வலிமையால் யாராவது கவர்ந்துவிட்டால் அம்பை தனக்குக் கிடைக்கமாட்டாள் என்ற அச்சம் சால்வனுக்கு ஏற்படுகின்றது. சால்வன் அஞ்சியது போலவே சுயம்வரத்தில் சிக்கல் ஏற்படுகின்றது. இங்ஙனம் கதை வளர்கின்றது.

நாடகத்தின் உச்ச கட்டமாக அத்தினாபுரத்திற்குச் சுயம்வர அழைப்பு அனுப்பப்படவில்லை. அமைச்சர் மூலம் இச்செய்தியை அறிந்த பீஷ்மர் ஆதிகாலம் தொட்டே அத்தினாபுரத்தின் அந்தப்புர மாந்தர்களாக காசிராசன் பெண்களே வந்திருக்கின்றனர். அதை மாற்ற பட்டயம் போட எப்படித் துணிந்தான் எனக் கடும் சினம் கொள்கிறான் பீஷ்மர். பிரமச்சாரிய விரதம் பூண்டவர் தளர்ந்த நடையுடன் நரைமுடியுடன் சுயம்வர மண்டபத்துள் அழையா விருந்தினராய் உள்ளே நுழைகின்றான். ராக்கத முறையிலே இப்பெண்களைக் கவர்ந்து செல்வேன் முடிந்தால் போரிட்டு மீட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறுகின்றான்.

பிரம்மசாரிய விரதம் பூண்டவன் என அச்சத்துடன் காணும்பொழுது தம்பி விசித்திரவீரியனுக்கு மூவரையும் மணம் முடிக்க எண்ணுகின்றான். மூவரையும் கயிற்றால் பிணைத்துத் தேரில் எடுத்துச் செல்கின்றான். ஆனால் அம்பை மறுக்கிறாள். சால்வனை விரும்புவதாகவும் காந்தர்வ மணத்தில் கலந்து வாழ்வதாகவும் தெரிவிக்கின்றாள். தாய் சத்தியவதி இவளை மருமகளாக ஏற்கமுடியாது என்றும் அம்பிகாவையும், அம்பாலிகாவையும் ஏற்றுக் கொள்கிறாள். அம்பையைத் தக்கப் பாதுகாப்புடன் சௌபால நாட்டு மன்னன் சால்வனின் நாட்டு எல்லைக்குள் கொண்டு சென்று விடுவதாக நாடக உச்சகட்டம் சரிகின்றது. நாடகத்தின் வீழ்ச்சியாக அம்பை வருகையை உணா;ந்த சால்வன் ஏற்க மறுக்கின்றான். பீஷ்மர் போட்ட பிச்சை வேண்டாம். பீஷ்மனின்  கரம்பட்டு இழுத்துச் சென்றவளை நான் எப்படி ஏற்கமுடியும் எனப் பீஷ்மனிடமே செல் என அனுப்புகின்றான். நீ உன் தந்தையிடமே போய் வாழ். வாழ வகையற்றுப்போனால் பெண்ணுக்குப் பிறந்த இடமே புகழிடம் என அனுப்புகின்றான். பெண் இங்கே ஆண் ஆதிக்க உணர்வில் சம மானிடப் பிறப்பாய், உணர்வும், உயிரும் உள்ள ஒரு ஜீவனாய் பார்க்கப்படவில்லை. ஏன்? எதற்கு, எவ்வாறு? எப்படி! இக்கொடூரச் செயல்கள்.

அம்பை தன் தந்தையிடம் செல்கிறாள். பெண்ணுக்கு வாழப் புகுந்த இடம் மட்டுமே வரிந்த நிழல், பரந்த விருட்சம். பெற்றவர் இடத்திற்கு வந்து போகலாம். போய்வா மகளே எனத் தந்தையும் ஏற்க மறுக்கிறான்.

மீண்டும் அம்பை பீஷ்மரிடம் செல்ல பிரம்மச்சாரிய சத்ய விரதம் பூண்டு வாழ்பவன் நான் என் நிழலில் கூட ஒரு பெண் ஒதுங்கி நிற்க சம்மதியேன் என மறுக்கின்றான்.

நீ சாதாரண பிரஜையாகக் கூட அத்தினாபுரத்தில் வாழ இடமில்லை. நகரிலும், நகரைச் சுற்றியுள்ள இடத்தில் கூட நீ நடமாடக் கூடாது.

நாடகத்தின் சாராம்சமாக அம்பையின் குரல் பீஷ்மரே நீளிர்அவமானப்படுத்திக் கொண்டிருப்பது ஒரு பெண்ணை அல்ல. ஒரு மகளை! ஒரு மனைவியை! உம்மைப் பெற்ற தாயை!

புன்மைத் தேரையாய், புழுவாய்க் கருதி பெண்மையை அவமானப்படுத்திய உம்மை விடமாட்டேன்.

இதே இந்த அத்தினாபுரத்தின் சான்றோரும், ஆன்றோரும், மண்ணும் மக்களும், காற்றும், ககனமும் சாட்சியாய் நிற்க நானும் ஒரு பிரத்ஞை எடுப்பேன். உன்னைக் கொல்வேன்.

பெண்ணினம் புல்லினம் அல்ல. அது ஆக்கவும், தீங்கு செய்தால் அழிக்கவும் சக்தி படைத்த வல்லினம் என்பதை நிரூபித்துக் காட்டுவேன்.

குங்கையிள் புதல்வரே, நீளிர்உம் தாயின் கர்பத்தில் மீண்டும் ஓடி மறைந்தாலும், அங்கும் தேடி வந்து உம்மை அழிப்பேன்.

இது என் சபதம்! ஒரு பெண்ணின் சபதம்! ஆம்பையின் சபதம்!.

இங்குதான் சமுதாயத்தில் நிலைத்து, வேரோடி, புரையோடிக் கிடக்கின்ற ஆணாதிக்கத்தை எதிர்த்து உச்சகட்ட குரலாய் ஒலிக்கின்ற பெண்ணின் குரல் கேட்கின்றது.

திரும்பத் திரும்ப சிந்தனையைத் தூண்டி காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. விழிப்புணர்வும் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் இடமும் கூட இதுதான்.

இயற்கை பெண்மையைப் படைத்த விதம்……. சமுதாயக் கட்டமைப்பில் பெண்;கள் அடிமைத் தனமாய் ஆக்கப்பட்ட நிலை…… பெண்கள் தமக்கென ஒரு வளையத்தை ஏற்படுத்தி…. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டமாய்….. நின்று, கவனித்து, சிந்திக்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஓட்டம்ஏன்? எதற்கு? எப்படி! எதனால்….. விடைதேடி அலைகிறது மனிதமனம்.

பெண்களுக்கு உரிய குணமாய் தொல்காப்பியம் அச்சம்மடம், நாணம், பயிர்பு எனக் குறிப்பிடுகின்றது.

பெண் சகமனிதனாய்…. மானுடப்பிறப்பாய் நடைபோடுவது எப்பொழுது?

பெண் உரிமை, பெண் நலம் கொடுப்பதும் கொள்வதும் கொள்வதும் அல்ல. உரிமையை அவரவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை இங்கே விரிகின்றது.

அம்பை சிகண்யாய் குருசேத்திர யுத்த களத்தில் பீஷ்மரை அழிக்கின்றாள். இக்கதைதான் ஜன்மா.

சூதகர்ணன் அம்பை இருவரும் பறிமாற்றிக் கொண்ட ஆண்மை, பெண்மை இந்திரன் சாபத்தால் இறுதிவரை இருவரும் திரும்பப் பெறமுடியவில்லை. இங்ஙனம் நாடகம் நிறைவு பெறுகிறது.

பெண்மை வெல்கவென்று

கூத்திடுவோமடா!

பெண்மை

பெண்மையாகவே வெல்கவென்று

கூத்திடுவோமடா!

என நாடகத்தை ஆசிரியர் நிறைவு செய்துள்ளார்.

நிறைவாக ஒரு ஆண் படைப்பில் உருவான இந்நாடகநூல் பெண்மையின் மனக் குமுறலாக காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. மனிதமனம் படைத்தோர்க்கு விழிப்புணர்வு தரும் தலை சிறந்த நாடகம் இதுவே எனலாம்.

முனைவர் கு.பாக்கியம்,

தலைவர், தமிழ்த்துறை,

ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,

கோவை – 641 044