சங்க இலக்கிய அகமரபு களவு, கற்பு எனும் இரு கைகோளினை உடையதாக அமைந்துள்ளது. இவ்விரு கைகோளிலும் பன்னிரு அகமாந்தர்கள் இடம்பெறுகின்றனர். இத்தகு அகத்திணை மாந்தர்களில் முதன்மையானவர்களாகத் தலைவனும், தலைவியும் உள்ளனர். அகவாழ்வில் இடம்பெறும் இப்பன்னிரண்டு அகமாந்தர்களின் மூலமாகவே அகமரபுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் முல்லைத்திணையில் வெளிப்படுத்தப்படும் அகமரபுகள் குறித்துச் சுட்டிச் செல்வதாக இக்கட்டுரை அமைகின்றது. சுருக்கம்கருதி ஐங்குறுநூற்று முல்லைத்திணைப் பாடல்கள் மட்டும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப் பெற்றுள்ளன.

நெஞ்சுக்குச் சொல்லுதல்

அகத்திணை மாந்தர்களாக விளங்குகின்ற முதன்மையானவர்களான தலைவனும், தலைவியும் தம் மனக்குமுறல்களைத் தம் நெஞ்சுக்குச் சொல்லும் முறைமை உண்டு. பிற மாந்தர்கள் எல்லாரும் இவர்களுக்குத் துணை நிற்பவர்களாக அமைகின்றார்கள். நெஞ்சுக்குச் சொல்லுதல் என்பது தலைவனும், தலைவியும் பிரிந்து இருத்தல் காரணமாக அமைகின்றது. முல்லை நிலத்தில் தலைவன் போர்த்தொழிலுக்கு அல்லது பொருள்தேடிச்  செல்லும் பொழுது தலைவியைப் பிரிந்து வாழும், வாடும் சூழல் ஏற்படுகின்றது. இதனால் தனித்து இருக்கும் பொழுது நெஞ்சிடம் புலம்பும் தன்மை ஏற்படுகின்றது.

பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்

            விருந்துநனி பெறுதலும் உரியள் மாதோ

            இருண்டு தோன்றும் விசும்பினுயர் நிலையுலகத்து

            அருந்ததி அனைய கற்பின்

            குரும்பை மணிப்பூண் புதல்வன் தாயே                  (ஐங்.442)

என்ற பாடலில் பேயனார் கார்ப்பருவ வருகையினால் எங்கும் இருள் தோன்றும் வானத்தில், தேவருலகத்தில் என்றென்றும் புகழோடு விளங்குகின்ற அருந்ததியாகிய வடமீனை ஒத்த தெய்வக் கற்பினையுடைய என் அருமைப்புதல்வன் தாயாகிய என் ஆருயிர்க் காதலி நம் மன்னவன் தொழிலாகிய போர்த்தொழிலை விட்டு அமைதி பெற்றால், தான் விரும்பி  இருக்கின்ற விருந்தோம்பலைத் தருவதற்குரியவள். அவருடைய செயலுக்கு நான் செயலற்று இருக்கிறேன். நான் என்ன செய்வேன் என்று வினைமேற் சென்ற தலைவன் தன் நெஞ்சுக்குப் புலம்புதலைக் கூறுகின்றார்.

பிணிவீடு பெறுக மன்னவன் தொழிலே

            பனிஉளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை

            யாடு சிறைவண்டு அழிப்பப்

            பாடல் சான்ற காண்கம் வாள்நுதலே (ஐங்.447)

என்ற பாடலில் போருக்குச் சென்ற தலைவன், தன் தலைவியைப் பிரிந்த ஆற்றாமையைத் தன் நெஞ்சுக்கு உரைக்கின்றான்.

செவிலியின்வழி அகமரபு வெளிப்பாடு

செவிலி என்பவள் தோழியை ஈன்ற தாய்; தலைவியின் வளர்ப்புத் தாய்.          ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின்

            தாயெனப் படுவோள் செவிலி யாகும்        (தொல்.கள.34)

என்ற நூற்பாவில் தொல்காப்பியர் ஆராய்ந்து அறிந்து கூறுபவள் செவிலியாதலால் தாய் என்று சிறப்பித்துக் கூறப்பெறுபவள் செவிலி ஆவாள் என்று கூறுகின்றார்.

மறியிடைப் படுத்த மான்பிணை போலப்

            புதல்வன் நடுவண னாக நன்றும்

            இனிது மன்றஅவர் கிடக்கை முனிவின்றி

            நீல்நிற வியலகம் கவைஇய

            ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே       (ஐங்.401)

என்ற பாடல், கற்புக்காலத்தில் தலைவன் – தலைவி ஆகியோர்க்கிடையே இருந்த அன்புப்பிணைப்பைச் செவிலி நேரில் கண்டு கூறுவதாக அமைந்துள்ளது. இப்பாடலைக் கண்ணுறுவோர் இல்லற வாழ்வில் தாமும் இவ்வாறு அன்புப்பிணைப்புடன் வாழ எண்ணும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்தது தமிழ் அகமரபு.

புதல்வன் கவையினன் தந்தை மென்மொழிப்

            புதல்வன் தாயோ இருவரும் கவையினள்

            இனிது மன்றஅவர் கிடக்கை

            ளியிரும் பரப்பின் இவ்உலகுடன் உறுமே          (ஐங்.409)

என்ற பாடல் மூலம் தலைவன் தன் புதல்வனைக் காதலால் அணைத்துக் கிடந்தான். தலைவி தன் பேரன்பினால் இருவரையும் ஒருசேர அணைத்துக் கிடந்தாள் என்று தலைவன் தலைவியின் அன்புப் பிணைப்பைச்  செவிலி கூற்றாக அமைத்துள்ளார் புலவர்.

 செலவு அழுங்குவித்தல்

செலவு அழுங்குவித்தல் என்பது தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்ல எண்ணும் எண்ணத்தைக் கைவிடச் செய்தலாகும். தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் செல்லும் தலைவன் பிரிவினால் ஏற்படும் பெருந்துன்பத்தினை அறிவான். பிரிந்து செல்லுதலைத் தலைவியிடம் நேரடியாக சொல்லுவதில்லை.

தலைவியின் தோழியிடம் கூறுவான். அதனால் அவள் பெருந்துன்பம் அடைவாள். தலைவியைப் பிரிந்து செல்ல எண்ணும் தலைவனைத் தோழி தடுத்து நிறுத்துவாள். தலைவனுடைய பிரிவைத் தவிர்க்கவும் செய்வாள்.

செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே

            வன்புறை குறித்தல் தவிர்ச்சி ஆகும்            (தொல்.கற்பு.44)

என்ற நூற்பாவில் தொல்காப்பியர் வினைமேல் பிரிந்து செல்லும் தலைவன், செல்லுதற்குக் காலம் தாழ்த்துதல், செல்லாமல் இருப்பதன்று. தலைவியை வற்புறுத்தலைக் குறித்துத் தங்கிய தவிர்ச்சியாகும் என்கிறார்.

இளங்காதலர்களுக்குப் பிரிதல் என்பது முகவாட்டமும் உயிர் வாட்டமும் தரும் கொடுஞ்செயலாகும். பருவத்தாரின் இம்மனநிலை பருவம் வாராதார்க்குத் தோன்றாது; பருவம் கழித்தார்க்கோ மறந்து போகும்.

என்பார் வ.சுப. மாணிக்கம் (2002:81).

மாமழை இடியூஉத் தளிசொரிந்த தன்றே

            வாள்நுதல் பசப்பச் செலவயர்ந் தனையே

            யாயே நின்துறந்து அமையலம்

            ஆய்மலர் உண்கணும் நீர்நிறைந் தனவே  (ஐங்.423)

என்ற பாடலில் தலைவனுடைய பிரிவை அழுங்கச் செய்யும் தோழியின் செயல் வெளிப்படுகின்றது. நீ இப்பருவத்தில் பிரிந்தால் நாங்கள் உயிர் வாழமாட்டோம். உன் பிரிவால் தலைவியின் ஒளிநுதல் பசலை பாய, மையுண்ட கண்கள் நீர் நிறைந்தன. அதனால் நீ பிரிய வேண்டாம் என்று தோழி கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

புறவணி நாடன் காதல் மடமகள்

            ஒண்ணுதல் பசப்ப நீசெலின் தெண்ணீர்ப்

            போதவிழ் தாமரை அன்னநின்

            காதலன் புதல்வன் அழும்இனி முலைக்கே            (ஐங்.424)

என்னும் பாடலிலும் தலைவனுடைய பிரிவைத் தவிர்க்கச் செய்யும் தோழியின் மனநிலை கூறப்பட்டுள்ளது. நீ பிரிந்து சென்றால் தலைவி இறந்து படுவாள். குழந்தை பாலுக்கு அழும். எனவே பிரிந்து செல்ல வேண்டாம் என்று தோழி தலைவனைச் செலவழுங்குவிக்கின்றாள்.

பருவம் கண்டு இரங்கல்

தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்துக் கார்ப்பருவம் வந்துவிட்டதே தலைவன் இன்னும் வரவில்லையே என்று தலைவி இரங்குவாள். தலைவனும் தான் மீண்டு வருவதாகச் சொன்ன கார்ப்பருவத்தினைக் கண்டு தலைவியை நினைத்து வருந்துவான்.

பரத்தையிற் பிரிதல் தற்குப் படர்தல்

            அருள்தகு காவலொடு தூதிற்கு அகறல்

            உதவிக்கு ஏகல் நிதியிற்கு இகத்தலென்று

            உரைபெறு கற்பிற் பிரிவு அறுவகைத்தே              (நம்பி.62)

என்ற நூற்பாவில் நம்பியகப்பொருள் ஆறு வகையான பிரிவு கற்பில் நிகழ்வதாகக் கூறுகின்றது. தொல்காப்பியம் நான்கு வகைகளாகக் கூறுகின்றது.

தளவின் பைங்கொடி தழீஇப் பையென

            நிலவின் அன்ன நேரும்பு பேணிக்

            கார்நயந்து எய்தும் முல்லை அவர்

            தேர்நயந்து உறையும் என் மாமைக் கவினே         (ஐங்.454)

என்ற பாடல் முல்லைக் கொடிகள் செம்முல்லைக் கொடிகளைப் பற்றுக் கோடாகத் தழுவிக் கொண்ட நிலாப் போன்று அழகிய வெண்மையான தம் அரும்புகளைப் பாதுகாத்துக் கார்ப்பருவத்தை விரும்பி நின்றன. என்னுடைய அழகு தலைவனுடைய தேர் வருகையை எதிர்பார்த்துத் தயங்கி நிற்கின்றது என்று தலைவி கூறுவதாக அமைந்துள்ளது.

ஆற்றுவித்தல்

தலைவன், தலைவியின் காதல் வாழ்க்கையில் தலைவன் போர்க்காகவும், பொருளுக்காகவும், கல்விக்காகவும் பிரிதல் உண்டு. இந்தப் பிரிவினைத் தலைவி பொறுக்க மாட்டாள். அவளின் நிழலாகத் திரியும் தோழி ஆறுதல் கூறுவாள்.

நன்றே காதலர் சென்ற ஆறே

            நீர்ப்பட எழிலி வீசும்

            கார்ப்பெயற்கு எதிரிய காமும் உடைத்தே         (ஐங்.433)

என்ற பாடலில் பிரிந்து சென்ற நீ வருந்த வேண்டாம் தலைவன் சென்ற வழி நன்மையே உடையது என்கிறாள் தோழி.

 முடிவுரை

ஐவகை நிலங்களில் முல்லை நிலமும் ஒன்றாகும். இந்த நிலத்தில் வாழும் மக்கள் அவர்களுடைய காதல் வாழ்க்கை நிலையினை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகின்றனர் என்பதனையும், இம்மக்களுடைய அகவாழ்வு நிலைகளில் அகமரபுகள் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதனையும் யார்யாரெல்லாம் சங்க அகமரபை வெளிப்படுத்துகின்றார்கள் என்பதனையும் இக்கட்டுரை வெளிப்படுத்தி நிற்கின்றது.

துணைநின்றவை

  • பாலையன் அ.ப. (உரை.), 2009, நம்பியகப்பொருள், சாரதா பதிப்பகம், சென்னை.
  • புலியூர்க்கேசிகன் (உரை.), 2012, தொல்காப்பியம் எழுத்து – சொல் – பொருள், சாரதா பதிப்பகம், சென்னை.
  • …………………, (உரை.), 2012, ஐங்குறுநூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை.
  • மாணிக்கம் வ.சுப., 2002, தமிழ்க்காதல், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.

மு.தமிழ்முல்லை

முனைவர் பட்ட ஆய்வாளர்

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 17.

[email protected]