முனைவர் சே.முனியசாமி / Dr.S.MUNIYASAMY[1]

Abstract: Ramanathapuram is called as Thenpandiseemai. Sathavathanam saravanaperumal kavirayar was born in this district and brought fame to the city his grandfather is Attavathanam saravanaperumal kavirayar he is from poet dynastic. He is known for singing poems. His poetic talent and his friendship with the king are portrayed in this research paper.

Keywords: Ramanathapuram, Thenpandiseemai, Tamil Literature, Sathavathanam saravanaperumal kavirayar, poetic, MUNIYASAMY, முதுகுளத்தூர் சதாவதானம், சரவணப்பெருமாள் கவிராயர், பேரர், சே.முனியசாமி, உரைமுடிவு காணான், சோழன்.

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற

நரைமுது மக்கள் உவப்ப.. நரை முடித்துச்

சொல்லால் முறை செய்தான் சோழன் குலவிச்சை

கல்லாமல் பாகம் படும்’’   (பழமொழி நானூறு:6)

எனும் பாடலில், கல்லாமலேயே தலைமுறை தலைமுறையாக அறிவு ஒருவருக்கு வந்து சேரும் எனும் கருத்தை முன்றுரையரையனார் முன் வைக்கின்றார்.

மேற்சுட்டிய பாடலடியின் கருத்து சதாவதானம் சரவணப் பெருமாள் கவி ராயருக்குப் பொருந்தும். இவரது குடும்பத்தினர் கவிபாடுவதில் புலமை யுடையவர்கள் இவரது தாத்தா அட்டா வதானம் சரவணப்பெருமாள் கவியார், இவரது தந்தையார் அருணாச்சலக் கவிராயர். இத்தகு புலமைமிக்க குடும்பத்தில் பிறந்த சதாவதானம் சரவணப்பெருமாள் கவிராயரின் கவிப்புலமை குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது. இனிவரும் பகுதியில் புலவரின் பெயர் சுருக்கமாய் சரவணார் எனத் தாங்கி நிற்கும்.

புலவர் பரம்பரை

தென்பாண்டிச்சீமை என அழைக்கப்பெறும் இராமநாதபுரத்தி லுள்ள முதுகுளத்தூர் எனும் ஊரில் பிறந்தவரே சரவணார். சேதுநாட்டு மன்னராக திகழ்ந்த இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதியின் (கி.பி 1851-1873) காலத்தில் வாழ்ந்தவர். ‘‘இவர் சேதுநாட்டிற் பிறந்தவர் அருணாசலக் கவிராயருடைய மகன். இவர் பெயர் அவதானி’’1   எனவும், இவரது தந்தை ‘‘இராமநாதபுரம் சமத்தானத்து அரசவைப் புலவர்களில் ஒருவராக இருந்தவர்’’2  எனும் செய்தி மூலம் இவரையும் இவரது தந்தையையும் பற்றி அறிய முடிகிறது.

இவரைப் போல இவரது மகனும் புலமையுடையவர் என்பதைஇவர் தந்தை இராமநாதபுரம் சமத்தானப் புலவராக இருந்தவர். தந்தையைப் போலவே இவரும் புலமை பெற்று இராமநாதபுரம் சமத்தானப் புலவராக விளங்கினார். மதுரகவி என்று அழைக்கப்பெற்றார்’’3 என்பதைத் தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம் குறிப்பிடுகிறது.

முதுகுளத்தூரில் இவரைப்போலச் சில புலவர் பரம்பரையினர் வசித்து வருகின்றனர் என்பதை உறுதிபடுத்தும் வாயிலாக, ‘‘இன்னுஞ் சில புலவர் பரம்பரையினர் கமுதியினும், முதுகுளத்தூரினும், ஊருணிக் கோட்டையினும், மாடம்பூரினும், பிறவிடங்களினும் உள்ளார்கள்’’4 என்று ரா.இராகவய்யங்கார் குறிப்பிடு கின்றார்.

சரவணாரின் மைத்துனர் அட்டாவ தானம் வேலாயுதக் கவிராயர்   ஆவார். இவ்விருவரும் திருட்டுக்கும்மி பாடியுள்ளனர்.

அவதானங்கள் விளக்கம்

பழங்காலத்தில் நினைவாற்றல் திறன் என்பது ஒரு கலை. மாந்தராய்ப் பிறந்த அனைவரிடமும் இக்கலை காணப்படுவதில்லை. முந்தைய காலக் கல்வியில் பாடம் நடத்தும் ஆசான் குறிப்பிடும் பாடல்களை மனனம் செய்து ஒப்புவிப்பதில் சிறந்துள்ளனர். காலப்போக்கில் ஏடும் எழுதுகோலும்  கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி வந்துவிட்ட பிறகு மனனம் செய்யும் திறன் மலிவான நிலைக்குத் தள்ளப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால் நினைவாற்றல் திறன் குறைய ஆரம்பித்தது. நினைவாற்றல் திறன் பற்றி புலவர்களின் நிலையினை அறிய முற்படுகையில், ‘‘அவதானம் என்பது நினைவாற்றலையும் ஊன்றிய கவனத்தையும் குறிக்கும். இதிலிருந்து அது ஒரே சமயத்தில் பல செயல்களைக் கவனித்துச் செய்யக் கூடிய ஞாபகத் திறமைக்குப் பெயராயிற்று. அவ்வாறு எத்துணைச் செயல்கள்களைக் கவனிக்கக் கூடுமோ, அவற்றிற்கேற்றவாறு இது அஷ்டாவதானம், தசாவதானம், சோடசாவதானம், சதாவதானம் எனப் பலவாறு சொல்லப்படும்.

        18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவரெனக் கருதப்படும் அஷ்டாவதானம் ஆதி சரவணப்பெருமாள் கவிராயர் இலக்குமணப் பிள்ளை என்பவருக்கு எழுதிய சீட்டுக்கவியிலே அஷ்டாவதான முறையைக் குறிப்பிட்டுள்ளார்.

 வாய் வேலுமயிலும் என்று கூறிக்கொண்டேயிருத்தல், நால்வரை அமர்த்தி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புதிய கவியின் அடியைக் கூறிப் பாட்டை முற்றும் சொல்லி எழுதச் செய்தல், காலாலும் கையாலும் கவிதையெழுதல், கணக்குரைத்தல், இலக்கம் உரைத்தல், திரை மறைவிலே ஆடும் சூதுக்கும் சதுரங்கத்துக்கும் இந்தக் காய்களை நகர்த்துக என்று கூறுதல், குதிரையடி கூறல், முதுகில் எறியும் பருக்கைக் கற்களையாவது நெல்லையாவது எண்ணிக் கூறுதல் ஆகியவை அஷ்டாவதானம் எனப்படும். இவற்றில் சில மாறி வழங்கியும் இருக்கக்கூடும். பத்துச் செயல் தசாவதானம், பதினாறு செயல் சோடசாவதானம், நூறு செயல் சதாவதானம், இக்காலத்திலே இலாடசங்கிலி சேர்த்தல், பத்திரிக்கை கூறல் போன்ற தம் திறமைக்கேற்ற செயல்களையும் அமைத்துக் கொண்டுள்ளனர்’’5 என்று களஞ்சியம் அரேபியா ஆக்டினோமைகோசிஸ் குறிப்பிடுகிறது.

பாடங்கேட்டலும் சமகாலப் புலவர்களும்

சரவணார் திருவாவடுதுறை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களிடத்துப் பாடங்கேட்டுக் கல்விப் புலமையை வளர்த்துக் கொண்டார்.

துவாத்ரிம் சதாவதானி முத்துராமலிங்க சேதுபதியவர்கள் காலத்தில் சமத்தான வித்துவானாகத் திகழ்ந்தவர். அஷ்டா வதானி கிருஷ்ணையங்கார், முத்துவீரப் பப்பிள்ளை, தேவிபட்டணம் முத்துச் சாமி பிள்ளை, கிருஷ்ண ரெட்டியார் ஆகியோர் இவர் காலத்தில் வாழ்ந்த வித்துவான்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மன்னரின் உறவுநிலை

பொன்னுச்சாமித் தேவர், முத்து ராமலிங்க சேதுபதி, ஊற்றுமலை ஜமீன், சேற்றூர் ஜமீன், ஆற்றங்கரை ஜமீன் போன்றோர் மீது பாடல் பாடியுள்ளார்.

சரவணார் இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதியின் அவைக்களப் புலவராக விளங்கியுள்ளார் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பொன்னுச்சாமித் தேவரின் ஆதரவும் இவருக்கு இருந்தது. அதுமட்டுமின்றி சேதுபதியின் உறவினர்களுள் ஒருவராகிய சிவசாமி சேதுபதியின் ஆதரவும் இவருக்கு இருந்துள்ளது. இதனை ‘விறலிவிடுதூது’ எனும் நூலில் பாட்டுடைத் தலைவனாகச் சிவசாமி சேதுபதி இடம்பெறுதல் மூலம் அறிய முடிகிறது.

மேலும் இவர் பரிசு பெற்றுள்ளார் என்பதைச் சேதுபதியிடம் பல்லக்கு முதலிய வரிசைகள் பெற்றவர் எனும் செய்தி கொண்டு அறியலாம்.

சரவணார் முத்துராமலிங்க சேதுபதியின் காயகப்பிரியா எனும் இசை நூலிற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளார் எனும் செய்தியும் காணக் கிடைக்கிறது. இதன்மூலம் இவர் இசையில் புலமையுடையவர் என்பதை நன்கு உணர முடிகிறது.

இயற்றிய பாடல்கள்

கவிபாடுவதில் புலமையுற்ற இவர் ஐம்பத்தாறு தனிப் பாடல்களும், ஒன்பதிற்கும் மேற்பட்ட நூல்களும் எழுதியதோடு, ஒரு நூலைப் பரிசோதித்தும் உள்ளார். இவர் பாடிய தனிப்பாடல்கள் தனிச்செய்யுள் சிந்தா மணியிலும், கா.சு.பிள்ளையின் தனிப்பாடல் திரட்டிலும் இடம்பெற் றுள்ளன. இவர் பாடிய பாடல்களை, செ.கந்தசாமி பட்டியலிட்டுள்ளார். அவையாவன:

பாடல் பாடிய விவரம் பாடல்
பொன்னுச்சாமித்தேவர் 4
மாத்திரைச் சுருக்கம் 1
நடுவெழுத்தலங்காரச் செய்யுள்கள் 3
மாத்திரை வருத்தனை 1
முத்துராமலிங்க சேதுபதி 6
முத்திர வருணனை 10
ஊற்றுமலை ஜமீன்தார் 20
எட்டயபுரம் அரசர் 4
ஆற்றங்கரை ஜமீன் 3
சேற்றூர் ஜமீன் 1
சேற்றூர் இராமசாமிக் கவிராயரின் உதவிக்கு 1
ஷ கவிராயர் கட்டிய விநாயகர் கோவில் 1
ஷ கவிராயர் வீட்டில் மாங்கனி உண்டபோது 1

மேலும் ‘‘சேதுபதிக்கு ஈற்றடி கொடுத்துப் பாடிய பாடல்களும், சேதுபதியின் ஈற்றடிக்குச் சரவணார் பாடிய பாடல்களும்வினாவிடைஎன்ற நூலில் இடம்பெற்றுள்ளன.’’6 எனச் செ.கந்தசாமி குறிப்பிடுகின்றார்.

 

பாடிய நூல்கள்

சரவணார் இயற்றிய நூல்களைக் கீழ்க்காணும் வரிசைப்படிக் காணலாம்.

  1. மதுரைச் சிலேடை வெண்பா
  2. குன்றக்குடிச் சிலேடை வெண்பா
  3. கந்தவருக்கச் சந்த வெண்பா
  4. திருச்சுழிகைப் பூமி நாதேசுரர் மீது ஓரெழுத்தந்தாதி
  5. மகரவந்தாதி
  6. கழுகுமலை ஓரெழுத்தந்தாதி
  7. பனசைத் திரிபந்தாதி
  8. மதுரை கயற்கண்ணிமாலை
  9. சிவசாமி சேதுபதி பேரில் விறலிவிடுதூது
  10. புவனேந்திர அம்மானை
  11. சிவசாமி சேதுபதி பேரில் விறலிவிடுதூது
  12. பழனி சிலேடை வெண்பா
  13. இராமாயண வண்ணம்
  14. நாட்டரசன் கோட்டைக் கண்ணுடையம்மை யமக அந்தாதி

வேலாயுதக் கவிராயரும் சரவணாரும்

திருட்டுக்கும்மியைப் பாடியவர் அஷ்டாவதானம் வேலாயுதக் கவிராயர் சரவணாரின் மைத்துனர். இருவரும் இணைந்து கவிபாடிச் சிறப்புப் பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றித் தனது மைத்துனரான வேலாயுதக் கவிராயருக்காக வெண்பா ஒன்றைப் பாடியுள்ளார். இதனை

‘‘கற்ற புலவோர் கலியிருளை மாற்றிசை

பெற்றபுகழ்க் கோட்டைமன்ன பேசக்கேள் சிற்றறிவை

யெங்கே படித்தாய் எவருனக்குப் புத்தி சொன்னார்

தூங்காநீ வாழ்ந்ததுபோ தும்’’7

எனும் அடிகள் மூலம் அறியலாம். மேலும் இப்பாடல் பாடுவதற்கான காரணத்தை அறிய முற்படுகையில், ‘‘இவரும் வேலாயுதக் கவிராயரும் இராமநாதபுரத்தில் பருவதவர்த்தினி நாச்சியாரவர்களாகிய இராணி நாச்சியாரவர்கள் அரசு புரியுங்காலத்தில் மானேசர் வேலை பார்த்து வந்த கோட்டைச்சாமித் தேவரவர்கள் நவராத்திரியில் பிற வித்துவான்களைப் போலச் சமத்தி கொடுத்துப் பூரணஞ் செய்யச் சொல்லச் சமஸ்தான வித்வான்களாகிய நாங்கள் பரீஷகர்களின் வரிசையினிற்ற லொழிந்து இங்ஙனம் பாடோமென்று சொல்ல மேற்குறித்த தேவரவர்கள் பாடவே வேண்டுமென்று வற்புறுத்திய பொழுது8 எனும் விளக்கத்தின் வாயிலாக காணமுடிகிறது.

வேலாயுதக் கவிராயரும், சரவணாரும் இடைக்காட்டூர்ப் பாதிரியாரால் சிவகங்கையில் இருந்த ஓர் உயர் நிலைப்பள்ளியில் தமிழ்ப்பண்டி தராகத் திகழ்ந்துள்ளனர்.

கட்டளைக் கலித்துறையால் அமைந்த பாடல் ஒன்றைப் பாடி அதற்கு விடை சொல்லும் முகமாகக் கீழ்க்காணும் பாடல் அமைகிறது.

 ‘‘வேலையில் வேல்விட்ட வேள்சோம சுந்தர வேந்தன்வெற்பில்

காலையிற் செவ்வந்தி மாலைகண் டேன்றென்னங் காயின்கரும்

பாலையின் சுண்டலில் வேலவன் றாரமு மாலைப்பெண்ணின்

மூலமுங் கண்டனன் மக்கள் படுக்கையென் முன்வைக்கவே’’9

எனும் அடிகள் மூலம் உணரலாம்.

சரவணார் பல நூல்கள் எழுதியிருப்பினும் அவை அனைத்தும் கிடைக்கப் பெறா. இருப்பினும் பல தேடலுக்குபின் சேதுபதி விறலிவிடு தூதுஎனும் நூலிலும், கா.சு.பிள்ளையால் வெளியிடப்பட்ட தனிப்பாடல் திரட்டு’ எனும் நூலிலும், செ.கந்தசாமி என்பவரால் இயற்றிய சேது மன்னர்களின் தமிழ்ப்பணி எனும் நூலிலும் தனிப்பாடல்கள் கிடைத்துள்ளன. மேற்சுட்டிய நூல்கள் வாயிலாகக் கிடைக்கும் பாடல்கள் மூலம் சரவணாரின் புலமைத் திறத்தை  அறிய முடிகிறது.

() சேதுபதி விறலிவிடு தூது

காரைக்குடி இலக்கியப் பதிப்பகம் 1947 ஆம் ஆண்டு சேதுபதி விறலிவிடு தூது எனும் நூலினை ராய.சொக்கலிங்கம் பதிப்பித்துள்ளார்.

சிற்றிலக்கியங்கள் 96 வகைகளில் தூதும் ஒன்று இந்நூல் ‘கலிவெண்பா’ என்னும் யாப்பினால் கட்டப்பட்டுள்ளது. நூல் முழுவதும் வெண்தளை விரவி வெண்பா இலக்கணத்துடன் ஒரே சங்கிலித் தொடராக அமைக்கப்பட்டு 1245 கண்ணிகளால் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகள் எதுகையால் தொடுக்கப்படுவதாகும்.

விறலி

விறலி என்பவள் தூது செல்லும் இளங்குமரி. அவளைத் தூது விடுவதாக விறலிவிடு தூது அமைந்துள்ளது. விறலியைத் தூதுவிடும் எந்த நூலும் விறலிவிடு தூது என்னும் பெயர் பெறலாம்.

விறலிவிடு தூது

தமிழில் பல்வேறு வகைகளான விறலிவிடு தூது நூல்கள் காணலாகின்றன. அவை:

 

.எண் விறலிவிடு தூது ஆசிரியர்
1 கூளப்ப நாயக்கன் காதல் சுப்பிரத் தீபக்கவிராயர்
2 மூவரையன் மிதிலைப்பட்டிச்

சிற்றம்பலக் கவிராயர்

3 தெய்வச்சிலையார் குமாரசாமியவதானி
4 சிதம்பரேசர் தில்லை விடங்கன் மாரிமுத்து
5 சின்னனைஞ்சித்துரை தென்காசி கவிராச பண்டாரம்
6 செண்டலங்காரன் பரமானந்த நாவலர்
7 நண்ணவூர் சங்கமேசுவரி பாரதி முத்திஅயர்
8 நாதை தெரியவில்லை
9 பழனியாண்டவர் வே.முத்தனாசாரியார்
10 வையாபுரிப் பிள்ளை சிவப்பிரகாசப்புலவர்

 

விறலிவிடு தூதியின் முக்கியப் பகுதியாக ‘‘என் செய்தியாகத் தொடர்ந்த தெல்லாம் உனக்குரைத்தேன் பொன் செய்த எம்மூர்க்குப் போயினி நீ பின் செய்த சிறிடையாள் ஆகிய என தேவியாரைக் கண்டு நற்றிறம் சேர் வீணை நயம்பாடிமற்றவளுக்கு என் குறையை மெள்ள இயம்பி எதிர் சொல்லு மந்த கேட்டூடல் போக்கியே நன்குறும்எ ஆசைமனியாட்டி தனக்கு ஐயங்கள் இன்னுமொரு வேசை மனைக்கே குவரோ விட்டெனவால் ஓசனையுட் கொள்ளாமல் என சபதம் கூறி முன்னைக் குற்றம் நினைந்து எள்ளாமல் கற்பின் இயல்போதி உள்ளாரப் பண்பாடி உட்காம பாணம் படச் செய்து நண்பாடி என்பவரை நன்கேற்றுக் கண்பார்க்க’’10 என சுப்பிர தீபக் கவிராயர் கூறுகின்றார்.

சேதுபதி விறலிவிடு தூது, கூளப்ப நாயக்கன் மீது சுப்பிரதீபக் கவிராயர் பாடிய விறலிவிடு தூதைப் பெரிதும் பின்பற்றியே செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி காலத்தால் முறபட்டதாகவும் அமைகிறது. இதனை உறுதி செய்யும் வாயிலாக,

‘‘ஞானி ஐயன் சொன்னவுத்தி

நாடிநட வாமல், அவ

தானியையன் போன துவும்

தான் அறிவீர்’’11

எனும் செய்தியைச் சுப்பிரதீபக் கவிராயர் கூறுகின்றார்.

சேதுபதி விறலிவிடு தூது சுருக்கம்

சேதுபதி விறலிவிடு தூதின் நிகழ்ச்சிகள் தென்பாண்டி நாட்டில் நடந்தவை. திருவாடானையில் (இராமநாதபுரம்) ஆதிரத்னம் ஐயர் என்பவர்க்கு மகனாகப் பிறந்தவர் சுந்தரம் ஐயன். இவர் நல்ல கல்வியும் புலமையுமிக்கோர். சோடச அவதானி. அதாவது பதினாறு செயல்களை ஒரே சமயத்தில் நினைவோடு செய்ய வல்லோன். தம் வாழ்வில் துணைமாலை என்னும் மங்கையை மணம்முடித்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவியான துணைமாலையைச் சிறப்பிக்கும் விதமாய்,

நீடு திருமால் இருக்கும் புல்லாணி மங்களையன்

பெற்றெடுத்த சேல் இருக்கும் கண்ணாளை, தேன்

மொழியை, கோலத்துணை மாலை என்னும் ஒரு

தோகை மயிலை, மணமாலை இட்டு வாழ்ந்தான்’’12

என ராய.சொக்கலிங்கம் குறிப்பிடுகின்றார்.

ஒருநாள் உத்தரகோசமங்கை ஊரிலே திருநாள் பார்ப்பதற்காகச் சுந்தரம் ஐயன் சென்றுள்ளார். அவ்வூரில் ஒரு வேசி மங்கையைத் தழுவி விட்டார். அவரோடு உடன்சென்ற உள்ளூர்ப் பையனொருவன், சோடவதானியின் மனைவி துணைமாலையிடம் இச்செய்தியைச் சொல்லி விட்டார். செய்தியறிந்த மனைவிக்கும் இவருக்கும் சண்டை மூண்டது. ‘‘சீ… நீ உன் தாசியிடம் செல்…’’ என்று துணைமாலை கூறிவிட்டாள். இதைத் தாங்காத சுந்தரம் ஐயன் குடும்பத்தை வெறுத்து பொன் முதலியவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறினார். பல கோவில்களுக்குச் சென்று இறுதியாக திருமருதூர் என்னும் ஊரை அடைந்தார். அங்கு மோகனமுத்து என்னும் ஓர் தாசியின் வலையில் சிக்கி, எல்லாவற்றையும் இழந்து அவளால் புறந்தள்ளப்பட்டார்.

கையில் எடுத்துச் சென்ற அனைத்துப் பொருட்களையும் இழந்து, வீடு திரும்ப மனமில்லாமல் நின்று கொண்டிருந்தார். அதன்பின் சேதுபதியிடம் சென்றார். சிவசாமி என்னும் பெயர்பூண்ட சேதுபதிமீது புகழ்பாடி எண்ணற்ற பரிசுப்பொருட்களைப் பெற்று வீடு திரும்பினார். தன் கதை முழுவதும் சொல்லி முதலில் போய்த் தன் மனைவி துணைமாலையைத் தேற்றுமபடித் தூதாக விறலியை விடுகின்றார். இவ்வாறாகக் கதை நிறைவு பெறுகின்றது.

தன்னை அறிமுகப்படுத்தல்

இந்நூலில் சரவணார் தம்மைப் பற்றியும் தம் ஊரைப் பற்றியும்  அறிமுகம் செய்ததைக் காணமுடிகிறது. இதனை,

ஆதிமுது குளத்தூர்

மேவுவடி வேலன்அருள் மேவிவளர் நாவலவ

தீர அவதானம் செய்சரவ ணப்பெருமாள்

பேரன்என வந்த பிரபலவான் சாரம்

தரும்துவாத் ரிம்சதாவ தானிபுல வோர்யா

வருந்துதிக்கும் பூங்கணைவில் மாரன் திருந்தும் எழில்

நாடுபுகழ் சரவணப் பெருமாள்’’13

எனத் தன்னை அறிமுகம் செய்ததாக ராய.சொக்கலிங்கம் குறிப்பிடுகின்றார்.

தமிழ்ப்பற்றும் அறப்பற்றும்

சரவணார் தமிழ்ப்பற்றும் அறப்பற்றும் பெரிதும் விருப்பமுடையவராகத் திகழ்ந்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.

இறைப்பற்று

சரவணார் கடவுளர் பற்றிப் பல இடங்களில் பேசுவதனைக் காண முடிகிறது.

‘‘ஆகம் பசந்த அழகிய நாயகியோர்

பாகம் சுமந்த பரஞ்சுடரை மோகமுள்ள

தொண்டர் உள்ளத் தேவி விளங்கும் தூண்டா மணிவிளக்கை

அண்டருக்கும் தேடரிய ஆரமுதை முண்டகத்தாள்

நித்தம் துதிதுமுத்தி நீள்நெறிசேர் மூவர் அன்புச்

சித்தம் தழைத்த சிவக்கொழுந்தை

விவத்தின் பால்முளைத்து வேதமுத லாக்கிளைத்த

செல்வத்தைக் கண்டு தெரிசித்து’’14

எனவும்,

‘‘அன்னை மருதூர் அழகிய நாயகியைச்

சந்நிதிமுன் நின்று தரிசித்தேன்’’ 15

என அம்பிகையைக் குறிப்பிடுகின்றார்.

‘‘ … வானுலவும்

கம்பத்தின் முன்நின்று கண்டேன்கோ தண்டமெனச்

செம்பொற் கிரிவளைத்த சேவகனை நம்புமன்பர்

 

உள்ளத் திருக்கும் உரவோன் உருவிலான்

கள்ளத்தை மாற்றும்நெற்றிக் கண்ணவனை வள்ளமுலைப்

பாலுண்ட பிள்ளை பதிகத்துக் காப்பிறவி

மேலுண்டோ இல்லைஎன்ற வேதியனைசேலுண்ட

 

கண்மணியைத் தென்னவர்கோன் கண்மணியை நன்மணியைப்

பெண்மணியை மாலையிட்ட பெம்மானை’’16  என சிவபிரானைப் பற்றி பாடிய விதம் இறைப்பற்று மிக்கவர் என்பதை உணர்த்துகின்றது.

() தனிப்பாடல் திரட்டு

1939 ஆம் ஆண்டுபல வித்து வான்கள் பாடிய தனிப்பாடற்றிரட்டு (இரண்டாம் பாகம்) எனும் நூலினை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலிற்கு உரை எழுதியவர் கா.சு.பிள்ளை. ஐம்பதெட்டுப் புலவர்களின் தனிப் பாடல்கள் தொகுத்து அப்பாட லுக்கான உரையும் கொடுக்கப் பட்டுள்ளது. இத்தொகுதியில் ஏழா வதாக சரவணாரின்  தனிப்பாடல்கள் (30) இடம் பெற்றுள்ளன. இதில் காணலாகும் பாடல்கள் அனைத்தும் வினா எழுப்பி அவ்வினாவிற்கு பதில் கூறும் முகமாக அமைந்துள்ளன.

சேதுநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவரான முத்துராமலிங்க சேதுபதி, சரவணாரின் புலமையை சோதிக்கும் விதமாக வினாக்களை எழுப்பியுள்ளார். அவர் எழுப்பிய வினாக்களுக்கு சரவணார் கூர்ந்த மதி, செறிவான நுட்பம் அறிவியல் சிந்தனை போன்றவைகளோடு நேர்த்தியாக பதில் அளித்துள்ளார். அட்டாவதானம் எனும் பட்டத்திற்கு பொருத்தமானவர் என்பதை தாமளித்த பதில் வாயிலாக சேதுபதி மன்னரிடம் நிருபித்து உள்ளார். மன்னருக்கும் புலவருக்கும் இடையிலான கவித்திறனை பாடல் வாயிலாகக் கீழே காணலாம்.

ஐந்தறிவின் விந்தை

பூமியில் காணலாகின்ற புல், மரங்கள் ஆகியன பச்சை நிறத்தைத் தவிர வேறு நிறத்தைப் பெறாமைக்கு காரணம் யாதென வினவும் முத்துராமலிங்க சேதுபதிக்கு , தாவரங்கள் யாவும் ஓரறிவுடைய  உடம்பைப் பெற்றிருப்பதால் அதற்கு ஒரே நிறம்தான் உண்டு. இயங்கும் உயிர்கள் ஐந்தறிவு உடமையால் அவற்றின் உடல்கள் பல நிறத்தைப் பெறுகின்றது என விடையளிக்கிறார். இதனை,

‘‘பூவயனாற் பூவிலுண்டாம் புன்மரங்கள் வேறுநிற

மேவாதொன் றாயதென்ன விள்ளுவீர்தாவசர

மெய்யறிவொன் றானமையால் வேறுநிற மின்றுசர

மையறிவாற் பன்னிற மாதம்’’16   

எனும் அடிகள் வாயிலாக அறியலாம். இப்பாடல் மூலம்

‘‘புல்லும் மரனும் ஓர் அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’’17 

எனும் நூற்பாவையும்,

‘‘மாவும் மாக்களும் ஐயறி வினவே

  பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’’18  எனும் தொல்காப்பியர் இயற்றிய நூற்பாவையும் சரவணார் படித்துணர்ந்து பதில் அளித்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.

ஆன்மீக அறிவு

நஞ்சுண்ட கழுத்தை உடைய ஈசன் தன் சடைமுடியில் பிறைநிலாவை மறைத்து வைத்திருப்பது ஏன் என வினவும் சேதுபதிக்கு, விநாயகப் பெருமான் தனது யானைமுகத்தில் உடைந்த தந்தம் தான் அந்தப் பிறைநிலவெனக் கருதி சிவனிடம் கேட்பாரோ எனக் கருதி அதை சிவன் ஒளித்து வைத்திருப்பதாகப் பதில் கூறுகிறார் சரவணார். இதனை,

‘‘நஞ்சுடைய கண்டத்து நாதன் முடிமீது

குஞ்சுமதி யணிந்து கொள்வானேனஞ்சாமன்

மூத்தபிள்ளை யன்றுமுறித்த கொம்பைக் கேட்குமென்று

சேர்த்துவைத்துக் கொண்ட திறம்’’19

எனும் அடிகள் மூலம் அறியலாம். சமயம் தொடர்பான வினாக்களுக்கு நகைச்சுவையாகவும், யாவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இவரது பதில் அமைகின்றது. இதன்மூலம் சரவணாரின் ஆன்மீக அறிவிற்குத் தக்க சான்றாக இப்பாடல் விளங்கும்.

மேற்சுட்டிய பாடல்கள் போல இன்னும் 28 பாடல்களில் இது போன்ற சேதுபதி மன்னரின் வினாவிற்குத் தம் புலமைத்திறனால் பதில் அளிப்பவராக சரவணார் திகழ்வதைக் கீழே காணலாம்.

 

முத்துராமலிங்க சேதுபதி

மன்னரின் வினா

சரவணப்பெருமாள் கவிராயரின்

பதில்

பாடல் எண்
 

உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டுமென பிரம்மன் படைத்துள்ளானே அது எவ்வாறு?

 உலகத்தில் பிறந்த ஒரு மாட்டு மந்தையில் உள்ள பல பசுக்களுள் தனது தாய்ப்பசுவைத் தேடிச் சேர்வது போல நாம் செய்கின்ற நல்வினை, தீவினையின் பயன்கள் நம்மை அடையும். 3
 உலகத்தைத் தாங்குவதாகக் கருதப்படும் ஆதிசேடனோடு வாயு (காற்று) சண்டையிட்டால் உலகை யாரால் தாங்க முடியும்? இவ்வுலகைத் தாங்குகின்ற மன்னராம் (சேதுபதி) உம்மைப் போல் உன் குலத்தினரால் தாங்க இயலுமோ? 4
 சந்திரனைக் கண்டு கூம்பாத தாமரை மலர் இவ்வுலகில் உண்டா? பெண்களிண் நிலவு போன்ற முகத்தைக் கண்டு விரிகின்ற தாமரை மலர் போன்ற கண்கள் (ஆண்களின் கண்கள்) உலகில் உண்டு 5
 தூங்குகின்றவர்களை மூட்டைப்பூச்சி கடித்தால், சுகந்தரும் பஞ்சணையை அடித்துத் துவைக்கிறோம் ஏன்?  வஞ்சகர்களோடு சேர்ந்து உலவுபவரும் வஞ்சகனோடு சேர்ந்து தண்டனை அனுபவிப்பது போல் தலையணை மூட்டைப் பூச்சியோடு சேர்ந்தமையால் அடித்து துவைக்கப் பெறும் தீவினைக்கு உள்ளாகிறது? 6
குமாரப் பெருமானை (முருகன்) தரிசித்த மனமும் கண்ணும் அவ்விடத்தை விட்டு நீங்குவதில்லையே ஏன்? நான்கு வேதங்களும் நாதத்தை விட்டு விலகுவதில்லை. பூவை விட்டு வண்டு விலகுவதில்லை. அதுபோன்று தான் முருகனைத் தரிசித்த கண்ணும் மனமும் விலகுவதில்லை. 7
உமையம்மையின் கணவன் சிவபெருமானை மூங்கிலில் உதித்தவன் என்று கூறுகிறார்களே ஏன்? தாய் தந்தை இல்லாதவர்களை அனாதை என்று கூறுவார்கள். சிவனுக்கு அந்த பழிச்சொல் வரக்கூடாது என்பதற்காக அவ்வாறு கூறுகிறார்கள். 8
நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமான் ஒருநாள் பிள்ளைக் கறியை உண்டானாமே? ஏன்? தேவர்களுக்காக பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்டு, பைத்தியம் பிடித்து, பிரம்ம தேவனுடைய கண்ணிற்கும் அகப்படாமல் மறைந்து வாழ்ந்ததால் சோறு அறியாது பிச்சை பெற்று வாழ்ந்ததால், பசியில் பிள்ளைக்கறி உண்டிருப்பார் . 9
ஞானத்தை வழங்கும் ஈசன் பெண் மோகம் கொண்டு மேனி தளர்ந்து போகக் காரணமென்ன? அவன் அசையாமல் நின்றால் ஓரணுவும் அசையாது. எல்லா உயிர்களுக்கும் சிற்றின்பம் தருபவனும் அவனே! பேரின்பம் தருபவனும் அவனே. 10
சிவன் காளை வாகனத்தைக் கொண்டிருக்கக் காரணம் என்ன? தனது கண்மலரை சிவன் அர்ச்சனையாக ஏற்றுக் கொண்டதால் அவரது திருவடிகளை நான் காளையாகத் தாங்குவேன் என திருமால் வேண்டிக்கொண்டதே. 11
சந்திரன் தேய்தல், வளர்தல், களங்கமுடையமை முதலிய குற்றங்கள் உடையனவாகத் திகழ்ந்தும் பாம்பினால் விழுங்கப் பெருகிறதே ஏன்?  யோசிக்காமல் தவறு செய்தவர்கள் யாரக இருந்தாலும் அதனால் வரும் துன்பத்தை அடைந்தே தீர வேண்டும். 12
தெய்வத்திற்குத் தேங்காய், பழம், வெற்றிலை படைக்கிறோம். இறைவன் அதை உண்டார் என்பதை எப்படி அறிவோம்? தெய்வத்தை உண்மையாக உணர்ந்தவர்கள், அதன் திருமுகக் குறிப்பை வைத்தே உண்டதை அறிந்து கொள்வர். 13
தன்னை வணங்கியோருக்கு மோட்சத்தைத் தரும் ஈசன் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தாழ்ந்தது ஏன்? தாருகாவனத்து முனிவர்களின் கற்பை அழிக்கும் பொருட்டு செய்த குற்றத்தை ஈசன் செய்ததால் தான். பாவம் யார் செய்தாலும் பழியை ஏற்றுத்தான் ஆகவேண்டும். 14
சந்திரனும் சூரியனும் எதிரெதிரே நிற்கும் போது இருள் எந்நிலை அடையும்? திங்களை பாம்பு தீண்டும் போது மட்டுமே இருள் அதிகப்படும் என்று தெரியாதவர் யார் உளர்? 15
எல்லா உயிர்க்கும் வரங்கள் தரும் திருமால் குரங்குகளின் துணையைப் பெற்று அணை கட்டியதேன்? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 16
ஈசன் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்தது ஏன்? நெருப்பில் வீழ்ந்த விட்டில் பூச்சி பிழைக்குமோ? நெற்றிக்கண்ணம் நெருப்பில் வீழ்ந்தவர் பிழைப்பாரோ? 17
பெண்களின் இதழில் தங்கும் நீரை எச்சில் என்று யாரும் வெறுப்பதில்லையே ஏன்? பெண்களின் உதட்டு நீரை, தேன், பால் என்று பலர் புகழ்ந்துள்ளதாலும், பெண் மயக்கத்தோடு அவர்களை நோக்குவதாலும் அவ்வாறு கருதுகின்றனர். 18
பவள இதழ், அம்பு போன்ற விழி, அரும்பு போன்ற பல், மலை போன்ற தனமுடைய பெண் உலகில் யார்? குமரப்பெருமானின் மனம் கவர்ந்த வள்ளி. 19
முருகப் பெருமானுக்கு இரண்டு மனைவியர். ஆனால் அவரின் அண்ணன் விநாயகர் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை? கொம்பு என்றால் பெண் என்று பொருள். யானைமுகக் கடவுளுக்கு இரண்டு கொம்புகள் (மனைவியர்) உள்ளனர். ஒன்று திருமுகக் கொம்பு, மற்றொன்று திருக்கரக் கொம்பு 20
திரெளபதியை காதலித்து மணந்தவர்கள் ஆறு பேரோ? ஆம் குந்தி தேவி சூரியனை அழைத்ததால் பெற்ற கர்ணனையும் சேர்த்து ஆறு பேர்தான் 21
தேனை விட இனிமையுள்ளது, புலியை விட வலிமையானது எது? பெண்களின் அதரபானம் தேனை விட இனிமையானது. வறுமை புலியை விட வலிமையானது. 22
கடலின் எல்லையை கண்டாலும், நட்சத்திரங்களின் அளவைக் கண்டாலும், வானத்தின் வரையை கண்டாலும் எதை காணமுடியாது? விலைமாதர் மனம் தான் அளவிட அரியது. 23
விடத்தை விடக் கொடுமையானது எது? இரக்கமில்லாதவர் படைக்கும் சோறு. 24
எமனை விடக் கொடூரமானது யார்? கொடுமை செய்யும் பெண்டிர் 24
கடலின் உப்புநீரை நுகர்ந்த மேகம் மழையாகப் பெய்யும்போது நன்னீரைத் தருவது எவ்வாறு? புகழ்மிக்க மேலோர்களைச் சேர்ந்த கீழ்மக்களும் நல்லோராகக் கருதப்படுவர். 25
தலைவனுடன் ஊடும்போது தலைவி புன்சிரிப்பு கொள்வதேன்? கணவன் போய்ச் சேர்கின்ற தனக்கெதிரியாகிய பெண்ணை அவன் பிரிந்து வந்து விடுவான் என்பதால் வந்த புன்சிரிப்பு 26
தலைவனுடன் ஊடும்போது தலைவி நெட்டுயிர்ப்பு கொள்வதேன்? முன்னாளில் அடைந்த இன்பம் போதாமையால். 26
தெய்வானையைத் திருமணம் செய்த பிறகு வேடவர் குல வள்ளியை மணம் புரிந்தது ஏன்? பூமியில் உள்ள மனிதர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு. 27
திருப்பாற்கடல் திருமாலுக்கு இரத்தினம், கெளத்துவமணி, இலக்குமி தேவி ஆகியவற்றை அளித்தது. ஆனால் சிவனுக்கு மட்டும் விஷத்தைத் தந்தது ஏன்? சிவன், யானைத்தோல், இளஞ்சந்திரன், பாம்பு, ஆபரணம், தோடு அணிந்தவன் தானே என்று அர்ப்பமாய் எண்ணியதால் ஆகும். 28
ஒரு பெண் தன் பெற்ற மகனைக் கோபித்து நீ போய்த் தூங்கு என்று துரத்திக் கூறுவாளோ? அப்படிக் கூறுவது ஆச்சரியமல்லவா? ஒரு மாதமாக வராத தன் கணவன் வந்து சோர்ந்திருக்கும் வேளையில் அந்தப் புதல்வன் பால் வேண்டுமென்று அழுதிருப்பான் எனவே அப்படிச் செய்திருப்பாள் 30

 

பரம்பரைப் புலவரான சரவணார் பற்றிய செய்தியோ, பிற குறிப்போ மிகுதியும் கிடைக்கப் பெறா. ஆங்காங்கே ஒரு சில நூல்கள் வாயிலாகக் கிடைக்கப்பெற்ற பாடல்களை வைத்து இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவரது சந்ததியினரையாவது கண்டுகொள்ள வேண்டுமென்ற முயற்சியும் தோல்வியில் முடிந்தது. பிறந்த மண்ணில் வசிக்கும் அகவை நிறைந்தோர் பலரைக் கண்ட போதிலும் எவ்வகைத் தகவலும் கிடைக்காமையும்  சற்று வருத்தம். முத்துராமலிங்க சேதுபதி மன்னருக்கும் இவருக்குமுள்ள உறவுநிலையை வினா/ விடை வாயிலாக வெளிப்படுத்தும் இருவரின் புலமைத்திறன் யாவரையும் வியக்க வைக்கின்றது.

சான்றெண் விளக்கம்

  1. தமிழ்ப்புலவர் அகரவரிசை, இரண்டாம் பகுதி, 449
  2. தமிழ்ப்புலவர் அகரவரிசை, முதற்பகுதி, ப.47
  3. தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம் (தொகுதி -நான்கு), ப.131
  4. தமிழகக் குறுநில வேந்தர்கள், ப127
  5. களஞ்சியம் அரேபியா ஆக்டினோமைகோசிஸ், இணையம்.
  6. சேது மன்னர்களின் தமிழ்ப்பணி,
  7. பிற்காலப் புலவர்கள், ப.401
  8. பிற்காலப் புலவர்கள், ப.401
  9. பிற்காலப் புலவர்கள், ப.401
  10. விறலிவிடு தூது, ப.95
  11. சேதுபதி விறலிவிடு தூது முன்னுரை
  12. சேதுபதி விறலிவிடு தூது, முன்னுரை vi
  13. சேதுபதி விறலிவிடு தூது, முன்னுரை ப.vii
  14. சேதுபதி விறலிவிடு தூது, முன்னுரை ப.viii
  15. சேதுபதி விறலிவிடு தூது, முன்னுரை ப.viii
  16. சேதுபதி விறலிவிடு தூது, முன்னுரை ப.viii
  17. பல வித்துவான்கள் பாடிய தனிப்பாடற்றிரட்டு’ (இரண்டாம் பாகம்) ப.90
  18. தொல்காப்பியம், 1527
  19. தொல்காப்பியம், 1531
  20. பல வித்துவான்கள் பாடிய தனிப்பாடற்றிரட்டு’ (இரண்டாம் பாகம்) ப.91

துணைநூற்பட்டியல்

  • இராமசாமிப் புலவர் சு.அ, 1956, தமிழ்ப் புலவர் வரிசை (ஐந்தாம் பகுதி), சைவ சித்தாந்த நூற்ப்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
  • கந்தசாமி செ, 2012, சேதுபதி மன்னர்களின் தமிழ்ப்பணி, நான்காம் தமிழ்ச்சங்கம், மதுரை.
  • கந்தையா ந.சி, 2009, தமிழ்ப் புலவர் அகராதி, அமிழ்தம் பதிப்பகம், சென்னை.
  • கௌமாரீஸ்வரி எஸ்.(பதி.), 2006, தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை.
  • பிள்ளை கா.சு. (உ.ஆ), பல வித்துவான்கள் பாடிய தனிப்பாடற்றிரட்டு (பகுதி -2), கழக வெளியீடு, சென்னை.
  • …….., தமிழ்ப் புலவர் சரித்திரம், சைவ சித்தாந்த நூற்ப்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
  • புலியூர்க்கேசிகன், (உ.ஆ), 2012, பழமொழி நானூறு, சாரதா பதிப்பகம், சென்னை.
  • வைத்தியநாதன். எச், (ப.ஆ), 2000, பிற்காலப் புலவர்கள், மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை.

……………………………………….

Date of submission: 2019-06-25

Date of acceptance: 2019-07-20

Date of Publication: 2019-08-03

Corresponding author’s

Name: முனைவர் சே.முனியசாமி

Email: [email protected]

……………………………………………………………

[1] உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜெ.பீ. கலை அறிவியல் கல்லூரி, அகரக்கட்டு, ஆய்க்குடி, தென்காசி – 627852. மின்னஞ்சல்: [email protected]