Download the PDF

ச.தமிழ்ச்செல்வன் தமிழ்ச் சிறுகதையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். பண்பாட்டுப் போராளி. மிகச்சிறந்த கட்டுரையாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். தற்போது அவ்வமைப்பின் மாநிலத் தலைவர். அறிவொளி இயக்கத்தில் நீண்டகாலம் பங்களிப்பைச் செய்தவர். மாற்றுக் கல்விக்கான பல்வேறு செயல்பாடுகளில் தொடர்ச்சியாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பதிலும், பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதிலும் எழுதுவதிலும் முதன்மை இடம் தந்து படைப்பினைப் படைத்துள்ளார்.

சமுதாயத்தில் பல பிரச்சினைகள் இருந்தாலும் முக்கியப் பிரச்சினையாக விளங்குவது வறுமையாகும். இத்தகைய வறுமையைப் போக்க பல திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையிலும் இன்னும் இப்பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இப்பிரச்சினையை முன்வைத்து பல படைப்புகள் வந்துள்ளன. அப்படைப்புகளுள் ஒன்றாகத்  தமிழ்ச்செல்வனின் மீடியம் என்னும் சிறுகதையும் விளங்குவது சிறப்புக்குரியது. இச்சிறுகதைக்கண் உள்ள வறுமைப்புனைவு குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கதைக்கரு

மாதம் ஒன்றுக்கு நானூறு ரூபாய் சம்பளம் பெறும் ஒருவர்  குடும்பச்சுமை காரணமாக தனது அன்றாடத் தேவைகளில் ஒன்றான மாற்று உள்ளாடை ஒன்று வாங்க முடியாத அவலநிலையில் உள்ளார். இதனால் அவருக்கு எரிச்சல் அதிகம் ஏற்படுகிறது. யாரும் அவசரம் அவசரமாய்ப் பேசிவிட்டு நகர்ந்து சென்றால், நம்மிடம் இருந்து ஏதேனும் நெடி வருகிறதோ என்று அடிக்கடி சந்தேகம் கொள்வார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகநேரிடுகிறது. இதற்கு முடிவுகட்டிவிட திட்டமிட்டார். ஆனால், கையில் இரண்டு ரூபாய் தான் இருந்தது. முன்பு வாங்கும் பொழுது ஏழு ரூபாயாக இருந்தது. ஏழு ரூபாய்க்கு இன்னும் ஐந்து ரூபாய் தேவைப்பட்டது. ப்யூன் ரெங்கசாமியிடம் கேட்கமுடியாது ஏற்கனவே முப்பது வாங்கியாச்சு. அதனால், டைப்பிஸ்ட் கிருஷ்ணனிடம் கேட்டு வாங்குவதற்குள் அவன் குடும்பக் கதையெல்லாம் சொல்லிவிட்டு ஐந்து ரூபாயை அழுதான் (கொடுத்தான்). அலுவலகத்தில் குற்றாலத்திற்குச் செல்வதற்கு எடுத்த முடிவில் தானும் கலந்து கொள்வதாக கதை நாயகன் அறிவித்ததன் விளைவு தான் இந்தப்பாடு. அவர் என்ன முன்னபின்ன குற்றாலம் போகாத ஆளா இல்லை. இரண்டு ரூபாய் டிக்கெட் தூரம் இருந்து கொண்டு போகாமல் இருக்கமுடியுமா? தற்பொழுது குழந்தைகள் ஜாஸ்தி அதான் இவ்வளவு பிரச்சினை. ஆபீஸ் முடிந்து போகும் போதே உள்ளாடை உலகத்திற்குள் நுழைந்தான். கடையில் 34 சைஸ்ஸில் ஒரு ஜட்டி எடுங்க என்றான். உங்களுக்கு 36 தான் சார் சரியாக இருக்கும் என்றான் கடையில் இருந்தவன். எடுத்துப் போட்டான் எல்லாம் 18 ரூபாயாக இருந்தது. ரொம்ப காஸ்டிலியாவும் இல்லாம ரொம்ப இதாகவும் இல்லாம மீடியம் ரேட்டுல எடுங்க என்றார். ரெண்டு பிளாஸ்டிக் பைகளிலிருந்து ஜட்டிகளாய்த் தட்டினான். கீழே எல்லாம் பன்னிரண்டு ரூபாயைச் சுற்றி விலை. விலையைக் குறைத்துப் பார்த்தான். கம்பெனி ரேட்டுதான் என்றவுடன் வாங்கவில்லை. சரி, கர்ச்சீப் எடுங்க என்று கர்ச்சீப்பை வாங்கி வந்தான். இது மீடியம் எனும் சிறுகதையின் கதைக்கரு ஆகும். இனி, அச்சிறுகதையில் வரும் வறுமைப்புனைவுகள் குறித்து விளக்கப்படுகின்றன.

ஏழ்மையின் கொடுமை

இச்சிறுகதையில் படைப்பாளன் இவ்வாறான கதைக் கருவினைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்னவாக இருக்கமுடியும் என்று பார்க்கின்ற பொழுது, ஆடம்பரமான பொருட்களை வாங்கிப் பல்வேறு குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்ற அதே சூழ்நிலையில் மாற்று ஜட்டி வாங்க முடியாத நிலையிலும் இருக்கின்றனர் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது.

அவன் கடன் கேட்கின்ற பொழுது கடன் கொடுப்பவனும் தனது குடும்பப் பாரத்தினை எடுத்துக்கூறி; பணத்தினைக் கொடுக்கின்றான். இச்சூழலும்,

இப்போது போட்டிருக்கிற ஜட்டியில் எலாஸ்டிக் லூஸாகிவிட்டது. கைத்தையல் போட்டு கொஞ்ச நாள் ஓடியது. இப்போ அரைஞாண் கயிற்றை மேலே போட்டு இறுக்கித் தான் நிக்குது. அதோட போன ஞாயிற்றுக்கிழமை லீவு டூட்டி போட்டுத் தொலைச்சுட்டாங்களாதுவைத்துப்போட முடியாமப்போச்சு

எனக் குறிப்பிடப்படும் சூழலும் வறுமையின் உச்சத்தினைக் காட்டுகின்றன. ஆயின், ஆசிரியர் மிகவும் துல்லியமாக வறுமையின் கொடுமையைப் படைத்துள்ளார் எனலாம்.

வறுமைக்கான காரணம்

வறுமையை வரையறை செய்வதற்கு அமைக்கப்பட்ட லக்கடவாலா குழுவின் அறிக்கை,

தனிநபர் வருமானம் 1987-88 இன் விலைவாசிப்படி மாதம் ஒன்றுக்கு 115 ரூபாய் 43 பைசாவுக்கும் கீழ் ஊதியம் பெற்றால் அவர் வறுமையில் உள்ளவர் (Datt & Sundharam:2011:381)

என்று குறிப்பிடுகிறது. மேற்கண்ட அறிக்கையின்படி பார்க்கும் பொழுது, இக்கதையில் வரும் நாயகனின் குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் என உறுப்பினர்கள் உள்ளனர். பிள்ளைகள் என்று குறிப்பிட்டு இருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளாகத் தான் இருக்க முடியும். இருப்பினும் இரண்டு குழந்தைகள் என்று வைத்துக் கொண்டோமானால், அக்குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 461 ரூபாய் 72 பைசா தேவைப்படுகிறது. இவ்வாறு பார்க்கின்ற பொழுது கதைநாயகனின் குடும்பம் வறுமையில் உள்ளதை அறியமுடிகிறது. உறுப்பினர்கள் அதிகமாகியதால் வந்தது பணத்தின் தேவை. தேவைகள் அதிகமாகின்ற பொழுது பணத்தின் தேவையும் அதிகமாகின்றது. இவன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் 400 ரூபாய் தான் சம்பளம் அதனை வைத்துக் கொண்டு குடும்பத்தினை நடத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இக்கதையில் உடன் வேலைபார்க்கும் கிருஷ்ணனின் குடும்பமும் கஷ்டப்படக்கூடிய குடும்பமாகவே படைத்துள்ளார். இக்கதையினைப் பார்க்கும் பொழுது,

சமுதாய வெளிப்பாடாக இலக்கியங்களைக் கருதும் மார்க்சியத் திறனாய்வாளர்கள் பெரும்பான்மையான இலக்கியங்கள் ஏனைய விற்பனைப் பொருட்களைப் போன்று விற்பனைப் பொருட்களாகப் பயன்கருதி தயாரிக்கப்படுகின்றன (இலக்கியமும் சமுதாயப் பார்வை, ப.8)

என்று ஜான்சாமுவேல் படைப்பாளர் மீது குற்றம் சாட்டும் வேளையில், ச.தமிழ்ச்செல்வன் போன்ற படைப்பாளர்கள் சமுதாயத்தின் மீது அக்கறையுடன் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

மக்கள்தொகைப் பெருக்கமும் வறுமைக்கான காரணங்களில் ஒன்றாக அமைகின்றது. இதனை,

இவரென்ன முன்னப்பின்ன போகாதவரா? இரண்டு ரூபாய் டிக்கெட்டுக்குள் இருந்து கொண்டு சீசனுக்கு குற்றாலம் போகாமலிருந்தால் எப்படி? பல சமயம் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டே போயிருக்கிறார். இப்போ பிள்ளைகள் ஜாஸ்தியாகிப் போனதாலே போக முடிகிறதில்லை

எனவரும் கதையமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. இதற்குக் குறைவான தலவருமானம், வேலையின்மை, மக்கட்தொகைப் பெருக்கம் போன்றவைகள் வறுமைக்கான காரணங்களாக அமைகின்றன என்று மக்கட்தொகைக் கோட்பாடு  (Theory of Population) குறிப்பிடுகின்றது.

அறியாமையும் வறுமையும்

சிறுகுடும்பம் சீரான வாழ்வு என்பதை மறந்ததால் இத்தகைய நிலையினை அடைந்திருக்கக் கூடும் என்ற நிலையில் படைத்துள்ளார். அதாவது

முன்பெல்லாம் குற்றாலத்திற்குப் போகாதவரா? என்று கேட்பதன் மூலம் அவர் முன்பு போயிருக்கிறார். தற்பொழுது குடும்பத்தில் குழந்தைகள் ஜாஸ்தியாகிப்போனது, அதனால் தான் இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கிறது

என்று குறிப்பிடுவதன் வாயிலாக திட்டமிடப்படாத வாழ்வு வாழ்ந்தமையினால் ஏற்பட்ட பிரச்சினையையே வறுமைக்கான காரணம் என முன்வைக்கினறார் ஆசிரியர்.

பணத்தேவை

மனிதன் தம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பணம் முக்கியப்பங்கு வகிக்கின்றது. இதனை,

With Money in hands, he can get any commodity and service he likes in whatever he needs and at anytime he requires”. (M L JHINGAN:1997:20)

எனக் குறிப்பிடுவர். இக்கூற்றின்படி, பணம் கையில் இருக்கும் பொழுது எந்த தேவையையும் எந்த நேரத்திலும், அவன் விருப்பம் போல் எந்தப் பொருளையும், எந்த வேலையையும் செய்து முடிக்க முடியும் என்று குறிப்பிடுகின்றது. இத்தகைய பணத்தினைப் பெறுவதற்கு இக்கதையில் வரும் நாயகன் படும்பாட்டினைப் படைப்பாளன் சித்தரித்துள்ள விதம் மிகவும் மனதில் கொள்ளத்தக்கதாகவே அமைகின்றது. ஏனெனில், பணம் இல்லாமையினால் நாகரிகத்தினையே வெறுக்கக்கூடிய அளவிற்கு பாத்திரத்தினைப் படைத்துக் காட்டியுள்ளார்.

வறுமையும் உளப்பாதிப்பும்

வள்ளுவர் மனநலம் குறித்து சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் குறிப்பிடும் பொழுது, மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் (குறள்.457) என்கிறார். மனிதனை உளப்பாதிப்பிற்கு ஆளாக்குவதில் சூழல் பெரும்பங்கு வகிக்கிறது. தான் வாங்குகின்ற சம்பளத்தினை வைத்துக்கொண்டு தன் குடும்பத்தை நடத்துவது என்பது மிகவும் சங்கடமாக அமைகிறது. எனவே அத்தியாவசியப் பொருளான ஜட்டி வாங்குவதற்குக் கூட கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை, கதையில் வரும் நாயகனிடம் யாராவது அவசர அவசரமாகப் பேசிவிட்டுச் சென்றால், நம்மகிட்டே ரொம்பவும் துர்நாற்றமடிக்குதோ! இப்போதெல்லாம் இந்த சந்தேகம் அடிக்கடி வர ஆரம்பிச்சுருக்கு. இவருக்குள்ளே இந்தச் சந்தேகம் வந்துட்டா அப்புறம் அவ்வளவு தான். யாரிடமும் மனம்விட்டுப் பேசவே முடியாது. ‘எப்படா பேசி முடிப்போம்னு பெரிய தர்மசங்கடமாய் இருக்கும் ஆபீஸில் யாராச்சும் கமுக்கமாய்ப் பேசிக்கொண்டிருந்தால் உடனே இவருக்குச் சந்தேகம் வந்துவிடும். நம்மைப் பார்த்து தான் சிரிக்காகளோ என்ற சந்தேகம் அடிக்கடி வருகிறது. இத்தகு நிகழ்விற்கு ஜட்டியினை வாங்க முடியாமையும் காரணமாக அமைந்தது. இதனைப் பொருளாதாரச் சீர்கேடு உள்ளத்தைச் சிதைத்து விடும் வன்மை வாய்ந்தது ஆகும் (1994:7) எனத் து.சிவராஜ் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இக்கதையில் வரும் நாயகன் வறுமை நிலையில் இருப்பதால் ஜட்டி வாங்க முடியவில்லை. ஜட்டியை வாங்கி இருந்தால் இப்படிபட்ட நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டார். இதனால்தான் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதனால் இக்கதையில் வரும் தலைமைப்பாத்திரம் உளநோய்க்கு ஆளாகியிருந்தமையை அறியமுடிகிறது.

நாகரிகத்தினையே வெறுத்தல்

கதையில் வரும் நாயகனின் வறுமைநிலையினை

ஒவ்வொரு முறையும் கடன் வாங்குகிற போது மனசில் வருகிற வருத்தமும் எரிச்சலும், ஆத்திரமும், உறுதிமொழிகளும் இந்த முறையும் வந்து போயின. ஒரு கணம் இந்த நாகரிகத்தின் மீதே வெறுப்பாய் வந்தது. என்ன காலமய்யா இது! அந்தக் காலத்திலெல்லாம் இப்படியா? ஒற்றைக் கோவணம் தானே!

எனவரும் உரையாடல் சுட்டும். இதனை, உள்ளத்தின் முறிவாலும் போராட்டத்தாலும் மனம் கலக்கம் அடைகின்றது. இக்கலக்கத்தின் விளைவே கவலை ஆகும் எனும் து.சிவராஜ் (1994:34) கருத்து தெளிவுபடுத்தும். இக்கருத்து குறிப்பிடும் கவலை எனும் நிலையின் அடிப்படையில் நாகரிகத்தினை வெறுக்கிறான் கதைத்தலைவன். ஏனெனில், நாகரிகம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் காலந்தோறும் மாறக்கூடியதாகும். அத்தகைய நாகரிகத்தினால் தானே தாம் அவமானப்படும் நிலை ஏற்பட்டது என்பதற்காக நாகரிகத்தினை வெறுக்கும் முகாந்திரமாக அக்கதைத்தலைவன் அமைந்துள்ளான்.

நிறைவாக,

இக்கட்டுரையின் வாயிலாக வறுமைக்கான காரணங்களில் மக்கள் தொகைப் பெருக்கமும் அறியாமையும் பெரும்பங்காற்றுகின்றன. மேலும், அன்றாடத் தேவைகளில் ஒன்றான மாற்று உடை கூட வாங்க முடியாத நிலையிலுள்ள மக்களின் நிலையினைக் காட்டியுள்ளார். இதனால் ஏற்படக்கூடிய உளநோய் குறித்தும் குறிப்பிடும் விதமாக அமைத்துள்ளார். குற்றாலத்தில் குளிக்கின்ற பொழுது, உடன் பணியாற்றுகின்றவர்கள் பார்த்து கிண்டலாகச் சிரித்தமையின் மூலம் ஏழையின் மனநிலையை அருகில் இருப்பவர்களே புரிந்துகொள்ளும் தன்மையில் மனிதன் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, நாகரிகத்திற்கேற்றவாறு தம்மை மாற்றிக்கொள்ள முடியாத பொருளாதாரம் இன்மையால் நாகரிகத்தினையே வெறுப்பவனாகப் படைத்திருப்பது வறுமையின் உச்சத்தினை இச்சிறுகதைக்  காட்டுகின்றது என்பது வெளிப்படை.

துணைநின்றவை

  1. இரவிச்சந்திரன் தி.கு, 2005, சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை – 600 024.
  2. சிவராஜ் து , 1994,சங்க இலக்கியத்தில் உளவியல், சிவம்பதிப்பகம், 2/82 Q9> காந்தி நகர், விருபாட்சிபுரம், வேலூர் – 632 002.
  3. தமிழ்ச்செல்வன் ச., தமிழ்ச்செல்வன் சிறுகதைகள், பாரதி புத்தகாலயம், சென்னை.
  4. பரிமேலழகர் (உ.ஆ), 2007, திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை-14.
  5. ஜான் சாமுவேல்., இலக்கியமும் சமுதாயப் பார்வை, ஐந்திணை வௌயீடு.
  6. Datt & Sundaram, 2011, INDIAN ECONOMY, S.Chand & Company, Ram Nagar, New Delhi-110 055.
  7. JHINGAN M L., 1997, MONETARY ECONOMICS, Konark Publishers PVT LTD, A-149, Main Vikas Marg, Delhi-110 092.

.முத்துச்செல்வம்

முனைவர்பட்ட ஆய்வாளர்

தமிழ்த்துறை

பாரதியார் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர்-46

[email protected]