Download the Pdf

Abstract: Human imitation on malaipadukadam the tamil classical literature. The present paper elucidates the sense of human imitation.

மலைபடுகடாம் நவிலும் மானுட விழுமியங்களை அடையாளப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும். விழுமியம் என்பதற்கான வரையறை, வாழ்வியலுக்கும் விழுமியத்துக்குமான பிணைப்புநிலை, மலைபடுகடாம் வெளிப்படுத்தும் மானுட வாழ்வியல் நெறி, மலைபடுகடாம்வழிப் பெறப்படும் மானுட விழுமியங்கள் முதலிய தரவுகளை உள்ளடக்கிய வண்ணம் இக்கட்டுரை அமைகின்றது.

(இக்கட்டுரைக்கு உ.வே.சா. பதிப்பித்த ‘பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்’ 1931, மூன்றாம் பதிப்பு எனும் நூல் மூலமாகக் கொள்ளப்பெற்றுள்ளது).

 1. மலைபடுகடாமில்? மலைபடுகடாத்தில்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலைபடுகடாம் தொடர்பாக வெளிவந்த ஆய்வுக்கோவை ஒன்றில் மலைபடுகடாம் என்னும் சொல்லை முன்னிலைப்படுத்தி வந்த கட்டுரைத் தலைப்புகள் மொத்தம் 36. அவற்றுள், ‘மலைபடுகடாமில்’ எனும் சொற்பயன்பாடு கொண்ட கட்டுரைத் தலைப்புகள் – 20; ‘மலைபடுகடாத்தில்’ எனும் சொற்பயன்பாடு கொண்ட கட்டுரைத் தலைப்புகள் – 03.                                                                                           பத்துப்பாட்டை நினைவுகூரப் பயன்படும் ‘முருகு பொருநாறு…’ எனத் தொடங்கும் வெண்பாவின் இறுதியடி ‘கடாத்தொடும் பத்து’ என்றே நிறைவுபெறும். இவ்விடத்துக் ‘கடாத்தொடு’ என்பதற்குப் பதிலாக ‘கடாமொடு’ எனும் சீரைப் பயன்படுத்தினாலும் தளையமைப்பில் சிதைவு ஏற்படாது. தொல்காப்பிய உரையாசிரியர்களும் பத்துப்பாட்டை முதன்முதலில் பதிப்பித்த உ.வே.சா.வும் ‘கடாத்தொடு’ என்றே கையாண்டுள்ளனர். காரணம் – தமிழ் இலக்கண மரபை, தொல்காப்பிய இலக்கண மரபை உணர்ந்துள்ளமையே! ‘மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை’ (தொல்.எழுத்து.உருபு.13) எனும் நூற்பாவை அவர்கள் மனத்துள் கொண்டமையே!

 1. மலைபடுகடாம் – நூற்குறிப்பு

பிறிதொரு பெயர் – கூத்தராற்றுப்படை

பாடியவர் – இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

பாட்டுடைத் தலைவன் – செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன்

அடிகளின் எண்ணிக்கை – 583 (ஆசிரியம்)

பாடுபொருள் – ஆற்றுப்படுத்துதல்

 1. மலைபடுகடாத்தில் இடம்பெறும் பழந்தமிழக நிலப்பரப்பு

மலைபடுகடாத்தில் இடம்பெறும் பழந்தமிழக நிலப்பரப்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

 • பல்குன்றக் கோட்டம்
 • செங்கண்மா
 • நவிரமலை
 • சேயாறு

3.1.  பல்குன்றக் கோட்டம்

தொண்டைநாடு பண்டைக்காலத்தே 24 கோட்டங்களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்றே இந்தப் பல்குன்றக் கோட்டம். பல்குன்றக் கோட்டம் என்னும் பெயரே அதன் இயல்பை உணர்த்தும் காரணப்பெயராக அமைந்துவிடுகின்றமை சிறப்பு. ‘கோட்டமென்பது நாட்டின் பெரும்பிரிவிற்குச் சங்கேதமாக வழங்கி வருகின்றது. ‘பல்குன்றக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம்’ என்னும் சிலாசாஸன வாக்கியத்தால் திருவேங்கடமலை (திருப்பதி)யும் பல்குன்றக் கோட்டத்துள்ளதென்று தெரிகிறது: குன்றுசூழ் இருக்கை நாடுகிழவோனே (மலைபடு.583) என்பது இதனை வலியுறுத்தும்’ என்பார் உ.வே.சா (1931:1எii).

3.2 செங்கண்மா

செங்கண்மா என்னும் நகரம் நன்னனது தலைமையிடமாகத் திகழ்ந்துள்ளது. செங்கண்மா  திருவண்ணாமலைக்கு மேற்கே ஏறக்குறைய 22 மைல்கல் தொலைவில் அமைந்துள்ள ஊராகும். தற்பொழுது இவ்வூர் செங்கண்மான் (1931,உ.வே.சா.), செங்கம் (2012,மோ.சங்கர்) என மருவி வழங்கி வருகின்றது.

3.3 நவிரமலை

நன்னன்சேய் நன்னனின் வளம்மிக்க ஒரு மலையாகத் திகழ்வது நவிரமலை. நவிரம் என்பதற்கு, ‘ஆண்மயிர், உச்சி, தலை, மயில், மலை, வாள், புன்மை’ எனும் பொருள்களை அகராதி (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி – ஐந்தாம் மடலம் (முதற்பாகம்)) தருகின்றது. அவற்றுள்,‘உயர்ந்த’ ,‘சிறந்த’ எனும் பொருள்தரும் வகையில்,‘உச்சி, தலை’ எனும் பொருண்மைகளை இவ்விடத்துப் பொருத்திப் பார்க்கலாம். இம்மலையில் புகழ்பெற்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது.

பேரிசை நவிரம் மேஎய் உறையும்

காரி யுண்டிக் கடவுளது இயற்கையும் (82-83)

என்னும் பாடலடிகளுக்கான நச்சினார்க்கினியரின் உரையானது,

பெரிய புகழினையுடைய நவிரமென்னு மலையைப் பொருந்தியிருக்கும் நஞ்சை ஊணாக உடைய இறைவனது இயல்பும்’

என அமைவது கொண்டு, இம்மலைக்கோயில் இம்மன்னன் உருவாக்கியதன்று, காலத்தால் முந்தியது என்பது தெற்றென விளங்கும்.

3.4 சேயாறு

சேய் + ஆறு = சேயாறு.

சேய் என்பதற்கு ‘சிவப்பு, செவ்வாய், முருகன், புதல்வன், இளமை, பெருமை, தலைவன், குழந்தை, தூரம், நீளம், மனையிடம், மூங்கில்’ எனும் பொருள்களை அகராதிகள் (சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரகராதி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, சங்க இலக்கியச் சொல்லகராதி ஜபாட்டும் தொகையும்ஸ ) தருகின்றன. இவற்றுள், ‘சிவப்பு, செவ்வாய், இளமை, பெருமை, தூரம், நீளம்’ ஆகியன பண்பு அடிப்படையில் பிறந்த பெயர்களாக அமைகின்றன.

வருமொழியாக அமையும் ஆற்றின் தன்மையை (இயல்பை) முன்னிலைப்படுத்தும் பெயர்களாக ‘பெருமை, தூரம், நீளம்’ ஆகியன அமைகின்றன. எனவே,‘பெருமையுடைய ஃ நெடுந்தொலைவுடைய/நீண்ட’ எனும் அடையைப் பெற்ற ஆறு ‘சேயாறு’ என மனங்கொள்ளலாம்.

4.மலைபடுகடாம் : கருத்துப் பொருண்மை (பொழிப்பு)

மலைபடுகடாம் உணர்த்தும் மையப் பொருண்மைகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். இத்தொகுத்துக் கூறல் பகுதியானது, 1912இல் உ.வே.சா. பதிப்பித்த ‘மலைபடுகடாம்’ பதிப்பில் இடம்பெற்றுள்ள ‘மலைபடுகடாத்தின் பொழிப்பு’ (ஆ.மணி, 2014:229) எனும் பகுதியை அடியொற்றியது.

 • கூத்தர் பிறிதொரு கூத்தர் தலைவனிடம் மொழிதல்
 • நன்னனிடம் பரிசில் பெறும்முன் தங்களது நிலைமை கூறல்
 • நன்னனிடம் பரிசில் பெற்றபின் உங்களது நிலை என்னவாகும் எனக் கூறல்
 • நன்னனின் ஊரை அடைவதற்குரிய வழியின் இயல்பு, நன்னன் நாட்டு உணவுவகை, மலையின் தன்மை, இயற்கை வளம், நாட்டு மக்களின் பண்புநலன், மலையில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் இயல்பு ஆகியவற்றைத் தொகுத்துச் சுட்டல் (இனி இவற்றை விரிவாகக் கூறுகிறேன் நீர் செவிமடுத்துக் கேள் எனல்).
 • விளைபொருட்களின் இயல்பு கூறல்
 • சிற்றூர்களில் வாழும் வேடரது விருந்தோம்பல் தன்மை கூறல்
 • மலைநாட்டு மக்களது விருந்தோம்பல் தன்மை கூறல்
 • மலைந்pலத்து வழியின் கொடுமை கூறல்
 • காவற்காடு, காட்டாற்றின் கொடுமை கூறல்
 • காடுகாவற் பணிபுரியும வேடரது விருந்தோம்பல் தன்மை கூறல்
 • அஃறிணை உயிர்களின் அன்புறு காட்சிகளைக் கூறல்
 • மலைநாடு, ஊர்களில் எழும் பல்வேறு ஆரவாரங்கள்
 • காவலரண்களின் இயல்பு
 • நடுகல்லின் இயல்பு
 • இடையர்தம் விருந்தோம்பல் பண்பு
 • வேடர்தம் விருந்தோம்பல் பண்பு
 • உழவர்தம் விருந்தோம்பல் பண்பு
 • கடைவீதி, குறுந்தெரு, மாடங்களின் தன்மை
 • பரிசில் பெறவுள்ள கூத்தரை, முன்பே பரிசில் பெற நன்னனிடத்து வந்துள்ள கூத்தர்குழாம் வரவேற்கும் இயல்பு கூறல்
 • நன்னனிடத்து வைக்கப்பெற்றுள்ள கையுறைப் பொருட்களின் வரிசை கூறுதல்
 • கூத்தர் நன்னனது புகழைப் பாடும்படிக் கூறுதல்
 • நன்னனது மனநிலை, மறுமொழி பற்றிக் கூறுதல்
 • பன்னாள் தங்கி, மீள எண்ணும் கூத்தர்க்கு நன்னன் தரும் பரிசில்
 1. விழுமியம்

விழுமியம் எனும் சொல் சங்க இலக்கியங்களுள் இடம்பெறவில்லை ஜசங்க இலக்கிய அகராதி (பாட்டும் தொகையும்). அதேவேளை,‘விழுமிய’ எனும் சொல் சங்க இலக்கியங்களுள் காணப்படுகின்றது. இச்சொல்லுக்கு,

சிறந்த- (சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி , செந்தமிழ்ச்                                            சொற்பிறப்பியல் பேரகரமுதலி, தமிழ்-தமிழ் அகரமுதலி)

செழித்த, வளமான, உயர்ந்த- (வய.றமைவழையெசல.ழசப)

என அகராதிகள் பொருள் தருகின்றன. பத்துப்பாட்டில் இடம்பெறும் ‘விழுமிய’ (முருகு.173-74, மதுரைக்.321; 736) என்னும் சொல்லுக்கு நச்சினார்க்கினியர்,‘சீரிய’ எனப் பொருள் கொள்கின்றார். இப்பொருளை உட்செறித்தே அகராதிகள் ‘சிறந்த’ எனும் பொருளை முன்வைக்கின்றன எனலாம். வள்ளுவர் குறிப்பிடும் ‘விழுப்பம்’ (ஒழுக்கம் விழுப்பம் தரலான் :131 ) என்னும் சொல்லும் ‘சீர்மை’ எனும் பொருளுடையதே!

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்

விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்த

தாகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே (எழுத்து.13)

என நூலின் அழகு பற்றிப் பேசும் நன்னூல் குறிப்பிடும் ‘விழுமியது பயத்தலும்’ சிறந்த எனும் பொருளை மையமிட்டதே!

எனவே, மனித வாழ்வில் பின்பற்றத்தக்க நெறிகளுள் சீர்மையுடையனவற்றைத் (சிறந்தனவற்றைத்) தனித்து அடையாளப்படுத்த ‘விழுமியம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தலாம்.

6.மலைபடுகடாம்வழிப் பெறப்படும் விழுமியங்கள்

இனி, வாசக மனநிலையில் நின்று மலைபடுகடாத்தினைப் பயில்வதன்வழி உணர்ந்து கொள்ளும் விழுமியநெறிகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூற இயலும்.

 • ஆற்றுப்படுத்துதல் என்பதே ஒரு விழுமியம் தான் (புதியவர்க்கு வழி கூறுதலும் வழியின் இயல்பைக் கூறுதலும் எனும் நிலையில்)
 • இலக்கண மரபு பேணல்
 • இயற்கையைப் பாதுகாத்தல் வேண்டும்
 • வழிப்போக்கர்க்கு உணவளித்தல்
 • அயலூர்வாசிகள் தங்கப் பொதுமன்று அமைத்தல்
 • விருந்தெதிர் கொள்ளல் (தலைநாள் அணுகிய அதே மனநிலையில் அணுகுதல்)
 • கோயிலைப் பாதுகாத்தல்
 • வழிபாட்டு மரபு பேணல்
 • மங்கலச் சொல்லால் தொடங்குதல்
 • பெயர்கள் காரணப்பெயர்களாக (தமிழ்மரபுவழி) அமைதல்
 • விருந்தோம்பும் பண்பை இளைய தலைமுறையினரிடம் வளரச் செய்தல்
 • விருந்தோம்பும் பண்பைப் பாடுபொருளாக்கி அடுத்த தலைமுறையினர்க்குக் கொண்டு செல்லல் கலைவடிவங்களைப் போற்றுதல், கலைஞர்களை ஊக்குவித்தல்
 • வள்ளண்மை உடையவனைப் புகழ்ந்து இலக்கியம் இயற்றுதலும் ஒருவகையில் விழுமியம் தான்

7.மலைபடுகடாம் : விழுமிய வகைப்பாடு

மலைபடுகடாம் நவிலும் விழுமிய நெறிகளுக்கு ‘உரியவர்’ என்னும் நிலையில் மேற்குறித்த விழுமியங்களைப் பின்வருமாறு மூவகைப்படுத்தலாம்.

7.1 தனிமனிதம்சார் விழுமியம்

 • ஆற்றுப்படுத்துதல் என்பதே ஒரு விழுமியம் தான் (புதியவர்க்கு வழி கூறுதலும் வழியின் இயல்பைக் கூறுதலும் எனும் நிலையில்)
 • இயற்கையைப் பாதுகாத்தல் வேண்டும்
 • வழிப்போக்கர்க்கு உணவளித்தல்
 • அயலூர்வாசிகள் தங்கப் பொதுமன்று அமைத்தல்
 • விருந்தெதிர் கொள்ளல் (தலைநாள் அணுகிய அதே மனநிலையில் அணுகுதல்)
 • விருந்தோம்பும் பண்பை இளைய தலைமுறையினரிடம் வளரச் செய்தல்
 • கோயிலைப் பாதுகாத்தல்
 • வழிபாட்டு மரபு பேணல்

7.2 ஆட்சியாளர்சார் விழுமியம்

 • இயற்கையைப் பாதுகாத்தல் வேண்டும்
 • அயலூர்வாசிகள் தங்கப் பொதுமன்று அமைத்தல்
 • விருந்தெதிர் கொள்ளல் (தலைநாள் அணுகிய அதே மனநிலையில் அணுகுதல்)
 • கோயிலைப் பாதுகாத்தல்
 • வழிபாட்டு மரபு பேணல்

7.3 படைப்பாளுமைசார் விழுமியம்

 • இலக்கண மரபு பேணல்
 • மங்கலச் சொல்லால் தொடங்குதல்
 • பெயர்கள் காரணப்பெயர்களாக (தமிழ்மரபுவழி) அமைதல்
 • விருந்தோம்பும் பண்பைப் பாடுபொருளாக்கி அடுத்த தலைமுறையினர்க்குக் கொண்டு செல்லல்
 • கலைவடிவங்களைப் போற்றுதல், கலைஞர்களை ஊக்குவித்தல்
 • வள்ளண்மை உடையவனைப் புகழ்ந்து இலக்கியம் இயற்றுதலும் ஒருவகையில் விழுமியம் தான்.

மலைபடுகடாம்     இன்று நாம்

மலைபடுகடாம்                       இன்று நாம்

காரியுண்டிக் கடவுள்                                       காளகண்டேஸ்வரர்

நவிரமலை                                                       திரிசூலகிரி, பர்வத மலை

செங்கண்மா                                                    செங்கம்

சேயாறு                                                           செய்யாறு, சண்முக நதி (ஷண்முக நதி)

பாடல் கேட்டு உடல் வேதனையை மறத்தல்      ?

எத்தகைய இனவுணர்வோடு, பண்பாட்டுணர்வோடு வாழ்கின்றோம் நாம்…?

துணைநின்றவை

 1. சண்முகம்பிள்ளை மு.(ப.), 1981, பத்துப்பாட்டு ஆய்வு (புறம்), சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை.
 2. சாமிநாதையர் உ.வே.(பதி.), 1931, ‘பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும்’ , கேசரி அச்சுக்கூடம், சென்னை.
 3. மணி ஆ., 2014, மலைபடுகடாம் பதிப்பு வரலாறு (1889-2013),காவ்யா பதிப்பகம், சென்னை.
 4. ஜெகதீசன் இரா., முருகேசன் க.,ரூகார்த்திகேயன் வேல்.,(பதி.), 2012, பத்துப்பாட்டு ஆய்வுக்கோவை – மலைபடுகடாம், குறிஞ்சிப் பதிப்பகம், ஆம்பூர்.
 5. wikipedia.org
 6. wiktionary.org
 7. tamilvu.org