‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர்தம் உள்ளத்தோடும், உயிரோடும் இணைந்து நிறைந்த நல்லெண்ணம் ஆகும்.  முன்பின் அறிமுகமாகாதவர்களையும் உறவினராகக் கருதி வரவேற்று உபசரிப்பது தமிழர்களுக்கு இயல்பான குணமாகும்.  தமிழ்மண்ணில் பிறந்த அனைவர்க்கும் இது பண்பாகவே பதிந்து விட்டது.  இதுவே, விருந்தோம்பலுக்கு வழிவகுத்ததெனலாம்.  ‘விருந்து’ என்ற சொல்லுக்கு ‘புதுமை’, ‘புதிய வரவு’, ‘புதிய வருகை’ என்ற சிறப்புப் பொருள்கள் உண்டு.  முன்பின் தெரியாதவர்களை இன்முகங்காட்டி வரவேற்று உபசரிப்பது ‘விருந்தோம்பல்’ எனப்படும். இதனை மிகுதியாகவே ‘மலைபடுகடாம்’ நூலில் காண முடிகிறது.  பாணர், பாடினியர், கூத்தர், விறலியர் மற்றும் வழிப்போக்கர் முதலானோரைத் தத்தம் உறவினராகக் கருதி இனிதாய் வரவேற்று உபசரிப்பதை, பிற இலக்கியங்களில் காணமுடியா விருந்தோம்பலை ‘மலைபடுகடாம்’ எனும் நூலில் விரிவாகக் காணமுடிகிறது.  வந்தாரை வரவேற்றுத் தத்தம் சக்திக்கேற்ப உணவு பரிமாறி உபசரித்து மகிழ்ந்த நிலையை ‘மலைபடுகடாம்’ நூலில் தெளிவாகக் காண முடிகிறது.

மலைபடுகடாம் மகளிர்

இருபதாம் நூற்றாண்டின் இருபது முப்பதுகளில் தோன்றி நாற்பது ஐம்பதுகளில் தனிச் செங்கோலோச்சி, தான் ஏற்றுக் கொண்ட சில மாற்றங்களால் அறுபது எழுபதுகளிலும் சிறுபான்மை வழக்காகத் தொடர்ந்து எண்பது, தொண்ணூறுகளில் வரலாறாகி நிற்கின்ற இலக்கியக் கோட்பாட்டரங்கின் பெயர்தான்புதுத்திறனாய்வுக் கோட்பாடுஎன்பதாகும்.(1)

இதன் அடிப்படையில் இலக்கியம் என்பது மானுட அனுபவத்தின் சாரமாக மொழி வாயிலாக வெளிப்படும் ஒரு சொல்லோவியம்; இதனை அனுபவிக்க அதுவே போதும்; இலக்கியம் என்பது ஒரு வரலாற்றுச் சாசனமன்று என்னும் கருத்தை வலியுறுத்தி இலக்கியத்தைப்பற்றி ஆராய்வதைவிட இலக்கியத்தையே ஆராய்வதுதான் நம் தலையாய பணி என்று உலகிற்கு உணர்த்தியதுபுதுத் திறனாய்வுதான்என்று கூறுவர்.(2)

இதனை நினைவிற்கொண்டு ‘மலைபடுகடாம்’ இலக்கியத்தை ஆய்வு செய்யும்பொழுது அதில் மகளிரை முன்நிறுத்தி நடைபெறும் நிகழ்ச்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.  இதில் நானிலத்தைச் சார்ந்த மகளிர் பற்றிய விவரம் மிகுதியாக இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. அதுவும், அவர்கள் போற்றிய விருந்தோம்பலே அதிகம் விளக்கம் பெறுவதைக் காணமுடிகிறது.

விருந்தோம்பலில் மகளிரைக் குறிப்பாகவும் சிறப்பாகவும் உணர்த்தும் மரபு

திருவள்ளுவர் ‘விருந்தோம்பல்’ எனும் அதிகாரத்தில்,

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

      வேளாண்மை செய்தற் பொருட்டு   (குறள் – 81)

என்று கூறுவார்.

இதற்குப் பரிமேலழகர், மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம் விருந்தினரைப் பேணி அவருக்கு உபகாரம் செய்தற் பொருட்டு(3)   என விளக்கம் தருவார். இல்லின்கண் இருந்து வாழ்வதென்பது இல்லற வாழ்க்கையைக் குறிப்பது. அதுபற்றித் திருவள்ளுவர் கூறும்பொழுது,

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

      ஐம்புலத்தா றோம்பல் தலை  (குறள். 43)

என்று கூறுவார்.  பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம் ஆகும்(4) என்று இதற்குப் பரிமேலழகர் கூறுவார்.

எனவே, வாழ்வு என்றாலும், இல்லறம் என்றாலும் ஒரு பெண்ணோடு அன்பால் கூடி மக்களைப் பெற்று இன்பத்தோடு வாழ்வதென்பது குறிப்பாகப் பெறப்பட்டது.  இதனை மனத்திற்கொண்டே ‘மலைபடுகடாம்’ ஆசிரியர் தன்நூலில் விருந்து பற்றிக் கூறும்பொழுது பெண்களைத் தனித்துச் சுட்டத் தேவையில்லை என அறிந்து பொதுவாகக் கூறிச் செல்வதைக் காணலாம்.

மலைபடுகடாம் கூறும் விருந்தோம்பல்

‘பத்துப்பாட்டில் அமைந்த ஆற்றுப்படை இலக்கியங்கள் விருந்தோம்பும் பான்மையை விரிவாக விளக்கி நிற்கின்றன. மன்னர் விருந்தினரை வரவேற்று நின்ற பார்வை, புனிற்றா கன்றை நோக்கும் பார்வையுடன் ஒப்பிடப்படுகிறது. கண்ணால் பருகுவோர் போல் ஆர்வம் கொண்டு வரவேற்று, ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டும் உள்ளத்தை அவர்கள் பெற்றிருந்தனர். விருந்தினர்களின் பல் மழுங்குமாறு உணவுகள் வழங்கப்பட்டன’ (5) எனக் கூறுவர்.

‘நன்னன்’ எனும் குறுநில மன்னனைப் புகழ்ந்து பாராட்டிப் பெருங்கௌசிகனார் எனும் புலவரால் பாடப்பெற்ற நூல்தான் ‘மலை படுகடாம்’ என்பது.  இதில் ஏழு இடங்களில் நானில இனத்தவர் தம்மை நாடி வந்த வழிப்போக்கர்களை விருந்தினர்களாகக் கருதி விருந்து வைத்து உபசரிப்பதைச் சுவைபட, நயம்பட எடுத்துக் கூறுவதைக் காணலாம்.  அவை,

 1. குறிஞ்சிநிலக் குறத்தியர் விருந்து
 2. கானவர் விருந்து
 3. சிற்றூர் விருந்து
 4. கோவலர் விருந்து
 5. புல்வேய்ந்த குடிசை விருந்து
 6. உழவர் தரும் விருந்து
 7. மூதூர் மக்கள் தரும் விருந்து

என அமைகின்றன.

குறிஞ்சி நிலக் குறத்தியர் விருந்தோம்பல்

மலைநாட்டின் அழகை இரசித்தபடி பாணர், பாடினியர், கூத்தர், விறலியர் மலைநாட்டின் வழியே சென்று கொண்டிருப்பதைக் கண்ட குறத்தியர் தத்தம் குழந்தைகளிடம் கூறி, அவர்களை உறவினர்களாகக் கருதி இன்சொல் கூறி அழைத்து வருமாறு அனுப்புவர்.  வந்தவர்களை முற்றத்தில் தங்கி இளைப்பாறுமாறு செய்வர்.  கள்ளினை உண்பித்துக் களைப்பினைத் தீர்த்துக் கொள்ளுமாறு செய்வர்.  அவர்களுக்கு நல்ல விருந்து வைக்கும் விருப்பத்தோடு பல உணவுப் பொருட்களைத் தேடிச் சேகரித்து, உணவு தயாரிக்க முற்படுவர்.  அருவி நீரால் அடித்து வரப்பட்ட பலாப்பழத்தின் முதிர்ந்து உதிர்ந்த விதைத் தன்மையில்லா வெண்ணிறமுடைய கொட்டைகளையும்,    வெள்ளிய புறத்தைக் கொண்ட சதைப்பற்றுடைய புளியம்பழத்தின் புளிப்பையும், உலையாக வார்த்த மோருக்கு அளவாகக் கலந்து, மூங்கிலில் வளர்ந்து முற்றிய, நெல்லரிசியை மணம் வீசும்படி துழாவிச் சமைத்த வெள்ளிய சோறாகிய உணவினைச் சமைத்து, நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியுடன் ‘விருந்தினைப் பெற்றோம்’ எனும் விருப்பத்துடன் உள்ளம் உவப்ப விருந்து வைத்து மகிழ்வர்.(6)

கானவர் விருந்தோம்பல்

     கானவர் நும்மைக் கண்டால் மலர்ந்த முகத்தோடு வரவேற்று விருந்து வைத்து உபசரிப்பர். தாம் வேட்டையாடிக் கொணர்ந்த பொருட்களை நும் முன் வைத்து உண்ணுமாறு வேண்டுவர்.  யானையின் கொம்புகளைக் காவு மரமாகக் கொண்டு பல பொருட்களைச் சுமந்து வருவர்.  அதில் தேன், கிழங்கு, மாமிசத்துண்டுகள், பன்றித் தசைகள் போன்றவை இருக்கும்.  அவற்றை உண்டு மகிழுமாறு செய்வர்.(7)

சிற்றூர் விருந்து

மலைப்பகுதியைச் சார்ந்த சீறூர்களில் வாழும் மக்கள் வழிப்போக்கர்களைக் கண்டுவிட்டால் இன்முகம் காட்டி வரவேற்பர்.  மலைபோன்ற அவர்களுடைய வீட்டின் வாயிலில் நில்லாமல் நேரே உள்ளே சென்று, பல நாட்களுக்கு முன்பே உறவுடையவர் போல உறவு கொண்டு, ஓய்வு பெறச் செய்விப்பர்.  அவர்களது வருத்தம் நீங்கும்படி இனிய மொழிகளைக் கூறி, நெய்யில் பொரித்து வெந்த பருத்த தசைகளையும், சுவையான தினையரிசிச் சோற்றையும் உண்டு மகிழுமாறு செய்வர்.(8)

கோவலர் விருந்து

புலி பாய்தலால் இறந்துபட்ட தன்னுடைய துணையாகிய பிணையை நினைத்து, வருந்தி இருக்கும் கலைமான் நின்று கூப்பிடும் முல்லை நிலத்தில் கோவலர் குடியிருப்புகள் இருக்கும்.  அவர்கள் வழிப்போக்கர்களைக் கண்டால் இன்முகங்காட்டி வரவேற்பர்.  பண்டங்களை விற்றுப் பெற்ற பல்வேறு நெல்லின் அரிசி கொண்டு சமைத்த சோற்றினையும், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டின் வெந்த சுவையான தசைகளையும் உண்ணத் தருவர்.  இத்துடன் பாலும், அதன் பொருட்களையும் தருவர்.  அவற்றை உண்டு மகிழ்ந்து ஓய்வு பெற்றபின் வழிப்போக்கர் தம் பயணத்தைத் தொடங்குவர்.(9)

புல்வேய்ந்த குடிசை விருந்து

முல்லை நிலம் கடந்து மருதநிலம் நோக்கிச் செல்லும் வழப்போக்கர்களைப் புல்வேய்ந்த குடிசைகளில் வாழும் வேறு சில முல்லைநில மக்கள் இன்முகங்காட்டி வரவேற்பர்.  விருந்திடப் பல்வகை உணவுகளைத் தயாரிப்பர். அவரை விதை, மூங்கில் அரிசி, மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசி ஆகியவற்றைப் புளிக்கரைத்த உலையில் பெய்து வேகவைத்த உணவினை வழங்கி வயிறாற உண்டு ஓய்வு எடுக்குமாறு செய்வர்.  அங்குத் தங்கும் நாட்களில் அரிசியையும், கறித்துண்டுகளையும் கூட்டி வேக வைத்து, நெய்யுடன் கலந்து உண்ணுமாறு விருந்து படைப்பர்.  வெல்லத்தோடு கூடிய தினையரிசியையும் உண்ணத் தருவர்.  உண்டு மகிழ்ந்து நன்கு ஓய்வு பெற்ற பிறகு பயணத்தைத் தொடங்குவர்.(10)

உழவர் தரும் விருந்து

செல்வச் செழிப்புடன் வாழும் உழவர்கள் இல்லங்களை மருத நிலத்தில் காணலாம். அவர்கள் வழிப்போக்கர்களாகிய பாணர் கூட்டத்தைக் கண்டவுடன் வரவேற்று உபசரிப்பர். வாளை மீன்களையும், வரால் மீன்களையும் தாமே பிடித்து வந்து வேக வைப்பர்.  அரிசிச் சோற்றுடன் உண்ணுமாறு செய்வர். குடித்து மகிழ கள்ளினைத் தருவர். நல்ல விருந்துண்டு அங்குள்ளார் மகிழுமாறு பாணர்கள் தத்தம் இசைக்கருவிகளில் மருதப் பண்ணை இசைத்து மகிழ்வித்து ஓய்வு பெற்று, பிறகு பயணத்தைத் தொடங்குவர்.(11)

மூதூர் மக்கள் தரும் விருந்து

மருத நிலத்தின் மையத்தில் ஓங்கி உயர்ந்த மதில்கள் சூழ்ந்த அரண்மனையைக் கம்பீரமாகக் காணுமாறு சூழ்ந்துள்ள மூதூரில் வாழும் மக்கள் அங்கு வரும் வழிப்போக்கர்களை வரவேற்று விருந்தளிப்பர்.  வழிப்போக்கர்கள் விருந்துண்டு மகிழ்வர். அவர்கள் நன்னனைக் காண்பதற்கு முன்பு முருகன் போல காட்சியளித்து இரவலர்களைப் போற்றி அருளும் விதத்தை அங்குள்ளார் கூறுவதைக் கேட்டு மகிழ்வர்.(12)

வாழையடி வாழையாக வந்த விருந்தோம்பல் பண்பு

உயர்ந்தோர் கூறும் வழக்கால் மரபு தோன்றுகிறது.  வழக்கை உருவாக்குவதும் செயல்படுத்துவதும் உயர்ந்தோரே. இதனை,

வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

      நிகழ்ச்சி அவர்கட்டு ஆகலான்      (தொல்.பொருள். மரபியல், 93)

என்று தொல்காப்பியர் கூறுவர்.

‘மனையற மகளிரின் முதன்மையான கடமை விருந்தோம்பல், விருந்து என்பது இல்லம் தேடிப் புதிதாக வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது ஆகும். வீரமகளிர் சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து ஊரோடு பசித்திருந்தும் கிடைத்ததை ஊரோடு பகிர்ந்துண்டும் தம்குடியை நாடி வருவோரைப் பசித்துயர் நீக்க விருந்தோம்பி வாழ்ந்த நிலையைப் புறநானூறு கூறுகின்றது.

ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை

      நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது

      விருந்தெதிர் பெறுகதில் யானே     (புறம்.306; 3-5)

என்ற பாடல் நாள்தோறும் விருந்து வருதல் வேண்டுமென நடுகல் வழிபாடு நிகழ்த்துவதை எடுத்துக்காட்டுகிறது.(13)

‘சங்ககாலத்தில் விருந்தோம்புதல் ஒரு சிறந்த கலையாகப் போற்றப்பட்டது.  கணவனுடன் கூடி வாழும் மங்கல மகளிர்க்குரிய தனி உரிமையாக இது கருதப்பட்டது.  கணவனை இழந்தவர்களும் பிரிந்து வாழ்பவர்களும் விருந்தை எதிர்கொண்டு வரவேற்கும் உரிமை பெறவில்லை.  கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகி தனக்கு நேர்ந்த இழப்புக்களை நிரல்படுத்தும்போது, விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை(சிலப்.16; 73)

என விதந்து கூறுவதைக் காணலாம்.(14)

சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், காப்பிய காலத்திலும் மரபுவழிப்பட்ட பண்பாகப் போற்றப்பட்ட விருந்தோம்பல் பக்திகாலத்திலும் தொடர்ந்து போற்றப்பட்டு வந்ததைச் சேக்கிழார் நயம்பட எடுத்துரைப்பார்.

‘வந்த விருந்தினர்களைப் போற்றி வரவேற்றல் என்பது பண்டைக் காலந்தொட்டே தமிழகத்தில் வழங்கிவரும் வழக்கமாகும். திருமுனைப்பாடி நாட்டை வருணிக்கும் சேக்கிழார்,

காலெல்லாம் தகட்டுவரால் கரும்பெல்லாம் கண்பொழிதேன்

      பாலெல்லாம் கதிர்காலி பரப்பெல்லாங் குலைக்க முரு

      சாலெல்லாம் தரளநிரை தடமெல்லாஞ் செங்கழுநீர்

      மேலெல்லாம் அகிற்றூபம் விருந்தெல்லாம் திருந்துமனை

என அங்குள்ள வீடுகளில் விருந்தினர்களை உபசரிக்கும் வழக்கம் உள்ளமை காட்டப்படுகிறது.’(15) வாழையடி வாழையாக வந்துகொண்டிருக்கும் இந்தப் பண்பையும், மரபையும் நமக்கு நினைவூட்டவே பாரதிதாசனார் தாம் படைத்த ‘குடும்ப விளக்கு’ எனும் காவியத்திலும் சிறப்பாக விளக்கிப் பாடியுள்ளதையும் காணலாம்.

மலைபடுகடாம்வழி அறியலாகும் விருந்தோம்பல் செய்திகள்

நன்னன் நாட்டைச் சூழ்ந்த எல்லா நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் பயமின்றி, மகிழ்ச்சியாக வாழ்ந்து தம்மை நாடி வருவோரையும் வழிப்போக்கர்களையும் விருந்தினராகக் கருதி வரவேற்று உபசரித்து விருந்துண்டு மகிழுமாறு செய்ததை விரிவாகக் காண முடிகிறது.  அவர்களுக்கு விருந்தோம்பும் பண்பு இயல்பாகவே அப்பகுதியில் வாழும் எல்லா மக்களுக்கும் இருந்ததென்பதைக் காண முடிகிறது. தம் மன்னன் நன்னனைக் காண வருவார் தத்தம் உறவினரே எனக் கருதி மகிழ்ந்து விருந்து வைத்து உபசரிக்கும் பண்பை நன்னனின் நாட்டு மக்கள் பெரிதும் போற்றி வாழ்ந்தனர் எனத் தெரிய வருகிறது.

துணைநின்றவை

 1. அ.அ. மணவாளன், இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1995, ப – 27.
 2. மேலது, ப – 41.
 3. திருக்குறள் – பரிமேலழகர் உரை, பதிப்பாசிரியர் எஸ். கௌமாரீஸ்வரி, சாரதா பதிப்பகம், சென்னை, எட்டாம் பதிப்பு, 2007, ப – 31, விருந்தோம்பல் அதிகாரம், முதல் குறள், பரிமேலழகர் உரை, ப – 31.
 4. மேலது, ப – 21.
 5. ஆர். இராமகிருட்டினன், தமிழக வரலாறும், தமிழர் பண்பாடும், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, ஒன்பதாவது பதிப்பு, 2010, பக் 91 – 92.
 6. ச.வே.சுப்பிரமணியன், (பதி.ஆ)., சங்க இலக்கியம், மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 2 ஆம் பதிப்பு, 2011, மலைபடுகடாம், அடிகள் 176-175, ப – 627.
 7. மேலது, அடிகள் 145 – 157, ப – 627
 8. மேலது, அடிகள் 165 – 169, ப – 627
 9. மேலது, அடிகள் 404 – 420, பக் 630 – 631
 10. மேலது, அடிகள் 434 – 443, ப – 631
 11. மேலது, அடிகள் 454 – 470, ப – 631
 12. மேலது, அடிகள் 492 – 497, ப – 632
 13. க.அ.ஜோதிராணி, சங்க இலக்கியத்தில் சமூக ஆய்வுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதற்பதிப்பு, 2011, ப – 69.
 14. ஆ.இராமகிருட்டினன், தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, ஒன்பதாவது பதிப்பு, 2010, ப – 91.
 15. தா.ஈசுவரப்பிள்ளை, பண்பாட்டு நோக்கில் திருமுறைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதற்பதிப்பு, 2008, ப – 37.

முனைவர் இரா.விஜயராணி

இணைப் பேராசிரியர்

தமிழாய்வுத்துறைத் தலைவர்

பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 017.

[email protected]