பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் 583 பாடலடிகள் கொண்டதொரு நூல். இந்நூலின் மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படை. இந்நூலைப் பாடியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். இந்நூலின் பாட்டுடைத்தலைவன் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் ஆவான். இந்நூலில் செங்கண்மா, பல்குன்றக் கோட்டம், நவிரமலை, சேயாறு ஆகிய வாழிடங்கள் முதன்மையாகச் சுட்டப்பெற்றுள்ளன. இந்நிலப்பரப்புகள் தொண்டைநாட்டு நிலப்பரப்புகளாகும். இந்நாட்டின் வளங்களை மலைபடுகடாத்தின்வழி அறிமுகநிலையில் அடையாளப்படுத்துவனை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.

அரசனைத் தேடிச் செல்லும் கூத்தர்கள்

நன்னன்சேய் நன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர் கூட்டத்துள் ஒருவன், வறுமையில் வாடும் பிறிதொரு கூத்தர்கூட்டத் தலைவனிடம் நன்னனின் வள்ளல்தன்மையைக் கூறி, அவனிடம் ஆற்றுப்படுத்துவதனை மையநோக்கமாகக் கொண்டதே இந்நூல். நன்னனின் நவிரமலையை அடைவதற்கான வழிகள் குறித்து நூல்முழுமையும் விதந்து பேசப்பட்டிருக்கும்.

அவ்வகையில், வழிப்போக்கரான கூத்தர்க்கு நன்னனின் நாட்டுக் குடிமக்களும் விருந்தோம்பல் செய்துள்ளனர். இனிவரும் பகுதியில் நன்னனின் நவிரமலையை நோக்கிச் செல்லும் கூத்தர்களின் நிலைமை, நன்னனின் நாட்டுவளம் ஆகியன விவரிக்கப் பெறுகின்றன.

உயர்ந்த மலையில் ஏறுவதில் துன்பம் இல்லை எனினும் நடந்த களைப்பால் நாயின் நாக்குப் போன்ற காலடியில் (பாதத்தில்) கற்கள் பட்டதால் கால்கள் சிவக்க மயில் தோகை போல அசைய மெலிந்தவராய் விறலியர் நடந்தனர். அங்கு நீ்ர் நிறைந்த குளத்தில் குளிர்ச்சி தரும் அருவிநீர் உள்ளது. தூய்மையாக இருந்த மணல்மேட்டில் கூத்தர்களின் தலைவனே, கொஞ்சம் இளைப்பாறிக்கொள் என்றான் ஆற்றுப்படுத்தும் கூத்தருள் ஒருவன்.

உயர்ந்தோங்கு பெருமலை ஊறின்று ஏறலின்

மதம்தபு ஞமலி நாவின் அன்ன                                               துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக்

கணங்கொள் தோகையின் கதுப்பிகுத்து அசைஇ

விலங்குமலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து

இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக்

கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல்

புனல்கால் கழீஇய மணல்வார் புறவில்

புலம்புவிட் டிருந்த புனிறுஇல் காட்சிக்

கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ      (41-50)

நன்னன்சேய் நன்னனின் நாடு

வற்றாத வளமுடைய நாடு மற்ற நாட்டினர்க்கு உணவு தந்து உதவும் வளம் கொண்ட நாடு. மலைகளும், சோலைகளும், விலங்குகளும் புகலிடமாகக் கொண்ட நாடு அரசன் புகழ் கெடாதபடி பகைவர்கள் புறமுதுகு காட்டி ஓடச் செய்வார்கள். அவர்களின் புகழைப் பாராட்டிப் பரிசுகள் கொடுத்து வாரி வழங்குவர். வான்மழை அவர்களை இகழ்ந்தவர்களைத் தண்டிக்கும் அளவிற்குப் புகழ்ந்து பணிந்தவர் பகையரசர்கள் தன் நாட்டுரிமைகளைக் கூடத் தருவர். இதனை உணர்த்தும் பாடலடிகள் பின்வருமாறு:

ஆற்றின் அளவும் அசையும்நல் புலமும்

வீற்றுவளம் சுரக்கும்அவன் நாடுபடு வல்சியும்

மலையும் சோலையும் மாபுகல் கானமும்

தொலையா நல்லிசை உலகமொடு நிற்பப்

பலர்புறங் கண்டவர் அருங்கலம் தரீஇப்

புலவோர்க்குச் சுரக்கும் அவர்ஈகை மாரியும்

இகழுநா்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநா்க்கு

அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு

தூத்துளி பொழிந்த பொய்யா வானின்      (67-75)

பலாப்பழங்களின் அழகு

நெடுமலைச் சாரல்களில் மழைவளம் பெற்று வளர்ந்த பலாமரத்தின் காய்கள் மத்தளம் போல் கிளைகளில் தொங்கும். அவை வழிப்போக்கரின் தலையில் தட்டி அவர்களைத் தடுத்து நிறுத்தும்.

மாறுகொள ஒழுகின ஊறுநீர் உயவை

நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்து

உண்ணுநா்த் தடுத்தன தேமாப் புண்அரிந்து

அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி

விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக்

குடிஞை இரட்டும் நெடுமலை அடுக்கத்துக்

கீழும் மேலும் கார்வாய்த்து எதிரிச்

சுரம்செல் கோடியர் முழவின் தூங்கி

முரஞ்சுகொண்டு இறைஞ்சின அலங்குசினைப் பலவே            (136-144)

வீடுகள்தோறும் பல்சுவையுணவு 

அவ்வூரில் மலையில் விளைந்த தினை, ஊன்கறி, மூங்கில் குழாய் உள்ளே ஊற்றிப் புளிக்க வைக்கப்பட்டுள்ள கள்ளின் இனிய சுவையோடு தேன், நெல்லரிசிச் சோற்றையும் உண்டு மகிழ்ந்தனர் நன்னனின் நாட்டு மக்கள். அவற்றை அவ்வூர்மக்கள் உமக்கும் விருந்தாகத் தருவர் என்கிறான் ஆற்றுப்படுத்தும் கூத்தன். இதனை உணர்த்தும் பாடலடிகள் பின்வருமாறு:

வேய்ப்பெயல் விளையுள் தேக்கள் தேறல்

குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப்

பழங்செருக்கி உற்றலும் அனந்தல் தீர

அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்

வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை  (171-175)

இறைவனை வழிபடுங்கள் வாத்தியம் வேண்டாம்

பெரிய கருங்கல் போன்ற முகபடாம் போர்த்திய யானைப் படையில், வில் ஏந்தி வீரம்மிக்க படைவீரர்கள் காவல் காத்து நிற்பர். மலை உச்சியில் பூவேலைப்பாடுகள் செய்யப்பட்ட கோபுரங்கள் காட்சியளிக்கும். அங்கு இறைவனை வணங்குங்கள், ஆனால் இசைக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம், காரணம் – மழை பெய்துகொண்டே இருக்கும். அதனால் இசைக்கருவிகளின் பதம் கெட்டு விடும் என்று குறிப்பிடுகிறான் ஆற்றுப்படுத்தும் கூத்தன்.

மாரியின் இகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்

தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்

சூழியிற் பொலிந்த சுடா்ப்பூ இலஞ்சி

ஓர்யாற்று இயவின் மூத்த புரிசைப்

பராவரு மரபிற் கடவுட் காணிற்

தொழாஅநிர் கழியின் அல்லது வறிது

நும்இயம் தொடுதல் ஓம்புமின் மயங்குதுளி

மாரி தலையும்அவன் மல்லல் வெற்பே

அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்

கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்  (226-235)

அருவி விழும் ஓசையும் பழங்களின் மணமும்

மலையின் உயரத்தில் பழுத்த பலாப்பழத்தைக் குரங்குகள் உண்டு சுவைக்கும் போது தேனின் சுவையும் பலாப்பழத்தின் வாசமும் திசையெல்லாம் மணக்கும். மலையிலிருந்து அருவிநீர் வாரி அடித்துக்கொண்டு பல்பொருட்களை வீழ்த்துவதால் உண்டாகும் ஓசையானது இன்னிசை வாத்தியம் ஒலிப்பது போல் தோன்றும். இதனை உணர்த்தும் பாடலடிகள் பின்வருமாறு:

பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ

கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந்து ஊறலின்

மலைமுழுதும் கமழும் மாதிரம் தோறும்

அருவிய நுகரும் வானர மகளிர்

வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்

தெரியிமிழ் கொண்டநும் இயம்போல் இன்னிசை   (291-296)

ஓசைகள் பல

குழிக்குள் விழுந்த யானையைப் பிடிக்க முயலும் பாகர்களின் பேச்சொலியும், கிளிகள் விரட்டும் பெண்கள் போடும் பேரோசையும், கூட்டத்தைவிட்டுத் தப்பியோடிய காளையின் ஓசையும், இடையர்களும் குறவர்களும் இருபகுதியாகப் பிரிந்து வந்து ஆடிப் பாடிக் கூவும் ஒலியும், காட்டெருமைகள் தமக்குள் சண்டையிடும் ஒலியும், காட்டு மல்லியும், குறிஞ்சிப் பூவும் சிதையும் மெல்லிய ஓசையும் செல்லும் வழியிடையே நீங்கள் கேட்கமுடியும் என்கிறான் ஆற்றுப்படுத்தும் கூத்தன்.

முல்லைநிலத்தாரின் விருந்தோம்பல்

நெல்லையும் அரிசியையும் பண்டம் மாற்றிக் கொள்வது போல் வெள்ளாடும் செம்மறியாடும் கலந்து மேயும் முல்லை நிலத்தில் கடல் போன்ற ஒலி செய்யும் காட்டில் இருக்கும் இடையர்கள் குடியிருப்பில் இரவு நேரத்தில், பாலும் சோறும் உண்ணத் தந்து மயிர் நீக்கிய ஆட்டுத்தோலைப் படுக்கையாக உறங்கத் தருவர். இரவு காட்டில் உள்ள விலங்குகள் துன்பம் நேர்ந்து விடாதவண்ணம் நெருப்பு மூட்டித் துணையாக இருப்பர் என்கிறான் ஆற்றுப்படுத்தும் கூத்தன்.

பலம்பெறு நசையொடு பதிவயின் தீர்ந்தநும்

புலம்புசேண் அகலப் புதுவிர் ஆகுவிர்

பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன

தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்

கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும்

பல்யாட்டு இனநிரை எல்லினிர் புகினே

பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்

துய்ம்மயிர் அடக்கிய சேக்கை யன்ன

மெய்யுரித்து இயற்றிய மிதிஅதன் பள்ளித்

தீத்துணை ஆக்ச் சேந்தனிர் கழிமின்  (411-420)

மருதநில வளமும் விருந்தோம்பலும்

முள்நீக்கிய மீனின் தசையுடன் வெண்மையான அரிசிச் சோறும் தேனுடன் மலர் மாலை சூடிய நன்னனுக்கு ஏற்றதாகும். அதைத் தம் சுற்றத்தாருடன் உண்டு மருத நில உழவர்கள் மகிழ்வர். மருதநில உழவர்கள் பாடும் ஏர்மங்கலப்பாட்டை யாழ் மீட்டி இசை கூட்டி நீங்களும் பாடி மகிழுங்கள் என்கிறான் ஆற்றுப்படுத்தும் கூத்தன்.

வண்டுபடக் கமழும் தேம்பாய் கண்ணித்

திண்தேர் நன்னற்கும் அயினி சான்ம்எனக்

கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி

எருதெறி களமர் ஓதையொடு நல்யாழ்

மருதம் பண்ணி அசையினிர் கழிமின் (466-470)

கானவரின் உபசரிப்பு

முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு

நெடுவெண் ணெல்லின் அரிசிமுட் டாது

தலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து    (563-565)

தம்முடன் வந்த வேட்டை நாய் பற்றிக் கொண்டு வந்த விலங்குகளின் கொழுத்த தசையை வெண்ணிற நெல் அரிசிச் சோற்றுடன் அன்பின் குறைவின்றி முதல் நாள் உபசரிப்பைப் போல் கடைசி நாள்வரை உபசரிப்பர் கானவர் என்கிறான் ஆற்றுப்படுத்தும் கூத்தன்.

முடிவுரை

நன்னனிடம் பரிசில் பெறுவதற்குக் கூத்தர் கூட்டத்தை ஆற்றுப்படுத்தும், (முன்னர்) பரிசில் பெற்ற ஒருவன் நன்னனின் வள்ளல்தன்மையைச் சிறப்பித்துக் கூறும்வேளையில் நன்னனது நாட்டு நானில மக்களின் விரும்தோம்பல் பண்பினையும் நானில வளங்களையும் சுவைபட விவரித்துக் காட்சிப்படுத்தியுள்ளார் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.

பார்வை நூல்கள்

  • சோமசுந்தரனார், பொ.வே.(உ.ஆ.), 1972, பத்துப்பாட்டு பகுதி (1), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  • ஜெகதீசன் இரா., முருகேசன் க. & கார்த்திகேயன் வேல்., (பதி.), 2012, பத்துப்பாட்டு ஆய்வுக்கோவை – மலைபடுகடாம், குறிஞ்சிப் பதிப்பகம், ஆம்பூர்.

மா.விஜயலெட்சுமி

முனைவர்பட்ட ஆய்வாளர்

பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சிராப்பள்ளி – 24.