இலக்கியங்கள் ஒரு நாட்டின் மொழிவளம் மற்றும் மக்களின் மனவளத்தைக் காட்டும் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. இராமாயணமும் மகாபாரதமும் பாரத நாட்டின் இருபெரும் இதிகாசச் செல்வங்களாகும். மனிதன் எப்படி வாழவேண்டும், மனித வாழ்வு எந்த இலட்சியத்துக்காக முற்பட வேண்டும் என்பவற்றை  எடுத்தியம்புவதில் இவ்விரண்டு இதிகாச நூல்களும் தனித்தன்மை வாய்ந்தவை.இதில் மகாபாரதம் மகரிசிகளின் உபதேசங்கள், மன்னர்களின் வரலாறுகள்,உபகதைகள் மற்றும் மனித வாழ்க்கை முறைகளை (சூதின் தீமை,சகோதரர்களுக்கிடையே ஏற்படும் போரின் கொடுமை, பொறாமையால் மனித மனங்கள் அடையும் புன்மைகள்) எடுத்துக்காட்டும் ஊடகமாகஅமைந்துள்ளது.

மகாபாரதம்பரத வம்சத்தின் வழிவந்த குரு வம்சத்தினரான கௌரவ மற்றும் பாண்டவ குலத்தாரிடையே நடந்த பெரும் போரைத் தழுவியதாகும். அதனாலேயே அது மகாபாரதம் என்று அழைக்கப்பட்டது. வடமொழியான சமசுகிருதத்தில் வேதவியாசரால் மகாபாரதம் முதலில் இயற்றப்பட்டது. மகாபாரதத்தின் கதையை விரும்பாதவர் இலர். ஏனென்றால், அது பெண்மையைக் காக்கும் அடையாளமாக உள்ளது. பெண்மைக்கு மதிப்புக் கொடுக்கும் விதமாகவும் பெண்விடுதலையைப் போற்றும் விதமாகவும் எழுதப்பட்டதே வில்லிபுத்தூராரின்வில்லிபாரதம் ஆகும். வில்லிபாரதத்தில் வரும் கதைமாந்தர்கள் அனைவரும் நல்ல மற்றும் தீய பண்புகளின் அடையாளங்களாகக் காட்டப்பட்டுள்ளனர். மனிதன் முக்குணங்களுக்கு உட்பட்டவன் ஆவான். அது சாத்வீகம், இராசசம் மற்றும் தாமச குணமாகும்.வேதங்கள் பரம் மற்றும் இகத்தைப் பற்றிப் தெளிவாகப் பேசுகின்றன. அவை பரத கண்டத்தின் சமயமான இந்து சமயத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். மும்மூர்த்திகளான அயன், அரி, அரன் ஆகிய மூவரும் முக்குணங்களின் அடையாளமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றனர். அவைதனில் அயன் சாத்வீக குணமாகவும் (படைத்தல்)  அரி இராசச குணமாகவும் (காத்தல்) அரன் தாமச குணத்தின் (அழித்தல்) வெளிப்பாடாகவும் உள்ளனர். இவ்அடிப்படைக் குணங்களைக் கொண்டு மகாபாரதத்தில் இடம்பெறும் முதன்மை கதாபாத்திரமான விதுரரின் பாத்திரப்படைப்பை  ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

விதுரர் பிறப்பு

விதுரர் அத்தினாபுரத்தின் அரசனான விசித்திரவீரியனுக்கும் அவரது பணிப் பெண்ணுக்கும் வியாசரின் அருளால் மகனாகப் பிறந்தார். அவர் எமதர்மனின் அவதாரமாகக் கருதப்படுகிறார். எமனாக இருந்தவர் தர்மம் வழுவியதன் விளைவாக ஆணிமாண்டவ்யரின் சாபத்தினால்; அரச குலத்தில் விதுரராகப் பிறப்பெடுத்ததை,

அம்பிகைக்கொடி தோழியை விடுத்தன ளவள்புரித வந்தன்னால்

உம்பரிற்பெறு வரத்தினாற் றருமன் வந்துதித்திடும் பதம்பெற்றாள் (ஆதி.சம்-20)

என்ற வில்லிபாரத அடிகள் மெய்ப்பிக்கின்றன. அரசகுலத்தில் பிறப்பெடுத்தும் அரியணை ஏற முடியாதவராய் நற்பண்புகளை உடைமையாகக் கொண்டு தர்மத்தின் அவதாரமாய் வாழ்ந்தவர் மகாத்மா விதுரர். இவர் திருதராட்டிரர், பாண்டு ஆகியோருக்குச் சகோதரர் ஆவார். சிறந்த அறிஞர், நீதி அறிந்தவர், தர்மச் சிந்தனையுடையவர் மற்றும் பல நற்பண்புகளைக் கொண்டவர். அவர் சத்திரியராக இருந்த பொழுதிலும் தர்ம சிந்தனை மேலோங்கி இருந்ததனால் அவரைச் சாத்வீகக் குணம் உடையவராக நாம் அறியலாம். திருதராட்டிரரின் அமைச்சராக இருந்த பொழுது அரச குடும்பத்தினரிடையே பிணக்கு இல்லாமல் இருப்பதற்காகவும் நாட்டின் மேன்மைக்காகவும் நல்ல ஆலோசனைகளை வழங்கியவர்.

குந்தியைத் தேற்றுதல்

துரியோதனன் பாண்டவர்களுக்குத் துன்பம் விளைவித்த போதும் விதுரர் இவ்விருவர்களின் நன்மையையே விரும்பியவர். அறிவினை வழங்கும் தந்தையை இழந்து தர்ம வழியில் நடக்கும் பாண்டவர்களுக்கு விதுரர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பாதுகாப்பு அளித்து உதவி செய்து வந்தார். இந்நிலையில் துரியோதனன் வஞ்சகமாக வீமனுக்கு நஞ்சு கலந்த இனிப்புகளை அளித்துக் கங்கையில் மூழ்கடித்தபோது, வீடு திரும்பாத வீமனை நினைத்துக் குந்தி கௌரவர்கள் மீது கோபமுற்று வருந்தினாள். துன்பத்தில் இருக்கும் குந்தியிடம் விதுரர், வீமன் மரணம் அடையமாட்டான், பகைமை வளர்ந்தால் பிற மகன்களுக்கும் ஆபத்து நேரிட வாய்ப்பு உண்டு. அதனால் பொறுமை காத்திட வேண்டும் என்றும் வீமன் விரைவில் வந்து விடுவான் என்றும் நீதி நிறைந்த விதுரர் குந்திக்கு அறிவுரையும் தேறுதல்; மொழியும் வழங்கினார்.இது அவரின் தர்ம சிந்தனையை வெளிப்படுத்துகின்றது.

பாண்டவர்களைக் காத்தல்

அரக்கு மாளிகையில் பாண்டவர்களுக்குத் தீமை நேரிட உள்ளது என்பதை விதுரர் அறிந்திருந்தமையை,

இந்த மாநகர்த் திருமனை யியற்றிடு நாளின்

வந்த மந்திரி வஞ்சனை யறிந்ததன் வடிவாந்

தந்தை யென்னையு மேவினன் றன்மையினு ணர்ந்தே!  (ஆதி.வாராணா-122)

எனும் ஆதிபருவப் பாடலடிகள் மெய்ப்பிக்கின்றன. பல மொழிகளை அறிந்த பண்டிதனான விதுரர் பாண்டவர்கள் வாரணாவதம் செல்லுகையில் மிலேச்சர்கள் மொழியில் தருமனிடம் ஆபத்து வர இருக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்தித் தப்பித்துக் கொள்ளும் வழியையும் கூறினார். மேலும், அரக்கு மாளிகையில் பாண்டவர்களின் மரணத்தைத் தவிர்க்க முன்னேற்பாடாக சுரங்கம் வெட்டும் ஒருவனிடம் மாளிகையில் இருந்து வெளியேற இரகசியப் பாதையும் அமைக்கும்படிக் கூறியதனை,

நெடியகானகத் தளவு நீணிலவறை நெறிபோய்

முடியுமாறொரு மண்டபங் கோட்டினேன் முழைபோல் (ஆதி.வாரணா-123)

எனும் இவ்ஆதிபருவப்பாடலடிகள் புலப்படுத்துகின்றன. அடுத்ததாக அரக்கு மாளிகையில் தீப்பற்றவும் விதுரர் கூறிய முறைப்படிப் பாண்டவர்கள் சுரங்கப்பாதை வழியாகத் தப்பித்தனர். இவ்விதமாக விதுரர் தமது அறிவின் துணைகொண்டு நீதிநெறி வழிநின்று பாண்டவர்களைக் காப்பாற்றினார். தாம் பாண்டவர்களைக் காப்பாற்றிய நிலை துரியோதனன் முதலியவர்கள் அறியாதவாறும் கவனமாகப் பார்த்துக் கொண்டார். இச்செயல்களின் மூலம் அவரின் தர்ம சிந்தனையோடு சேர்ந்த இராசதந்திரத்தையும் அறிய இலகுவாய் உள்ளது.

துரியோதனனுக்கு அறிவுரை கூறல்

விதுரர் பாண்டவர்களிடம் அன்பும் பணிவும் கொண்டிருந்தது போலவே தமது அண்ணன் திருதராட்டிரர் மற்றும் அவருடைய புதல்வர்களான கௌரவர்களிடமும் தெளிவான அன்பு கொண்டிருந்தார். மனம் திறந்து, ஒளிவு மறைவின்றி நன்மை தரும் கருத்துகளைப் பேசினார். அவர்களுக்குச் சரியான ஆலோசனையையே எப்போதும் நல்கி வந்தார். சகுனியின் தீய உணர்வால் தூண்டப்பட்டுப் பாண்டவர்களுடன் சூது விளையாட வேண்டும் என்று தீர்மானித்த துரியோதனனிடம் வில்வித்தையில் வல்ல விதுரர், தர்மப்படி பூமியைப் பாண்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் இழிவான விதூசகர்களைக் காட்டிலும் கொடிய அறிவில்லாதவர்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பாயானால் திருமகள் உன்னைவிட்டு தூரத்திலுள்ளவளாய் விலகிச் சென்று விடுவாள் என்று எடுத்துரைத்தார். மேலும்,விதுரர் பந்துவர்க்கமும் (சுற்றமும்) சேனைகளும் போரில் அழிந்துவிடும் என்று அறிவுரை கூறுவதை,

கல்விதூய நெஞ்சில்லா தவச்சயோதனன் கழறிய மொழிகேட்டு

வில்விதூரனிவ் வேதியன் மொழிப்படி மேதினி வழங்காள்

புல்விதூடகரினு முணர்விலாதவர் புகலும் வாசகங் கேட்கிற்

செல்விதூரியளாய் விடுஞ் சுற்றமுஞ் சேனையுங் கெடுமென்றான் (உத்.உலூ-14)

என்ற உத்தியோகபருவ பாடலடிகள் குறிப்பிடுகின்றன. இச்சூழ்நிலையிலும் விதூரரின் அறச்சிந்தனை மேலோங்கிக் காணப்படுவதை நன்கறியலாம்.

திருதராட்டிரருக்கு ஆலோசனை வழங்கல்

துரியோதனனின் பகைமை எண்ணத்தை அனைவரும் அறிந்திருந்த சூழலில் விதுரர் மகரிசிகள், பெரியோர்கள் உடன்சென்று திருதராட்டிரரிடம், உங்களுடைய இந்த மகன் குலத்தை அழிப்பவன் ஆவான். எனவே இவனைத் தியாகம் செய்வதே மேலானது. இவனை உயிரோடு வாழ விடுவதால் தாங்கள் துன்பம் அனுபவிக்கத்தான் நேரிடும். தர்மத்தின் நியதிப்படி, ஒரு குலத்தைக் காக்க தனிப்பட்ட மனிதனையும், கிராமத்திற்காக ஒரு குலத்தையும், நாட்டிற்காக ஒரு கிராமத்தையும், ஆத்மாவிற்காக பூவுலகம் முழுவதையும் தியாகம் செய்ய வேண்டும் (மஹா.முக்.பாத்-125) என்பதை எடுத்துக்காட்டி அறிவுரை கூறினார். திருதராட்டிரர் துரியோதனன் மீதுள்ள கண்மூடித்தனமான அன்பினால் விதுரரின் ஆலோசனையைக் கேட்காமையால் வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிக்க நேரிட்டது.

மேலும், விதுரர் திருதராட்டிரரிடமும் சூதாட்டத்தால் உங்கள் மகன்கள் மற்றும் தம்பியின் புதல்வர்களிடையே விரோதம் அதிகரிக்கும். இதனால் எவருக்கும் எந்தவித நன்மையும் விளையாது. எனவே சூது விளையாட ஏற்பாடு செய்யாது இருப்பதே நல்லது என்று ஆலோசனை வழங்கினார். திருதராட்டிரர் விதுரரின் கருத்தை ஏற்றுத் துரியோதனனிடம் பல வகையில் எடுத்துக் கூற அவன் அதை ஏற்கவில்லை. அவன் தந்தையின் மனத்தை மாற்றிவிட திருதராட்டிரரோ விதுரரின் மூலமாகவே பாண்டவர்களை இந்திரபிரசுதத்தில் இருந்து  அழைத்து வரச் செய்தார். விதுரர் அண்ணனின் கட்டளையை மீறமுடியாமல் தருமனிடம் எல்லா விவரத்தையும் கூற, தருமனும் சூதாடுவது முறையாகப் படவில்லை என்று உணர்ந்திருந்த போதிலும் தந்தையின் கட்டளையை ஏற்றுக் கொண்டு அவருடன் சென்றான்.

விதுரர் திருதராட்டிரரிடம்அறம், பொருள், இன்பம் இவை மூன்றிற்குமான பலன் தர்மத்தின் மூலமே ஏற்படுகின்றது, தர்மம் அரசனின் வேர். பாண்டவர்களிடமிருந்துபறித்துக் கொண்டதைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அரசன் பிறருடைய உடைமைகளை விரும்பக் கூடாது. இதுவே மேலான இராச தர்மம். ஆகையால் குடும்பம், குலம் மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு குலத்திற்கே களங்கமாகவும், தீயவனாகவும் உள்ள துரியோதனனைச் சிறைப் பிடித்துத் தருமனை அரியணையில் அமரச் செய்யுங்கள் என்றும் தருமன் மனத்தில் எவர் மீதும் விருப்போ, வெறுப்போ கிடையாது, அதனால் தர்ம நெறிப்படி பூமியில் அரசாட்சி செய்வான் என்றும்எடுத்துக்கூறினார். விதுரரின் அறிவுரை திருதராட்டிரருக்கு மரணத் தறுவாயில்; உள்ளவனுக்கு மருந்து கசப்பது போன்று கசந்தது. திருதராட்டிரரின் இழிவான மனநிலையை அறிந்த அவர் இனி கௌரவர்களின் குலம் அழிவது உறுதி என உணர்ந்து கொண்டார். இதுவும் விதுரரின் ஞான முதிர்ச்சியான சாத்வீக குணத்தைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது.

விதுரர் வில்லை உடைத்தல்

போர்க்காலம் வரும் முன்பு அத்தினாபுர சபைக்குக் கிருட்டிணன் பாண்டவர்களுக்கு உரிய அரசஉரிமைப் பங்கைப் பெற்றுத் தருவதற்காக வந்தபொழுது, கௌரவர்கள் இராசமரியாதையோடு விருந்தோம்பல் தருவார்கள் என்றுஅறிந்திருந்தும் எளிமையாக வாழ்ந்த விதுரரின் இல்லத்திற்கே அவர் சென்றார். பாரதத்தின் நாயகனான கிருட்டிணன் தர்மத்தின் நாயகனாவான். அச்சூழ்நிலையில் எது தர்மம் என்று உணர்ந்தமையால் ஞானத்தின் வடிவமாக கௌரவர்களிடம் இருக்கும் விதுரர் இல்லம் உறைந்தார் கிருட்டிணர். விதுரர் ஒருவரே சிறந்த சத்திரியராக விளங்கினார். விடுமன் (பீஷ்மர்), துரோணர், கர்ணர் போன்றோர் சிறந்த வீரர்களாகவும் குருவாகவும் இருந்த போதிலும் அநீதி தன் செங்கோலை உயர்த்திய பொழுது அதனை ஒடுக்க தங்களிடம் சக்தி இருந்த பொழுதிலும் அவ்வழியிலே மௌனிகளாய் நின்றனர். ஆனால் விதுரரோ தவறு என்று அறிந்ததும் நேர்க்கண் நேராக அறிவுரை வழங்கியும் கண்டித்தும் தன்னுள் இருந்த சாத்வீக மற்றும் இராசச குணத்தை வெளிப்படுத்தினார். பின்பு கௌரவர்களின் சபையில் கிருட்டிணன் பாண்டவர்களுக்காக ஒரு ஊர் முதல் ஒரு கிராமம் வரை கேட்டு மறுதலிக்கப்பட்ட பொழுது சபையோர் அனைவரும் மௌனமே வடிவாய் இருந்தபொழுது விதுரர் மட்டும் தருமனுக்கு வழங்க வேண்டிய இராச்சிய உரிமைகளைக் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதற்காக அவர் பிறப்பை இழிவாகப்பேசிக் கௌரவர்கள் எக்காளமிட்ட பொழுது திடமான முடிவு எடுத்து ஒரே வீச்சினால் அகிலத்தை அழிக்கக்கூடிய தனது வில்லை அநீதிக்காகப் பயன்படுத்த மாட்டேன் என்று இரண்டு துண்டுகளாக்கி உடைத்தெறிந்ததை,

வில்லிரண்டினு முயர்ந்த வில்லதனை வேறிரண்டுபட வெட்டினான்

மல்லிரண்டினையு மிருவாகிமுன் மலைந்தகாள முகில் வந்துதன்

னில்லிரண்டு தினம்வைகு தற்குலகி லெண்ணிலாத தவமெய்தினான்     (உத்.கிரு-131)

எனும் உத்தியோகபருவ பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.இறுதியாக விதுரர் துறவு வாழ்க்கை எய்த, சங்கல்பம் ஏற்றுப் பலராமருடன் புனித யாத்திரை சென்றார். இவையாவும் அவரது ஞான முதிர்ச்சியையே காட்டுகின்றன. எனவே விதுரர் சாத்வீக வழி நின்ற செம்மலாவார்.

தொகுப்புரை

பாரதக்கதை காட்டும் பாத்திரப்படைப்பின் அடிப்படையில் விதுரரைக் காணுங்கால் அவர் முக்காலத்தை அறிந்தவராகவே தனது எல்லாச் சூழ்நிலையிலும் இருந்து வந்துள்ளார். நல்லவராயினும் தீயவராயினும் அவர் உய்வடைய அறிவுரை கூறியும் கண்டித்தும் மெய்யான நிலையை எடுத்துக்காட்டி வழிநடத்தியுள்ளார். சத்திரிய கடமை இருந்தபொழுதிலும் அவை நல்லனவா தீயனவா என்பதைப் பகுத்தறிந்து நன்மைவழி நின்றார். இறுதியாக, பூவுலகில் பிரபஞ்ச ஞானத்தை அறிந்து வீடுபேறு அடைவதே உன்னதமானது என்று விதுரர் துறவு புகுந்தமை அவரிடம் சாத்வீக குணம் மேலோங்கி இருப்பதைப் புலப்படுத்துகிறது.

சுருக்கக் குறியீட்டு விளக்கம்

  1. ஆதி.சம் – ஆதிபருவம் – சம்பவச்சருக்கம்
  2. ஆதி.வாரணா – ஆதிபருவம் -வாரணாவதச்சருக்கம்
  3. உத்.உலூ – உத்தியோக பருவம் – உலூகன் தூது
  4. மஹா.முக்.பாத் – மஹாபாரதத்தில் முக்கிய பாத்திரங்கள்

துணைநூற்பட்டியல்

  1. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்வை.மு. (உ.ஆ.), மகாபாரதம், உமாபதிப்பகம், சென்னை, 2013.
  2. கோயந்தகா, ஸ்ரீஜயதயால், மஹாபாரதத்தில் முக்கிய பாத்திரங்கள், கீதா பதிப்பகம், கோரக்பூர், 2013.
  3. பிஹாரி த்விவேதி, ஸாந்தனு, மஹாத்மா விதுரர். கீதா பதிப்பகம், கோரக்பூர், 2010.

 

த.மகேஸ்வரி

உதவிப் பேராசிரியர்,

தமிழ்த்துறை

மதுரைக் கல்லூரி,

மதுரை – 11.