பண்டைய தமிழன் தன் வாழ்நாளில் கடைப்பிடித்த அறக்கருத்துகளை இலக்கியங்களில் பதித்து அளித்துள்ளான். அவ்அறக்கருத்துகளைக் கைக்கொண்டு வாழ்வோர் வாழ்வில் மேன்மை அடைவர். சமுதாயம் போற்றும் சான்றோராகவும் திகழ்வர். அவ்வகையில், நற்குணங்கள் குடிகொண்டுள்ள மனிதனாக வாழ்வதற்குக் குறுந்தொகை சில அறக்கருத்துகளை வழங்கியுள்ளது. அவற்றை இக்கட்டுரை விளம்புகிறது.

 அறச்செயல்

தாகமாய் இருப்போருக்குத் தண்ணீரும், பசித்திருப்போருக்கு உணவும் வழங்குவது சிறந்த அறமாகும். நீர் வேட்கையைத் தணிக்கும் இயல்பு கொண்டது நெல்லிக்கனி. இது பாலைநிலத்தைக் கடந்து செல்வோரின் நீர்வேட்கையைத் தணிப்பதனை,

ந்தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய்            (குறுந்.209)

என்ற அடி கூறுகிறது. நெல்லியைப் போன்று மக்களும் பிறருக்குப் பயன்தரும் வகையில் இருக்க வேண்டும் என்பதை இவ்வடி புலப்படுத்துகிறது. மேலும் பசித்திருக்கும் தன் பிள்ளைக்கு ஊட்டியபின் எஞ்சியவற்றைத் தான் உண்ணலே அறம் (குறுந். 213) என்ற கருத்தும் குறுந்தொகையில் இடம்பெறுகிறது.

ஈகை

இவ்வுலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் அழியும் தன்மை கொண்டன. நிலையாமை மட்டுமே நிலைத்து நிற்கும். கால வெள்ளத்தில் அழிந்துபடாமல் தம் பெயர் சரித்திரத்தில் இடம்பெற அரிய பல செயல்களை மக்கள் செய்வர். அழியாத புகழினைப் பெற விரும்புவோர் நேர்மையான வழியில் ஈட்டிய செல்வத்தினை அனைவருக்கும் ஈவர். அப்பொருளும் ஈட்டியவன்பால் நிற்காமல் வறியவன்பால் செல்லும். பொருள் ஈந்தவனின் புகழும் நிலைத்து நிற்கும். இதனை,

 நில்லா மையே நிலையிற் றாகலின்

                         நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்

                         கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்

                         தங்குதற் குரிய தன்று           (குறுந்.143)

என்ற பாடல் கூறுகிறது. பாரி, ஓரி, ஆய் முதலான வள்ளல்களின் பெயர்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவர்களின் ஈகையால் உண்டான புகழேயாகும். புகழன்றி இவ்வுலகில் இறவாது நிற்பது வேறில்லை என்பதனை,

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்

                        பொன்றாது நிற்பதொன்று இல்      (குறள். 233)

எனும் குறளும் எடுத்துரைக்கிறது.

நன்மொழி கூறல்

பிறருக்கு நன்மொழிகளைக் கூறுவதற்கு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதனை, நல்மொழிக்கு அச்சம் இல்லை (குறுந்.392) என்று பதிவு செய்கிறார் தும்பிசேர் கீரனார். இதற்கிணங்க, பிறருக்கு அறிவுரை கூறும்முகத்தான் பாடல்கள் அமைந்துள்ளன. தலைவியுடன் இருந்த காலத்தில் அவளின் அமுதம் போன்ற மொழிகளும் குணமும் தலைவனுக்கு இன்பத்தைப் பயந்தன. காமமுடையோர்க்குப் பிரிவு என்பது இல்லாமல் உடனுறையும் பேறு பெற்றால் மகிழ்ச்சி உண்டாகும். எஞ்ஞான்றும் பிரிவின்றி உடனுறைதல் இவ்வுலகில் அரிதானதாகும். அங்ஙனம் பிரிந்தவிடத்து, முன்னர் இன்பம் தந்த அனைத்தும் துன்பத்தைத் தருவதாக அமையும். ஆகவே, அறிவுடையோர் காமநெறியின்பால் சாராமை நன்று என்பதனை,

 அமிழ்தத் தன்ன வந்தீங் கிளவி

                         அன்ன வினியோள் குணனு மின்ன

                         இன்னா வரும்படர் செய்யு மாயின்

                         உடனுறை வரிதே காமம்;

                         குறுக லோம்புமி னறிவுடை யீரே  (குறுந்.206)

எனும் பாடலில் தனது பட்டறிவினைத் தலைவன் வெளிப்படுத்துகிறான்.

ஒருவன் செய்யும் நன்மை சிறிதாயினும் அச்சிறுநன்மை செய்தவரையும் போற்றுதல் வேண்டும். அங்ஙனம் போற்றுதலே உயரிய குணம் (குறுந்.115) என்று தோழி தலைவனிடத்து மொழிகிறாள். தினை அளவினதாகிய உதவி ஒருவர் செய்யினும் அதன் அருமை அறிந்தவர்கள் அதனைப் பனை அளவினதாகக் கருதுவர் என்பதனை,

  தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

                         கொள்வர் பயன்தெரி வார்  (குறள்.104)

என வள்ளுவமும் கூறுகிறது.

நடுவுநிலைமை தவறாமை

குற்றத்திற்குத் தீர்ப்பு வழங்குவோர் நடுநிலைமையோடு நின்று தீர்ப்பு வழங்க வேண்டும். தராசு முள்போல் யார் பக்கமும் சாய்ந்திடாமல் இவர் வேண்டியவர், வேண்டாதவர், உற்றார், உறவினர், நண்பர் என்று பாராமல் உண்மையை ஆய்ந்து தீர்ப்பு வழங்கிட வேண்டும். இந்நடுநிலைமையை உணர்த்தும் பாடல்கள் குறுந்தொகையில் காணப்பெறுகின்றன. இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என நலம்பாராட்டுகிறான் தலைவன். மேலும், தும்பியினை அழைத்து நீ அறியும் மலர்களில் இதனைப் போன்று நறுமணம் உள்ள மலர்களும் உள்ளனவோ? எனவும் கேட்கிறான். அவ்விடத்து, தனக்கு இன்பத்தைத் தருவதைப் பதிலாகக் கூறாமல் உண்மையை ஆய்ந்து அறிந்த ஒன்றினை விடையாகக் கூறு என்கிறான். இதனை,

  காமஞ் செப்பாது கண்டது மொழிமோ    (குறுந்.2)

எனும் பாடலடி உரைக்கிறது. வழக்குகளை விசாரிக்க அக்காலத்தில் அறங்கூறும் அவையமும் இருந்தது என்பதனை,

முறையுடை யரசன் செங்கோ லவையத்து  (குறுந்.276)

எனும் பாடல் புலப்படுத்துகிறது.

செய்ந்நன்றி மறவாமை

ஒருவர் செய்த உதவியை மறந்திடாது என்றும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதிலும் தனக்குக் கேடு வந்த பொழுது, தாமே வலிந்து வந்து பிறர் செய்த உதவியை மறந்திடல் கூடாது என்பதை,

 கெட்டிடத் துவந்த வுதவி கட்டில்

                         வீறுபெற்று மறந்த மன்னன் போல

                         நன்றிமறந் தமையாய்          (குறுந்.225)

என உரைக்கிறது கபிலர் பாடல். முன்பின் அறிந்திடாதவர் தாமே எந்தவித எதிர்பார்ப்புமின்றிச் செய்த உதவிக்குக் கைமாறாக மண்ணுலகையும் விண்ணுலகையும் தந்தாலும் ஈடாகாது என்பதைச்,

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது  (குறள்.101)

என்று திருக்குறளும் செய்யாமல் செய்த உதவிக்கு ஈடுஇணை எதுவும் இல்லை என்பதை எடுத்துரைக்கிறது.

பொய்கூறல் கூடாது

                தான் அறிந்ததனை மறைத்துப் பொய் கூறுவது அறமாகாது. சான்றோருக்கும் அங்ஙனம் உரைப்பது இயல்பாகாது. அவர்கள் தன் நெஞ்சு அறிந்தவற்றைப் பொய்யாது உரைப்பர் என்பதை,

  அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லை  (குறுந்.184)

என்ற அடி வெளிப்படுத்துகிறது. அறிந்திருந்தும் பொய்த்தவனின் மனம் தன்னையே சுட்டெரிக்கும் என்பதைத் திருக்குறளும்,

  தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

                         தன்நெஞ்சே தன்னைச் சுடும்  (குறள். 293)

என்றுரைக்கின்றது.

பழிக்கு அஞ்சுதல்

பிறர் கூறும் பழிமொழிக்கு அஞ்சும் இயல்புடையவர் சான்றோர். அத்தகைய இயல்பு கொண்ட தலைவனும் தனது பிரிவால் தலைவி இறந்துபடுவளோ என்றும் அங்ஙனம் ஆயின் தனக்கு வரும் பழிக்கு அஞ்சி விரைந்து பொருளீட்டி வருவான் என்றும் தோழி மொழிகிறாள். இதனை,

பழியு மஞ்சும் பயமலை நாடன்  (குறுந்.143)

என்ற பாடலடி எடுத்துரைக்கிறது. தன் முன்னர்ப் பிறர் கூறும் புகழ்மொழிகளைக் கேட்க நாணும் மென்மைக்குணம் கொண்ட தலைவன் பழியை உரைக்குங்கால் எங்ஙனம் வலிமை பெறுவானோ என்பதனை,

சான்றோர்

                         புகழு முன்னர் நாணுப

                         பழியாங் கொல்பவோ காணுங் காலே     (குறுந்.252)

எனும் தலைவி கூற்றுப் பாடல் பழிக்கு அஞ்சுவதைப் புலப்படுத்துகிறது. இப்பாடல்கள் பழிமொழிக்கு அஞ்சி நன்மொழிக்கான அறச் செயல்களைச் செய்து வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றன.

தன் உழைப்பில் வாழ்தல்

தன்னுடைய முயற்சியால் ஈட்டிய பொருளைக் கொண்டு வாழ்தலே சிறந்த வாழ்வாகும். முன்னோர்கள் தேடிச் சேர்த்த செல்வத்தைக் கொண்டு செலவழிப்போர் செல்வர் ஆகார். தான் ஈட்டிய பொருளைக் கொண்டு வாழாதோருடைய வாழ்க்கை இரந்து உண்டு வாழ்வோரின் வாழ்வைக் காட்டிலும் இழிவுடையதாகும். இக்கருத்தினை,

  உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்

                         இல்லோர் வாழ்க்கை யிரவினு மிளிவுஎன           (குறுந்.283)

என்ற பாடல் காட்டுகிறது. முன்னோர் ஈட்டிய செல்வத்தினை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கையை வாழ்வோரும், பணத்தைச் சேர்த்து வைக்கும் பணக்காரர்களும் என்றும் மனதில் இருத்த வேண்டிய அடிகளாய் இவற்றைக் கூறலாம்.

கையுறை மறுத்தல்

தனக்கு ஆக வேண்டிய செயலை விரைந்து முடித்தற் பொருட்டும், நியாயமற்ற செயல்களைச் செய்வதற்காகவும், பிறருக்குக் கையுறை வழங்குவது வழக்கம். தலைவன் வழங்கும் கையுறையை மறுக்கும் தோழியின் பெருமிதப் போக்கு குறுந்தொகையின் முதல் பாடலில் வெளிப்படுகிறது. தலைவன் தந்த சிவந்த காந்தள் மலரைத் தோழி, ‘எங்களது குன்றத்தில் இப்பூ கொத்துக்கொத்தாகப் பூத்துள்ளது’ என்று கூறி மறுப்பதை,

                          குருதிப் பூவின் குலைக்காந் தட்டே  (குறுந்.1)

என்ற திப்புத்தோளார் பாடலடி இயம்புகின்றது. அவள் கையுறை மறுத்தமைக்கான காரணங்களாக, கடவுட்கு உரிய குருதி நிறமுடைய இக்காந்தள் பூவினை நினக்குத் தந்தவர் யார் எனத் தாயார் முதலியோர் ஐயுற்று வினவுவர் எனத் தோழி கூறி மறுத்தனள். வேலனும் வெறியாடும் காலத்தன்றிப் பறியாத பூவினைப் பறித்து நினக்குத் தந்தவர் யார் என வினவப்படும் எனக் காட்டி மறுத்தனள். இம்மலைப் பகுதியில் மிகுதியாக வளர்ந்துள்ள இம்மலரினை ஒருவரும் சூடாத போது, இவள் சூடினால், சூடியது பூப் பற்றியன்று, சிறந்தான் ஒருவன் தந்தமையால் என அயலாரால் உய்த்துணரப்படும் எனக்காட்டி மறுத்தனள். குன்றத்துக் காந்தள் செந்நிறம் உடையது எனக் கூறி, நீ கையுறையாகத் தந்த இப்பூ, நின் உடல் வெப்பத்தால் கரிந்து காட்டுகின்றது என்றும், இதனைத் தலைவி காணின் ஆற்றாமையால் வருந்துவாள் என்றும் மறுத்தனள் எனக் குறுந்தொகை உரையாசிரியருள் ஒருவரான வி.நாகராசன் தம் உரையில் கூறுகிறார். கையுறையை இக்காலத்தில் இலஞ்சம், அன்பளிப்பு எனும் சொற்களால் குறிப்பர்.

நிறைவுரை

அறச்செயல்கள் பல செய்தல் வேண்டும், ஈகை புரிதல் வேண்டும், நடுநிலை தவறாமல் வாழவேண்டும், செய்ந்நன்றி மறத்தல் கூடாது, பொய் கூறல் கூடாது, பழிபாவங்களுக்கு அஞ்சுதல் வேண்டும், தன்னுழைப்பில் வாழ வேண்டும், கையுறை ஏற்றல் கூடாது போன்ற கருத்துகளைக் குறுந்தொகை மொழிகிறது. இவை எஞ்ஞான்றும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களாகும்.

 துணைநின்றவை

  • நாகராசன் வி. (உரை.), 2004(மு.ப.), குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
  • பிள்ளை கா.சு. (உரை.), 2012(மூ.ப.), திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை.

முனைவர் ரா. ராஜராஜன்

தமிழ் – உதவிப் பேராசிரியர்

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 17

[email protected]