சங்க இலக்கியங்களுக்கு அடுத்த நிலையில் அமைந்திருப்பன பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள். இவை வெண்பா யாப்பினைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. வெண்பா யாப்பின் அனைத்து வகைகளும் இந்நூலின் பாடல்களில் பயின்றுள்ளன. குறிப்பாகக் குறள்வெண்பாவும் நேரிசை வெண்பாவும் அதிக இடத்தைப் பெற்றுள்ளன. இப்பதினெண் கீழ்க்கணக்குப் பாடல்களைப் பாடிய புலவர்களிடம் சில மரபுகள் தொடர்ந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. அவற்றுள் ஒன்று நேரிசை வெண்பாவாகப் படைக்க முயற்சித்த பாடல்கள் இன்னிசை வெண்பா அமைப்பைப் பெற்றமைதல். இது குறித்து இனி விரிவாகக் காணலாம்.

பாடலை நேரிசை வெண்பா அமைப்பில் படைக்க வேண்டும் என்று கருதிய புலவர்கள் முதல் இரண்டடிகளை ஓரெதுகையும் தனிச்சொல்லும் பெறும்வண்ணம் அமைத்துவிட்டனர். பின்னிரு அடிகளைப் படைக்கும்போது எதுகை அடிப்படையில் விகற்பத்தை அமைக்க முடியாத சூழலில் சில பாடல்கள் வடிவ நோக்கில் இன்னிசை வெண்பாவாக அமைந்து போய்விட்டன. இவ்வகை அமைப்பிலான பாடல்கள் கீழ்க்கணக்கின் இலக்கியங்களில் பயின்று வருகின்றன. நேரிசை வெண்பா இன்னிசையாதல் என்ற நிலையில் வரும் இவ்வெண்பாவின் வடிவங்கள் குறித்த சில கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன. இவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

– நேரிசை வெண்பாவின் இலக்கணம்

– நேரிசை வெண்பாவுக்குத் தனிச்சொல்லிடும் மரபு உருவாக்கம்

– கீழ்க்கணக்கு நூற்றொகுதியில் உள்ள நேரிசை வெண்பாக்கள்

– கீழ்க்கணக்கில் நேரிசை இன்னிசையாதல்

நேரிசை வெண்பாவின் இலக்கணம்

நான்கடியாய் இரண்டாமடியின் இறுதியில் தனிச்சொல்லைப் பெற்று வருவது நேரிசை வெண்பாவாகும். இந்நேரிசை வெண்பா ஒருவிகற்பமாயும் இருவிகற்பமாயும் அமையும். “நேரிய இசையால் அமைவது நேரிசை வெண்பா” (ந.வீ.செயராமன்,1978:89) என்னும் தொடர் இப்பாவின் தன்மையைச் சுட்டுகின்றது. இந்நேரிசை வெண்பாவிற்கு இலக்கண நூல்களும் அவற்றின் உரைகளும் இலக்கணம் வகுத்துள்ளன. யாப்பருங்கலம் நேரிசை வெண்பாவிற்குரிய இலக்கணத்தைச் சற்று நுட்பமாக வகுத்திருப்பதை,

நாலோ ரடியாய்த் தனியிரண் டாவதன்

ஈறொரூஉ வாய்முற் றிருவிகற் பொன்றினும்

நேரிசை வெண்பா எனப்பெயர் ஆகும் (60)

எனும் நூற்பாவழி அறியலாம். நேரிசை வெண்பாவின் இரண்டாமடியின் இறுதியில் ஒரூஉ எதுகையோடு மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று முதலிய எதுகைகளும் வரலாம் என்று யாப்பருங்கலம் இலக்கணம் வகுத்திருக்கின்றது. இவ்வரையறையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது கீழ்க்கணக்கின் நேரிசை வெண்பாக்கள் பெரும்பான்மை ஒரூஉ எதுகையையும் சிறுபான்மை பிற எதுகைகளையும் பெற்றிருக்கின்றன. இது மட்டுமல்லாமல் முன்னிரு அடிகளில் நேரிசை வடிவத்தையும் பின்னிரு அடிகளில் இன்னிசை வடிவத்தையும் பெற்று வருகின்ற சில வெண்பாக்கள் கீழ்க்கணக்கில் இடம்பெற்றிருப்பதை அறிய முடிந்தது. இவ்வெண்பாக்கள் குறித்துச் சில குறிப்புகள் இப்பகுதியில் முன்வைக்கப்படுகின்றன.

வெண்பாவின் வகைகளில் தனித்த சிறப்பைக் கொண்ட பாவாக நேரிசை வெண்பா உள்ளது. இந்நேரிசை வெண்பா யாப்பின் சிறப்பையும், குறள்வெண்பா முதலிய வெண்பாவின் பிற வடிவங்களிலிருந்து நேரிசை வெண்பா வடிவம் பெறும் தனித்துவத்தையும் பின்வரும் கருத்து உணர்த்தி நிற்கின்றது.

வடிவ வளர்ச்சி என்ற நிலையில் வெண்பாக்களை வி.செல்வநாயகம் அவர்கள் சுட்டிய வளர்ச்சி நியதியின் அடிப்படையில் நோக்கும்போது குறள், சிந்து, இன்னிசை, பஃறொடை என்பன அதன் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்கள் எனக் கருதலாம். அவ்வளர்ச்சிக் கட்டங்களின் இறுதியில் செப்பமானதாகப் பேணப்படும் நிலையை எய்திய வடிவமாக நேரிசை வெண்பாவைக் கொள்வது சாலும். இரண்டு முதற் பன்னிரு அடிகள் வரை பாடப்பட்டு வந்த வெண்பா நான்கடிகளில் அமைந்து இரண்டாமடியின் ஈற்றிலே தனிச்சொற் பெற்ற நிலை நேரிசை – செப்பமான ஓசை – எனக் கொள்ளப்பட்டமையை உய்த்துணர முடிகிறது. நான்கடிகளால் அமையும் வெண்பாக்களில் இன்னிசை வெண்பாவே கால முதன்மையுடையது என அ.சிதம்பரநாதச் செட்டியார் தெரிவித்துள்ள கருத்தும் இத்தொடர்பில் சிந்திக்கத்தக்கது. வெண்பா வடிவ வளர்ச்சியின் உயர்நிலையான நேரிசை வெண்பாவின் அமைப்புநிலை தொடர்ந்து பேணப்பட்டு வருகின்றது. (நா.சுப்பிரமணியம்:1985:31)

தமிழ் இலக்கிய வரலாற்றைப் பார்க்கும்போது வெண்பா யாப்பானது மனனம் செய்துகொள்வதற்குரிய வடிவமாகவும், அதை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வருவதற்கேற்ற வடிவமாகவும் கருதியே நம் பழந்தமிழ்ப் புலவர்கள் வெண்பா யாப்பினைக் கையாண்டுள்ளனர்.

மக்கள் நினைவுகொள்ளுதற்கென்று சில முறைகளைக் கையாளுகின்றோம். வெண்பாவால் தொகைப்படுத்தல் அம்முறைகளுள் ஒன்று. ‘முருகு பொருநாறு பாணிரண்டு’ என்ற வெண்பா பத்துப்பாட்டினையும், ‘நற்றிணை நல்ல குறுந்தொகை’ என்ற வெண்பா எட்டுத்தொகையினையும் ‘நாலடி நான்மணி நானாற்பது’ என்ற வெண்பா பதினெண் கீழ்க்கணக்குப் பனுவல்களையும் இலக்கியப் பட்டியல் செய்துள்ளன.

ஓரின நூல்களை நினைவு கொள்ளவும், ஒன்று படித்தபின் ஒன்றைப் படிக்கவும், நூலகங்களில் இனநூல்களை வரிசைப்படுத்திக் கொள்ளவும் இப்பட்டியல்கள் உதவுகின்றன. அழியாமற் காப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் இம்முறை வழி செய்திருப்பது கண்கூடு.  (வ.சுப.மாணிக்கம்,1971:100)

மேற்சுட்டிய கருத்துகள் அனைத்தும் நேரிசை வெண்பாவின் சிறப்பைப் பறைசாற்றுவனவாய் அமைகின்றன. மேலும் எளிதாய் மனனம் செய்வதற்கேற்ற வடிவமாக நேரிசை வெண்பா உள்ளதையும் அறிய முடிகின்றது.

நேரிசை வெண்பாவுக்குத் தனிச்சொல்லிடும் மரபு உருவாக்கம்

நான்கடி அளவில் வெண்பாவில் வரும் நேரிசை, இன்னிசை என்னும் இருவகைகளையும் வேறுபடுத்திக் காட்டுவதற்கு இடம்பெறும் தனிச்சொல் என்னும் மரபு எப்படி உருவானது என்பது குறித்து அறிந்து கொள்வது என்பது மிக இன்றியமையாததாகும். நேரிசை வெண்பா பாடலின் இரண்டாமடியில் வரும் ஒரூஉ எதுகை வழங்கும் மரபிருந்ததை விருத்தியுரை முதலான உரையாசிரியர்கள் சுட்டியுள்ளனர். இம்மரபு காலவோட்டத்தில் வழக்கற்று நேரிசையில் கோடிடும் வழக்கம் உருவாகியது. எனினும் நேரிசை வெண்பாவில் முதன்மை பெற்ற இம்மரபு குறித்த பின்வரும் ஆய்வாளர்களின் கருத்துகள் இங்கு மனங்கொள்ளத் தக்கனவாக உள்ளன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினாறு நூல்கள் இந்த மாற்றத்தைப் பெற்றுள்ளன என்பதனை நாம் காணாமல் இருக்க முடியாது. அந்தப் பதினாறு நூல்களிலும் பதினொரு நூல்கள் இரண்டாம் அடியில், தனிச்சொல் பெற்றும், பெறாமலும் வந்துள்ளன. அவற்றில் சிறுபஞ்சமூலமும் ஏலாதியும் இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வந்துள்ளன. திணைமாலை நூற்றைம்பதில் ஒருபாடல் தவிர, ஏனைய பாடல்கள் அவ்வாறே இடம்பெற்றுள்ளன. இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய இரு நூல்களிலும் ஒரு பாடலாவது அவ்வாறு காணுமாறில்லை. இரண்டாம் அடியின் இறுதியில் ஒலி இயைபிற்காக, முதலிரண்டடிகளில் தனிச்சொல் பெய்திருப்பது புலவர்களின் தன்னார்வத்தைக் காட்டுகிறது. சுருங்கக்கூறின், முதலிரு அடிகளுக்கு இயைய, தனிச்சொல்லை எதுகைக்காக அமைத்துக் கொண்டனர் என்று எண்ணத் தோன்றுகின்றது. தனிச்சொல் புலவர்களால் இவ்வாறு மெல்ல அறிமுகமாகியது எனலாம். இவ்வகை வெண்பா பழங்கால வடிவங்கள் ஏனையவற்றோடு இணைந்தே பயின்று வந்துள்ளது என்பதை அறியலாம். ஆனால், காலப்போக்கில் சில நூல்களுக்கு இது மட்டுமே கருவியாக அமைந்தது. இவ்வகையில் இத்தொகை நூல்களில் அதன் வடிவம் அமைந்திருப்பினும், இந்நூல்கள் ஏனைய வடிவத்தை முழுமையாகப் பெற்றிருப்பதை அறிகிறோம் (அ.சிம்பரநாதன், 2009:83,84)

அ.சிதம்பரநாதன் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் எந்தெந்த நூல்கள் ஒரூஉ எதுகை மரபைப் பெற்றுள்ளன, எந்த நூல்கள் இம்மரபைப் பெறவில்லை என்று குறிப்பிடுகின்றார். மேலும் இம்மரபைப் புலவர்கள் ஒலி இயைபிற்காகத்தான் அமைத்தனர். அது பின்னாளில் சில நூல்களில் மரபாக மாற்றப்பட்டுவிட்டது என்றும் கருத்துத் தெரிவிக்கிறார். இத்தொடர்பில் இணைத்து எண்ணத்தக்க மற்றுமொரு கருத்து வருமாறு:

நேரிசை வெண்பாக்களில் தனிச்சொல்லை இரண்டாவது அடியில் சிறியதொரு கோடு அமைத்துத் தனிப்படக் காட்டுவது இப்போது வழக்கமாயுள்ளது. இவ்வழக்கம் சமீப காலத்திலேதான் ஏற்பட்டது. முற்காலத்து ஏட்டுப் பிரதிகளில் இது கிடையாது. முதன்முதலில் அச்சிடும் முயற்சியில் இறங்கியவர்களில் சிலர் சிறிது வெற்றிடம் விட்டும், சிலர் இடம்விடாது தொடர்ந்தும் தனிச்சொல்லைப் பதிப்பித்தனர். உதாரணமாக 1831-ல் தாண்டவராய முதலியாரால் ‘பழுதற ஆராயப்பட்டு’ வெளிவந்த ‘திருக்குறண் மூலமும் நாலடி நானூற்றின் மூலமும்’ என்ற பதிப்பைக் காண்க. 1868-ல் வெளியிட்ட வடமலை வெண்பாவும் இங்ஙனமே பதிப்பிக்கப்பட்டுள்ளது. வேறுசிலர் தனிச்சொற்களுக்கு முன் கலிவெண்பாவில் உடுக்குறியிட்டுப் பதிப்பித்தனர். மிகப் பிற்பட்ட காலத்தில்தான் (சுமார் 1875) கோடிட்டுக் காட்டும் வழக்கம் ஏற்பட்டது. தனிச்சொல்லை விதித்துள்ள இலக்கண நூல்களில் அதனை இவ்வாறு காட்ட வேண்டும் என்ற குறிப்புக் கொடுக்கப்படவில்லை. கலிப்பா முதலியவற்றுள் தனிச்சொல் வரும்போது அதனைக் கோடிட்டுக் காட்டும் வழக்கம் இன்றும் கிடையாது. நேரிசை வெண்பாவிலும் கலிவெண்பாவிலும் மட்டும்தான் இதனை இப்போது கையாண்டு வருகிறார்கள் (எஸ்.வையாபுரிப்பிள்ளை, 1944: xi, xii)

நேரிசை வெண்பாக்களில் தனிச்சொல்லை இரண்டாவது அடியில் சிறியதொரு கோடிட்டுக் காட்டும் மரபைப் பதிப்பாசிரியர்கள் உருவாக்கினர் என்று குறிப்பிடுகின்றார். இதற்கு முன்பிருந்த ஓலைச்சுவடிகளில் இம்மரபு இடம்பெறவில்லை என்பதையும் இவர் பதிவு செய்கின்றார். மேலும் இம்முயற்சியை முன்னெடுத்த பதிப்பாசிரியர்கள் குறித்தும் இவர் குறிப்பிட்டுள்ள கருத்து பதிப்பியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க கருத்தாக்கமாக உள்ளது.

கீழ்க்கணக்கு நூற்றொகுதியிலுள்ள நேரிசை வெண்பாக்கள்

நான்கடியைப் பெற்று அமைகின்ற நேரிசை வெண்பாக்கள் கீழ்க்கணக்கின் அற, அக, புற நூல்களுள் பயின்று வந்துள்ளன. இவ்வகை நூல்களில் திருக்குறள், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக்காஞ்சி ஆகிய நான்கு அற நூல்களைத் தவிர ஏனைய பதினான்கு அற, அக, புற நூல்களில் இந்நேரிசை வெண்பாக்கள் காணப்படுகின்றன. கீழ்க்கணக்கின் அக நூல்களில் காணப்படுகின்ற வெண்பாவின் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள ஆய்வாளரின் கருத்தும் இங்கு இணைத்து நோக்கத்தக்கது.

சங்க மருவிய காலப்பகுதியில் வெண்பா யாப்புத் தலைமை பெற்று விளங்கியதால், அக்காலப் புலவர்கள் அகத்திணைப் பொருளை வெண்பாவில் அமைத்துப் பாடினர். புணர்தல், பிரிதல் முதலிய ஒழுக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்துப் புலவர்கள் கீழ்க்கணக்கு நூல்களிலே கூறியமுறை பிற்காலங்களில் எழுந்த கோவைப் பிரபந்தத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது எனக் கருதக் கிடக்கின்றது.

இந்நூல்கள் அன்பினைந்திணை ஒழுக்கங்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மையும், எழிலும் இனிமையுற அவற்றை எடுத்தியம்புஞ் சிறப்பும் கண்டு இன்புறற்பாலன. இந்நூல்களுட் பல்லாற்றானும் சிறப்புற்று விளங்குவது திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலாகும் (வி.செல்வநாயகம், 2005:47)

அகநூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள வெண்பா வடிவம் பிற்காலக் கோவை இலக்கியங்களுக்கு அடிப்படையாக அமைந்ததை மேற்சுட்டிய கருத்து உணர்த்துகின்றது. இதில் சிறப்புற்று விளங்கும் அகநூலான திணைமாலை நூற்றைம்பதில்தான் மிக அதிகமான நேரிசை வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

பதினெண் கீழ்க்கணக்கிலுள்ள நேரிசை வெண்பாக்களைச் சோ.ந.கந்தசாமி பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார். ‘நாலடியார் 309, நான்மணிக்கடிகை 52, பழமொழி நானூறு 225, களவழி நாற்பது 40, ஆசாரக்கோவை 6, திரிகடுகம் 50, சிறுபஞ்சமூலம் 97, ஏலாதி 81, கார்நாற்பது 13, திணைமொழி ஐம்பது 3, ஐந்திணை ஐம்பது 35, ஐந்திணை எழுபது 27, திணைமாலை நூற்றைம்பது 150, கைந்நிலை 9 ஆக மொத்தம் 1067 வெண்பாக்கள் கீழ்க்கணக்கில் நேரிசை வெண்பாக்களாக உள்ளன  (1989:611, 612).

நேரிசை வெண்பா அமைப்பினை முன்னிரு அடிகளில் பெற்று, பின்னிரு அடிகளில் இன்னிசை வெண்பா அமைப்பைக் கொண்ட பாடல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, ஐந்திணை ஐம்பது, கார்நாற்பது, களவழி நாற்பது ஆகிய ஐந்து நூல்களில் மட்டுமே காணப்படுகின்றன. பழமொழி நானூறு, திரிகடுகம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, ஐந்திணை எழுபது ஆகிய ஒன்பது நூல்களில் இவ்வகை அமைப்பிலான பாடல்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (எ – டு)

அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்கும்

திங்களுஞ் சான்றோரு மொப்பர்மற் – றிங்கண்

மறுவாற்றுஞ் சான்றோ ரஃதாற்றார் தெருமந்து

தேய்வ ரொருமா சுறின்.                       (நாலடி.151)

வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன

வாறும் பதமினிய வாயின – வேறோ

டருமணி நாக மனுங்கச் செருமன்னர்

சேனைபோல் செல்லு மழை.             (கார்நாற்.20)

இவ்வடிவ மரபை வெண்பா வடிவிலான பிற்காலத் தமிழ் இலக்கியங்களோடு ஒப்பிட்டும் ஆராய வேண்டும்.

மேற்கண்ட நாலடியார், கார்நாற்பது பாடல்களின் முதல் இரண்டடிகள் முறையே ‘அங்கண் திங்களுஞ்’ என்றும் ‘வீறுசால் வாறும்’ என்றும் ஓரெதுகையைப் பெற்று நேரிசை வெண்பாவுக்குரிய அமைப்பிலுள்ளன. ஆனால் இவ்விரு பாடலின் பின்னிரு அடிகளில் எதுகையமைப்பு ஒத்துவராத காரணத்தினால் இன்னிசை வெண்பா அமைப்பைப் பெற்றுள்ளன. கார்நாற்பதின் பாடலில் இரண்டாமடியின் எதுகைக்கேற்ற வகையில் றகரவருக்க ஒரூஉ எதுகையைப் பெற்று அமைந்திருப்பதும் இங்குச் சுட்டத்தக்கது. இவ்வமைப்பிலான பாடல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பாடிய புலவர்கள் சிலர் தத்தம் பாடல்களுள் பின்பற்றயிருப்பதைக் கண்ணுற முடிகின்றது. இம்மரபை ஒரு புலவன் படைக்க இன்னொருவன் பின்பற்றினானா அல்லது இம்மரபு அக்காலப் பாடல்களுள் இடம்பெற்றிருந்த மரபா என்பது குறித்து மேலும் சிந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

தொகுப்புரை

கீழ்க்கணக்கு நூல்களைப் பாடிய புலவர்களிடையே காணப்படும் பின்வரும் மரபை இப்பகுதி கவனப்படுத்தியுள்ளது. நேரிசை வெண்பாவாகப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலிரு அடிகளைப் படைத்த புலவன், பின்னிரு அடிகளைப் படைக்கையில் ஓர்மையில்லாமல் பாடலின் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கா நிலையைக் காணமுடிகின்றது. இவ்வாறு படைக்கப்பட்ட வெண்பாவைப் ‘புலவன் நேரிசையாகப் படைக்கக் கருதிய வெண்பா’ என்னும் தன்மையில் அவற்றின் இயல்புகள் இங்கு எடுத்து உரைக்கப்பட்டுள்ளன. இவ்வகை வெண்பாக்கள் கீழ்க்கணக்கின் எல்லா நூல்களிலும் இடம்பெறவில்லை. ஒரு சில நூல்களில் மட்டும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நாலடியார், களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, கார் நாற்பது, நான்மணிக்கடிகை உள்ளிட்ட இலக்கியங்களில் பயில்வது சிறப்பாகக் கருதத்தக்கது.

பதினெண்கீழ்க்கணக்கின் புலவர்களால் படைக்கப்பட்ட இவ்வகையான நேரிசை வெண்பா வடிவங்களைப் பிற்காலப் புலவர் பலரும் படைத்துள்ளனரா? என்பதைக் குறித்து ஆராய வேண்டியதும் அவசியமாகின்றது.

கீழ்க்கணக்கின் சமகாலத்திலும் அதற்குப் பின்னரும் தோன்றியுள்ள சிலப்பதிகாரம், முத்தொள்ளாயிரம், பத்துப்பாட்டின் இறுதியில் உள்ள வெண்பாக்களின் அமைப்புகளோடு இணைத்து நோக்கும் முயற்சிகளும் விரிவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இப்பகுதி முன்வைக்கின்றது. இவ்வாறு ஒப்பிட்டு நோக்கும்போது இம்மரபு பிற்கால இலக்கியங்களில் தொடர்ந்துள்ளதைக் காண முடியும். இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

துணைநின்றவை

 • 1892  ஜைன முனிவர்கள் இயற்றிய நாலடி நானூறு மூலம், தெளிபொருள் விளக்கப் பதவுரை: ஊ.புஷ்பரத செட்டியார், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை.
 • 1876  களவழி நாற்பது மூலமும் உரையும், தி.சுப்பராய செட்டியார் (உ.ஆ.), பு.தெய்வசிகாமணி       முதலியார் (ப.ஆ.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை.
 • 1903  ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும், ரா.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திரா சாலைப்பதிப்பு, செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை.
 • 1917  கார்நாற்பது மூலமும் உரையும், கா.ர.கோவிந்தராஜ முதலியார் (உ.ஆ.), மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை, சென்னை.
 • 1924-25 நான்மணிக்கடிகை மூலமும் உரையும், வே.இராஜகோபாலையங்கார் (ப.ஆ.), கம்பர் விலாஸம், சென்னை.
 • 1944  கபிலர், இன்னா நாற்பது (பழைய உரையுடன்), எஸ்.வையாபுரிப் பிள்ளை (ப.ஆ.), சக்தி காரியாலயம், சென்னை: மதுரை.
 • 1971 வ.சுப.மாணிக்கம், இலக்கிய விளக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.
 • 1978 ந.வீ.செயராமன், சிற்றிலக்கியத் திறனாய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
 • 1985 நா.சுப்பிரமணியன், தமிழ் யாப்பு வளர்ச்சி (ஆய்வேடு), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
 • 1989  சோ.ந.கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் முதற்பாகம் – முதற் பகுதி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
 • 2005  வி.செல்வநாயகம், தமிழ் இலக்கிய வரலாறு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை.
 • 2009  அ.சிதம்பரநாதன், தமிழ் யாப்பியல் உயராய்வு (கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை), மொழிபெயர்ப்பு: இராம. குருநாதன், விழிகள் பதிப்பகம், சென்னை.

முனைவர் ப.திருஞானசம்பந்தம்

முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை – 21