இன்று வெண்பா பாடுவதில் ஆசுகவியாய் விளங்கும் கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இனிமை பயப்பதாகும். தமிழ் மொழியின்பால் பேரன்பு கொண்ட கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை நாம் அறிந்துகொள்வது, அவரது நல்ல கவிதைகளை அறிந்து சுவைப்பதற்கு வழிவகுக்கும்.

பிறப்பு

சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள நம்மாள்பேட்டையில் தந்தை இராமசாமி தாய் இராஜம்மாள் ஆகிய இருவருக்கும் 14.4.1956-ல் (சித்திரை மாதம் முதல் நாள்) மூன்றாவது மகனாகப் பிறந்தார்.  இவருக்கு மூத்தவர்கள் சகுந்தலா, ரோஜா ஆகியோர் ஆவார். கவிஞர்க்குப் பின் பிறந்தவர்கள் வெங்கடேசன், மஞ்சுளா ஆகியோர் ஆவார். வெங்கடேசன், மஞ்சுளா இருவரும் குழந்தைப் பருவத்திலே மறைந்தவர்கள்.

கல்வி

கவிஞரின் தாயார் கவிஞர் பிறப்பின்போது குடியாத்தம் சென்று விட்டார். எனவே கல்வி குடியாத்தம் தொடக்கப் பள்ளியில் தொடங்கியது. நான்காம் வகுப்பு வரை அங்கேயே கல்வி கற்றார். பின்னர் ஐந்தாம் வகுப்பு முதல் சென்னை நம்மாழ்வார்பேட்டையில் படிப்பைத் தொடர்ந்தார். எட்டாம் வகுப்பு வரை மாநகராட்சிப் பள்ளியில், பின் உயர்நிலைப் பள்ளியில் 8 முதல் 11ஆம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின் 2000ஆம் ஆண்டில் அஞ்சல் வழியில் சென்னைப் பல்கலை பட்டப் படிப்பைப் பெற்றார். அடுத்த ஆண்டே முதுகலையில் சேர்ந்து முதுகலைத் தமிழ் பட்டப்படிப்பையும் முடித்தார்.

இளமைப் பருவம்

கவிஞர் நான்காம் வகுப்புப் படிக்கும்போதே பாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். கவிஞர் பாட்டுப்பாடும் திறனுக்கு அவரது தாயார் திருமதி இராசம்மாள் அவர்கள்தான் காரணம். அவர் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பிறந்தவர். அவர் சிறுவயதில் சுப்பிரமணியசிவா அவர்களின் சுந்திரப் போராட்ட வீரர் குழுவில் பாரதியார் பாடல்களைப் பாடினார். அப்பாடல்களைக் கவிஞருக்குச் சிறுவயதில் அவரது தாயார் பாடிக் காட்டுவார். இதன் மூலம் ஏற்பட்ட ஆர்வமே கவிஞரின் வளர்ச்சியை ஊக்குவித்தது. பள்ளி இறைவணக்கக் கூட்டத்திலும் கவிஞர் கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தியவர்களே பாடுவார். இப்படிப் பதினோராம் வகுப்பு வரை ஏராளமான பரிசுகளைக் கவிஞர் பெற்றுள்ளார்.

கவிஞர்தம் பெற்றோரின் பூர்வீகம்

புகழ்மிகு அதியன் ஆண்ட மாவட்டத்தில் தருமபுரியிலிருந்து 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பாப்பாரப்பட்டியில் பிறந்தவர் கவிஞரின் தாயார் இராஜாம்பாள் ஆவார். பெருமைமிக்க குடும்பத்தில் பிறந்த இவர் இலக்கியத் தேர்ச்சிப் பெற்றவர். விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா குழுவில் இடம் பெற்று பாரதியார் பாடல்களைப் பாடித் தொண்டாற்றியவர். கவிஞர் கவிஞராகும் உணர்வுக்கு இவரது தாயே முதற்காரணமாகும். கவிஞரின் தந்தையார் ராமசாமி அவர்கள் பெருமைமிகு ஊராகப் பேசப்படும் அன்னசாகரம் ஊரில் பிறந்தவர். நாட்டுப்பற்று மிக்கவர். தமது பதினேழாம் வயதில் பணியின் காரணமாகச் சென்னை வந்து பின்னி மில்லில் சேர்ந்தார். சென்னைவாசியான பின்பு இவர்களது குடும்பம் சென்னை பெரம்பூரில் நம்மாழ்வார்பேட்டையில் நிலைபெற்று வளரத் தொடங்கியது.

 

 

கவிஞரின் வளர் பருவம்

கவிஞரின் பள்ளிக்கல்விப் பருவத்தில் பாடத்தினூடே பள்ளி ஆசிரியர்களான புலவர் திரு.பக்தவச்சலம் அவர்கள், இசையாசிரியர் திருமதி மீனாட்சி அவர்கள் மற்றும் திருமதி. சரஸ்வதி அவர்கள், திரு.ஸ்ரீபதிராவ் முதலியோர் கவிஞரை அடிக்கடி பள்ளிக் கல்வியில் இலக்கிய உணர்வில் எழுச்சியுரச் செய்தனர். தமிழில் பேரார்வம் வளர ஊக்கம் தந்தவர் புலவர் தீ.பக்தவச்சலம் அவர்களே ஆவார்.

கவிஞர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பாட்டுப் போட்டியில் பரிசு பெற்றார். பாட்டுப் போட்டிக்குப் பரிசளிக்கச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். அவரின் உரையைக் கேட்ட கவிஞர் படைப்பாளராகும் எண்ணத்தைக் கொண்டார். ஜெயகாந்தன் பேசுகையில், “நான் பள்ளியில் படிக்கவில்லை, அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை, ஆயினும் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு திருப்புமுனை ஏற்பட வேண்டும், அதற்காக இளம் வயது முதலே ஆர்வத்துடன் முழுமூச்சுடன் உழைப்பை விதைத்தால் வெற்றி பெறுவது உறுதி, என்னைப்போல எழுத்தார்வம் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்ற அந்தப் பேச்சு கவிஞருக்கு மனத்தில் ஒரு வேகத்தை உருவாக்கியது. பள்ளிக் கல்விப் பருவத்திலும் பின்னரும் இவரைப் பலர் பாராட்டியும், இவரது பாட்டுப் பணிக்குப் பரிசளித்தும் பராட்டியும் பெருமை சேர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் திருவாளர்கள் கலைமாமணி கொத்தமங்கலம் சுப்பு, புலவர் புலமைப்பித்தன், எழுத்தாளர் கிருஷ்ணமணி, மேயர் சிட்டிபாபு போன்றோர் ஆவர்.

இதன் மூலம் நூலகம் சென்று நூல்கள் பலவற்றைக் கற்றார். பின்னர் கதை, கவிதை, கட்டுரை என எழுத ஆரம்பித்தார். இவ்வாறு இவரது ஆர்வம் இவரை இலக்கியப் படைப்பாளராக மாற்றியது. முதல் வாசகர்கள் இவரது பள்ளித் தோழர்களே ஆவர்.  பின்னர் ஆசிரியரிடம் சென்று காட்டிப் பாராட்டுப் பெற்றார்.

அச்சில் வந்த முதல் கவிதையும் கதையும் வானொலி வாய்ப்பும்

1972-73ல் பள்ளி இறுதி வகுப்புக்குப்பின் மூன்றாண்டு வளர்ச்சியில் 1976ல் தமிழ்த்தேன் என்ற இதழ் வந்தது. இதழ் வெண்பா போட்டியாக ‘கள்’ எனத் தொடங்கி ‘களுக்கு’ என முடியும் நேரிசை வெண்பா எழுதுமாறு போட்டியாக அமைந்தது. கவிஞர் கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது எழுத்தைத் தொடங்கினார். அது சிறந்த நேரிசை வெண்பாவாக அமைந்து விட்டது. அப்பாடல்,

‘கள்ளுக் கடையும் குதிரை விளையாட்டமும்

தள்ளி விதவையின் வாழ்க்கையை -வெள்ளி

விளக்காய் ஒளிரவைத்த நம்கழகத் தாலே

அளவுண்டா இன்பங் ‘களுக்கு’

என்ற இப்பாடல் தமிழ்த்தேன் இதழில் 20-12-1975இல் வெளிவந்தது. திங்கள் இருமுறை இதழாக வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் ஏகாம்பவாணன் அவர்களின் பாராட்டும் கிடைத்தது.

கவிஞரின் அடுத்த வாய்ப்பு அகில இந்திய வானொலி, சென்னை-2 இளையபாரத நிகழ்வில் ‘கவிக்குரல்’ பகுதியில் 1977 முதல் 1981 வரை மாதந்தோறும் தமது படைப்பை வழங்கி வந்தார். 1978ல் மாலைமுரசு சென்னைப் பதிப்பில் முதல் சிறுகதை ‘புதிய பட்டம்’ என்ற தலைப்பில் அச்சானது.  கவிஞரின் நண்பர்கள் இதனைப் பாராட்டி ஊக்குவித்தனர். நண்பர்கள் வானொலிக் கவிதை ஒலிபரப்பின்போது வியாசர்பாடி வீதி முழுதும் சாலையின் சுவர்களில் எழுதி இதனை வெளிப்படுத்திக் கவிஞரை மேலும் ஊக்கப்படுத்தினர். இதனால் இவர் தமது நண்பர்களை வானொலி நிகழ்ச்சிப் பதிவின்போது உடன் அழைத்துச் செல்வார்.

கவிஞரின் துயரமும் தாயின் உடன்பிறந்தோரின் அழைப்பும் :

1975-ல் கவிஞரின் உடன்பிறந்த சகோதரி அவர்கள் மரணம் கவிஞரைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியது. அடுத்த ஐந்தாண்டில் 1980-ல் கவிஞரின் தந்தையும் காலமானார். தந்தையார் கவிஞரின் முதல் வாசகராகவும் ஆசிரியராகவும் விளங்கியவர். இவர்களது மறைவால் குடும்பம் மிகவும் வாடியது. இத்தருணத்தில் கவிஞர் வேலைவாய்ப்பு அற்றவராக இருந்தார். தாயின் உடன்பிறப்பு ஐவர் இவர்களை அழைத்துத் தமது ஊரான பாப்பாரப்பட்டியில் நெசவுத் தொழிலில் ஈடுபடுத்தி ஆற்றுவித்ததோடு தேவையான உதவிகளையும் புரிந்து வந்தனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தமது புதிய வாழ்வு சிறப்பாக அமைந்ததைக் கவிஞர் உணர்ந்தார். இதனிடையே கவிஞரின் மாமாவின் வேண்டுகோளால் மாமன் மகள் திலகம் என்பவரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்று 3.6.1984இல் திருமணம் செய்து கொண்டார். இதனால் மகிழ்வுற்ற கவிஞரின் வாழ்வு தழைக்க ஆரம்பித்தது. 24.5.1985ல் இவருக்குக் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குச் செந்தில்குமார் என்று பெயர் வைத்து மகிழ்ந்தார் கவிஞர்.

சென்னையில் மீண்டும் கவிஞர்

கவிஞரின் திருமண மகிழ்வோடு இவர் விரும்பிய தந்தையின் பணி இவருக்குச் சென்னை பின்னி பஞ்சாலையில் (1985இல்) கிடைத்தது. நிர்வாகம் இவருக்கு அழைப்பு அனுப்பியது. கவிஞர் உடனே குடும்பத்தோடு சென்னையில் குடியேறினார். இதனால் கவிஞரின் ஆளுமையும் ஆற்றலும் வளர்ந்தது. பலரின் நட்பும் இலக்கியத் தொடர்பும் இவருக்குக் கிடைத்தது.

உவமைக் கவிஞர் சுரதாவின் அறிமுகம்

கவிஞரின் சென்னைவாசம் மேலும் இலக்கிய உணர்வை வளர்த்தது. அதன் முதல் நிகழ்வாக 24.06.1985இல் பெரம்பூரில் கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா மாலையில் நடைபெற்றது. விழாவில் பட்டிமன்றம், கருத்தரங்கம் நடைபெற்றன. பின்னர் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் தலைமையில் கவியரங்கம் யார் வேண்டுமானாலும் பாடலாம் என்றனர். பார்வையாளராகச் சென்ற கவிஞர் கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இதில் பங்கேற்றார்.

அங்கு யாரென்னும் கண்ணதாசன் பாடலைப் பிழையின்றி ஒப்புவித்தால் நூறு ரூபாய் பரிசு என்றும் அதைச் சிறப்பு விருந்தினர் இயக்குநர் கே.பாலசந்தர் அவர்கள் வழங்குவார் என்றும் உவமைக் கவிஞர் அவர்கள் கூற, கவிஞர் கண்ணதாசன் பாடல் நினைவில் இல்லை என்றும், திரைப்படப்பாடலைப் பாடுகிறேன் என்று கூறி, கவியரசு கண்ணதாசன் அவர்களின் “யாரை நம்பி நான் பொறந்தேன்” என்ற பாடலைப்பாடி முடிக்க, போட்டியில் பங்கு பெற்றவர்களில் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கே இப்பரிசு எனப் பாராட்டி உவமைக் கவிஞர் கூறினார். கவிஞரை அழைத்த உவமைக் கவிஞர் தமது பாராட்டையும் வழங்கினார். பின்னர் கவிஞரின் வீட்டிற்கே குமுதம் நிருபர் வந்து கவிஞரின் புகைப்படத்தையும் செய்தியையும் 3-10-1985இல் குமுதம் இதழில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தார்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் அறிமுகம்

1985ஆம் ஆண்டில் மீண்டுமொரு நிகழ்வு பெரம்பூர் கல்யாண மண்டபத்தில் நடந்தது.  இந்நிகழ்வில் வினா-விடை எனக் கேள்விகள் கேட்கலாம் என அறிவித்தனர். கவிஞர் உடனே கவியரசு உரையை ஒட்டியே தமது வினாவைத் தயாரித்தார். அது நேரிசை வெண்பாவாக மலர்ந்தது.  அப்பாடல்,

இளைய கவிஞா! இனிய புலவா!

சளைக்காது பேசிடும் சொல்லழகா!-யானிங்கு

ஓர்நூலில் விரும்பி உனையேதான் கேட்டிட்டேன்

சீர்நூல் தருவாயா சொல்?

என்று வினாத் தொடுத்தார்.  கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வினாவைப் பாராட்டித் தமது சிறப்புரைக்குப் பின் கவிஞரைப் பாராட்டி, வெண்பாப் பாடிய நண்பா! வருக மேடை, பரிசு பெறுக! என்றார். அப்போதும் உடனே குறள் வெண்பா ஒன்றைத் தீட்டி நன்றி தெரிவித்தார் கவிஞர்.  அது,

இந்தப்பூக்கள் விற்பனைக் கல்ல, கவிநூலைத்

தந்த கவிக்கென்றன் வாழ்த்து!

என்று கூற, கவிஞரைக் கட்டியணைத்துக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாராட்டுமழை பொழிந்தார்.

கவிஞருக்குப் பாராட்டும் வாழ்த்தும்

வைரமுத்து அவர்களிடம் வெண்பாவிற்குப் பாராட்டுப் பெற்ற கவிஞர் தம்மை பள்ளிப் பருவத்தில் வாழ்த்திய கலைமாமணி கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்,

கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நாவலில் புரட்சி செய்தார். பாரதியோ பாட்டில் புரட்சி செய்தார், இவர்கள்போல் நீயும் பாடுவதில் புரட்சி செய்!” என்று கூறிய நிகழ்வு நினைவுக்கு வந்தது. இதனால் மேலும் ஊக்கமடைந்த கவிஞர் பின்னாளில் வெண்பா பாடுவதில் புலியாக விளங்கினார். இதனால் நாடறிந்த கவிஞரானார்!

கவிஞரின் வெண்பாக்கள் சேலம் சோலை இருசன் அவர்களின் மாதமிரு இதழான சங்கொலியில் தொடர்ந்து வெளி வந்தது. இக்காலக்கட்டத்தில் இவரது பெயருக்கு முன் சங்கொலி என அடைமொழி வாசகரால் தந்து போற்றப்படும் அளவிற்கு இவர் சிறப்பிடம் பெற்றார். சோலை இருசன் மணிவிழாவில் இவருக்குச் சாந்த தண்கவி என்ற விருதும் விழாவில் வழங்கப்பட்டது.

கவிதைப் படைப்போடு இதழ்ப் பணியிலும் வெகுவாக நாட்டம் கொண்டு 1.11.1992ல் ‘கவிக்கோலம்’ என்ற இதழைக் கவிஞர் தொடங்கினார். இவ்விதழைக் கண்டு இதழை வாங்கியவர்கள் திருமுருக கிருபானந்த வாரியார், பேராசிரியர் திரு.மா.நன்னன் அவர்கள் புதினப் பேரரசு கோவி.மணிசேகரன் அவர்கள், சோலை இருசன் அவர்கள், வல்லிக்கண்ணன் அவர்கள் போன்றோர் ஆவர். அவர்களின் வாழ்த்தையும் பெற்றார் கவிஞர்.

கவிஞரின் வானொலிப் பரிசுகள்

சன் தொலைக்காட்சி கட்டுரைப் போட்டியின் பரிசை நடிகர் சாருஹாசன், சுகாசினி மணிரத்தினம் ஆகியோர் வழங்கினார்கள். 10-8-96இல் சன் தொலைக்காட்சி வார்த்தை விளையாட்டுப் போட்டியில் பாராட்டும், 27.7.1994ஆம் தேதியில் பாரம்பரியத்தை நோக்கி நிகழ்ச்சியில் பரிசும், 13.7.92 சென்னை டி.டி.யில் சிறந்த கடிதத்திற்குப் பரிசும், 25.10.1996இல் சென்னைப் பண்பலையில் வெள்ளிமணி ஓசை நிகழ்ச்சியில் கவிதைத் தொகுப்புடன் பாடலும், 24.4.98, 24.8.98 விவத்பாரதி ஒலிபரப்பில் மடலுக்குப் பரிசும், 29.10.96இல் தனியார் பண்பலை ஒலி பரப்பில் வாழ்த்துப் பா போட்டியில் பரிசும் பெற்றார்.

அன்னை மறைவும் ஆற்றொணாத் துன்பமும்

கவிஞரின் அன்னை 29.5.1998 அன்று இயற்கை எய்தினார். இதனால் மனமொடிந்த கவிஞர் மீண்டும் மனம் தேர வெகுநாளானது. தாயின் மறைவைக் கவிதையாக்கி ‘அந்தமான் முரசு’ இதழுக்குப் பத்து வெண்பாக்கள் எழுதி வெளியிட்டார். பின்னர் அந்தாதி நூலை எழுதினார். அது இன்னும் வெளிவரவில்லை. பின்னர் செப்டம்பர் 1998இல் கவிஞரின் அன்னைக்குத் தமது கவிதைகளைக் காணிக்கையாக்கி, ‘வண்ண வண்ணக் கோலங்கள்’ எனும் நூலை வெளியிட்டார். பின்னர் அவர் நடத்தி வந்த ‘கவிக்கோலம்’ இதழும் நின்று போய்விட்டது. தாம் பணியாற்றி வந்த பின்னிப் பஞ்சாலையின் பணியை விருப்ப ஓய்வாகப் பெற்று வெளியே வந்து விட்டார் கவிஞர்.

மீண்டும் உயிர்பெற்ற கவிஞர்

கவிஞர் தமது பஞ்சாலைப் பணி விருப்ப ஓய்விற்குப் பின் 2000ஆம் ஆண்டு கிளை நூலகத் தற்காலிகப் பணியாளராக இணைந்து தமது இளங்கலை, முதுகலை ஆகியவற்றைத் தொடர்ந்தார். பின்னர்ப் பள்ளி ஆசிரியராக எம்.சி.சி. பள்ளியில் சேர்ந்தார். இவரது தமிழ்ப் பணியும் கல்விப் பணியும் தழைக்கத் தொடங்கியது. இக்காலத்தில் எப்.எம். வானொலியின் சினிமா நேரம் நேரலையில் கவிஞரிடம் ஒருமணி நேரம் நேர்க்காணலை திரு.என்.சி.ஞானப்பிரகாசம் அவர்கள் கண்டு வானொலியில் ஒலி பரப்பினார்.

1998இல் கவிஞரின் ‘வண்ண வண்ணக் கோலங்கள்’ நூலுக்கு அணிந்துரைக்காகச் சென்னை வானொலிக்குச் சென்ற கவிஞர் திரு. முனைவர் சேயோன் அவர்களும், முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்களும் கவிஞரை வரவேற்றனர். அவர்கள் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களை அறிமுகப்படுத்தினர். இதனால் கவிஞரின் பல பாடல்கள் வானொலியில் இசைப்பாட்டாக ஒலி பரப்பானது. தென்கச்சியின் அன்பில் கவிஞர் நெகிழ்ந்தார்.

2011ஆம் ஆண்டு கவிஞரின் மணிவிழா ஆண்டாகும். இவ்விழாவையொட்டி கவிஞரின் புகைப்படமும் பாடலும் தமிழ்வழிக் கல்வி வெண்பா விளக்கு இதழில்  கவிமாமணி தகடூர் தமிழ்க்கதிர் வெளியிட்டுச் சிறப்பித்தார். இதே காலக்கட்டத்தில்  சென்னையிலிருந்து வெளிவந்த ‘எழுத்தாணி’ என்ற மாத இதழும் கவிஞரின் புகைப்படத்தை வெளியிட்டுச் சிறப்பு சேர்த்தது.

முதன்முதலில் கவிஞரைப் புகைப்படத்துடன் அட்டையில் அறிமுகப்படுத்தி கவிஞர் வசீகரன் அவர்கள் தமது பொதிகை மின்னல் இதழில் வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளார். மேலும் சுற்றுச்சூழலில் அறிவியல் கல்வி இதழின் ஆசிரியர் திரு. மெர்சி பாஸ்கர் அவர்களும் திரு.கதிரவன் அவர்களும் கவிஞரின் புகைப்படத்தை இதழில் வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளார். பேராசிரியர் தி.வ.மெய்கண்டார் அவர்கள் தமது கவிதா மண்டலத்திலும் கவிதையும் படமும் வெளியிட்டுத் தொடர்ந்து சிறப்புச் சேர்த்து வந்துள்ளார்.

கவிஞரின் படைப்புகளைத் தொடர்ந்து தமது சங்கொலி இதழில் பதினைந்து ஆண்டுகள் வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளார் செந்தமிழ்ச் செல்வர் சோலை இருசன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் அணுவிரதம் இதழின் ஆசிரியர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களும் அண்மைக் காலத்தில் பாபாஜி சித்தர் ஆன்மீகம் இதழின் ஆசிரியர் தன்ராஜ் அவர்களும் இவரைச் சிறப்பித்துள்ளார்.

கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பாடல் இயற்றும் பணியைப் பாராட்டி, அருண்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களும், பாவேந்தரின் புதல்வர் கலைமாமணி மன்னர் மன்னன் அவர்களும், புலவர் மணி தணிகை உலகநாதன் அவர்களும் பாட்டால் பாராட்டுரை வழங்கிக் கவிஞரைப் போற்றியுள்ளனர்.

இவரது கவிதைத் தொகுப்பான ‘கவிக்கோலம்’ என்ற நூல் அறிஞர்களின் பாராட்டோடு 2010இல் சென்னை சோலைப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் ஓவியமும் தமிழ்ப்பாவும் என்ற இறுதிப்பா இவரது திறமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. மேலும் கவிஞரின் நூல்கள் வெளிவர உள்ளன. கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமிழ்ப் பணியில் பாரதி வழியில் பாங்காய் வளர்கிறார்!.

கவிஞரின் தேன்மழையில் சில சொட்டுகள்

1) உலகமறை பற்றி

உலக பொதுமறை உன்னதம் ஓதும்

நிலமுயர் நூல்கள் நிறைந்து – வலம்வரும்

வல்ல தமிழை உயிரெனக் கொண்டவர்

நல்ல தமிழர் நினை!

2) தமிழ்வழிக் கல்வி பற்றி

தாய்மொழி கல்வி தலையென எண்ணி

வாய்மொழி விடுத்தே உடனே செயல்பட

வேண்டும் என்று விரும்பி கேட்கிறேன்

மீண்டும் மீண்டும் மொழியவும் வேண்டுமோ?

3) தன்னம்பிக்கை பற்றி

ஊனம் தடையல்ல உண்டு உயர்வது

வானப் புகழை வளைக்கலாம்-நாணா

சரண்யா உழைத்தார் சரித்திரம் ஆனார்

சிறப்பை உரைத்தல் சிறப்பு!

4) பொதுத் தொண்டு பற்றி

காற்றதுவும் தனக்காக வருவ தில்லை

கதிரவனும் தனக்காக உதிப்ப தில்லை

ஆறதுவும் தனக்காகச் செல்வ தில்லை

அரும்மழையும் தனக்காகப் பொழிவ தில்லை

வேர்அதுவும் தனக்காக வளர்வ தில்லை

வெள்ளிநிலா தனக்காக ஒளிர்வ தில்லை

ஏரிகளும் தனக்காகப் பிறப்ப தில்லை

ஏன்மனிதா நீமட்டும் தனக்காய் இங்கே?

கவிமாமணி தகடூர் தமிழ்க்கதிர்

3/212ஆ, மலர் இல்லம், கௌரன் தெரு

ஆசாத் நகர், கிருஷ்ணகிரி – 635 002