அறிமுகம்

21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்குப் பற்பல மாற்றங்களை அனுபவித்துப் பார்த்து அவற்றின் தீமைகளை அலசி ஆராய்ந்து சரியானவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் கட்டாயமும் எழுந்துள்ளது. கல்வி நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் ஒரு மாணவனின் அறிவு வளர்ச்சியில் கல்வியின் பங்கு அளப்பரியதாகும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிற கல்வியானது மாணவர்கள் மத்தியில் சிறப்பான முறையில் சென்றடைய வேண்டும். இதன் மூலமே கற்பித்தலின் வெற்றித்தன்மை உள்ளடங்கியுள்ளது. அதாவது ஒவ்வோர் ஆசிரியர்களும் தம்மிடத்தே கல்வி கற்கின்ற மாணவர்களுடைய திறமைகள், ஆளுமைகள் போன்றவற்றை அறிந்திருத்தல் வேண்டும். இவ்வாறாக ஆசிரியர்கள் மாணவர்கள் பற்றி அறிந்திருப்பதால் அம்மாணவனின் ஆற்றலுக்கு ஏற்றவகையான கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். இதன்மூலமே மாணவர்களின் அறிவுத்தன்மையானது சிறப்பான முறையில் விருத்தி செய்யப்படுகிறது. அந்தவகையில் பார்க்கும் போது மாணவர்களின் பொருத்தப்பாட்டைப் பொறுத்தே கல்விச் செயற்பாடுகள் வெற்றியளிக்கின்றன.

பாடசாலையில் சில மாணவர்களின் பிழையான பொருத்தப்பாட்டைச் சீராக்கி, சிறந்த பொருத்தப்பாடுகளை வழங்குவதை முக்கியமானதொரு பணியாக ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஒரு வகுப்பறையினைப் பொருத்தவரையில் அங்குள்ள மாணவர்கள் பலவிதமான  பழக்கவழக்கங்களை உடையவர்களாகக் காணப்படுகின்றனர். வகுப்பறையில் குழப்பம் செய்பவர்கள், களவெடுப்பவர்கள், வேற்றுமை பார்க்கக்கூடியவர்கள், ஒன்றுமே செய்யாது ஏனைய மாணவர்களிடமிருந்து விலகித் தனியாக ஒதுங்கியிருக்கக் கூடியவர்கள் எனப் பலதரப்பட்டோரைத் தன்னகத்தே வைத்துக்கொண்டு ஆசிரியரால் சீரான முறையில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. மாணவர்களின் சமூக மனவெழுச்சி, அறிவுமுதிர்ச்சி என்பவற்றினை அடைதற்கு உதவுவதே கல்வியின் முக்கிய நோக்கமாகக் காணப்படுகிறது. ஒரு மாணவனின் மனவெழுச்சியும் அறிவுவளர்சியுமானது ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது என்பது பல ஆய்வுகளின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள் கல்விப் பிரச்சினை ஒன்றாகும். கல்விசார் பிரச்சினைகளுள் பாடசாலைச்சூழல் ,ஆசிரியர்கள், சகமாணவர்கள் சார்ந்து மாத்திரமின்றி மனவெழுச்சி சார்ந்த பிரச்சினைகளாக இருக்கும். எனவே மாணவர்களிடத்தே நல்ல மனவெழுச்சி – சமூகப் பொருத்தப்பாடு பெறும் வகையில் பாடசாலை வேலைகள் அமைவது முக்கியமாகும்.

இலக்கிய மீளாய்வு

உடலியல், உளவியல்சார் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே எல்லா நடத்தைகளும் உருவாகின்றன. மாணவர்கள் தங்களுடைய அனைத்து விதமான தேவைகளையும் நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளும் அனைத்து விதமான முயற்சிகளும் தடை ஏற்படுமானால் மாணவர்கள் உளநெருக்கீடுகளுக்கு உள்ளாவார்கள்.  இவ்வாறு எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மாணவர்கள் எதிர்கொண்டு சமாளித்துக் கொள்ளும்வகையில் அவர்களது நடத்தைகள் அமைந்துள்ளன.

பொருத்தப்பாடு உடைய மாணவர்கள் கற்றலில் சிறப்பாக விளங்குவர். கற்றலில் தயார் இல்லாத நிலையில் கற்றல் பல்வேறு பின்னடைவுகளை ஏற்படுத்தல் பொருத்தப்பாடானது 3 வகைப்படும்.

 • உடல் பொருத்தப்பாடு
 • உள ரீதியான பொருத்தப்பாடு
 • சமூக ரீதியான பொருத்தப்பாடு

சமூக, தனியார் செயற்பாடுகள் பொருத்தப்பாடு எனப்படுகிறது. உயிர், உடல் சார்ந்து தாம் வாழுகின்ற பிரதேசத்திற்கு ஏற்ப பொருத்தப்பாடு அமையும். (உ.ம்) வகுப்பறையில் கட்டுப்பாடுகளை விதித்தல், நேரத்திற்கு வகுப்பிற்கு வருதல் அல்லது, இவ்வளவு நேரம் வகுப்பறையில் இருக்க வேண்டும் என திணித்தல்.

இன்றைய பாடசாலைக் கட்டமைப்பால் பெருமளவான மாணவர்கள் பொருத்தப்பாடற்ற மாணவர்களாகக் காணப்படுதலினாலேயே பல சிக்கல்களும், பிரச்சினைகளும் தலைதூக்கி, கல்விச்செயற்பாடுகளைப்  பொருளற்றதாக்கியுள்ளன.  எனவே, கல்வியை வழங்கும்முன் மாணவர்களைப் பொருத்தப்பாடு அடைய வைத்துக் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாகவே வெற்றியை அடைந்து கொள்ள முடியும்.

உளநெருக்கிடையின் தோற்றுவாய் மனமுறிவுகளும், முரண்பாடுகளுமாகும். ஒருவனுடைய முயற்சி தடைப்படும்போதும் தேவைகளை நிறைவேற்றாத போதும்   ஊக்கிகள் செயலாற்ற முடியாத போதும் மனமுறிவு அல்லது விரக்தி ஏற்படும். ஒரே வேளையில் இரண்டு முரண்பட்ட தேவைகளை நிறைவு செய்ய முடியாது தத்தளிக்கும் போது மனமுரண்பாடு ஏற்படும்.

மாணவர்களது பொருத்தப்பாட்டைச் சீர்குலைக்கும் காரணிகள்

 • உள ரீதியான காரணிகள்
 • வெளிச்சூழல் ,சமூகத்துடன் தொடர்புடைய காரணிகள்

உளரீதியான காரணிகள்

ஒருவன் தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுக்கும் முயற்சிகளில் ஏற்படும் தடைகளினால் உருவாகும் மனவெழுச்சிசார் வெளிப்பாடுகளே உளரீதியான தன்மைகளாகும். மாணவர்களிடம் ஏற்படும் மனமுறிவு, அச்சுறுத்தல், மன முரண்பாடு,  தகைப்பு போன்ற உளரீதியான தன்மைகள் மாணவர்களின் பொருத்தப்பாட்டைச் சீர்குலைத்து நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மன முறிவு

மாணவர்களின் மனத்தைத் தூண்டும் கருத்தோ அல்லது உணர்வோ தடைப்படுவதால் விரக்தி அல்லது அதிருப்தி ஏற்பட்டு மனமுறிவு உண்டாகிறது. அதாவது நோக்கம் நிறைவேற்றப்படாமையால் செயலற்ற தன்மை தோன்றி மனமுறிவாக மாறுகின்றது. மனமுறிவின் காரணமாக ஏற்படும் மாற்றங்களைச் சிலர் முதிர்ச்சி காரணமாகப் பொருத்தமான செயற்பாடுகளாக வெளிப்படுத்திக் காட்டுவர். பலர் பொருத்தமற்ற நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பர். பொருத்தமற்ற நடத்தைகளுக்குத் தடை ஏற்படும்போது பிறழ்வான நடததைகளைத் தோற்றுவிப்பர். மனமுறிவில் பொருத்தப்பாடு அடையாதவர்கள் தொடர்பில் சில நுட்பங்களைக் கையாண்டு இவர்களிடம் சமநிலை ஆளுமைகளைத் தோற்றுவிக்க வேண்டும். உ-ம் வன்செயலுக்குரிய மூலகாரணம் மனமுறிவுதான் என சிக்மன் ஃப்ராய்ட் கூறியுள்ளார். மனமுறிவுக்குள்ளான மாணவர்கள் முரட்டுத்தனம், பயம், கவலை, துக்கம், பாடசாலையை விட்டு வெளியேறல் போன்ற நடத்தைகளை வெளிக்காட்டுவர்.

மனமுறிவிற்கான காரணங்கள்

சூழல் – ஒரு பிள்ளை தன் நண்பருடன் வெளியே விளையாட ஆரம்பிக்கும்போது மழை வந்து தடை செய்யலாம். நாம் சினிமாவிற்குப் போக வெளியேறும்போது நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்து தடை ஏற்படுத்தலாம். இவைபோன்ற பல நேரடியாக நிகழும் தடைகளால் விரக்தி ஏற்பட்டு இலக்கினை அடையாமல் போகலாம்.

சமூகக் காரணிகள் – சமூகப் பழக்கவழக்கங்கள், சட்டங்கள், ஒழுங்குகள் ஆகியன நமது இலக்குகளைத் தடை செய்யும் சமூகக் காரணிகள். குழந்தைகள் தாம் விரும்பியவற்றை உண்ண, விருந்தாளிகள் முன்னிலையில் ஆடையின்றி நிற்க நாம் அனுமதிப்பதில்லை. பாடசாலை ஒழுங்குகள் பிள்ளைகளுக்குத் தடையாகவிருக்கும் இவ்வேளையில் மனமுறிவு ஏற்படலாம்.

ஆளுமைக் காரணிகள் – ஒருவரின் உடல், உள, சமூகக் குறைபாடுகள் மனமுறிவைக் கெடுக்கலாம். உடல் பருத்தவன், கட்டையானவன், நோயாளி, முடவன், நுண்மதி குறைந்தவன், கல்வியில் பின் தங்கியவன், எதற்கும் பயந்த சுபாவமுடையவன், சமூகத்தில் தனித்து விடப்பட்டவன் ஆகியோர் தமது தவிர்க்க முடியாத ஆளுமைக் குறைபாடுகளால் மனமுறிவடைவர்.

பொருளியல் காரணிகள் – வேலையின்மை, பஞ்சம் ஆகியன உதாரணங்கள். வறிய பிள்ளைகள் மற்றவர்களைப் போன்று உடையோ ஆபரணமோ அணிய முடியாது அல்லது சுவையான உணவு உண்ண முடியாது மனமுறிவடைதல்.

மனிதத் தொடர்புகள் – சிறுவயதில் வீட்டில் பெற்றோர் பிள்ளைத் தொடர்புகள் திருப்தியாக இல்லாவிட்டால் அல்லது ஆசிரியர், நண்பர் ஆகியோரிடமிருந்து அன்பும்  ஆதரவும் பெற முடியாவிட்டால் அல்லது வெகுமதி தண்டனைகளின் உறுதியான நடைமுறை இல்லாவிட்டால் பிள்ளைகள் மனமுறிவடைவர்.

மனமுரண்பாடு

இரண்டு இலக்குகளில் எதனைத் தெரிவது என்னும் பிரச்சினை அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஓர் இலக்கின் விசை மற்றையதிலும் கூடியதானால் அதன்வழியே தொழிற்பாடு ஒன்று நடைபெறும். ஆனால் இரண்டும் சமவலுக் கொண்டிருக்குமானால் தொழிற்பாடு ஒன்றும் நடக்காது. இதுவே மன முரண்பாடாகும். இது 3 வகைப்படும்.

அணுகல்அணுகல் வகை

இதிலுள்ள இரண்டு இலக்குகளும் ஒருவனால் நேர்திசையில் சமமாகத்  தொழிலாற்றுவன. இரண்டு சினிமாப் படங்களில்  எதற்குப் போவோம்? சாப்பாட்டுக் கடையில் உணவுப்பட்டியலில் இரண்டு சமவிருப்பமான உணவுகளில் எதனை எடுப்பது? நித்திரை செய்வோமா அல்லது இன்னும் சொற்பவேளை தொலைக்காட்சி பார்ப்போமா? விளையாடுவோமா அல்லது படிப்போமா? இவை அனைத்தும் அணுகல் – அணுகல் வகை மனமுரண்பாட்டிற்கு உதாரணமாகும்.

தவிர்த்தல்தவிர்த்தல் வகை

தவிர்க்க வேண்டிய இரண்டு ஊக்கிகளில் ஒன்றைத் தெரிய வேண்டிய முரண்பாடு இதுவாகும். ஒன்றைத் தவிர்த்து மற்றையதைத் தெரிவு செய்ய முற்பட்டால் அதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாயிருக்கும். எனவே இரண்டையும் தவிர்க்க வேண்டிய நிலை. ஆனால் அது முடியாது ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும். உதாரணமாக மாணவன் ஆசிரியரின் தண்டனைக்குப் பயந்து படிக்க வேண்டியுள்ளான். ஆனால் படிப்பதும் அவனுக்குக் கசப்பான செயல். இங்கு ஒருபுறம் தண்டனையையும் மறுபுறம் படிப்பதையும் தவிர்க்க முடியாத நிலை அவனுக்கு இருக்கும். இதில் இரண்டு ஊக்கிகளும் ஒருவனின் எதிர்த்திசையில் வலுவுடையன.

அணுகல்தவிர்த்தல் வகை

இது சாதாரணமாகக் காணப்படும் முரண்பாடாகும். இதில் ஒருவன் தெரிவு செய்ய வேண்டிய இரு ஊக்கிகளில் ஒன்று விருப்பமானது. நேர்த்திசையில் இழுக்கின்றது. மற்றையது வெறுப்பானது. எதிர்த்திசையில் தள்ளுகின்றது. இரண்டில் ஒன்றைத் தெரிய வேண்டிய நிலை இந்த வகை முரண்பாட்டில் உள்ளது.

 1. ஒரு பிள்ளைக்குத் தேர்வில் வெற்றி பெற விருப்பம் அதேவேளை தனக்குத் தோல்வியும் கிடைக்கலாம் என்ற பயம்.
 2. பாடத்தெரிவின்போது குறித்த பாடம் ஒன்றைக் கற்பதற்கு விருப்பம், ஆனால் அப்பாடம் எதிர்காலத்தில் தேவை ஏற்படாது என்ற அச்சம்.

அச்சுறுத்தல்

ஏதாவது ஒரு தீமை அல்லது அழிவு நிகழலாம் எனும்போது ஏற்படுவது அச்சுறுத்தலாகும். பாடசாலையை அடிப்படையாக கொண்டு புதிதாகப் பாடசாலையில் சேரும்போது, நண்பர்களை இழக்கும்போது, தேர்வில் தோல்வியைத் தழுவும்போது ஏற்படுவது அச்சுறுத்தலாகும். அச்சுறுத்தலின் பின்பு  மனமுறிவு ஏற்படலாம். அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து முறையான திட்டமிடலுக்கு முகங்கொடுத்து முறையாகத் திட்டமிட்டபின் தேர்வுக்கு முகங்கொடுப்பதால் தேர்வில் சித்தியடைந்து மனமுறிவைத் தடுக்கலாம். இதனை விடவும் மனமுறிவு ஏற்பட்ட போது அதனைச் சரியான நிலைக்குக் கொண்டு வருதல். தோல்வியை ஏற்றுக் கொள்ளும் உளநிலையை இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மாணவர் உளநிலையைப் பாதிப்புகளில் இருந்து விடுபடச் செய்விக்கவும் முடியும்.

ஒரு தரம் மனமுறிவு ஏற்பட்டால் திரும்பவும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புண்டு. இந்நிலையில் மனமுறிவும் அச்சுறுத்தலும் ஒன்றோடொன்று கலப்பதால் சில உளவியலாளர்கள் இரண்டும் ஒரே மனநிலையைக் காட்டுகின்றன என்று கூறியுள்ளனர். அதிகமாக கவலை கொள்ளும் பலரைக் கொண்டு நடாத்திய ஆய்வுகளின் படி இரண்டும் ஒரே மன நிலையை கொண்டவை என கண்டறியப்பட்டுள்ளது.இருப்பினும் மன முறிவை விட அச்சுறுத்தல் தனி நபரிடம் பலமான செல்வாக்குச் செலுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.

– நவீன பொருளாதார, சமூக சூழலியல் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குப் பொருட்களைப் பெற முடியாதபோதும் பின்தங்க வேண்டும் என்ற நிலை வரும்போதும் அச்சுறுத்தல் ஏற்படும்.

– கலைத்திட்டத்தை ஆசிரியர்கள் கற்பிக்காத நிலையில் பரீட்சை எழுத வேண்டிய வேளையில் அச்சுறுத்தல் ஏற்படும்.

– இயற்கை அழிவுகள் போன்றவற்றால் அமைதியற்ற நிலையில் தேர்வு தோன்றும் போது தாக்கம் ஏற்படும்.

தகைப்பு

ஒருவரின் மனத்தைக் களைப்படையச் செய்யும் ஓர் உளநிலையே  தகைப்பு எனப்படும். பொதுவாக பல சந்தர்ப்பங்களில் தகைப்பு நிலை ஏற்படலாம். அதாவது தேர்வுக்கு ஆயத்தமாகும்போது அல்லது தேர்வு முடிந்து பெறுபேற்றை எதிர்பார்த்திருக்கும்போது சத்திர சிகிச்சை ஒன்றினை மேற்கொள்ள இருக்கும்போது, யுத்தம், இயற்கை அழிவுகள், அமைதியற்ற சூழல் பாதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.  உ-ம். வன்செயலில் ஈடுபடல், அதிகம் சண்டை பிடித்தல், உடல் உள பாதிப்புக்கள்.

பதகளிப்பு

அதிகளவிலான துக்கம், பயம், தெளிவாகத் தெரியக்கூடிய நிலையில் தோன்றும் சிக்கலான மனவெழுச்சி அனுபவம் பதகளிப்பு எனப்படும். இதனால் நரம்புத்தளர்ச்சி, பேச்சுக் கோளாறு, அதிக நாடித்துடிப்பு, மயக்கம் போன்றன ஏற்படும்.

மனமுறிவு

மன முரண்பாடுகளின்போது ஏற்படும் விளைவுகளாகப் பின்வருவனவற்றைக்  கூறலாம். அதாவது எல்லா நெருக்கிடைகளும் தீங்கானவைகளன்று. தேர்வுக்கு அல்லது வேறு முயற்சிகளுக்கு முன்னர் சிறிதளவு பதகளிப்பு இருந்தாலும் நன்றெனக் கருதப்படுகிறது. சிறு நெருக்கிடைகள் பணிகளைத் திறம்படச் செய்ய உதவும். ஆனால் தீவிரமானவையோ தீங்கானவை. தம் பிள்ளைகளைப் பெற்றோர்கள் சிறு நெருக்கிடைகளை அனுபவிக்க பெற்றோர் விடுவது நன்று. இச்சிறிய அனுபவங்களைப் பெற்றோர் அனுபவிக்க விடுவது பெரிய நெருக்கீடுகளை இலகுவில் தீர்ப்பதற்கு உதவும். தோல்வி, அநீதி, பெற்றோரின் உதவியுடன் தீர்க்க உதவியளிக்கப்பட வேண்டும். சிறு வயதில் சொகுசாய் வளர்ந்தபின் ஏதேனும் பெரிய நெருக்கிடைகளை எதிர்நோக்க முடியாது தவிப்பர்.

எனினும் அளவிற்கு மிஞ்சிய மனமுறிவுகளும் முரண்பாடுகளும் பிள்ளைகளுக்கு ஏற்படாதவாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். நெருக்கிடைகள் ஒருவரிடம் தொழிற்படும் காலம், அதன் செறிவு, அவனுடைய ஆளுமைப்பண்புகள் என்பவற்றைப்  பொருத்தே அவனிடம் கொண்ட விளைவுகளாக அமையும். கடுமையாக மனமுறிவு தீங்கானது சிறுவயதில் பெற்றோரை இழத்தல் பெற்றோரின் விவாகரத்து, வீட்டில் ஆதரவின்மை போன்ற தீவிர மனமுறிவுகளை அனுபவிக்கும் பிள்ளைகள் பிற்காலத்தில் சீர்கேடு, பிறழ்வான நெறி ஆகியவற்றைப் பெறக்கூடும்.

மன முறிவுகளுக்குரிய பொருத்தப்பாட்டு நுட்பமுறைகள் எனும்போது ஒருவன் காண்பிக்கும் பொருத்தப்பாட்டு முறை அவனுடைய ஆளுமைப் பண்புகளைப் பொருத்தே அமையும். மனமுறிவடையும் சந்தர்ப்பங்களில் பதகளிப்பேற்படாதவாறு சுய மதிப்பேற்படும் சந்தர்ப்பங்களில் அவன் சில பொருத்தப்பாட்டு முறைகளை மேற்கொள்வான். இவை அவனிடம் நனவிலி நிலையில் விருத்தியாகும். பிள்ளைகள் பிழையான மனமுறிவுகளைக் கைக்கொள்ளும்போது ஆசிரியர் எவ்வாறு அவர்களுக்கு உதவியளிக்க வேண்டுமென அறிவது அவசியமாகும்.

பொருத்தப்பாட்டு நுட்பமுறைகளைச் சரியாகப் பாகுபாடு செய்ய முடியாது எனினும் அவற்றை எதிர்த்தல், பின்வாங்கல் முறைகள் பிரதியீட்டு அல்லது இடம்பெயர் முறைகள் என 3 பெரும் கூறுகளாக வகைப்படுத்த முடிந்தாலும் சில முறைகள் இரண்டு கூறுகளுக்கும் பொதுவாக உள்ளன. இம்முறைகளுள் அடங்குபவைகளாக பின்வருவன  காணப்படுகின்றன.

எதிர்த்தல் முறைகள் – மனமுறிவை அலட்சியம் செய்தல் அல்லது அதற்கெதிராகச் செயற்படுதல் அல்லது அதற்கு வேறு வகையில் விளக்கமளித்தல் எல்லாம் மனமுறிவைச் சீராக்கும் இலகுவான முறைகளாகும்.

 • வன் செயல்
 • நியாயங் காணல்
 • புறத்தோற்றம்
 • ஒடுக்கல்
 • எதிர்த் தாக்கம்
 • பின்வாங்கல் முறைகள்

தீர்க்க முடியாத மனமுறிவு ஏற்படும்போது பின்வாங்குதல் பயனுள்ள வகையில் அமையும். எனினும் வாழ்க்கை முறையில் முழுவதும் கைக்கொள்பவர் சமூகத்திற்கு ஒவ்வாதவர்களாகவும், பிரச்சினைகளைச் சரியாகத் தீர்க்க முடியாதவர்களாகவும் இருப்பர். அவர்கள்

 • தனிமை விரும்பல்
 • பின்னோக்கம்
 • பகற்கனவு காணல்
 • போதைப் பொருள், மதுபானம் அருந்துதல் போன்றவற்றைக் காட்டுவர்

பிரதியீட்டு முறைகள்

இத்தகைய முறைகளில் பிரச்சினையை வெற்றியுடன் தீர்க்க வேண்டிய வகையில் அது இடம்மாற்றப்படுகின்றது. சில உதாரணங்கள் வருமாறு: கவனம் தேடல், ஈடு செய்தல், ஒன்றுதல் போன்றனவாகும்.

வெளிச்சூழல் காரணிகள்

காரணிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

 1. சமூக கலாசார மாற்றங்கள் – வேகமாக மாறிவரும் சமூக கலாசார மாற்றங்கள் மாணவர்களின் நடத்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வகுப்பறையில் அமைதியாக கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்கத் தடையாக அமைந்து விடுகின்றன.
 2. பிள்ளை பெற்றோர்களுக்கிடையில் தொடர்பு குறைதல்
 3. ஊடகங்களின் தாக்கம்
 4. பிளவுபட்ட குடும்பம்
 5. பாடசாலை – கலைத்திட்டம் – வகுப்பு நடைமுறைகள்
 6. எதிர்கால இலட்சியமும் வேலைவாய்ப்பும்
 7. துஷ்பிரயோகம்

முடிவுரை

நெறிபிறழ்வான மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை சேவை தேவைப்படுகின்றது. இதற்கான காரணங்களாக

 • வழிகாட்டல் தொழில்களைத் தெரிவு செய்தல்
 • தமது தகுதியைத் தீர்மானித்தல் அதற்கேற்ப வேலையைத் தெரிவு செய்தல்
 • புரிந்துணர்வு – விட்டுக் கொடுப்பு
 • உளவியல் ரீதியாக சில சிகிச்சைகளுக்கு இவ்வாறாகப் பொருத்தப்பாடற்ற மாணவர்களின் பிரச்சினைகளை இனம்கண்டு தீர்வுகளளிப்பது மாணவர்களுக்கும், நாட்டுக்கும் ஏற்புடையதாக அமையும்.

 உசாத்துணைகள்

 • அரசரத்தினம், பூ.க. (2007), “பிள்ளைகளை எப்படி அணுகவேண்டும்” அகவிழி.
 • அருள்மொழி, செ. (2008) “கல்வி ஆய்வு முறைகள்” எவக்கிறீன் பிரிண்டர்ஸ், மட்டக்களப்பு.
 • ஆனந்தராஜா, யு.ஊ. (2006) “உளவளத் துணை” வின்சு பப்ளிகேஷன்.
 • சின்னத்தம்பி, மா. (2008) “பாடசாலையும் சமூகமும்” குமரன் புத்தக இல்லம்.
 • நவரெத்தினம், உ. (2007) “கற்றல் கற்பித்தல் செயல் முறையில் கல்வி உளவியல்.”
 • மகேசன், ஏ. (2010) “விசேட கல்வியும் வழிகாட்டல் ஆலோசனைச் சேவையும்” எவக்கிறீன் பிரிண்டர்ஸ்
 • விமலா கிருஷ்ணபிள்ளை, (2001) “ஆலோசனையும் வழிகாட்டலும்” சேமமடு பதிப்பகம், கொழும்பு.
 • ஜெயராசா, சபா. (2007). “கடினமான வகுப்பறைகளும், பாடசாலைகளும் சமகால கருத்து வெளிப்பாடுகள்” அகவிழி.
 • ஜெயராசா, சபா. (2008) கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும், சேமமடு பதிப்பகம், கொழும்பு.
 • http://www.child protection gov.lk
 • http://www.commonwealtheducationfund.org.

சந்துரு மரியதாஸ் (விரிவுரையாளர்)

கல்வி பிள்ளைநலத் துறை, கலை கலாசாரப் பீடம்,

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. [email protected]

யேசுஐயா டிலானி, (உதவி விரிவுரையாளர்)

கல்வி பிள்ளைநலத் துறை, கலை கலாசாரப் பீடம்,

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. [email protected]