Download the Pdf

தமிழ்மொழியின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியிலும் உள்ளது என்ற உண்மைக்குத் தக்க சான்றுதான் இன்றைய இணையத்தமிழ் வளர்ச்சி. முச்சங்கம் வைத்தோம் மூன்றுதமிழ் வளர்த்தோம் என்று நம் முன்னோரின் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், காலத்துக்கேற்ப நாம் நம் மொழியை இணையத்தில் கையாளக் கற்றுக்கொண்டோம். அதனால் இன்று நம் பழந்தமிழ் இலக்கியங்களின் பெருமை உலகத்தோரால் வியந்து நோக்கப்படுகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் சங்ககாலத்தை மட்டுமே பொற்காலம் என்றழைக்கிறோம். அக்காலத்தில் எழுந்த சங்கஇலக்கிய நூல்கள் சங்கால மக்களின் வரலாறாகவே திகழ்கின்றன. பாட்டும், தொகையும் என்றழைக்கப்படும் இந்நூல்களுள் கலித்தொகையானது “கற்றறிந்தார் ஏத்தும் கலி” எனப் போற்றப்படுகிறது. இணையத்தில் கலித்தொகை பதிப்புகளையும், பதிவுகளையும் எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

சங்கஇலக்கியத்துள் கலித்தொகையின் இடம்

பாட்டும், தொகையும் என்றழைக்கப்படும் சங்கஇலக்கியத்தின் ஒவ்வொரு பாடல்களுமே சிறந்தவை என்றாலும் அவற்றுள் கலித்தொகைப் பாடல்கள் தனக்கே உரிய சிறப்பியல்களைக் கொண்டிருக்கின்றன. பிறபாடல்கள் ஆசிரியப்பாவால் அமைய கலித்தொகையோ கலிப்பாவால் அமைந்துள்ளது. ஐந்து திணைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. பல பாடல்கள், ஓரங்க நாடகங்களைப் போல அமைந்துள்ளன. ஏறுதழுவுதல்  உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இன்றும் விவாதிக்கப்படுவனவாக விளங்குகின்றன. அதனால் கலித்தொகை கற்றறிந்தார் மட்டுமின்றி கல்வி அறிவு இல்லாதவர்களும் பேசும் இலக்கியமாக இன்று செல்வாக்குப் பெற்று விளங்குகிறது.

கலித்தொகை சுவடிப் பதிப்பு

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல்; நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் இணையப பல்கலைக்கழகம்  ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார். அதை நிறைவேற்றும்வகையில் இத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.க.ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது. இது தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் நூலகம் என்ற பிரிவில் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களின் மூலப்பதிப்பும், உரையும் இடம்பெற்றுள்ளன. ‘கலித்தொகையின் சுவடிப்பதிப்பை இத்தளம் பதிவேற்றம் செய்துள்ளது’.1

கலித்தொகை மூலப்பதிப்பு, நச்சினார்க்கினியர் உரையுடன் உள்ளது. இதனை மிக நுட்பமாக உற்றுநோக்கும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

இது தமிழின் தொன்மையையும் அக்காலப் பதிப்பு மரபுகளையும் யாவரும் அறிந்துகொள்ள உதவியாக உள்ளது. இவ்விணையதளத்தின் ஒரு கூறாக இடம்பெறும் சொல்லடைவு ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.

காலந்தோறும் கலித்தொகைப் பதிப்புகள்

விக்கிப்பீடியா இணையதளமானது யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். இதில், தமிழ்க் கட்டுரைகள்: 67,209 உள்ளன. இதில் கலித்தொகையின் பாடல்களும், அதன் சிறப்புகளும், பதிப்பு மரபுகளையும் தரவுகளாகப் பெறமுடியும். இவ்விணையதளத்தில் பதிப்புமரபு குறித்த இந்த செய்தியைக் காணமுடிகிறது. ‘கலித்தொகை நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம்பிள்ளையவர்கள். பதிப்பித்த ஆண்டு 1887. கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையுமாக ”நல்லந்துவனார் கலித்தொகை” என்னும் பெயரில் அவர் பதிப்பித்தார். அதன் பின்னர், பல ஏட்டுச் சுவடிகளை ஒப்பிட்டும், வேறு நூல்களை ஆராய்ந்தும், உரிய விளக்கங்களுடன், பல்கிய மேற்கோள்களை அடிக்குறிப்புகளாக அளித்தும், சென்னை பிரசிடென்சி கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இ.வை. அனந்தராமையர் அவர்கள் 1925இல் கலித்தொகையைப் பதிப்பித்தார். அதன் பின்னரே பலரும் கலித்தொகைக்கு உரை கண்டனர் எனலாம்.’2.

மதுரைத் திட்டம்

தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்பைக் கொண்டிருக்கும் இணையதளங்களில் குறிப்பிடத்தக்கது மதுரை திட்டம் என்ற இணையதளம். ‘இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம். எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை. மதுரைத் திட்டம் இதற்கான ஒரு கூட்டு முயற்சி.

மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (எழடரவெயசல) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.’3 இவ்விணையதளத்தில் கலித்தொகை மூலம் மின்பதிப்பாக உள்ளது.

பதிப்பு வரலாறு

தமிழ் மரபு அறக்கட்டளை என்ற இணையதளம் ‘சமகால மின்னூடகத்தின் வழியே தமிழ் மரபை நிலைநிறுத்தலும், அறிந்துகொள்ளுதலும்’4; என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில்

கலித்தொகை பதிப்பிக்கப்பட்ட ஆண்டுகளின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்பு

சங்க இலக்கியங்களின் பெருமையை பிறமொழி அறிஞர்களும் அறிந்துகொள்ளும் விதமாக ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து வெளியிடக்கூடிய இணையதளங்கள் உள்ளன. கலித்தொகைப் பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் ‘லேர்ன் சங்கத்தமிழ்’5 என்ற இணையதளம் வழங்குகிறது. ‘விக்கிப்பீடியாவிலும்’6 சங்கப்பாடல்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பைக் காணமுடிகிறது. ‘இலக்கிய ஒப்பாய்வு’7 என்ற தளமும் கலித்தொகைப் பாடலை ஆங்கிலத்தில் விளக்கத்துடன் தருகிறது. இம்மொழி பெயர்ப்புகள், சங்கப்பாடலின் மூல வரிகள், பாடலின் ஆங்கில விளக்கம், பாடலின் அருஞ்சொற்பொருள் விளக்கம் என பாடலை விளக்கிச் செல்வனவாக உள்ளன.

இலக்கிய நயம் பாராட்டுதல்

கலித்தொகைப் பாடல்களின் சிறப்பியல்புகளை சங்கஇலக்கியம் படிக்காதவர்களும் உணரும் வகையில் பல இணையதளங்கள் எடுத்தியம்புகின்றன சான்றாக,‘கற்றலின் சிறப்பு கற்பித்தலே என்று கூறும் கல்லூரித் தமிழ்’8 என்ற வலைப்பதிவு கலித்தொகைப் பாடல்களை விளக்கத்துடன் பதிவுசெய்துள்ளது. இந்த இணையத்தில் பிடிஎப் வடிவத்திலும் கலித்தொகை உள்ளது. ‘கலித்தொகையில் புராண இதிகாச குறிப்புகளை எடுத்துரைப்பதாக ‘ராம் வலைப்பதிவு’9 விளங்குகிறது. ஏறுதழுவல் உள்ளிட்ட கலித்தொகைக் காட்சிகளைப் பதிவுசெய்து வரும் தளங்குள் ‘தமிழ்த்துளி’10 என்ற தளம் குறிப்பிடத்தக்கது. ‘தமிழ்த் தொகுப்புகள்’;11 என்ற இணையதளம் சங்ககாலத்தில் இருந்த தொழில்களைக் கலித்தொகை வழியாக எடுத்தியம்புகிறது. கலித்தொகப் பாடல்களைச் சமகால மொழிநடையில் விளக்கும் வலைப்பதிவுகளுள் ‘வேர்களைத்தேடி’12 என்ற பதிவு குறிப்பிடத்தக்கது. இதில் இடம்பெற்ற பாடல்களை பார்வையாளர் மறுமொழிகளுடன் நூலாக்கம் செய்தும் வெளியிட்டுள்ளது.

சமூகத் தளங்களில் கலித்தொகை

முகநூல் உள்ளிட்ட சமூகத் தளங்களில் சங்க இலக்கியத்துக்கெனக் குழுக்களை ஏறுப்படுத்திக்கொண்டு எழுதுவோர் கலித்தொகையின் மாண்புகளையும் சிறப்பாகப் பதிவுசெய்துவருகின்றனர். அதற்குச் சான்றாக ‘சங்கஇலக்கியம்’13 என்ற முகநூல் பக்கத்தைக் கூறலாம். இப்பக்கத்தில் சங்க இலக்கியப்பாடல்கள் பலவும் விளக்கத்துடன் வெளியிடப்படுகின்றன. ‘சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் இலகுத் தமிழ் நடையில்’14 என்றே ஒரு முகநூல் குழு உள்ளது.

இணைய இதழ்களில் கலித்தொகை

தினமணி நாளிதழில்; சங்கப்பலகை என்ற பிரிவு தமிழுலகத்தால் பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு தமிழிலக்கியங்களின் நயங்களும் சான்றுகளுடன் கட்டுரைகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. இப் பதிவுகளில் கலித்தொகைப் பதிவுகள் சிறப்பிடம் பெறுகின்றன. சான்றாக ‘கலித்தொகையில் மகாபாரதம்’15 என்ற பதிவைச் சுட்டலாம். சங்ககாலப் மக்களின் பழக்கவழங்கங்களுள் குறிப்பாக் கலித்தொகையில் இடம்பெற்ற பழக்கவழக்கங்களை ‘கலித்தொகை காட்டும் பழக்கவழக்கங்கள்’16 என்ற பதிவின் வழியாக திண்ணை என்ற இணைய இதழ் விளக்குகிறது. ‘முத்துக்கமலம்’17 கலித்தொகை காட்டும் பண்பு நலன்கள் என்ற கட்டுரை வழியாக சங்ககால மக்களின் பண்புநலன்களைப் புலப்படுத்துகிறது.‘பதிவுகள்’18 என்ற இணைய இதழ் கலித்தொகையில் சிறப்பாகப் பேசப்படும் ஏறுதழுவல் என்ற சங்ககால மரபுகுறித்த கட்டுரையை வெளியிட்டுள்ளது. ‘காலச்சுவடு’19 என்ற இணைய இதழில் வெளியான உயிரினும் சிறந்தன்று நாணே என்ற கட்டுரை கலித்தொகைப் பாடல்களையும் விளக்கிச் செல்கிறது. ‘வரலாறு’20 இணைய இதழிலும் கலித்தொகை குறித்த ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

கலித்தொகை ஓவியங்கள்

கூகுள் படங்கள் என்ற பிரிவில் கலித்தொகை என்று தேடினால், கலித்தொகை மூலநூல்கள், உரை நூல்கள், அது தொடர்பான இணையதளங்களின் இணைப்புடன்படங்களும் கிடைக்கும் அளவுக்கு வசதி உள்ளது. ‘வேர்களைத்தேடி’21 உள்ளிட்ட இணையதளங்கள் தாம் விளக்கவரும் கலித்தொகைப் பாடல்களை அழகிய ஓவியங்களாகக் காட்சிப்படுத்திவருகின்றன. இத்தளத்தில் மாநாகன் இனமணி என்ற இதழ் வெளியிடப்படுகிறது. இதில் தமிழ் மொழியின் தொன்மையான இலக்கண, இலக்கியங்களில் இருந்து தமிழர் தம் மரபு, பழக்கவழக்கங்கள் அழகான ஓவியங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் தமிழர் தம் ஏறுதழுவல் மரபுகளை எடுத்தியம்பும் கலித்தொகைக் காட்சிகளை அழகிய ஓவியங்கள் விளக்கிச் செல்கின்றன.

சான்றாக இந்த ஓவியத்தைக் கொள்ளலாம்.

காணொளிகளில் கலித்தொகை  

தமிழின் செம்மைத் தன்மைக்குத் தக்க சான்றாக விளங்கும் கலித்தொகைப் பாடல்களை அழகுத்தமிழில் பேசி அதனைப் பதிவு செய்து யுடியூப் என்ற இணையதளத்தில் பகிர்ந்து கொள்வதையும் பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சான்றாக ‘யுடியூப்பில் கலித்தொகை’22 என்ற பதிவின் வழியாக ஒரு பேராசிரியர் கலித்தொகையின் தனிச்சிறப்புகளை பேசி அதைக் காணொளி வடிவில் தந்துள்ளார்.

ஒரு ஆசிரியர் மாணவருக்குப் பாடம் நடத்துவது போல இத்தொழில்நுட்பம் பலருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது. மின்னஞ்சல் முகவரி இருந்தால் யார் வேண்டுமானலும் இவ்வாறு தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளமுடியும் என்ற கருத்து சுதந்திரமும் உள்ளது.

நூல் மதிப்புரைகள்

தினத்தந்தி, தினமணி உள்ளிட்ட நாளிதழ்களும், வலைப்பதிவுகளும் நூல் மதிப்புரைகளை வெளியிட்டுவருகின்றன. இதில் கலித்தொகை குறித்த பதிவுகளும் இடம்பெறுகின்றன.

அகராதிகளில் கலித்தொகை

தமிழ் ‘விக்சனரி’23 உள்ளிட்ட அகராதிகளில் கலித்தொகை குறித்த செய்திகளை எளிதில் கண்டு பயன்பெறமுடிகிறது. மேலும் பல அகராதி முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

கலித்தொகை ஆய்வு குறித்த பதிவுகள்

பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழில் செய்யப்பட்ட ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளை சில இணையதளங்கள் வெளியிட்டுவருகின்றன. சான்றாக,‘தமிழாய்வு’24 என்ற வலைப்பதிவு ஆயிரக்கணக்கான தலைப்புகளைக் கொண்டுள்ளது. ‘தமிழாய்வுகள்’25 என்ற இணையதளம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சான்றாக,

 

இவ்விணைய தளத்தில் பல பல்கலைக்கழகங்களில் செய்யப்பட்ட ஆய்வுத் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. அதிலும் ஆய்வாளர் பெயர், நெறியாளர் விவரத்துடன், முன்னுரை, ஆய்வுப் பகுப்பு முடிவுரை என மிகவும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளதால், ஒரே தலைப்பில் செய்யப்படும் ஆய்வுகள் குறையும் சூழல் உருவாகியுள்ளது.

மின்னூலகங்களில் கலித்தொகை

இணையப் பரப்பில் நிறையவே மின்னூலகங்கள் வந்துவிட்டன. இவற்றில் இலவசமாக தமிழ் நூல்களை தகுதர (பிடிஎப்) வடிவத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடிகிறது. சான்றாக,      ‘சென்னை நூலகம்’25, ‘நூலகம்’26, ‘மதுரை மின்நூல் தொகுப்பு’27, ‘தமிழகம்’28,‘ விக்கிசோர்சு’29, ‘தமிழ்க்களஞ்சியம்”30 உள்ளிட்ட பல்வேறு மின்னூலகங்களும் கலித்தொiயைப் பதிவுசெய்துள்ளன. இந்நூலகங்களுள் ‘கன்னிமாரா நூலகம்’31 குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்நூலகத்தில் கலித்தொகை குறித்த 57 நூல்களைக் காணமுடிகிறது. அந்நூலின் பதிப்பகம் குறித்த விவரங்களையும் இதில் காணலாம்.

இணைய நூலங்காடிகளில் கலித்தொகை

இணைய நூலங்காடிகள் பலவும் கலித்தொகை மூல நூலையும் கலித்தொகையில் செய்யப்பட் ஆய்வு நூல்களையும் விற்பனை செய்துவருகின்றன. அதனால் உலகின் எந்த நாட்டிலிருந்தாலும் வீட்டிலிருந்துகொண்டே நூல்களைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் வந்துள்ளது. சான்றாக,‘நூலுலகம்’32 என்ற இணையதளத்தைக் குறிப்பிடலாம். இந்த இணையதளளத்தில் தமிழ் மொழியின் பல துறை சார்ந்த நூல்கள் விற்பனைக்கு உள்ளன. காட்டாக, கலித்தொகை என்று தட்டச்சு செய்தால் கலித்தொகை மூலம், கலித்தொகை உரை, கலித்தொகையில் செய்யபட்ட ஆய்வு நூல்கள் என பல நூல்களும் அதன் அட்டைப்படத்துடன் விவரமாகப் காட்சிப்படுத்தப்படுகின்றன.

‘காந்தளகம்’33 என்ற பிறிதோர் இணையதளம் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துச் சுதந்திரமும் கலித்தொகைப் பதிவுகளும்

இலக்கியம், இலக்கணம் என்பதெல்லாம் தமிழ் படித்தோர் மட்டுமே பேசிய, எழுதிய காலம் கடந்துவிட்டது. இப்போது தமிழ் மொழி காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு இணையவெளியில் பரவலாக்கம் பெற்றுள்ளது. தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை தமிழ் உணர்வாளர்கள் பலரும் தமக்கு பிடித்த சமூகத்தளத்தில் சுதந்திரமாக வெளியிட்டு வருகின்றனர். அவற்றுள் விக்கிப்பீடியா என்ற கட்டற்ற கலைக்களஞ்சியம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இதில் யார் வேண்டுமானாலும் தமிழ் குறித்த கட்டுரைகளைத் தொகுக்கமுடியும் என்ற சுதந்திரம் உள்ளது. சங்கஇலக்கியம் என்ற பிரிவில் மூல பதிப்புகள் மட்டுமின்றி சங்கஇலக்கியம் தொடர்பான பல இணையதளங்களின் இணைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் தவறான, மயக்கமான செய்திகளும் இடம்பெற்றுவிடுகின்றன. இருந்தாலும் அவற்றை சரிசெய்து கண்காணிக்கும் மரபுகளும் இருப்பதால் எதிர்காலத் தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்கள் விரல்நுனியில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. சான்றாகக் கலித்தொகை என்று கூகுளில் தேடுபொறியில் தேடினால் முதலில் கிடைக்கும் முடிவு விக்கிப்பீடியாவின் முடிவாகத்தான் இருக்கிறது. இரண்டாவது தமிழ் இணையப் பல்கலைக்கழகம், மூன்றாவது, இலக்கியம் என்று முடிவுகள் கிடைக்கின்றன. தொடர்ந்து ஒரு பக்கத்துக்கு 10 இணைய பக்கங்கள் என பதினெட்டுப் பக்கங்களை கூகுள் பரிந்துரை செய்கிறது. அந்த அளவுக்கு கலித்தொகை குறித்த பதிவுகள் சுதந்திரமாக வெளியிடப்பட்டுவருகின்றன.

கலித்தொகைப் பதிவுகளும் எழுத்துருச் சிக்கலும்

தமிழில் பல்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்த இணையதளங்கள் பலவும் யுனிகோடு என்றழைக்கப்படும் ஒருங்குறி எழுத்துரு முறைக்கு மாறிய பிறகு காப்பி, பேஸ்ட் எனப்படும் நகலெடுத்து ஒட்டும் வழக்கம் அதிகமாகிவிட்டது. சான்றாக ஒரு ஆய்வாளர் கலித்தொகையில் ஆய்வு செய்பவராக இருந்தால் அவர் தாம் மேற்கோள் காட்டவிரும்பும் கலித்தொகைப் பாடல்களை நகலெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். அதிலும் எழுத்துருச் சிக்கல் ஏற்பட்டால் எழுத்துருமாற்றி மென்பொருள்களும், இணையதளங்களும் வழக்கத்துக்கு வந்துவிட்டன. சான்றாக ‘பொங்குதமிழ்’34 என்ற இணையதளத்தைக் குறிப்பிடலாம். மேலும் கலித்தொகைப் பாடல்களைப் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்துகொள்ளவும் ‘கூகுள் மொழிமாற்றி தொழில்நுட்பம்’35 பயன்படுகிறது.

நிறைவாக..

இணையதளங்கள், வலைப்பதிவுகள், மின்னூலகங்கள், சமூகத் தளங்கள் என இணையத்தின் பல்வேறு கூறுகளிலும் கலித்தொகை சுவடியாகவும், பதிப்பாகவும், பதிவாகவும் இடம்பெற்றுள்ளது. கலித்தொகை உணர்த்தும் கருத்துக்களை ஓவியங்களாகவும், காணொளியாகவும் இன்று பதிவுசெய்ய ஆரம்பித்துள்ளனர். இன்றைய திறன்பேசிகளில் கூட கலித்தொகைப் பதிவுகளைக் காணமுடிகிறது. கலித்தொகை சுவடியாக இருந்தபோது, அச்சாக்கம் பெற்றபோது, கணினியில் இடம்பெற்றபோது, இணையத்தில் இடம்பெற்றபோது என ஒவ்வொரு காலகட்டத்திலும் கலித்தொகை காலத்துக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. இணையத்தில் கிடைக்கும் கலித்தொகைப் பதிவுகளுள் தமிழ் இணையப் பல்கலைக்கழகம், விக்கிப்பீடியா, மதுரைத்திட்டம் ஆகிய இணையதளங்கள் முதல் மூன்று பயன்பாட்டுத் தளங்களாக விளங்குகின்றன. பல பல்கலைக்கழகங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளையும் சில இணையதளங்கள் தொகுத்து வழங்குவதால் ஒரே தலைப்பில் ஆய்வுகள் செய்யும் நிலை தவிh;க்கப்படுகிறது. ஆய்வாளா;கள் ஒரு சொல்லைத் தேட பக்கம் பக்கமாகத் தேடிய காலம் கடந்து இப்போது சில மணித்துளிகளில் அந்தச் சொற்களைத் தேடிப் பெற முடிகிறது. ஆய்வுக்குத் தேவையான உரைவிளக்கங்களையும், ஆய்வோடு தொடர்புடைய நூல்களையும் இணையவழியாகப் பெறும் வழிமுறையும் உதவியாகஉள்ளது. கலித்தொகை என்ற பழந்தமிழ் இலக்கியத்தை எதிர்காலத்துக்கும் புரியும் நடையில், பிடித்த தொழில்நுட்பத்தில் சொல்லித்தரும் அளவுக்கு இணையத்தில் இன்று தமிழ் வளர்ச்சிபெற்றுள்ளது. கணினி மற்றும் இணையத்தில் தமிழ்ப்பயன்பாட்டுக்குப் பெரிதும் தடையாக இருந்த எழுத்துருச் சிக்கல் என்பது ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஒருங்குறி என்ற பயன்பாட்டு முறையால் இன்று கணினியிலும், இணையத்திலும் தமிழ் மொழியை எளிதாகப் பயன்படுத்தமுடிகிறது.

சங்கஇலக்கியத்தின் ஒரு நூலான கலித்தொகை இணையத்தில் பெற்றுள்ள இடம் இன்றைய சூழலில் சங்கஇலக்கியம் மக்களிடையே பெற்ற செல்வாக்கின் அடையாளமாகவே கருதமுடிகிறது.

சான்றெண் விளக்கம்

 1. http://www.tamilvu.org/library/suvadi/s126/html/s1260cnt.htm
 2. http://ta.wikipedia.org/wiki/fypj;njhif
 3. http://www.projectmadurai.org/index.utf8.html
 4. http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-09-27-02-06-02/2010-05-02-09-39-14/2010-07-11-20-22-18
 5. http://learnsangamtamil.com/kalithokai/
 6. http://en.wikipedia.org/wiki/Sangam_literature
 7. http://literature-comp.blogspot.in/2011/11/tamil-kalithogai.html
 8. http://kalloorithamizh.blogspot.in/2012/12/blog-post_15.html,
 9. https://ramanchennai.wordpress.com/tag/fypj;njhif
 10. http://vaiyan.blogspot.in/2014/11/blog-post_88.html
 11. https://thoguppukal.wordpress.com/2011/01/29/fypj;njhif
 12. http://www.gunathamizh.com/search/label/fypj;njhif
 13. https://www.facebook.com/sangaillakiyam?fref=pb&hc_location=profile_browser
 14. https://www.facebook.com/pages/rq;fஇலக்கியம் கூறும் வாழ்வியல் இலகு தமிழ் நடையில் /258331120870942?ref=br_rs
 15. http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2014/02/23/rq;fg;gyif fypj;njhifயில் /article2072560.ece
 16. http://puthu.thinnai.com/?p=28213
 17. http://www.muthukamalam.com/essay/literature/p20.html
 18. http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=363:2011-08-29-01-57-50&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19
 19. http://www.kalachuvadu.com/issue-139/page76.asp
 20. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=575
 21. http://www.gunathamizh.com/search/label/ngUe;jr;rd; தென்னன் மெய்ம்மன்
 22. https://www.youtube.com/watch?v=YmhKuJ_x0MU
 23. http://thamizhaaivu.blogspot.in/
 24. http://www.tamilaivugal.org/TamilPhd/TamilAivugal
 25. http://www.chennailibrary.com/ettuthogai/kalithogai.html
 26. http://www.noolaham.org/
 27. http://www.projectmadurai.org/
 28. http://www.thamizhagam.net/tamillibrary/tamillibrary.html
 29. http://ta.wikisource.org/wiki/fypj;njhif
 30. http://www.tamilkalanjiyam.com/literatures/ettuthogai/kalithokai/index.html#.VOCrNiuUeVs
 31. http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-search.plfypj;njhif
 32. http://www.noolulagam.com/product/?pid=17544#details
 33. http://www.tamilnool.com/
 34. http://www.suratha.com/reader.htm
 35. https://translate.google.co.in/?hl=ta&tab=wT

முனைவர் இரா.குணசீலன்

கே.எஸ்.ஆர்.மகளிர் கல்லூரி

       திருச்செங்கோடு