இதிகாசங்களிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு விரிவாக்கிக் காப்பிய வடிவில் தரும் இலக்கியத்தைக் ‘கண்ட காவியம்’ என்று வடமொழி அறிஞர்கள் குறிப்பிடுவர். அந்தவகையில் மகாபாரதத்தில் இடம்பெற்ற கிளைக்கதைகளான நைடதம், அரிச்சந்திரன் சரிதம், புரூரவன் சரிதம் ஆகியவற்றை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நைடதம்

16ஆம் நூற்றாண்டில் அதிவீரராம பாண்டியர், நிடத நாட்டு மன்னனான நளனின் சரிதத்தை நைடதம் என்னும் காப்பியமாக இயற்றினார். வடமொழியில் ஹர்ஷர் இயற்றிய ‘நைஷதம்’ எனும் நூலே தமிழில் ‘நைடதம்’ ஆயிற்று. ‘நைஷதம் புலவருக்கு ஔஷதம்’ என்பது பழமொழி. இந்நூலில்  28 படலங்களும், 1173 பாடல்களும் உள்ளன. மகாபாரத வனபர்வத்தில் கௌரவர்களுடன் சூதாடித் தோற்ற பாண்டவர்கள் தங்கள் நாட்டைவிட்டுக் காட்டிலே வாழ்கின்றனர். அங்கு சென்ற பிருகதச்வர் என்னும் முனிவர் கவலையுடன் இருந்த தருமரைக்கண்டு உன்னைப் போல் கலியின் சூழ்ச்சியால்  நாடு, நகரங்களை இழந்து மீண்டும் சூதாடி நாட்டைப் பெற்ற நளனின் கதையைக் கேள் என்று கதையைக் கூறுகிறார்.

கதைச்சுருக்கம்

நளன் அன்னத்தைத் தூது விட்டு, தமயந்தியைச் சுயம்வரம் மூலம் திருமணம் செய்கிறான். பின்பு கலியின் சூழ்ச்சியால் புட்கரனுடன் சூதாடி, நாட்டை இழந்து மனைவியுடன் காட்டை அடைகிறான். அப்போது அங்கு வந்த அன்னத்தைப் பிடிக்க முற்பட்ட நளனின் ஆடையை, அன்னம் கொண்டு செல்ல இருவரும் அன்று இரவில் ஒற்றை ஆடையுடன் துயிலுகின்றனர். கலியின் சூழ்ச்சியால் நளன் தன் ஆடையை வகிர்ந்து அவளைப் பிரிந்து செல்கிறான். அங்கு தான் கண்ட பாம்பைத் தீயினின்றும் காப்பாற்ற, அப்பாம்பு அவனைத் தீண்டுகிறது. நளன் வேறு வடிவம் பெற்று அயோத்தி மன்னனான ரிதுபர்னனிடம் ஏவலனாய்ப் பணிபுரிகிறான். தமயந்தியோ அந்தணன் ஒருவன் உதவியால் வீமனின் அரண்மனையைச் சேர்கிறாள். நளன், தமயந்திக்கு இரண்டாம் சுயம்வரம் என அறிந்து, ரிதுபர்னனுக்குத் தேரோட்டியாக வருகிறான். அங்கு நளன் தன் குழந்தைகளைக் குழவியதைக் கண்ட தமயந்தி அவனை நளமகாராசன் என அறிகிறாள். நளன் கலிதொடர் காலம் நீங்கித்  தன் பழைய உருவம் பெற்றுத் தமயந்தியை அடைந்து, மீண்டும் சூதாடி நாட்டைப் பெறுவதே கதை.

அரிச்சந்திரன் சரிதம்

          இந்நூலின் ஆசிரியர் நல்லூர் வீரகவிராசர். இதில் 1215 பாடல்களும்,10 காண்டங்களும் இடம்பெறுகின்றன. இந்நூலின் மூலநூல் அரிச்சந்திர வெண்பா ஆகும். மகாபாரத வனபர்வத்தில் கௌரவர்களுடன் சூதாடித் தோற்ற பாண்டவர்கள் தங்கள் நாட்டைவிட்டுக் காட்டிலே வாழ்கின்றனர். அங்குச் சென்ற பிருகதச்வர் என்னும் முனிவர் கவலையுடன் இருந்த தருமரைக்கண்டு உன்னைப் போல் நாடு, நகரங்களை இழந்து மனைவி, மக்களையும் விற்றுப் பன்னிரண்டு வருடம் மயானம் காத்த அரிச்சந்திரன் கதையைக் கூறுகிறேன் கேள் என்பதாக இக்கதை தொடர்கிறது.

கதைச்சுருக்கம்

அரிச்சந்திரன் சந்திரமதியின் சுயம்வரத்திற்குச் சென்று அவளது மங்கல நாணைக்கண்டு திருமணம் செய்கிறான். இவன் ”மனுநெறி தவறாத சிறந்த மன்னன்” எனும் வசிட்டர் கூற்றை விசுவாமித்திரர் மறுத்து, அவனை நான் சத்தியம் தவறச் செய்கிறேன் எனச் சூளுரைத்து விலங்குகளையும், புட்களையும் அனுப்பி அரிச்சந்திரன் நாட்டை அழிக்கச் செய்கின்றான். நாட்டை அழித்த விலங்குகளை அரிச்சந்திரன் வதைக்கிறான். விசுவாமித்திரர் பெண்களை அனுப்பி வெண்கொற்றக்குடையைக் கேட்கிறான். தர மறுத்த அரிச்சந்திரனிடம் விலங்குகளை வதைத்ததற்கும், பெண்களை வெருட்டியதற்கும் பரிகாரமாக அப்பெண்களை மணக்க வேண்டும் என வற்புறுத்துகிறான். அதற்கு மறுத்த அரிச்சந்திரனிடம் உள்ள அனைத்துச் செல்வத்தையும் பெற்று, தனது கிழிந்த துணியைக் கொடுத்துவிட்டு அரிச்சந்திரனின் உயர்ந்த உடையைப் பிடுங்கிக் கொள்கின்றான்.

அரிச்சந்திரன் அங்கிருந்து காசி நாடடைந்து, தன் மனைவி, மக்களையும் பிராமணனிடம் விற்று, தன்னை வீரவாகு எனும் பிணம் சுடும் புலையனுக்கு அடிமையாக்குகிறான். சந்திரமதியின் மகன் பாம்பு கடித்திறக்க அவனை மயானத்தில் சுட வந்தாள். அப்போது அரிச்சந்திரன் அவள் அணிந்திருந்த மங்கல நாணால்  தன் மனைவி என அறிந்து அவளிடம் கூறிவிட்டு வீரவாகுவைக் காணச் செல்கிறான். அவ்வேளையில் வழியில் நகை அபகரிக்கப்பட்டுப் பிணமாகக் கிடந்த காசி அரசனின் மகனைச் சந்திரமதி கொன்றதாகக் கூறிக் கொலைக்களத்திற்கு அனுப்புகிறார்கள். வீரவாகு சந்திரமதியைக் கொலை செய்யும்படி அரிச்சந்திரனை ஏவுகிறான். அரிச்சந்திரனின் ஓங்கிய வாள், மலர்மாலையாக விழ, அனைவரும் கூடி அரிச்சந்திரனுக்குச் சிறப்புச் செய்கிறார்கள். அரசையும் திருப்பிக் கொடுக்கிறார்கள். இறந்த இரண்டு குழந்தைகளும் உயிர் பெறுகிறார்கள். இதுவே இந்நூலின் கதை.

 புரூரவ சரிதை

          இந்நூலின் ஆசிரியர் ஐயம் பெருமாள் சிவந்த கவிராசர். இதில் 26 படலங்களும், 845 செய்யுட்களும் இடம்பெறுகின்றன. மகாபாரத ஆதிபருவத்தில் இக்கதை இடம்பெறுகிறது.

கதைச்சுருக்கம்

          புரூரவன் கங்கை நாட்டரசன் மகள் புண்டரீகவல்லியைச் சுயம்வரத்தில் மணக்கிறான். நாரத முனிவர் புரூரவனுக்குச் சனி தொடரும் நாள் நெருங்கிற்று எனக் கூற, அதற்குப் புரூரவன் ”முதுமையில் வாராது இளமையில் வந்து என்னைப் பற்றுக” என வேண்டினான். வித்துமாலை என்பவனிடம் தன் நாட்டை இழந்து, மனைவி மக்களுடன் சந்திரகிரி எனும் நாடடைகிறான். அங்கு விச்சுவகுப்தன் எனும் வணிகனிடம் அரசி நெல் குத்தும் தொழில் செய்தும், மன்னன் விறகு சுமந்தும் பிழைக்கிறார்கள். விச்சுவகுப்தன் அரசி மீது ஆசை கொண்டு வேற்றூர்க்கு அனுப்புகிறான். அவளைத் தேடிச் சென்ற புரூரவனும் மக்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்ல, மக்கள் இருவரையும் கும்பன் எனும் ஆயனொருவன் கொண்டு சென்று வளர்க்கிறான். கரைசேர்ந்த புரூரவன் திரிகர்த்தன் எனும் அரசனின் நாடடைகிறான். அவ்வரசனின் மகளாகிய காந்திமதியைச் சூழ்நிலையால் மணந்து, தன் நகரடைந்து நாட்டைப் பெறுகிறான். கும்பனால் வளர்க்கப்பட்ட இரண்டு மக்களும் போர் முறைகளில் வல்லவராகிப் புரூரவனிடம் பணியில் அமர்கின்றனர். விச்சுவகுப்தன் புண்டரீகவல்லியை மரக்கலத்தில் சிறையிருத்த, புயலினால் அம்மரக்கலம் புரூரவனின் ஒற்றர்களிடம் சிக்குகிறது. அம்மரக்கலத்திற்குக் காவல் சென்ற இருவர்களும் உள்ளிலிருப்பது தன் தாய் என அறிந்து புரூரவனிடம் தன் முழுக்கதையையும் கூற, அரசனோ தேவி தன்னுடைய மனைவி என அறிந்து மக்களோடு அரண்மனை புகுகின்றான். இதுவே இந்நூலின் கதை.

காப்பியக்கதைத் திருப்பம்

          * வீரத்திலும், கொடைத்தன்மையிலும் சிறந்த மன்னனான நளன் எண்ணல் அளவை முறை அறியாதவன். அம்முறையை ரிதுபர்னனிடம் அறிந்து மீண்டும் சூதாடி நாட்டைப் பெறுகிறான். அதுபோல நாட்டை இழந்த பாண்டவர்கள் கண்ணனின் உதவியால் நாட்டை அடைகின்றனர்.

         *  மனுநீதி தவறாத சிறந்த மன்னனான அரிச்சந்திரன், உண்மையின் வடிவாகத் திகழ்ந்தான். அதுபோலவே கண்ணபிரான் துரியோதனனிடம் கூறியது போல ஆயுதமின்றி உபதேசத்தின் மூலம் அர்ச்சுனனைப் போர் செய்யத் தூண்டி  இழந்த நாட்டை மீட்கச் செய்கிறான்.

          * அறத்தையே பெரிதும் போற்றி, பொருளையும் இன்பத்தையும் போற்றாது ஒழுகுபவன் புரூரவன். தன்னை சனி தொடர்கிறது என்பதை அறிந்த புரூரவன், ”முதுமையில் வாராது இளமையிலேயே வந்து எனைப் பற்றுக” எனக்கூறி தன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளால் வேதனையுறாது இறுதியில் நாட்டை அடைகிறான். இந்நூலும் பாண்டவர்கள் அடைந்த துன்பத்துக்கும், வெற்றிக்கும் எடுத்துக்காட்டாகிறது. இம்மூன்று காப்பியங்களும் மகாபாரதக் கதை செம்மையாக நகர்வதற்கு  உதவிபுரிகின்றன.

மூன்று காப்பியங்களிலும் ஒத்துக் காணப்படும் சில பண்புகள்

 • நைடதமும், அரிச்சந்திரன் சரிதமும் மகாபாரத வனபர்வத்திலும், புரூரவன் சரிதை ஆதிபர்வத்திலும் இடம்பெறும் கிளைக்கதைகளாகும்.
 • இவை மூன்றும் 16ஆம் நூற்றாண்டில் உருவான காப்பியங்கள்.
 • மூன்று நூலும் விருத்தப்பா அமைப்பில் பாடப்பட்டவை.
 • மூன்று நூல்களுமே நளன், அரிச்சந்திரன், புரூரவன் ஆகிய அரசர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டவை.
 • நைடதமும், புரூரவ சரிதையும் படல அமைப்புடனும், அரிச்சந்திர சரிதம் காண்ட அமைப்புடனும் காணப்படுகின்றன.
 • நளனுக்குக் கலி மூலம் துன்பமாகவும், அரிச்சந்திரனுக்குத் தானே தேடிய துன்பமாகவும், புரூரவனுக்குச் சனியாகவும் என மூவர் வாழ்விலும் துன்பம் ஏற்படுகிறது.
 • மூன்று அரசர்களும் நாட்டை இழந்து, காட்டை அடைகின்றனர்.
 • நளன் ரிதுபர்னனிடம் தேர்ப்பாகனாகவும், அரிச்சந்திரன் வீரவாகுவிடம் பிணம் சுடும் அடிமையாகவும், புரூரவன் விச்சுவகுப்தன் எனும் வணிகனிடம் விறகு வெட்டிப் பிழைப்பவனாகவும் அடிமை வேலை செய்கின்றனர்.
 • மூன்று அரசர்களும் மனைவியைப் பிரிகின்றனர். நளன் தமயந்தியையும், அரிச்சந்திரன் சந்திரமதியையும், புரூரவன் புண்டரீகவல்லியையும் பிரிகின்றனர்.
 • மூவரசர்களும் தங்கள் பிள்ளைகளைப் பிரிந்து வாழ்கின்றனர். நளனின் பிள்ளைகள் தன் பாட்டனான வீமன் வீட்டில் வளர்கின்றனர். அரிச்சந்திரன் மகன் லோகதாசன் பாம்பு கடித்து இறக்கிறான். புரூரவனின் மகன்களை ஆற்று வெள்ளம் அடித்துச் செல்ல, கும்பன் எனும் ஆயன் வளர்க்கிறான்.
 • நளன் தமயந்தியையும், அரிச்சந்திரன் சந்திரமதியையும் மணக்க, புரூரவனோ முதலில் கங்கை நாட்டரசன் மகளான புண்டரீகவல்லியையும், திரிகர்த்தன் எனும் அரசனுடைய மகளாகிய காந்திமதியையும் மணக்கிறான். இவற்றுள் புரூரவ சரிதை வேறுபடுகிறது.

படைப்பாளர்கள் தங்கள் காப்பியங்களில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு ஒரு தொடர்ச்சியைத் தருவதற்கும், படைப்பு நோக்கத்தை வெளிப்படுத்துவதற்கும் ஓர் உத்தியாகவே கிளைக்கதைகளைப் படைக்கின்றனர். அவை மையக்கதைக்கு உறவு உடையதாகவே அமையும். அந்த வகையில் இம்மூன்று காப்பியங்களும் மகாபாரதக் கதைநகர்விற்கு அடித்தளமாக அமைகின்றன.

துணை நூற்கள்

 1. 16- ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு – மு.அருணாசலம்
 2. நைடதம் – ஏ.எஸ்.வழித்துணை ராமன்
 3. மகாபாரதம் – கிருபானந்தவாரி
 4. வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு- இ.பாக்யமேரி

இல.இராஜதுரை

முனைவர்பட்ட ஆய்வாளர்,

சுவடியியல் துறை

கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்

+91 8281471857, 09656903757, rajadurai0709@gmail.com