மணிமேகலைக் காப்பியத்தைத் தொடக்கம்முதல் படிக்கும்போது வடசொற் கலப்பும் புத்தமதக் குறியீடுகளும் மிகுந்திருப்பதை எளிதில் காணலாம். தமிழில் பல்சமயக் கோட்பாடுகளை வாpசையாக எடுத்துக்காட்டும் முதல்நூல் மணிமேகலையே.        மணிமேகலையானவள் பிற மதங்களின் மெய்ப்பொருள்களைக் கேட்டறிந்து அவற்றைப் படிற்றுரைகள் என ஒதுக்கிப் பின் புத்தமதத்தைத் தெளிந்து தழுவினள் என்பதே கதைப்போக்காக அமைகின்றது. சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை என்ற மூன்றும் பிறமொழிச் சொற்கள் நிரம்பிய காதைகளாக உள்ளன. பிறகாதைகளிலும் அயன்மொழிச் சொற்கள் கலந்து கிடக்கின்றன. சாத்தனார் வடமொழி அளவை நூற்குறியீடுகளை மிகுதியும் எடுத்துக்காட்டியுள்ளார்.

பக்கப் போலி யொன்பது வகைப்படும்

                   பிரத்தி யக்க விருத்தம் அனுமான

                   விருத்தம் சுவசன விருத்தம் உலோக

                   விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர

                   சித்த விசேடனம் அப்பிர சித்த

                   விசேடியம் அப்பிர சித்த வுபயம்

                   அப்பிரசித்த சம்பந்தம்                  (மணி.29:147-53)

இக்குறியீடுகளும், இவை போன்ற மற்ற வடசொற்கள் இருந்தாலும் வடவெழுத்து காப்பியம் முழுவதும் பரவியுள்ளது.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

                   எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே  (தொல்.சொல்.401)

எந்த வடவெழுத்து எந்தத் தமிழ் எழுத்தாக மாற வேண்டும் என்று தொல்காப்பியம் விதந்து கூறவில்லை.  சாத்தனார் தம் மொழிநுட்பத்தால் அயலொலிகளை முறையோடு தமிழ்ப்படுத்திக் காட்டியுள்ளார்.

வடசொற்களும் தொடர்களும்

மணிமேகலையில் வடசொற்களும் தொடர்களும் மிக அதிகமாக இடம்பெற்றுள்ளன.

எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்திலிருந்து எடுபடுமாம் இலக்கணம் என்பது பாட்டியல் நூல் கூறும் இலக்கிய மரபுக்கான வரையறையாகும்.  அவ்வகையில் மணிமேகலைக் காப்பியம் பிற்கால இலக்கண நூல்கள் சிலவற்றுக்கு விதியமைக்க வழிகாட்டியாய்த் திகழ்ந்துள்ளது எனலாம். இதனை,

தேசநாமசாதி, சாமானியம், திட்டாந்தம், அநன்னுவயம், கௌடிலச் சாமம், விசேடியம், பிரத்தியக்கம், விசேடனம், உபயதன்ன விகலம், தன்மாத்திகாயம், பிக்குணி, சேதியம் இவ்வாறு வருவன பலவுளவீரசோழியா், நேமிநாதா், நன்னூலார் இன்ன வடவெழுத்து இன்ன தமிழ் எழுத்தாகும் என்று விரிவான ஒலிமாற்று விதிகள் கூறுவதற்கு வழிகாட்டியது மணிமேகலைக் காப்பியமே (1975:31)

என்கிறார் வ.சுப.மாணிக்கம். மேலும்,

பௌத்தர் கூறும் சத்தியத்தை வாய்மை எனவும், துவாதச நிகானங்களைப் பன்னிரு சார்புகள் எனவும், தருமத்தை அருளரம் எனவும், புத்த தன்ம சங்கத்தை முத்திர மணி எனவும் தரும சக்கரத்தை அரக்கதிராழி எனவும் புத்தனைப் புலவன் எனவும் சயித்தியத்தைப் புலவோன் பள்ளி எனவும் ஏதுப்பிரபவ தர்மம் என்பதனை ஏது நிகழ்ச்சி எனவும் நிருவாணத்தைப் பெரும் பேறு எனவும் தமிழ் செய்துள்ளார். (1975:41)

என்கிறார் வ.சுப. மாணிக்கம்.

துன்பம் தோற்றம் பற்றே காரணம்

                   இன்பம் வீடே பற்றிலி காரணம்

                   ஒன்றிய உரையே வாய்மை நான்காவது (மணி.30:186-88)

என நால்வகை வாய்மைகளையும், பன்னிரு சார்புகளையும் தமிழாக்கித் தருவா் சாத்தனார்.

சிலப்பதிகாரத்துக்குத் தலைவியான கண்ணகியை இளங்கோவடிகள் கற்புமேம்பாட்டிற்கேற்ப அமைத்துள்ளார். அதேபோல் மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலையைத் துறவறத்தலைவியாக அமைத்துள்ளார். பல சமயக் கருத்துக்களைக் கற்றுப்பின் புத்தமதஞ் சார்ந்து, பௌத்தத்தின் முதன்மையைப் பரப்ப விழைந்தார்.

 

மொழி முதல் யகர மெய்க்கேடு

அரசிளங் குமரன் ஆருமில் ஒருசிறை    (மணி.6:17)

ஆருமி லாட்டியென் அறியாப் பாலகன்          (மணி.6:46)

இங்ஙனம் யார் என்பது ஆர் என மருவிய இடங்கள் சில உள.  யா முதலான சில சொற்கள் நெடுங்காலத்துக்கு முன்பே ஆவாகத் திரிந்தன.  இத்திரிபினைச் சிலம்பிலும் காணலாம்.

தீத்தொழி லாட்டியென் சிறுவன் தன்னை

யாருமில் தமியேன் என்பது நோக்காது          (மணி.6:133-34)

இவ்விடத்து ‘யார்’ திரியாது நின்றது என்றும் கொள்ளலாம், யகரத்தை உடம்படு மெய்யாக்கின் திரிந்தது எனவும் கொள்ள இடனுண்டு.

சகர முதற்சொற்கள்

தொல்காப்பியத்துக்குப் பின் அவைய இலக்கியத்தில் சகர முதற்சொற்கள் வருகை விரல்விட்டு எண்ணத்தக்கனவே! அவற்றுள் பல பழஞ்சொற்களின் திரிபு எனலாம்.

மணிமேகலையில் சகர மொழிமுதற் கிளவிகளை இடுபெயர்ச் சொற்கள், பிற சொற்கள் என இருவகைப்படுத்தலாம்.

இடுபெயர்ச் சொற்கள்

1.சம்பாவதி

2.சம்பாதி

3.சனமித்திரன்

4.சங்க தருமர்

5.சங்கமன்

பிறசொற்கள்

1.சடை

2.சம்பு

3.சமம்

4.சலாகை

5.சந்தி

 சகர ஐகாரம் மொழிக்கு முதலாதல்

தொல்காப்பியம் மொழிமுதலில் வாராது என்று மொழிந்த சகர ஐகாரச்சொல் அவையப் பாடல்களிலும் இல்லை. சிலப்பதிகாரத்திலும் இல்லை. ஆனால் மணிமேகலையில் காணப்படுகின்றது.

அக்க பாதன் கணாதன் சைமினி             (மணி.27:82)

நின்ற சைவ வாதிநேர் படுதலும்   (மணி.27:87)

என்று இறுதிக்காதைகளில் வரும் மூன்று சமயச் சொற்களைத் தவிர இயல்புச் சொற்களாக வேறிடங்களில் இல்லை.  இவையும் பெயர்நிலைக் கிளவிகளே.

கள் என்ற இடைச்சொல்

இடைக்கால முதல் பெயரிலும் வினையிலும் மிகப் பயின்று வரும் ‘கள்’ ஈறு மணிமேகலையில்,

காண்குவம் யாங்களும் காட்டுவாய்                (மணி.6 -64)

நினக்கென வரைந்த ஆண்டுகள் எல்லாம்      (மணி.22 – 17)

எனச் சில இடங்களில் அமைகின்றன. கள்ளீறு வருவதற்கு இடனின்றிச் சிலவிடங்களில் பெயர்ச்சொற்களை அமைக்குஞ் சாதுர்யத்தைச் சாத்தனாரிடம் காணலாம்.

சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்

          தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர்

          இரவும் பகலும் இனிவுடன் திரியாது

வருவோர் பெயா்வோர் மாறாச் சும்மையும்   (மணி.6:66-69)

என இவ்வாறும், அளிப்போர், பகர்வோர், களைவோர், வாழ்வோர், கொடுத்தோர் எனப் பிற இடங்களிலும் ஆகாரத்தை ஓகாரமாக்கித் தெளிவுப் பெயர்ச்சொற்களைப் பரக்க ஆளுவார் சாத்தனார்.

ஆநின்றுகின்றுகிறு

கல்லதா் அத்தம் கடவா நின்றுழி (மணி.13:39)

இப்பதிப் புகுந்தீங்கு யானுறை கின்றேன் (மணி.17:68)

சாதிக்கிற நிறவயவயமா யுள்ள (மணி.29:299)

என்ற மூன்று நிகழ்கால இடைநிலைகளும் ஓரளவு எச்சமாகவும் முற்றாகவும் வந்துள்ளன.

ஈறுபெற்ற எதிர்மறைப் பெயரெச்சம்

வந்த, சென்ற என உடன்பாட்டுப் பெயரெச்சங்கள் அகரவீறாக இருப்பதை நோக்கிப் பிற்காலத்தார் வாராத, செல்லாத என எதிர்மறைப் பெயரெச்சங்களையும் ஒன்று போல் ஆக்கினா். வாரா, செல்லா, நினையா, சொல்லா என்பனவே சங்க வழக்கு.  இவ்வழக்கே மணிமேகலையில் புனையா ஓவியம், கோடாச் செங்கோல், முனியாப் பொறாதவன் என அமைய,

உயிரில்லாத உணர்வில் பூதமும்           (மணி.27-270)

என ஓரிடத்து அருகியே புதுக்கூறு தோன்றுகின்றது. சிலம்பிலோ உண்ணாத, கேளாத, காணாத, ஏத்தாத, கணையாத, வளையாத என்று இக்கூறு சில இடங்களில் அமைந்துள்ளது.

தன்மை எதிர்காலம்

படா்கேம், செய்கேம், உரைக்கேன், செய்கேன் என்றாங்குத் தன்மைப் பன்மை, தன்மையொருமை எதிர்கால முற்றுக்கள் காணப்படுகின்றன. படா்வேம், செய்வேம், உரைப்பேன், செய்வேன் என்ற அமைப்புக்கு இவை மாறானவை. இவற்றில் ககரவொற்று எதிர்காலம் காட்டிற்று எனலாம்.  தமிழ் இலக்கண நூலார் அவ்வாறு கருதுவதில்லை.

செய்யும் என்னும் முன்னிலைப் பன்மை

பல்லோர் படா்க்கை முன்னிலை தன்மை

          அவ்வயின் முன்னும் நிகழுங் காலத்துச்

          செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா    (தொல்.சொல்.172)

எனத் தொல்காப்பியம் செய்யும் என்னும் முற்று முன்னிலை ஒருமைக்கும் பன்மைக்கும் வராது என்கிறது. மணிமேலையில்,

அங்குநீர் போமென்று அருந்தெய்வம் உரைப்ப        (மணி. 6:26)

மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழும்          (மணி.10:143)

என்று முன்னிலைப்பன்மை செய்யும் என்னும் முற்றுக் கொள்ளுதலையும் ஏவல் உம் ஈறு பெறுதலையும் காணலாம்.

பல்லோர் படா்க்கை முன்னிலை தன்மையிற்

          செல்லா தாகும் செய்யுமென் முற்றே   (நன்.சொல்.348)

என்று பவணந்தியார் தொல்காப்பியரைப் பின்பற்றியே நூற்பா எழுதியுள்ளார்.  ஆனால் ஏவற்பன்மையில் உம் ஈறு வருமென எழுதவில்லை.

எச்சநடை அல்லது ஐயநடை முற்று

ஓடலும் ஓடும் ஒருசிறை யொதுங்கி

           நீடலும் நீடும்                (மணி.3:112-13)

இது செய்யும் என்னும் முற்றின் ஒருவகை எனலாம். இம்முற்று முதலில் கூறியபடி உயர்திணை ஆண்பால், உயர்திணைப் பெண்பால், அஃறிணை ஒன்றன்பால், அஃறிணைப் பலவின் பால் என நான்கு படா்க்கைக்கும் பயனிலையாக வருகின்றது.

புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை (மணி.21:83)

துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவன்      (மணி. 21:145)

எனப் படா்க்கை வாய்ப்பாடு முன்னிலையாகவும் தன்மையாகவும் அமைந்துள்ளது.

இந்த, அந்தபெயரெச்ச வடிவங்கள்

இந்த ஈமப் புறங்காடு       (மணி.6:165)

இந்தக் காரிகை      (மணி.22:155)

இந்த மூதூரகத்தே (மணி.26:63)

இந்த ஞாலத்து        (மணி.27:285)

என ‘இந்த’ என்கிற சுட்டு ஐந்து இடங்களிலும், ‘அந்த’ சுட்டு காலியிடங்களிலும் வருகின்றன. இதனை இது, அது என்ற சுட்டுக்கள் அந்த இந்த எனப் பெயரெச்சவடிவுகள்  எனலாம்.

உன், உம் வேற்றுமையடிகள்

வேற்றுமை ஏற்குங்கால் நீ – நின் எனவும் நாம் நம் எனவும் திhpவதே பண்டை வழக்காகும்.

உன்திரு வருளால் என்பிறப்பு உணர்ந்தேன்           (மணி.10:18)

உவவன மருங்கில் உன்பால் தோன்றிய         (மணி.10:42)

எனப் பல இடங்களில் ‘உன்’ ஆட்சியைக் காணலாம்.    இதைப்போல் ‘நின்’ ஆட்சியும் காணலாம்.

நின்னாங் கொழியாது நின்பிறப் பறுத்திடும்            (மணி.10:41)

இவ்வாறு நின், உன் வருமிடங்களும் உண்டு.

வேற்றுமை முன்னசைகள்

சங்க இலக்கியத்தில் உருபுகள் சாரியை எனப் பெயரொடு நேரே வந்து அமையும் அல்லது இடையே வந்து அமையும்.

ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி (மணி.14:65)

ஆங்கது தன்னையோர் அருங்கடி நகரென (மணி.6:105)

என்பன போல் தன்னின அசைகள் மணிமேகலையில் மண்டிக்கிடக்கின்றன.  இவ்வசைகள் பெயருக்கு அயல்நின்று வேற்றுமையுருபுகளையும், தங்கள் எனப் பன்மையீற்றினையும், தானும் என உம்மிடைச் சொல்லையும் ஏற்கின்றன.

இடு எனும் வினைச்சொல்

மணிமேகலையில் புதுவதாகப் பரந்து காணப்படும் ஓர் இலக்கணப்பாங்கு ‘இடு’ என்ற வினையாட்சியாகும். இது வைத்தல் எறிதல் என்ற பொருளிலும் சில இடங்களில் பொருளின்றித் துணைவினையாகவும் வந்துள்ளது.

புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும்   (மணி.1:24)

இலங்கிதழ் மாலையை இட்டுநீ ராட்ட           (மணி.3:10)

படையிட்டு நடுங்கும் காமன்     (மணி.3:23)

பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்     (மணி.3:25)

இவற்றுள் ஆயிடும், நின்றிடின், ஆயிடின் ஆகிய இடங்களில் இடு என்பது துணைவினையாக அமைந்திருப்பதைக் காணலாம்.

ஆங்கு, ஈங்கு

சாத்தனாரின் மொழிநடையில் கற்போர்க்குச் சலிப்பூட்டும் அளவுக்குப் பயின்று வந்துள்ளவை ஆங்கு, ஈங்கு என்ற இருசொற்களாகும். இவை சுட்டிடைப்பெயராக வந்ததைக்காட்டிலும் அசையாகவும், யாப்பை நிரப்பவும் வந்ததே அதிக இடங்களாகும்.

ஆங்கவள் ஆங்கவன் கூறிய துரைத்தலும்      (மணி.6:16)

ஈங்கிவன் தன்னையும் ஈமத் தேற்றி     (மணி.22:23)

இவ்வாறே ஆங்ஙனம், ஈங்ஙனம், அங்கு, இங்கு போன்ற சொற்களும் மிகுதியும் பயின்று வருகின்றன.

அல்லது என்னும் வினையெச்சம்

அல்லது என்ற சொல் குறிப்புவினைப் பெயராகப் பண்டு வருதலும் உண்டு.  மேலும் தொல்காப்பியத்தில், “அல்லது கிளப்பினும்” (மணி.322), “அல்லதன் மருங்கு” (மணி, 326) என்றும், புறநானூற்றில் “அல்லது செய்தல்” (மணி.195) என்றும் காணலாம்.

மணிமேகலையிலோ ‘அன்றி’ என்ற குறிப்பு வினையெச்சப் பொருளில் இது பயின்று வருகின்றது.

ஆன்றவ ரல்லது பலா்தொகுபு உரைக்கும்      (மணி.2:34)

அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்            (மணி.2:55)

சொல்லாக்கங்கள்

புலவன் இலக்கியப் படைப்பால் மொழிச்செல்வத்தைப் பெருக்குவது போல், சொற்படைப்பாலும் பெருக்க வேண்டும். பெரும்புலவன் இருவகைப் படைப்புக்கும் உரியவன்.  மணிமேலையில் பெண்பாத்திரங்கள் அதிகம் இருப்பதாலும், தலைமைப் பாத்திரம் பெண்பாலாக இருப்பதாலும் பெண்பாற் சொற்களை அதிகம் படைத்துள்ளார் சாத்தனார்.

எடுத்துக்காட்டாக வஞ்சக்கிளவி, காய்பசியாட்டி, மன்னுயிர் முதல்வி போன்ற பெண்பாற் சொற்களும், திருவன், தவன் என்ற ஆண்பாற் சொற்களும், உலகா், தவா் என்னும் பலா்பால் சொற்களும், வலம்புரிச்சங்கம், புலம்புரிச்சங்கம் போன்ற இரட்டுற மொழிகளும் சாத்தனாரால் அமைக்கப்பட்டுள்ளன.

சங்க மொழி நடை

மணிமேகலையில் சமயம் பற்றிய அயற்சொற்கள் அதிகம் காணப்படுகின்றன.  ஆதலால் சங்கநடை தழுவாத காப்பியம் என்றும் சொல்ல முடியாது.  இயற்கைகளைப் பாடும் போது அதன் நடை தெளிவுபடும்.

செந்தளிர்ச் சேவடி நிலம்வடு வுறாமல்

          குரவமும் மரவமும் குருந்து கொன்றையும்

          திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்

          நரந்தலா் நாகமும் பரந்தலா் புன்னையும்       (மணி.3:149-52)

நிறைவாக

மணிமேலையில் காணப்படும் மொழிக்கூறுகளில் பெரும்பான்மை சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன. மேலும் இவ்விரு காப்பியங்களின் ஒற்றுமைகள் வாயிலாக இவை இரண்டும் ஒரே காலத்தவை என்பதை உணரலாம். திருக்குறளிலும் இதுபோன்ற தன்மைகள் காணப்படுவதையும் அறியலாம். இத்தகைய மொழிக்கூறுகளை இன்றைய இலக்கியங்களிலும் பயன்படுத்துவது பழைய இலக்கியங்களை நினைவு கூரவும் அதனைப் பின்பற்றவும் ஒரு வாய்ப்பாக அமையும் எனலாம்.

துணைநூற்பட்டியல்

  1. சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு – கா.அய்யப்பன் (பதி.),டிசம்பர் 2009, மாற்று வெளியீடு, சென்னை.
  2. சிந்தனைக்களங்கள் – வ.சுப.மாணிக்கம், முதற்பதிப்பு 1975, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.
  3. மணிமேகலை காலம் – மு.கோவிந்தசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.
  4. மணிமேகலை மொழியியல் – வ.சுப.மாணிக்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.
  5. மணிமேகலை – ந.மு.வேங்கடசாமி நாட்டார் (உ.ஆ.), தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 18.

இரா.யசோதா

தமிழ் – முனைவர் பட்ட ஆய்வாளர்

பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி)

திருச்சிராப்பள்ளி – 620 017.