இன்றைய நிலையில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாகச் சமூகமும், சமூகம் சார்ந்த நிறுவனங்களும் துரிதகதியில் இயங்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இவ்வாறான மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாடசாலைகளும் பல்வேறு மாற்றங்களை உள்வாங்கி வினைத்திறனாகச் செயற்பட்டு, மாறிவரும் சமூதாயத்திற்குப் பொருத்தமான மாணவர்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, இவ்வாறான மாற்றங்களைச் செயற்படுத்தும் வகையில் பாடசாலைகள் ஆரம்ப பிரிவிலிருந்தே அவற்றுக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும். அப்போதுதான் அம்மாணவர்களின் எதிர்காலக் கல்வி சிறப்பாக அமைவதோடு சமூகம் எதிர்பார்க்கின்ற மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நம்பிக்கை நிதியமானது சிறார்களின் கல்வி தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி செயற்பட்டு வருகின்றது. அந்தவகையில் கற்கும் நடைமுறையில் பிள்ளைகள் முழுமையாக பங்குபெற வேண்டியது அவசியம் என்பது வலியுறுத்தப்படுகின்றது. அத்துடன் மாணவர்கள் பாடசாலையில் கௌரவமாக நடத்தப்படல் வேண்டும், வாழ்நாள் முழுவதும் கைகொடுத்து உதவக்கூடிய வகையில் தம் அனுபவத்தினூடாக சுயமதிப்பு, சுய கட்டுப்பாடு, கல்வி பயில்வதில் ஆனந்தம் ஆகியவற்றை அவர்கள் வளர்த்துக்கொள்ள இடமளிக்க வேண்டும் இவைபோன்ற பல்வேறு உயரிய எதிர்பார்ப்புக்களைக் கொண்டுள்ளது. இவ்வாறான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது சிந்திக்கப்பட வேண்டியதாக உள்ளது.  அந்தவகையில் அனைத்து மாணவர்களும் ஆரம்ப நிலைக்கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு சகல கல்வி சார்ந்த நிறுவனங்களும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இருப்பினும் வகுப்பறை, பாடசாலை, குடும்பம், சமூகம் போன்றவற்றில் காணப்படும் சில குறைபாடுகள் மாணவர்கள் முழுமையாக ஆரம்பக் கல்வியைப் பெற தடையாக அமைகின்றன. எனவே அவ்வாறான காரணிகளை கண்டறிந்து அவற்றில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களின் வகுப்பறை முகாமைத்துவ செயற்பாடுகளுக்குத் தடையாக அமைகின்ற காரணிகளின் தாக்கங்களை இயன்றவரை குறைத்துப் பெரும்பாலான மாணவர்களுக்கு முறையான வகையில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அவற்றுக்கான சில தீர்வுகளைக் கண்டறிவதாக இவ்ஆய்வு அமைகிறது.

 • திறவுச்சொற்கள் : ஆரம்பப் பிரிவு மாணவர்கள், கல்வி வளர்ச்சி, வகுப்பறை முகாமைத்துவம்
 • ஆய்வின் நோக்கம் – பொது நோக்கம்

ஆரம்பப் பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்கள் வகுப்பறை முகாமைத்துச் செயற்பாடுகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கு தடையாக அமைகின்ற காரணிகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வு, ஆலோசனைகளை முன்வைப்பதனூடாக மாணவர்களது கல்வி வளர்ச்சியில் ஏற்படுத்தும் எதிர்மாறான தாக்கங்களை குறைத்து அனைத்து மாணவர்களும் இயன்றவரை ஆரம்பப்பிரிவு கல்வியைத் தடையில்லாமல் பெற்றுக் கொள்வதற்கு வழிகாட்டுதல்.

சிறப்பு நோக்கம்

அ. ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்விக்கான முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளல்.

ஆ. ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களின் வகுப்பறை முகாமைத்துவ செயற்பாடுகளை அறிந்து கொள்ளல்.

இ. ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களின் வகுப்பறை முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு தடையாக அமையும்  காரணிகளை இனங்காணல்.

ஈ. வகுப்பறை முகாமைத்துவ குறைபாடுகள் மாணவர்களது கல்வி வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்களை அறிந்து அவற்றுக்கான தீர்வு ஆலோசனைகளை பற்றி ஆராய்தல்.

ஆய்வுப் பிரச்சனை

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்குச் சிறந்த வளமான கல்வியைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும். அந்தவகையில் முன்பள்ளிக்குச் சென்று கற்பதற்கான ஆயத்தநிலையினையும், மகிழ்ச்சிகரமான உணர்வினையும் பெற்றுக் கொண்ட பிள்ளைகள் அடுத்து காலடி எடுத்து வைப்பது ஆரம்பப் பிரிவிலே ஆகும். எனவே இதுவரை பெற்றுக் கொண்ட கல்விக்கான ஆயத்தநிலையுடன் அடிப்படைக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய எதிர்பார்ப்புக்களுடன் பாடசாலையில் காலடி எடுத்து வைக்கின்றனர். அவ்வாறான மாணவர்களுக்கு சிறந்த அடிப்படைக் கல்வியை வழங்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் இம்மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியறிவை வழங்குவதில் சில தடைகள் காணப்படுகின்றன. அதாவது ஆரம்பப் பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது வகுப்பறை முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றது. அதாவது நான் ஆய்வுக்காக தெரிவு செய்த பிரதேசத்தின் சமூக, பொருளாதார நிலமை பின்தங்கியதாகக் காணப்படுகிறது. அத்துடன் இங்கு கல்வி வளர்ச்சியும் பின்தங்கியதாகவே காணப்படுகிறது. இதனால் கல்விக்கான முக்கியத்துவம் இங்கு குறைவாக உள்ளது. இருப்பினும் அச்சமூகத்தை முன்னேற்ற வேண்டுமாயின் கல்வி நிலை உயர்வடைய வேண்டும். கல்வி நிலை உயர வேண்டுமாயின் பிள்ளைகளுக்கு சிறந்த ஆரம்பக் கல்வி வழங்கப்படவேண்டும். இப் பிரதேசத்தில் ஆரம்பப் பிரிவு கல்வியை மாணவர்களுக்கு சிறந்த முறையில் அளிப்பதில் ஆசிரியர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது கிராமப்புற பாடசாலையாக இருப்பதால் வளப்பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாதுள்ளது. மேலும் பெற்றோரின் ஒத்துழைப்புக் குறைவு, பெற்றோரின் தொழில், வறுமை காரணமாகவும் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டாத நிலமை காணப்படுகிறது. மேலும் தொழில் நிமித்தம் பெற்றோர் அதிலும் குறிப்பாக தாய் வெளிநாடு செல்வதனால் பிள்ளைகள் உறவினர் வீட்டில் தங்கியிருக்கின்ற நிலமை காணப்படுகிறது. இவ்வாறாக குடும்ப ரீதியில் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு இவர்கள் முகம் கொடுப்பதனால் ஆரம்ப நிலைக் கல்வியை இவர்களால் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. எனவே இவ்வாறான மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதில் முகாமைத்துவ ரீதியாக சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மேலும் மாணவர்களின் ஒழுங்கான வரவின்மை காரணமாகவும் திட்டமிட்ட வகையில் கற்றல், கற்பித்தலை முன்னெடுக்க முடியாதுள்ளது. மேலும் பாடசாலை அமைந்துள்ள சமூகத்திற்கேற்ப பாடசாலையும் ஆசிரியரும் இசைவாக்கமடைவதால் இவ் ஆசிரியர்களும் ஒழுங்கான முறையில் மாணவர்களின் அப்பியாசக் கொப்பிகளை திருத்திக் கொடுக்காமை, சரியான முறையில் பின்னூட்டல்களை வழங்காமை, மாணவரைக் கவரக் கூடிய வகையில் திட்டமிட்ட வகையில் சிறந்த கற்றல், கற்பித்தலை முன்னெடுக்காமை. அத்துடன் ஆசிரியர்களுக்கான பயிற்சி, உளவியலறிவு என்பன குறைவாக காணப்படுகின்றமை, ஆசிரியர்கள் தூர இடத்தில் இருந்து வருகை தருதல், அத்துடன் ஆசிரியர்கள் மாணவருடனான தொடர்பாடல் சிறந்த முறையில் அமையாமை போன்ற ஆசிரியர்கள் சார்பான பிரச்சனைகள்; காரணமாகவும் மாணவர்களுக்கு சிறந்த ஆரம்ப நிலைக் கல்வியைப் பெற்றுக் கொடுப்பதில் பிரச்சனைகள் காணப்படுகிறது.

எனவே மாணவர்கள் தமது எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் ஆரம்பப் பிரிவிலேயே கற்றுக் கொள்கின்றனர். அதாவது அடிப்படை எண்அறிவு, எழுத்தறிவு, வாசிப்பறிவு, பழக்கவழக்கங்கள், ஒழுக்கம் போன்ற பல்வேறு விடயங்களையும் இங்கேயே கற்றுக் கொள்கின்றனர். எனவே இவ்வாறான அடிப்படை அறிவை முழுமையாக மாணவர்கள் பெற வேண்டியது அவசியமாகும். இல்லையெனின் அம்மாணவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். எனவே இவர்களுக்கு சிறந்த கல்வியறிவைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது ஆசிரியரதும், பெற்றோரதும் கடமையாகும்.

இலக்கியமீளாய்வு

ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள்

ஒரு பிள்ளை பிறந்து பெற்றோரினதும் உற்றார் உறவினரதும் அரவணைப்பிலும் அன்புத் தொடர்பிலும் சுதந்திரமாக வளர்ந்து சுமார் ஐந்து வருடங்கள் கழித்து தனக்கு முற்றிலும் பழக்கப்படாத புதிய சூழலைக் கொண்ட பள்ளிக் கூடத்தினுள் பிரவேசிக்கின்றது. இவ்வாறு பல்வேறு சூழல்களில் வாழ்ந்து பழக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பிள்ளைகள் சுமூகமான திட்டமிடப்பட்ட ஒரு சூழலில் ஒன்றிணைகின்றனர். இவர்கள் பிற்காலத்தில் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கேற்ற வகையில் சமூகமயப்படுத்த வேண்டிய பொறுப்பை ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். தம்மிடம் ஒப்படைக்கப்படும் பச்சைக்களியைப் பயனுள்ள பாத்திரங்களாகப் படைப்பதும் மண்ணாங்கட்டியாகப் பாழாக்கி விடுவதும் படைப்பாளியின் ஆற்றலைப் பொறுத்தது. பிள்ளைகளிடத்திலே மறைந்து கிடக்கின்ற உள்ளார்ந்த ஆற்றல்களை இனங்கண்டு அவற்றை வெளிக்கொணரவும், விருத்தி செய்யவும் வேண்டிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது ஆசிரியரின் தலையாய கடமையாகும். இந்த வகையில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை எதிர்காலத் தலைவர்களாக மாற்றியமைக்கும் பொறுப்பு ஆசிரியருடையதாகும்.

வீட்டுச் சூழலில் இருந்தும், முன்பள்ளியிலிருந்தும் நேராகப் பாடசாலை வருகின்ற பிள்ளைகள் அன்பு, காப்பு, அரவணைப்பு போன்ற தேவைகளை ஆசிரியரிடமிருந்தே எதிர்பார்க்கின்றனர். எனவே இவ்வாறான பண்புகளை உடையவராக ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆரம்ப வகுப்பு மாணவர்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது ஆசிரியர்களேயாவர். எனினும் ஆசிரியரின் நேரடிப் பங்கு நிகழவில்லை என்று எண்ணக் கூடிய வகையில் மிக நுட்பமாக அத்திட்டத்தை அறிமுகம் செய்தல் வேண்டும். (ஜெயமலர், 2003)

ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான தேர்ச்சிகள் எவையென்பது பற்றிய பல்வேறு ஆய்வுகளும் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் இவற்றுள் ஒரு சிலவற்றினை எவையென்பதனை அடையாளம் காணலாம். ஐவன்றீஸ் மற்றும் வோக்கர் (Ivan reece and walker)(1994)  ஆய்வின் பிரகாரம் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்ச்சிகளாகப் பின்வருவன எடுத்துக் காட்டப்பட்டன.

 1. கற்றல் – கற்பித்தலில் வினைத்திறன் மிக்க அணுகுமுறையினை விருத்தி செய்தல் (Establish an effective approach to teaching and learning)
 2. பாடத்திட்டமிடலில் பொருத்தமான கோட்பாட்டுப் பண்புகளைப் பயன்படுத்தல் (Use positive aspects of theory in the design of lesson)
 3. பொருத்தமான குறிப்பிடத்தக்களவிலான கற்பித்தல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல் (Use a range of techniques appropriately)
 4. கற்பித்தலுக்கான வளங்களை ஆக்குதல், பயன்படுத்தல், மதிப்பிடல் (Produse,Use and evaluate learning resources) (அகவிழி 2007)

மேலும் யாழ்ப்பாணப் பாடசாலைகள் சிலவற்றின் ஆரம்பக்கல்வி        ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டபோது பின்வரும் தேர்ச்சிகள் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படுவதாக எடுத்துக்காட்டப் பட்டது. (அனுஷ்யா,2007)

 1. மாணவர்களைக் கையாள்வதற்கான திறன் (The skills of handling children)
 2. மாணவர் தரத்திற்கேற்ப கற்பிக்கும் திறமை (Ability to teach to the level of children)
 3. கற்பித்தல் மட்டுமன்றி மாணவர்களுக்குப் பொருத்தமான வழிகாட்டலைச் செய்தல் (Ability no only teach but to guide them properly)
 4. அண்மைக்கால கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தும் ஆற்றல் (Ability to use the latest methodology)
 5. சூழலுடன் சார்ந்ததான கற்பித்தலை மேற்கொள்ளும் ஆற்றல்;.(Ability to teach according to their environmental factor)
 6. மாணவர்களுக்கான அறிவினைப் பொருத்தமான முறையில் வழங்குவதற்கான ஆற்றல் (Ability to impart knowledge to their children)

முதலில் ஆரம்பக் கல்வி ஆசிரியரிடம் பரந்த தெளிந்த அறிவு இருக்க வேண்டும். பாட அறிவுடன் சுற்றாடல் விளக்கம், உலகப் பொது அறிவையும் பெற்றிருக்க வேண்டும். அதாவது மாணவர் நிலை, கற்றலுக்கு அவர்களைத் தூண்டல், அவர்களின் தேவைகள், அவர்கள் கற்றல் -கற்பித்தல் செயற்பாட்டில் கையாளப்படும் நுட்பங்கள், அவர்களின் கல்வி வளர்ச்சியினை மதிப்பிடுதல் போன்ற தொழில் சார்ந்த அறிவினையும் ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் மாணவர்களைப் புரிந்து கொள்வதற்கும், முறையான வகுப்பறை ஒழுங்கமைப்பிற்கும், சிறந்த வகுப்பறை நிர்வாகத்திற்கும், சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கும் வாய்ப்பாக அமையும். (அலியார்.யூ.எஸ்.1999)

ஆரம்பக்கல்வி ஆசிரியருக்கு இன்றியமையாத மற்றுமொரு பண்பு கவர்ச்சி அல்லது வசீகரத்தன்மை. குழந்தைகளை தன்பால் ஈர்க்கும் வசீகரத்தன்மையானது பிள்ளைகள் வகுப்பறைச் செயற்பாடுகளில் உற்சாகத்துடன் ஈடுபடத் துணை புரியும். நளினமான சுபாவம் கவர்ச்சியான கற்பித்தலுக்கு ஒரு காரணமாக அமையலாம். ஆசிரியரின் அன்பான வார்த்தைகளும், மகிழ்ச்சியூட்டக்கூடிய நடத்தைகளும் பிள்ளைகளைப் பெரிதும் வசீகரிக்கின்றன. உளவியல் ரீதியில் அவை பிள்ளைகளின் கணிப்புத் தேவை, அன்புத் தேவை, காப்புணர்வு என்பனவற்றை நிறைவு செய்வதாக அமைகின்றன. கலைத்திறன், படைப்பாற்றல், அழகுணர்வு போன்ற திறன்களும் ஆசிரியருக்கு இன்றியமையாதன. சில பயனுள்ள பொழுதுபோக்குகளையும் ஆர்வங்களையும் ஆசிரியர் கொண்டிருப்பதோடு அவற்றை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பவர்களாகவும், கற்பனை வளம், படைப்புத்திறன் என்பனவற்றைக் கொண்டவராகவும், விநோதமான நுட்பங்களைத் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். வரைதல், பாடுதல், ஆடுதல், நடித்தல், வாத்தியக் கருவிகளை வாசித்தல், விளையாடுதல், விளையாட்டுப் பொருட்களைச் செய்தல் போன்ற கலைத்திறன்களைப் பெற்றுள்ள ஆரம்பக் கல்வி ஆசிரியரால் பிள்ளைகள் அதிக பயன் பெறுவார்கள். படைப்பாற்றல் பெற்றுள்ள ஆசிரியர்கள் சுற்றாடலில் காணப்படும் வளங்களைக் கொண்டு பல்வேறு கைவினைகளில் ஈடுபடத்தக்களவு திறனைப் பெற்றிருப்பது அவசியமாகும்.

எப்போதும் சுறுசுறுப்பான இயக்கமுள்ளவராகவும் ஆசிரியர் இருத்தல் வேண்டும். எப்போதும் மேசை அருகே வீற்றிருக்கும் ஆசிரியர் மாணவர்களை ஆர்வமூட்டக்கூடியவராக இருக்க மாட்டார். பிள்ளைகள் தனித்தனியாகவோ, குழுக்களாகவோ பாடப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது ஆசிரியர் தாமும் பிள்ளைகளுடன் சேர்ந்து செயற்பாடுகளில் ஒத்துழைப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் பிள்ளைகள் கற்பதற்குத் தேவையான கருவிகளையும், வளங்களையும் தேடிக் கொடுப்பதோடு புதிய அணுகுமுறைகளுடன் பிள்ளைகளை ஆர்வமூட்டக் கூடியவராக இருத்தல் வேண்டும்.

இத்தகைய திறன்களுடன் சில குறிப்பிட்ட மனப்பாங்குகளும் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கு அவசியமானவையாகும். முதற்கண் ஆசிரியத் தொழிலில் விருப்பம் இருக்க வேண்டும். மேலும் தன்னல மறுப்பு, தியாகம் ஆகிய மனப்பாங்குகளையும் கொண்டிருக்க வேண்டும். தன்னலனை விட தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நலனே உயர்வு எனக்கருதி முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், பொறுமை, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, கருணை போன்ற பண்புகளும் ஆரம்பக்கல்வி ஆசிரியருக்கு இன்றியமையாதனவாகும்.

அத்துடன் அமைதி, பொறுமை, நிதானம் ஆகிய பண்புகளும் இன்றியமையாதன. உதாரணமாக கணிதத்தில் தசமதானங்களுக்கு மாறற்றுதல் தொடர்பாக ஒரு மாணவனுக்கு 24 தடவைகள் விளக்க வேண்டியும் ஏற்படலாம். அப்படி நேரிடும் போது முதலாவது தடைவ எவ்வாறு ஆர்வத்துடன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதோ அதுபோன்று பொறுமையுடன் இருபத்து நான்காவது முயற்சியிலும் ஆசிரியர் விளக்குதல் வேண்டும்

இத்தகைய பொறுமை ஆரம்ப நிலை ஆசிரியருக்கு இன்றியமையாததாகும். சடுதியாக ஏற்படும் சிக்கல், விபத்து சங்கடம் ஆகிய நிலமைகளில் பிரச்சினையை அமைதியாகவும் நிதானமாகவும் அணுகுபவராகவும் சமயோசிதமாகவும் விரைவாகவும் இயங்கக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.

மேற்கூறப்பட்ட பண்புகளுடன் நல்லொழுக்கம், முன்மாதிரியான நடத்தை, மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் சுமூகமான தொடர்புகளை வைத்திருத்தல் என்பனவும் இன்றியமையாதவை. ஆசிரியரின் எண்ணம்,சொல்,செயல் என்பன எப்போதும் தூய்மையானதாகவும் ஒழுங்கானதாகவும் அமைந்திருப்பதன் மூலம் முன்மாதிரியான நடத்தை உருவாகும் வகுப்பறையில் ஆசிரியர் மாணவருடன் மகிழச்சியான ஆர்வமான சுமூகமான தொடர்;புகளை வைத்திருப்பது எவ்வாறு கற்பித்தல் செயற்பாடடிற்குத் துணையாக அமைகின்றதோ அதெ போன்று பெற்றோரடனும் சுமூகமான தொடர்புகளை வைத்திருக்க வேண்டும். பெற்றோர் சில வேளை ஆசிரியரிடமிருந்து பல்வேறுபட்ட ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர். அதேபோன்று ஆரம்பக் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகரமாக நடாத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களையும் ஆசிரியர் பெற்றோரிடமிருந்து பெற்றுக் கொள்ள அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன. இத்தகைய திறன்களுடன் சில குறிப்பிட்ட மனப்பாங்குகளும் ஆரம்பப் பிரிவு ஆசிரியருக்கு இருக்க வேண்டும். முதற்கண் ஆசிரியத் தொழிலில் விருப்பு இருத்தல் வேண்டும்.

இது சம்பளத்துக்கும் சமூக அந்தஸ்துக்கும் அப்பால் அமைந்த ஒன்றாகும். வாழ்வதற்காகக் கிடைத்த ஏதோ ஒரு தொழில் என்ற நிலையில் தான் இருந்தாலும் இத் தொழில் பற்றிய நல்ல மனப்பாங்குகளை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். நாட்டின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் உயரிய பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் இலட்சியத்தை ஆசிரியர்கள் தம் மனதில் விதித்துக் கொள்ள வேண்டும். தன் இலட்சியத்திலும் பணிகளிலும் நம்பிக்கை உடையவராகவும் சுதந்திரமாக தீர்மானம் எடுக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

பிள்ளைகளின் அடிப்படைக் கல்வியில் ஏற்படும் அடைவே அடுத்த கட்ட விருத்திக்கு தளமாக அமையும். அந்தவகையில் அடிப்படைத் தளத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு அந்தக் காலப்பகுதியில் தொடர்பு கொள்ளும் ஆசிரியர்களினால் தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் ஆரம்பக் கல்வியின் முக்கியத்துவம் அதனுடன் இடைவினை கொண்டு செயலாற்றும் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத்தியும் கவனத்தில் கொண்டு ஆசிரிய வாண்மைத்துவ நிலையங்கள் செயற்படுவது மிக அவசியமாகின்றது. (இராN; ஜஸ்வரன்.ப 2005)

மாதிரித்தெரிவு

அந்தவகையில் ஆய்வுக்காகத் தெரிவு செய்யப்பட்ட ஏறாவூர் பற்று கல்விப்பிரிவில் உள்ள 13 பாடசாலைகளில் எனது ஆய்வின் பொருட்டு 05 பாடசாலைகளைத் தெரிவு செய்துள்ளேன். இவ் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் பின்தங்கிய கிராமப்புறத்தில் இருப்பதனாலும், தூரஇடங்களில் அமைந்து இருப்பதனாலும் போக்குவரத்துச் சிரமங்கள் காரணமாகவும் வசதி மாதிரி அடிப்படையில் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,

அட்டவணை 3.2 ஆய்வுக்கான மாதிரிப் பாடசாலைகளின் விபரம்

 

இல

 

பாடசாலையின் பெயர்

 

வகை

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை மாதிரித் தெரிவு
01 மட்.கரடியனாறு இந்து வித்தியாலயம் 03 212 21
02 மட்.இலுப்படிச் சேனை அம்பாள் வித்தியாலயம் 02 166 17
03 மட்.காயன்மடு கண்ணகி வித்தியாலயம் 02 122 12
04 மட்.வேப்ப வெட்டுவான் அ.த.க பாடசாலை 03 70 07
05 மட்.கொடுவாமடு சக்தி வித்தியாலயம் 03 48 05

அடுத்து, ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் மொத்தமாக 78 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். அவர்களில் ஆய்வுத் தலைப்பிற்கு பொருத்தமான வகையில் நோக்க மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பப்பிரிவில் கற்பிக்கும் மொத்த ஆசிரியர்கள் 29பேரும், ஐந்து பாடசாலைகளிலுமுள்ள 5 அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனெனில் ஆய்வுத் தலைப்பானது ஆரம்பப் பிரிவினை மட்டும் அடிப்படையாகக் கொண்டுள்ளமையால் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் மட்டுமே இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளனர். எனவே தரம் 1-5 வரை கற்பிக்கின்ற 29 ஆசிரியர்களும், அப்பாடசாலை அதிபர்கள் 05 பேரும் என மொத்தமாக 34 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதிபர், ஆசிரியரின் தொகை குறைவாக உள்ளதால் மாதிரித் தெரிவு இன்றி அனைவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் மொத்தமாக 618 மாணவர்கள் ஆரம்பப் பிரிவில் கல்வி பயில்கின்றனர். அவர்களில் 10:1 என்ற விகிதத்தில் எளிய எழுமாற்று மாதிரி அடிப்படையில் 62 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்கான தரவுகள் பெறப்பட்டுள்ளது. அவை பற்றிய விபரம் பின்வருமாறு. அடுத்து பெற்றோருக்கான மாதிரித் தெரிவானது மாணவர் தொகையின் அடிப்படையில் 10:1 என்ற விகிதத்தில் எளிய எழுமாற்று மாதிரி அடிப்படையில் 62 பெற்றோர்கள் ஆய்வுக்காக தெரிவுசெய்யப்பட்டு ஆய்வுக்கான தரவுகள் பெறப்பட்டுள்ளது. இவ்வாறாக ஆய்வுக்கான மாதிரிகள் ஆய்வு நோக்கத்தை அடையும் பொருட்டு திட்டமிட்ட வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் பாடசாலைத் தெரிவு வசதி மாதிரி அடிப்படையில் 05 பாடசாலைகளும், 05 பாடசாலைகளிலுமுள்ள ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் 29 பேரும்,  05 அதிபர்களும் மாதிரித் தெரிவின்றி மொத்தமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மாணவர் தெரிவு எளிய எழுமாற்று மாதிரி அடிப்படையில் 62 மாணவர்களும், பெற்றோர் தெரிவானது இலகு எழுமாற்று மாதிரி அடிப்படையில் 62 பெற்றோரும் என மொத்தமாக 158 பேர் ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தரவுப்பகுப்பாய்வுகள்

 1. ஆரம்பப்பிரிவு மாணவர்களின் எழுத்து, வாசிப்பு செயற்பாடுகள்

 

 

 1. எழுத்து வாசிப்பு செயற்பாடுகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர்

 

 

பிள்ளைகளுக்கு வீட்டில் எழுத்து, வாசிப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கி பிள்ளைகளின் கற்றலில் அக்கறை செலுத்துவீர்களா? என்பது தொடர்பாக பெற்றோரிடம் பெறப்பட்ட தரவுகளின் படி 34 மூ பெற்றோர்கள் ஆம் எனவும், 57மூ மான பெற்றோர் ஓரளவு எனவும், 09 மூ மான பெற்றோர் இல்லை எனவும் குறிப்பிட்டனர். இதனை பின்வரும் வரைபு காட்டி நிற்கின்றது.

ஆசிரியர்கள் தொடர் கணிப்பீட்டு செயன்முறைகளை பயன்படுத்தல்

 

இவ்வரைபடத்தின்படி  நேர முகாமைத்துவத்தைக் கடைப்பிடிக்கும் ஆசிரியர்கள் என்ற வகையில் தொடர் கணிப்பீட்டு செயன்முறையை பயன்படுத்துவது அவசியமாகும். இதனை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தும் போது மாணவர் கற்கும் நேரத்தினை அளவிட முடியும். ஆனால் தொடர் கணிப்பீட்டுச் செயன்முறையை அமுல்படுத்தும் ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர். ஓரளவு, இல்லை என்பதே அதிகமாகக் காணப்படுகிறது.

தீர்வுகளும் ஆலோசனைகளும்

 • ஆரம்பப் பிரிவு ஆசியர்களின் வாண்மைத்துவ நிறுவன அமைப்பும் செயற்பாடுகளும் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்

ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத்திச் செயற்பரிமாணங்களில் பல்கலைக்கழகம், தேசிய கல்வியியற்கல்லூரி, ஆசிரியர் கலாசாலைகள், தேசிய கல்வி நிறுவகம், ஆசிரியர் வள நிலையம், திறந்த பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி, தொலைக்கல்வி நிறுவனம், அரச சார்பற்ற நிறுவன அமைப்புக்கள் பங்கு கொண்டு வருவதைக் காணமுடிகின்றது.

ஆசிரிய வாண்மைத்துவ மேம்பாட்டில் இந்நிறுவனங்கள் சேவை முன்பயிற்சி, பட்டப்படிப்புக்கு பின்னரான பயிற்சி, தொடர் கல்விச் செயற்பாடுகள், செயலமர்வுகள், விசேட கருத்தரங்குகள், என்ற முறைகளினூடாக வாண்மைத்துவ அணுகுமுறைகள் இடம்பெற்று வருவதைக் காணமுடிகின்றது. ஆரம்பக் கல்வி துறையை பொறுத்தமட்டில் சேவை முன்பயிற்சி என்பது சிறுபிள்ளைகளை வழிப்படுத்தவும் அவர்களுடன் இணைந்து செயற்படுத்த வழிப்படுத்துவதாக அமைதல் முக்கியமானதாகும். அதற்கேற்ப பயிற்சி முறைகள் இவ்வமைப்புக்களூடாக நன்கு திட்டமிடப்பட்டு வழங்கப்படுதல் நன்று.

ஆரம்பக்கல்வியைப் பொறுத்தமட்டில் ஆளனியினரைப் பயிற்றுவித்தல் என்பது முக்கியமான விடயம், க.பொ.த சாதாரண தரம் உயர்தரம் கற்றவர்கள் ஆரம்ப வகுப்பு கற்பிக்கும் நிலை காணப்படுகின்றது. இவர்களுக்கு ஒழுங்கமைந்த முறையிலான பயிற்சி வழங்குதல் இன்றியமையாததாகின்றது. இச் செயற்பாட்டை ஆசிரிய கலாசாலைகள் பொறுப்பேற்று நடாத்தி வருகின்றதை காணமுடிகின்றது.

தேசிய ரீதியில் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத்திச் செயற்பாட்டில் பதினேழு தேசிய கல்வியற் கல்லூரிகள், மூன்று ஆசிரியகல்வி நிறுவனங்கள், நூறு ஆசிரிய மையங்கள் செயற்பட்டு வருவதனைக் காணமுடிகின்றது. அத்துடன் கல்வி அமைச்சு, தறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி நிறுவனம், தேசிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்களைத் தரமுயர்த்தல், விரிவாக்குதல், மீள் பயிற்சி அளித்தல், சேவைக்காலப் பயிற்சி, புத்தூக்கப்பயிற்சி, வதிவிடப்பயிற்சி என்ற அடிப்படையில் செயற்படுத்தி வருவதைக் காணமுடிகின்றது. ஆரம்ப ஆசிரியர்களின் வாண்மைவிருத்திக்காகப் பயிற்சி நிறுவனங்களின் ஆற்றல்களை மேம்படுத்தல் ஆசிரியக்கல்வி நிறுவனங்களின் வசதியை விரிவாக்குதல், ஆசிரியர்கள், கல்வியாளர் தொழில்சார் விருத்தி என்ற அடிப்படையில் மாற்றம் பெற்றுச் செயற்படுத்தல் உணரப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரிய மையங்கள் கல்விசார் ஆராய்சி மையங்களாகச் செயற்படுத்தலும் ஆசிரிய கல்வி நிறுவனமும், ஆசிரிய மையமும் தனது மாணவர்களின் தேவையை இனங்கண்டு அவைக்கேற்ப தமது பாடவிதான விடயங்களை வடிவமைத்து சுயஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டத்தை விருத்தி செய்ய விளைதல் அவசியமாகும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது.

ஆரம்ப ஆசிரிர்களின் தேவையை உணர்ந்து ஆரம்ப ஆசிரிய வள ஆளணியினரை விருத்தி செய்து வாண்மைத்துவ நிறுவனங்களின் பொறுப்பாகும். ஆத்துடன் ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஆசிரிர் தொடர்ச்சியாக நிலைத்து நிற்கக் கூடிய செயற்திட்டங்களை ஒழுங்கமைத்தலும் முக்கியமாகின்றது.

ஆரம்பக் கல்வி ஆசிரியர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குரிய பயிற்சியை நன்கு திட்டமிட்டு வழங்குவதனூடாகவும், ஊக்குவிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், ஆரம்பக் கல்வித்துறையில் கல்வி மாணிப் பட்டப்படிப்பு வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதனூடாகவும், கஷ்டப்பிரதேச ஆரம்ப பாடசாலையில் சேவை செய்வோருக்கு கஷ்டப் பிரதேச ஊக்குவிப்பு வழங்குவதன் மூலமும், ஒப்பந்த அடிப்படையில் ஆரம்ப ஆசிரியர் நியமனங்களை வழங்குவதன் மூலமும் ஆரம்பக் கல்வியில் ஈடுபாடும், விருப்புணர்வும், அர்ப்பணிப்புள்ள மனநிலை தோன்றுவதனூடாகவும், அரசியல் ரீதியானதும், பிரதேச அடிப்படையிலான பாகுபாடு இன்றிய ஆசிரியர் நியமனம் இடம் பெறுதல் ஊடாகவும், ஆரம்பக் கல்வித் துறையில் அபிவிருத்தி என்ற முழுமையான வடிவத்தைக் காண அதிக வாய்ப்பு உண்டாகும்.

 • ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற சூழ்நிலையைத் தோற்றுவித்தல் வேண்டும்

ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறவும், மன நலத்துடன் வாழவும், சமூகத்தில் பொருந்திப் போகவும் மனவெழுச்சி முதிர்ச்சியடைதல் இன்றியமையாதது. மனவெழுச்சி முதிர்ச்சி பெறாமல் ஒரு மாணவர் எவ்வளவு தான் அறிவு, ஆற்றல் என்பனவற்றைப் பெற்றிருப்பினும் அவை பயனற்றதாகும். எனவே அதற்கமைவான கல்விச் சூழ்நிலையை உருவாக்குவதில் மனவெழுச்சியின் பங்கு மிக முக்கியமானதாகும். இதற்கு கற்றல் – கற்பித்தலுக்கேற்ப நல்ல வகுப்பறை சூழ்நிலையைத் தோற்றுவிப்பது ஆசிரியரின் முதற் கடமையாகும்.

இதில் ஆரம்பப் பருவத்தில் மாணவர்கள் வீட்டுச் சூழலிலிருந்து பாடசாலைச் சூழலுக்குள் நுழையும் போது அவர்களது பாடசாலை வாழ்க்கையிலும், அவர்கள் மீது ஆசிரியர் கொண்டுள்ள இடைவினையின் தன்மையிலும் மனவெழுச்சியின் செல்வாக்கு மிகுந்துள்ளது. இதில் விஷேடமாக

 • ஆசிரியர் மாணவர்களுக்கான இடைவினை அன்பு, பரிவு, மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சியுடையதாக இருப்பின் வகுப்பறையில் கற்றல் – கற்பித்தலுக்கேற்ப நல்லதோர் சூழ்நிலை காணப்படும். இவ்வாறான சூழ்நிலையில் வகுப்பறையில் கற்கப்படும் பாடம், செயல்கள் என்பன மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி, கற்றலில் மிகுந்த ஆர்வத்துடன் அவர்களைக் கற்க தூண்டும். மாறாக,
 • ஆசிரியர் மாணவர்களுக்கான இடைவினை அச்சம், சினம் போன்றவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பின் அது வகுப்புச் சூழ்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி பல நடத்தைப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
 • ஆரம்பப்பிரிவு மாணவர்களது கற்றல் கற்பித்தல் முறைகளை மாற்றயமைத்தல்

கற்பித்தலில் ஆசிரியர்கள் வெறும் சொற்களை அதிகம் பயன்படுத்திக் கற்பது அனேக சந்தர்ப்பங்கள் பயனற்றுப்போகும்;. பல்வகைக் காட்சிப் பொருட்களைப் பயன்படுத்திக் கற்பித்தல் வண்ணப்படங்கள், கருத்துப்படங்கள், மாதிரி உருக்கள், உண்மைப் பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கற்பித்தல் பிள்ளைகளுக்கு கூடிய பயனை அளிப்பதுடன், மிகப் பொருத்தமான புலக்காட்சி அனுபவங்களையும் வழங்கும். “காட்சிப் பொருட்களில் இருந்து கருத்துக்குச் செல்லல்” என்பது குழந்தைகளின் கற்பித்தலில் மிக முக்கியமானதாகும். அத்துடன் “சொற்களுக்கு முன் பொருள்” என்ற பெஸ்டொலொஜியின் கருத்தும் குறிப்பிடத்தக்கதாகும். இவற்றை ஆசிரியர்கள் கவனத்திலெடுத்து கற்பிப்பதற்கும் பிள்ளைகளின் கற்றலில் ஆர்வத்தைத் தூண்டச் செய்து அவர்களின் கற்றலை அதிகரிக்கச் செய்யலாம்.

இறுக்கமான, கண்டிப்புக்கூடிய வகுப்பறையைவிட மகிழ்ச்சி;யும் காப்புணர்ச்சியும் நிரம்பிய வகுப்பறைச் சூழ்நிலையே பிள்ளைகள் விரும்புவது இயல்பு. ஆசிரியர் மாணவரிடம் அன்பும், பரிவும் காட்டி செயற்படின் இச்சூழ்நிலை இலகுவாகவே ஏற்படும். வகுப்பறைச் சூழ்நிலை பிள்ளைகளுக்கு மனநிறைவைத் தருவதாக அமையும் போது கற்றல் இயல்பாகவே இடம்பெறும். இதனைக் கல்வியாளரான புரோபல் என்பவரின் கல்விச் சிந்தனையில் நாம் காணலாம். ஆகவே மாணவர்களது கற்றலை விரைவு படுத்த முனையும் ஆசிரியர், இவ்வாறான வகுப்பறைச் சூழ்நிலையைத் தோற்றுவிப்பது கூடிய பயனை அளிக்கும்.

கற்பிக்கும் போது ஆசிரியர் புதிய ஆசிரியர் புதிய கருத்துக்கள், அனுபவங்கள் என்பனவற்றை உள்வாங்கக் கூடிய பின்னணி அறிவு ஒவ்வொரு குழந்தையிடமும் உள்ளதா? என்பவற்றைக் கண்டறிந்து தேவையான கருத்துக்களை அறிமுகப்படுத்தி பின் புதிய கருத்துக்கள் அனுபவங்கள் வழங்கும்போதே அது கற்றலை இலகுபடுத்தும். வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் உறவு சிறந்த முறையில் பேணப்படுதல் முக்கியமானது. ஒரு வினைத்திறன் உடைய ஆசிரியர் மாணவரின் தேவைகளைக் கவனிப்பவராகவும், மாணவர் பிரச்சினைக்குள்ளாகும் போது அவர்களை நன்கு புரிந்து கொண்டு செயற்படுபவராகவும் விளங்குவார். வகுப்பறையிலே மாணவர் வெறுமனே கற்றல் என்ற கருத்துடனின்றி அவர்கள் கற்பதற்கு ஏற்ற வகையிலான உதவிகளை வழங்கக் கூடிய தொடர்புகளைப் பேணுபவர்களாகவும் விளங்குதல் பயன்தரும். ஆரம்பப்பிரிவு மாணவர்களது கற்றல் கற்பித்தல் முறைகள் தொடர்பாக நோக்கும் போது

– சகலவற்றிலும் திருப்திகரமான அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளுக்கு இடமளிப்பதோடு அதற்கு போதியளவு திட்டமும் ஆயத்தமும் செய்து கொள்ளுதல்.

– கருத்துக்களுக்கு ஏற்ப அறிமுகங்களையும், கற்பித்தல் முறைகளையும் பிரயோகித்து பாடங்களை திட்டமிடல்.

– தகவல்களை தேடியறிதல் போன்று அவற்றை அறிக்கைப்படுத்தலும் முக்கியமானதாகும்.

– ஆரம்பக் கட்டத்தில் வாய் மொழியாகவும் பருமட்டான படங்கள் மூலமும் தனது அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கும் பிள்ளைகளை ஊக்குவித்தல்.

– கிரமமாக சொற்களையும் வாக்கியங்களையும் ஓரளவு விபரமான படங்களையும் பிரயோகிப்பதற்கு வழிப்படுத்தல், சகல வேலைகளையும் முயற்சிகளையும் மதித்தல்.

– பிள்ளைகளை குழுக்களாக வேலைகளில் ஈடுபடுத்தல். ஆரம்ப சந்தர்ப்பங்களில் குழு ஒன்றில் ஒருவர் செயலாற்ற வேண்டிய முறை தொடர்பாக பிள்ளைகளுக்கு வழிகாட்டலும் உதவி புரிதலும் அவசியம்.

– கற்றல், கற்பித்தல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது படிப்படியாக சேகரிக்கப்படும் தகவல்களையும், பொருட்களையும் முறையாக கட்டியெழுப்புவதோடு கண்காட்சியாகவும் மாற்றுதல்.

– பொருத்தமான வேளையில் கருப்பொருள்களைத் தெரிவு செய்து வளங்களை பயன்படுத்தக் கூடியதாக இருத்தல்.

– புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஆக்கம், அழகியல், உடற்கல்வி என்பனவற்றில் உரிய தேர்ச்சிகளை அடைவதற்கான விரிந்த வீச்சுள்ள கற்றல், கற்பித்தல் அனுபவங்களை வழங்குவதற்கு வசதிகள் அளித்தல்.

– சுற்றாடல் சார் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் போது அறிவு, திறன,; மனப்பாங்கு, பழக்கவழக்கங்கள் என்பனவற்றை கவனத்தில் கொள்ளல்.

– திறன்களிடையே கற்றல் திறன்களுக்கு புறம்பாக சமூகத்திறன்கள் மீதும் விசேட கவனம் செலுத்தல்.

– பிள்ளைகளின் குறைபாடுகளை கற்றல் நடவடிக்கைகளின் போது நிவர்த்தி செய்யும் நோக்குடன் மதிப்பீடு செய்தல்.

– சுற்றாடல் சார் செயற்பாடுகளை கணிப்பீடு, மதிப்பீடு செய்யும் போது அநேகமாக முறை சாரா அணுகு முறைகளை கடைப்பிடிக்க நேரிடலாம்.

– மாணவர்கள் வேலை செய்யும்போது அவர்களை அவதானிப்பதன் ஊடாகவும், செவிமடுப்பதனூடாகவும், கலந்துரையாடுவதனூடாகவும் கணிப்பீட்டு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி உரிய கணிப்பீட்டு படிவங்களில் அறிக்கைப்படுத்தி வைத்தல்.

மேற்குறிப்பிட்ட விடயங்களில் பூரணமாக அக்கறை செலுத்தி செயற்படுவதன் மூலம்  மாணவர்களின் கற்றலில் தொடர்ச்சியான ஆர்வம் ஏற்படுவதுடன் அவர்களிடம் சிறந்த நடத்தை மாற்றங்களையும் காண முடியும்.

சாராம்சம்

ஆரம்பப்பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்களே ஒரு பிள்ளையின் வாழ்க்கைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பவர்களாக இருப்பதனால் அவர்களது வகுப்பறை முகாமைத்துவம் சரியான முறையில் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் சில சில பிரசசனைகள், தடைகள் காரணமாக அவர்களது முகாமைத்துவத்தை சிறப்பாக முன்னெடுக்க முடியாதுள்ளனர். எனவே அவற்றில் தாக்கம் செலுத்தும் காரணிகளை இனங்கண்டு தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். அப்போது தான் மாணவர்களுக்கு சிறந்த அடிப்படைக் கல்வியைப் பெற்றுக் கொடுத்து சமுதாயத்திற்குப் பொருத்தமான மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும்.

இன்றைய நிலையில் கல்வி வளர்ச்சியினை எடுத்து நோக்கும் போது நகர்ப்புறங்களோடு ஒப்பிடுகையில் கிராமப் புறங்களின் கல்வி வளர்ச்சி குறைந்த மட்டத்திலே காணப்படுகின்றமையினை அறியக்கூடியதாகவுள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்ற போதிலும் எந்தவொரு இடத்தில் இருக்கின்ற பிள்ளைக்கும் சிறந்த முழுமையான அடிப்படைக் கல்வியை ஏற்படுத்திக் கொடுப்பது கல்வித் துறை சார்ந்த அனைவரினதும் கடமையாகும். பிள்ளைகள் மூன்று தொடக்கம் ஏழு வயதிலேயே அதிகளவில் நுண்ணறிவு விருத்தியைப் பெற்றுக் கொள்கின்றனர், இவ்வயதிலேயே அதிகளவான மனப்பதிவுகளையும் பெற்றுக் கொள்கின்றனர். எனவே இவ்வயதில் கற்றுக் கொள்ளும் விடயங்கள் அனைத்தும் பசுமரத்து ஆணி போல இலகுவாக, ஆழமாக மனதில் பதியக் கூடியது. இதனால் தான் இவ்வயதில் சமுதாயத்திற்கு பொருத்தமான, சமுதாயம் எதிர்பார்க்கின்ற சிறந்த நற்பண்புகளை கொண்ட பிரஜைகளாக மாணவர்களை உருவாக்குவதற்காக பாடசாலைக்கு அனுப்பப் படுகின்றனர். இவ்வாறாக நாட்டின் தேசிய குறிக்கோளை அடைந்து கொள்வதற்கு முதலில் ஆரம்பநிலைக் கல்விக்கான அடித்தளம் சரியாக இடப்படவேண்டும். ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் முதலில் வகுப்பறை மட்டத்திலான விசேட குறிக்கோளை சரியாக அமைக்கும் போதே உண்மையில்  நாட்டின் தேசிய குறிக்கோளை நோக்கி செயற்படமுடியும். எனவே ஆரம்பப் பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் முகாமைத்துவப் பிரச்சனைகளுக்கான காரணிகளை இனங்கண்டு தீர்க்க வேண்டியது அவசியமாகும். அப்போது தான் மாணவர்களின் எதிர்காலத்தை சரியாக அமைத்துக் கொடுக்க முடியும்.

துணைநின்றவை

 • அலியார் யூ.எல்., 1999, இருநூற்றாண்டுகளில் கல்வி, பைதுல் ஹிக்ஹாக் சம்மாந்துறை.
 • அனந்தராஜ் ம., 2005, தேசியத்தை நோக்கிய கல்வி, நந்தி பதிப்பகம் வல்வெட்டித்துறை.
 • இராஜேஸ்வரன் ப. & தனபாலன்.பா, 2005, தேச அபிவிருத்தியில் தமிழர் கல்வி, கல்வியியல் வெளியீட்டுத் திணைக்களம், 257, பலாலி வீதி – கந்தர் மடம், யாழ்ப்பாணம்.
 • இராஜேஸ்வரன் ப. & திருவாசகன் ந., 2003, கல்வியியலாளன், 257, பலாலி வீதி – கந்தர் மடம், யாழ்ப்பாணம்.
 • கருணாநிதி மா.,2008, கற்றல் கற்பித்தல் மேம்பாட்டுக்கான வழிமுறைகள், சேமமடு பதிப்பகம்,
 • சத்தார் எம்.பிர்தௌஸ், 2009, நிலைமாற்று முகவர், அன்னை வெளியீட்டகம், 251ஏ பிரதான சாலை, மருதமுனை.
 • சந்திரசேகரம் சோ., 2004, கல்வி – ஒரு பன்முக நோக்கு, உமா பதிப்பகம், கொழும்பு.
 • //www.researchgate.net/topic/Primary-Education
 • //www.tes.com/…/school…/primary-school-where-teacher-led-research-having-a-..
 • //www.theguardian.com/teacher…blog/…/priorities-improve-primary-education

 

Shandru Mariyadas

(Lecturer- prob),

Faculty of Arts and Culture,

Dept. of Education and Childcare,

Eastern University,

Srilanka.

chandrumariyadas@yahoo.com