பேரளவு துன்பத்தின் சாயை படியாது வெறும் உயிர்ப்பிண்டமாக வாழ்ந்து வருகின்ற ஓர் இளைஞன் திடீரென்று உலகத்தில் இயல்பாக நிகழ்ந்து வருகிற கொடுமைகளையும் சமூக அநீதிகளையும், சமூகத்தினரது வக்கிரச் செயற்பாடுகளையும் ஆவேசமாகக்கண்டு, கண்டதைத் தன்மன இருட்டில் தோய்த்துச் சொல்லியிருக்கிற கனவுகளே முனியசாமியின் இக்கவிதைகள். இவரது கவிதைகளில் கவிதைக்கான இலக்கணம் எதுவுமில்லை. அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு ஆரம்பம் என்ற நிலைகளும் இல்லை. மன அவசரத்தின் உருவகப் பிரவாகம்தான் கவிதைகளின் உற்பத்தி மையம் என்பதைக் கவியுலகம் ஒத்துக்கொள்ளுமானால் இவைகளும் கவிதைகளே என்றே மதிப்பிடலாம். கவிதைகளின் மூலமாகப் படைப்புலகில் கால்  பதித்திருக்கின்ற முனியசாமியினது எல்லாக் கவிதைகளுமே அதனதன் நோக்கப் புலப்பாட்டுத் தளத்தில் சிறப்பானதாகவே வெளிப்பட்டிருக்கின்றன. இந்த வெளிப்பாடுதான் முனியசாமி என்ற கவிஞரின் நுழைவை அவரது எழுத்துக்களின் வழி நின்று வாசகப்பரப்பிற்குள் அடையாளப்படுத்துவதோடு வாசகர்களை இவரது கவிதைகள் குறித்து ஒருகணமாவது சிந்திக்க வைக்கச் செய்கின்ற செயலையும் மிகநேர்த்தியாகச் செய்கின்றது. இருப்பினும் இக்கவிதைப் படைப்பாளியின் உணர்வுகளும் நினைவுகளும் ‘காதல்’ என்ற வட்டத்திற்குள்ளாகவே சுற்றிச்சுற்றி வந்திருப்பதைக் காண்கையில் இக்கவிஞரின் எதிர்காலத்திய படைப்புலகப் பிரவாகத்திற்கு இது ஆரோக்கியமற்றது என்றே சொல்லத் தோன்றுகின்றது.

காதலை மையமிட்டமையும் கவிதைகளை ஒதுக்கிவிட்டு ஏனைய கவிதைகளைக் கணக்கிடுகையில் அவைகளில் முனியசாமி என்ற படைப்பாளனது சமூக அக்கறையைக் காணமுடிகிறது [அடகு, கவலையில்லா இந்தியன், பெண்ணை வாழவிடு (பக்.75 76), காத்திருப்பு, தினக்குடிகாரன், விலைவாசி, மது, ஆளுமை, கூலி, பஞ்சு (பக்.77 79) இவை போன்ற பிற]. இயல்பாகவே அக்கறையுடையவரான முனியசாமியினது கவிதைகளின் வெளிப்பாட்டு எளிமை சமூகம் சார்ந்த பொதுத்தள உற்றுநோக்கலுக்கும், பொதுத்தளம் சார்ந்த கவிஞராக படைப்பாளராக அவரை இனங்காண்பதற்கும் அதை மையமிட்டமையப்போகிற அவரது தொடர்ந்த எழுத்துலகப் பயணத்திற்கும் அவரைத் தொடர்ந்து இட்டுச் செல்லும் என்று நம்பவைக்கின்றது. இவ்வகையில் முனியசாமியை ஒரு சமூக அக்கறையுடைய கவிஞராகவும் மதிப்பிடலாம்.

ஒரு படைப்பாளியின் படைப்பினது எல்லைகள் வானம் வரை விரிந்து போகலாம். ஆயினும் அவனது வேர்கள் காலூன்றி நிற்பது இந்த மண்ணில்தான். மண்ணையும் தான் சார்ந்துள்ள மனிதர்களையும், சமூகத்தையும் குறித்துப் பிரக்ஞை இன்றிப் படைப்பிலக்கியம் படைப்பவனும் அவனது படைப்புகளும் தனிமைப்பட்டுப் போய்விடும் என்பதை முனியசாமி என்ற இந்தக் கவிஞர் அபாயத்தை எதிர்நோக்குகிற ஓர் உணர்வோடு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டுவது அவசியமாகிறது. இவ்வகையில் அடித்தள – விளிம்புநிலைச் சமூகத்தினரது எதார்த்த வாழ்வியலும், எதிர்காலச் சமூகம் குறித்த அக்கறையும் கொண்டவராய் இந்தக் கவிஞரின் கவிதைகள் நிகழ்காலத்தின் வாசம் பிடித்தே எதிர்காலத்தைக் கவனிக்கக் கூடிய வகையில் முற்போக்குடையதாக மலர வேண்டுமென்பதே என் விருப்பமாக உளது.

கருவிலேயே திருவுடையவர்களற்ற கவிதைகளின் உலகம் வளர்ச்சிப் பாதையின் அனைத்துப் பரிமாணங்களையும் எதிர்கொண்டும், உள்வாங்கியும்தான் தன்னைத் தகவமைத்துக் கொண்டேயிருக்கின்றது. இப்படியான உலகத்தில் முதல் காலடி எடுத்துவைக்கிற ஒரு கவிஞன் தட்டுத்தடுமாறி, போராடி, முரண்பட்டு, பலவற்றை இழந்து அல்லது வசப்படுத்தித்தான் தனது கவியுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றான். அதுபோலவேதான் முனியசாமியும் தனது கவியுலகப் பிரவேசத்தைக் காதலில் துவம்சம் செய்யப்பட்ட மனப்பதிவுகளோடு துவங்கியிருக்கின்றார். இவர் மிகுந்த அக்கறையும், அதேவேளையில் எச்சரிக்கையோடும் கடக்கவேண்டிய திசைவழிப் பயணங்கள் இன்னும் நிரம்ப இருக்கின்றன. அதேவேளையில் ’கவிதை – கவிதையுலகம்’ குறித்த வரலாற்றை, வரலாற்றுப் புரிதலை முனியசாமி நன்கு புரிந்து கொள்ளவேண்டியது அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

படைப்பாளியாகப் பரிணமிக்கின்ற தகுதியை முதல் நிலையில் கடந்து விட்ட முனியசாமி என்ற கவிஞரின் கவிதை படைப்புலக வாசலினை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் என்பதில் எவ்விதக் கருத்துமாறுபாடும் எனக்கில்லை. இந்த இளங்கவியின் முயற்சி மேன்மேலும் வெற்றிபெற எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

முனைவர் மு.ஐயப்பன்

முதுமுனைவர் தகுதிநிலை மேலாய்வாளர் (யு.ஜி.சி)

வெ..சு.தமிழியல் ஆய்வு மையம்

.தி..இந்துக்கல்லூரி

திருநெல்வேலி.