Abstract: This project is about building web based application for the student to learn Tamil Grammar in very easy way. This project contains easy material, pictures and audio which makes the student understand the Tamil Grammar easily. This project also includes a quiz to test the students’ knowledge and skills in the Tamil Grammar. The main aim of this project is to make the Tamil Grammar online which helps many students to understand Tamil Grammar easy way.

தமிழ் இலக்கணத்தைத் தேர்வுக்குப் படிப்பதோடு முடிந்து விட்டது என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். சில சமயங்களில் இலக்கண ஆசிரியர் தேவையில்லாமல் நம்மீது இலக்கணத்தைத் திணிக்கிறாரோ என்ற எண்ணம் தோன்றும். நாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்கும்போது இலக்கணம் என்பது பாடப்புத்தகத்தோடு நின்று விடுவதில்லை,  நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேச்சிலும், எழுத்திலும் இரண்டறக் கலந்து நிற்கிறது என்பது தெளிவாக உணர முடிகிறது. தமிழ் இலக்கணத்தை மாணவர்களுக்கு மிக எளிய முறையில் கற்பிப்பதில் மிகச்சிறந்த முறைகளை ஆராயும் போது வரைபடங்களே அதிகம் வழிகோலுகிறது. தமிழ்மொழிக்கு மட்டுமே சிறப்பான இலக்கணக்கூறுகள் அமைந்துள்ளன. ஒன்றன்பின் ஒன்றாகப் பல சொற்களை ஒலிக்கும் போது விரைவு, உணர்ச்சி, முயற்சிச் சிக்கணம், எளிமை முதலிய காரணங்களால் சொல்லொலிகள் மாறுபடுகின்றன. இதனை ஒன்றன்பின் ஒன்றாக விளக்க மிகவும் இன்றியமையாதது இலக்கணத்தை வரைபடம் மூலம் கற்றலே ஆகும்.

செய்தியை எளிதில் விளக்குவதற்குக் கட்புலனாகிய வரைபடங்கள் உதவுகின்றன. பொதுவாகப் புள்ளியியலாளரும் பொருளியலாளரும் இதை மிகுதியாகப் பயன்படுத்துவர். பொருளியல் போன்ற சிறப்பு இதழ்களில் இவை மிகுதியாக இடம்பெறும். சிக்கலான தகவல்களைத் தெளிவாகக் காட்டவும், ஒப்பிட்டுப் பார்க்கவும் வேறுபடுத்திக் காணவும் உதவும். நல்ல வரைபடம் பார்த்த அளவிலேயே தகவல்களைத் தெளிவாகத் தெரிவிப்பதோடு, அதிகமான விளக்கம் தேவைப்படாததாக இருக்கும். கோட்டு வரைபடம், வட்ட வரைபடம், நேர்கோட்டு வரைபடம்வழி விளக்கும் வரைபடம் என வரைபடங்கள் பல வகைப்படும்.

இவைதவிர விளக்க வரைபடம்,  நிலப்படம், மாதிரிப்படம், திட்ட உருவரை, வரைக்கட்டம், உருப்படிவம் போன்றவையும் ஆங்காங்கே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தேவையான பொருத்தமான இடங்களில் பயன்படுத்த வேண்டும். இவை போதுமான அளவு பெரிதாக இருக்க வேண்டும். இவற்றில் எழுதப்படும் தலைப்புகள் தெளிவாக இருக்க வேண்டும். படத்தில் பயன்படுத்தப்படும் குறியீடுகளை விளக்க வேண்டும். கருத்துக்களை நன்றாகப் புரிந்துகொள்ள ஆசிரியர் வாய்மொழியை மட்டும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் மாணவனின் ஐம்புலன்களும் கற்றலுக்கு உதவும் நுழைவாயில்கள் ஆகும்.

‘நான் கேட்கிறேன்; மறந்து விடுகிறேன்; நான் பார்க்கிறேன்; நினைவில் இருத்திக் கொள்கிறேன்; நான் செய்கிறேன்; நான் புரிந்து கொள்கிறேன்.” என்பது ஒரு பழமொழியாகும்.

கல்விக் கருவிகள் மாணவர் எளிதில் பாடங்களைப் புரிந்துகொண்டு மனத்தில் இருத்திக் கொள்ளவும், பல திறமைகளைப் பெறவும் உதவுகின்றன. கல்வி மாணவர்களின் அறிவையும் குணத்தையும் திறமையும் வளர்க்க வேணடும். மாணவர்களுக்கு அளிக்கும் ஐம்புலப் பயிற்சி, அறிவை வளர்க்கிறது. இவ்வரைபட முறைகளைப் பயன்படுத்தி எவ்வாறு இலக்கணத்தை கற்றல் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

வரைபடங்கள் பயன்படுத்துவதில் உளவியல் காரணிகள் :

மாணவனின் நுண்ணறிவு, ஊக்கம், மனப்பான்மை, மனவெழுச்சி, அக்கறை, பற்று என்பன ஆளுமை வளர்ச்சிக்குக் காரணங்களாக அமைகின்றன. குழந்தைகளும், மெல்லக் கற்பவர்களும் இவ்வுலகில் பிறந்து வாழ்கின்றனர். ஆனால் அவர்களுடைய ஆளுமையில் தோன்றும் வேறுபாட்டிற்குக் காரணம் நுண்ணறிவேயாகும். அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டவர்கள் விரைவில் வெற்றியும், குறைந்த அளவில் ஊக்குவிக்கப்பட்டவர்கள் குறைவான வெற்றியும் பெறுகிறார்கள். அவர்களின் ஆளுமை வேறுபாட்டிற்குக் காரணம் குறைந்த அளவு ஊக்கமே ஆகும். இதனை மனத்தில் கொண்டே வரைபடங்கள் அமையவேண்டும். இவ்வரைபடங்களை மாணவர்களின் கல்வியில் மாற்றம் ஏற்படுத்தும்படிப் பயன்படுத்த வேண்டும். இலக்கணத்தைக் கற்பிற்கும்போது உளவியல் காரணிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றலில் ஈடுபடும்போது வரைமுறைப்படுத்த உதவுவது வரைபட முறையே ஆகும்.

தானே கற்றலில் வரைபடத்தின் பங்கு :

தாமே கற்றதின் மூலம் பல சிறப்பம்சங்களையும் கற்றுக்  கொள்ளமுடிகிறது. கற்றல் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். சிலர் விரைவாகக் கற்றுக்கொள்வர். அவரவரின் வளார்ச்சிக்கேற்பவும் கற்றல் நிகழ்கின்றது. சில குழந்தைகள் நாம் கூறுவதை அக்கறையுடன் கேட்டுக் கொண்டிருக்கும். ஆனால் உடனடியாகத் திரும்பக் கூற இயலாது. வரைபடங்களைக் கற்றல் தேவைக்கேற்பப் பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களின் இலக்கணம் கற்றலை மேன்படுத்த முடிகிறது.

படத்தில் மொழிக் குறியீடுகளான எழுத்து சொல் போன்றன இல்லை எனினும் படம் கருத்தை வெளிப்படுத்துவதற்கு மிகச் சிறந்த ஊடகம். பத்தாயிரம் சொற்களைப் படம் ஒன்று தரும் என்பது சீனப் பழமொழி. உயிருள்ள பொருள்களைக் காட்சிப்படுத்துவன மட்டுமே படங்களல்ல. எழுத்துகளல்லாமல் வரையப்படும் அனைத்துமே படங்களே. வரைவுகள் அட்டவணைகள் போன்றனவும் இவற்றுள் அடங்கும்.

இலக்கணம் கற்றலில் தொடக்க நிலை முதல் உயர்கல்வி வரையிலும் படங்கள் இடம்பெறுகின்றன. அரிச்சுவடி முதல் ஆய்வுக்கட்டுரை வரையிலும் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கல்விநோக்கில் படங்களின் பயன்களை ஈர்ப்பு இடையாய்வு பொருண்மைப் பதிவு சுருக்கம் ஆகியனவாகக் காணலாம்.

காட்சிமொழி இணைப்பு

குறிப்புகளுடன் கூடிய படம் சில தமிழ் இலக்கிய வடிவங்களை திட்பமாகத் தருவதற்குப் பயன்படுகிறது. இதில், உரையாடல் எனும் இலக்கிய வடிவம் படத்திற்குரிய குறிப்புரையாகப் பயன்படுகிறது. குறிப்புரையும் படமும் இணைந்து தகவலை முழுமைப்படுத்துகின்றன. பிற பண்புகளான ஈர்ப்புப் போன்றவையும் அமைகின்றன.

ஈர்ப்பு முறையில் வரைபடத்தின் பங்கு :

எல்லா நிலையினரையும் ஈர்ப்பது படம். படத்தைப் பார்த்துப் பல்வேறுபட்ட கற்பனைத் திறனைக் குழந்தைகளிடம் வளர்ப்பதற்கு அதிலுள்ள ஈர்ப்புத் தன்மையே ஏதுவாக அமைகிறது. வகுப்பில் இலக்கணத்தைக் கற்பிக்கும்போது முதற்படியாக மேற்கொள்ளப்படுவது ஊக்குவிப்பு. ஊக்குவித்தலுக்கு எளிமையான ஊடகம் படமே.

 

தொடக்கநிலை வகுப்புத் தமிழ்ப் பாடநூல்களில் எழுத்துமொழிகளை விடப் படங்களே மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. உயர்வகுப்புகளில் கூட, படமே இல்லாத பகுதிகளை விட படமுள்ள பகுதிகளே, தகவல்களை அறிவதற்கு உந்துகின்றன. இதனால் தமிழ் இலக்கணத்தை மரபு மாறாமல் கற்க முடிகிறது. மேலும், கற்பவற்றை எளிமையாக கற்க இயலுகிறது.

தமிழ் பாடநூலில் பொருண்மைப் பதிவு

சொற்கள் பல தரும் விளக்கங்களால் அமையும் பொருண்மை ஒரு சிறிய படத்தால் வெகுவிரைவில் பதியும். எடுத்துக்காட்டாகத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பாரதியார் போன்றோரின் உருவங்களைக் கற்போரிடம் பதிக்க பக்கம் பக்கமாகச் சொற்களைக் கையாளும் நிலை ஏற்படலாம்.  ஆனால் அவர்களுடைய ஒளிப்படங்கள் கண்ணிற் பட்ட அளவிலேயே முறையான பொருண்மையைப் பதிக்கும்.

தமிழ்ப் பாடநூல்களிலுள்ள கற்றல் பகுதியைப் படிக்க நேரும்போது இடையிடையே படங்கள் அமையுமாயின் பார்வை எழுத்திலிருந்து படத்திற்குப் பாய்கிறது.   கற்றலில் தொடக்க நிலையிலுள்ளவர்கள் நீண்டநேரம் சிந்தனையோட்டத்தோடு இருக்க இயலாது. இந்நிலை அகவையினைப் பொறுத்தமைவதன்று; கற்றல் நிலையைச் சார்ந்தது. ஆகவேதான் தொடக்க வகுப்பு முதல் முதியோர் கல்வி வகுப்பு வரையில் தமிழ்ப் பாடநூல்களில் மிகுதியாகப் படங்கள் இடம் பெறுகின்றன. எனவே கல்வியடைவின் நிலைப்பு நோக்கில் படங்கள் மொழி வடிவங்களைவிட மிகுதியும் பயன்படுகின்றன. தமிழ்ப் பாடநூல்களில் இலக்கணத்தை எவ்வாறு வரைபடம் மூலம் அமைப்பது என்பது பற்றிச் சில எடுத்துக்காட்டுகள் மூலம் கீழே விளக்கப்பட்டுள்ளது.

இலக்கணத்தில் வரைபடத்தின் பங்கு

தொன்மைமிகு இலக்கண மரபினைக் கொண்டது தமிழ்மொழி. தமிழ் இலக்கண நூல்களின் உள்ளடக்கம் இன்றைய மொழியியல் வளர்ச்சிப் பொருண்மைகளுக்கும் ஈடு கொடுத்து வருகின்றது. தமிழறிஞர்களும் ஆசிரியர்களும் தாங்கள் கற்றுத் தோய்ந்த வளமிக்க இலக்கணத்தைத் தமிழ் கற்கும் குழந்தைகளும் மாணவர்களும் அறிதல் வேண்டுமெனும் அவாவினராய்த் தொடக்க நிலையிலிருந்து இலக்கணத்தை இயல்நிலையிலும் நூன்முறைக்கு உட்பட்டும் கற்பிக்க விழைகின்றனர்.

தொடக்க வகுப்புகளின் பெயர், வினைச்சொற்கள் குறித்த பொருளை மனத்தில் பதிக்கப் படங்கள் வெகுவாகப் பயன்படுகின்றன. சொற்களுக்குப் பொருளும் விளக்கமும் தருகின்ற அகராதிகள், எல்லாச் சொற்களின் பொருள்களையும் சொற்களாலேயே விளக்கி விடுவதில்லை. பல சூழல்களில் படங்களின் துணையையே நாடுகின்றன. பாடநூல்களிலும், படங்கள் பொருண்மை விளக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் எளிய ஊடகமாகும்.

சுருக்கம் முறை மூலம் இலக்கணப் பாடத்தை விளக்குதல்

பல சொற்களாலும் வாக்கியங்களாலும் தரப்படும் தகவலை ஒரு படம் தந்து விடும். வெளிப்படுத்த வேண்டிய தகவல்கள் சில சூழல்களில் கற்போர் சொற்களஞ்சியத்திற்குள் அமையா. அந்நிலையில் அத்தகவல்களை உள்ளடக்கிய படம் விளக்கம் தந்து விடும்.

இயற்கைச் சூழல், பல செயல்கள் நடைபெறும் காட்சி போன்றவனவற்றை வெளிப்படுத்தப் பல சொற்களைப் பயன்படுத்துவதை விட, ஒரு படத்தைத் தந்து, படத்தில் காட்டியதுபோல எனும் குறிப்பைக் கொடுத்து விட்டால் போதும். தொடக்க வகுப்புகளில் பல செயல்கள், பொருள்கள் ஆகியனவற்றை எடுத்துக்காட்டச் சிறிய படம் பயன்படுவது போல வகைப்படுத்தப்பட்ட தரவுகளைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்த வளர் வரைவு, அட்டவணைப் படங்கள் ஆகியன மேல்வகுப்புகளில் பயன்படுகின்றன. இவ்விரண்டு வரைபட முறை மூலம் எவ்வாறு இலக்கணத்தை மிக எளிமையாகக் கொண்டுசெல்ல முடியும் என்பதைக் காணலாம்.

 

 

 

 

இலக்கணத்தில் வளர் வரைவு வரைபடம்

 

 

 

 

இலக்கணத்தில் அட்டவணையின் பங்கு

வளர் வரைவு, அட்டவணை ஆகியனவற்றின் அமைப்புகள் மேலே தரப்பட்டுள்ளன. இவற்றின் அமைப்புகளைச் சொற்களால் விளக்குவதை விட மேலே காட்டியவாறு படங்களால் சுருக்கமாகவும், ஒருசேரவும் தந்துவிட முடியும்.

குறிப்புரைப் படம்

குறிப்புரையுடன் கூடிய படங்களும் பாடநூலில் நோக்கத்தக்க வடிவமாகும். சொற்குறிப்புகளைக் கொண்ட படம் குறிப்புரைப் படம் எனக் குறிக்கப்படுகிறது. குறிப்புரைப் படத்தில் படம், குறிப்புரை ஆகிய கூறுகள் உள்ளன. படத்தைத் தனித்து நோக்கி அமையும் பண்புகள் முன்பகுதியில் காணப்பட்டன. அவை அனைத்தும் குறிப்புரைப் படத்திற்கும் பொருந்துவனவாகும். அவற்றோடு வேறு சில பண்புகளும் குறிப்புரைப் படத்தில் அமைந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன காட்சி மொழி இணைப்பு, மொழிவடிவ நிறைவு என்பனவாகும். எடுத்துக்காட்டாக இலக்கணப் பாடத்தில் உள்ள உவமை அணியை விளக்கும்போது அதில் அடங்கும் அனைத்து உறுப்புகளையும் குறிப்புகளாக விளக்கினால் நேரம் சேமிப்பு, புரிந்துகொள்ளும் திறன் இவை மேம்படுகிறது. இதனைக் கீழே காணலாம்.

எடுத்துக்காட்டு:

உவமை அணியின் உறுப்புகள் :

  • உவமானம்
  • உவமேயம் – உவமிக்கப்படும் பொருள்.
  • உவம உருபு – போல, புரைய, ஒத்த, உறழ, மான, கடுப்ப, இயைப, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன.
  • பொதுத்தன்மை – ஒப்பிடுவதற்கு ஆதாரமாக இருப்பது உலகில் அனைவருக்கும் தெரிந்த பொதுத்தன்மை கொண்டிருப்பதே ஆகும்.

 

வரைபடம் மூலம் இலக்கணப்படத்தை எவ்வாறு விளக்குவது என்பதை மேலே கூறப்பட்டுள்ள செய்திகள் வடிவில் உணரமுடிகிறது. இதனைப் பின்பற்றி இலக்கணம் கற்றலை மேம்படுத்த முடியும் என்பதில் ஓர் ஐயமும் இல்லை. இன்றைய சூழலில் கற்றல் என்பது காலம், வரைவு அடிப்படையிலும் இவ்வரைபடமுறை இலக்கணத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பது இக்கட்டுரை மூலம் விளக்கப்படுகிறது.

துணைநின்றவை

  • இரத்தினசபாபதி பி., 2013, தமிழ் கற்க, அம்சா பதிப்பகம், மேக்மில்லன் காலனி, நங்கநல்லூர், சென்னை.
  • இராமலிங்கம் பா., 2007, கல்வியும் உளவியலும், சாரதா பதிப்பகம், சென்னை.
  • கணபதி, இரத்தினசபாபதி, ஜெயராமன் & சந்திரிகா ராஜமோகன், 2014, தமிழ் கற்பித்தலில் புதுமைகள்சிறப்புத்தமிழ் சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை.
  • கிருட்டிணசாமி வெ., 2001, தகவல் தொடபியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
  • ………………, முல்லைதமிழ் இலக்கண நூல் (9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு உரியது, நடுவணரசு புதிய பாடத்திட்டத்தின்படி) இத்துடன் வினாவங்கியும் சேர்க்கப்பட்டுள்ளது (பா.சங்கரன்).

இரா.அருணா

தமிழ் – முனைவர்பட்ட ஆய்வாளர்

பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)

கோபிசெட்டிபாளையம் – 638452

arunatamilgobi@gmail.com