அறிமுகம்

மனித தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் வணிகம் எனப்படும்.  வணிகத்தின் ஊடாக மனிதன் நாள்தோறும் பல கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கிறான். வணிக நடவடிக்கைகளில் பிரதான அங்கமாக அடையாளப்படுத்தப்படுவது விளம்பரம் ஆகும். விளம்பரம் என்பது ஒரு பொருளின் அறிமுகத்துக்காக அந்தத் துறைசார்ந்த நிறுவனங்களால் அல்லது ஊடகங்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் குறிக்கின்றது. விளம்பரங்களினூடாக ஒரு பொருளின் அறிமுகம், தரம் என்பவற்றை நுகர்வோர் அறிந்து கொள்ளுகின்றனர். தற்காலப் போட்டிமிகு சந்தையில் வணிக நிறுவனங்கள் இலாபநோக்கத்துடனும், தமது உற்பத்தி பொருட்களின் தரத்தை மேம்படுத்திக் காட்டும் வகையில் தந்திரோபாயங்களைக் கடைப்பிடித்து விளம்பரங்களை வடிவமைக்கின்றன. இதனால் “விளம்பரம் இல்லையேல் வியாபாரம் இல்லை” எனுமளவிற்கு வணிகத்துடன் விளம்பரம் ஒன்றித்துப் போயுள்ளது.

ஆய்வுநோக்கம்

 • விளம்பரங்கள் ஏற்படுத்தும் ஒழுக்க மீறல்களைக் கண்டறிதல்.
 • விளம்பரப்படுத்தப்படும் பொருட்களின் தரத்தினைக் கண்டறிதல்.
 • விளம்பரங்களால் ஏற்படும் ஒழுக்க மீறல்களில் இருந்து நுகர்வோரைப் பாதுகாத்தல்.
 • விளம்பரங்களால் ஏற்படும் ஒழுக்கமீறல்களைக் குறைப்பதற்கான உபாயங்களைக் குறிப்பிடுதல்.

ஆய்வுச் சிக்கல்

 • சமகால வணிக நடவடிக்கைகளில் விளம்பரங்கள் ஊடாக ஒழுக்கமீறல்கள் ஏற்படுகின்றனவா?
 • சமகால வணிக நடவடிக்கைகளில் வணிக நிறுவனமானது தம் உற்பத்தி பொருள் சார்ந்த விளம்பரங்களை அதிகூடிய செலவில் உயர்தரமான முறையில் வெளிப்படுத்தினாலும் விளம்பரத்தில் காட்டப்பட்ட தரத்திற்கு இணையாக உற்பத்தி பொருட்கள் உள்ளனவா?
 • சமகால வணிக நடவடிக்கைகளில் விளம்பரங்கள் ஊடாக ஒழுக்கமீறல்கள் ஏற்படுகிற போதும் மனித சமூதாயம் அதிலிருந்து இருந்து விடுபட முடியாமைக்கான காரணம் யாது?

 

ஆய்வின் முக்கியத்துவம்

சமகால வணிக நடவடிக்கைகளில் பல்வேறு வகையான உற்பத்திப் பொருட்கள் நாள்தோறும் சந்தைக்கு வருகின்றமையால் அனைத்துப் பொருட்களின் அறிமுகத்திற்கு விளம்பரம் கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க முடியாது. விளம்பரங்களின் ஊடாக வணிகநிறுவனங்கள் தாம் எதிர்பார்த்த இலாபநோக்கங்களை அடைந்து கொள்வதோடு நுகர்வோரின் திருப்தியையும் நிறைவு செய்கின்றன. இந்நிலையில்தான் சமகால வணிக நடவடிக்கைகளில் விளம்பரங்கள் தவிர்க்க முடியாமல் உள்ளன.

வணிக நடவடிக்கைகளில் விளம்பரங்கள் ஏற்படுத்தும் ஒழுக்க மீறல்கள்

இன்றைய போட்டிமிக்க சந்தையில் அடிப்படைப் பொருட்களையும், ஆடம்பர பொருட்களையும், உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அவற்றை நுகர்வோரிடம் விற்பனை செய்வதற்குப் பல்வேறு வகையான விளம்பர நுட்பங்களைக் கையாளுகின்றன. இதன் காரணமாக மனித சமூதாயம், சூழல் முதலியன பல்வேறு வகையான தாக்கங்களை எதிர்நோக்குகின்றது. அவைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

 1. உளவியல் ரீதியிலான ஒழுக்க மீறல்கள்
 2. நிறுவன ரீதியிலான ஒழுக்க மீறல்கள்
 3. உடலியல் ரீதியிலான ஒழுக்க மீறல்கள்
 4. சமூகவியல் ரீதியிலான ஒழுக்க மீறல்கள்
 5. சூழலியல் ரீதியிலான ஒழுக்க மீறல்கள்

1.உளவியல் ரீதியிலான ஒழுக்க மீறல்கள்

 • குழந்தைகளைப் பயன்படுத்தல்

இலங்கையில் 1979ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி விளம்பரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சமகால வணிக நடவடிக்கைகளில் விளம்பரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துதல் இடம்பெறுகின்றன. இதனால் உளவியல் ரீதியில் பல தாக்கங்கள் ஏற்படுகின்றன. இலங்கையில் பால்மாவு உற்பத்திகளைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தமது விளம்பரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துகின்றனர். உதாரணம் அங்கர், என்பங்ரோ, பீடியாபிறோ முதலானவை.

 • தகவல்களைத் தவறாக வழங்குதல்

சில நிறுவனங்கள் விளம்பரப்படுத்தலின்போது தெளிவான, உண்மையான தகவல்களை நபர்களுக்கு வழங்குவது நடைமுறையில் அரிதாகவே காணப்படுகிறது. இதனால் உளவியல் ரீதியில் பல தாக்கங்கள் ஏற்படுகின்றன.

 • பாலியல் ரீதியிலான விளம்பரப்படுத்தல்

சில விளம்பரங்கள் உணர்ச்சிகளையும், உளக்கிளர்ச்சிகளையும் தூண்டுவதாகக் கவர்ச்சியானதாக வெளியிடப்படுகின்றன. இதனைக் குடும்ப அங்கத்தவர்களுடன் சேர்ந்து பார்க்கமுடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலைப்பாடு பல்வேறு வழிகளில் உளவியல் ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இலங்கையில் பெண்கள் பயன்படுத்தும் அனேகமான அலங்காரப்பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்குப் பெண்களைக் கவர்ச்சியான முறையில் விளம்பரங்களில் பயன்படுத்துகின்றனர்.

உதாரணம் கிறீம் வகைகள், சம்போ வகைகள் முதலானவை

 • விளம்பர தயாரிப்பு  நுட்பம்

பெரும்பாலான விளம்பரங்களில் செல்வந்த குடும்பங்களுக்கு ஏற்ற விதத்தில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு, பொதுஜன ஊடகமான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடுவதால் அதனைச் சாதாரண, மத்தியதர வர்க்கத்தினர் பார்வையிடும்போது தாக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

2.நிறுவன ரீதியிலான ஒழுக்கமீறல்கள்

 • போட்டி நிறுவனங்களுக்கிடையிலான மோதல்

வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களைச் சர்வதேச மற்றும் உள்ளூர்ச் சந்தைகளில் எப்பொழுதும் அதன் தரத்தினைக் குறைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கும் ஏனைய போட்டி நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களைப் பின்தள்ளுவதற்கும் பல்வேறு உபாயங்களைக் கையாளுகின்றன.  இதன்படி போட்டி நிறுவன உற்பத்திகளைப் போலியாகத் தயாரித்தல், ஒப்பான பொருட்களைத் தயாரித்தல், குறைந்த விலையில் சந்தையிடல் முதலியன ஒழுக்கமீறல்களை ஏற்படுத்துகின்றன.

 • சந்தையில் நுகர்வோர் எதிர்கொள்ளும் சவால்கள்

சந்தையில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களின் வர்த்தக நாமம், இலட்சினை என்பவற்றுக்கு ஒப்பான அமைப்பில் இன்னுமொரு நிறுவனம் அதனைப் பிரதி செய்வதனால் வாடிக்கையாளர்களுக்குத் தரமறிந்து பொருட்களைச் கொள்வனவு செய்ய முடியாமை.

 • ஒப்பிட்டுப் போட்டிப் பொருளின் தரத்தினை மதிப்பிடுதல்

ஒரு நிறுவனமானது தம்முடைய உற்பத்திப் பொருட்கள் மட்டும்தான் அதி சிறந்தது என்பதனை நுகர்வோரிடம் அடையாளப்படுத்துவதற்கு ஏனைய நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை மறைமுகமாக, குறியீட்டு அடிப்படையில் தரம் குறைவான முறையில் விளம்பரம் செய்தல்.

 • வணிக நிறுவனங்களின் தந்திரோபாயங்கள்

வணிக நிறுவனங்கள் அதீத இலாப நோக்கங்களைக்கொண்டு தமது ஒட்டுமொத்த உற்பத்திகளையும் நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பல தந்திரோபாயங்களைக் கையாளுகின்றன. இதனால் நுகர்வோர் நன்மைகளைப் பெற்றாலும் நுகர்வோரின் சிறு தொகைப்பணத்தின் மூலம் தமது உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு உரிய வழிகள் உள்ளமையால் குறுகிய காலத்தில் குறைந்தளவிலான நன்மைகளைப் பெற்றுத் தமது சேமிப்புப் பழக்கத்தையும் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை.

 1. உடலியல் ரீதியிலான ஒழுக்க மீறல்கள்

வணிகச் சந்தையில் நிலவும் போட்டித்தன்மையால் வணிக நிறுவனங்கள் மக்களின் தேவையை உணர்ந்து புதிய உற்பத்திகளை அறிமுகம் செய்கின்றன. இவை மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றினாலும் காலம் தாழ்த்திப் பல்வேறு வகையான உடலியல் ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

 • நோய்கள் ஏற்படுதல்

வணிக நடவடிக்கைகளில் விளம்பரங்களின் ஊடாக உருவாக்கப்பட்ட நவீன கலாசாரமானது ஆரோக்கியமற்ற மனித சமூதாயத்தை உருவாக்குகிறது. இதனால் தற்கால மனிதர்களிடையே சிறுநீரக நோய், தலைமுடி உதிர்வு, நரம்பு, தோல் சம்பந்தமான நோய்கள் முதலியன ஏற்படுகின்றன. உதாரணமாக இன்றைய சமையல் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அஜினமோட்டோ நரம்பு தொடர்பான பல நோய்களை ஏற்படுத்துவதாக அமெரிக்கப் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் குளிர்பான உற்பத்திகளில் பயன்படுத்தப்படும் இரசாயன பதார்த்தங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. ஆண், பெண் இருபாலரும் தமது தோற்றத்தை அழகுபடுத்துவதற்குப் பல்வேறு வகையான அழகு சாதனப் பொருட்களை நாள்தோறும் தமது அத்தியாவசியத் தேவையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை நன்கு அறிந்து கொண்ட அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மாயைத் தோற்றத்தைக் காண்பித்துத் தமது பொருட்களை விளம்பரப்படுத்துகின்றன. இதில் மயங்கிய இருபாலரும் வயது வித்தியாசம் இன்றி அழகுசாதனப் பொருட்கள் பாவனையின் போதும் பாவனையின் பின்னரும் பல்வேறு மன உளைச்சல்களையும், ஏமாற்றங்களையும் எதிர்நோக்குகின்றனர்.

 1. சமூகவியல் ரீதியிலான ஒழுக்க மீறல்கள்
 • கலாச்சார பாதிப்பு

நாகரீக வளர்ச்சியால் மனிதன் பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களுக்கும் விளம்பரம் தேவை என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலைத்தேய கலாச்சாரத்தில் பாவிக்கும் பொருட்களை பாரம்பரிய, மரபுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகளில் நவீன தொடர்பாடல் சாதனங்கள் ஊடாக விளம்பரம் செய்யும்போது ஏராளமான கலாசார பாதிப்புகள் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன. உதாரணம் சம்போ, கிறீம், சவற்காரம் உள்ளிட்ட பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களை விளம்பரம் செய்யும்போது கவர்ச்சிகரமாகப் பெண்கள் காட்டப்படுவதும், விளம்பரப்படுத்தப்படும் பொருட்கள் குறைவாக முக்கியத்துவப்படுத்தப்படுவதும் நிகழ்கின்றன.இந்நிலையில் “ஆளுக்கா விளம்பரம் அல்லது பொருளுக்கா விளம்பரம்” எனத் தெரியாத நிலை ஏற்படுகிறது.

 • நாகரிக மோகத்திற்கு அடிமையாக்குதல்

விளம்பரங்களில் காட்டப்படும் பொருட்களால் ஆடம்பரமான வாழ்க்கைக்கு மக்கள் அடிமையாகின்றனர். அதாவது விலையுயர்ந்த கிறீம் வகைகள், எண்ணெய் வகைகள், கையடக்கத் தொலைபேசி வகைகள், உடைகள் முதலிய பொருட்கள் நாளாந்தம் விளம்பரங்களில் காட்சிப்படுத்தப்படுவதால் தாமும் அதனைப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் நாளாந்த வாழ்க்கைச் செலவுகள், கடன் சுமைகள் அதிகரிக்கின்றன.

 1. சூழலியல் ரீதியிலான ஒழுக்க மீறல்கள்
 • அமில மழை உருவாக்கம்

உலகின் கைத்தொழில் மயமாக்கல் செயற்பாடானது பல்வேறு சூழலியல் ரீதியிலான தாக்கங்களை உருவாக்கி வருகின்றது. கைத்தொழில் மயமாக்கத்தினால் பெருகி வரும் தொழிற்சாலைகளில் இருந்து வாயுவாக வெளியேற்றப்படும் அமிலத் துகள்கள் வளிமண்டலத்தில் சேர்வதன் மூலம் நகர்ப்புறங்களில் அமில மழை உருவாகிறது.

 • வெப்பநிலை அதிகரிப்பும் பாலை நிலமாதலும்

கைத்தொழில் மயமாக்கத்தினால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால் 2050ஆம் ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரிப்பு பாரிய விளைவினை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்படுகிறது. அதிகரிக்கும் வெப்பநிலையால் மழைவீழ்ச்சி குறைவதோடு பெரும்பகுதி பாலைநிலங்களாகவும் மாறிவருகிறது. இதனால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைவதோடு கரையோரப் பகுதிகளும் கடலில் மூழ்கும் அபாயம் காணப்படுகிறது.

 • ஓசோன் படலப் பாதிப்பும், பரம்பரை அலகுகளில் மாற்றமும்

இன்றைய கைத்தொழில் செயற்பாடுகளில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களால் குறிப்பாக குளோராபுளோரா கார்பன், கந்தக ஒட்சைட், சோடியம் ஒட்சைட் போன்றவை பூமியின் பாதுகாப்புப் படலமான ஓசோன் படலத்தைப் பாதிப்படையச் செய்வதனால் அவற்றினூடாக ஊடுருவும் புறஊதாக் கதிர்வீச்சுக்கள் பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதோடு உடலியல் ரீதியாகப் பல நோய்களையும் ஏற்படுத்துகின்றன. மேலும் பரம்பரை அலகுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

முடிவுரை

சமகால வணிக நடவடிக்கைகளில் விளம்பரத்தைத் தவிர்த்து வணிக நிறுவனங்களால் தமது சந்தைப்படுத்தலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் விளம்பரங்கள் வணிக நடவடிக்கைகளில் ஒன்றித்து போயுள்ளன. இவ்வாறான மிக நெருக்கமான ஒன்றிணைப்பால் பல வழிகளில் சமூதாயத்தில் ஒழுக்கமீறுகைகள் ஏற்பட்டு வருகின்றமை சமகாலத்தில் சாதாரண விடயமாக உள்ளது. எனவே வணிக நிறுவனங்கள் தம் உற்பத்தி சார்ந்த விளம்பரங்களை  நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும்போது மிகவும் பொருத்தமானதாகவும், நம்பகத் தன்மையினை  உறுதிப்படுத்துவதாகவும் அமைய வேண்டியது அவசியமாகும். எனவே விளம்பரங்களானது நுகர்வோரின் பொருள் கொள்வனவை இலகுபடுத்துவதற்கான வழிகாட்டியாக அமைய வேண்டுமே தவிர முற்றுமுழுதாக இலாப நோக்கம் கருதிய நிறுவனங்களின் நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு அமைதல் கூடாது. இவ்வாறு செய்வதனால் ஒழுக்கமீறல்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

இணையத்தள தேடல்

திரவியராசா நிரஞ்சினி

உதவி விரிவுரையாளர்

(தத்துவவியல் மற்றும் விழுமியக் கற்கைகள் துறை)

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. [email protected]

&

மா.யோகராஜ்

முதுகலைமாணி மாணவர்

பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை.

[email protected]