வானம் பார்த்த நிலமான கொங்கு நாட்டிற்கு வரலாற்றில் தனியிடம் உண்டு. இந்நாடு சங்க காலத்திலிருந்தே பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்குகின்றது. இங்கு இரண்டு மடங்கள் தோன்றின. ஒன்று: வீரசைவ மடமான பேரூர் ஆதீனம். மற்றொன்று: கௌமார மடம். இதில் இரண்டாவதாக இடம்பெற்ற கௌமார மடாலாயம் சிறப்பு மிக்கது. இதன் வளாகத்தில் தமிழாய்வுக்காகவே நூலகம் ஒன்று ஏற்படுத்தப்பெற்றுள்ளது. இந்நூலகம் குறித்த பதிவுகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.

அமைவிடம்

கோவை மாநகருக்கு வடக்கே சிரவை அமைந்துள்ளது. இவ்வூர் பிற்காலத்தில் சிரவணபுரம் என்பதாகவும் சரவணம்பட்டி என்பதாகவும் திரிந்தது. அதற்கு அருகாமையில் உள்ள சின்னவேடம்பட்டியில்தான் தண்டபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. அதனருகில் அமைந்துள்ள கௌமார மடாலயத்தில்தான் தமிழாய்வு மைய நூலகம் இயங்கி வருகின்றது.

 நூலகத்தின் தோற்றம்

கௌமார மடாலயம் அடிப்படையில் தன்னை ஒரு சமய நிறுவனமாக அடையாளப்படுத்திக் கொண்டது. இருப்பினும் சமயம், இலக்கியம், இலக்கணம், பொதுக்கல்வி, மருத்துவம், விளையாட்டு எனப் பல்துறை சார்ந்த பணிகளையும் செய்து வருகின்றது. சிரவையாதீனம் தவத்திரு சுந்தர சுவாமிகளின் சீரிய முயற்சியால் 28.11.1997ஆம் ஆண்டு 1200 புத்தகங்களுடன் நூலகர் டாக்டர் பத்மநாபன் அவர்களால் தொடங்கப்பட்டது.

முதன்மை நோக்கம்

சிரவையாதீனத்தின் முதல்பணி நூல்கள் இயற்றல், உரைகாணல், பதிப்பித்தல், இதழியல் போன்றவை ஆகும். ஆபத்து இல்லாத ஒரு நல்ல நண்பன் நூல் என்பதற்கு ஏற்ப சிறந்த நண்பனாகத் திகழும் நூல்களை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் அரும்பணியை இம்மைய நூலகம் முக்கிய நோக்கமாகக் கொண்டு கிடைத்தற்கரிய பல நூல்களை நிலைமின் படிகளாக (Xerox Copy) சேமித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மாந்தர் மனக் கோட்டம் தீர்ப்பது நூல் என்பதற்கு ஏற்ப தடுமாறிய உள்ளங்களைச் சீர்படுத்திச் செம்மை பெறச் செய்யும் நூல்களின் தொகுப்புக் களஞ்சியமாகவும், அறிவாலயமாகவும், அறிவுமலர்ச் சோலையாகவும் விளங்குகின்றது இந்நூலகம் என்கின்றார் சிரவையாதீனக் கவிஞரும் நூலகருமான ப.வெ.நாகராஜன்.

நூல்கள் விவரம்

சிரவையாதீன தமிழாய்வுமைய நூலகத்தில் சுமார் 8100 தமிழ் நூல்களும், 1000 சிறப்பு மலர்களும், 510 ஆங்கில நூல்களும், 55 பிறமொழி நூல்களும், அச்சில் கிடைக்காத சில அரிய நூல்களும் உள்ளன. ஆதீன அன்பர்கள், நூலாசிரியர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் தமிழகத்தின் தலை சிறந்த பேராசிரியர்கள் பலரும் அரிய நூல்களை இந்நூலகத்திற்கு அன்பளிப்பாகத் தந்துள்ளனர்.

இந்நூலகத்தில் சாமிநாதம், உ.வே.சா. முன்னுரைகள், சங்க இலக்கிய நூல்கள், பக்தி இலக்கிய நூல்கள், உரையாசிரியர் நூல்கள், ச.வே.சு. அவர்கள் பதிப்பித்த தமிழ் இலக்கண நூல்கள், கிருபானந்த வாரியாரின் கந்தவேல் கருணை, ஆறுமுகநாவலரின் திருவிளையாடற் புராணம், தலபுராணங்கள், பெரியபுராணம், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடற்றிரட்டு, வீரமா முனிவரின் தேம்பாவணி, திருவாசம், மெய்கண்ட சரித்திரம், சொல்லகராதிகள் எனப் பல நூல்கள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

அரிய நூல்கள்

 1. 1908 : புலவர் புராணம் – தண்டபாணி சுவாமிகள், கலாரத்தினாகரம் அச்சுக் கூடம், சென்னை.
 2. 1928 : திருவிளையாடற் புராணம் – நா.கதிரைவேற்பிள்ளை, வித்யாரத் நாகா அச்சகம், சென்னை.
 3. 1933 : தனிப்பாடற்றிரட்டு மூலமும் உரையும், வித்யாரத் நாகா அச்சகம், சென்னை.
 4. 1936 : பெரியபுராண வசனம் – அருணாச்சால முதலியார், வித்யாரத் நாகா அச்சகம், சென்னை.
 5. 1936 : Tamil Lexicon, University of Madras, Madras.
 6. 1975 : பஞ்ச மரபு இசைத்தமிழ் நூல், வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணி, ஈரோடு.
 7. 1979 : பாவலர் சரித்திர தீபகம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு.
 8. 1985 : செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி, அகரமுதலி வெளியீடு.
 9. 1988 : மெய்கண்ட சாத்திரம் – தருமபுர ஆதீனம்.
 10. … : நாலாயிர திவ்ய பிரபந்தம், திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை.
 11. … : தேம்பாவணி, வீரமா முனிவர், தமிழிலக்கியக் கழகம், திருச்சி.
 12. … : தொல்காப்பியத் தெளிவு, சோ.ந.கந்தசாமி, அபிராமி பதிப்பகம், அண்ணாமலைநகர்.
 13. … : எதிர்ப்பத அகராதி, பாரி நிலையம், சென்னை.
 14. … : அறுவகை இலக்கணம், தண்டபாணி சுவாமிகள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 15. … : பஞ்ச காவிய நிகண்டு, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
 16. … : சிற்றிலக்கியத் திரட்டு, வையாபுரிப்பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

இதழ்கள்

சிரவை ஆதீனதின் குரலாகவும், செய்தி மடலாகவும் 1980ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் திங்கள் இதழ் ஒன்று வெளியிடப்பட்டது. இம்மாத இதழ் 2001 திசம்பர் வரை மாதாந்திர அமுதம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 2002 மார்ச்சு மாதத்திலிருந்து கௌமார அமுதம் என்ற பெயரில் வெளிவருகின்றது. சமயம், இலக்கியம் சார்ந்த பல்வேறு இதழ்கள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

வேலை நேரம்

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்நூலகம் மாணவர்கள் பயன்பாட்டிற்குச் செயல்பட்டு வருகின்றது. வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் விடுமுறையாக உள்ளது.

வாசகர்கள்

      இந்நூலகம் பொது நூலகமல்ல. இஃது ஆய்வு மாணவர்களுக்கான (M.Phil., Ph.D.,) நூலகமாக இயங்கி வருகின்றது. இந்நூலகத்தைப் பயன்படுத்துவதற்கு எவ்விதக் கட்டணமும் பெறுவதில்லை. மடத்தின் நிதியிலிருந்து நூல்கள் வாங்கப்படுகின்றன. ஆய்விற்குத் தேவையான நூல்களைப் பார்வையிட வரும் மாணவர்களுக்கு உணவும், தங்குவதற்கான உறைவிடமும் இலவசமாக ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளது. இதுவரை இந்நூலகத்தைக் கோவை பாரதியார், சேலம் பெரியார், கொடைக்கானல் அன்னைத் தெரசா, சென்னைப் பல்கலைக்கழகம் எனப் பல்வேறு பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் பயன்படுத்தி, தங்களின் ஆய்வேடுகளை அளித்துள்ளனர். இலக்கிய ஆர்வலர்கள், நூல்களின் மதிப்பினை உணர்ந்தவர்களும் இந்நூலகத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறப்புகள்

சமயப்பணியோடு ஆய்வுப் பணியையும், அறிவுப் பணியையும் செய்து வரும் இத்தமிழாய்வு நூலகத்திற்குத் தமிழறிஞர் மா.ரா.போ.குருசாமி, ஐ.கே.சு., சிற்பி, பேராசிரியர் வே.மாதவன், கல்வெட்டறிஞர் ராசு, பேரூராதீனம் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஊருக்கு வெளியே உலகமே இல்லை என்று எண்ணும் ஊர்த் தவளையாக உலா வராமல் மாணவர்களுக்குப் பரந்துப்பட்ட உலகைக் காட்டும் கண்ணாடியாகத் திகழ்கின்றது இந்நூலகம்.

நன்றிக்குரியோர்

 1. பெரும்புலவர் ப.வெ.நாகராஜன் – நூலகர்
 2. திருமதி இரா.கவிதா பி.லிட்., – நூலகர்

ப.மணிகண்டன்

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி

கோவை, தமிழ்நாடு, இந்தியா

[email protected]

9894489496