இணையப் பயன்பாடு மிகுந்துவரும் இக்காலத்தில் அதனுடன் இணைந்து பயணிக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இப்பயணம் பல்வேறு நிலைகளில் அமைந்துள்ளது. அவற்றைச் சமூக வலைதளம் (Social Network), பொதுத்தளம் (Public Site), மின்நூலகம் (e-Library), மின்பதிப்பகம் (e-Publication), மின்னிதழ் (e-Journal), பிளே குறுஞ்செயலிக் கிடங்கு  (Play Store) எனப் பல வகைகளில் காட்டலாம். இவற்றுள் குறுஞ்செயலிக் கடையைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். இதில் குறுஞ்செயலிகள் (Apps) நிரம்ப உள்ளன. குழந்தைகள் முதல் முதியவர் வரை வாசிக்கத் தகுந்தவையும் கற்கக் கூடியவையும் உள்ளன. அவற்றின் மூலம் சிந்தனைகளைச் செல்பேசிகளில் நிறுவிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பிறமொழிகளுக்கான நூல்கள் குறுஞ்செயலிகளாகக் கிடைக்கப்பெறுகின்றன. தமிழுக்கு  அவை மிகக் குறைந்தளவிலேயே உள்ளன. ஆயினும், நூல்கள் அனைத்தும் குறுஞ்செயலிகளாக உருவாக்கப்பட வேண்டும். அதற்கு, ஜாவா (Java) எழுதும் திறன் அவசியம். இதனைப் பூர்த்தி செய்வதற்குச் சில நிறுவனங்கள் பொது வடிவமைப்பை (Template) உருவாக்கி இணையத்தில் குறுஞ்செயலி உருவாக்கும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளன. அதற்கான காணொளிகளும் (Video) யுடியூப் (Youtube) வலைப்பக்கத்தில் உள்ளன. அதனைப் பார்த்தும் உருவாக்க முயற்சிக்கலாம். இங்குக் குறுஞ்செயலியூற்று (AppsGeyser) எனும் நிறுவனத்தின் மூலம் குறுஞ்செயலி உருவாக்கும் முறை பற்றிக் கூறப்பெறுகின்றது. 

குறுஞ்செயலியூற்றுவழிக் (AppsGeyser) குறுஞ்செயலி உருவாக்கம்

குறுஞ்செயலியூற்று (AppsGeyser) எனும் நிறுவனம் பல்வேறு  வகையில் குறுஞ்செயலிகளை உருவாக்க வழிவகை செய்து தந்துள்ளது. இதன் மூலம் குறுஞ்செயலிகளை உருவாக்குவதற்குப் பதிவுசெய்து  கொள்வது நல்லது. அதனைப் பதிவு செய்வதற்கு உள்ளீட்டுப்  (Login) பொத்தானை அழுத்த, பின்வரும் படம் தெரியும்.

படம்: 1

இப்பதிவு நிகழ்ந்த பின்பு தங்களுக்கான ஒரு கணக்கு உருவாக்கப் பெறும். அதன் மூலம் புதிய குறுஞ்செயலிகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

படம்: 2

அதில் உள்ள Create New (புதிது) எனும் பொத்தான் அமைந்திருக்கும். அதனை அழுத்தியவுடன் பின்வரும் படம் தோன்றும்.

படம்: 3

இப்படத்தைக் கவனித்தால் குறுஞ்செயலி உருவாக்கத்திற்கான வார்ப்புருக்கள் (Template) தோன்றுவதைக் காணலாம். இதில் இணையதளம் (website), தூதுவன் (messenger), உலாவி (browser), வலைப்பூ(blog), புதிது (new), முகநூல் பக்கம்(facebook page), ஒளிப்படத் திருத்தி (photo editor), எண்பொறி (slot machine), புதிர்ப்பொறி (matching puzzle) போன்றவையும் உள்ளன. இவை பகுப்பியல் (category) அடிப்படையிலும் வகைப்படுத்தப் பெற்றுள்ளன. அனைத்தையும் பார்வையிடுவதற்கான வழியும் உள்ளது. நூலைக் குறுஞ்செயலியாக உருவாக்க ஊடகம் (media) எனும் பகுப்பை அழுத்த வேண்டும். அதில் உள்ள வார்ப்புருக்களைக் குறிக்கும் படம் வருமாறு:

படம்: 4

இப்படத்தில் உள்ள ஆவணம் (Document) எனும் அமைப்பு நூல் உருவாக்கத்திற்கானதாகும். அதனைத் தொட, பின்வரும் பகுதி உருவாகும்.

படம்: 5

இப்படத்தில் உள்ள வழிமுறையின்படி PDF, .Doc, .docx, .ppt, .pptx போன்ற அமைப்புடைய கோப்புகளை உள்ளீடாகத் தருதல் வேண்டும். அதனைத் தருவதற்கான வழிமுறைப்படம் வருமாறு:

படம்: 6

படம்: 7

இவ்வழிமுறைப் படத்தின்படி உள்ளீடு செய்யப்பெற்ற கோப்பு ஏற்கப்பட்டால், அடுத்த வழிமுறைக்குச் செல்லும் பொத்தானை அழுத்த, பின்வரும் அமைப்புத் தோன்றும். அதில் குறுஞ்செயலியின் பெயர் தரப்படல் வேண்டும். அப்பெயர் Capital Letterஇல் இருத்தல் வேண்டும். குறிப்பாக, ஆங்கிலத்தில் அமைதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைக் குறிக்கும் படம் வருமாறு:

படம்: 8

இச்செயல்பாடு நிறைவு பெற்றவுடன், இச்செயலிக்கான குறிப்பு நிரப்பப்படுதல் வேண்டும். அக்குறிப்பு நூலின் சிறப்பை எடுத்தியம்பும் முகமாக அமைதல் நன்று. அதனைக் குறிப்பிடும் படம் வருமாறு:

படம்: 9

இப்பதிவு முடிந்தவுடன், செயலிக்கான படத்தைப் பதிவேற்றுதல் வேண்டும். அப்படம் 512 x 512 அளவுடையதாக இருத்தல் சிறப்புடையது. இவ்வளவுடைய படத்திற்குள்  நூல்பெயர், நூலாசிரியர் பெயர் ஆகியவற்றை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். அதனைப் பதிவேற்றக் கூடிய வழிமுறையைக் காட்டும் படம் வருமாறு:

படம்: 10

இப்பதிவேற்றம் முடிந்தவுடன் படம் பதிவேற்றப் பட்டதற்கான அமைப்புத் தோன்றும். அப்படம் வருமாறு:

படம்: 11

இச்செயல்பாடு முடித்தவுடன் உருவாக்குதல் (Create) எனும் பொத்தானை அழுத்துதல் வேண்டும்.

படம்: 12

இப்பொழுது வெளியிடுவதற்குத் தகுதியுடைய குறுஞ்செயலியாக அமைந்துள்ளது. அதனை வெளியிடுவதற்கு வெளியீடு (Publish) எனும் பொத்தானை அழுத்த, பின்வரும் படம் தோன்றும்.

படம்: 13

இக்குறுஞ்செயலியைப் பதிவிறக்கம் (Download) செய்வதற்கு வெளியீடு (Publish) எனும் பொத்தானின்கீழ் உள்ள சோதனைக் குறுஞ்செயலி (or test your app) எனும் குறிப்பை அழுத்த, பதிவிறக்கும் குறியீடு (Download) காண்பிக்கப்பெறும். அதனைத் தொடின் பதிவிறக்கம் ஆகும். அதனைக் காட்டும் படம் வருமாறு:

படம்: 14

படம்: 15

இப்பொழுது பதிவிறக்கம் செய்யப்பெற்ற குறுஞ்செயலி செயல்படுகிறதா என்பதைச் செல்பேசியில் நிறுவிச் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். பதிவிறக்கம் ஆன செயலி இணையப் பயன்பாட்டின்போதுதான் செயல்படும் என்பது கவனித்திற்குரியது. அதனைச் சரிசெய்துகொள்ளப் பின்வரும் படங்கள் காட்டும் வழிமுறைகளைப் பின்பற்றுக.

படம்: 16

உருவாக்கப்பட்ட குறுஞ்செயலியை google play, amazon போன்ற விற்பனைத் தளத்தில் பதிவேற்றப் பின்வரும் வழிமுறைப் படத்தின் மூலம் அறிந்து கொள்க.

படம்: 17

படம்: 18

முடிப்பாக, இங்குக் கூறப்பட்ட வழிமுறைகளின்படிக் குறுஞ்செயலி உருவாக்கத்தை மேற்கொள்ள இயலும். இதனைப் பின்பற்றி நாட்டுடைமையாக்கப்பெற்ற நூல்கள் அனைத்தையும் குறுஞ்செயலிகளாக உருவாக்கிப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

துணைநின்றவை

  1. சுந்தரம் இல., 2015, கணினித்தமிழ், விகடன் பிரசுரம், சென்னை.
  2. appsgeyser.com
  3. youtube.com

 முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

கோயமுத்தூர் – 28