Abstract: The paper aims to present the method of online learning for Tamil society improvement.

முன்னுரை

நீண்ட நெடிய பாரம்பரியமும் தொன்மைச் சிறப்பும் மொழிவளமும் இலக்கியவளமும் கொண்டு உயர்தனிச் செம்மொழியாய் உலகை வலம்வந்து கொண்டிருப்பது தமிழ்மொழி. காலம்காலமாகப் பல்வேறு மாற்றங்களை அடைந்து இன்று தொழில்நுட்பத்தின் வழியாகத் தமிழை இனிமையாகவும் எளிமையாகவும் கற்றுக்கொடுப்பதற்குரிய சூழல் இணையத்தின் மூலம் உருவாகி உள்ளது.  இணையக் கழகம் Internet Society என்னும் தன்னார்வ இயக்கம் ஒன்று 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இணைய நுகர்வோரின் எண்ணிக்கை 400கோடியைத் தாண்டும் எனக் கணித்துள்ளது. இது உலகமக்கள் தொகையில் 6% ஆகும். உலகில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஓர் ஆசிரியர் பயன்விளைவு மிக்க தகவல்களைத் தெரிவு செய்வதிலும் மதிப்பீடு செய்வதிலும் மிகுந்த கவனத்தைச் செலுத்துவது அவசியமாகிறது.

எதிர்காலத் தொழில்நுட்பங்கள்

ஒரு மொழியை அனைவரும் சிறப்பாகப் பயன்படுத்த தொழில்நுட்பம் பலவகையிலும் பயன்பட்டு வருகிறது. தொழில்நுட்பங்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. அவற்றுள் இணையத்திற்கு ஒரு விசித்திரமான தன்மை உண்டு. தனியாள் இயக்கங்கள் உயர்கல்விக் கூடங்கள் அல்லது எவர் வேண்டுமென்றாலும் எந்நேரத்திலும் எத்தகவல்களையும் தங்குதடையின்றிச் சுதந்திரமாக வெளியிடலாம். கணினியின் விலைமதிப்பு அதிகமாக இருந்தாலும் www.geocities.Com  www.tripod.com  போன்ற வலைத்தளங்கள், இணைய நுகர்வோர் தத்தம் கருத்துக்களை இலவசமாக வெளியிட பற்பல வசதிகளை ஏற்பாடு செய்து தருவதால் கட்டுப்பாடற்ற நிலையில் நல்ல தகவல்களும் தீய தகவல்களும் குன்று போல் குவிந்துவிடுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாக

மின்னூல்வழிக் கற்றல் (Learn through E – book)

குறும்படம்வழிக் கற்றல் (Learn through Digital Video)

திறன்பேசிவழிக் கற்றல் (Learn through SmartPhone)

ஆகியன சிறப்பாகப் பயன்பட்டு வருகின்றன.

மின்னூல்வழிக் கற்றல் (Learn through E–book)

முற்காலத்தில் கல்வெட்டுக்களிலும் ஓலைச்சுவடிகளிலும் காகிதங்களிலும் நூல்களிலும் தமிழ்மொழியைக் கற்று வந்த காலம் மாறி, இன்று அறிவியலின் அதீத வளர்ச்சியில் மின்னூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. கணிணி, மடிக்கணிணி, தொட்டுணர்கருவி (I pad) போன்றவற்றில் தமிழ்நூல்களைப் பதிவேற்றம் செய்து இருந்த இடத்தில் இருந்து கொண்டு வாசிப்பதற்கு ஏற்புடையதாக அமைவதே மின்னூல் தொழில்நுட்பம் ஆகும்.

இன்றைய சூழலில் கணினித் தொழில்நுட்பம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்று. அதன்வழிப் பதிவேற்றம் காணும் மின்னூல்கள் நூலகம் சென்று புத்தகம் தேடும் நேரத்தைக் குறைத்துக் கற்கும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. தமிழில் உள்ள பல்வேறு வகையான நூல்களை நினைத்த நேரத்தில் கற்பதற்கும் கற்கும்போது ஏற்படும் ஐயப்பாடுகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும் நூலில் உள்ள கருத்துக்களைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கும் உரிய வழிமுறைகள் மின்னூலில் அதிகமாக உள்ளன. அனைவரின் விருப்பத்துக்கு ஏற்ப நூல்களைத் தேர்வு செய்து கற்பதற்குரிய வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்குத் தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது. மேலும் தனக்குள் மறைந்து இருக்கும் எழுத்துப் படைப்புகளை உலகோருக்கு எடுத்து இயம்பும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக தரமான தமிழ்ப்படைப்புகள் படிக்கும் வாசகர்களை உடனுக்குடன் சென்றடைவதுடன் அதனைச் சார்ந்த நல்ல கருத்துக்களும் இணைய கருத்துப் பரிமாற்றங்களும் தரமான தமிழ் மின்னூல்கள் படைக்க அபரிதமான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

மின்னூல்வழிக் கற்பதால் பல புத்தாக்கச் சிந்தனைகளும் மாற்றங்களும் உருவாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பசுமைநிறைந்த உலகை உருவாக்குவதற்கு, காகிதங்களின் தேவை பெரிதும் குறைவதால் மரங்களின் ஆயுள்காலம் அதிகரிக்கப்பட்டு வருங்காலச் சமுதாயம் செழுமையுடன் வாழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தெளிவான எழுத்துக்கள் உடனுக்குடன் மின்னுலகில் உலாவருவதன் மூலம் அதிகமான செய்திகளைக் கற்று அறியும் வாய்ப்பு, நிறைய நூல்களைத் திரட்டிப் படிக்கும் எளிய முறை போன்றவை மின்னூல்வசம் நம்மை இழுக்கும் சக்திகளாக மாறி உள்ளன. காணொளி இசை, வண்ணமயமான விளக்கப்படங்கள், இணையப் பக்கம் வழி இருவழித் தகவல் பரிமாற்றங்கள் மூலம் தமிழில் எழுதவும் படிக்கவும் எண்ணற்ற வாய்ப்புகளை மின்புத்தகங்கள் வழங்குகின்றன.

குறும்படம்வழிக் கற்றல் (Learn Through Digital)

தமிழ் கற்றல் கற்பித்தல் மேம்பாட்டிற்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும் தொழில்நுட்பங்களில் மின்வழித் தயாரிக்கும் குறும்படமும் ஒன்று. காலம்காலமாகக் கற்ற பாடங்களை, சோதனை முறைகளையே பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அதிவேகமாக வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பம் கற்றல் சோதனைகளை மாற்றி அமைத்துவிடுகிறது. பாடத்தலைப்புகளை ஒரு நிமிடம் முதல் இரண்டு நிமிடத்திற்குள் இணையத்தின்வழித் தொடர்புடைய அனைத்துச் செய்திகளையும் சேகரித்து விறுவிறுப்பான குறும்படம் தயாரித்து ஒப்படைக்கும் சூழலில் அதிகநேரம் செலவு செய்யாமல் சுருங்கக்கூறி விளங்கவைக்கும் திறனை வளர்த்துக்கொண்டு தன்னம்பிக்கையுடன் அப்படைப்பை உருவாக்கவும் செய்கிறார்கள். பலநாட்கள் பல இடங்களுக்குச் சென்று பலநூல்களைக் கற்றுப்படைத்த நிலைமாறி குறும்படத்தின்வழி குறுகிய நேரத்தில் பலவிதமான செய்திகளை ஒன்றுதிரட்டி உருவாக்கும் படைப்பு தமிழ் மொழியைக் கற்போருக்குச் சுமையாக இல்லாமல் சுகமாகவே அமைகிறது.

திறன்பேசிவழிக் கற்றல் (Learn through Smart Phone)

இன்றைய சூழலில் நம்மிடையே திறன்பேசி என்பது உயிரும் உடலும் போல இரண்டறக் கலந்த ஒன்றாக அமைந்திருக்கிறது. அதன்வழியாகத் தமிழ்மொழியை மிகுந்த ஆர்வத்துடன் பயன்படுத்த முயல்வதைக் காணமுடிகிறது. பெரும்பாலானோரிடமும் திறன்பேசி பயன்பாட்டில் இருப்பதாலும் அடிப்படையில் தமிழ் எழுத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளதாலும் கற்றல் கற்பித்தல் எளிமையாக நடைபெற வழிவகுக்கிறது. உலகநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடையில்லா இணையச்சேவை கைத்தொலைபேசிக் கல்விமுறை தமிழ்மொழி வளர்ச்சிக்குப் புதுப்பாதை அமைத்துத் தந்துள்ளது. எளிமையான கட்டமைப்பு மூலம் தமிழ்ப் பயனீட்டாளர்களை ஒருமுகப்படுத்துவதற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் தமிழில் கலந்துரையாட முடிகிறது. பாடத்திட்டங்கள் வாசிக்கும் வழிமுறைகள் கணிணி, இணையம், திறன்பேசி இம்மூன்றையும் ஒருங்கிணைப்பதன் மூலம் தமிழ்மொழியை எளிமையாகவும் இனிமையாகவும் பயன்படுத்த முற்படுகின்றனர்.

 

முடிவுரை

தொன்மைமிக்க தமிழ் தனக்கே உரிய அழகை, செழுமையை நம்மிடம் அடையாளம் காட்ட இணையம் சிறந்தவொரு வழித்தடமாக அமைந்துள்ளது. இனிவரும் காலம் இளைய சமுதாயம் தமிழைச் சுவாசிக்க, நேசிக்க, புதுவகையான சிந்தனைகளை உள்ளடக்கிப் புத்தாக்க எழுச்சியோடு செம்மொழியை உலகோர் அனைவரும் கசடறக் கற்க, 21ஆம் நூற்றாண்டையும் கடந்து அதன்படி நிற்க, புதிய ஊடகமும் இணையமும் புத்தாக்கச் சிந்தனையும் பேருதவி புரியும் என நம்பலாம்.

சான்றாதாரங்கள்

முனைவர் ப. சண்முகராணி
முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்
ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளிர் கல்லூரி
தூத்துக்குடி
[email protected]