ஒவ்வொரு சமூகமும் ஒரு பண்பாட்டு வட்டத்திற்குள் செயல்பட்டுவருகின்றது. அவ்வகையில் தமிழ்ச்சமூகமும் தனக்கென ஒரு பண்பாட்டை வரையறுத்துக்கொண்டுள்ளது. அப்பண்பாட்டுச் சூழலால் பிணிக்கப்பட்ட மனிதன் தான் கூறவரும் கருத்துகளை வெளிப்படையாகக் கூறிவிட முடிவதில்லை. இத்தகு சூழலில் தன்னுடைய கருத்தை முழுமையாக ஒரு மனிதன் வெளிப்படுத்தக் குறியீடுகள் பெருந்துணை புரிகின்றன. சங்க இலக்கியக் கூற்று மாந்தர்கள் அனைவரும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவேண்டிய அவசியம் இருப்பதால் அக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதுடன் தத்தம் உள்ளக்கருத்துகளையும் எவ்வாறாயினும் வெளிப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் குறியீடுகளைப் பயன்படுத்தக் காரணமாக அமைகின்றன. அவ்வகையில் சங்கப்புலவர்கள் குறியீடுகளைப் பயன்படுத்தி எவ்வாறு பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கங்களைத் தங்களது கவிதைகளில் கட்டமைத்துள்ளனர் என்பதையும் ஃபிராய்டு பாலியலை உளவியல் நோக்கில் எவ்வாறு அணுகியுள்ளார் என்பதையும் ஆராயும் முகமாக இக்கட்டுரை விவரிக்கின்றது.

பாலியல் கல்வி

அகத்திணை ஓர் பாலிலக்கியம். அகத்திணையில் காதலை மையமாகக் கொண்டு நுண்மையான, அதே சமயம் அனுபவிக்கக் கூடிய உணர்ச்சிகள் பல உள்ளன. பெயரில்லாதோர் வாழ்க்கையிலிருந்து காம நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கிறது. காமம் பற்றிய ஆணுடல் பெண்ணுடலின் கூறுகளையும், இயற்கை செயற்கை திரிபு ஆகிய மனக்கூறுகளையும் உள்ளது உள்ளபடியே சொல்வது பாலிலக்கண நூல். அந்நூல் வாழ்வைத் தொடாது, அறிவைத் தொடாது, அதனைக் கற்பவர் அறிவுநிலையைப் பெறுவாரேயன்றிக் காதலுக்கு இன்றியமையாத உணர்ச்சி நிலையைப் பெறமாட்டார். சமுதாயத்தோடு இசைந்த புணர்ச்சி நிலையை எண்ணமாட்டார்.

பசியும் பாலுணர்வும் உயிரினங்களுக்கு இயற்கை அளித்த கொடை. உயிரினங்களின் சந்ததிச் சங்கிலி அறுபடாமல் தொடர, தமது இனத்தைத் தொடர்ந்து பெருக்கிக் கொண்டே செல்ல, இனப்பெருக்கத்திற்கான இயல்பூக்கமாக பாலுணர்வு அமைந்துள்ளது. உயிரினங்களின் வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் இதன் பொருட்டே ஆகும். அதனால்தான் சங்கப்புலவர்கள் காதலைச் சிறப்பித்துப் பல கோணங்களில் பாடியுள்ளனர். எண்ணிக்கையும் பெறுகின. ஒருவர் அனுபவிக்கும் காதல் உணர்வை மற்றவரால் அனுபவிக்க முடியும். அந்த அனுபவத்தைக் கலை இலக்கியம் வழியில் சுய அனுபவமாக வெளிப்படுத்தவும் முடியும். பெண்ணின் துயரத்தை, மகிழ்ச்சியைக் கூட ஆண் புலவர்களால் கவிதை வார்க்க முடியும். தம்மைப் பெண்ணாக மாற்றிக்கொண்டு (நாயகி – நாயகன் பாவம்) பெண் உணர்வைப் புனைய முடியும். இவையாவும் காதலால் மட்டுமே சாத்தியம். மாறாக, வீர உணர்வைப் பிறரால் ஆழமாக உள்ளார்ந்து அனுபவிக்கவோ எதிர்வினை விளைவிக்கவோ முடியாது. அதனால்தான் சங்கப்புலவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ அகப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். மற்றவருக்கும் மகிழ்வை ஊட்டினர்.

குறியீடு – சொற்பொருள் விளக்கம்

“ஒரு சேர நிற்றல் ‘ஒன்றாக இணைத்தல்’ என்னும் இரு பொருண்மைகளைக் கொண்டது. ‘சிம்பலின்’ (Symbellein) என்னும் கிரேக்க வினைச் சொல் (Alex Preminger – 1975:883). ஒரு குறியீடு “புலன்களால் அறியப்படும் ஒரு பருப்பொருளையும் அப்பொருளால் உணர்த்தப்படும் நுண் கருத்தையும் ஒரு சேர வைப்பதால் இச்சொல் பொருட்பொருத்தம் பெறுகிறது”. (எஸ். ஆவுடையப்பன் – 1988:82). இவ்வினைச் சொல்லை மூலமாய்க் கொண்டு ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட பெயர்ச்சொல் ‘சிம்பல்’ (Symbol) என்பது. இச்சொல் “ஒரு பொருள் அல்லது ஒரு கருத்துக்குப் பதிலாக நிற்கும் ஒரு குறி அல்லது ஒரு பொருள்” எனப் பொருண்மை பெறுகின்றது (J.A. Cuddon 1977:915).

கிரேக்கச் செவ்வியல் மரபினரிடம் வழக்கிலிருந்த ‘தோ சிமியோன்’ (To Semion) என்ற சொல்லை மூலமாய்க் கொண்டு ஆங்கிலத்தில் சீமியாடிக்ஸ் (Semiotics) ‘சீமியாலஜி’ (Semiology) என்ற சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மூலச்சொல்லான கிரேக்கச்சொல் ‘குறி’ என்ற பொருண்மை கொண்டதாகவே வழங்கப்பட்டது.

‘அடையாளம்’, ‘இலச்சினை’, ‘குறி’ முதலிய பல பொருண்மைகளை உள்ளடக்கியது ‘சிம்பலான்’ (Symbolon) என்ற கிரேக்கச் சொல்.  இதனடியாக உருவாக்கப்பட்ட சைன் (Sign) என்னும் ஆங்கிலச் சொல்லானது ஒரு கருத்து அல்லது பொருண்மையைத் தெரிவிக்கும் குறி என்பது உட்படப் பல பொருண்மைகளைக் கொண்டதாக விளங்குகிறது (J.A Cuddon-1977:30).

‘சிம்பல்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு உரிய நிகரனாக தமிழில் படிமம், குறியீடு என்னும் சொற்கள் ஆளப்படுகின்றன. (இராம.பெரியகருப்பன், 1978 : 230), (வை.சச்சிதானந்தன், 1983 : 188) (கதிர்.மகாதேவன், 1994:311).

குறியீடு என்னும் தமிழ்ச்சொல் ‘ஈடு செய்யும் குறி’ அல்லது ‘ஈடாகி நிற்கும் குறி’ என விரிவடையும். இதன் வழி ஒரு கருத்தினை அல்லது ஒரு பொருண்மையினை ஈடு செய்வதற்காக வேறொன்றின் இடத்தில் தானே பதிலியாக நிற்பது என்ற சொன்மை விளக்கம் பெறப்படும். மேலும், ‘ஒரு கருத்து அல்லது பொருண்மைக்குப் பதிலாக அதனிடத்தில் தான் நின்று சார்பாண்மைப்படுத்துதல்’ மூலம் இச்சொல்லுக்குரிய பொருண்மைப் பொருத்தமும் தெளிவாகும். இதன் மூலம் ‘ஒரு குறியானது தனக்குரிய இயல்பான பொருண்மையினைக் காட்டுவதற்காக அல்லாமல் வேறொரு பொருண்மையினை உணர்த்தும் பொருட்டுப் பதிலியாகச் செயல்படுதல்’ என்பதே குறியீடு என்ற கலைச்சொல்லின் சொன்மை மற்றும் பொருண்மை விளக்கம் என்பதைப் பெறலாம். “குறியை இடுவது குறியீடு என்றாலும், ஒரு இழப்பைக் குறி (அடையாள முத்திரை) ஈடு செய்வதாகவும் கொள்ளுதல் பொருத்தமாகும்” என்னும் அப்துகாதரின் (1987:166) கருத்தும் மேற்கருத்தினை நிறுவும்.

குறியீ – வரையறை

குறியீடு என்னும் சொல்லுக்கு அறிஞர்கள் சிலர் வரையறை தந்துள்ளனர். அவை பின்வருமாறு,

“சமுதாயத்தில் கருத்துப் புலப்படுத்தம் செய்ய மக்கள் பெரிதும் பயன்படுத்தும் குறிகளின் வாழ்வு பற்றிய அறிவியல் கல்வியே குறியியல் ஆகும் என பெர்டினண்டு – டி – சசூர் குறிப்பிடுகின்றார். “குறியியலை அமெரிக்கரும் ஆங்கிலேயரும் ‘Semiotics’ என்ற சொல்லாலும் ஐரோப்பியர் ‘Semiology’என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். குறி (Sign) என்ற பொருளில் வழங்கும் ‘Semeion’ என்ற கிரேக்கச்சொல்லே இவற்றின் வேர்ச்சொல்லாகும்” என்பர் (சூ.ஜோசப் சுந்தரராஜ், 1987:101).

“இலக்கியத்தில் ஒரு பொருளையோ அல்லது நிகழ்ச்சியையோ குறிப்பிட வரும் ஒரு சொல் அல்லது சொற்குறி தன் இயல்பான பொருளைத் தவிர்த்த பிறிதொன்றினைக் குறிப்பிடுவதே குறியீடு” என்பார் (வை. சச்சிதானந்தன், 1983:188).

“ஒரு பொருள் அதனோடு இயைபுடைய இன்னும் ஏதோ ஒரு பொருளைக் குறியிட்டுக் காட்டுவது அல்லது அதற்குப் பதிலாக நின்று தெரியப்படுத்துவது குறியீடு ஆகும்” (ஆரார், 1982: 30).

“ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் (Object). குறியீடு எனப்படும்” என்பார் (அப்துல் ரகுமான்,  1990:19).

“ஏதேனும் ஓர் ஒப்புமை அல்லது ஒட்டுறவால் குறிக்க நினைக்கிற பொருளும் குறித்துள்ள பொருளும் தொடர்பு கொண்டிருக்கும்” (அரங்கராசு, 1991:28).

“ஒரு பொருள் அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளைக் குறித்து நிற்கும் பொழுது குறியீடாகிறது” (அப்துல் காதர், 1987:167).

ஃபிராய்டிய உவிலும் பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கமும்

மனித உள்ளத்தின் வாழ்க்கை முறையைப் பகுத்துக் கூறும் ஓர் அறிவியலே உளவியல். ஒருவனது உள்ளம் அவனுடைய செயல்களின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. எனவே செயலை அறிந்து ஆராய்வதன் வழி உள்ளத்தை நேரடியாக அறிய முடியும். மேலும் “உள்ளத்தை நேரடியாக அறிவதற்கு உபகரணங்கள் மூலம் கணிக்கமுடியும். இங்ஙனமே இலக்கியங்கள் கவிஞனின் உள்ளத்துள் சென்று உணர்வாக்கப்பட்டுப் பின்னர் உணர்ச்சியாக மாற்றம் செய்யப்படுகிறது” என்பார் (வீ.ஆதிபராசக்தி, இலக்கியமும் உளவியலும்: ப.1).

இவ்வாறு, இலக்கியமும் உளவியலும் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. மேலும் சங்க அகஇலக்கியங்களில் புலவர்கள் பாலுணர்வுச் செயல்பாடுகளைப் புனையும் போது குறியீடுகளின் வழி அச்செயல்பாடுகளைச் செம்மையாகக் கட்டமைத்துள்ளனர். இச்சங்க அகக் குறியீட்டாக்கக் கவிதைகளில் இடம்பெற்றுள்ள பாலியல் செய்திகளை ஃபிராய்டின் உளவியல் அணுகுமுறையில் ஆராயும் பொழுது பாலியல் குறித்த தமிழ் மரபினரின் பார்வை (அ) பண்பாடு மேன்மையான கருத்தாக்கம் உடையதாக விளங்குகிறது. சான்றுக்குச் சில பாடல்கள் மட்டுமே கீழே பொருத்திக் காட்டப்பெற்றுள்ளன.

உடல் உறுப்புகளைச் சுட்டுதல், மெய்யுறு புணர்ச்சி பற்றிக் கூறுதல் உள்ளிட்ட பாலியற் செய்திகளைக் கூறிடவும் குறியீடுகள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இவற்றை வெளிப்படக் கூறுதல் இலக்கியப் படைப்பில் விரசத்தன்மை படிய வழிகோலும். ஆதலால் மறைபொருளாகவே கூற வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. இதற்குச் சங்கப் பாக்கள் தொடங்கி இன்றைய திரையிசைப் பாடல்கள் வரையில் பல சான்றுகள் உள்ளன.

காதல் வயப்பட்ட தலைவனும் தலைவியும் உள்ளத்தால் இணைந்தது போல (உள்ளப் புணர்ச்சி) உடலால் இணையும் மெய்யுறு புணர்ச்சியையும் மேற்கொண்டுள்ளனர். இதனை இயற்கைப் புணர்ச்சி என்பர். இயற்கைப் புணர்ச்சியாகிய மெய்யுறு புணர்ச்சி சங்க கால காதல் சமுதாயத்தில் இயல்பாய் இருந்ததைச் சங்கப்பாடல்கள் பல தெரிவிக்கின்றன.

மாயிதழ் மழைக்கண் மாஅ  யோளொடு

      பேயும் அறியா மறையமை புணர்ச்சி 

      பூசற் றுடியின் புணர்புபிரிந் திசைப்பக்

      கரந்த கரப்பொடு நாஞ்செலற் கருமையிற்          

      கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று 

      நெடுஞ்சுழி நீத்த மண்ணுநள் போல 

      நடுங்கஞர் தீர முயங்கி நெருநல்

      ஆகம் அடைதந் தோளே          (அகநா. 62:5-12) 

எனும் பாடல் பேயும் அறியா மறையமைபுணர்ச்சி எனக் களவுக்கால மெய்யுறு புணர்ச்சியைக் குறிப்பிடுகின்றது. நடுங்கும் துன்பம் தீர அணைத்து மார்பைத் தந்தவள் என அப்புணர்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

      பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்

        ஒரு நாள் புணரப் புணரின்

அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே     (குறுந்.280:3-5) 

எனத் தலைவன் ஒருவன் தலைவியின் மார்பை அணைக்கும் ஒரு நாள் இன்பம் கிடைத்தால் போதும், அந்த அரை நாள் வாழ்வே போதும் என இயற்கைப் புணர்ச்சியை வேண்டுகின்றான். இரவுக்குறி பற்றிய பாடல்கள் இந்த இயற்கைப் புணர்ச்சிக்கான களங்களைக் குறித்த பாடல்களாகவே உள்ளன. சான்றாக,

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்

          இரும்புலிக் குருளையிற் தோன்றும் காட்டிடை

 எல்லி வருநர் களவிற்கு

 நல்லை யல்லை நெடுவெண் ணிலவே        (குறுந்.47)

 

எனும் குறுந்தொகைத் தோழியின் கூற்று நிலவுவெளிப்படுதல் களவுக் கூட்டத்திற்கு உதவாது என்பதையும் பிறர் அறியாமல் தலைவியும் தலைவனும் கூடுவர் என்பதையும் வெளிப்படுத்துகின்றது.

பொது மகளிரின் புணர்ச்சி வேட்கையைக் கலித்தொகை,

ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண்கூர்ந்தார் 

             நாறிருங் கூந்தற் பொதுமகளி ரெல்லாரும்

             முல்லையந் தண்பொழில் புக்கார் பொதுவரொடு

             எல்லாம் புணர்குறிக் கொண்டு                  (கலித். 101:47-50)

எனும் அடிகள் விளக்குகின்றன. இவ்வடிகளில் பொது மகளிரின் புணர்ச்சி நடைபெற்றமை (அ) புணர்ச்சி நடைபெறுவதற்கான அடையாளக் குறிகள் காணப்பெற்றமை ஆகியவை மறைபொருளாகவே கூறப்பட்டுள்ளன.

இவ்வாறே தணிகைப் புராணத்தில் “வறங்கூர்ந்தான் கையில் வானுலக அமிழ்தம் கிடைத்தால் அவ்வறங்கூர்ந்தான் விடாத தன்மை போன்று யானும் அவளை நுகர்ந்தே தீருவேன்” (தணிகைப் புராணம், களவு:62) என்று புணர்ச்சி துணிதலைக் கச்சியப்ப முனிவரும் எடுத்துரைப்பார்.

கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை

             பழனத் தாமரைப் பனிமலர் முனைஇத்

             தண்டுசேர் மள்ளரின் இயலி அயலது 

             குன்றுசேர் வெண்மணல் துஞ்சும்          (நற். 260:1-4) 

என்ற நற்றிணைப் பாடலில் ‘மேய்தல்’, ‘துஞ்சுதல்’ என்னும் இரு சொற்களும் உடற்புணர்ச்சியின் குறியீடாக நிற்கின்றன. பாலியற் செய்திகளைக் கூறக் குறியீட்டைக் கையாளும் வழக்கு சித்தர் பாடல்களிலேயும் காணப்படுகிறது. இதனை, ‘ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே, அரசடிப் பொந்தினிலே புகுந்து கொண்டாய’ எனும் இவ்வடிகளில் ‘பாம்பு’ ஆண் குறிக்கும், ‘அரசடிப் பொந்து பெண் குறிக்கும் குறியீடாகியுள்ளன.

ஒரு சொற்றொடரில் வரும் ஒவ்வொரு சொல்லும் ஆழ்நிலையில் தனித்தனியே ஒவ்வொரு பொருண்மையினைக் காட்டும் விதமாக அமைந்துள்ளன.

          பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்

           கழனி ஊரன்                   (ஐங். 4:4-5)

என்பதில் வரும் ‘பூத்த கரும்பு’ என்னும் தொடர் ‘பூத்தல்’, ‘கரும்பு’ என இரு சொற்களாகப் பிரிந்து முறையே, ‘பூக்க மட்டுமே முடிதல்’, ‘பரத்தை’ என்ற பொருண்மைகளைத் தருகின்றன. இதில் பூத்தல் என்பது உடற்புணர்வு இன்பத்தின் குறியீடாகியுள்ளது.

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்     

            பழன வாளை கதூஉம்                 (குறுந். 8:1-2)

           அரில்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி

            குண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்      (குறுந். 91:1-2)

           கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு

            துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்     (குறுந். 164:1-2)

என்னும் பாடலடிகளில் ‘ஒரு வகை மீன்’ ஒரு வகைக் கனியைக் கவ்வுதல்’ என்ற செயல் சித்திரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று சான்றுகளிலும் இடம்பெறும் கனிகள் தலைவனுக்கும் ‘மீன்கள்’ பரத்தைக்கும் குறியீடாகின்றன. இதனை உளக்குறியியல் நோக்கில் காணுதல் இன்னும் தெளிவைத் தரும். ஆழ்மனத்தில் அடக்கப்பட்ட அல்லது அமுக்கப்பட்ட காம உணர்வுகள் ஏதாவது ஒரு வழியில் வெளிப்பட்டே தீரும் என்ற ஃபிராய்டியச் சிந்தனையை இங்கு இணைத்துக் காணமுடிகிறது. மேலும் கனவுகளில் / படைப்புகளில் இடம்பெறும் குழிந்த நிலையிலான பொருட்கள் பெண் குறியையும் குவிந்த வடிவிலான பொருட்கள் ஆண்குறியையும் குறித்து நிற்கும் என்று கூறும் ஃபிராய்டு, கவ்வுதல், நீந்துதல் போன்ற செயல்கள் புணர்ச்சிச் செய்கையின் குறியீடாகும் என்கிறார்.

“குறியீட்டாக்கத்தில் வினை, உரு, பண்பு, உணர்ச்சி முதலிய அடிப்படையில் குறியீடுகள் வெளிப்படுகின்றன என்று ஃபிராய்டு மறைமுகமாகச் சுட்டுகிறார். இதன்படி மரம் ஏறுதல் எனும் வினை கலவிக் குறியீடாகிறது (SE. XV, P. 157). பாம்பு உரு லிங்கக் குறியீடாகிறது (SE .XIV, P. 157). உடையின் பண்பு நிர்வாணத்தின் குறியீடுகளாகின்றது (SE. XVI, P.401-12). இவை அனைத்தும் நனவிலியின் குறியீட்டு வெளிப்பாடுகள் ஆகும்” என்பார் (தி.கு.இரவிச்சந்திரன்: 2011:76-77).

நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக் கலித்து

          பூட்டறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்

          பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்

          அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி

          அருவி ஆம்பல் அகலடை துடக்கி

          அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை 

          விசைவாங்கு தோலின் வீங்குபு  ஞெகிழுங்

          கழனியம் படப்பைக் காஞ்சி ஊர       (அகநா. 96:1-8) 

எனும் இளங்கடுங்கோ பாடல் காட்டும் உவமை ஒப்புமை அடிப்படையிலான உள்ளுறை உவமம் ஆகிறது. இக்குறிப்புப் பொருளுக்கு உள்ளே பல படிமங்கள் ஒப்புமை அடிப்படையில் உவமங்களாகி அவையே குறியீடுகளாகின்றன. இதன் அடிப்படையில் பொய்கையானது பரத்தையர் சேரியாகவும், முள்ளுடைப் பிரம்பின் கொடி அதனைச் சூழ்ந்து திரியும் நெஞ்சு வலிய பாணனாகவும், ஆம்பல் இலை காமஞ்சாலாக் குறுமகளாகவும், அதனைக் கொடி துடக்கியதனைப் பாணன் அவனைத் தலைவனோடு கூட்டியதாகவும் வாடைக்காற்று தலைமகனாகவும், காற்றால் இலை வீங்கியும் சுருங்கியும் கிடப்பதைத் தலைவன் முயங்கிய வழி அவள் களிப்பும் நீங்கியவழி மெலிவும் பெற்றமையும் எனப் பல ஒப்புமைகள் இதனுள் உள்ளன.

ஃபிராய்டியக் குறியீட்டியல் வழியில் இந்த ஒப்புமை நனவிலிக் கூறுகளைத் தெளிவாக்குகிறது. பரத்தையர் சேரிக்குப் பொய்கை குறியீடாக வருவதில் குழிந்த பொருள் பெண்மையோடு ஒப்புமை உடையதைக் குறிக்கிறது. பொய்கை மீன் தலைவனைக் குறிக்கிறது. இது ஐயத்திற்கிடமின்றி ஆண் குறியைக் குறிக்கும் (SE. XV, P. 155). கள் கலந்த நீர் பருகிய மீனின் செருக்கு பாலின்பத்தில் திளைத்ததைக் குறிக்கிறது. உளப்பகுப்பாய்வுபடி போதை மயக்கம் ஒரு விதத்தில் பாலியல் தொடர்புடையது ஆகும் (SE. VII, P. 215-216). ஆம்பல் இலை இப்பாடலில் குறுமகளைக் குறிக்கிறது. இலை போல் தட்டையான பொருட்கள் பெண் குறியைக் குறித்து நிற்பது உளப்பகுப்பாய்வின் முடிவு (இரவிச்சந்திரன். 2005:573). வாடைக்காற்று வீசுதலால் சுருங்கி விரியும் ஆம்பல் இலை என்பதில் காற்று ஆண்குறியைக் குறித்து நிற்கிறது.

“வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி சொல்லியது” என்னும் துறையில் அமைந்ததாகக் குறிப்பிடப்படும் மிளைக்கந்தனாரின் குறுந்தொகைப் பாடலானது,

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே

 தேம்பூங் கட்டி என்றனிர் இனிய

 பாரி பறம்பின் பனிச்சுவைத் தெண்ணீர்

 தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

 வெய்ய உவர்க்கும் என்றனிர்        (குறுந்.196:1-5)

என்பதில் இடம்பெற்றுள்ள பாலியல் குறியீடானது,

வேப்பங்காய் – முழு ஈடுபாடற்ற புணர்வின்பம்

தேம்பூங்கட்டி எனல் – மன நிறைவடைதல்

பனிச்சுவைத் தெண்ணீர் – முழு ஈடுபாடுடன்கூடிய புணர்வின்பம்

உவர்க்கும் எனல் – மனம் நிறைவடையாத தன்மை

களவுக்காலத்தில் தலைவி தனக்குத் தந்த வேப்பங்காயைக் கூட தேம்பூங் கட்டியாகக் கொண்டு மகிழ்ந்த தலைவன், கற்பு வாழ்க்கையின் போது அவள் பறம்பு மலையின் குளிர்ந்த, இனிய நீரைத் தந்தாலும் அந்நீர் உவர்ப்பதாகக் கூறுகின்றான் என்னும் கருத்து, பாடலின் மேல்நிலையில் புலப்படுகிறது. பொதுவாக, களவுக் காலத்தின் / காதலின் போது தலைவி முழுமையான மன ஈடுபாடு கொள்ளாமல், தலைவனின் வன்புறைக்கு உட்பட்டே புணர்வுச் செய்கையில் ஈடுபடுவாள் என்பதும், கற்புக் காலத்தில் எவ்வித அச்சமின்றி முழு விருப்புடன் ஈடுபடுவாள் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

வேரல் வேலிவேர்க் கோட் பலவின்

 சாரல் நாட செவ்வியை ஆகுமதி

 யார் அஃது அறிந்திசி னோரே – சாரல்

 சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்

 உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே       (குறுந். 18)

எனும் கபிலரின் இப்பாடல் தலைவனுக்குத் தோழி கூறியது. அதாவது இரவுக்குறிகண் தலைவியைப் புணர்ந்து செல்லும் தலைமகனைத் தோழி தனியிடத்தே கண்டு தலைவியின் வருத்த நிலை உணர்த்தி, விரைவில் அவளை மணம் செய்து கொள்ளல் வேண்டும் என வற்புறுத்திக் கூறியது. இதன் பனுவல் பொருள் – சிறிய பலாக் கொம்பிலே பெரிய பழம் தூங்கினாற் போன்று தலைவியின் உயிராகிய சிறிய கொம்பில் காமமாகிய பெரும் பழம் கனிந்து தூங்குகிறது. இச் செவ்வி அறிந்து நீ அக்கனியை நுகர்ந்து இன்புறுவாய். இன்றேல் அக்காம முதிர்ச்சி அவள் உயிருக்கு இறுதியைப் பயக்கும் என்று கூறுகிறாள் தோழி. இதன் பொருண்மையில் உயிர்க்குப் பலாவின் சிறிய கொம்பும் அவ்வுயிரின்கண் தோன்றிக் கனிந்த காமத்திற்கு அக்கொம்பில் கனிந்த பலாக்கனியும் ஒப்புவமைகள் ஆகின்றன. இதைச் சுட்டிக்காட்ட ‘அஃது’ எனும் சொல் கொண்டு வெளிப்படையாக இன்னொரு பொருளையும் காட்டுகிறாள் தோழி.

இப்பாடலில் மரத்தில் பலாவின் எடை மையமாக உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, கிளையே முறியும் அளவுக்குப் பலா முதிர்ந்து விடுவதுண்டு. உளப்பகுப்பாய்வு வழியில் இப்படிமத்தை இரு கோணங்களில் அணுகலாம். ஓன்று, நோய் முதிர்ச்சி; மற்றொன்று சுமை.

நோய் முதிர்ச்சி என்பது உளப் பகுப்பாய்வு படி குறிப்பிட்ட எண்ணம் அல்லது கருத்தில் உள ஆற்றல் அதிகமாக ஊட்டம் பெறுவதைக் குறிக்கும். பெரும்பாலும் பாதிப்பு (affect) எண்ணங்களில் இது நிகழும் (Laplanche:13-14). இதன்படி, தலைவி மனம் காம நோயால் பாதிக்கப்பட்டதைப் பாடல் குறிக்கிறது. மற்றொரு கோணமான ‘சுமை’ பாலியல் சுமையைக் குறிக்கிறது. பொதுவாக் கனவில் / புனைவில் ‘சுமை’ வந்தால் தமது பாலியல் உறுப்புசார் சுமையைக் குறிக்கும் (Dundes:251). காவடி எடுத்தல், சிலுவை சுமத்தல் முதலிய சமய நிகழ்வுகளுக்கு இக்கருத்தே பின்புலமாக உள்ளது. (இரவிச்சந்திரன்,2005:575) இவை குற்றவுணர்வின் வெளிப்பாடுகளாகும். பலா முதிர்ந்து கிளை முறிவதுபோல் காமநோய் மிகுந்து மனமுறிவுக்கு (frustration) உள்ளாக நேரிடும் என்று உணர்த்துகிறது. கிளையை முறித்தல் என்பது பாலியல் செயலோடு தொடர்புடையது எனும் குறிப்பும் உள்ளது (Carvelho neto:66). ஒரு வேளை இது ஒரு மூர்க்கப் பாலியலைக் குறிக்கலாம் என்பார் ஃபிராய்டு.

இவ்வாறாக மனித உள்ளங்களை அலசிய ஃபிராய்டு மனித உள்ளுணர்ச்சிகள் என்று காமத்தையும் (Sex), மூர்க்கத்தையும் (aggression) காட்டுகிறார். இந்தப் பாலுணர்ச்சியும் மூர்க்க உணர்ச்சியும் நனவிலியின் ஆதிக்க உணர்ச்சிகளாக இருப்பதைச் சுட்டுகிறார் (SE.XXII.P.96-111). இதன்படி ஃபிராய்டு கூறும் பாலுணர்ச்சியின் வெளிப்பாடாக அகஇலக்கியங்கள் அமைகின்றன.

பாலுணர்ச்சியும் மூர்க்கமும் நனவிலியில் அமைந்திருந்தாலும் பாலுணர்ச்சியே முதன்மை எனச் சுட்டுகிறார் ஃபிராய்டு. அதனால் அவரின் பல கோட்பாடுகள் பாலுணர்ச்சி விளக்கங்களாக விளங்குகின்றன. கனவு முதல் கலை வரையிலான மனித உளப் படைப்புகள் அனைத்திலும் பெரும்பான்மை பாலுணர்ச்சி அடிப்படையிலானவை என்பதை ஃபிராய்ட் சான்றுகளுடன் ஆங்காங்கே விளக்குகிறார்.

சங்க இலக்கியங்களில் பாலுணர்ச்சி பின்னணியிலான காதல் பாடல்களாகிய அகப் பாடல்களே மிகுதி. காதல் இது அன்பு வடிவிலானது எனினும் மறைபொருளாகக் காமம் உள்ளது. இதனால் அமுக்கப்பட்ட பாலுணர்ச்சி அன்பென இடப்பெயர்வாகிக் காதலாகிறது. எனவே காதல் என்பது ஒடுக்கத்தின் குறியீடு. அன்பினுள் உட்பொருளாகக் காமம் இருப்பதால், காதல் செய்கைகளில் மறைக்குறிப்புகள் இயல்பாகப் பெற்று அமைகின்றன. படிமம், குறியீடு, உருவகம் எல்லாம் காதல் இலக்கியங்களின் முக்கிய ஆக்கக் கருவிகளாகின்றன. உளப்பகுப்பாய்வு நோக்கில் மறைபொருட்கள் எல்லாம் மறைமனமான நனவிலியின் வெளிப்பாடுகளாகும்.

நிறைவாக, பாலியற் செய்திகளைக் கூறக் குறியீட்டைக் கையாளும் வழக்கு சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுகின்றன. இதன்வழி, இலக்கியப் படைப்பில் குறியீடுகள் விரசநீக்கக் காரணிகளாகவும் செயலாற்றியுள்ளன என்பதை அறியமுடிகிறது.

காதலை இன்பப் புணர்வுக்கான வழியாகப் பெண்டிர் கருதாத நிலைகளையே சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. இயற்கைப் புணர்ச்சி தலைவனைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தினாலும் அதை நாடறி நல்மணமாக்க முயலும் தலைவியையே அகப்பாடல்களில் காண முடிகிறது.

அகப்பாடல்களில் இடம்பெறும் கதைமாந்தர்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதில் குறியீடுகளைக் கையாண்டுள்ளனர். சங்க இலக்கியம் காட்டும் பரத்தையர் கூட பாலுணர்வு மேலீட்டால் பல ஆடவருடன் உறவு கொண்ட செய்திகள் இல்லை. மாறாகத் தலைவன் ஒருவனுடனேயே உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவளாகவே காணப்படுகிறாள். பரத்தையர் இல்லம் சென்று மீண்ட தலைவனின் மேனியில் நல்லார் மாலையாலடித்த பசும்புண், அவர்தம் முலை மூழ்கியதால் பெற்ற நறுஞ்சாந்தம். அவர்தம் முத்தங்களால் பதிந்த செவ்வடு ஆகிய அடையாளங்கள் அனைத்துமே குறியீட்டு நோக்கில் புணர்ச்சி நடைபெற்றதனைக் குறிக்கும் பாலியல் செய்திகளாக விளங்குகின்றன. மேலும் அகஇலக்கியங்களில் தலைவன் – தலைவி வருணனையில் இடம்பெறும் பற்குறி, நகக்குறி அடையாளங்கள் மெய்யுறு புணர்ச்சி நிகழ்ந்தமையைச் சுட்டும் குறியீடுகளே ஆகும்.

ஒரு படைப்பாளன் தனது உள்ளத்து உணர்வுகளை உள்ளபடியே வெளிப்படுத்த இயலாதவாறு புறக்காரணிகள் தடையாகும் நிலையில் அவனுக்குக் குறியீடுகள் பெரிதும் உதவுகின்றன. இவ்வாறாகச் சங்க இலக்கியப் படைப்பில் பாத்திரச்சிதைவைத் தடுத்து, பாத்திர மேன்மையைக் காக்க உதவுவதற்கும், நாகரிகமான வெளிப்பாட்டுக்கு உதவுவதன் மூலம் விரச நீக்கக் காரணியாகச் செயல்படுவதற்கும், இருண்மையாக்க விழைவுக்குத் துணை நிற்பதற்கும் சங்க இலக்கியப் படைப்பாளர்கள் தனது படைப்புகளில் குறியீடுகளைப் பயன்படுத்தி பாலியல் செய்திகளை மறைபொருளாகக் காட்டிச் சங்க இலக்கியத்தையும் அதன்வழித் தமிழையும் தமிழர் பண்பாட்டினையும் மேன்மையுறச் செய்துள்ளனர் என்பது தெளிவு.

துணைநின்ற நூல்கள்

 1. அப்துல் காதர், 1987, மீராவின் கனவுகள், அன்னம் (பி) லிட், சிவகங்கை.
 2. அப்துல் ரகுமான், 1990, புதுக்கவிதையில் குறியீடு, அன்னம் (பி) லிட், சிவகங்கை.
 3. அரங்கராசு.சு (அக்கினி புத்திரன்), 1991, தமிழ்ப் புதுக்கவிதை – ஒரு திறனாய்வு, மூன்றாம்

உலகப் பதிப்பகம், கோவை.

 1. அழகம்மை.கேபி, 2001, சமூக நோக்கில் சங்க மகளிர், அரவிந்த் வெளியீடு, கழனிவாசல்,

காரைக்குடி.

 1. ஆரார், 1982, சிம்பலிசம், அறிவரங்கம் வெளியீடு, திருப்புத்தூர்.
 2. ஆவுடையப்பன். எஸ், 1988, குறியீட்டியல், ஆய்வுக்கோவை – 20:4 இ.ப.த மன்றம்,

அண்ணாமலை நகர்.

 1. இரவிச்சந்திரன் தி.கு, 2005, சிக்மண்ட் பிராய்டு : உளப்பகுப்பாய்வு, அறிவியல் அலைகள்

வெளியீட்டகம், சென்னை.

 1. இரவிச்சந்திரன். தி.கு, 2011, தொல்காப்பியமும் ஃபிராய்டியமும், அலைகள் வெளியீட்டகம்,

சென்னை.

 1. இளம்பரிதி. மொ, 2006, குறியியல் – ஒரு சங்கப் பார்வை, காவ்யா வெளியீடு,

சென்னை – 600 024.

 1. எழில்வசந்தன். ஏ, 2010, மருதத்திணைக் குறியீடுகள், காவ்யா வெளியீடு, சென்னை.
 2. சச்சிதானந்தன்.வை, 1983, மேலை இலக்கியச் சொல்லகராதி Macmillan India Ltd, Madras.
 3. சண்முகம்பிள்ளை. மு. (பதி), 1985, குறுந்தொகை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 4. சுந்தரராஜ் ஜோசப். சூ, 1987, குறியியல் கோட்பாடுகள் நாட்டார் வழக்காற்றியல் –

தொகுதி 1, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக் கழக வெளியீடு, திருநெல்வேலி – 7.

 1. சோமசுந்தரனார் .பொ.வே, 1965, குறுந்தொகை, கழக வெளியீடு, திருநெல்வேலி.
 2. _________ 1970, அகநானூறு, களிற்றியானை நிரை, கழக வெளியீடு, திருநெல்வேலி.
 3. _________1973, அகநானூறு, மணிமிடை பவளம், கழக வெளியீடு, திருநெல்வேலி.
 4. _________1973, அகநானூறு, நித்திலக் கோவை, கழக வெளியீடு, திருநெல்வேலி.
 5. துரைசாமிப்பிள்ளை. ஒளவை.சு, (உரை), 1957, ஐங்குறுநூறு, அண்ணாமலைப்

பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

 1. நச்சினார்க்கினியர், (உரை), 1969, கலித்தொகை, கழக வெளியீடு, திருநெல்வேலி.
 2. நாராயணசாமி ஐயர். பின்னத்தூர். அ, (உரை), 1967, நற்றிணை, கழக வெளியீடு,

திருநெல்வேலி.

 1. பெரிய கருப்பன். இராம, 1978, சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கியக் கொள்கைகள்), மீனாட்சி

புத்தக நிலையம், மதுரை.

 1. மகாதேவன். கதிர், 1994, இலக்கியக் கலைச்சொல்லாக்கம், ஆய்வுக்கோவை – 25:1, இ.ப.த.

மன்றம், புதுச்சேரி.

 1. மாதையன். பெ, 2010, சங்க இலக்கியத்தில் குடும்பம், NCBH, சென்னை – 600 098.
 2. Cuddon, J.A, 1977, A Dictionary of literary terms, Andre Duetsch, London.
 3. Dundes, Alan 1980, Interperting folklore, Indiana university press , Bloominton and

London.

 1. Laplanche.J and J.B.partalis 1973, Language of psychoanalysis, The Hogarth press

and the institute of psycho analysis London.s

 1. Preminger,Alex. 1929, The Encyclopaedia of Americana, vol.17, American corporation,

New York.

முனைவர் பா.கவிதா,

பெருந்துறை.