Abstract: Bharathidasan was known as one of the morning stars in Tamil Literature. He was deeply influenced by Tamil poet Subramaniya Bharathi and named himself as Bharathidasan. This article briefly explains about the Bharathidasan’s literature and women empowerment. It explains the role of revolutionary women characters in his literature. He used his literature to empower the women in Tamil Society.

Keywords: Bharathidasan, Subramaniya Bharathi, literature, women empowerment, பாவேந்தர், திராவிட இயக்கம், பகுத்தறிவு, பாரதிதாசன்.

இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றில் பாவேந்தர் பாரதிதாசனுக்குத் தனியிடம் உண்டு. பாரதிக்குத் தாசன் ஒருவன் தான். ஆனால், பாரதிதாசனாரைப் பின்பற்றிப் பாடும் பாவலரோ பலநூறு பேர். தன் படைப்புகளில் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த புலவர் இவர். திராவிட இயக்கம் மூலம், பகுத்தறிவு தமிழன் பிறக்க, பெண்ணிடம் தமிழ்க் குடும்பங்கள் அடைக்கலம் புகவேண்டும் என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.1

அவ்வகையில், பாரத்திதாசனின் படைப்புகளில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்களின் செயல்திறனை மதிப்பிடுகின்றது இக்கட்டுரை.

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

பெண் ஓர் அடிமையாக இருக்கும்போது ஆண் மட்டும் சுதந்திரமாக இருக்க முடியுமா? இந்த எல்லையற்ற காற்றை உட்கொண்டு உயிர்வாழும் ஒருவரை விலங்கிட்டு அவர்களை, இருண்ட சமாதியொன்றின் சிதைவுக்கு ஆளாக்குவதா? உழைப்பு அல்லது வேதனை ஆகியவற்றைக் காட்டிலும் வளமான நிந்தனையைச் சுமக்கும் பழிக்கு ஆளாகி, விலங்குகளாக உள்ளவரோடு கூடிவாழும் ஆண்கள் தமது கொடுங்கோலர்களை, மிதித்து நசுக்கத் துணிய முடியுமா? என்று ‘இஸ்லாமின் புரட்சியில்’ சித்னா பெண் விடுதலை பற்றிக் கூறுவதைப் போன்று2 ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரலில்’ வஞ்சி பெண்ணுரிமை முழக்கம் செய்கின்றாள். ‘சொன்னபடி கேட்காமல், தோஷம் விளைவிக்கின்றாயே’ என்று சினந்து உரைத்த குப்பனை நோக்கி,

‘பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ?

மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?

பெண்ணடிமை தீரும் மட்டும் பேசுந்திரு நாட்டு

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே!

ஊமை என்று பெண்ணை உரைக்கு மட்டும்

உள்ளடங்கும் ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு

புலன் அற்ற பேதையராய்ப் பெண்ணைச் செய்தல்

அந்நிலம் விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே!

சித்ர நகர்பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரத

நற்புதர்களைப் பற்றியன்றே பூலோகம் தூற்றுவது?’

என்று வஞ்சி கூறுகின்றாள்.3

புரட்சிக் கவி

‘புரட்சிக் கவியில்’ அமுதவல்லி நான்கு வர்ணக் காவலனாம் மன்னனை நோக்கி, ‘என் மணம் காதலனைச் சென்றிழுத்த பின்னே அவன் இணங்கினதால் அன்னவன் பிழையிலனாம்: அதற்கு அணங்குனைத் தண்டித்தல் முறையெனினும், மன்னா! நின் ஒரு மகள் நான். என்னை வருத்திட உனக்கதிகாரம் இல்லை! உன் குடிக்கு ஊறிழைத்தாள் எனில் ஊர்மக்கள் இடம் அதை உரைத்தல் கடன்’ என்று முழங்குகிறாள்.4

தமிழச்சியின் கத்தி

தமிழச்சியின் கத்தியில் சுப்பம்மா என்பவள் குப்பு, முருகி எனும் இரு பெண்டிரை நோக்கி, ‘கண்ணகி யென்னும் இந்தத் தமிழ்நாட்டின் கண்ணே போன்ற பெண் கதை கேட்டு இருப்பீர்! அப்பெண்ணைப் பெற்ற நாட்டுப் பெண்களே நீரும்! அந்தப் பெறும் பண்பே உமக்கும் வேண்டும். எண்ணமேன் இவ்வாறானீர்? திருந்துங்கள்’ என்று பெண்ணின் பெருமையை நினைவுபடுத்தித் திருத்துகின்றாள்.5

குடும்ப விளக்கு

தொல்காப்பியர் காலத்தில் கடல்வழிப் பயணத்திற்குப் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. பொதுவாக, ‘வினையே ஆடவர்க்கு உயிர் மனைபுறை மகளிர்க்கு ஆடவர்உயிர்’ என்ற கருத்து அன்றைய நாளில் ஆட்சி செலுத்திற்று.6 அக்காலச் சமூகத்தில் ஆடவரே முதன்மை பெற்றிருந்தனர் என்பதற்கு ‘எவ்வழி நல்லவர்ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’ எனும் புறப்பாடல் சான்றாக அமைந்துள்ளது. ‘பொருள்வயிற் பிரிவு’ என்பதும், ‘செய்க பொருளை’ என்பதும் ஆடவர்க்கே உரியவையாக அமைந்தன.7

இவ்வாறு பெண்களுக்குத் தீங்கு இழைக்கப்பட்ட கொடுமையான கால கட்டத்தில் தோன்றிய பாரதிதாசன், வீட்டை விட்டுப் பெண்டிரை வெளியே அனுப்பாமல் திரைபோட்டு மறைப்பதை வன்மையாகக் கண்டித்தார். ‘குடும்ப விளக்கில்’ தங்கம், கடை வணிகம் புரிகின்ற காட்சியைக் காட்டுகின்றார் பாவேந்தர்.

‘இளகிய நெஞ்சத்தாளை இளகாத வெல்லம் கேட்பார்

அளவாக இலாபம் ஏற்றி அடக்கத்தை எடுத்துரைப்பாள்.

மிளகுக்கு விலையும் கூறி, மேன்மையும் கூறிச்

சற்றும் புளுகாமல் புகன்ற வண்ணம் புடைத்துத்

தூற்றிக் கொடுப்பாள்’.8

அனைத்துத் துறையிலும் ஆணோடு பெண் சரிநிகராகப் பணிபுரிதல் வேண்டும். அப்போதுதான் மகளிர் வாழ்வில் பொருளியல் விடுதலையை எய்த முடியும். பொருளியல் விடுதலையை எய்தும் காலமே, பெண்ணடிமைத்தனம் ஒழியும் காலமாகும் என்ற அறிஞர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டவர் பாவேந்தர் பாரதிதாசன். குடும்பவிளக்கில் தங்கம் மலர்க்குழலியிடம் பேசும்போது, ‘வானூர்தி செலுத்தல், வையமாக்கடல் முழுதளத்தல் ஆன எச்செயலும் ஆண், பெண் அனைவர்க்கும் பொதுவே! இன்று நானிலம் ஆடவர்கள் ஆணையால் நலிவடைந்து போனதால் பெண்களுக்கு விடுதலை போனறதன்றோ?’ என்று கூறுகிறாள்.9

சமையல் தொழிலிலும், வேறு இல்லப் பணியிலும் ஆடவரும் பங்கேற்க வேண்டும் என்ற கருத்தை, ‘சமைப்பதும், வீட்டு வேலை சலிப்பின்றிச் செய்தலும் பெண்கள் தமக்கே ஆம் என்று கூறல் சரியில்லை’ எனும் பகுதியில் பாவேந்தர் ஆணுக்குப், பெண் சரிநிகர் என்பதை வலியுறுத்துகிறார்.10

அரேபியாவில், பெண் குழந்தை பிறப்பது இழிவு எனக் கருதப்பட்டது. பெண்குழந்தை பிறந்தவுடன் தாயானவள் அதைக் கொன்று புதைத்துவிட வேண்டும்.11 இந்தியாவில் வேதகாலத்தில், ‘பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும். இங்கே ஆண் மகவு பிறக்கட்டும் என்று இறைவனை வேண்டினர்.12 ஆயின் பாரதிதாசனோ பெண்குழந்தை அதுவும் முதற் குழந்தை பிறந்தால் மிகவும் சிறப்பானது எனக் கருதினார். எடுத்துக் காட்டாகப், ‘பெண்ணே பிறந்தால் எங்கே போடுவீர்’ என்று கேட்ட பெரியவரிடம், மலர்க்குழலி, ‘மண்ணில் பட்டால் மாசுபடும் என்று என் கண்ணில் வைத்தே காப்பேன்’ என்று இயம்புகிறாள்.13 குடும்பவிளக்கில் திருமண ஒப்புதல் கேட்ட சான்றோரை நோக்கி நகைமுத்து,

‘கட்டழகனை மணக்கக் காத்திருக்கின்றேன்

அட்டியில்லை, ஆனால் ஒரு திட்டம்,

மட்டமாய்ச் செலவிடுக எங்கள் மணம் முடித்துத்

தட்டாமல் ஈக தனி இல்லம்’

என்று சட்டாம்பிள்ளை போல் பேசுகிறாள்.14

காதலா? கடமையா?

காதலா கடமையாவில் மணமான மங்கை தன் கணவனின் தீய ஒழுக்கத்தைக் குறித்து, நீதிமன்றத்தில் முறையிடுகின்றாள். ‘மன்றுளீர்! என்றன் தலைவன் மணமாகாத மங்கையை நாடிப் பணமாய்ப், பட்டாய், அணியாய் அவட்கு நாடோறும் நல்குகிறான். அதனால், நான் ஈடேறும் வகை எதுவும் காணேன். இருக்கும் சொத்தில் என் விழுக்காட்டை அளிக்கும்படியும், அன்றைய மணத்தைக் கிறுக்கும்படியும் கேட்பதென் வழக்கு, என மொழிகிறாள். இதில் மணவிலக்கும், சொத்துரிமையும் பெண்களுக்கு வலியுறுத்தப்படுகின்றன.15

பாண்டியன் பரிசு

பாண்டியன் பரிசு நரிக் கண்ணணோடு அன்னம் உரையாடும்போது, ‘பொருந்தாத் திருமணத்தையும், குழந்தைமணக் கொடுமையையும் சாடுவதாகக் காட்டுகிறார் பாவேந்தர்.16

குறிஞ்சித் திட்டு

குறிஞ்சித் திட்டில் மன்னி மல்லிகை, பெண்களைத் தாழ்த்தி உரைக்கும் கொடியவரை, ‘தொழிம்பர்’ எனக் கடிகிறாள். மேலும்,

‘நூலெல்லாம் பெண்ணைத் தாழ்த்தும்

நுண்ணறிவாளர் என்போர்

காலெல்லாம் கைலாம்பெண்

கண்ணிலே மண்ணைத் தூவும்’

என்று சாடுகிறாள். மேலும்,

‘எண்ணமும் செயலும் இவ்வாறிருந்திடும் நாட்டில்,

வாழ்வின் கண்ணெனும் பெண்ணினந்தான்

கடைத்தேற வழியுண்டோ?

மண்ணினும் கேடாய் அன்றோ,

மதிக்கின்றார் பெண்ணி னத்தை?’

என்றும் சாடுகிறாள்.17

மணிமேகலை வெண்பா

மணிமேகலை வெண்பாவில் நோய்வாய்ப்பட்ட காயசண்டிகையை விட்டு ஓடிய கணவன் காஞ்சனனைக் குறித்து,

நோயென்றால் ஓடுவதும், நோயின்றேல் ஓட்டுவதும்

நாயென்றால் பின்னோடும் நாய்ச் செயலே!

என்று கடிகிறார்.18

கற்புக் காப்பியம்

தொடக்கக் காலத்தில் பெண்களுக்கே கற்பு வலியுத்தப் பட்டதேயன்றி, ஆண்களுக்கு வலியுறுத்தப்படவில்லை.

‘கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்

கொண்டானை அல்லாமல் அறியாக் குலமகள்’    (குலசேகர ஆழ்வார்)

‘கற்புடைய பெண்டிர் பிறர்நெஞ்சு புகார்’   (மணிமேகலை).19

இக்கொடுமையை எதிர்த்து, ‘கற்பென்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். சில புருஷர்களுக்கு தாசிகமனம் தண்ணீர் குடித்த பாடமாயிருக்கின்றது. அதில் சங்கோசமுமில்லை – அவமானமுமில்லை. பொக்கவாயன் பொரிமாவை மெச்சிக்கொள்வது போலவும், கோழி குப்பையை மெச்சுவதைப் போலவும், ஈக்கள் அசுத்தத்தைச் சிலாகிப்பது போலவும் தாசிகமனஞ் செய்வதைத் தங்களுக்குக் கௌரவமாக எண்ணுகிற ஞான சூனியர்களும் அநேகர் இருக்கிறார்கள். இது பெரிய பத்தினித் துரோகமல்லவா? என்று மாயூரம் வேதநாயகம் பிள்ளையும்,20    ‘கற்புநிலை என்று சொல்ல வந்தால்

இருகட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’

என்று பாரதியாரும்,21 ‘கற்பு என்பதற்குப் பதி விரதம் என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களை விட ஆண்கள் செல்வம், வருவாய், உடல்வலி கொண்டவர்களாக ஆக்கப்பட்டு விட்டதனாலும், பெண்கள் அடிமையாவதற்கும், புருஷர்கள் மூர்க்கர்களாய்க் கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை’ என்று தந்தை பெரியாரும் கூறிச் சென்றார்கள். பாரதிதாசனும் இந்த ஒரு சார்புடைக் கற்பைக் கடிந்துள்ளார்.22

கற்புக் காப்பியத்தில் ஆடவர், பெண்டிர், ஒழுக்கம் குறைவு பற்றிப் பொன்னி, ‘பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது. மாதரும் கற்பை மறப்பாராயின், தீதெல்லாம் செழித்து வளரும் நாட்டில் ஒருத்தியைக் கண்டால் ஒன்பது நாய்கள் துரத்துவது தொலைவது எந்த நாளோ?23

காசுக்குக் கற்பிழக்கும் பெண்கள்

மாசுக்கே வாழ்கின்றார் நாட்டில்’

என்று கூறுகிறார்.

எது பழிப்பில் விதவை முத்தம்மை, கூழப்பனிடம்

‘என்னை மணப்பீரோ என்றன் அருமை மகன்

தன்னை உம்பிள்ளையெனத் தாங்கத்திருவுளமோ’

என வினவுவதின் மூலம் பெண்களுக்கு மறுமண உரிமையை வலியுறுத்தியுள்ளார்.24

முடிவுரை

     தமிழ்ச்சமூகத்தில் பெண்ணுரிமைக்குப் பாரதி அடித்தளமிட, அதனைத் தம் படைப்புகளின்மூலம் நிலைநிறுத்தியவர் பாவேந்தர். எனவே, இன்றைய புதுமைப் பெண்களுக்கும் பெண்ணுரிமைக் கொள்கைதனைச் செயலாற்றி வருவோர்க்கும் பாவேந்தர் என்றும் முன்னத்தி ஏரே!

சான்றெண் விளக்கம்

 1. முத்துக்குமாரசுவாமி ப., (தொ.ஆ.), ‘இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க்கவிஞர்கள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2004, ப.
 2. ஜெகந்நாதன் ஆ., ‘பாரதிதாசனில் மார்க்சியம்’, அகரம் பதிப்பகம், கும்பகோணம், 1996, ப.
 3. இளங்கோ ச.அ., ‘பாரதிதாசன் பார்வையில் பாரதி’ அன்னம் (பி.லிமிடெட்), சிவகங்கை, 1982, ப.
 4. பாரதிதாசன், ‘விடுதலை’ 21.04.1970, ப.
 5. …, ‘தமிழச்சியின் சக்தி’, பாரிநிலையம், சென்னை, 1988, ப.11
 6. ….., ‘குடும்ப விளக்கு’, பாரிநிலையம், சென்னை, 1982, ப.30
 7. மேலது., ப.
 8. ஜீவபாரதி கே., ‘உலகப்பன் காலமும் கவிதையும்’, நியூ செஞ்சுரி புக் ஹைவுஸ் (பி). லிமிடெட், சென்னை, 1995, ப.
 9. பாரதிதாசன், ‘குடும்ப விளக்கு’, பாரிநிலையம், சென்னை, 1982, ப.
 10. …, ‘குயில்’, 16.02.1960, ப.
 11. ஜெகந்நாதன் ஆ., ‘பாரதிதாசனில் மார்க்சியம்’, அகரம் பதிப்பகம், கும்பகோணம், 1996, ப.
 12. பாரதிதாசன், ‘குயில்’, 24.02.1959, ப.
 13. Selected poems of Bharathidaasan, Bharathidasan University, Trichy, 1991, p.223.
 14. பாரதிதாசன், ‘குடும்ப விளக்கு’, பாரிநிலையம், சென்னை, 1982, ப.
 15. …, ‘காதலா? கடமையா?’ பாரிநிலையம், சென்னை, 1980, ப.
 16. …, ‘பாண்டியன் பரிசு’, செந்தமிழ் நிலையம், திருச்சி, 1972,ப.37.
 17. கந்தசாமி சோ. நா., ‘தமிழிலக்கியச் செல்வம்’, மெய்யப்பன் பதிப்பகம், சென்னை, 2003, ப.
 18. பாரதிதாசன், ‘மணிமேகலை வெண்பா’, பாரி நிலையம், திருச்சி, 1985, ப.
 19. ஈரோடு தமிழன்பன், ‘தெரிந்தெடுத்த பாரதிதாசன் கவிதைகள்’, சாகித்திய அகாதெமி, புதுதில்லி, 2007, ப.19.
 20. ஜெகந்நாதன் ஆ., ‘பாரதிதாசனில் மார்க்சியம்’, அகரம் பதிப்பகம், கும்பகோணம், 1996, ப.
 21. இளங்கோ ச.அ., ‘பாரதிதாசன் பார்வையில் பாரதி’ அன்னம் பி(லிமிடெட்), சிவகங்கை, 1982, ப.64.
 22. தங்கப்பிரகாசம் சா., ‘பாரதிதாசன் பாடல்களில் பெரியாரின் சிந்தனைகள்’ பகுத்தறிவு பதிப்பகம், பெரம்பலூர், 1995, ப.111.
 23. பாரதிதாசன், ‘குயில்’, 5.07.1958, ப.1.
 24. ஜீவபாரதி கே., ‘உலகப்பன் காலமும் கவிதையும்’, நியூ செஞ்சுரி புக் ஹெவுஸ் (பி) லிமிடெட், சென்னை, 1995, ப-65.

……………………………

மா.இரா.இராஜ்குமார்

உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை,

பிஷப் ஹீபர் கல்லூரி(தன்னாட்சி),

திருச்சிராப்பள்ளி – 620 017.

[email protected]