பழங்கால இலக்கியங்களை நோக்கும் போதுஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தாலும்பாரம்பரியமாகப் பெண்கள் பற்றி வழங்கி வருகின்ற புனைவுக் கருத்துகளைத் தகர்ப்பனவாக அமைந்தாலும் ஆணாதிக்கச் சார்பானவையாகவேகொள்ளப்படும். இதற்கு மாறாக அவை, ஆண் – பெண் சமத்துவத்தை ஏதோ வகையில் மறுப்பனவாக அமைந்தாலும், பெண்கள் பற்றி – அவர்களை அடிமையாக்கும் வண்ணம் – காலம் காலமாக வழங்கி வருகின்ற சமூகப் படிமங்களை மேலும் வலியுறுத்துவனவாக அமைந்தாலும்அத்தகைய இலக்கியங்கள் பெண்ணியத்திற்கு எதிரானவை என்றே கருதப்படும். சங்ககாலப் புலவர்களின் கவிதைகளை ஆராயும்போது இந்த அளவுகோல்களின்  வாயிலாகவே அவர்தம் சிந்தனைகள் பெண்கள் சார்பானவையா அன்றிப் பெண்களுக்கு எதிரானவையா என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் ஓரே ஆசிரியரே, ஒரு சமயத்தில் அல்லது ஒருசில கருத்துகளில் பெண்களுக்குச் சார்பானவராகவும், ஒரு சில கருத்துகளில் பிறிதொரு சூழ்நிலையில், பெண்களுக்கு எதிரான கருத்தமைவு கொண்டவராகவும் புலப்படுத்தல் கூடும். அவ்வாறு அமைந்தால் அவர்தமது காலத்தினாலும் சூழலினாலும் தம்மீது ஆதிக்கம் செலுத்துகின்ற சிந்தனைகளிலிருந்து எவ்வளவு விடுபட்டுள்ளார் அல்லது அதற்கு ஒத்துப்போயிருக்கிறார் என்பதை வைத்தும், மொத்தத்தில் அவரது சிந்தனைகள் பெரும்பான்மை அளவில் எவ்வாறு இயங்குகின்றன என்பதை வைத்தும் அவரை மதிப்பிட முடியும்.

அகம்புறம் பாகுபாடு

சங்க இலக்கியங்கள் அகம் – புறம் என்னும் இருதிணைப் பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளன. அகம் என்பது தலைவன் தலைவி இருவருக்கு மட்டுமே உரிய அந்தரங்க நடவடிக்கைகள், உணர்வுகள் என்றும், புறம் என்பது அனைவரும் அறிய / உணரத்தக்க பொதுவான நடவடிக்கைகள் அல்லது உணர்வுகள் என்றும் கருதப்படுகின்றன.

அகப்பாடல்களில் தலைவி, தலைவனுக்கே உரியவளாக – அவன் அன்பை யாசிப்பவளாக  – அவன் பிரிந்தால் அவனது வரவை எதிர்நோக்குபவளாக – அவன் அலட்சியத்திற்கு வருந்துபவளாக மொத்தத்தில் அவனே உயிராக, அவனே வாழ்வாகப் படைக்கப்பட்டிருக்கிறாள்.

ஆனால் தலைவனோ, தலைவியின் அன்பை யாசிப்பவனாக – அவள் காதலை மட்டுமே போற்றுபவனாக – அவள் பிரிவிற்கு வருந்துபவனாகக் காட்டப்படுகின்ற இடங்கள் குறைவு.பாலைப் பாடல்களில் ஒரு சில மட்டும் இத்தகைய போக்கின என்று இரா.பிரேமா தன்னுடைய ‘பெண்ணியம் – அணுகுமுறைகள்’ என்ற நூலில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.இதனை ஆணின் சமூக மேலாண்மையைக் காட்டுவதாகவும், பெண்ணின் அடிமைத் தன்மையைக் காட்டுவதாகவும் கொள்ள இடமுண்டு.

புறப்பாக்கள் அனைத்தும் தலைவனுக்கே உரியவனாக அமைந்துள்ளன.குறிப்பாக மன்னனின் வீரம், கொடை, புகழ் பற்றிப் புகழ்ந்து உரைப்பனவாக உள்ளன.அரசியலைப் பற்றியோ அல்லது பிற பெண்களைப் பற்றியோ ஒருசில பாடல்கள் மட்டுமே உண்டு.

மேலும் ஆண் என்பவன் அகத்தில் தலைவியை ஆள்பவனாகவும், புறத்தில் நாட்டை ஆள்பவனாகவும், சித்திரிக்கப்படுகிறான்.பூமி அல்லது நிலம் என்பதற்கும் பெண்மைக்கும் ஒப்புமைகளும் மிகுதி. எனவே நிலத்தையோ அன்றிப் பெண்ணையோ ஆளும் தன்மை கொண்டவன் – ஆண்மை கொண்டவன்  – ஆடவன்.ஆணால் ஆளப்படுவன நிலமும் பெண்ணும்.பெண்ணை உடைமையாகப் பார்க்கின்ற மனநிலையே இங்குக் காணப்படுகிறது.இதனை பொதுவாகச் சங்க இலக்கியத்தின் பொதுஇயல்பெனக் கூறலாம்.இப்பொது இயல்பினை ஒட்டியே ஔவையார் பாக்களும் அமைந்துள்ளன.

அகப்பாடல்கள் வாயிலாக வெளிப்படும் செய்திகள்

ஔவையாரின் அகப்பாடல்கள் பெரும்பாலும் பெண்ணின் ஆழ்மன உணர்வுகளைச் சித்திரிப்பனவாக அமைந்துள்ளன.ஆகவே பிற அகப்பாடல்களை விட இவை உணர்ச்சித் துடிப்பு மிக்கவை எனலாம்.அதேசமயம், ஔவையார் பெருமளவு மரபுமீறல்களை நிகழ்த்தியிருக்கிறாரா என்பது கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்று.‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்னும் மரபவழிப்பட்ட குணங்களைப் பெண்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் இவர் பாடல்கள் காட்டுகின்றன.அதேசமயம் அம்மரபுப் பண்புகளை விடுத்துச் சுயசிந்தனை கொண்டு வாழும் ஓர் உயிரியாகப் பெண் இருக்க வேண்டும் என்றும் இவர் கருதியிருக்கிறார்.

ஒளவையார் பாடல்கள் வாயிலாக, அவரது பெண்கள் சார்பான சிந்தனைகளையும் அவரது பார்வையில் சங்ககால மகளிர் நிலையையும் நன்கு அறியலாம். மேலும் திருமணத்திற்கு முந்தைய நிலை, பிந்தைய நிலை ஆகிய இவ்விருவகைப்பட்ட நிலைகளுக்கு ஊடாகவும் எப்படிப் பெண்ணின் பண்புமாற்றம் நிகழ்கிறது என்பதையும் ஒரளவு கண்டறியலாம். ஆண்களின் பார்வைக் கோணத்திலிருந்து அக்காலப் பெண்கள் எவ்வாறு இருந்தனர் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்

ஔவையார் பாடல்களில் (களவில்) பெண்கள் நிலை

சங்க அகப்பாடல்கள் காட்டுகின்றபடிப் பார்த்தால், சங்ககால மகளிர் தாமாகவே காதலிக்கும் உரிமையும், காதல் வாயிலாகத் தமக்குரிய கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் பெற்றிருந்தனர் என அறியலாம். எனினும் அவர்கள் கட்டுப்பாடற்ற முழுச் சுதந்திரம் பெற்றவர்களும் அல்லர்.மரபுவழியாக வந்த கட்டுப்பாடுகள் இறுக்கும் நிலையும் அவர்களுக்கு இருந்தது.உதாரணமாக, பெண்கள் காதலில் ஈடுபட்ட பிறகு, அதனை எப்படியாவது பெற்றோர்க்கு வெளிப்படுத்தியாக வேண்டும்.அவ்வாறு வெளிப்படுத்தும் முறையே அறத்தொடு நிற்றல் என்பது.ஆனால் இதற்கொரு நீண்ட செயல்முறை இருக்கிறது.தலைவி குறிப்பாகவோ வெளிப்படையாகவோ தனது காதலைத் தோழியிடம்தான் உணர்த்த முடியும். பிறகு தோழி தன் தாயாகிய செவிலிக்கு அதை உணர்த்த, பிறகு செவிலி அதனை நற்றாய்க்கு உணர்த்த, பிறகு நற்றாய், தலைவியின் அண்ணன்மார்க்கோ தந்தைக்கோ இதனை வெளிப்படுத்தித் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரே வழி  – அபூர்வமான சமயங்களில் கூட இதனை மீறக்கூடாதா? மீறல் நிகழ்ந்த மாதிரி ஔவையார் பாடல்கள் காட்டவில்லை. ஆனால் எவ்வளவு சிறப்பாகத் தோழி, தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தன் தாயாகி செவிலிக்கு அறத்தொடு நிற்கிறாள் என்ற செய்தியை ஔவையார் பாடல்கள் வாயிலாக அறியலாம்.

“அகவன் மகளே அகவன் மகளே” எனத்தொடங்கும் குறுந்தொகைப் பாட்டின் வாயிலாக, தோழியின் சாதுரியத்தை அறிகிறோம்.தலைவனின் மலையைப் பன்முறை பாடச்சொல்வதன் வாயிலாக அவள் எவ்வளவு நாசூக்காகத் தலைவி காதல் வயப்பட்ட செய்தியைத் தன் தாய்க்கு உணர்த்துகிறாள் என்பது புலனாகிறது.ஆயினும் இச்செயலுக்குப் பின்னால் காணப்படும் மரபின் அழுத்தம் – தானே தன் காதலை ஒரு பெண் எவருக்கும் வெளிப்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு கவனிப்பதற்குரியதாகிறது.

மேற்கூறிய பாடலில் மரபினை ஒட்டியே ஒரு பெண் தன் காதலை தெரிவிக்க  வேண்டும் என்பதைத் தமது பாடலில் கடைபிடித்திருக்கும் ஔவையார், இன்னொரு பாட்டில், அதனை மீறுவதைக் காணலாம். இப்பாடல் ஒரு பெண் தன் உணர்வுகளை வெளிப்படையாகவே கூறலாம் என்பது போல அமைகிறது.

முட்டுவேன்கொல் தாக்கு வேன்கொல்

       ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு

       ஆஅ ஒல்லெனக் கூவுவேன்கொல்

       அலமரல் அசைவளி அலைப்பஎன்

       உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே (குறு.28)

“வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது” என்னும் துறைக்குறிப்புஇப்பாடலுக்கு அமைந்துள்ளது. தலைவன் வரைவிடை வைத்துப் பிரிய, ‘என்னை ஆற்றியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இவவூராருக்கு என் ஆற்றாமையை எவ்விதம் வெளிப்படுத்துவேன்’ என்று ஒரு பெண் பரிதவிக்கிறாள். இப்பாடல் உணர்வுகள் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு பெண் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் குமுறலாகவே அமைந்திருக்கிறது. வெளிப்படையாகப் பெண் தன் காதலுணர்வினைத் தெரிவிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் சமுதாயத்திற்கு இப்பாட்டின் மூலம் ஔவையார் ஓர் அறைகூவல் விடுக்கின்றார்என்றே கூறலாம்.

தலைவன் கூற்றாக வரும் பிறிதொரு பாடலில் பெண்ணின் முதன்மையை ஔவையார் எடுத்துகாட்டுகிறார்.பெண்ணின் விருப்பமின்றி ஆண் அவளை அடைதல் இயலாது என்கிறார்.

திருமணத்திற்கு முன் போற்றப்படும் காதலொழுக்கத்தின் மேன்மையினையும், காதல் என்பதே திருமண வாழ்க்கையை அடைய மேற்கொள்ளும் முயற்சி என்ற கருத்தினையும் ஔவையார் அப்பாடலில் சுட்டிக்காட்டுகிறார். அப்பாடல் வருமாறு:

நல்லுரை இகந்து புல்லுரை தாஅய்ப்

       பெயல்நீர்க்கேற்ற பசுங்கலம்போல

       உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி

       அரிதுஅவா உற்றனை நெஞ்சே நன்றும்

       பெரிதால் அம்ம நின்பூசல் உயர்கோட்டு

       மகவுடை மந்திபோல

       அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே (குறு. 29)

‘அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே’ என்று தலைவன் குறிப்பிடுவதால், அவ்வாறு தலைவி அவனைத் தழுவக் கேட்கவில்லை என்ற செய்தியும் வெளிப்படுகின்றது.அவளை வற்புறுத்த விரும்பாத தலைவனின் நெஞ்சமும் வெளிப்படுகின்றது. தலைவனின் காதல் வேட்கை, தலைவனின் விருப்பத்திற்கு மறுப்புத் தெரிவிக்கும் தலைவியின் உரிமை ஆகியன  இப்பாடலில் வெளிப்படுகின்றன. இப்பாடலுக்கான உ.வே.சா. தரும் உரை வருமாறு:

 வரைதல் வேண்டும் என்ற நல்ல சொற்களைக் கைவிட்டு, களவிற் கூடுதல் வேண்டும் என்ற புல்லிய சொற்களைப் பேசுகின்ற நெஞ்சமே!அரியதான ஓர் அவாவினை நீ அடைந்திருக்கின்றாய்.அந்த அவா, பச்சை மண்கலத்தில் பெய்த நீரைப் போன்று அழிவினையே ஏற்படுத்தும்.எனவே உனது பூசல் பெரிதாகின்றது.உயர்ந்த மரக்கோட்டினிடத்தே தன் மகவினைத் தழுவிக்கொண்டு செல்லும் பெண்குரங்கு போல, நீயும் தலைவியும் அகம் பொருந்தத் தழுவுதல் கூடும். எவ்வாறெனில், அவள் உன் சொற்களைக் கேட்கும் பொழுது

தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமையும் பாடல் இது. இங்குக் குரங்கு எவ்வாறு தன் மகவைத் தாய் என்ற உரிமையுடன் தழுவுகின்றதோ, அதுபோல நீ தலைவியை உன் மனையாளாக்கிக் கொண்டால்மனைவி என்ற உரிமையுடன் தழுவ இயலும் என்று தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக உரை அமைகின்றது.

ஆனால் இதற்கு வேறொரு பொருள் எளிதாகக் கொள்ளலாம்.‘நெஞ்சே!நீ அரிது அவா உற்றனை.நின் பூசல் பெரிது. ஆனால் அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறின்’ –  (அதாவது, அப்படிப்பட்ட தலைவி இருந்தால்) உன் அவா தீரும். (ஆனால் அப்படிப்பட்டவளாகத் தலைவி இருக்க விரும்பவில்லை. ஆகவே உன் அவா தீராது)’ என்று தலைவன் கருதுவதாகப் பொருள் கொள்ளலாம்.அதாவது தலைவி தலைவனுடைய ஆவலை என்ன காரணத்தினாலோ தீர்க்க விரும்பவில்லை.அவளது விருப்பமின்றித் தலைவன் அவளோடு கூடவும் விரும்பவில்லை.ஆகவே, ஆசையுற்ற தன் நெஞ்சத்தோடு போராடுகின்றான் என்பதாக அமையும். அவ்வாறாயின், இங்குத் தலைவியின் விருப்பத்தினை மதிக்கும் தலைவனைத் தமது பாடலில் காட்டி, அவ்வாறுதான் இல்லறத்தில் ஒருவரையொருவர் மதித்து ஒழுக வேண்டும் என்பதாக ஔவையார் கருத்துரைக்க முயன்றுள்ளார் என்று கருதலாம்.

உரையாசியரின் மரபான உரைப்படிப் பொருள் கொண்டால், பெண் காதலியாய் வாழ்ந்து பழிச்சொற்களுக்கு ஆளாவதைவிட, மனைவியாய் வாழ்வதே சிறப்பு என்றாகும்.காதல் வாழ்க்கையைவிட ஔவையார் கற்பு வாழ்க்கைக்கே முதன்மை தருகின்றார் என்றும் ஆகும். அவ்வாறு பொருள் கொள்வதைவிட, இரண்டாவதாகப் பொருள் கொண்டது போலக் கொண்டால், மனைவியின் அனுமதியின்றி (மனைவியின் விருப்பமின்றி) அவளை அவளது கணவன் தழுவ இயலாது என்னும் பெண்ணின் உரிமையினை ஔவையார் பேசுகின்றார் எனக் கருதலாம்.

துணைநூல்

சாமிநாதய்யர் உ.வே.(உரை.), 2009, குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சா.நூல்நிலையம், சென்னை.

முனைவர் சி.நவீன்குமார்

உதவிப்பேராசிரியர்

தமிழாய்வுத்துறை

பிஷப் ஹீபர் கல்லூரி(தன்னாட்சி)

திருச்சிராப்பள்ளி-17.