ஒரு நூலைப் பதிப்பித்து வெளியிடுவதென்பது, ஒரு தாய் பத்துமாதம் கருவைச் சுமந்து பெற்று எடுப்பதற்கு இணையானது எனக் கருதப்பட்ட காலமும் இருந்தது. அது அச்சு வரவிற்கு முந்தைய காலம். அச்சு இயந்திர வருகைக்குப் பின்பும் பதிப்பித்து நூலை வெளிக்கொணர்வதற்குப் பல மாதங்கள் ஆகின. அவ்வாறிருந்தும் எளிதில் ஒருவர் தம் படைப்பையோ,  ஆய்வையோ வெளியிட்டுவிட முடியாது. அதற்குப் பொருாளதாரம் மிக முக்கியம். பொருளாதாரம் இல்லையென்றால், சிறந்த எழுத்தாளனாக அடையாளம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒரு நூல் எளிமையாக அனைவரின் பார்வைக்கும் ஒரு பதிப்பகத்தின்வழி வெளிவரும். அதனை இவ்விருபத்தோராம் நூற்றாண்டுத் தொழில்நுட்ப வளர்ச்சி எளிமையாக்கியுள்ளது. யார் வேண்டுமானாலும்  பதிப்பிக்கலாம் வெளியிடலாம் என்றொரு நிலையே அதுவாகும். இதனை உலகளாவிய வலைதளம் மூலம் சாத்தியப்படுத்தி விட்டன சில இணைய தளங்கள். குறிப்பாக, எந்தவித பொருளாதாரம் இன்றியும், வெறும் தட்டச்சு, இணையப் பயன்பாட்டுச் செலவுகளுடன் மட்டும் முடிந்து விடுகின்றது. இதனை குறித்து இக்கட்டுரை அறிமுகப்படுத்துகின்றது.

மின்னூல் (EBOOKS) என்றால் என்ன?

          மின்னூல் மின்கருவிகளால் உருவாக்கப்படுவது. இதனைப் பதிவிறக்கம் செய்தும் இணையத்தின் மூலமும் வாசிக்க இயலும். அதற்குரிய மின்படிப்பானைக் (E – Reader) கணினியிலும் செல்பேசிகளிலும் திறன்பேசிகளிலும் பொருத்தி இருத்தல் வேண்டும் (Amazon kindle, Kobo, Apple ipad, iphone, Barnes, noble’s Nook, Android tablet, Computer). ஒவ்வொரு நாளும் மில்லியன் மின்னூல்களை வாசிப்பாளர்கள் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது. தங்களுடைய சிந்தனைகளை எளிய முறையில் உலகத்தாருக்குக் கொண்டு செல்ல மின்னூல் பதிப்பு உதவிபுரியும்.

 

 

இணையமும் பதிப்பும்

உலகத்தின் தொடர்புமொழி ஊடகம் என இணையத்தை அழைக்கலாம். அந்தளவிற்கு உலக மக்களின் கருத்துக்களைப் பரவலாக்கும் பணியைச் செய்து வருகின்றது. இப்பணியின் ஊடே படைப்புகளை வெளியிடவும் சில  நிறுவனங்கள் முனைந்துள்ளன. அவற்றுள் www.bookrix.com, www.booktango.com, www.createspau.com, www.lightswitchpress.com, www.lulu.com, www.tongkiat.com, www.pressbooks.com, www.freetamilebooks.com, www.foboko.com போன்றவற்றைச் சுட்டிக்காட்டலாம். ஆசிரியரோ பதிப்பாசிரியரோ பதிப்பித்துக் கொள்ள இவை அனுமதி நல்கியுள்ளன. அவற்றுள், Pressbooks.com, LuLu.com ஆகியவற்றின் பதிப்பு நெறிகளும் பதிப்பிக்க வேண்டிய வழிமுறைகளும் இங்கு விளக்கப்படுகின்றன. முதலில் Pressbooks.com வழங்கும் இணையப் பதிப்பு நெறிகள் குறித்துக் காண்போம்.

பதிவுநூல் (Pressbooks.com) பதிப்புநெறி

பதிவுநூல் (Pressbooks) வலைதளத்தின் மூலம் நூலை வெளியிடுவதற்கு அந்நிறுவன உறுப்பினராதல் வேண்டும். பின்பு, நமக்கான பக்கத்தில் நூல்களைப் பதிப்பித்துக் கொள்ளலாம்.

மேற்காணும் படத்தில் உள்ள Create Your book என்ற பகுதியைச் சொடுக்க, பதிப்புப் பக்கம் தோன்றும்.

இப்பக்கத்தின் இடதுபுற ஓரத்தில் Dash board, Home, My catalogue, Upgrade, Text, Book info, Appearance, Export, Publish, Media, comments, Users, Tools, Settings, collapse menu எனவரும் கூறுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெறும் Dash board எனும் பகுதியை அழுத்த முன்பதிப்புப் பட்டியலும் (Old books details), புதிய பதிப்பும் (New creative books) காட்டப்பெறும். அதில் New creative your book  எனும் பகுதியைச் சொடுக்கவும். அதன் பின்பு, முற்பகுதி (Front matter), நடுப்பகுதி (Main body), பிற்பகுதி (Back matter) ஆகிய வடிவமைப்புகள் இருக்கும்.

முற்பகுதி (Front matter) பகுதி அமைப்பு

முற்பகுதி  அமைப்பைச் சொடுக்கினால், நூல் முகப்புப் பகுதி, பதிப்பு விபரம், அணிந்துரை, வாழ்த்துரை, முன்னுரை, குறியீட்டு விளக்கம், ஆகியவற்றைப் பதிவிடலாம். இவைகளைத் தனித்தனிப் பக்கத்தில் அமைத்தல் வேண்டும். அதற்கு புதிய இயல் (New chapter) எனும் பகுதியைச் சொடுக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

நடுப்பகுதி (Main body) அமைப்பு

          இவற்றைச் சரிசெய்த பின்பு, நடுப்பகுதி அமைப்பு எனும் பகுதியைச் சொடுக்கவும். இது நூலின் மையப் பகுதியைக் குறிக்கும். இதில் தலைப்புத் தொடர்பாக எழுதப்பெற்ற கருத்துக்களைப் பதிவிடலாம். அப்பதிவுகள் தனித்தனி உட்பிரிப்புகளாக வடிவமைக்கப்பட்டிருப்பின், புதிய இயல் சேர்ப்புப் பகுதியைச் சொடுக்கிப் பதிவிடவும்.

பிற்பகுதி (Back matter) அமைப்பு

          இப்பதிவுகள் நிறைவான பின்பு, பிற்பகுதி எனும் பகுதியைச் சொடுக்கவும். இதில் துணைநூற்பட்டியல், பின்னிணைப்புகள் போன்றவற்றைப் பதிவிடலாம். இப்பதிவுகளை இணையப் பக்கத்தைத் திறந்து தட்டச்சு செய்தும் பதிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியில்லையெனில், சொல்லாய்விக் (Msword) கோப்பில் தட்டச்சு செய்து, அதில் உள்ளவற்றை எடுத்து (Copy) ஒட்டவும் (Paste) செய்யலாம்.

வெளியிடுதல் (Appearance)

          முதற்பகுதி, நடுப்பகுதி, பிற்பகுதி என அமைந்திருக்கும் பகுதிகள் நேர்த்தியாக அமைந்தவுடன் நூல் வெளியிடுவதற்குத் தயாராக இருக்கும். இப்பொழுது Appearance

எனும் பகுதியைச் சொடுக்கவும். இதில் புத்தக அமைப்புகள் (Themes) உள்ளன. அதில் அமைந்திருக்கும் புத்தக மாதிரிகளில் நமக்குப் பிடித்தவற்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். இதில் வடிவமைப்பு வாசகர்களின் வாசிப்புப் பக்கமாக அமையும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

நூல் குறிப்புகள் (Book Info)

         மேற்கண்ட பணிகள் நிறைவு பெற்றவுடன் நாம் வெளியிடும் நூல் பற்றிய குறிப்புகளைத் தருதல் வேண்டும். இதில் தலைப்பு (Title), ஆசிரியர் (Author), பதிப்பகம் (Publication), பதிப்பு நாள் (Publication Date), மொழி (Language), முகப்பு அட்டை (Add Cover), பதிப்பு ஆண்டு (Copyright Year), பதிப்புரிமை (Copyright Holder), வெளியீட்டுத் தன்மை (Copyright Notice) ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்

பதிவு எண் (ISBN)

          அதன்பிறகு பதிவு எண் குறித்த விவரத்தையும் நிரப்புதல் வேண்டும். இதில் பதிப்பு எண், எந்தப் பதிப்பகம், பதிப்பக ஊர் குறித்த பதிவுகளைத் தருதல் வேண்டும்.

வெளியிடுதல் (Export)

          இவையனைத்தும் சரிசெய்த பின்பு நூல் வெளியிடத் தயராக இருக்கும். அவ்வெளியீட்டு நூல் வாசகர்களுக்கு எவ்வவ் வடிவத்தில் தருதல் வேண்டும் என்பதை வெளியிடல் (Export) எனும் அமைப்பின் மூலம் உருவாக்கிக் கொள்ளலாம். இப்பகுதியில் நம்முடைய நூல் e-pub, mobi, XTML, PDF, 6Inch PDF ஆகிய கோப்புகளாக உருவாக்கித் தரப்பெறும்.

பதிவிடல் (Publish)

          இவையனைத்தும் சரியாக அமைந்தவுடன் பதிவிடல் எனும் பகுதியை அழுத்தினால் போதும், நம்முடைய நூல் இணைய நூலாக வெளியிடப் பெற்றுவிடும். இப்பொழுது நீங்கள் ஒரு நூலுக்கு ஆசிரியர்.

விற்பனை

இந்த இணையதளம் இன்னொரு வசதியையும் செய்து தந்துள்ளது. நம்முடைய நூலை விற்பனை செய்து கொள்ளவும் அனுமதித்து உள்ளது.

இவ்வாறாக நாம் Pressbooks.com மூலம் பதிப்பாளராக, நூலாசிரியராக இணைய உலகில் வலம் வரலாம் என்பதை அனைவரும் கவனத்தில் கொண்டு தத்தம் சிந்தனைகளை இணையத்தில் பதிவிடவும்.

 லூலூ பதிப்புநெறிகள்

லூலூ (www.lulu.com) எனும் நிறுவனம் மின்னூல் உருவாக்கி அனைத்து வாசகர்களுக்கும் கொண்டுபோய் சேர்க்கும் பணியைச் செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் மூலம் நம்முடைய கருத்துக்களை எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும். அப்பகிர்தல் ஆசிரியர், பதிப்பாளர், கல்வியாளர், விற்பன்னர் என்ற நிலைகளில் இருந்து கொண்டு சேர்க்க முடியும் என்பது கூடுதல் தகவல். இதில் பதிப்பிக்க விரும்புவர்கள் எவ்வித தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. லூலூ இணைய விற்பனை  (Internet retail site), விற்பனைப் பிரதிநிதி (retail partners),  எங்கும் எடுப்பி (global print) ஆகிய நிறுவனங்களின் மூலமாக இணைய பதிப்பை மேற்கொள்வதற்கு பொது விற்பனையகம் (one-stop shop) எனும் தளத்தை உருவாக்கியுள்ளது. பன்முகத் தன்மையில் பதிப்பிக்க வழிவகை செய்துள்ளது. நீங்கள் உங்கள் நூலுக்கான விலையைத் தீர்மானிக்கலாம். லூலூ ஆசிரியராக உங்களுக்கு அந்த உரிமை உண்டு. இதில் உங்களுக்கு 80% பயன் (Profit) கிடைக்கும். இது தங்களின் கட்டுப்பாட்டிலே இருக்கும் என்பது உறுதி.

லூலூவின் மின்னூல்களைச் சந்தைப்படுத்துவது எப்படி?

லூலூ ஆசிரியராக இணைந்தால் மின்னூல் (EPUB & PDF) உருவாக்கத்திற்கும் வெளியிடலுக்கும் சந்தையை ஏற்படுத்தித் தருகின்றது. ibookstore, Barnes & noble’s Nook ஆகிய நிறுவனங்களின் மூலமாக விற்பனை செய்வதற்குத் தர எண்ணுடன் (ISBN) மின்னூலாகத் தருகின்றது இந்நிறுவனம்.

இது ஒரு இலவச வழங்கல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது நேரடிப் பயன்பாட்டு முறையுடன் இயங்குகிறது.

தங்களுடைய படைப்புகளை வெளியிடுவதில் பங்குதாரராக மட்டும் இந்நிறுவனம் இருக்கும். இவர்தம் மதிப்பீடு தங்கள் படைப்புக் கோப்பின் அளவு (File size), தலைப்பு (Title), விளக்கம் (Description), பகுப்புமுறை (Categry), படத்தன்மை (Image quality), அட்டவணை (Table of content) இடம்பெற்ற உள்ளடக்கம் ஆகியன இயங்குமுறை (Technical aspects) குறித்து அமையும். பிற விவரங்களை மின்னூல் வெளியீட்டுக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.

தொழில்நுட்ப அளவிலான பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தால் மின்னஞ்சல்வழித் தெரியப்படுத்தப்படும். அதனைச் சரிசெய்ய மறுபடியும் பதிவுசெய்ய வேண்டும்.

 மின்னூல் வெளியீட்டுக் குறிப்புகள்

வெளியீட்டுக் குறிப்புகளைப் பின்பற்றாத மின்னூல்கள் வெளியீட்டுப் பகுதியிலிருந்து நீக்கப்படும். தங்களது மின்னூல் EPUB அமைப்பில், அதன் வாசிப்பி (Reader) மூலம் வாசிக்க முடிகிறதா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். EPUB கோப்பு 500mb அளவில் இருத்தல் வேண்டும்.

EPUB கோப்பின் மதிப்பு 

 • உங்களுடைய EPUB கோப்பை உள்ளீடு செய்தல் வேண்டும்.
 • உள்ளீடும் கோப்பு .doc, .docx, .rtf ஆகிய அமைப்புடையதாக இருத்தல் வேண்டும்.
 • அந்தக் கோப்பு EPUB ஆக மாற்றப்பெறும்.
 • உள்ளீட்டுக் கோப்புக் கையாவண நூலாகவும் (PDF) இடம்பெறலாம். இக்கோப்புச் சரிபார்ப்புத் (Edit) தன்மையுடல் இருத்தல் வேண்டும்.

வெளியிடத் தகுதியற்ற அமைப்புகள்

 • DTBook EPUBs எனும் அமைப்பு ஏற்கப்பட மாட்டாது. மாறாக, EPUBs இன் XHTML முறையிலே இருத்தல் வேண்டும்.
 • துண்டிக்கப்பட்ட எழுத்துருக்களாக இருத்தல் கூடாது.
 • படம், எழுத்துருக்கள் மேலணைவாக (ஒன்றின் மேல் ஒன்று – over lapping) அமைந்து இருத்தல் கூடாது.
 • குறைந்த தரமுடைய படமாக இருத்தல் கூடாது (blurry, pixelated or cut off Images).
 • வரைபடம், அட்டவணை, கோட்டுப்படம் படிக்கத் தக்கவையாக இருத்தல் வேண்டும்.
 • உள்ளடக்க அட்டவணை (NCX Information) தவறாகவோ முழுமையாக வாசிக்க முடியாதவையாகவோ இருத்தல் கூடாது.
 • NCX தரும் குறிப்புகளைப் பின்பற்றுதல் அவசியம். இந்த NCX பொதுவாக, இயல் தலைப்பு, பகுதி, உட்பகுதி, குறித்த சரிபார்ப்பைச் செய்கிறது (சான்று: பதிப்புப் பக்கம், தலைப்புப் பக்கம், உறுதிமொழிக் கடிதம் \ அணிந்துரை, உட்தலைப்புகள், ஆசிரியர் தன்குறிப்புப் பக்கம், பிற தகவல்கள் முதலானவை)
 • EPUB கோப்பு முழுமை பெறாமல் இருத்தல் (Missing Chapter) கூடாது.
 • தவறான குறியீடுடைய கோப்பு ஏற்றுக் கொள்ளப்படாது. இக்கோப்பு UTF – 8 அல்லது UTF – 16 அமைப்புடையதாக இருத்தல் கூடாது (சான்று: ÄÚ, ÄĴ, Ăú, Ăć என்பவைக்குப் பதிலாக மேற்குறி – A’, புள்ளிகள் – Ė, கோடுகள் – Ī, அரைப்புள்ளிகள் – A: முதலியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்)
 • பக்க எண்கள் தேவையில்லை.
 • Header and Footer அதிலே இடம்பெறும்.
 • வருடப்பட்ட (Scaning) படங்கள் burnt – in text ஆக இடம்பெறுதல் வேண்டும்.
 • படத்துடன் இணைக்கப்பட்ட செய்திகள், எழுதப்பெற்ற பகுதிகள் சரியாக இருத்தல் வேண்டும் (சான்று: கோடிட்ட இடத்தை நிரப்புக, வரை நூல் அல்லது குறிப்புகள்).
 • பல வெறுமையான பக்கங்கள் இருத்தல் கூடாது (வெறும் பக்கம் நூல் முடிவில் இருக்கலாம்).
 • செய்திகள் ஒழுங்கமைவுடன் இருத்தல் வேண்டும் (சான்று: வெறுமையாகவோ, ஒழுங்கின்மையோ, இடைவெளியோ இருத்தல் கூடாது).
 • படம் RGB அமைப்பில் இருத்தல் வேண்டும்.

நூலட்டைப் படம்

 • தரவுடன் தொடர்புடைய நூலட்டைப்படமும் தலைப்பும் அமைதல் வேண்டும்.
 • நூல் குறித்த குறிப்புகள் அனைத்தும் முகப்புப் பக்கத்தில் இருத்தல் வேண்டும் (ஆசிரியர், தலைப்பு, துணைத்தலைப்பு, விளக்கம், பிற…) அதில் பன்முகத்தன்மை கொண்ட உள்ளடக்கப் பட்டியல் பயன்படுத்துதல் வேண்டும்.
 • சிறந்த நிலையில் இருத்தல் வேண்டும் (தெளிவு, அளவு, பிறவும் சரியாக இல்லையென்றால் நீக்கப்பெறும்).
 • நூல் அட்டைப் படத்துக்கானப் படத்தை இணைய தொடர்புகள் மூலம் காண்பித்தல் கூடாது. விளம்பரத் தன்மையும் இருத்தல் கூடாது.
 • விளம்பரத் தட்டிகளில் குறிப்பிடுவது போன்ற குறிப்புகள் இடம்பெறக் கூடாது.
 • படத்தின் அளவு 595 x 841 படச்சில்லாக (pixel) இருத்தல் வேண்டும்.
 • ஈர்ப்புத் தன்மையுடன் தனித்துவம் மிக்கதாய் இருத்தல் வேண்டு்ம்.
 • விற்பனையை அதிகப்படுத்தும் தன்மையுடன் அமைதல் சிறப்பு.

தலைப்பு

 • தலைப்பு, தரவுகள், அட்டை, புத்தகத் தரவுகளுடன் பொருத்தப்பாடுடையதாய் இருத்தல் வேண்டும்.
 • பிறர் பயன்படுத்தியிருக்கும் தலைப்பைத் தேர்ந்தெடுக்காமலிருப்பது சிறப்புக்குரியது.
 • அனைவரும் புரிந்து கொள்ளும் நிலையில் தலைப்பு அமைதல் வேண்டும்.

விளக்கம்

 • நூல் தொடர்பான குறிப்பு அளித்தல் வேண்டும்.
 • 50 சொற்களுக்கு மிகாமல் அக்குறிப்பு இடம்பெறுதல் வேண்டும்.
 • அக்குறிப்பு நூலின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் முகாந்திரம் உடையதாக இருத்தல் வேண்டும்.
 • எவ்வித விளம்பரத் தன்மையுடனும், தொடர்பு இணைப்பும் இருத்தல் கூடாது.

ஆசிரியர்

 • ஆசிரியர் பெயர் தவறில்லாமல் இருத்தல் வேண்டும்.
 • ஆசிரியர் பெயர் இடம்பெற வேண்டிய இடங்களில் (நூல்குறிப்பு, அட்டை, நூலட்டை, நூல் முகப்பு) கண்டிப்பாக இடம்பெறுதல் வேண்டும்.

பகுப்பு

 • பகுப்புமுறை சிறப்புத்தன்மையுடன் இருத்தல் வேண்டும்.
 • வாசகர் தேர்ந்தெடுக்கும் வண்ணம் பகுப்பும் வகையும் அமைதல் வேண்டும்.

இதுவரை கூறப்பெற்ற குறிப்புகளை அறிந்த நீங்கள் இனி, அவ்வலைதளத்தில் பதிப்பிக்கும் முறை குறித்து அறியுங்கள். அதற்கு முன்பு, ISBN எண் பெறுதல் குறித்த நெறிகளைக் காண்போம்.

தர எண் (ISBN)

 • ஒருமுறை ஒரு நூலுக்குப் பயன்படுத்திய எண்ணைப் பிற நூல்களுக்குப் பயன்படுத்துதல் கூடாது.
 • சொந்தமாகவும், லூலூ மூலமாகவும் பெறக்கூடிய எண்ணைப் பயன்படுத்தலாம்.
 • லூலூ நிறுவனம் தரும் எண்ணைப் பிற நிறுவனங்களின் பெயரில் பயன்படுத்துதல் கூடாது.

இனி, www.lulu.com எனும் இணையதளத்திற்குச் சென்று முதலில், பதிவு (Register) செய்து கொள்ளவேண்டும். அதற்கான படிவம் வருமாறு:

(படம் – 1)

அதன் பின்பு தங்களுக்கான ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுவிடும். அப்பக்கத்தில் create எனும் அமைப்பு உள்ளது. அதில் அச்சுநூல் உருவாக்கம் (Print Book), மின்னூல் உருவாக்கம் (e-Book) என்னும் அமைப்புமுறைகள் காட்டப்பெறும். அதில் உள்ள மின்னூல் உருவாக்கப் பொத்தானை அழுத்தப் பின்வரும் பக்கம் உருவாகும்.

(படம் -2)

இப்படத்தில் உள்ள Make an EPub (or) PDF எனும் குறிப்புக்குக் கீழுள்ள Make your ebook எனும் பொத்தானை அழுத்துக.

(படம் – 3)

அதனைச் சொடுக்க, ஒரு பகுதி விரியும். அதில் தலைப்பு, ஆசிரியர் பெயர் முதலானவை  குறித்த விவரம் கேட்கப்பெறும். அதனை நிறைவு செய்தல் வேண்டும்.

(படம் – 4)

இப்பகுதி நிறைவு எய்தியவுடன் சேமிப்புப் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக ஒரு பகுதி உருவாகும். அதில், தர எண் (ISBN) குறித்துச் சுட்டுதல் வேண்டும். தர எண்ணை லூலூ மூலமாக வாங்க விருப்பமா? வேறு ஏதேனும் தர எண் உள்ளதா? உள்ளதெனில் அதைப் பதிவிடவும். தர எண் வேண்டாம் என்றாலும் பரவாயில்லை. நூல் வெளியிடலாம்.

(படம் – 5)

இதனைச் சேமித்த பின்பு உங்களுக்கான தரஎண் காட்டப்பெறும். அதனைச் சேமிக்கவும்.

(படம் – 6)

இதன்பின்பு உள்ளீடாகத் தரும் கோப்பினை மின்னூலாக மாற்றுவதற்கான தன்மைகள் இடம்பெறும். EPUB, PDF பதிவேற்றக்கூடிய கோப்பு Word, RTF x EPUB அமைப்புடையதாக இருத்தல் வேண்டும்.

(படம் – 7)

இதனை உள்ளீடாகத் தந்த பின்பு பதிவேற்றம்  (Upload) செய்க. பதிவேற்றிய பின்பு உள்ளீடாகத் தரப்பெற்ற கோப்பு ஏற்புடையதா என்பதை அறிவுறுத்தும். ஏற்புடையது எனில் சேமிக்கவும்.

(படம் – 8)

ஏற்புடையது இல்லை எனில் பின்வரும் படம் காட்டும் வழிமுறையினைப் பின்பற்றி மீண்டும் அக்கோப்பை உள்ளீடாகத் தரும்பொழுது ஏற்கப்படும்.

(படம் – 9)

பொதுவாக, உள்ளீடாகத் தரப்பெற்ற கையாவணநூல் (PDF) கோப்பானது திருத்தும் (Edit) தன்மையுடையதாக இருப்பது தல்லது. அவ்வாறு அக்கோப்பு அமைந்துவிடின் பதிவேற்றப்படும்.

(படம் – 10)

இதனை நிறைவு செய்த பின்பு, நூலட்டைக்கான பதிவேற்றப் பகுதி உருவாகும். அதில் நாம் ஏற்கனவே வடிவமைத்த நூலட்டையைப் பதிவேற்றலாம் அல்லது இந்நிறுவனம் தரக்கூடிய நூலட்டை வடிவமைப்பைப் பயன்படுத்தியும் உருவாக்கிப் பதிவேற்றலாம். இந்நிறுவனம் தரும் வடிவமைப்பைப் பயன்படுத்தும் பொழுது ஒரு சிக்கல் உள்ளது. இதில் தமிழ் எழுத்துரு சரியாக அமைவதில்லை என்பதாகும். அதனைப் பின்வரும் படம் காட்டும்.

(படம் – 11)

இதனைச் சரிசெய்வதற்கு, Backround & Picture எனும் அமைப்பு உள்ளது. அப்படத்திற்குக் கீழுள்ள Edit Picture Text எனும் அமைப்பைச் சொடுக்கவும். அதன்வழி முன்கூட்டியே உருவாக்கிய அட்டைப்படத்தை உள்ளீடு செய்க. அதில் நூல் பெயர், ஆசிரியர் பெயர், வெளியீட்டுக் குறிப்பு ஆகியன தெளிவாக இருத்தல் நல்லது. உள்ளீடு செய்த பின்பு, அப்படத்தின் மேல் முன்பு எழுதிய எழுத்துருக்கள் காண்பிக்கப்பெறும். இதனைச் சரிசெய்வதற்கு Text எனும் அமைப்பு உள்ளது. அதில் பதிவு செய்துள்ள நூல் பெயர், ஆசிரியர் பெயர் ஆகியவற்றை நீக்குக.

அதற்கடுத்து, இன்னொரு பகுதி உருவாகும். இதில் பகுப்பு (Category), குறிச்சொல் (Keywords), நூற்குறிப்பு (Description), மொழி (Language), உரிமையாளர் (Copy writer), உரிமம் (License), பதிப்பு (Edition) ஆகியன இடம்பெறும். இதனை நிறைவு செய்தல் வேண்டும்.

(படம் – 12)

இப்பகுதி நிறைவு எய்திய பிறகு விற்பனைப் பகுதி உருவாகும். இங்கு நூலின் விற்பனைப் பகுதியான லூலூவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

(படம் – 13)

அதன்பிறகு விற்பனை செய்யப்பெறும் தொகையைப் பெறுவதற்கான வழிமுறை சுட்டிக்காட்டப் பெறும். அதனை நிறைவு செய்தால் விற்பனை செய்யப்பெறும் தொகையின் எண்பது விழுக்காட்டுப் (80%) பயன் தங்களது வங்கிக் கணக்கை வந்து சேரும். அதற்கான படிவப்பகுதி வருமாறு:

(படம் – 14)

இப்பதிவு நிறைவு எய்திய பின்பு, நூல் வெளியீட்டுக் குறிப்புகள் அனைத்தும் காண்பிக்கப்பெறும். அதில் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியைச் சரிபார்த்த பின்பு, நூல் வெளியிடப் பெற்றமைக்கான முழுக் குறிப்புகள் அடங்கிய பின்வரும் பகுதியைப் பார்வையிடலாம். அதனைக் காட்டும் படம் வருமாறு:

(படம் – 15)

ஒருவேளை தவறாகப் பதிவேற்றியிருந்தால், My Project எனும் பகுதிக்குச் சென்று, பதிவேற்றிய கோப்பின் வலது புறத்தில் Revise எனும் பொத்தான் இருக்கும். அதனைச் சொடுக்கப் பின்வரும் பகுதி தோன்றும். அதில் திருத்தங்கள் செய்து வெளியிடலாம்.

(படம் – 16)

இப்பகுதிகள் நிறைவான பின்பு நூல் விற்பனைப் பிரிவில் இடம்பெறும் தன்மை காட்டப்பெறும்.

(படம் – 17)

(படம் – 18)

இப்பொழுது வெளியிடப்பெற்ற நூல் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய லூலூவில் தேடுக. தேடலின் முடிவில் பின்வரும் படம் தோன்றும்.

(படம் – 19)

இதன் மூலமும் நூல் வெளியிடப் பெற்றது என்பதை அறிந்து கொள்ளலாம். அச்செய்தி லூலூ நிறுவனத்தின் மூலம் மின்னஞ்சலுக்கும் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிப்பாக, இங்கு விளக்கப்பெற்ற இரண்டு வலைதளங்களைப் பயன்படுத்தி இலவசமாக நூலைப் பதிப்பித்துக் கொள்ள முடியும் என்பது அறியப்பெற்றது. இவ்விரண்டு பதிப்பு வழிகளில் லூலூவின் பதிப்புமுறை பதிவுநூல் நிறுவனத்தில் ஒரு கோப்பைப் பல கோப்புகளாக வடிவமைக்கும் முறையும் அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறையும் இடம்பெற்றுள்ளமை அதற்கேயுரிய சிறப்பாகும். எவ்வாறிருப்பினும் இவ்வலைதளங்களின் வழியாக நம் சிந்தனைகள் உலகப் பார்வைக்கு முன்வைக்கப் பெறுகின்றமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

 துணைநின்றவை

 1. இளவழகன் கோ. (பதிப்.), 2003, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
 2. சுந்தரம் இல., 2015, கணினித்தமிழ், விகடன் பிரசுரம், சென்னை.
 3. //www.bookrix.com
 4. //www.booktango.com
 5. //www.createspau.com
 6. //www.lightswitchpress.com
 7. //www.lulu.com/
 8. //www.tongkiat.com
 9. //www.pressbooks.com
 10. //www.freetamilebooks.com
 11. //www.foboko.com/

முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)

கோயமுத்தூர் – 28,

9600370671,

inameditor@gmail.com