பண்டைய தமிழ் நாகரிகம், மொழிச்சிறப்பு முதலானவற்றை அறிய விரும்புவோர்க்குச் சான்றாதாரமாக, செய்தி ஊற்றாக அமைவது சங்க இலக்கியம். சங்க இலக்கியத்துள் சிறந்த சிந்தனைகள் மிளிர்வதையும் ஓங்கி வளர்ந்த நாகரிகம் வெளிப்படுவதையும் காணலாம். சங்க இலக்கியக் காலக்கட்டம் இயற்கையோடு இயைந்த வாழ்வினைக் கொண்ட காலக்கட்டமாகும். வெறும் வருணனைக்காக மட்டுமின்றி, அகமரபை வெளிப்படுத்துவதற்கே சங்கத்தமிழ்ப் புலவர்கள் தாவரப்பெயர்களைத் தம் பாடல்களுள் கையாண்டுள்ளனர். அவ்வகையில், சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் குளவி (காட்டுமல்லிகை) பற்றிய செய்திகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

குளவி

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 வகை மலர்களுள் ஒன்று ‘குளவி’ ஆகும். இது குறிஞ்சி நிலத்தில் பூக்கும் மலராகும். குளவி என்பதற்குக் காட்டு மல்லிகை என்ற பெயரும் உண்டு. இதன் வேறு பெயர்கள் பன்னீர்ப் பூ, மரமல்லி.

எட்டுத்தொகையில் குளவி

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்

            குளவி மொய்த்த அழுகற் சின்னீர்   (குறுந்.56)

வேட்டையாடச் செல்லும் செந்நாய் இளைத்து உண்டு மிச்சமிருந்த நீரின் மேல் காட்டு மல்லிகை படர்ந்து மூடியிருந்தது. அந்நீர் அழுகல் நாற்றம் வீசியது. அந்நீரை வளையுடைக் கையையுடைய எம் தலைவி உண்ணும் நிலையில் எம்மோடு காட்டுவழியில் வருவதாக இருத்தால் வரட்டும். அவ்வாறாயின் என் நெஞ்சில் அமர்ந்திருப்பவள் மிகவும் இரங்கத்தக்கவள் என்கிறான் தலைவன்.

குவளையொடு பொதிந்த குளவிநாறு நறுநுதல்   (குறுந்.59:3)

தலைவனை விட்டுப் பிரிந்து வாடும் தலைவியைத் தோழி ஆற்றுகிறாள். தலைவன் செல்லும் பாதையைத் தலைவியிடம் தோழி கூறுகிறாள். அகன்ற வாயினையுடைய ஆழமான சுனைகளில் பூத்த குவளை மலர்களோடு சேர்த்துக் கட்டிய  காட்டு மல்லிகையின் மணம் வீசுகின்ற நின்னுடைய நல்ல நெற்றியைத் தலைவர் மறப்பாரோ என்று சொல்லித் தேற்றுகிறாள் தோழி.

பருஇலைக் குளவியொடு பசுமரல் கட்கும்            (குறுந்.100:2)

சிற்றூரில் வாழும் மக்கள் காந்தளை இயற்கை வேலியாக உடைய இச்சிறுகுடியில் வாழ்பவர். அருவியை உடைய பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைப்பர். அவற்றினிடையே களையாக வளர்ந்துள்ள பருத்த இலையையுடைய காட்டு மல்லிகையையும் பறித்து எறிவர் என்கின்றது மேற்குறித்த பாடலடி.

அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்   (புறம்.90:2)

உடைந்த கைவளையலைப் போன்று மலர்ந்த வெண்காந்தள் தழை நிறைந்த மலைமல்லிகை மணக்கும் மலைச்சாரல் இருக்கும் இடத்தில் போர் புரியும் வீரமழவர் பெருமகனைப் புறநானூறு குறிப்பிடுகிறது.

கதளம் கவினிய குளவி முன்றில்     (புறம்  .168:12)

மலைச்சாரலிடத்து அருவி ஒலித்து இழியும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தில் மிளகுக்கொடி வளரும் அழகு பெற்ற மலைமல்லிகை நாறும் முற்றத்திடத்து அரசனையும் அவனது நாட்டின் சிறப்பையும் புலவர் பாடுவதாகப் பின்வரும் பாடலடி குறிப்பிடுகிறது.

நாறுஇதழ்க் குளவியொடு கூதளம் குழைய          (புறம்.380-7)

தென்கடலினின்றும் எடுத்த முத்துக்களால் ஆன மாலை சூடி, வடகுன்றமான இமயமலையில் பெற்ற சந்தனத்தை உடம்பில் தீற்றி, இனிய புகழை உடைய போர்வெற்றியையும் உடைய, பாண்டியருடைய வலிமை மிக்க தானைத் தலைவன் விசும்பிலிருந்து பொழிந்த நீர் கடலுக்குள் சென்று முத்தாகும் நறுமணம் கமழும் மலை மல்லிகையோடு கூதாளி தழைத்து விளங்கும் என்பர்.

குளவி மேய்ந்த மந்தி துணையொடு                       (ஐங்.279:2)

மலையினைத் தன் வேரால் பற்றிக்கொண்டு வளரும் இற்றிமரத்தினைப் பற்றி மந்தியும் கடுவனும் காட்டுமல்லிகையின் தளிர்களை மேய்ந்து மலைமீது துள்ளிக் குதித்து விளையாடுவதற்கிடமான நாடனே! எங்கள் ஊர் மலைகளுக்கிடையே அமைந்துள்ளது. அங்கு உன்னையும், என்னையும் பற்றிய அம்பல் அலராக மிகுதியாகின்றது. அதனால் நீ வருதல் கடினம் என்று தலைவனிடம் தோழி கூறுவதாக அமைகிறது மேற்குறித்த பாடலடி.

காண்டல் விருப்பொடு கமழும் குளவி       (பதிற்.12:10)

பகைவீரர் அழியுமாறு வாள்போர் புரிந்து அவர்களின் நாடுகளைக் கொண்ட படைச்சுற்றமுடைய அரசர்கள் நடுங்கும்படி அவர்களின் காவல் மரமான கடம்பமரத்தினை வெட்டி வீழ்த்திய வேந்தன்,

தன் கன்றினைத் தழுவி நிற்கும் பெண் யானையைச் சூழ்ந்து மொய்க்கும் வண்டுகளையுடைய காட்டு மல்லிகைகள் வளர்ந்த குன்றுகள் பலவற்றைக் கடந்து உன்னிடம் வந்து தங்குவதை,

ஏனல் உழவர் வரகுமீது இட்ட

            கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை    (பதிற்.30:22-23)

எனும் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

மருதமரத்தின் உச்சிவரை புதுவெள்ளம் வந்து பெருகி அங்குள்ள வைக்கோல் புரிகளால் சுற்றப்பெற்ற மணல்கோட்டையைக் கரைந்து அழிக்கும். வெள்ளத்தினை அணைகட்டித் தடுத்து நிறுத்த விரும்பும் மக்கள் கூட்டம் பழமையான ஊரில் விழாவினைக் கண்டு திரும்பும். அத்தகைய செழிப்புடைய மருத நிலமும் தினைப்புனத்தை உழுது பண்படுத்தித் தினைப்பயிரை விளைவிக்கும் முல்லைநில மக்கள் மனமிக்க காட்டு மல்லிகைக்கொடி படர்ந்த வளமான குடியிருப்புகளில் வந்த விருந்தினர்க்குத் தினைகளைப் பகுத்துக் கொடுக்கும் முல்லைநிலம்.

பெருந்தண் குளவி குழைத்த பாடி                        (நற்.51:8)

பெருந்தண் கொல்லிச் சிறுபசுங் குளவி      (நற்.346:9)

தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதாக இப்பாடலுக்கு(நற்.376) அமைந்த துறைக்குறிப்புக் குறிப்பிடுகின்றது. தலைவியின் கூந்தல் காட்டு மல்லிகை மணக்கும் கூந்தல் என்று தன்னுள்ளே கூறுவதாக அமைகிறது .

குல்லை குளவி கூதளம் குவளை    (நற்.376:5)

தலைவி இற்செறிப்புற்றாள், இனி வெறியாட்டு நிகழவும் கூடும். தாய் வெறியாட்டு நிகழ்த்துவாள் ஆதலின் முருகவேளும் எம்மைத் துன்புறுத்தும். ஆகையால் முல்லை காட்டுமல்லிகை கூதாளி குவளை தேற்றா ஆகியவற்றின் மலர்களாற் புனைநத மிகக் குளிர்ந்த மாலையை உடையவன் தலைவன் என்று தோழி கூறுவதாகப் பாடல் அமைகிறது.

உருகெழு நாற்றம் குளவியொடு விங்கும்          (நற்.268:4)

தோழி தலைவியிடம், மலைநாட்டைச் சார்ந்த ஒருவன் என்னைச் சந்தித்தான். அவனது மலைச்சாரலில் முகத்தில் புள்ளிகளையும் வரிகளையும் உடைய யானையோடு         புலி பொருதது. அதனால் அந்த இடமெங்கும் இரத்தத்தால் சேறாகிச் சிவந்து விட்டது. அங்கு நிலவிய நாற்றத்தை வேங்கை மலர்களும் காட்டு மல்லிகைப் பூக்களும் மலர்ந்து மணத்தால் மாற்றின என்று கூறுகிறாள். இதனை உணர்த்தும் பாடலடி வருமாறு:

குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர             (அகம்.182:7)

வேங்கை மலர்களைச் சூடிக்கொண்டு தோளில் வில்லை மாட்டிப் பலாப்பழத்தில் விளைந்த தேனைப் பருகி சீழ்க்கை ஒலியோடு செல்லும் இளைஞன் ஒருவன் வேட்டைநாய்கள் பின்வரச் சென்றான். அப்போது முள்ளம்பன்றி ஒன்று மல்லிகைப் புதரின்கீழே மறைந்து நின்றது. அப்பன்றியை அவன் கொன்றான். அத்தகைய மலைநாட்டைச் சேர்ந்த வீரம் நிறைந்தவன் தலைவன் என்கிறாள் தலைவி.

முடிவுரை

இவ்வாறாக, சங்க இலக்கியம் – எட்டுத்தொகையில் குளவி பற்றியும் குளவியின் மறுபெயர்கள் பற்றியும், குளவியின் சிறப்புப் பற்றியும், பண்டைத்தமிழ் நிலப்பரப்பில் இத்தகைய மலர் பெற்றுள்ள வளத்தினையும்  இக்கட்டுரைவழி அறிய முடிகின்றது.

துணைநின்றவை

  • பாலசுப்பிரமணியம் கு.வெ.(உ.ஆ.), 2004, நற்றிணை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
  • பிரேமா இரா.(உ.ஆ.), குறுந்தொகை, 2004, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
  • சாமி பி.எல்., 1973, சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  • சுப்பிரமணியன் ச.வே.(உரை.), 2009, புறநானூறு, மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.

இரா. வைதேகி

முனைவர் பட்ட ஆய்வாளர்

பாரதிதாசன் உயராய்வு மையம்

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சிராப்பள்ளி – 24