Abstract: Religions help people to improve their life. It shows good path to everyone. Animals are very important in religious life. Human beings use animals for their benefits since ancient period. Therefore animal’s face many suffers and hurting. They face many threats from human such as Killing, persecution, chase and demolish issues. Animal rights ethics had been emerged to explain about these phenomena.  Hinduism praises animals are sacred. Hinduism claims many concepts related with devotional recognition such as provide status to animal sand production for animals. Hinduism prohibits animal sacrifice until now. There are very close relationship between human beings and animals in Christianity. Many animal rights violation happen when people use animal for hunting and sacrifices proposes. Buddhism focus about animal production and which has the opposite concept of sacrifices. “Dampapatham” strongly condemn the killing creatures. But it is not prohibited eating meats, so which is criticize by others as big defect of Dhampatham. Islam provides priority for loving animals. It considers essential water, air, trees, Plants, animals and insects as a one family. It focuses entire global creative are created by Allah. So we have to love everything in this world. Allah loves people who love all creatures.  But it also kill animals. So this study revealed above concepts related with animal abuses.

Keywords: Dampapatham, Killing, persecution, chase, இந்து சமயம், இஸ்லாம், கிறிஸ்தவம்

ஆய்வுச் சுருக்கம்

மனித வாழ்வினை நல்வழிப்படுத்த சமயங்கள் பெரிதும் உதவுகின்றன. இவ்வாழ்வில் விலங்குகள் பின்னிப்பிணைந்தவை. ஆரம்பகாலம் தொடக்கம் இன்று வரை  விலங்குகள் மனித தேவைகளுக்கு பயன்பட்டு வருகின்ற அதேவேளை இன்றைய உலகில் அவை அதிக நெருக்கடிக்குள்ளாகி கொல்லப்படுவது தொடக்கம் துரத்தப்படுதல், துன்புறுத்தல் என முற்றிலும் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைப்பாட்டை தெளிவுபடுத்திக் காட்டும் நோக்கில் விலங்குரிமை ஒழுக்கவியல் தோற்றம் பெற்றது. இந்துமதத்தில் விலங்குகள் தெய்வீகத்தன்மையுடையதாகவும், சிறந்த செல்வமாகவும் போற்றி வழிபடப்பட்டது. விலங்குகளை கௌரவித்தல் தொடக்கம் விலங்குப்பாதுகாப்பு முதலான விடயங்களை எடுத்துக்கூறுகின்றது. ஆனாலும் மிருகபலி என்பது இம் மதத்தில் இன்றுவரை தடை செய்யப்படாததொரு விடயமாக உள்ளமை விலங்குரிமை மீறலாகவே கொள்ளப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தில் விலங்குகளுக்கு இடையில் நெருக்கமான ஓர் உறவு பேணப்படுகின்ற அதேவேளை தேவை கருதி விலங்குகளைப் பயன்படுத்தல், வேட்டையாடுதல், பலியிடுதல் முதலான செயற்பாடுகளில் விலங்குரிமை மீறல்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீறப்படுகிறது. பௌத்தமதம் பலியிடுதலுக்கு எதிரான கருத்துக்கள், விலங்கு பாதுகாப்பு முதலான விடயங்கள் தொடர்பாக பேசுகிறது. உதாரணம் பௌத்த நூலான தம்ம பதத்தில் உயிர்க்கொலை வன்மையாகக் கண்டிக்கப்படுவதனைக் காணலாம். ஆனாலும் புலாலுண்ணாமையைக் கண்டிக்காமல் இருப்பது இம்மதத்தில் பாரிய குறைபாடாகவே இருந்து வருகிறது. ஜீவகாருண்யத்திற்கு முதன்மையளிக்கும் மதமாக இஸ்லாம் மதம் விளங்குகிறது. மனித வாழ்விற்கு அவசியமான நீர், காற்று, மரம், செடி கொடிகள், பூச்சியினங்கள,; விலங்குகள் முதலியவற்றை ஒரே குடும்பமாகவே இஸ்லாம் நோக்குகிறது. “படைப்புகள் அனைத்தும் அல்லாவின் குடும்பம் என்பதால் குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவன் அவனின் படைப்பில் விருப்பத்;திற்குரியவனாக கருதப்படுவான்” என்கிறது.ஆனாலும் இம் மதத்தில் அதிகளவில் மிருகவதை இடம் பெறுகின்றமையைக் காணலாம். இத்தகைய நிலைப்பாடுகளை தெளிவுபடுத்துவதாகவே  இவ் ஆய்வு அமைந்துள்ளது.

அறிமுகம்

சமயங்கள் மனித வாழ்விற்கு இன்றியமையாதனவாகும். மனித வாழ்வினை நல்வழிப்படுத்தல், ஒழுக்கரீதியாக ஒருங்கிணைத்தல், மனிதர்களின் மத்தியில் கூட்டுணர்வை வளர்த்தல், உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் முதலான செயற்பாடுகளில் தீவிர அக்கறையுடன் செயற்படுகின்றது சமயம். விலங்குகள் மனித வாழ்வில் பின்னிப் பிணைந்தவை. நவீன இயந்திர கருவிகளின் வருகைக்கு முன்னர் மனிதர்கள் ஆரம்பகாலத்தில் விலங்குகளைப் பயன்படுத்தித் தொழில்களை மேற்கொண்டனர். விவசாய நடவடிக்கைகள் அனைத்தும் எருதுகளையும், காளைகளையும் வைத்து மேற்கொள்ளப்பட்டது. மேலும் விலங்குகளும், பறவைகளும் சூழல் சமநிலைக்கு பெரிதும் உதவின. அவை மனிதனின் பொருளாதார விருத்திக்கும் உதவின. ஆனால் இன்றைய உலகில் விலங்கு உயிரினங்கள் அதிக நெருக்கடிக்கு உள்ளாகி வருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. கொல்லப்படுவது தொடக்கம் துரத்தப்படுதல், துன்புறுத்தல் என விலங்குகள் முற்றிலும் அழிந்துபோகும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்திக் காட்டும் நோக்கில் விலங்குரிமை ஒழுக்கவியல் தோற்றம் பெற்றது.

விலங்குரிமை ஒழுக்கவியலை வளர்க்கும் யோசனையை முன்வைத்தவர்களுள் Alan Dershowitz, laurence போன்றவர்கள் முக்கியமானவர்கள். கி.பி 1635, 1641, 1654களில் முதன்முதலாக விலங்குகளைப் பாதுகாத்தல் தொடர்பான தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் ரூசோ, இமானுவல் காண்ட், ஜெரமி பென்தம், தோமஸ்ரெய்லர் போன்றோர். விலங்கு ஒழுக்கவியலுக்கு முன்னுரிமை வழங்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டு காலப்பகுதியில்(1824) விலங்குகளுக்கான சமூக நிறுவனம் தோற்றம் பெற்றது. 1970இல் விலங்குரிமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 1975, 1976களில் விலங்குரிமைச் சுதந்திரங்களுக்கான வெளியீடுகள் இடம்பெற்றன, இருபத்தோராம் நூற்றாண்டில் விலங்குகளுக்கான தனி உரிமை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை காணப்படுகிறது. ஆரம்பகாலத்தில் விலங்குகளை பாதுகாத்த மனிதனே இன்று விலங்குகளின் அழிவிற்குக் காரணமாகிறான். மனிதனின் பல்வேறு செயற்பாடுகள் விலங்கினங்கள் அழிந்தும், அருகிக்கொண்டும் வருவதற்குக் காரணமாக உள்ளன.

சமயங்கள் கூறும் விலங்குகளின்  தெய்வீகத்   தன்மைகளும் அவை  மீறப்படும்  விதங்களும்

  • இந்து சமயம்

இந்துமக்களின் நீண்டகால வரலாற்றை நோக்குகையில் இந்துக்கள் இயற்கைக்கும் இயற்கைச் சூழலில் உள்ள உயிரினங்களுக்கும் முன்னுரிமை வழங்கினார்கள். இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் “இயற்கையை இறைவனுக்கு இணையானதாகக் கருதினர். “இயற்கையை அழிப்பது இறைவனை அழிப்பதற்கு ஒப்பானது” என்றனர். வேதகால மக்கள் இயற்கைக்குப் பயந்து இயற்கைச் சக்திகளான மரம், மண், இடி, மின்னல், மழை, மலை, சூரியன், கொடிகள், ஐம்பெரும் பூதங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றுக்குத் தெய்வ மதிப்புக் கொடுத்து வழிபட்டனர்.

வேதகால மக்களால் விலங்குகள் தெய்வீகத் தன்மையுடையதாகவும், சிறந்த செல்வமாகவும் போற்றி வழிபடப்பட்டன. “இறைவா எங்களது இருகால், நான்கு கால் பிராணிகளை எல்லாம் காப்பாயாக”, “பசுக்களுக்கும் புரவிகளுக்கும் சுகமளி” என வேதகாலத்தில் மக்கள் இறைவனிடம் வேண்டிக்கொண்டனர். இதிலிருந்து விலங்குகளைப் பாதுகாக்கும் பொறுப்பினை மக்கள் இறைவனிடம் வழங்கி இருந்தமை தெளிவாகிறது. மேலும் “இந்திரனே மீண்டும் பசுக்களை எங்களிடத்தே அளிப்பாயாக என்றும், அவை உயிருடன் இருக்கின்றன என நீ கூறினால் நாங்கள் இன்புறுவோம்” எனவும் வேதகாலத்தில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து வேதகாலத்தில் விலங்குகள் இறைவனிடம் இருந்து பெறும் வரமாகவே விளங்கியுள்ளமை தெரிகின்றது.

விலங்குகளைப் பராமரித்தலை வேதங்கள் எடுத்துக் கூறுகின்றன. “நண்பர்களே பசுவை பண்ணோடு அணுகுங்கள், துன்புறுத்தாமல் அவைகளை பந்தத்திலிருந்து அவிழ்த்து விடுங்கள்’, ‘காலையிலும், மாலையிலும் உன்னை ஏந்தி வரும் குதிரைகளை அவிழ்த்து விடவும்”; என்றும் கூறுகிறது வேதம். இதிலிருந்து விலங்குகளைத் துன்புறுத்தாது, கொல்லாது, பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. இந்து மதம் பசுவை புனிதமானதாக நோக்குகிறது. இதனால் பசு வதையினை வன்மையாகக் கண்டிக்கிறது. “பசுவை வீணாகக் கொல்பவன் அப்பசுவுக்கு எத்தனை உரோமங்கள் இருக்கின்றதோ? அத்தனை ஜென்மம் பசுவாகப் பிறந்து பலரால் கொல்லப்படுவான்” என்றும்  மேலும் பசுவை  போற்றிப் பேணுவதால் கிடைக்கும் புண்ணியத்தின் அளவு பற்றியும் எடுத்துக் கூறுகிறது.

இயற்கையை மட்டுமன்றி உயிரினங்களையும் இறைவனுடன் தொடர்புபடுத்தி இந்துமதம் நோக்குகிறது. விஸ்ணுவின் தசாவதாரத்தில் திருமால் பல விலங்குகளுடனும்,  இராமாயணத்தில் இராமன் – குரங்குடனும்(அனுமன்), மகாபாரதத்தில் கண்ணன் பசுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தமையைக் கூறலாம்.

விலங்குகளுக்குக் கௌரவத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்துமதத்தில் தெய்வங்களின் வாகனமாக விலங்குகளும், பறவைகளும்  விளங்குகின்றன. உதாரணம் காளி – சிங்கம், பிள்ளையார் – யானை, சிவன் -காளை, முருகன் – மயில்.

திருமூலர் மிருகங்களைப் பாதுகாப்பதற்கான வழியைக் கூறுகின்றார். உதாரணம்

யாவர்க்குமாம் இறைவார்க்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை

      யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைபிடி

இந்து சமயத்தின் பாரிய குறைபாடாக இருப்பது மிருகங்களைப் பலியிடுவதாகும். பாதையில் ஊர்ந்து செல்லும் சித்தெறும்பு கூட காலடியில் சிக்கித் தன் சாவைத் தவிர்ப்பதற்கான தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வாழ்கின்றது. இதேபோல் உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் தங்கள்  வாழ்நாட்களை நீட்டிக்கப் போராடுகின்றன. ஆனால் மனித இனத்தின் ஒரு சில சக்திகள் தங்களின் சுயநலத்திற்காகவும், நாட்டின் நலனுக்காகவும், பேராசையை அடைவதற்காகவும், மிருகபலிகளை ஆலயத்தில் நடத்தித் தங்களது நேர்த்திக் கடன்களைத்  தீர்த்துக் கொள்ள விரும்புகின்றார்கள். அத்தகைய மூடநம்பிக்கைகள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்படல் வேண்டும். இல்லாவிட்டால் சட்டம் மூலம் அது தடை செய்யப்படல் வேண்டும். இந்நிலையில் விலங்குகளின் ஒழுக்கங்கள் மீறப்படுவதனைக் காணலாம்.

  • இஸ்லாம்

இஸ்லாம் ஜீவகாருண்யத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மதமாகும். “மனித வாழ்விற்கு அவசியமான நீர், காற்று, உட்பட கோடிக்கணக்கான மரங்கள், செடிகள், கொடிகள், மலைத்தொடர்கள், மேட்டுநிலங்கள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், பூச்சியினங்கள், பறவையினங்கள், விலங்கினங்கள் அனைத்தையும் ஒரே குடும்பமாகவே இஸ்லாம் நோக்குகின்றது”. “படைப்புக்கள் அனைத்தும் அல்லாவின் குடும்பம் என்பதனால் குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவன் அவனது படைப்பில் மிகவும் விருப்பத்திற்குரியவனாகக் கருதப்படுவான்”. இதனூடாக உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதலை இஸ்லாம் போதிக்கின்றமையைக் காணலாம்.

உதாரணம் – தாகமான நாய் ஒன்றுக்குத் தண்ணீர் புகட்டிய பெண் ஒருத்திக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்றும், ஒரு பூனையை அறையில் போட்டுப் பூட்டி அதற்கு உணவோ, நீரோ புகட்டாமல் சித்திரவதை செய்தால் நரகம் கிடைக்கும் என்பதனையும் இஸ்லாமியர்கள் நம்பினர். மனிதன் மனிதர்களுக்கு மட்டுமன்றி ஏனைய உயிரினங்களுக்கும், பணிவிடை செய்யக் கடமைப் பட்டுள்ளான் என்பதில்  இஸ்லாம்  உறுதியாக உள்ளது.

உதாரணம் – “மலைகளையும், பறவைகளையும் நாம் வசப்படுத்திக் கொடுத்தோம். (17-37) (கதிஸ்)

விலங்கு பாதுகாப்புத் தொடர்பாக வலியுறுத்தினாலும் அதிகளவான சந்தர்ப்பத்தில் மிருகவதை இடம்பெறுவதனை இம் மதத்தில் காணக்கூடியதாக உள்ளது.

விலங்குகளைப் பலியிடுதல்

உதாரணம் – ஹஜ் பெருநாளைக் கொண்டாடுவதற்கு யாத்திரை செல்பவர்கள் யாத்திரையை நிறைவேற்றி முடித்தபின்பு தத்தமது வசதிக்கேற்றவாறு ஆடு, மாடு, கோழி, ஒட்டகம் போன்ற மிருகங்களில் ஒன்றைத் தெரிந்தெடுத்து “குர்பானி’’ (பலி)” கொடுத்தல்.

  • கிறிஸ்தவம்

கிறிஸ்தவத்திற்கும் மிருகங்களுக்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பு காணப்படுகின்றது. உதாரணம் – இயேசுவின் பிறப்பு மாட்டுத் தொழுவத்தில் இடம்பெற்றது.

வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் மக்கள் செய்கின்ற பாவங்களுக்குக் கடவுளால் தண்டனை வழங்கப்பட்டது. இதனால் இக்காலத்தில் மக்கள் தண்டிக்கப்பட்டு இறந்தார்கள். இத்தண்டனையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும்முகமாக இவர்களால் கடவுளுக்குப் பலி செலுத்தப்பட்டது. பலி செலுத்துவதற்கு ஆடுகள், மாடுகள் போன்ற மிருகங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து மனிதர்களின் பாவங்கள் நிமித்தம் பூமிக்கு மனிதனாக வந்து மக்களின் சகல பாவங்களையும் தன் மீது சுமந்து சிலுவையில் தன்னைப் பலியாக ஒப்புக் கொடுத்தார். இதனால் தற்காலத்தில் ஓரளவிற்குப் பலிகள் நிறுத்தப்பட்டமையைக் காணலாம்.

கிறிஸ்தவ மதத்தில் விலங்குகளின் உரிமைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீறப்பட்டுள்ளதனையும் நாம் பின்வருமாறு காணலாம்.

தேவை கருதிப் பயன்படுத்தல்

விலங்குகளின் தோலைப் பயன்படுத்தி ஆடைகள் உருவாக்கப்பட்டமை தொடர்பாகக்  கூறப்பட்டுள்ளது.

உதாரணம் : ஆதாம், ஏவாளுக்காக தேவன் விலங்கின் தோலினால் ஆடைகளை உண்டாக்கினான்.

பலியிடலுக்குப் பயன்படுத்தல்

கிறிஸ்தவ மதத்தின் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பல்வேறு நோக்கங்களுக்காகப் பல்வேறு விதமான மிருக பலிகள் செலுத்தப்பட்டன.

உதாரணம் : தகன பலி, போஜன பலி, சமாதான பலி, பாவ நிவாரண பலி, குற்ற நிவாரண பலி…

தகன பலி என்பது எவருடைய உதவியும் இன்றித் தானாகவே செய்யும் வழிபாடாகும். அறியாமல் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடிப் பக்தியை வெளிப்படுத்துவதற்காக இப்பலி மேற்கொள்ளப்படுகிறது. இப்பலியில்  இரவு தொடங்கி விடியற்காலை வரை பலிபீடத்தில் அக்கினி அவிந்து போகாது எரிந்துகொண்டே இருக்க வேண்டும். ஊனம், குறைபாடு இல்லாத காளை, வெள்ளாட்டுக்கிடாய் என்பன பலியிடப்பட வேண்டும்.

போஜன பலி : தேவனுடைய நன்மைகளையும், பராமரிப்பையும் நினைத்துச் செலுத்தப்படுவதாகும். தேவனிடத்தில் பற்றுதலாகவும், பக்தியாகவும் இருப்பதை இப்பலி வலியுறுத்துகிறது.

உணவுக்காகப் பயன்படுத்தல்

ஆரம்பத்தில் சகல உயிரினங்களும் தாவர உண்ணிகளாகவே இருந்தன. ஆனால் நோவாவின் ஜல பிரளயத்திற்குப் பின்னர் விலங்குகள் மாமிச உணவாக உண்பதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனை வேதாகமம் மிக அழகாக எடுத்துக் கூறுகின்றது. “உங்களைப் பற்றிய பயமும், அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உண்டாகியிருக்கும். பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மிச்சங்கள் யாவும் உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.  நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக! பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன். மாமிசத்தை அதன் உயிராகிய இரத்தத்தோடு புசிக்க வேண்டாம்.” எனக் கூறப்பட்டது.

கிறிஸ்தவ மதத்தின் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஒருசில மாமிச உணவுகளைத் தவிர அனைத்தும் உணவாக உட்கொள்ளப்பட்டது. இதனைக் கீழ்வரும் கூற்றினூடாக விளங்கிக் கொள்ளலாம்.

“பேதுரு எனும் தேவமனிதன் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டு இருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டான். வானம் திறக்கப்பட்டிருப்பதையும், நான்கு முனையிலும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டி போல் ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருப்பதாகவும், அதில் பூமியிலுள்ள சகலவிதமான நான்கு கால் ஜீவன்களும், காட்டு மிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருப்பதைக் கண்டான்” அவற்றையெல்லாம் அடித்துப் புசிக்கும்படித் தேவன் கட்டளையிட்டார். அதற்கு பேதுரு தீட்டும், அசுத்தமுமாயிருக்கின்ற யாதொன்றையும் ஒருகாலும் புசிப்பதில்லை” எனக் கூறினான்.

வேட்டையாடுதல்

வேதாகமத்தில் விலங்குகள் வேட்டையாடப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன. ஆபிரகாமின் மகன் ஈசாக்கு தன்னுடைய மகனான ஏசாவை ஆசிர்வதிப்பதற்காக விரும்பித் தன் மகனை அழைத்துத் தனக்கு ஒரு மிருகத்தை வேட்டையாடிச் சமைத்துக் கொண்டு வரும்படிக் கட்டளையிட்டான். அதனை ஏசா நிறைவேற்றினான். ஆகையால், “நீ உன் ஆயுதங்களாகிய அம்பறாத் துணியையும், வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்திற்குப் போய் எனக்காக வேட்டையாடி, அதை ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், மரணமடையும்முன், என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும் என்னிடத்தில் கொண்டு வா” என்றார்.

  • பௌத்தம்

பௌத்தமதம் பலியிடலுக்கு எதிராகவும், விலங்குகள், தாவரங்கள், பறவைகள் முதலியனவற்றின் பாதுகாப்புத் தொடர்பாகவும் பேசுகிறது. இம்மதம் பஞ்சசீலக் கோட்பாட்டில் ஒன்றான “கொல்லாமையை வலியுறுத்துகிறது. பௌத்த நூலான தம்மபதத்தில் உயிர்க்கொலை கண்டிக்கப்பட்டிருந்தது. ‘எந்த ஒரு பிராணியையும் அடித்துத் துன்புறுத்தாமல், கொல்லாமல், கொலை செய்யாமல் இருக்கின்றவன் யாரோ அவன் தான் சிறந்தவன் என்று கூறுகிறது பௌத்தம்.

பௌத்த மதம் போதித்த அட்டகதைகளில் ஏழு நியமங்களை புத்தர் போதித்ததாகக் கூறப்படுகிறது. அதில் ஏழாவது நியமத்தில் “வலைவீசி விலங்குகளைப் பிடிக்காதவாறு அக்கறை காட்ட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளதாக டி.டி.கோசாம்பி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் “அந்தணர்களே! பிற உயிர் வருந்துவதற்குரிய எதையும் செய்யாதீர்கள். நான் கூறுவதைக் கேளுங்கள், மேய்ச்சல் நிலத்தில் உள்ள இந்தப் புல்லை மேய்ந்து இந்தப் பெரிய உலகத்தில் உள்ள மக்களுக்கு அவர்கள் பிறந்தது முதல் தன் பாலைத் தரும் இப்பசுவிடம் உமக்கு உண்டான சினம்தான் யாது? உரைப்பீராக” எனும் ஆபுத்திரனின்(மணிமேகலைக் காப்பியம்) கூற்று இம்மதத்தில் உயிர்க்கொலை கண்டிக்கப்பட்டிருந்தமையை வலியுறுத்துகிறது.

அரசன் பிந்துசாரனின் யாகசாலையில் பலியிடுவதற்காகக் காத்திருக்கும் ஆட்டிற்காக புத்தர் பரிவுகாட்டிக் கூறும் ஆறுதலான வார்த்தைகள் விலங்குகள் மீதான அன்பினை வெளிப்படுத்துகின்றன.

மேலும் மடாலயங்களின் வழிகாட்டலின் பத்து வகையான விலங்குகளின் மாமிசத்தை (மனித மாமிசம், யானை, குதிரை, நாய், சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, கழுதை, புலி) உண்ணுதல் தடை என  வலியுறுத்தப்பட்டுள்ளது. சமுதாயச் சீர்கேட்டை எதிர்த்து உலக உயிர்களின் மீது அகிம்சையைப் போதித்து, வேள்விகளையும், பலியிடுதலையும் கண்டித்தலை நோக்காகக் கொண்டு இம்மதம் செயற்பட்டது. புத்த பேரரசனான அசோகன் தான் செய்த உயிர்க்கொலைக்குப் பரிகாரம் தேடுவதற்காக  பௌத்த மதத்தைத் தழுவினார். மேலும் சூழல், உயிர்களின் பாதுகாப்புப் பற்றிய பிரகடனங்களையும் வெளியிட்டார். இதனைக்  கல்வெட்டுக்கள், கற்றூண்கள், அரசாணைகள் முதலியன ஊடாகக் கண்டு கொள்ளலாம்.

எனினும், பௌத்த மதம் பலியிடுதலைக் கண்டிக்காமல் இருப்பது விலங்குரிமை மீறலாகவே பார்க்கப்படுகிறது. இதனைக் கீழ்வரும் செயற்பாட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உதாரணம் – கோசலநாட்டு மன்னன் சேனாதிபதி பலியிடுதலுக்கு 500எருதுகள், 500காளைகள், 500 பசுக்கள், 500 செம்மறி ஆட்டுக்குட்டிகள் முதலியவைகளைப் பயன்படுத்தியமை.

விலங்குகளின் உரிமைகள் ஒழுக்கவியல் ரீதியாக மீறப்படும் சந்தர்ப்பங்கள்

இயற்கைச் சூழலில் இன்றியமையாததொன்றாக விலங்குகள் விளங்குகின்றன. மனிதர்களுக்கு உயிர்வாழ்தல் எவ்வாறு அவசியமோ அதுபோலவே விலங்குகளுக்கும் உயிர்வாழ்தல் அவசியம். விலங்குகளை மனிதர்கள் உணவு, உடை, பொழுதுபோக்கு, அலங்கார பொருள் உற்பத்தி, ஆய்வுகள் முதலிய விடயங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் விலங்குகள் உடலியல், உயிரியல், உளவியல் ரீதியில் பல்வேறு தாக்கங்களை எதிர்கொள்கின்றன. இத்தகைய செயற்பாடுகள் விலங்குரிமை மீறல்களாகவே கருதப்படுகின்றன.

  • வாழிடங்களை அழித்தல்

மனிதனின் பல்வேறு நடத்தைகளால் காடுகள் அழிக்கப்படுகின்றன. மனிதன் தனது அடிப்படைத் தேவைகளைப்(உணவு, உடை, உறையுள்) பெற்றுக் கொள்வதற்காகவும், அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், பெருந்தோட்ட பயிர்ச்செய்கை, விவசாய நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்காகவும் காடுகளை அழிக்கின்றான். விலங்குகளின் வாழிடமான காடுகள் அழிக்கப்படுவதனால் காட்டு விலங்குகள் வாழிடம் இன்றி அழிவடைகின்றன. மேலும் இவ்விலங்குகள் காடுகளை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் மக்கள் தமது பாதுகாப்புக் கருதி கொடிய ஆயுதங்கள், நஞ்சு ஊட்டப்பட்ட பீடைகொல்லிகள் முதலியவைகளைப் பயன்படுத்தி  அழிக்கின்றனர். இதனால் விலங்குகள் பல்வேறு நிலைகளிலும் பாதிப்பை எதிர்நோக்குகின்றன.

  • சூழல் மாசடைதல்

சூழல் மாசடைவதால் விலங்குகள் பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் எண்ணெய், கதிரியக்கமுள்ள கழிவுப்பொருட்கள்,  காடுகளை அழித்தல், அளவுக்கதிகமான பீடைகொல்லிகள் பாவனை முதலிய செயற்பாடுகளால் விலங்குகளின் உயிர் உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றது.

  • வேட்டையாடுதல்

ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை வேட்டையாடுவதை மனிதன் பல்வேறு தேவை கருதி மேற்கொண்டான்.

உதாரணம் – திமிங்கலங்களின் உடலிலுள்ள கொழுப்புப் பொருளிலிருந்து கிடைக்கும் எண்ணெய். வன விலங்குகள் – கம்பளி மயிர், உணவு, தோல், கொம்பு, தந்தம், தோல்.

  • பலியிடுதல்

சடங்குகளும், நம்பிக்கைகளும் ஒருங்கிணைந்த தொகுப்பே உயிர்ப்பலி ஆகும். அந் நிகழ்வில் சில காலங்களுக்கு புனிதமாக கருதப்படும் விலங்குகள் உணவாக உட்கொள்ளப்படாமல் அக்குறிப்பட்ட உயிரினம் பலியிடப்பட்டு அவற்றின் உறுப்புகள் ‘சடங்கு உணவாக’ உட்கொள்ளப்படும். இதனால் “புனித உயிரினத்தில் அடங்கியுள்ள உயிர்ப்புச் சக்தி கைவரப்பெறும்” என்ற நம்பிக்கை மனிதர்களிடையே காணப்பட்டது. மேலும் புதையல்கள், பாலங்களை அமைத்தல், அநீதிகளில் இருந்து தப்பித்துக்கொள்ளுதல், நேர்த்தியினை நிறைவேற்றுதல், சடங்கு சம்பிரதாயங்களின் போது விரும்பியதைப் பெறுதல், வசிய செயற்பாடுகள்  முதலியவைகளின் நிமித்தம் விலங்குகள் பலியிடப்படுகின்றன.

  • ஆய்வுகள்

மனிதநலன் கருதிக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை மனிதர்களுக்குப் பயன்படுத்துவதற்கு முன்னர் விலங்குகளுக்குப் பயன்படுத்துவதனைக் காணலாம்.

உதாரணம் – புற்றுநோய் அணுக்களை அழிக்கும் திறன் கொண்ட புரதம் தாங்கிய நானோ துகள்களைப் புற்றுநோய் மருந்துடன் கலந்து முதலில் எலிக்குச் செலுத்திப் பரிசோதிக்கப்பட்டது. பின்னரே மனிதர்களுக்குப் பயன்படுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாட்டை பீட்டர் சிங்கர் குறிப்பிடும்போது ஒரு மனிதன் புற்றுநோயின்போது நாளாந்தம் எவ்வாறு வலிகளை அனுபவித்து மெல்ல மெல்ல இறக்கின்றானோ அவ்வாறே ஒரு பரிசோதனை கூடத்திலிருக்கின்ற எலியின் நிலையும் காணப்படும்.

வில்லியம் ஹார்வி மனிதனின் குருதி சுற்றோட்டத் தொகுதியைக் கண்டுபிடிப்பதற்குத் தவளையை பயன்படுத்தினார். விண்வெளி ஆராய்ச்சிக்கு லைகா நாய் பயன்படுத்தப்பட்டது.

லூயி பாஸ்டர் எனும் விஞ்ஞானி வெறிநாய் கடிக்கான மருந்தினைக் கண்டுபிடிப்பதற்குச் சில குறிப்பிட்ட நாய்களைக் கட்டுப்பாட்டுக் குழு பரிசோதனைமுறைக்கு உட்படுத்தி அம்மருந்தினைக் கண்டுபிடித்தார். அவ்வாறு தான் பல தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை மனிதர்களுக்குச் செலுத்தப்படுவதற்கு முன் விலங்குகளுக்கு செலுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அம்மருந்துகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

ஆய்வுக்காக சிறிய விலங்குகள் முதல் பெரிய விலங்குகளான நாய், பூனை, பன்றி, மாடு, குரங்கு போன்றவைகளும் பயன்படுத்தப்படுகின்றன. சிலவேளைகளில் கோழி, பறவை, தவளை, தும்பி முதலியனவும் ஆய்வின் போது பயன்படுத்தப்படுகின்றன. இதனால் விலங்குகள் நோய்வாய்ப்பட்டு அழிவடைகின்றன.

  • தேவைகருதி விலங்குகளைப் பயன்படுத்தல்

போக்குவரத்திற்காகக் கால்நடைகளைப் பயன்படுத்தல். உதாரணம் – மாடுகள், எருதுகள், குதிரைகள், யானைகள், கழுதைகள்.

 

  • தொழிலின் நிமித்தம் விலங்குகளைப் பயன்படுத்தல்

உதாரணம் – ஆரம்பகாலங்களில் விவசாயத்தொழிலை மேற்கொள்வதற்கு அதிகமாக எருதுகள் பயன்படுத்தப்பட்டன. பொதி சுமப்பதற்குக் கழுதைகள், எருதுகள் பயன்படுத்தப்பட்டன.

  • இனப்பெருக்கத்தைத் தடை செய்தல்

உயிரினங்களின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாக இனப்பெருக்கம் காணப்படுகின்றது. உயிர்வாழ் விலங்கினங்கள் அனைத்தும் இனப்பெருக்கத்தினுடாகவே தங்களது இனத்தைப் புதுப்பித்தும், பெருக்கியும் கொள்கின்றன. இதனை மனித சமுதாயம் விலங்குகளுக்குத் தடுப்பூசிகளை ஏற்றுதல், சத்திரசிகிச்சை மேற்கொள்ளல், கருத்தடைகளை நிகழ்த்துதல் முதலிய செயற்பாடுகளை மேற்கொண்டு இனப்பெருக்கத்தைத்  தடை செய்கின்றனர். இதனால்  விலங்குகள் பல்வேறு வழிகளிலும் தம் இனத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாதவாறு பாதிப்பை எதிர்நோக்கின்றன.

விலங்குகளுக்கான உரிமைகள் மீறப்படும் சூழல்களைத் தவிர்க்கும் முறைகள்

  • எல்லா மிருகங்களின் உயிரும் மதிக்கப்படல் வேண்டும்.
  • மிருகங்களைச் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்துதல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • விலங்குகளை வதை செய்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • தவிர்க்கமுடியாத காரணத்தின்போது மிருகங்களை வதை செய்ய வேண்டுமாக இருந்தால் வலி ஏற்படுத்தாமல் வதை செய்தல் வேண்டும்.
  • ஒழுக்கவியல் ரீதியாக இறந்த மிருகம் அடக்கம் செய்யப்படல் வேண்டும்.
  • வீட்டில் வளர்க்கும் மிருகங்களிடம் கடுமையாக வேலை வாங்குதல், துன்புறுத்தல் கூடாது. உதாரணம் : மாடுகள் வயல் நிலங்களை உழுதும் போது அவற்றுக்கு அவசியம் ஓய்வு கொடுக்கப்பட வேண்டும்.
  • மிருகங்கள் உடலியல் ரீதியாக கௌரவிக்கப்பட வேண்டும். உதாரணம் – பாலூட்டிகள்.
  • மிருகங்களின் சோதனையின் போது உடல், உள ரீதியாகத் தீங்கு விளைவிப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • வனவிலங்குகளை முழுமையாக அழித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் பாதுகாப்பும், வனவிலங்குகளின் பாதுகாப்பும் அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

துணைநின்றவை

  • அலெக்சாண்டர் பி.சி. 1988, “அறிவியற் களஞ்சியம்”, (தொகுதி – 05, 06, 07), அண்ணாமலை, சிவகாமி அச்சகம்.
  • … (தொ.ஆ.), 1988, “அறிவியற் களஞ்சியம்”, (தொகுதி – 05, 06, 07, 10), அண்ணாமலை, சிவகாமி அச்சகம்.
  • அனஸ் எம்.எஸ்.எம்., 2006, மெய்யியல் (கிரேக்கம் முதல் தற்காலம் வரை), கொழும்பு-12, குமரன் புத்தக இல்லம்.
  • இரத்தினசிங்கம் சி.வ., 2008, “உலக மதங்கள் பற்றிய அரிய தகவல்”, சென்னை, பான் ராஜா கிராபிக்ஸ்.
  • இரத்தினசிங்கம் வ., 2008, “உலகமதங்கள்”, ராஜா கிராபிக்ஸ்.
  • சிவானந்தமூர்த்தி க., 2012, “ஒழுக்க நியமங்களும், அதன் நடைமுறைகளும்”இ லங்கா புத்தகசாலை வெளியீடு.
  • ஞானகுமாரன் நா., 2003, “மெய்யியல்”, கொழும்பு-11, சேமமடு புத்தகசாலை வெளியீடு.
  • பாலுசாமி நா., 1987, “வாழ்வியற் களஞ்சியம்”, (தொகுதி 02, 04, 12), அண்ணாமலை, சிவகாமி அச்சகம்.
  • ஜமாகீர் பீ.எம்., 2010, “மெய்யியல் பிரச்சினைகளும், பிரயோகங்களும்”, கண்டி, நதா வெளியீடு.
  • Burgh W.G.De., 1937, “To wards a Religious Philosophy , Macdonald& Evance, London
  • John, H.Hick, 1990, “Philosophy of Religion”, Prentice Hall Foundation of Philosophy Series in India.
  • Masih Y., 1971, “Introduction to Religious Philosophy Motial Banarsddass Publishers, Delhi.
  • William James, 1902, “The varieties of Religious Experience the modern Library, New York.

………….

திரவியராசா நிரஞ்சினி

BA (Hons) Eastern University, Sri Lanka.

MA, University of Peradeniya, Sri Lanka.

[email protected]