முன்னுரை

தமிழ் இலக்கியக் களத்தில் காலூன்றிய பெரும்பாலான பெண்கவிஞர்கள் இலக்கியத்தின் வழியாகப் பெண்நிலை சார்ந்த கூறுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.  அவ்வாறு வெளிப்பட்ட பெண்நிலை சார்ந்த கூறுகள் சமூகத்தில் எதிர் சிந்தனையையோ அல்லது மாற்றுச் சிந்தனையையோ ஏற்படுத்தி வைத்திருக்கின்றன.  அந்தந்தக் காலக்கட்டத்தில் சாத்தியப்பட்ட களத்தில் தன் குரலைப் பதிவு செய்யும் முயற்சிகள் பெண்கவிஞர்களிடம் இருந்துள்ளன.  அந்த வகையில் சுந்தரத்தம்மையார் குரலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தன் கவிதைகளைப் பாட அம்மையார் தேர்ந்தெடுத்தது பக்திக்களம் ஆகும்.  ஆனால் பிற பெண் கவிஞர்களைப் போல் பக்திநிலையில் நின்று பாடாது, புராணக் கதைகளை முன்னிறுத்தித் தன் கவிதைகளைப் படைத்துள்ளார்.  புராணக் கதைகளின் வழிநின்று பெண் நிலை சார்ந்த கூறுகளைப் பாடிய முதல் பெண் கவிஞர் சுந்தரத்தம்மையார் ஆவார்.  இவர் எழுதிய கவிதைகள் பலவாகும். ஆனால் அதில் “பெண் மாட்சி” எனும் தலைப்பில் எழுதிய நூல் மட்டுமே கிடைக்கிறது.  பிற நூல்கள் கிடைக்கவில்லை.  இவர் பற்றிய குறிப்புகள் எந்த இலக்கிய வரலாற்று நூலிலும் கிடைக்கப்பெறவில்லை.  பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் எழுதிய “பெண்ணின் பெருந்தக்கது இல்” எனும் நூலில் அம்மையாரின் நூலான பெண் மாட்சி முழுமையும் அது குறித்த சில தகவல்களும் வெளிவந்துள்ளன.

புராணக் கதைகளின் வழிநின்று ஆணின் ஒழுக்கமின்மையையும் பெண்ணின் கற்பு மேம்பாட்டினையும் பாடியுள்ளார்.

இவர் தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்தவர்.  19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  இவரது கணவர் சங்கரலிங்கம் ஆவார்.  வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள், முருகதாச சுவாமிகள் போன்ற பல பெயர்களாலும் சங்கரலிங்கம் அழைக்கப்படுகிறார்.  சுந்தரத்தம்மையார் விழுப்புரம் வட்டாரம் திருவாமாத்தூர் என்ற ஊரில் உள்ள கௌமார மடத்து ஆலய வளாகத்தில் தன் கணவருடன் வசித்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.  தன் கணவரையே ஆசிரியராகவும், ஞான குருவாகவும் கொண்டிருந்தவர்.  அதனால் கணவரிடமே இலக்கிய இலக்கணங்களைக் கேட்டும் அவரின் கவிதைகளைப் படித்து உணர்ந்தும் இருந்தவர் அம்மையார்.

“அம்மையார் எழுதிய அனைத்து நூல்களும் கிடைக்கவில்லை.  ‘பெண் மாட்சி’ என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது.  பெண்ணின் மாண்புகளை உரைப்பதற்காக எழுதப்பெற்றுள்ளது.  கணவரின் அன்பு ஆணைப்படியே அந்நூலை அம்மையார் இயற்றினார்.  கணவரோடும், உடன் இருந்த புலவர்களோடும் நூலின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்ட பின்னரே ‘பெண் மாட்சி’ நூலாயிற்று என்பர்”1 இந்நூல் 82 கண்ணிகளால் ஆனது.  கலி வெண்பாவால் கவிதைகள் இயற்றப்பட்டுள்ளன.  பெண்ணின் மேன்மையைக் கூறுவதற்குப் பாடப்பெற்ற நூல் இதுவாகும்.  புராணக்கதைகளின் வழிநின்று “சிவன், திருமால், பிரம்மன், விநாயகர், முருகன், இந்திரன் போன்ற தெய்வங்களின் பெண்மோகத்தை ஒவ்வொரு நிகழ்ச்சிகளின்வழி விளக்கிச் செல்கிறது பெண்மாட்சி.  பெண்ணினத்தை இழிவுபடுத்தும் சிலருக்காகப் பெண்ணுயர்வைக் காட்ட எழுதப்பெற்ற நூல் இது. நூலின் முற்பகுதி ஆண்களின் லீலைகளும் பிற்பகுதியாகப் பெண்ணின் பெருமைகளும் விளக்கம் பெறுகின்றன”2

இந்நூலுக்குத் தண்டபாணி சுவாமிகள், இவரின் மாணாக்கராகிய இராமானந்த சுவாமியும்  அவர் மாணாக்கர் பலரும் சாத்துகவி பாடியுள்ளனர்.  கிருபானந்த வாரியார் இந்நூலுக்குக் குறிப்புரை எழுதியுள்ளார்.  காப்புப் பாடலுடன் நூல் தொடங்குகிறது.  சரஸ்வதி, விநாயகர், குரு போன்றோரின் மீது காப்புப் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.  அவையடக்கப் பாடலாக ஒரு பாடல் பாடப்பெற்றுள்ளது.

சிவன், திருமால், பிரம்மன், விநாயகர், முருகன், இந்திரன், அக்னிதேவன் போன்றோரின் லீலைகளைப் புராண கதைகளின் வழிநின்று கூறியுள்ளார்.

சிவன்

தாருகாவனத்தில் இருந்த முனிவர்கள் தாம் செய்யும் கர்மாவே நமது வாழ்வைத் தீர்மானிக்கும் அதுவே பலன் தரும்.  அதனால் தெய்வத்தை வணங்கத் தேவையில்லை என்று எண்ணித் தன் மனைவியருடன் தனியாக அவ்வனத்தில் வசித்து வந்தனர்.  மேலும் தம் துணைவியர்களின் கற்புத்திறமே உயர்ந்தது மற்ற எதுவும் அதன்முன் உயர்வு இல்லை என்று கடவுளையும் இகழ்ந்தனர்.  இதனால் சிவனும் விஷ்ணுவும் வேறு உருக்கொண்டு அங்குச் சென்றனர்.  சிவன் பிக்ஷ்சாடன உருவமும் விஷ்ணு மோகினி உருவமும் கொண்டு சிவன் அம்முனிவர்களின் துணைவியரிடத்தும் விஷ்ணு அம்முனிவர்களிடத்தும் சென்றனர்.  மோகினி உருவத்தில் மயங்கி முனிவர்கள் விஷ்ணு பின்னால் சென்றனர்.  பிக்ஷ்சாடன உருவத்தைக் கண்டு அப்பெண்கள் அவர் மேல் மையல் கொண்டு, கர்ப்பிணியாக இருந்த பெண்கள் மனதால் அவரைத் தழுவியதால் அவ்விடமே குழந்தையைப் பெற்றுக் கற்பிழந்தனர்.  இதனால் முனிவர்கள் சிவனிடம் கோபித்து ஆபிசாரயாகமொன்று செய்து பூதப்படை பாம்பு, முயலகன், உடுக்கை, மழு, மான், வெண்டலை, புலி, அழல், அலகை, சூலம் போன்றவற்றை வரவைத்து ஏவினர்.  அவை சிவனை ஒன்றுஞ் செய்யவில்லை.  பின், கடுங்கோபங் கொண்டு சாபமிட்டனர்.  அதுவும் ஒன்றும் செய்யவில்லை. இதனைக் கண்ட முனிவர்கள் நீங்கள் யாரெனக் கேட்க அதற்குச் சிவன் ‘யாம் கைலையிலுள்ளோம்’ எனக் கூறி மறைந்தார்.  அவர் சென்ற பின்பு முனிவர்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டனர்.  அதன் காரணம் அறிய இந்திரனிடஞ் சென்றனர்.  அதற்கு இந்திரன் ‘முதலானவரான சிவமூர்த்தி எதிரில் தரிசனம் தந்தும் அறியாமையால் இந்த நோய் உங்களை வருத்துகிறது’ என்றனன்.  அதனால் முனிவர்கள் தாம் செய்த தவற்றை உணர்ந்து சிவபூசை செய்து நன்மைபெற்ற வனம் இதுவாகும்.  இப்புராணக் கதையை முன் வைத்தே

மூவாமுனிவர் புணர்

பாகியற் சொல்லாராற் பரிசழிந்தான்வாகீசர்

விண்ட மொழிகொண்ட விறல் அரக்கன்றன்

மனையை கண்டு நற்கற்பின் கருத்தளித்தான்  (பெண்மாட்சி.4-5)

எனப் பாடியுள்ளார்.  பெண்ணின் மேன்மை என்பது கற்பு ஒழுக்கம் தான் என ஆண் சமூகம் விதித்த கோட்பாடுகளுக்கு ஏற்ப வாழ்ந்த பெண்களின் கற்பு மேன்மையாகப் புகழப்பட்டது.  இதனால் கடவுளின் கருணை வேண்டாது தாமே உயர்வாக வாழ்ந்தனர்.  இந்நிலையில் தம் கற்பின் மேன்மையைக் கொண்டே சிறப்புடன் வாழ்ந்த பெண்களின் நலனை அழித்தான் சிவன் எனப் பாடியுள்ளார்.  இதன்மூலம் ஆண்சமூகம் உருவாக்கிய கோட்பாட்டை அவ்வாண்சமூகமே தன் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும்.  எந்நிலையிலும் பெண் மட்டுமே துன்ப நிலைக்கு ஆளாகி ஒடுக்கப்படுகிறாள் என்ற கருத்தே இதன் மூலம் காணக்கிடைக்கிறது.  மேலும்

வல்லாள மன்னன் மருவு மனையாளாம்

     நல்லாளைச் சேர்வான் போல் நண்ணினான்   (பெண்மாட்சி.6)

என்பதையும் பாடியுள்ளார்.  விஜயநகரத்து அரசரில் ஒருவரான வல்லாளன் புத்திரப்பேறு வேண்டும் என்று சிவனடியாருக்குத் தானம் செய்து வந்தான்.  அச்சமயத்தில் சிவன் ஒரு சங்கமராய் வந்து பெண்போகம் வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.  அதை நிறைவேற்ற எண்ணி அரசன் தன் ஊரில் உள்ள தாசிகளை அழைத்து வர குறித்த ஒரு நாளில் ஏவல் செய்தான்.  ஏவலாளர் அதன் காரணமாக ஒவ்வொரு தாசி வீட்டுக்கும் சென்ற பொழுது ஒரு நாயகன் இருப்பதைக் கண்டனர்.  அதன்பின் அதை அரசனிடம் வந்து கூறினர்.  இதைக் கேட்ட அரசன் தன் துணைவியரில் ஒரு பெண்ணை இந்நிலை கூறிச் சம்மதிக்க வைத்துச் சங்கமரர் இருக்கும் அறைக்கு அனுப்பினான்.  அவள் சென்று உறங்கிக் கொண்டிருந்த சங்கமரை அணைத்தபொழுது அவர் குழந்தையாய் மாறினார்.  அரசன் விருப்பத்திற்கேற்ப அங்கேயே இருந்து அரசன் திருக்கயிலை அடையச் சிவன் அரசருக்குத் தாமே கர்மாதிகளைச் செய்தார் என்பர்.

இப்புராணக் கதையைக் கொண்டே அம்மையார், சிவன் அடுத்தவர் மனைவியை விரும்பியதாகப் பாடியுள்ளார்.  இங்கும் ஆண் சமூகம் உருவாக்கிய கோட்பாடான பிறரின் மனைவி மீது விருப்பம் கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு மீறப்பட்டுள்ளது.  ஆனால் அது கடவுள் என்கிற நிலையில் மீறலாக இல்லாமல் அவரின் திருவிளையாடல்கள் எனப் பக்திநிலையில் இருத்திப் பார்க்கப்படுகிறது.  இந்நிலையையே அம்மையார் சாடியுள்ளார்.

திருமால்

திருமாலின் பல்வேறு லீலைகளை அம்மையார் பாடியுள்ளார்.

 • நெடிய திருமால் பூமியை ஓரடியால் அளந்து பூமாதேவியைத் தனக்குள் அடக்கிய ஆண் ஆளுமை உடையவன்.
 • பூமகளைத் தன் மார்பிற் போகங்கொண்டு வைத்துள்ளவன் திருமால்.
 • கோவர்த்தனகிரியைக் குடையாகக் கொண்டு கோபியரைக் காத்ததும் திருமாலின் லீலை எனக் கூறியுள்ளார்.
 • பூமியைப் பெண்ணாகப் பாவித்து அதைத் தனக்குள் அடக்குமாறு செய்ததன் மூலம் ஆண் ஆளுமை மிக்கவன் என்பதும் பெண் என்றுமே அவனுள்ளேயே அடங்கி இருக்க வேண்டியவள் எனும் ஆதிக்க மனப்பான்மையைச் சுட்டுகிறது. மேலும் கோபியருடன் புரிந்த லீலைகளும் ஒர் ஆண் எத்தனைப் பெண்களுடன் இருந்தாலும் அது தவறாகக் கூறப்படாமல் தெய்வநிலையிலேயே வைத்துப் பார்க்கப்படுகிறது.  இத்தகைய ஆதிக்க மனப்பான்மையையே அம்மையார் தம்பாடலில் வெளிப்படுத்தி உள்ளார்.

பொல்லாச் சலந்தரன்றன் பொற்கொடியாய் போய்க்கபட

சல்லாபம் செய்தவள்சொல் சாபமுற்றான், பல்லோர்

அறிய அவள்நீற்றும் அணியுடம் பின்வாசம்

செறிதுளவே மாலை யென்றும் சேர்த்தான்   (பெண்மாட்சி.11-12)

என பிருந்தையிடம் திருமால் செய்த லீலைகளைக் கூறியுள்ளார்.

 • பிருந்தை முற்பிறவில் துளசி என்ற பெயரில் தர்மத்வசன், மாதவி ஆகியோருக்குப் பிறந்தாள். நூறுவருடம் கருக்கொண்டு பிறந்ததால் துளசி எனப் பெயரிட்டனர்.  இவள் நாராயணனைக் கணவனாக அடைய வேண்டி பதரிவனஞ் சென்று தவஞ் செய்தாள்.  பிரம்மன் இவள் முன் வந்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, தன் விருப்பத்தைக் கூறினாள்.  அதற்குப் பிரம்மன் இவளை நோக்கி ‘அம்மா கிருஷ்ணன் தேகத்தில் பிறந்த சுதர்மன் என்னும் கோபாலன் முன்னொருகால் உன்னைக் கண்டு மோகித்து அவ்வாசையை முடிக்காதவனாய் வருந்துகையில் ராதை அவளைப் பூமியில் பிறக்கச் சபித்தனள்.  அவன் பூமியில் சங்கசூடனாய்ப் பிறந்திருக்கிறான்.  நீ அவனை மணந்து பின் விருஸ்ரூபமாய்ப் பிருந்தாவனத்தில் பிருந்தாவாணி எனும் பெயருடன் கிருஷ்ணனுடனிருப்பாய்’ என்று கூறி மறைந்தார்.  பின் இவள் தன்னைத் தேடிவந்த சங்கசூடனை மணந்தாள். சங்கசூடன் சங்கரருடன் யுத்தஞ்செய்து மாண்டபின்பு விஷ்ணு சங்கசூடன் போலுருக்கொண்டு துளசியைப் புணர்ந்தார்.  காரணவேறுபாடு அறிந்த துளசி ‘நீ என் கற்பைக் கெடுத்ததால் கல்லாக வேண்டும்’ எனச் சபித்தாள்.  பின் தீப்புகுந்தாள். அந்தச் சாம்பலில் இருந்து தோன்றியது துளசி.  பிருந்தை பெண்ணாக இருந்த போதும் அவளை விரும்பிய திருமால் அவள் துளசிச்செடியாகிய பின்பும் அதை மாலையாகத் தன் கழுத்தில் அணிந்துள்ளார். அவள் மீதுள்ள மையலால் அம்மாலையை அணிந்துள்ளார் என அம்மையார் பாடியுள்ளார்.

மறியணியும்

           கையான் மயங்கவொரு காரிகையாய் வேடமெடுத்து

           எய்யாமல் ஓர்மகவும் ஈன்றானே     (பெண்மாட்சி.12-13)

பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதத்தை அசுரர்களை உண்ணவிடாமல் தேவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டி திருமால் மோகினி உருக்கொண்டு வந்தார்.  அப்போது மோகினியைக் கண்டு சிவன் மயங்கியமையால் இருவரிடையே உறவு ஏற்பட்டு ஐயப்பன் எனும் ஒரு மகனைப் பெற்ற நிகழ்வை அம்மையார் பாடியுள்ளார்.

விஷ்ணு ஆணாக இருக்கும் போது பெண் மீது மையல் கொண்டு மயங்கினார்.  பெண்ணாக உருவம் மாறிய போது ஆண்களை மயக்குகிறார்.  ஒர் ஆண் எந்நிலையில் இருந்தாலும் தன் ஒழுக்கத்தைப் பேணுவதில்லை என்பதை அம்மையார் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரம்மன்

பிரம்மன் சரசுவதியை மனைவியாகக் கொண்டதல்லாமல் சாவித்திரி முதலாகப் பெண்டிர் மீது மையல் கொண்டு உழன்றான் என்பதை,

கற்றவரு மற்றுங் கணமாய சீவர்களும்

     நற்றகைசால் வாக்கினொலி நண்ணிருமா(று) உற்றவளைத்

     தன் மனையாய்ப் பெற்றுமெழிற் சாவித்திரி முதலாம்

     பன்மடவா ராசையினிற் பட்டுழன்றான் (பெண்மாட்சி.16-17)

எனப் பாடியுள்ளார்.  மேலும்,

மன்மதன்றன்

     சேனைத் தலைமைத்தி லோத்தமையைச் செய்தவள்பின்

     மானத்தை விட்டோடி மாழ்கினான்  (பெண்மாட்சி.17-18)

எனப் பாடியுள்ளார். பிரம்மன் திலோத்தமையைப் படைத்து அவள் அழகைக் கண்டு விரும்பியபோது அவள் பயந்து நான்கு திக்கிலும் ஓடினாள்.  ஓடிய அத்திக்குகளிலெல்லாம் பிரம்மன் ஒவ்வொரு முகம் கொண்டு பார்த்தார்.  அதனால் நான்கு முகங்களைக் கொண்ட நான்முகன் ஆனார் எனக் கூறுவர்.  இந்நிகழ்வைக் கொண்டே அம்மையார் பாடியுள்ளார்.  தான் படைத்த பெண்ணின் மீதே மையல் கொள்வது என்பது இழிவான செயல்.  எனவே தன்மானத்தையும் மறந்து அவள் அழகில் மயங்கினான் எனப் பாடியுள்ளார்.

பிரம்மன் சரஸ்வதி மீது மிகுந்த மையல்கொண்டு நூறு பெண்ணுருவாக மாறித் தன்னை மகிழ்விக்கக் கூறினான்.  சரஸ்வதியும் அதை ஏற்று நூறு பெண்ணுருவாக மாறினாள்.  அவர் அனைவரையும் உச்சிப்பகலில் கூடித் திரிந்த காரணத்தினால் திவாந்தகன் முதலிய அரக்கர்கள் அநேகரைப் பெற்றான்.  இந்நிகழ்வைக் கொண்டே அம்மையார்,

விழியார் அனேகரையோர் வெம்பகலிற் சேர்ந்து

     பழியாயிரம் விளைத்துப் பாவம் பொழிமேகம்

     அன்ன அசுரர் அனேகரைப் பெற்றான் (பெண்மாட்சி.19-20)

இவ்வாறு பாடியுள்ளார். அளவுக்கு அதிகமாக ஆண் ஆசைப்பட்டால் அது தீங்கில்தான் முடியும்.  மேலும் பல ஆயிரம் பழிச்சொல்லுக்கு ஆளாவர்.  அந்நிலையே பிரம்மனின் நிலையாகும்.  இதையே அம்மையார் பாடியுள்ளார்.

ஆண் எந்நிலையில் இருந்தாலும் பெண் மீது கொண்ட மையல் மாறாமல் பெண்ணைப் பல விதங்களில் தன் கட்டுக்குள்ளேயே வைக்க எண்ணுகிற ஆதிக்க நிலை, தெய்வநிலையில் வைத்துக் கூறப்பட்டுள்ள தன்மையை அம்மையார் சுட்டிக்காட்டியுள்ளார்.

விநாயகர்

சித்தி, புத்தி, வல்லபை, திருமாலின் மகள்களாகிய மோதை, பிரமோதை, அமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசின், காந்தை, சாருகாசை, நந்தினி, சுமந்திதிமை, காமதை முதலிய பன்னிரண்டு பெண்களையும் விநாயகர் மணந்தார்.  இதையே அம்மையார் தன் பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.

வல்லபையைத் தன்மடியில் வைத்திருந்தும்நல்லசித்தி

     புத்தியெனுமிருவர் போகமுந் துய்த்தான் திருமால்

     அத்தினத்திற் பெற்ற பெண்கள் ஆறிருவர்நித்திக்

     களிக்கூர கொண்டனைந் தான்      (பெண்மாட்சி.21,22,23)

ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்து பெண்ணின் மீது தன் அதிகாரத்தை நிலைநாட்டும் ஆணின் தன்மையை அம்மையார் இவ்விடத்தில் சாடியுள்ளார்.

முருகன்

தேவேந்திரன் மகளாகிய தெய்வயானையை மணந்து விண்ணகர் குடியேறித் திருப்பரங்குன்றத்தில் அமர்ந்த முருகனிடம், நாரதர் பூமியில் வாழும் வள்ளியின் அழகு முதலியவற்றைக் கூற, அதனைக் கேள்விப்பட்டுப் பூமிக்கு வேடர் போல வேற்று உருக்கொண்டு வந்து வள்ளியிடம் உரையாடிக் கொண்டிருந்தார். அவ்வேளையில் வேடர்கள் வர, அதை உணர்ந்த முருகன் வேங்கை மரம் போல உருமாறி நின்றார்.  மீண்டும் அவர்கள் சென்ற பின்பு வேடன் போல மாறி வள்ளியிடம் உரையாடினார்.  மறுபடியும் வேடர்கள் வர, விருத்தசந்நியாசியாய் மாறி, வந்த வேடர்களை ஆசீர்வதித்தார். உடனே வேடர்கள் இந்த சந்நியாசியே நம் வள்ளிக்குக் காவலிருக்கட்டும் எனக் கூறிச் சென்றனர்.  அவ்வாறு முருகன் காவலிருக்கும் போது தாகமாக உள்ளது எனக் கூற, வள்ளியும் உடன் சென்று சுனையில் நீர் அருந்தச் சென்றனர்.  அவ்வேளையில் முருகன் விநாயகரை மனதார எண்ணி யானையாக வர வேண்டும் என வேண்டினார்.  அதற்கேற்ப விநாயகரும் யானையுருக் கொண்டு வந்தார்.  அதைக் கண்ட வள்ளி பயந்து முருகனைத் தழுவ அப்பொழுது முருகன் தன் உண்மையுருக்காட்டி வள்ளியை மணந்து சென்றார்.  இந்நிகழ்வையே அம்மையார் பாடியுள்ளார்.

வேடர்களுக்(கு) அஞ்சியொரு வேங்கை மரமாகி நின்று

     தேடருஞ் சீர் அண்ணனொரு சிந்துரமாய்காடதனில்

     வந்துபயம் காட்ட வருத்தியும்அவ் வள்ளியின்பால்

     ஐந்துவகை யின்பமடைந் தானே     (பெண்மாட்சி.27-28)

ஒரு பெண்ணை மணம் முடித்த பின்பும் மீண்டும் வேறு ஒரு பெண்ணின் அழகில் மயங்கி அப்பெண்ணின் பின்னே செல்லும் ஆணின் குணத்தை அம்மையார் வசை பாடியுள்ளார்.

இந்திரன்

இந்திரன் இந்திராணி முதல் பல பெண்களை மணந்து இன்பமாக வாழ்ந்த போதிலும், அது போதாது எனக் கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மீதும் ஆசை கொண்டான்.  அதனால் உடம்பெல்லாம் ஆயிரம் பெண்குறி பெறச் சாபம் பெற்றான்.  இந்நிகழ்வையே அம்மையார் தம் பாடலில் கூறியுள்ளார்.

     நச்சியிந் திராணி முதல் நாரியர்கள்மெச்சிமகிழ்

     போகம் அயின்றும் புவித்தலத்தோர் பெண்மயிலால்

     ஆகமுற்றும் ஈனம் அடைந்தானே    (பெண்மாட்சி.33-34)

பல பெண்களை மணந்ததோடு அல்லாமல் பிறர் மனைவியை நாடும் ஈனச் செயலைச் செய்யும் ஆணின் தவறான எண்ணத்தைச் சாடுகிறார் சுந்தரத்தம்மையார்.

அக்னிதேவன்

சத்த இருடிகள் எனும் முனிவர்கள் யாகஞ் செய்து கொண்டிருந்தனர்.  ஒரு கரும வசத்தால் யாகத்தைத் தொடர்ந்து செய்ய இயலாது போகவே, தங்கள் மனைவியரை ‘யாக அக்னி அவியாது வளருங்கள்’ எனக் கூறிச் சென்றுவிட்டனர்.  அப்பொழுது அக்னி தேவன் ஏழு பத்தினிப் பெண்களையும் கண்டு மையல் கொண்டு அதைத் தீர்க்க இயலாமல் வாடினான்.  இதை உணர்ந்த அக்னிதேவியின் மனைவியாகிய சுவாகதேவி அந்தப் பெண்களைப் போல தனித்தனி உருவமாக வந்து தன் கணவனை மகிழ்வித்தாள்.  அருந்ததி தவிர ஏனைய அறுவர் போல வந்து கணவனின் ஆசையை நிறைவேற்றினாள்.  இதை அம்மையார் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

எத்தேவர் கட்குந்தன் எச்சிலருள் அக்கினியும்

     மெய்த்தேசால் ஏழுவியன் முனிவோர்பத்தினிமார்ப்

     புல்லினாற்போல் மகிழ்ந்து பொய்மை வெளியாய்த்தனது

     மெல்லியலாள் கண்டுநக வெட்கினான் (பெண்மாட்சி.35-36)

பிறரின் மனைவியரைக் கொண்டு மையல் கொண்டதோடு அல்லாமல், அப்பெண்களைப் போல உருவம் கொண்டு வந்த மனைவியினை அப்பெண்களாகவே எண்ணி மகிழ்ந்த ஆணின் கீழ்மையான குணத்தைச் சாடியுள்ளார். மேலும், கடும் தவம் புரியும் முனிவர்களும் தன் சபலத்தால் தன் நிலை இழந்து விடும் தன்மையை விசுவாமித்திரரின் கதை மூலம் கூறியுள்ளார்.

விசுவாமித்திரர் கடும் தவம் புரிகையில் அவரின் தவத்தைக் கெடுக்க எண்ணிய இந்திரன் மேனகை எனும் பெண்ணை அனுப்புகிறான்.  அங்குச் சென்ற மேனகை தவம் புரியும் விசுவாமித்திரர் முன்பு நடனமாடல் போன்ற பல செயல்களைச் செய்கிறாள்.  அதைக் கண்டு அவள் அழகில் மயங்கிய விசுவாமித்திரர் மேனகையுடன் கூடிக் களிக்கிறார். அதன் காரணமாக சகுந்தலை எனும் பெண்ணையும் பெறுகின்றனர்.  இதையே,

விசுவமெச்சும் சேணுலகின் மீன்கள்கொசுகனைய

     ஆகப்பெயர்த் தெறிந்த ஆண்மையுறு கோசிகன்றான்

     தாகமுற்று மேனகையின் தன்னுறவால்கோகனத்

     தையலனைய சகுந்தலையைப் பெற்றதுவும்   (பெண்மாட்சி.41,42,43)

எனக் கூறியுள்ளார்.  ஐம்புலனை அடக்கித் தவம் புரியும் முனிவரும் ஒரு பெண்ணைக் கொண்டு மையல் கொண்டு தன் நிலை மறந்த தன்மையைக் குறிப்பிட்டுள்ளார்.  இங்கு ஆண் தன்னுடைய தேவைக்காகப் பெண்ணைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையையும் அவளை ஒர் உயிராக மதிக்காமல் உடலாகக் காணும் ஆதிக்கச் சமூக மனோபாவத்தையும் அன்றே அம்மையார் இழிவு எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு பல நிலைகளிலும் ஆண்களே தங்கள் நிலை விடுத்து அல்லது மறந்து தவறு செய்கின்றனர். ஆனால் பெண்ணின் மீதே குற்றம் சுமத்துகின்றனர்.  பெண்களின் பெருமைகளைச் சற்றும் உணராதவர் ஏதேதோ பேசுகின்றனர்.  பெண்ணைப் பழித்துப் பெண் அங்குசம் என்று இழிவாகக் கூறுகின்றனர்.

திண்டு மிண்டு

     பேசுமவர் நாமுழுதும் பெண்ணங்குச மென ஏன்

     கூசுகிலரோ வுணருங் கூர்ப்பிலரோ   (பெண்மாட்சி.47,48)

பெண்ணின் மேன்மையை உணராது பேசுபவர்கள் உண்மை நிலையை உணராதவர்கள் என அம்மையார் கூறியுள்ளார்.

பெண்ணின் மேன்மை அறிந்து ஈசனும் தன் உடம்பில் பாதியைத் தந்துள்ளான்.  ஆனால் கௌரவர்களாகிய துரியோதனாதியர் பெண் என்று எண்ணாமல் பெருஞ்சபையில் வைத்துப் பாஞ்சாலியின் துகிலை உரிக்கும் தீங்கினைச் செய்தனர்.  இதுபோன்ற பல்வேறு தீங்குகளைப் பெண்களுக்கு ஆண்கள் செய்துள்ளனர்.  இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு பெண்மாலையாக அதாவது கவிதையாக யாராவது எழுதியதுண்டா? என அம்மையார் கேள்வியெழுப்புகிறார்.  மேலும் ஒளவையார்  குறித்தும் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

                     ஞால முற்றமும்

மாதாவென் றென்றும் வழுத்துபுகழ் ஒளவையைப்போல்

மீதாம்புலமை பெற்றோர் வேறுண்டோ ஏதாலோ

அன்னவளும் பெண்கட்(கு) அடக்கம் பகர்ந்ததன்றித்

     துன்னும் அகங்கார முறச்சொல்ல வில்லை         (பெண்மாட்சி.52,53,54)

உலகம் போற்றும் ஒளவையும் பெண்களுக்கு அடக்கத்தை மட்டுமே கூறினார்.  அகங்காரம் கூறவில்லை என்னும் செய்தியை அம்மையார் இங்குப் பதிவு செய்துள்ளார். மேலும் பல பெண்களின் மேன்மையைப் பாடியுள்ளார்.  சுந்தரத்தம்மையார் வாழ்ந்த காலச் சூழலின் மாண்பாகவும்  பெண்ணின் பெருமையாகக் கருதப்பட்டது கற்பு ஆகும்.  எனவே அம்மையார் கற்பில் மேம்பட்ட பெண்களாகிய அநுசூயை, நளாயினி, வாசுகி, கௌரி, மங்கையர்க்கரசி, திரௌபதி, புனிதவதி, இரத்தினாவதி போன்ற பெண்களின் மேன்மையைப் பாடியுள்ளார்.

நளாயினி

மௌத்கல்யருஷி என்னும் முதியவர் நளாயினி அழகில் மயங்கி அவளை மணம் முடிக்க வேண்டி அழகான வாலிபன் போல் தோற்றம் கொண்டார்.  மணப்பதற்கு நளாயினியிடம் சம்மதமும் வேண்டி வாங்கினார்.  சம்மதம் பெற்ற பின்பு தன் உண்மை உருவைக் காண்பித்தார்.  இருப்பினும் நளாயினி தான் கொடுத்த வாக்குத் தவறக் கூடாது என எண்ணி வயதான முதியவரை மணந்தாள்.  மணந்த பின்பு நளாயினியைப் பலவிதமாக அம்முதியவர் சோதித்தார்.  அவற்றில் எல்லாம் அவள் மிகவும் பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டாள்.  மேலும் அவளைச் சோதிக்க எண்ணிக் குட்ட நோய் வந்த பின்பும் அத்துடன் தீர்த்தயாத்திரை செய்ய வேண்டுமெனக் கூறினார்.  அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் நளாயினி தன் கணவரைக் கூடையில் அமர வைத்துக் கோயில்கள்தோறும் தூக்கிச் சுமந்து சென்றாள்.  இந்நிலையில் அவர் ஒரு தாசி வேண்டுமெனக் கேட்க, அதன்பொருட்டு இவள் தாசிக்குப் பல பணிவிடைகள் செய்து தாசியைச் சம்மதிக்க வைத்து, அவர் விருப்பப்படித் தாசி வீட்டுக்கும் கூடையில் அமரவைத்துத் தலையில் சுமந்து சென்றாள்.  இருளில் செல்லும் வழியில், முற்பிறவியின் பயனால் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாண்டவ்யர் என்ற ரிஷியின் காலில் அவள் சுமந்து சென்ற கூடை இடித்துவிட்டது. மிகுந்த கோபமடைந்த ரிஷி இவள் பெண் என்பதை அறிந்து ‘சூரியன் உதயமாகும் போது நீ மங்கலம் இழப்பாய்’ எனச் சாபமிட்டார்.  ‘சூரியன் உதித்தால் தானே நான் கணவனை இழக்க வேண்டிவரும்.  சூரியனே எழாமல் செய்கிறேன்’ என்று கூறிச் சூரிய உதயத்தையே நளாயினி தடுத்துவிட்டாள்.  இந்நிகழ்வை அம்மையார்,

                           மங்கலத்தின்

     தந்திறு மென்றஞ்சியொரு தையலாள்அந்த

     முனிவன்வாய் சொன்னபடி முற்றாமை யெண்ணித்

     தனியிரவே நீட சபித்தாள்   (பெண்மாட்சி.61-62)

எனப் பாடியுள்ளார்.  தன் கற்பின் திறத்தால் சூரியனையே நிறுத்தி வைக்கும் பெண்ணின் மேன்மையைக் கூறியுள்ளார்.  ஆண் எந்நிலையில் இருந்து பெண்ணைச் சோதித்தாலும் அதை எதிர்க்காமல் சொற்படிக் கேட்டு நடத்தலே சிறந்த கற்பு எனக் கூறப்பட்டுள்ளது.  கணவன் எந்நிலையில் இருந்தாலும் மனைவி அவனுக்குக் கீழே அடங்கி இருத்தலே சிறந்த கற்பாகப் போற்றப்பட்டது.  இயற்கையைக் கூட தன் கட்டுக்குள் வைக்க முடியும் என்று போதிக்கப்பட்டது.  தன் சுயம் உணராமல் ஆணின் ஆதிக்கத்திற்குள்ளேயே பெண் இருக்க வேண்டும் என்பதற்கான மூளைச் சலவையாகவே இக்கதை கூறப்படுகிறது.  அக்காலச் சூழலில் வாழ்ந்த அம்மையாரும் அதைப் பெருமையாக ஏற்று இவ்விடத்தில் பாடியுள்ள தன்மை பெண்னை உடலாக மட்டுமே காணும் ஆதிக்க சமூக மனோபாவத்திற்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது.

அநுசுயை

இவர் பஞ்சகன்னியரில் ஒருவர்.  நளாயினி தனி இரவே நீட சபித்தபோது தேவர்கள் அஞ்சி, உலகஇயக்கம் தடைபெறாமல் நடைபெற வேண்டுமென்று அநுசுயையிடம் சென்று வேண்டினர்.  அதற்கேற்ப நளாயினியிடம் சென்று வேண்டிப் பொழுது விடியச் செய்தார் அநுசுயை.  அதோடு தன் கற்பின் திறத்தால் நளாயினியின் கணவரின் நோய் தீர்த்து வைத்து எழச் செய்தார்.  இதனால் தேவர்கள் அநுசுயைக்குத் திருமூர்த்திகளும் புத்திரராகப் பிறப்பர் என வரமளித்தனர். அதற்கேற்ப துருபாசர், தத்தாத்திரேயர், சோமர் என மும்மூர்த்திகளையும் புத்திரராகப் பெற்றார்.  இந்நிகழ்வை அம்மையார் தன் பாடலில் பாடியுள்ளார்.

     மூவரையோர் மெல்லியலாள்வாதுவிண்டு

     வந்தபடிபோய் மகிழவிடா மற்சிசுவாய்

     நொந்தழு மாறோர்சொல் நுவன்றிட்டாள்    (பெண்மாட்சி.60-61)

இதில் கற்பின் மேன்மையால் ஒரு பெண் மும்மூர்த்திகளையும் தன் புத்திரராகப் பெறலாம் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்குழந்தையே முதன்மை படுத்தப்பட்டது. ஆண் குழந்தை பெறவேண்டுமெனில் அதிலும் நல்ல உயர்வான ஆண்குழந்தை வேண்டுமெனில் பெண் தன் கற்பினைக் கட்டிக்காத்தால் மட்டுமே அவ்வுயர்வினைப் பெற இயலும் என்ற கற்புக் கோட்பாட்டினைப் பெண்ணின் மனதில் சமூகம் அழுத்தமாக இக்கதையின் வாயிலாகப் பதிவுசெய்கிறது.

வாசுகி

மராக்க சகாயன் என்பவரின் மகள் வாசுகியைத் திருமணம் முடிக்கும் முன்பு வள்ளுவர் மணலைக் கொடுத்துச் சமைத்துத் தருமாறு கூறினார்.  அதற்கேற்ப அவ்வண்ணமே செய்து தந்தவர்.  திருமணமான பின்பு வாசுகி கிணற்றில் நீர் இறைக்கும்போது வள்ளுவர் அழைக்க, உடனே அப்பாத்திரத்தைக் கிணற்றின் இடையிலேயே விட்டு வந்தார்.  இருப்பினும் அப்பாத்திரம் வாசுகி விட்ட வண்ணமே நின்றது என்பர்.  வள்ளுவர் பகலில் நூல் நூற்கும்போது நாழி கீழே விழுந்துவிட்டது.  அதைத் தேடி எடுக்க ‘விளகேற்றி வருக’ எனக் கூற அவ்வாறே செய்தவர் பழைய அன்னம் சுடுகிறது என அவர் கூற, அதன் சூட்டை ஆற்ற விசிறிக்கொண்டு வீசியவள்.

கொங்கணத் தேவர் தவத்திலிருக்கையில் கொக்கொன்று அவர் மீது எச்சமிட அதை அவர் பார்க்க அது எரிந்து சாம்பலானது.  கொங்கணர் தவம் விட்டு நீங்கித் திருவள்ளுவர் இருக்கும் இடத்தில் பிச்சைக்கு வந்தார்.  அப்பொழுது திருவள்ளுவர் வாசுகியை அழைத்து வேலை கூறியதால், வாசுகி பிச்சையிடத் தாமதமானது.  இதனால் சித்தர் வாசுகியைக் கோபித்துப் பார்த்தபோது வாசுகி ‘கொக்கென் றெண்ணினையோ கொங்கணவா’ எனக் கூற அதைக்கேட்ட சித்தர் தம் தவவலிமையைவிட இப்பெண்ணின் கற்பு மேன்மையுடையது என எண்ணி வெட்கிச் சென்றார்.  இப்பெண் குறித்தும் தம் பாடலில் பாடியுள்ளார் அம்மையார்.

     ஆதாரமான முப்பால் அன்றுரைத்த வள்ளுவர் தம்

     மாதான வாசுகிசெய் வண்மையால்மீதான

     வானிடத்துத் தேவர் மனநாணிச் சென்றவுண்மை

     நானிலத்தோர் பேசாத நாளுண்டோ  (பெண்மாட்சி.69-70)

எனவும்,

     தேவர்களு மெச்சவளர் சித்தர்குழாத்திற் சிறந்த

     கோவனையனா விளக்குங் கொங்கணனைப்பூவை

     ஒருத்தியெளிய கொக்கென் றென்னியென் மேற்பார்வை

     உறுத்துகின்றாயோ என்றுரைத் தாள்  (பெண்மாட்சி.64-65)

என்பதையும் பாடியுள்ளார். கணவனின் எண்ணத்திற்கும், சொல்லுக்கும் எதிர்பேசாமல் கேள்வி கேட்காமல் சொன்னதைச் சொன்ன வண்ணம் செய்தலே சிறந்த கற்பு எனப் பாடப்பட்டுள்ளது.  அறிவும் திறமையும் உள்ள பெண்ணாக இருந்தாலும் கணவனின் முன்பு அதை வெளிப்படுத்தாமல் அறியாமையுடன் இருத்தலே கற்பு எனப் போற்றப்பட்டுள்ளது.  ஒரு பெண் எந்நிலையிலும் தன் கணவனை மீறி, செயல்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இக்கதையினை இப்பொழுது வரை சமூகம் பெண்ணுக்கு வலியுறுத்திக் கூறிவருகிறது.

ஒரு பெண் கற்பில் மேம்பட்டவள் என்பது மட்டுமல்லாமல் தவவலிமை மிக்க சித்தரை விட அறிவிற் சிறந்த பெண் என்பதனையும் கூறவே அம்மையார் இக்கதையினைப் பாடியுள்ளார் எனலாம்.  மேலும் பெண் தவவலிமை உடையவளாக இருப்பினும் அவளின் அறிவோ தவவலிமையோ போற்றப்படாமல் மாறாக உடலை மையப்படுத்திக் கூறும் கற்பின் திறமே இன்றளவும் போற்றப்படுகிறது.

கங்கை

கங்கைக் குறித்துக் கூறுகையில்,

     மாலும் பிரமாவும் வந்துதன்பால் மாட்சிமிகச்

     சாலும் உருக்கொள்ள வொருதையலாள்பாலனைய

     கண்டகைப் பேர்மாநதியாய்க் காசினியோர் கண்காண

     விண்டலத்துக் கங்கைஒல்கும் வீறுற்றாள் (பெண்மாட்சி.67-68)

எனப் பாடியுள்ளார்.

பகீரதன் தன் முன்னோர் பொருட்டு அநேக ஆண்டுகள் கங்கையையும், மும்மூர்த்திகளையும் எண்ணித் தவமேற்கொண்டு வந்தான்.  அத்தவத்திற்கிறங்கிக் கங்கை பூமிக்கு வந்து செழிப்படையச் செய்தாள் என்ற கதை கூறப்பட்டு வருகிறது.

கங்கை ஆகாயத்தில் சிறப்புடன் திகழ்ந்தவள்.  உயர்நிலை கொண்ட கங்கை மானிட வேண்டுதலுக்கு இறங்கி அவர்களின் பாவங்களைப் போக்குகிறாள்.  ஒரு பெண் தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன்னிடம் மனம் உருகி வேண்டுபவர்க்காகத் தன் நிலையிலிருந்து இறங்கி, பாவம் நிறைந்த இடத்தை வந்து சேர்கிறாள்.  இங்குப் பெண்ணின் இரக்க உணர்வையும், தாய்மை உணர்வையும் அம்மையார் சுட்டிக் காட்டியுள்ளார்.  பெண் தன்னுடைய சுயம் உணர்ந்து தனக்கான வெளியை அடைய முயலுகையில் அதை மாற்ற ஆண் ஆதிக்கச் சமூகம் பெண்களிடம் உபயோகிக்கும் ஆயுதம் தாய்மைக் குணமும் அதனால் ஏற்படும் இரக்க உணர்வும் ஆகும்.  ஆணின் ஆதிக்க மனோபாவத்தைத் தன்னுள் ஏற்று நடந்த பெண்ணின் மேன்மையையே அம்மையார் ஏற்றுப் பாடியுள்ள தன்மையை நோக்குகையில் அம்மையாரின் மனதிலும் ஆணாதிக்கச் சமூகத்தின் தாக்கம் இருந்ததை உணரமுடிகிறது.

மங்கையர்க்கரசி

சோழராசனின் மகள், நின்றசீர் நெடுமாறனின் மனைவி, பாண்டிய மன்னன் சமண சமயத்தைச் சார்ந்திருந்தார்.  அதினின்று அவரை மாற்றிச் சைவ சமயத்தில் சேர்க்க வேண்டும் என்று மங்கையர்க்கரசி எண்ணினார்.  அதன்பொருட்டுத் திருஞானசம்பந்தரைத் தன் ஊரான மதுரைக்கு வரவழைத்துத் தங்க வைத்தார்.  அப்பொழுது சமணர்கள் சிலர் சம்பந்தர் தங்கி இருந்த இடத்திற்கு நெருப்பு மூட்டினர்.  அதிலிருந்து தப்பித்த சம்பந்தர், அந்நெருப்பிடம் ‘பையவே சென்று பாண்டியனைப் பற்றுக’ எனக் கூறினார்.  அதன் காரணமாக அப்பெரிய நெருப்பு பையச் சென்று பாண்டியன் உடம்பில் சுரமாக மாறியது.  அச்சுரத்திற்குச் சமணர்கள் பல மருந்துகள் கொடுத்தும் அது குணமாகவில்லை. பின் சம்பந்தர் வந்து தன் திருநீற்றின் மகிமையால் பாண்டியரைக் குணமடையத் செய்தார்.  இதனால் பாண்டியன் சைவ சமயத்தைத் தழுவினான்.

     செந்தமிழ்ச் சீர் மேவுந்திரு மதுரை மாநகரில்

     வந்த சமணர் மறங்களைந்து சுந்தரனார்

     கோயிற் சிறப்பமைத்துக் கொற்றவன் கூன்றிடுத்தல்

     சேயிழை மின்னா ளொருத்தி செய்கையன்றோ (பெண்மாட்சி.71-72)

என மங்கையர்க்கரசியின் பெருமையைப் பாடியுள்ளார்.  மன்னனான தன் கணவன் மக்களை நல்வழியில் நடத்த வேண்டியவன். ஆனால் மன்னனே வழிமாறிச் செல்லுதலை எண்ணி வருந்தி உட்காராமல் அதை மாற்ற, தனி ஒரு பெண்ணாக முயற்சி மேற்கொண்டு சம்பந்தர் மூலம் அதை நடத்தியவள்.  தனி ஒரு பெண்ணாக மற்றொரு சமயத்தின் ஆதிக்கத்தை ஏற்காமல் தான் கொண்ட கருத்தில் நிலையாக நின்று அதை நிறைவேற்றிய பெண்ணின் மனத்தின்மையை அம்மையார் இங்குப் பாடியுள்ளார்.

திரௌபதி

திரௌபதன் குமாரியாகக் குண்டத்தில் தோன்றியவள்.  சுயம்வரத்தில் அருச்சுனனால் கொண்டு வரப்பட்டுக் குந்தியின் கட்டளைப்படி ஐவரையும் மணந்தவள்.  தன் கணவர்கள் மாய சூதாடி அடிமைப்பட்டபோது துரியோதனன் சொற்படித் துச்சாதனன் துகில் உரியும் வேளையில் கண்ணனை வேண்டி மாளாத்துகில் பெற்றவள்.  ஐவருடன் சேர்ந்து கொழுஞ் சபதங்கள் செய்து ஆரணஞ்சென்றவள் இளம் பஞ்சபாண்டவர்களைப் பெற்றவள்.  தருமனுக்குப் பிரதி விந்தனையும், பீமனுக்குச் சுருத சோமனையும் அருச்சுனனுக்குச் சுருத கீர்த்தியையும் நகுலனுக்குச் சாதநீகனையும், சகாதேவனுக்குச் சுருத சேரனையும் பெற்றவள்.  போரில் துரியோதனன் இறந்த பின்பு தான் செய்த சபதப்படி கூந்தலை அள்ளி முடித்தவள்.  கலியுகம் பிறந்து பாண்டவர் தமது ராச்சியத்தை விட்டுத் தவமேற்கொண்டு இமயமலை செல்கையில் தானும் சென்றவள்.  அவர்களுடன் முழுவதும் இல்லாமல் இடையிலேயே இறந்தவள்.

     ஐவர்களைச் சேர்ந்தும் அரியகற்பிற் சோராது

     தெய்மென நின்றாளோர் சேயிழையாள் (பெண்மாட்சி.76)

ஐந்து பேரையும் மணந்து துன்ப வேளைகளில் ஐவருக்கும் துணையிருந்து துன்பத்தைப் போக்கியவள், எதிரிகளை எதிர்க்கும் துணிவும் மனத்தின்மையும் மிக்கவள் என்று சுந்தரத்தமையார் திரௌபதி குறித்துப் பாடியுள்ளார்.

 

காரைக்கால் அம்மையார்

நாயன்மார்களில் ஒருவர்.  சிவபக்தி மிக்கவர்.  எனினும் திருமணத்திற்குப் பின்பு கணவனுக்குச் செய்யும் தொண்டையே இறைவனுக்குச் செய்யும் தொண்டு என எண்ணி வாழ்ந்தவர்.  இவரின் தெய்வத் தன்மை உணர்ந்து கணவன் இவரை விட்டு நீங்கிச் செல்கையில் தன் அழகை விடுத்துப் பேயுருவைப் பெற்றவள்.  சிவனின் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து பாடல் பாடியவர்.  இறைவனாலேயே அம்மையே என அழைக்கப்பட்ட சிறப்பை உடையவர்.

                                மைவனப்புக்

     கண்டத்தான் அம்மையெனக் கான்முளை யொத்தேயழைப்ப

     மண்டலத்தோர் பாவை வரம் பெற்றாள்     (பெண்மாட்சி.76-77)

தெய்வபக்தி கொண்டபோதும் கணவனுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவள்.  அக்கணவனே தன்னை விடுத்துச் சென்ற நிலையில் தெய்வமே கதி என எண்ணிச் சரணடைந்தவள்.  எந்நிலையிலும் தனக்கென வாழாமல் பிறருக்காக வாழும் பெண்ணின் பெருந்தன்மையைச் சுந்தரத்தம்மை பாடியுள்ளார். பெண் என்றுமே தனக்காவும் தன் தேவை உணர்ந்தும் வாழாமல் பிறருக்காக வாழ்தலே மேன்மை என்று ஆதிக்கச் சமூகம் பெண்ணின் மனதில் ஆழப் பதிய வைத்துள்ளது.  அவ்வாறு வாழ்ந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்வைச் சுந்தரத்தமையார் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

இவ்வுலகில் பெண் இல்லாமல் ஆணுக்கு இன்பம் இல்லை.  ஆண் இல்லாமல் பெண்ணுக்கு மகிழ்ச்சி இல்லை.  பெண், ஆண் இருவரின் பிறப்பிற்கும் ஈடு இணை என்பதே இல்லை.  இருவரும் சமம் என்ற நிலையினையே காண வேண்டும் என அம்மையார் பாடியுள்ளார்.  கற்பாலே உயிர் துறந்த பெண்கள் பலர் உண்டு.  ஆனால் ஆண்கள் இல்லை. பாவலரும் மாதவம் பெற்ற முனிவரும் உலகை ஆண்ட மன்னர்களும் பெண் மீது ஆசைகொண்டு துய்த்த நலமும் துயரும் துணிந்து உரைக்க முடியாது.  அவ்வளவு பெரியது எனவும் பாடியுள்ளார்.

ஆண்கள் எந்நிலையில் இருந்தாலும் அவர்கள் ஒழுக்கமின்றியே இருந்தனர்.  ஆனால் பெண்கள் எந்நிலையிலும் தன் ஒழுக்கம் எனக் கூறப்பட்ட கற்பைப் போற்றினர் என்னும் கருத்தையே அம்மையார் இந்நூலில் பாடியுள்ளார்.

மும்மூர்த்திகள், விநாயகர், முருகன், இந்திரன், அக்னிதேவன் முதலான பல தெய்வங்களும் தவமேற்கொண்ட புலவர்களும் பெண்களிடம் கொண்ட மையல் காரணமாகத் தம் பெருமையை இழந்தனர் என்பதையும், புாரணப் பெண்கள்  தெய்வப்பெண்கள் ஆகியோர் கற்பின் மேம்பாட்டால் சிறப்புப் பெற்ற நிலையினையும் அம்மையார் பாடியுள்ளார்.  மேன்மை நிலையாகக் கூறப்பட்ட தெய்வநிலையிலும் முனிவர் என்கிற நிலையிலும் ஆண்கள் செய்த தவறு பக்திச்சாயம் பூசப்பட்ட போதும் அதை ஏற்காமல் அம்மையார் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஆனால் பெண்ணின் மேன்மை கூறுமிடத்து ஆதிக்கச் சமூகம் விதித்த கட்டுக்குள் வழுவாமல் வாழும் பெண்களின் மேன்மையைப் போற்றிப் பாடியுள்ளார்.  பெண்ணை உடலாக மட்டுமே காணும் ஆணாதிக்கச் சமூகம் அவளுக்குக் கற்பு எனும் கோட்பாட்டையே உயர்வு என வலியுறுத்தியது. அதையே அம்மையாரும் தன் படைப்புகளில் உயர்வாகப் பாடியுள்ளார்.  இந்நிலையில் ஆணாதிக்கச் சமூகத்தின் தாக்கம் அம்மையாரின் பாடல்களில் பெரும்பான்மை வெளிப்பட்டுள்ளது.

முடிவுரை

 • பக்தி இலக்கியக்காலம் பெரும் இடைவெளிக்குப் பின்பு சிற்றிலக்கியக் காலத்திலும் சிறுபான்மையான பெண்கவிஞர்கள் கவிதைகள் இயற்றியுள்ளனர். ஆனால் அவை இலக்கிய வரலாறுகளில் அடையாளப்படுத்தப் படவில்லை.
 • சுந்தரத்தமையார் புராணக்கதைகளின் வாயிலாக ஆண்களின் ஒழுக்கக் கேடுகளையும் பெண்களின் மேன்மையையும் பாடியுள்ளார்.
 • கடவுளாகவும், தவம் மேற்கொள்ளும் முனிவராகவும், மன்னராகவும், புலவராகவும் என எந்நிலையில் இருந்தாலும் ஆண், பெண் மீது கொண்ட மையல் காரணமாகத் தன் நிலை மறந்து கீழ்நிலை அடைகிறான் என்பதைத் தன் கவிதைகளில் பாடியுள்ளார்.
 • தெய்வ நிலையில் இருந்தாலும் மானிட பெண் என்ற நிலையிலும் பெண் என்பவள் ஆணுக்கு அடங்கி நடந்து தன் கற்பின் நிலையை மேம்படுத்தி உள்ளாள் என்பதையும் பாடியுள்ளார்.
 • எந்நிலையில் இருந்தாலும் ஆண் தன் கட்டுக்குள்ளே பெண்ணை வைக்க எண்ணும் ஆதிக்க மனோநிலை புராணக் கதைகளில் வெளிப்பட்டுள்ளது.
 • ஆண்கள் செய்யும் தவறுகள் பலவும் கண்டிக்கத்தக்கவையாக அல்லாமல் மாறாகப் பக்திச்சாயம் பூசப்பட்டு, லீலையாகவோ திருவிளையாடல்களாகவோ சுட்டப்படும் தன்மையை அம்மையார் சாடியுள்ளார்.
 • ஆண் ஆதிக்கச் சமூகம் பெண்ணின் உடலை மையப்படுத்திக் கற்பு ஒழுக்கம் எனும் கட்டுக்குள் அடக்கி வைத்து உள்ளது. ஆனால் அந்நிலை மிகவும் மேம்பட்ட தன்மை எனப் பெண்களை மூளைச்சலவை செய்துள்ளது.  இதையே அம்மையாரும் சில கதைகளைக் கவிதைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
 • சில இடங்களில் ஆண்களைச் சாடினாலும் மற்ற இடங்களில் ஆணாதிக்கச் சமூகத்தின் தாக்கம் அம்மையாரின் பாடல்களில் வெளிப்பட்டுள்ளது.

குறிப்புகள்

1.தாயம்மாள் அறவாணன்., பெண்ணின் பெருந்தக்கது இல், ப.132

2.மேலது., ப.133.

துணைநூற்பட்டியல்

 • சிங்கார வேலு முதலியார்(பதி.), 1980, அபிதான சிந்தாமணி, ஏசியன் எஜிகேசனல் சர்வீஸ், புதுதில்லி.
 • சுந்தரத்தமையார், 1955, பெண்மாட்சி, கௌமார சபை, திருவாமாத்தூர்.
 • தாயம்மாள் அறவாணன், 2011, பெண்ணிண் பெருந்தக்கது இல், தமிழ்க் கோட்டம், சென்னை.

முனைவர் பா.சத்யா தேவி

விரிவுரையாளர், தமிழ்த்துறை

தியாகராசர் கல்லூரி, மதுரை-09.