தமிழின் சிறந்த படைப்பாளிகளில் தனக்கெனத் தனி நடை அமைத்துக்கொண்டு புதினம், சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றவர் சுஜாதா. இவரது இயற்பெயர் ரங்கராஜன். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மின்னணுவியல் படித்தவர். மத்திய அரசு விமானப் போக்குவரத்து இலாகாவிலும் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும் 30 ஆண்டுகளுக்கு மேல்  பணிபுரிந்தவர். தமிழில் சிறுகதை, புதினம், விளக்கவுரை, ஆய்வுக்கட்டுரைகள், அறிவியல் கேள்வி பதில்கள் என முதன்மையான எழுத்தாளராகத் தடம் பதித்தவர். ‘அம்பலம்’ என்னும் இணைய இதழில் பொறுப்பாளராகப் பணிபுரிந்தவர். திரைப்படத்துறையில் கதை, வசனம் எழுதி வந்தவர். இவர் எண்ணற்ற நூல்கள் எழுதியிருப்பினும் இவரது ‘விஞ்ஞானச்சிறுகதைகள்’ தொகுப்பில் மொத்தமுள்ள 50 சிறுகதைகளில் 6 சிறுகதைகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அச்சிறுகதைகளில் தொடக்கம் வளர்ச்சி முடிவு எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

சிறுகதை

சிறுகதை என்பது பண்பு, குறுநிகழ்ச்சி, அனுபவம், சிக்கல், வெற்றி போன்ற ஏதாவதொரு(மனித வாழ்வின்) சிறு பகுதியைக் கருவாகக் கொண்டு இயல்வது. சிறுகதைக்குத் தொடக்கம், வளர்ச்சி, முடிவு இருக்க வேண்டும் என்பது முன்னோர் வகுத்த கோட்பாடு. நிகழ்வு, பண்பு, சூழல் ஆகியவற்றுள் ஏதாவதொன்றின் பின்னணியில் தான் உலகக் கதைகள் இயங்குகின்றன என்பார் ஆர்.எல்.ஸ்டீவன்சன். அரைமணி முதல் 2 மணிக்குள் படித்து முடிக்கக் கூடியது சிறுகதை என்பர் எட்கார் ஆலன்போ. சுருங்கச் சொல்லலும் சுருக்கெனச் சொல்லலும் இதன் உத்திகள். எனவே நீண்ட வருணனைக்கும் நிகழ்ச்சி மற்றும் பண்பு விளக்கத்திற்கும் இங்கே இடமில்லை. ‘குதிரைப் பந்தயம்’ போல தொடக்கமும் முடிவும் சுவை மிக்கனவாக இருத்தல் வேண்டும் என்பார் செட்ஜ்.

அறிவியல் புனைகதை

முதலில் ‘சைன்ஸ்ஃபிக்ஷன்’ என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் ‘விஞ்ஞானக்கதை’ அல்லது ‘அறிவியல் புனைகதை’ என்பதாகும். தமிழில் அறிவியல் சார்ந்த புனைகதைகள் மிகவும் குறைவு.

கோத்திக்(Gothic) வகைக் கதைகளிலிருந்துதான் விஞ்ஞானக் கதைகள் வந்தன என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். ‘கோத்திக்’ என்றால் இயற்கையை மீறின அல்லது அதற்கு மேம்பட்ட அல்லது வினோதமான என்பது பொருள். கதைமாந்தருக்கு இயற்கைக்கு அதிகமான சக்தி இருத்தல், அசாதாரண சம்பவங்கள் நிகழ்வதாக இருத்தல்.

            ‘அறிவியல் புனைகதைகளில் அறிவியல் அறிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. எதிர்காலத்தைத்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. புராண காலத்துக் கதைகளைக் கூட அல்லது புராண காலத்து கதாப்பாத்திரங்களை நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தாலே அது வினோதமான புனைகதைதான் என்பது சுஜாதாவின் கருத்து.

அறிவியல் கதைகளில் காலமுரண்பாடு – இடமுரண்பாடு – கலாச்சார முரண்பாடு என்ற ஏதாவது வினோதமான ஒரு முரண்பாடு இருந்தாலே போதும். எடுத்துக்காட்டாக புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ கதையில் சிவபெருமான் வருவது. கைலாசத்திலிருந்து சென்னை பிராட்வே வருவது. ரிக்ஷாவில் பயணிப்பது இதுபோல் அசாதாரண கதாப்பாத்திரங்கள் அமைப்பது.

கோத்திக் கதை இலக்கியங்களில் இருப்பதை அறியலாம். சீவகசிந்தாமணியில் சச்சந்தனின் கர்ப்பிணி மனைவி மயிற்பொறி மேல் ஆகாய வழியில் சென்று ஒரு சுடுகாட்டில் இறங்கிச் சீவகனைப் பெற்றாள். அதேபோல் கம்பராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம், கலிங்கத்துப் பரணியில் பேய்களின் முறையீடு, மணிமேகலையில் வரும் அட்சயபாத்திரம், காப்பியங்களில் வரும் உருமாற்றம், விக்கிரமாதித்தன் கதைகள், தமிழக நாட்டுப்புறக் கதைகளில் ஒரு சில, மந்திர தந்திரக் கதைகள் ஆகியவற்றைக் கூறலாம்.

சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகளில் தொடக்கம், வளர்ச்சி, முடிவு

இங்கு ஆறு சிறுகதைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள்    1.‘ராகவேனியம் 227’ 2. ‘1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி?’ 3. கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு என்ற மூன்று சிறுகதைகளும் ஒன்றன் தொடர்ச்சியாக மற்றொன்று அமைகின்றது. இம்மூன்று கதைகளிலும் டாக்டர், மாலதி, பையா இக்கதாபாத்திரங்கள் பொது. 4. ‘காலயந்திரம் 5. ‘நச்சுப்பொய்கை’ 6. ‘ஒரு பூச்சியின் உரையாடல் ஆகிய இந்த ஆறுகளிலும் தொடக்கம், வளர்ச்சி, முடிவு எவ்வாறு அமைகின்றன என்பதைக் காண்போம்.

1.ராகவேனியம் 277

1.ராகவேனியம் 277 எனும் சிறுகதையில் டாக்டர் எப்படிப்பட்ட ஆய்வு வல்லுநர் என்ற அறிமுகப்படுத்தலோடு தொடங்குகிறது. டாக்டர் 16 ஆண்டுகளாகக் கண்டறிந்த சிறிய பிளாஸ்டிக் வடிவத்திலான சிவப்பு நிற ‘ ராகவேனியம் 277’ எனும் சக்தி வாய்ந்த வெடிபொருளைத் தன் மகள் மாலதி தொலைத்துவிடுகிறாள். அப்பொருள் ஆறுமணி நேரம்தான் அமைதியாக இருக்கும். அதற்கு மேல் அது வெடித்துச் சிதறிவிடும். அப்படி வெடித்தால் உலகமே அழிந்துவிடும். அதைத் தேடுவதாக அச்சிறுகதைகயின் வளர்ச்சிநிலை அமைகிறது. முடிவில் டாக்டர் தான் குறித்த நேரம் தாண்டியும் அது வெடிக்கவில்லை. காரணம் தனது ஆய்வில் டாக்டர் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று கதை முடிகிறது.

  1. 1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி?

தொடர்ச்சியாக அமைந்த கதை 1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி? என்ற சிறுகதை. 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த செந்தில்நாதப் புலவரின் வாழ்க்கை முறை பற்றி ஒரு கருத்துக்கூட்டம் நிகழ்கிறது. அக்கூட்டம் முடிந்ததும் டாக்டரை ஒருவர் சந்திக்கிறார். அவர் தான் செந்தில்நாதப் புலவர் என்றும் டாக்டரை நம்ப வைக்கிறார். இது கதையின் தொடக்கம் கதையின் வளர்ச்சி நிலைகளில் 1000 ஆண்டு வாழ்வதற்கான இரகசியங்களை செந்தில்நாதப் புலவர், டாக்டருக்கும் பையாவுக்கும் உரைப்பதாக வருகிறது. அதற்கான மூலிகைகள் சிலவற்றைப் பட்டியலிட்டு வாங்கிவரச் சொல்வதாகக் கதை நகர்கிறது. செந்தில்நாதப் புலவர் கொடுத்த மூலிகைச் சாற்றினை டாக்டரும் அவரது மாணவரான பையாவும் அருந்துகிறார்கள். முடிவில் இப்பொழுதுதான் மருந்து சாப்பிட்டிருக்கிறேன் 2069இல் பார்ப்போம் என்று கதை முடிவில்லாமல் முடிகிறது. இச்சிறுகதையின் முடிவு அடுத்துவரும் சிறுகதையான கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு’ எனும் சிறுகதையில் அமைந்துள்ளது.

  1. கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு

1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி? என்ற சிறுகதையின் தொடர்ச்சி ‘கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு’ எனும் சிறுகதையில் அமைந்துள்ளது. செந்தில்நாதப்புலவர் நாலு டெரிலின் சட்டை, நாற்பது ரூபாய் சில்லறை, பால்பாயிண்ட் பேனா, ஒரு ரெயில்வே டைம்டேபிள் இவற்றுடன் ஓடிவிட்டார் என்கிற செய்தி கிடைக்கிறது.

கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு எனும் சிறுகதையின் தொடக்கத்தில் டாக்டர் ஒரு கதை சொல்லும் கம்ப்யூட்டார் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அது பேசாது ஆனால் நமக்குத் தேவையான கதை அம்சங்களைப் பதிவு செய்தால் அந்த அமைப்புடன் கூடிய கதையை கம்ப்யூட்டர் தட்டச்சு செய்தளித்துவிடும். எடுத்துக்காட்டாக கதை 50, கவர்ச்சி 50, நடை 2 என்று பதிவு செய்தால் அந்த அமைப்புடன் கதை வெளிவரும். இச்சிறுகதை முடிவில் டாக்டர் கண்டறிந்த கம்யூட்டர் அதிக மின்சாரத்தால் செயலிழந்ததாகக் கதை முடிகிறது.

4.காலயந்திரம்

இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயணம் செய்யும் கால யந்திரத்தை வல்லுநர் ஒருவர் கண்டுபிடிப்பதாகவும், அந்த எந்திரத்தைப் பற்றிய அறிமுகமும் கதைத் தொடக்கமாக அமைகிறது. கால எந்திரத்தில் ‘ஆத்மா’ எனும் பெயர் கொண்ட ஒருவர் பயணம் செய்வதாகவும் அந்த எந்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன் அரசர் காலத்திற்குக் கூட்டிச் செல்வதாகவும் கதை அமைகிறது. பின்னர் தொல்காப்பியர் பாடம் சொல்லிக் கொடுக்கும் பாட சாலைக்கு அழைத்துச் சென்று நகரப் பேருந்தில் சேர்க்கிறது. முடிவில் ஆத்மா பேருந்திலிருந்து இறங்கும்போது அவர் வைத்திருந்த கண்ட்ரோல் பெட்டியை யாரோ பிக்பாக்கெட் அடித்துவிட, எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என அறியமுடியாமல் போகிறது. இக்கதையும் முடிவில்லாமல் அமைகிறது.

5.நச்சுப்பொய்கை

மகாபாரதக் கதையின் நிகழ்வுகளில் ஒன்று பாண்டவர்களின் வனவாசம் பன்னிரண்டு வருட முடிவுக்காலத்தில் தாகத்தால் நச்சுப்பொய்கையில் யுதிஷ்டிரன் அந்த நச்சுப்பொய்கையில் அசரிரீயின் கேள்விக்கு பதிலளிப்பதாக அமைந்திருந்தது. இச்சிறுகதையின் தொடக்கமும், வளர்ச்சியும் புராண காலத்தவையே! முடிவு மட்டும் சற்று வேறுபடுவதாக அமைகிறது.

          6.ஒரு பூச்சியின் உரையாடல்

பிளேபாய் இதழில் வெளிவந்த ‘ஜாக்ஷார்க்லி’ என்பவர் எழுதிய சிறுகதையை சுஜாதா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இச்சிறுகதையில் சிலந்தி வலையில் சிக்கி ஆபத்தில் மாட்டிக்கொண்ட ‘குளவி’ ஹென்றியை உதவிக்கு அழைப்பதாகக் கதை தொடங்குகிறது. குளவி பேசுகிறது. இக்கதையில் வரும் அக்குளவி கேட்டதைத் தரும் சக்தி வாய்ந்தது. ஹென்றியிடம் தன்னைக் காப்பாற்றினால் கேட்டதைத் தருவேன் என்கிறது. ஹென்றி குளவியைக்  காப்பாற்ற, சிலந்தியை அடித்துக் கொன்று விடுகிறான். முடிவில் தன்னிடம் இதுவரை பேசியது குளவியல்ல சிலந்தி என்று முடிவு அமைகிறது.

 முடிவுகள்

சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 6 சிறுகதைகளிலும் தொடக்கம் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்துவதாகவும், சில வர்ணனைகள் கொண்டும் காணப்படுகின்றன. வினோதமான கருவி கதையில் வருகிறபோது அதைப்பற்றிய சிறப்புகள் கதைத் தொடக்கமாக அமைந்திருக்கின்றன.

வளர்ச்சி விறுவிறுப்பாகவும் படிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்திலும் அமைந்திருக்கின்றன.

கதையின் முடிவுகளில் எதிர்பாராத முடிவாக 1,3,6 ஆகிய சிறுகதைகளும், முடிவில்லாதவையாக 2,4 ஆகிய சிறுகதைகளும், 5-ஆம் சிறுகதை புராண காலத்தவையாக இருப்பினும் முடிவில் மட்டும் மாற்றம் கொண்டவையாகவும் அமைகின்றன.

இத்தகைய விஞ்ஞானச் சிறுகதைகள் சாதாரணக் கதைகளிலிருந்து வேறுபடுகின்றன. புதிய உலகத்தை, புதிய சூழலை வாசகர்க்கு அறிமுகப்படுத்துகின்றன.

துணைநின்றவை

  • சுப்பிரமணியன் ச.வே., 2000, தமிழ் இலக்கிய வரலாறு, மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.
  • சுஜாதா, 2007(மூ.ப.), விஞ்ஞானச் சிறுகதைகள், உயிர்மை பதிப்பகம், சென்னை.
  • புதுமைப்பித்தன், 2006(நா.ப.), புதுமைப்பித்தன் சிறுகதைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

ம.பெட்ரிக் ஜெபராஜ்

தமிழ் – உதவிப் பேராசிரியர்

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 17

[email protected]