மனிதத்துவ அறிவுப்பரப்பில் இயங்கியல் சார்ந்த சிந்தனை மரபுகள் முதிர்ந்து நிற்கும்போது அதற்கேற்ப இலக்கிய வெளியும் தன்னளவில் செயலாற்ற நேர்கிறது. புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், பறவையியல், சுற்றுச்சூழலியல் என்பன போன்ற தற்கால அறிவியல் வளர்ச்சி இலக்கிய விளைச்சலாக அரும்பி வரும் இக்காலக்கட்டத்தில் சூழலியல் சார்ந்த கருத்தாக்கங்கள் ‘இந்தப் பூமியைக் காப்போம்’ என்ற அளவிற்கு முதிர்ந்து நிற்கின்றன. எனவே சூழலியல் இலக்கியங்கள் மனித வாழ்வோடு தொடர்புடைய புறச்சூழல்கள் குறித்து விரிவான அளவில் ஆராய்ந்து வருகின்றன. இதன் காரணமாகவே இன்றைய காலக்கட்டத்தில் புறந்தள்ளமுடியாத  ஒன்றாக இலக்கிய வெளியில் அவை முன்னுக்கு வந்து நிற்கின்றன. சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பேணிக் காத்தலுக்கான விழிப்புணர்வு இன்றைய சமூகத்தாரிடையே முழுமையாகக் காணப்படாவிட்டாலும் சங்ககாலச் சமூகத்தில் காணப்பட்டன என்பதைச் சங்க இலக்கிய நூல்களான தொகையும் பாட்டும் எடுத்தியம்புகின்றன. அவற்றுள் சில கருத்தாக்கங்களை மட்டும் எடுத்தியம்ப இக்கட்டுரையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சூழலியல்விளக்கம்

சூழலியல் மனிதன் வாழும் இடத்தையும் அவனைச் சுற்றியுள்ள அமைப்பையும் சேர்ந்ததாகும். நாம் வாழும் உலகம் பற்றிய அடிப்படைப் புரிதலை உண்டாக்குவது. உலகமயமாக்கலுக்குப் பிறகு பன்னாட்டு மூலதனங்கள் இந்தியாவின் இயற்கை வளங்களையும், காடுகளையும் அழித்து மனித வாழ்க்கையை இயற்கையிலிருந்து அந்நியப்படுத்துகின்ற கொடூரமான தன்மையை உருவாக்கிவிட்டன. சுற்றுச்சூழலியல் சீரழிவால் முதல் அடி வாங்குவது ஏழை மக்களே. உலகமயமாக்கல் – சந்தைமயமாக்கல் எனும் ஆழிப்பேரலையால் சுற்றுச்சூழல் பற்றிய கரிசனம் அடிபட்டுப் போனது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுற்றுச்சூழல் காப்புக் குறித்துப் பல நாடுகளிலும் பேசப்பட்டு வருகின்றன. கல்வி, வணிகம், பொருளியல், பொறியியல், அரசியல், சட்டம், வேளாண்மை என அனைத்துத் துறைகளிலும் சூழலியலின் தாக்கம் காணப்பட்டு வருகின்றன. கடந்த நூற்றாண்டின் அறிவியலின் ஒரு கூறான சூழலியல் தனித்துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட சுற்றுச்சூழல்களின் காரணமாகச் சூழலியல் மிக வேகமான வளர்ச்சியைப் பெற்றதுடன் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்படத் தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பேணிக் காப்பதும், இயற்கை வளங்களை அழியாமல் காப்பதுமே மனிதனின் நிலையான வாழ்க்கைக்கு அடிப்படை எனச் சூழலியல் உணர்த்துகிறது (இலக்கியத்தில் சூழலியல், ப.8)

மரங்கள், விலங்குகள், பறவைகள், மக்கள் இயற்கைச் சூழல் நிலையில் எப்படி இணைந்து வாழ்கிறார்கள் என்பதும், பருவங்கள், மழை, மனிதன் ஆகியவற்றால் எப்படி மாற்றங்கள் தோன்றுகின்றன என்பதும் சூழலியல் குறித்த ஆய்வு பெறும் கருத்தாக்கமாகும்.

சூழலியல் திறனாய்வு

சூழலியல் திறனாய்வு (Eco Criticism) என்ற சொல்லாட்சி 1978இல் தான் ஆங்கில மொழியில் உருவானது. இலக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் இணைத்து ஆராய்வதற்கு 1992-இல் சங்கம் ஒன்று மேலைநாட்டில் நிறுவப்பட்டது. அதற்காக ஓர் இதழும் வெளிவந்தது. (ISLE – Interdisciplinary Studies in Literature and Environment)  1996-இல் சூழலியல் திறனாய்வு குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்று வெளியிடப்பட்டது. டேவிட் மார்சல் என்பார் “ஒரு நூற்றாண்டு தொடக்ககாலச் சூழலியல் திறனாய்வுகள்” என்ற ஒரு கட்டுரைத் தொகுப்புநூலை வெளியிட்டதன் மூலம் முப்பதுக்கும் மேற்பட்ட சூழலியல் திறனாய்வாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தோற்றமெடுத்த சூழலியல் திறனாய்வு அமெரிக்காவில் ‘லாரன்ஸ் பௌல்’ என்பவரால் பெரிதும் மேலெடுக்கப்பட்டு முக்கியமானதொரு இலக்கிய இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட்டது. ‘சுற்றுச்சூழல் திறனாய்வின் எதிர்காலம்’ என்ற அவருடைய நூல் பின் அமைப்பியல் கோட்பாடுகளையும் பயன்படுத்திக் கொண்டது. அவருடைய ‘சுற்றுச்சூழல் கற்பனைகளும் அழியும் பூமி குறித்த இலக்கியங்களும்’ என்ற நூலும் சூழலியல் கோட்பாட்டிற்குப் பெரிதும் பங்களிப்பைச் செய்தது.

தமிழ் இலக்கியப் பரப்பில் இச்சூழலியல் திறனாய்வு குறித்த கருத்தாக்கங்கள் சமீபகாலத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளன. திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றும் முனைவர் நிர்மல்.செல்வமணி இச்சூழலியல் திறனாய்வு அடிப்படையில் தொல்காப்பியரின் திணைக் கோட்பாட்டையும் சங்க இலக்கியங்களையும் விளக்கிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது அரிய முயற்சியில் ஆங்கில மொழியில் சூழலியல் திறனாய்வுக்கென்று ஓர் இதழும் வெளிவருகிறது.

மனிதன் வாழும் இடத்தையும், அவனைச் சுற்றியுள்ள அமைப்பையும் சேர்ந்த ஒன்றாகச் சூழலியல் முன்னிறுத்தப்பட்டது. உலகம் பற்றிய அடிப்படையான புரிதலை, விழிப்புணர்வை உண்டாக்கும் விதத்தில் சூழலியல் சார்ந்த கல்வி முறை சமீபகாலத்தில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. சூழலியல் சார்ந்த விழிப்புணர்வால் அழிந்து கொண்டு வரும் விலங்கினங்களை, தாவரங்களை, இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியாக இக்கல்விமுறையைக் கருத வாய்ப்பிருக்கிறது.

சூழலியல் திறனாய்வின் போக்குகள்

சூழலியல் திறனாய்வு இலக்கியத்தை எத்தகைய முறையில் எல்லாம் அணுகுவதற்கு முயல்கிறது என்பதைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக் கொள்ளலாம்.

 1. இயற்கை குறித்த சமகாலப் படைப்புகளைச் சுற்றுச்சூழல் அறிவியல் வழங்கிய அறிவு கொண்டு ஆராய்தல்
 2. பழம்பெரும் இலக்கியங்களில் இயற்கை எவ்வாறு இடம்பெற்றுள்ளது என விளக்குதல்.
 3. மனிதர்களின் அரசியல் மற்றும் பண்பாட்டு நடவடிக்கை இயற்கையின் மேல் எத்தகைய தாக்கத்தை வரலாறுதோறும் நிகழ்த்தியுள்ளது என்பதை இலக்கியங்களின் வழி வெளிக்கொணர்தல்.
 4. இயற்கை குறித்த அறிவு, இலக்கியப் படைப்புகளில் எவ்வாறு பதிவாகியுள்ளன என்பதைப் புலப்படுத்துதல்.
 5. இயற்கைக்கும் மனிதர்களுக்குமான முரணையும், பகை நட்பையும் ஒத்திசைவையும் இலக்கிய வரலாற்றில் தேடி அலைதல்.
 6. சுற்றுச்சூழல் திறனாய்வை வளர்த்தெடுப்பதன் மூலம் ‘புவியை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுதல்’ என்கிற தற்காலச் சமூகப் போராளிகளின் முயற்சிக்குத் துணைநிற்றல்.

சங்க இலக்கியத்தில் சூழலியல்

சங்க இலக்கியத்தில் மரம், செடி, கொடி பற்றிய செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அதற்கடுத்து பறவைகள், விலங்கினங்கள் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. விலங்கினங்களைவிடப் பறவையினங்கள் தமிழகத்தில் மிகுதியான அளவில் காணப்பட்டதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. சங்ககாலப் புலவர்கள் மரம், விலங்கு, பறவை முதலியவற்றின் இயல்புகளை நன்றாக உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற உ.வே.சா.வின் கூற்று சங்க இலக்கியப் புலவர்கள் சூழலியல் அறிஞர்களாகவும் விளங்கியுள்ளனர் என்பதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

இத்தகைய சமகால வாழ்வில் மனிதன் இயற்கையிலிருந்து அந்நியப்படுத்திக் கொண்டு வாழநேர்கிற நெருக்கடி சூழல் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது. சங்க இலக்கியங்களில் மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்திருக்கிறான் என்பதனைப் பின்வரும் அகநானூற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.

என்றூழ் வியங்குளம் நிறைவீசிப் பெரும்பெயல்

            பொழிந்த ஏமவைதுறை உவந்த உவகை

            எல்லாம் (அகம்.42)

மழை வளத்தால் ஏரி, குளங்கள் நிரம்புவதை மேற்கண்ட பாடல் குறிப்பிடுகிறது. அக்காலகட்டச் செழுமை, மழைவளம், இயற்கைவளம் ஆகியவை மனிதனை இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கு வழி அமைத்துக் கொடுத்தன. தற்காலத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதால் புவி வெப்பமடைதலும், ஆறு, ஏரி, குளங்கள் போன்றவை சரிசமமாக ஆக்கப்பட்டு கட்டிடங்களாக முளைப்பதும், குடிநீர் பிரச்சனையால் மக்களின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக மாறுவதும் சாதாரணமாக நிகழ்ந்தேறி விடுகிறது.

சங்க இலக்கிய இயற்கை வெளியில் மனிதன் எளிதில் வயப்படக்கூடிய நிலத்தை ‘முதற்பொருள்’ எனக் கொண்டு அவர்களின் அனுபவத்திற்குள் இணைப்பதற்குக் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என ஐந்தாகப் பகுத்தறிய முயன்றுள்ளனர் தமிழர்கள். அகத்திணைப் பாகுபாட்டை முதல், கரு, உரிப்பொருள் எனச் சிறப்பித்து உரைத்தனர். திணைசார் வாழ்வின் மூலமாகத் தொழில் உற்பத்திக் கருத்தாக்கங்களைச் சங்ககால மக்கள் பெற்றிருந்தனர். தாங்கள் விளைவிக்கும் பயிர்களிடையே வளரும் தேவையற்ற களைகளை நீக்கும் பயிர்ப் பாதுகாப்பு அனுபவம் பெற்றிருந்தனர் என்பதைப் பின்வரும் அகநானூற்றுப் பாடல் சுட்டிக்காட்டுகின்றது.

கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்

            கறங்குபறைச் சீறின் இரங்க வாங்கி

            களைகால் கழீஇய பெரும்புன வரவின் (அகம்.194)

இயற்கைப் பேரழிவுகளான நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஆகியவற்றின் காரணமாகப் பல்லாயிரம் கோடிகளுக்கு மேலான இழப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. ஏராளமான உயிர் இழப்புக்களை ஏற்படுத்துகின்ற இயற்கைப் பேரழிவுகளால் நீர்வளமும், நிலவளமும் வளர்ச்சியின்றிக் காணப்படுவதை உணரமுடிகிறது. கலித்தொகைப் பாடல் ஒன்று நீர்வளம், நிலவளம் வளர்ச்சியின்றி இருப்பதைப் பின்வருமாறு எடுத்தியம்புகிறது.

செல்லுநீர் ஆற்றிடைச் சேர்ந்து எழுந்த மரம்வாட

            புல்லுவிட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன (பாலைக்கலி 3: 12-13)

மனித சமூகம் தனது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிக் காடுகளை அழித்து வயல்வெளிகளை உருவாக்கியது. குறவன் புதுக்கொல்லினை உருவாக்க வேண்டிக் காட்டை அழித்தான் என்ற செய்தி பின்வரும் ஐங்குறுநூற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ளது.

புவர் கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞை (ஐங்.295)

நிலத்தை அழிப்பதில் சங்ககால மக்கள் செயலாற்றியுள்ள மற்றொரு கூறு அந்தந்த நிலங்களுக்கே உரிய தொழில் சார்ந்த உற்பத்திப் பொருட்களில் ஈடுபட்டதுதான். தச்சனுடைய தச்சுத் தொழிலுக்காக மரங்கள் வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட மரங்களைக் கொண்டு அழகிய மதில் நிலைகளை உருவாக்கியதைப் பின்வரும் நெடுநல்வாடைப் பாடலடிகள் சித்திரிக்கின்றன.

தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின்

            கைவல் கம்மியின் முடுக்கலின் புரைதீர்த்து

            ஐயவி அப்பிய நெய்அணி நெடுநிலை (நெடு.184-186)

மருத்துவத்திற்காக மரம் வெட்டப்பட்ட செய்தியும் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. மக்கள் சந்தனக்கட்டை கொண்டு எரித்த செய்தியும் பின்வரும் புறநானூற்றுப் பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாந்த விறகின் உவித்த புன்கம் (புறம்.166)

காடுகள் அழிக்கப்படுவதால் விலங்கினங்கள் அஞ்சி ஓடுவதையும் சங்கப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.

சங்க இலக்கியத்தில் இயற்கை வளமும், நீர் வளமும் நிறைந்திருந்தன எனப் பேசப்பட்டாலும் கலங்கிய நீரினைப் பருகிய மக்கள் குறித்த பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. இதனைப் பினவரும் ஐங்குறுநூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.

நம் படப்பைத்

            தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு

            உவலைக் கூவற்கீழ    

            மான்உண்டு எஞ்சிய கலுழி நீரே (ஐங்.203)

காட்டுப் பகுதியில் வெப்பம் மிகுதியாக இருக்கும் போது தோன்றும் காட்டுத்தீயின் செயல்பாடுகள், அத்தீயானது ஆரவாரித்துப் பல இடங்களில் பரவிச்செல்லும் தன்மைகள், காற்று வீசும் தன்மையெல்லாம் சென்று காட்டை அழிக்கும் நிலைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் அகநானூற்றுப் பாடல் பதிவு செய்கின்றது.

கனைஎரி நடந்த இலைஇல் அம்காட்டு (அகம்.379)

விலங்கினங்கள் இயற்கையை அழித்தல் என்ற பதிவுகள் மிகையாகக் காணப்படுகின்றன. பன்றியும், யானையும் விளைநிலங்களை மேய்ந்து அழிக்கின்றன. நண்டானது நெல் விதைத்து முளை குருத்து வெளிவரும் நிலையை அழிக்கிறது என்பதைப் பின்வரும் நற்றிணைப் பாடல் மையப்படுத்துகின்றது.

எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருந்தின்

            செயம் மேவல் சிறுகண் பன்றி

            ஓங்குமலை வியன்புனம் படீஇயர் வீங்குபொறி

            நூழை நுழையும் (நற்.98)

இயற்கையைப் போற்றும் அறச் செயல்பாடாகச் சங்ககாலத்தில் வழங்கிய திணைக் கொள்கையே சூழலியல் அறிவியலாக இன்று மலர்ந்து கவனம் பெற்று வருகிறது.

முடிவுரை

இன்றைய காலக்கட்டத்தில் சூழலியல் குறித்த அறிவினைப் பெற்றிருத்தல் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. மனிதனை இயற்கைக்குள் நிறுத்தும் ‘சூழலியல்’ சங்க இலக்கியத்தில் மிகுதியும் போற்றப்பட்டது. மேலைநாட்டு மூலதனங்களின் குவியலால் வனங்கள் அழிக்கப்பட்டதன் விளைவாகச் சூழலியல் குறித்த ஆய்வு முன்னுக்கு வந்திருக்கிறது. சங்க இலக்கியப் பதிவுகளை நோக்கும்போது சூழலியல் சார்ந்த வாழ்விற்குப் பரவலாகத் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர் என்பதை உணரமுடிகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சூழலியல் கல்வியின் அவசியத்தை அனைத்துத் துறைகளிலும் கொண்டுவர வேண்டிய தேவை இக்காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ளது. சூழலியல்சார் அறிவினை ஒவ்வொருவரும் பெற்று இருத்தலே மிகுந்த பயன் தருவதாக அமையும். சூழலியல் அடிப்படையில் சங்க இலக்கியத்தை ஆராய்வது மிகவும் தேவையான ஒன்று என்ற கருத்தாக்கமே மேலோங்கி நிற்கிறது.

துணைநின்றவை

 • சோமசுந்தரனார் பொ.வே. (உரை.), 2009, ஐங்குறுநூறு, கழக வெளியீடு, சென்னை.
 • …………………, (உரை.), 2008, பத்துப்பாட்டு, கழக வெளியீடு, சென்னை.
 • ……………….…, (பதி.), 2007, கலித்தொகை நச்சினார்க்கினியர் உரை, கழக வெளியீடு, சென்னை.
 • நாராயணசாமி ஐயர் அ.(உரை.), , 2007, நற்றிணை, கழக வெளியீடுசென்னை.
 • வேங்கடசாமி நாட்டார் ந.மு.(உரை.), 2008, அகநானூறு, கழக வெளியீடு, சென்னை.

முனைவர் மௌ.அஸ்கர் அலி

உதவிப் பேராசிரியர்

ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

வில்லியனூர், புதுச்சேரி – 605 110.

askarsuperstar@gmail.com