திராவிட மொழிகளுள் தொன்மையான இலக்கிய, இலக்கண வளமுடையது தமிழ். பிற திராவிடமொழிகளுக்கு இத்தன்மை இல்லை. இம்மொழிகளுக்குக் (தெலுங்கு, கன்னடம், மலையாளம்) கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே இலக்கிய, இலக்கண வளம் வருகின்றது என்பதை அவற்றின் வரலாறுகள் காட்டுகின்றன. இத்தகு சூழலில் திராவிடமொழி இலக்கண நூல்களுக்கிடையே எங்ஙனம் உறவு இருக்க முடியும்? என வினவலாம். இதனை முதன்மைப்படுத்தித் தமிழின் நன்னூல், மலையாளத்தின் கேரள பாணினீயம், தெலுங்கின் பாலவியாகரணம் ஆகிய நூல்களுக்கிடையே இடைச்சொல் அளவில் இருக்கும் உறவினை இக்கட்டுரை கோடிட்டுக் காட்டுகின்றது.

திராவிடமொழி இலக்கணங்கள் : அறிமுகம்

தமிழில் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட இலக்கணநூல் நன்னூல். கங்க நாட்டை ஆண்ட சீயகங்கன் வேண்டிக் கொண்டதற்காக எழுதப்பட்ட நூல் எனச் சிறப்புப்பாயிரம் நவிலுகின்றது. இந்நூல் எழுத்து, சொல் இலக்கணங்களைப் பேசுகின்றது. இந்நூலின் திட்டமிடல் தெலுங்கு, மலையாள மொழிகளின் இலக்கணிகளுக்குத் துணையாக இருந்துள்ளமை கவனிக்கற்பாலது.

தெலுங்கில் கி.பி.1858-ஆம் ஆண்டு வெளிவந்த இலக்கணநூல் பாலவியாகரணம் (சின்னயசூரி). இந்நூல் சொல்லிலக்கணத்தை விரிவாகப் பேசுகின்றது. இதனைப் போன்று மலையாளத்தில் கி.பி.1895-ஆம் ஆண்டு வெளிவந்த இலக்கணநூல் கேரள பாணினீயம் (இராசராச வர்மா). இந்நூலும் சொல்லிலக்கணத்துக்கே முக்கியத்துவம் தருகின்றது. ஆக, இவ்விரு இலக்கண நூல்களும் பாணினீயத்தை (சமசுகிருதம்) முன்மாதிரியாகக் கொண்டு எழுதப்பெற்றவை என்பது வெளிப்படை. சொல்லிலக்கணம் மட்டும் கூறும் இலக்கணங்கள் பாணினியை முன்மாதிரியாகக் கொள்கின்றன எனக் கூறுவது சரியா? ஆம். எங்ஙனம்? தமிழில் கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற பிரயோகவிவேகம், இலக்கணக்கொத்து போல்வனவும் சொல்லுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதைக் காரணமாகக் கூறலாம். ஏனெனின் தொல்காப்பியமும் அசுட்டாத்தியாயும் சமகாலத்து இலக்கண நூல்கள் என ஆய்வறிஞர்கள் கருதுவர். அவ்விரு இலக்கண நூல்களுள் தொல்காப்பியம் ஐந்துவகை (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி) இலக்கணக் கூறுகளையும் பேசுகின்றது. ஆயின், அசுட்டாத்தியாயி சொல்லுக்கு மட்டுமே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றது. ஆக, அதனை அடியொற்றி வரக்கூடிய இலக்கண நூல்களை அவற்றின் பெயரிலிலே இனம் காண்கின்றனர் ஆய்வறிஞர்கள். அதுமட்டுமின்றி அவ்விலக்கணங்களை எழுதிய இலக்கணிகளும் வெளிப்படையாகவே அசுட்டாத்தியாயிதான் முன்மாதிரி எனக் கூறுகின்றனர்.

இவ்விரு இலக்கண நூல்களும் அசுட்டாத்தியாயியை முன்மாதிரியாகக் கொண்டாலும் பிற திராவிடமொழி இலக்கணங்களையும் கருத்தில் கொண்டே தத்தம் மொழிக்கூறுகளை விளக்குகின்றன. அதனடிப்படையில் அவ்விரு நூல்களும் தமிழின் நன்னூலை முன்மாதிரியாகக் கொண்டுள்ளன எனலாம். அதனைப் பின்வரும் பகுதிகள் விளக்கி நிற்கும். அதற்கு முன்பு இடைச்சொல் பற்றி விளக்கப்படுகின்றது.

இடைச்சொல் என்றால் என்ன?

பெயர் அல்லது வினை, பெயரடை அல்லது வினையடை ஆகாது; பெயர், வினைச் சொற்களுடன் ஒட்டியோ அல்லது தனித்தோ நின்று பொருள் தருவது இடைச்சொல் எனப்படும் (ச.அகத்தியலிங்கம் 2011:271). சான்றுகள் வருமாறு:

 1. நகுலன் நாதனைப் பார்த்தான். (ஐ)
 2. நகுலனும் நண்பன். (உம்)
 3. நகுலனே வென்றான்.(ஏ)
 4. நகுலன் மட்டும் பயிற்சி பெற்றான். (மட்டும்)
 5. நகுலன் வராமல் கூட இருப்பான். (கூட)
 6. நகுலன் மாத்திரம் வந்தான். (மாத்திரம்)

இங்குக் காண்பிக்கப்பெற்ற முதல் மூன்று சான்றுகளில் உள்ள , உம், ஆகிய இடைச்சொற்கள் சொற்களுடன் இணைந்து (நாதனை, நகுலனும், நகுலனே) வந்துள்ளன. இறுதி மூன்று சான்றுகளில் உள்ள மட்டும், கூட, மாத்திரம் ஆகிய இடைச்சொற்கள் தனித்து வந்துள்ளன. இவ்வாறு தொடரில் அமைந்து கிடக்கும் இடைச்சொற்களைப் பட்டியலிட்டும், அவற்றின் பொருண்மைகளைச் சுட்டியும்; காண்பிக்கின்றனர் இலக்கணிகள்.

திராவிடமொழி இலக்கணிகளின் இடைச்சொல் விளக்கமுறை

நன்னூல் இலக்கணக்கலைஞர் இடைச்சொல்லின் பொருள், வகை ஆகியனவற்றை விளக்கி, தமிழ்மொழியில்          உள்ள சமகாலத்திய, சமகாலத்துக்கு முந்திய இடைச்சொற்களைப் பட்டியலிடுகின்றார். அதனுடன் அவ்விடைச்சொற்கள் புலப்படுத்தும் (விளக்கும்) பொருண்மைகளையும் கூறுகின்றார். அதனைப் பின்வரும் நூற்பாக்கள் புலப்படுத்தும்.

வேற்றுமை வினைசாரியை ஒப்பு உருபுகள்

தத்தம் பொருள இசைநிறை அசைநிலை

குறிப்பு என்எண் பகுதியில் தனித்து இயலின்றிப்

பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து

ஒன்றும் பலவும்வந் தொன்றுவது இடைச்சொல்          (நன்.420)

தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண்சிறப்பு

எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை

பிரிப்புக் கழிவு ஆக்கம் இன்னன இடைப்பொருள் (நன்.421)

ஆயின், சின்னயசூரியோ, இராசராச வர்மாவோ இடைச்சொற்களைப் பட்டியலிடுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதனூடே அவ்விடைச் சொற்கள் தரும் பொருண்மைகளையும் தருகின்றமை குறிப்பிடத்தக்கது. காட்டாக,

யுவதி விடி ரஜஸ்வலலு கு3ப்3பெ3த மிண்ட3த முட்டுதலு நாப3டு3து3ரு (தத்தித.21)

(யுவதி விடி ரஜஸ்வலகள் முறையே கு3ப்3பெ3த மிண்ட3த முட்டுதகள் ஆகும்)

எனும் பாலவியாகரண விளக்கமுறையையும்,

என் நிரூபகமாம் தாது,

ஸம்பத்திக்ரிய யாவுக:

இவ ரண்டின் பற்றுவின

ரூபம் அவ்யயமாய் வரும்           (167)

என்ற கேரள பாணினீய விளக்கமுறையையும் கூறலாம். அதிலும் மலையாள இலக்கணி இடைச்சொல்லுக்கான இலக்கணத்தை மூன்றே நூற்பாக்களில் வரையறுக்க முனைகின்றார். இது சமசுகிருத பாணினி இலக்கணம் கற்றுத் தந்த இலக்கண உத்தியாக இருக்கின்றது. இருப்பினும் அவ்விலக்கணி இடைச்சொற்களின் வகைகளையும், பொருண்மைகளையும் நூற்பாவாகத் தருவது வீண்செயல் எனும் கருத்துடையவராகவும் திகழ்கின்றார். அதனைப் பின்வரும் கருத்து விளக்கும்.

இடைச் சொற்களின் பொருள் வகைகளும், வழக்கு மாறுபாடுகளும் இலக்கணத்தில் கூறவேண்டிய செய்திகள் அல்ல. எனினும் சமுச்சய விகற்பங்களைப் பற்றிச் சிறிது கூறவேண்டியுள்ளது (மா.இளையபெருமாள் 1977:317).

இருப்பினும் இடைச்சொற்களை இவ்விரு இலக்கணிகளும் தனித்த இயலமைப்புக்குள்ளே விளக்க முனைகின்றனர். அசுட்டாத்தியாயியை முன்மாதிரி எனக் கூறுபவை நூலைக் கட்டமைப்பு செய்வதில் தமிழிலக்கணிகள் துணைநின்றன எனக் கூறுவதற்குத் தயங்குகின்றன. காரணம் தமிழ்மொழி ஆட்சி அதிகாரத்தில் இல்லாமையே எனலாம். இலக்கணக் கூறுகளை விளக்குவதற்கு இலக்கணக் கலைச்சொல், நூற்பா அமைப்பு, இயல் அமைப்பு, உத்திகள் போல்வன ஓரிலக்கணிக்குத் துணையாவனவாகும். இவையனைத்தும் ஓரிலக்கணத்தின் கொடையே என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அந்த வகையில் கலைச்சொல், விதி அமைப்பு, விதி எடுத்துரைப்பு போல்வனவற்றை வேண்டுமானால் சமசுகிருத பாணினி அவ்விரு (இராசராச வர்மா, சின்னயசூரி) இலக்கணிகளுக்குத் துணையாகலாம். ஆனால், இயல் அமைத்து விளக்கக் கூடிய எண்ணம் தமிழிலக்கணிகளின் கொடையே எனலாம். ஏனெனின் இந்திய இலக்கண வரலாற்றில் (கிடைக்கப்பெற்றதின் அடிப்படையில்) தொல்காப்பியமே அத்தகு தன்மையில் உள்ளது. அதாவது, பிறமொழி இலக்கணிகளுக்குத் தமிழ்மொழி இலக்கணிகளும் முன்மாதிரியாக இருந்துள்ளனர் எனச் சில ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன என்பதை இரா.அறவேந்தன் (செவ்வியல் அழகியல் 2009:69) கூறுகின்றார். அஃது வருமாறு:

தமிழ் மரபிலக்கண நூல்கள் பிறமொழி மரபிலக்கண நூல்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதை ஆய்வுகள் சில விளக்கி உள்ளன. அவை வருமாறு:

 1. வீரசோழியம் எனும் தமிழ் இலக்கண நூல் சிங்கள மொழியின் முதல் இலக்கண நூலுக்கு மாதிரியாக அமைதல்.
 2. அதே வீரசோழியம் எனும் நூல் தெலுங்கு மொழியின் முதல் இலக்கண நூலுடன் தொடர்புபடுத்தத் தக்கதாக அமைதல். அகத்தியம், யாப்பருங்கலம், திவாகரம் ஆகிய தமிழ் இலக்கண நூல்களின் பெயர்கள் இடம்பெற்றிருத்தல்.

இக்கருத்து தமிழிலக்கணிகளிடமிருந்தும், சில சிந்தனைகளைப் பிற திராவிடமொழி இலக்கணிகள் வருவித்துக் கொண்டுள்ளனர் என வலியுறுத்துகின்றது. இது அம்மொழிகளினூடே இருக்கும் உறவினைக் காட்டுகின்றது.

இடைச்சொல் உறவு

பொதுவாக ஒவ்வொரு மொழி இலக்கணக் கலைஞருக்கும் புதிய சிந்தனை உடனே தோன்றிவிடுவது கிடையாது. அது தொடர்புடைய தரவுகளை நோக்கிய பின்பே வேரூன்றும். பின்பு எடுத்துரைப்பு நிகழும். அதனடிப்படையை நோக்கினால் ஓர் இலக்கணக்கலைஞன் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்தவனாகவே இருந்திருக்க வேண்டும். அவனால் மட்டுமே இலக்கண உலகில் புதிய சாதனையை நிகழ்த்திக்காட்ட முடிந்தது. இதனைத் தொல்காப்பியம், பாணினி தொடங்கி இன்றைய இலக்கணிகள் வரை செய்து காட்டியுள்ளனர்.

பன்மொழிகளை அறிந்தால் மட்டும் இலக்கண உலகில் புதுமையைப் புகுத்த முடியுமா? இயலாது. அது பன்மொழிப் புலமையாகுமே தவிர மொழியியல் புலமை ஆகாது. அம்மொழியியல் புலமை இல்லை எனின் மொழிகளின் அமைப்பையோ (இலக்கணத்தையோ) அல்லது மொழிகளுக்கு இடையேயான உறவையோ விளக்க முடியாது (செ.வை.சண்முகம் 1992:86). ஆக, மொழியியல் சிந்தனையும் ஓரிலக்கணக் கலைஞனுக்குத் தேவையான ஒன்றாக இருக்கின்றது. அம்மொழியியல் சிந்தனைகளுடன் பன்மொழி இலக்கிய, இலக்கணப் புலமைகளும் இலக்கணக் கலைஞர்களிடத்து அமைதல் இன்றியமையாதது. இத்தன்மைகள் யாவும் இங்கு ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொண்ட கலைஞர்களிடத்து அமைந்துள்ளமை ஊன்றிக் கவனிக்கத்தக்கது. இது குறித்துப் பேசின் விரிந்து நிற்கும். அதற்கு இது களம் இல்லை. இதன் களம் இடைச்சொல் உறவைச் சுட்டிக்காட்டுவது. அதற்கு முன்பு உறவுகள் எவ்வெவ் வகையில் அமையும் என்பதை இங்கு அறிய முயல்வோம்.

பொதுவாக ஓரினம் பிறிதோர் இனத்துடன் மொழி, பண்பாடு, இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் அடிப்படையில் உறவினை வைத்துக் கொள்கின்றது. இவ்வகையான உறவுகள் புலம்பெயர்வு சூழலிலும், மொழி அறிதலின் சூழலிலும் நிகழ்கின்றன எனலாம். புலம்யெர்தலில் உறவு இருக்க முடியுமா? ஆம். மொழிகளை அறிதலால் உறவு இருக்க வாய்ப்புண்டா? ஆம். ஓரிடத்தில் இருந்து கொண்டே, அம்மொழிகளுடன் கருத்தியல் முறையில் உறவு வைத்துக்கொள்ள முடியும் என்பதாகும்.

திராவிட மொழிஉறவு

பரந்துபட்ட இவ்வுலகின் தொடக்கத்தில் ஒரு மொழி மட்டுமே உருப்பெற்றிருக்க முடியும் என்பதை ஆய்வறிஞர்கள் கூறிவருகின்றனர். அம்மொழி இடவமைவு சூழலாலும், காலச் சூழலாலும், தட்வெட்ப மாறுபாட்டாலும் வேறுபட்டு நிற்கும் தன்மையுடையது. கடும் வெயில் நிலவும் சூழலில் வாழும் மனிதன் பேசும் மொழிக்கும், இயல்பான (மழைவளம் மிக்க பகுதி) சூழலில் வாழும் மனிதன் பேசும் மொழிக்கும் நிரம்ப வேறுபாடுண்டு. அவ்வகையில்தான் இவ்வுலக மொழிகளுக்கிடையே உறவுகள் உண்டு என்பதை வலியுறுத்த முடிகின்றது.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளுக்கிடையே உறவு உள்ளதா? எந்த வகையில் அவ்வுறவு உள்ளது? என்பது குறித்து அறிதல் அவசியமாகின்றது. தமிழிலிருந்துதான் அவ்விரு மொழிகளும் பின்பு தனித்த மொழிகள் ஆகின என வரலாற்று அறிஞர்களும், ஆய்வறிஞர்களும், இலக்கிய இலக்கணிகளும் கூறி வருகின்றனர். 1957-க்கு முன்பு வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகள் ஒரு பகுதியாகவே இருந்தது. அது சென்னப்பட்டணம் என்பதாகும். அதன் பின்பு மொழிவாரி அடிப்படையிலே தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா எனப் பிரிக்கப்பட்டன. இம்மொழிகள் தொல்காப்பியம் எழுதப்பெற்ற காலத்தில் வட்டார மொழிகளாக இருந்திருக்கின்றன. அதனை ஞா.தேவநேயப் பாவாணரின் கருத்துக்களின்வழி அறிய இயலும்.

பெலுச்சித்தானத்திலும் வட இந்தியாவிலும் இன்னும் திரவிட மொழிகள் வழங்குவதையும், வடநாட்டு ஆரிய மொழிகளிலும் திரவிட நெறிமுறைகளே அடிப்படையாய் அமைந்து கிடப்பதையும், குச்சரமும் (குசராத்தி), மராட்டியும் பண்டைக் காலத்தில் பஞ்சத் திராவிடிகளில் இரண்டாக வடமொழியாளராலேயே கொள்ளப்பட்டதையும், இந்திய மொழிகளிலெல்லாம் மூவிடப்பெயர்களும் முக்கியமான முறைப்பெயர்களும் தமிழ்ச் சொற்களாய் அல்லது தமிழ் வேரடிப் பிறந்தனவாயிருப்பதையும், சென்ற நூற்றாண்டில் தெலுங்கு நாட்டிற்கும் கன்னட நாட்டிற்கும் சென்ற தமிழக் குறவர் (எறுக்கலவாரு அல்லது கொரவரு) கூட, இன்று தமிழைத் தெலுங்கும் கன்னடமும் போல ஒலித்துப் பேசுவதையும், நோக்குமிடத்துத் தமிழிற் புணர்ச்சியும் பருசொன்னிலையும் தோன்றாத தொன்முது காலத்தில், தமிழே இந்தியா முழுதும் தனிப் பேராட்சி பெற்றிருந்தமை புலனாம்.

தட்பவெப்ப நிலையினாலும், ஒலிமுறைச் சோம்பலினாலும், இலக்கிய விலக்கண அணைகரை யின்மையாலும், ஆரியக் கலப்பினாலும், தமிழர் விழிப்பின்மையாலும், நாவலந் தீவு முழுவதும் ஒரு தனியாய் வழங்கிய முதுபழந்தமிழ், பல்வேறு மொழிகளாய்ப் பிரிந்து, வடநாட்டில் ஆரியமயமாயும் தென்னாட்டில் ஆரியக் கலப்பினதாயும் வேறுபட்டதுடன், ஆரியச்சார்பு மிக்க திரவிட மொழிகள் மேன்மேலும் தமிழை நெருக்கித் தெற்கே தள்ளிக்கொண்டே வருகின்றன.

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந்

தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு

என்னும் இளங்கோவடிகள் கூற்றால், கி.பி.2ஆம் நூற்றாண்டு வரை வேங்கடத்தை வடவெல்லையாகக் கொண்ட தென்னாடு முழுதும் பிறமொழி வழங்காத தமிழ்நாடாயிருந்தமை புலனாம் (திரவிடத்தாய்:முன்னுரை).

தொல்காப்பியர் காலத்தில் கொடுந்தமிழ் நாடுகளாயிருந்த பழந்தீபமும் சிங்களமும் கருநடமும் வடுகும் (தெலுங்கமும்) கலிங்கமும் பிற்காலத்தில் பிறமொழி நாடுகளாய் வேறுபட்டு விட்டன. நாவலந் தேயத்திலுள்ள மொழி வேறுபட்ட நாடுகள் தமிழுட்பட மொத்தம் பதினெட்டாகக் கணக்கிடப்பட்டன. அப்பதினெட்டும் பிற்காலத்தில் ஐம்பத்தாறாய்ப் பிரிந்து போனமை புராணங் கூறும். பத்தாம் நூற்றாண்டில் இருந்த அல்லது அதையடுத்து இருந்த இலக்கணவுரையாசிரியர், அக்கால நிலைக்கேற்ப அற்றைத் தமிழ்நாட்டின் நடுவொழிந்த பெரும்பாகத்தைத் தொகைபற்றிய பழைய மரபை விடாமல் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளாகப் பிரித்தனர். அவற்றுள் சேர நாட்டுப் பகுதிகளான குட்டம் குடம் வேண் மலாடு என்பன உள்ளன. அக்காலத்து மலையாள மொழி தோன்றாமையின், நன்னூலார் தங்காலப் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளையும் மனத்துட்கொண்டு,

செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்

ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி

என நூற்பாச் செய்தார். பதினெண் நிலங்களை,

சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்

கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்க

கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் வங்கம்

தங்கும் புகழ்த்தமிழ் சூழ்ப னேழ்புதிவி தாமிவையே

என்றும் செய்யுள் கூறும். இதிற் கூறிய சாவகம் சீனம் கடாரம் என்பவை முற்காலக் கொடுந்தமிழ் நாடுகளைச் சேர்ந்தவையல்ல. தமிழொழிந்த பதினேழ் நிலங்களிற் பல முற்காலக் கொடுந்தமிழ் நாடுகளா யிருந்தமையின் கொடுந்தமிழ் நாடல்லாத பிறவற்றையுஞ் சேர்த்துக் கூறிவிட்டார் பவணந்தியார் (திராவிடத்தாய் 2009:13-14).

இக்கருத்தினை நோக்குவோர் தமிழ்ப்பற்றுடையவர் கருத்தில் ஒருபுடைச் சார்பே இருக்கும் என்பர். அதற்காகப் பன்மொழிகளை அறிந்தவருடைய கருத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்ப்பதும் சரியன்று. இவர் தமிழ் மொழியின் தோற்றத்தைப் பற்றிக் கூறும்போது உலகின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்றார். அக்கருத்தைச் சிலர் மறுத்தனர். இன்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வறிஞர் அலெக்சு கோலியர் (1995 : காணொலிக்காட்சிக் காண்க) தமிழ்மொழியமைப்பை ஆய்ந்து மொழிகளுக்கெல்லாம் முதன்மையான மொழி தமிழ்தான் என நிறுவியுள்ளார். இதனைப் பெரும்பான்மையோர் இன்று ஒப்புக் கொள்கின்றனர். எவ்வாறு இருப்பினும் மலையாள மொழியின் இலக்கணிகளும் இக்கருத்தை ஒப்புக் கொள்கின்றனர் என்பதை இங்குச் சுட்டிக்காட்ட வேண்டும். ஏனெனின் மலையாளம் தமிழ் மொழியிலிருந்து பிரிந்து செல்லவில்லை எனச் சிலர் கருதுவர். அவர்களுக்கு, இராசராச வர்மாவின் கருத்து தெளிவுபடுத்தும்.

… தமிழ் நாடும் மலையாள நாடும் ஒரே அரசனின்கீழ் அமைந்திருந்த காலம்வரை தமிழ் மொழியும் மலையாள மொழியும் ஒன்றாகவே இருந்தன. கேரளத்து நூற்களில் செந்தமிழிலிருந்து வேறுபட்ட சில வடிவங்களும் (ஒல்லார்) சொற்களும் (பாத்து, பட்டி, கைய்நில முதலியவை) காணப்படவில்லை. ஆனால் அவைகளெல்லாம் வட்டார வழக்கு வேறுபாடுகள் என்றே கணக்கிடப்பட்டுள்ளன (1977:முகவுரை).

இவ்வாறு தமிழுக்கும் மலையாளத்துக்கும் மொழியடிப்படையிலான உறவு தொன்னெடுங் காலமாகவே இருந்து வருகின்றமையை அறிஞர்கள்வழி அறியமுடிகின்றது. இவ்வுறவு போலவே தெலுங்கின் உறவும் அமைந்துள்ளது. அதனைப் பின்வரும் கருத்தின்வழி உணர்ந்து கொள்ளலாம்.

தெலுங்கு தற்போது மிகுந்த வடமொழிக் கலப்புள்ளதாயிருந்தாலும், ஒரு காலத்தில் வடமொழி மணமேயில்லாத கொடுந்தமிழ் வகையா யிருந்ததே. இன்றும் தெலுங்கு நாட்டூர்ப் பெயர்கள் பல ஊர் (பாலூரு), புரம் (அனந்தபுரம்), மலை (அனிமலை), குடி (தேவகுடி), கோடு (முனுகோடு), கோட்டை (கண்டிகோட்ட), பள்ளி (கொத்தபல்லி), குன்றம் (பெல்லம்கொண்ட), கல் (மின்னுக்கல்லு), பாலம் (நாயனிப்பாலம்), கூடம் (நடிகூடெம்), குளம் (ஸ்ரீகாகுளம்), வீடு (பட்லவீடு), மந்தை (எல்லமந்த), புரி (நெமலிபுரி), சாலை (கண்ட்டசால), பட்டினம் (விசாகப்பட்ணம்), பாடு (தாவிப்பாடு), தலை (குர்ணூதல) எனத் தனித்தமிழ் ஈற்றனவாயே யுள்ளன (ஞா.தேவநேயப்பாவாணர் 2009:87).

திராவிடப் பண்பாட்டு உறவு

தமிழருக்கும் தெலுங்கருக்கும் இடையே தொன்னெடுங்காலமாகவே பண்பாடு, அரசியல், மதம், கலை, இலக்கியம், இலக்கணம் பண்பாடு அடிப்படையிலான உறவுகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன (மு.கு.ஜகந்நாத ராஜா 2005:337). புலம்பெயர்வு சூழலிலும் தாய்மொழிக்கான இலக்கண நூல்கள் எழுதிய வரலாறும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சமய அடிப்படையிலான பண்பாட்டு உறவு தமிழருக்கும் தெலுங்கருக்கும் தொன்னெடுங்காலமாகவே இருந்து வந்துள்ளமையையும், இருநாட்டுப் புலம்பெயர்வு மக்கள் நல்லுறவைப் பேணி வளர்ப்பதில் நாட்டத்துடன் இருப்பதையும் மு.கு.ஜகந்நாத ராஜா கருத்துக்கள் தெளிவுபடுத்தும்.

தொன்மைக் காலந்தொட்டு அரசியல் கலாச்சாரங்களில் உறவு பூண்டிருந்த ஆந்திர நாடும், தமிழகமும் இராமானுசருக்குப் பின் வைணவத்தின் மூலம் நெருங்கிய பிணைப்பினையுற்றது. விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் காலத்தில் தமிழகமும், ஆந்திரமும், வைணவத்தாலும், அரசியலாலும் நெருங்கிய பிணைப்பினையுற்றன. சமூகங்கள் குடியேறி கலாச்சரப் பரிவர்த்தனைகள் மூலம் நல்லுறவை வளர்த்தன. இதன் விளைவாக இரு நாடுகட்கும் தார்மீகமான நல்லுறவு நெடுங்காலமாகவே இருந்து வந்துள்ளது.

இரு நாட்டின் கலாச்சார கேந்திரங்களாகவே இன்றும் சென்னையும், திருப்பதியும் விளங்கி வருகிறது.

தமிழகத்தில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட லட்சக்கணக்கான மக்களும், தெலுங்கு நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட லட்சக்கணக்கான மக்களும், தமிழகமும், ஆந்திரமும் என்றென்றும் நெருங்கிய உறவு பூண்டு, உதவியும் நேயமும் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று உளமார விரும்புகின்றனர் என்பதும் பயணம் மூலம் தெரிந்துகொண்டேன் (2005:399-402).

அவ்வுறவினைப் போன்றே தமிழருக்கும் கேரளத்தவருக்கமான பண்பாட்டுறவு இன்றளவும் இருக்கிறது. பிற திராவிட மொழிகளைக் காட்டிலும் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது மலையாளம் (ச.வே.சுப்பிரமணியன் 2004:11) என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட இலக்கிய உறவு

திராவிட மொழிகளுக்கிடையே எங்ஙனம் கலை, பண்பாடு, மொழிசார்ந்த உறவுகள் உள்ளனவோ, அதனைப் போன்று இலக்கிய அளவிலான கொள்வினைகளையும் கொடுப்பினைகளையும் பரிமாறிக் கொண்டுள்ளன. இங்கு, ச.வே.சுப்பிரமணியனின் கருத்தைச் சுட்டிக்காட்டலாம்.

மலையாளம் மிக நெடுங்காலம் தமிழின் தொடர்பை விடாது வழங்கிவந்ததால் அதன் தனித்தன்மை காலந்தாழ்த்தியே எழுத்து இலக்கிய உருநிலையில் புலப்படுகின்றது. கி.பி.12-ஆம் நூற்றாண்டுக்குப் பின்பே மலையாள மொழிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. முதல் இலக்கியமாகத் தேர்ந்து கொள்ளப்படும் 12-ஆம் நூற்றாணடினைச் சார்ந்த சீராமனின் இராமசரிதம் மிகுதியான தமிழச் செல்வாக்கைக் காட்டுகின்றது (திராவிட மொழி இலக்கியங்கள் 2004:26).

இக்கருத்தை வலுச்சேர்க்கும் முகாந்திரம் உடையதாகப் பின்வரும் மு.கு.ஜகந்நாத ராஜா கருத்தும் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து ஆந்திர நாட்டுக்குக் குடிபெயர்ந்த இந்த வைணவ அந்தணர்களும் ஆசாரியர்களும் மீண்டும் தமிழகத்துக்கும் குடும்பங்களாக வந்தனர். இவர்களோடு தெலுங்கைத் தாய்மொழி ஆகக் கொண்டவர்களும் சேர்ந்து கொண்டனர். இப்படி வந்தவர்கள் தமிழை மட்டுமின்றி தெலுங்கு எழுத்தையும் இயல்பாகவே கைவரப் பெற்றவர்கள் ஆனார்கள் (2005:177).

இத்தன்மை  நிலவியதாலே தமிழின் ஆண்டாள் கதை தெலுங்கில் ஆமுக்த மால்யதாவாக மலர்ந்தது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது. இப்புரிதலின் அடிப்படையில் அம்மூன்று மொழி இலக்கண நூல்களுக்கிடையே இருக்கும் கொள்வினை –  கொடுப்பினைகளைப் புரிந்து கொள்ளலாம்.

பன்மொழிப்புலமை உடையவர்களாகச் சின்னயசூரியும் இராசராசவர்மாவும் திகழ்கின்றனர். இவர்களுள் புலம்பெயர் சூழலில் உறவை வைத்துக் கொண்டவர் சின்னயசூரி. இவர் மூன்று தலைமுறைகளுக்கு முன்பே ஆந்திராவில் இருந்து சென்னைக்குத் தொழில் காரணமாகப் புலம்பெயர்ந்தவர். சென்னையில் குருகுலத்தில் கல்வி பயின்றவர். அங்குத் தெலுங்கு, சமசுகிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை தேர்ந்தவரானார். அதனைப்போன்று இராசராசவர்மாவும் கேரளத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இலக்கணத்தை யாத்தவர். இவரும் மலையாளம், தமிழ், தெலுங்கு, சமசுகிருதம், ஆங்கிலம் போல்வன மொழிகளில் புலமையுடையவர். ஆயின் இவ்விருவருக்கும் தமிழிலக்கணங்களுடனான உறவு இருந்திருக்கின்றமை வெளிப்படை. அப்படியிருக்கும்பொழுது மொழிக்கூற்றில் ஒன்றான இடைச்சொல் அளவில் தங்களின் உறவினை எங்ஙனம் வைத்துள்ளனர் என்பதைப் பின்வரும் அட்டவணையின்வழி அறிந்துகொள்ள முடியும்.

நன்னூல்

(தமிழ்)

கேரள பாணினீயம் (மலையாளம்) பாலவியாகரணம் (தெலுங்கு)
ஏ, ஓ, என, என்று, உம், தில், மன், மற்று, கொல், ஒடு, தெய்ய, அந்தில், ஆங்கு, அம்ம, மா, மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ, யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், இட்டு, அன்று, ஆம், தான், இன்று, நின்று (43) என், என்னு, எனெ, எங்கில், என்னால், ஆ, ஆய, ஆகுன்ன, ஆகும், ஆம், ஆயி, ஆயிட்டு, ஆய், ஆகெ, ஆகில், ஆயால், பொண்டு, குறிச்சு, பற்றி, காணில், காட்டில், காயில், எரெ, காணெ, ஆன், ஈ, ஏ, ஓ, உம் (29) அரி, ஆடி3, இ, இக, இcடி3, இமி,ஈ, உக, எடு3, கத்திய, கா, கொலது3, த, தந, ந, பண்டி3, றிக, அக, அவு, இ, இக, இமி, உ, க, கலி,குவ, க33, ட, டு, டு3, த, தங், நஙி, ப, பு, ப3டி3, வடி3, வி, வு (42)

இவ்வட்டவணையின்வழித் தமிழும் தெலுங்கும் இடைச்சொல்லின் பட்டியலைத் தருவதில் எண்ணிக்கை அடிப்படையில் ஒத்துப் போகின்றன. மலையாளம் குறைந்த எண்ணிக்கை இடைச்சொற்களையே தருகின்றது. அதிலும் குறிப்பாகத் தமிழின் இடைச்சொல் வடிவங்களுள் சிலவற்றைக் கேரள பாணினீயம் விளக்கி நிற்பது, அவ்விரு நூல்களுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்துகின்றது. இதுபோன்ற கருத்தியல்களைப் பிறமொழிகளின் உறவாலே விளக்கமுடிந்தது என இராசராசவர்மா தமக்கு உதவிய நூல்களின் பட்டியலை முன்னுரையில் (மா.இளையபெருமாள் 1977:3) தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அப்பட்டியல் வருமாறு:

இந்த நூலைப் படைப்பதில், பின்வரும் நூற்களும் எனக்குப் பெரிதும் துணைசெய்தன:

 1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – அருள்திரு. கால்டுவெல், டி.டி.எல்,எல்.டி.
 2. மலையாள இலக்கணம் – அருள்திரு. எச்.குண்டர்டட், டி.பி.எச்.
 3. தமிழ் – நன்னூல் மூலம்
 4. நன்னூல் – ஆங்கிலம் – ஜாயஸ். சாமுவல் பிள்ளை.
 5. கன்னட இலக்கணம் (ஆங்கிலம்) – அருள்திரு. டாக்டர் எப்.கிற்றல்.
 6. தெலுங்கு இலக்கணம், ஆந்திரசப்த சிந்தாமணி – நன்னய பட்டாராகப் பிரணீதம்.
 7. தெலுங்கு இலக்கணம் ஸூலப வியாகரணம் – வி.சுப்பாராவ்.
 8. தெலுங்கு இலக்கணம் (ஆங்கிலம்) – அருள்திரு.எ.எச்.ஆர்டன், எம்.ஏ.
 9. தமிழ் ஸ்டடீஸ் – எம். சீனிவாச ஐயங்கார் எம்.ஏ.
 10. லீலாதிலகம் (கையெழுத்துப் பிரதி)

இவ்வெளிப்படைத் தன்மை பிற இலக்கணிகளிடத்து இல்லை என்பது நோக்கத்தக்கது. இவ்வாறு பன்மொழி இலக்கண உறவு இருந்தமையால்தான் இராசராச வர்மாவால் தன்னைப் பிற இலக்கணிகளிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட முடிந்தது. அதற்கு அவர் சமுச்சய விகற்பம் என இடைச்சொல்லில் புதுமையைப் புகுத்தியமையே சான்றாகும். அதனைப் பின்வரும் நூற்பா சுட்டும்.

சமுச்சய விகல்பங்ஙள்

ஸஜா தீயத்தினே வரூ     (169)

இந்நூற்பாவில் வரும் சமுச்சயம் என்பதற்குத் தமிழில் கூட்டம், ஐயம் என்று பொருள். ஆக, அவர் ஒரு நீண்ட தொடரில் உம் போன்ற இடைச்சொல்லை எங்ஙனம் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார்.

சான்று:

ராமனும் க்ருஷ்ணனும் கோவிந்தனும் மற்றும் வந்நு.

(இராமனும் கிருட்டிணனும் கோவிந்தனும் பிறரும் வந்தனர்)

செருப்பக்காரனும் மிடுக்கனும் ஆய ராமன்.

(சிறுவயதினனும் ஆற்றல் மிக்கவனும் ஆகிய இராமன்)

இவை ஒத்த பொருண்மையைக் குறிப்பதற்காகக் கூறப்பட்ட சான்று.

லேலத்தில் விளி கேள்க்குன்னதினு மனஸ்ஸூள்ள ஆளுகள் அவதி திவஸம் ஹாஜராயிக் கொள்ளுவானுள்ளதும், ஈயமண்ணினெ விலக்கு வாங்கிக்குன்னவர் அதினெ… ராஜபோகம் கொடுத்து கொண்டு போகுவானுள்ளதாகயால் ஆ விவரவும் இதினால் பரஸ்யம் செய்திரிக்குன்னு (1977:317)

எனும் சான்றைக் காட்டி இதிலுள்ள, ‘கொள்ளுவானுள்ளதும்’, ‘ஆ விவரவும்’ என்றாயிரு சொற்களில் இடம்பெறக் கூடிய உம் எனும் இடைச்சொல் ஒன்றுக் கொன்று தொடர்பில்லாதவை. ஆதலின் இது தவறான தொடர் எனச் சுட்டிக்காட்டி, அது எங்ஙனம் எழுதப்பெற வேண்டும் என்றும் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மனஸ்ஸூள்ள ஆளுகள் அவதி, திவஸம் ஹாஜராயிக் கொள்ளேண்டதாணெண்ணும்… கொண்டுபோகுவானுள்ளதும் ஈய்ய மண்ணினெ… கொண்டுபோகுவானுள்ள தாணென்னும் (உள்ள) விவரம் இதினால் பரஸ்யம் செய்திரிக்குன்னு.

மனஸ்ஸூள்ளவர்… ஹாஜராயிக்கொள்ளுவானுள்ளதும்… ஈய்யமண்ணினெ கொண்டுபோகுவானுள்ளதும் ஆகயால் விவரம் இதினால் பரஸ்யம் செய்திரிக்குன்னு (1977:317).

ஆக, ஒருமொழி பேசும் இனம் பிறிதொரு மொழி பேசும் இனத்துடன் அரசியல், பொருளாதார அடிப்படையில் தொடர்பு கொள்ளும் பொழுது பண்பாடு, மொழி, இலக்கிய, இலக்கணக் கலப்புகளும் நிகழ்கின்றன. இதன் அடிப்படையிலே ஒரு மொழிக்குரிய எழுத்து உருவாக்கத்திலும், தரப்படுத்தலிலும், திட்டமிடலிலும் பிறிதொரு மொழி முன்மாதிரியாக அமைந்து விடுகின்றது என்பார் இரா.அறவேந்தன் (2003:73-74). இதனையே இருமொழி இலக்கணக் கலைஞரிடத்தும் அமைந்து கிடக்கும் இலக்கணக்கூற்றின் உறவுமுறை எனவும் சுட்டிவிடலாம். இவ்விருமொழி இலக்கணக் கலைஞர்களும் கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டினர். எனவே, இக்கலைஞர்களுக்கு முன்பு இதுபோன்ற உறவு இருந்துள்ளதா? எனின் ஆம் என்ற பதிலைத்தான் கூறவேண்டும். அதற்கு மலையாள மொழியின் முதல் இலக்கணநூலான லீலாதிலகம் பிற திராவிட மொழியான தமிழின் தொல்காப்பியக் கருத்துடன் இருந்துள்ள உறவினைச் சான்று காட்டலாம். அதனைப் பின்வரும் கருத்துக்கள் விளக்கி நிற்கும்.

… வேலாயுதன் பிள்ளை (1966.33) லீலாதிலக ஆசிரியர் தன் செந்தமிழ் இலக்கண அறிவைக் கேரளபாஷா இலக்கணத்தின் மேல் ஏற்றி திருப்தி அமைந்துவிட்டார் என்னும் வாசுதேவப்பட்டத்திரி (1978.19), தொல்காப்பியரைக் கண்ணை மூடிக்கொண்டு லீலாதிலகம் பின்பற்றியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒரு என்பதை மூன்றாம் வேற்றுமை உருபாகக் கூறியது தொல்காப்பியச் செல்வாக்கு என்பார் பிரபாகரவரரியார் (1978.145) உண்ணிநீலி சந்தேசத்திலும் (சுமோரப் பிள்ளை, 1985.76), கிருஷ்ண கதாவிலும் (பிரபோத சந்திரன் நாயர் 1977: தன்னொடு, போன்ற உதாரணங்கள்) ஒடு மூன்றாம் வேற்றுமை உருபாக வந்துள்ளன.

லீலாதிலக சூத்திரம் 50, 51, 52 ஆகிய மூன்றும் தொல்காப்பிய சூத்திரங்களின் மொழிபெயர்ப்பு என்றும் உதாரணங்கள் தொல்காப்பியத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்றும் வாசுதேவ பட்டத்திரியின் (1978:182) கருத்து (செ.வை.சண்முகம் 1992:70-71).

இக்கருத்துக்களை நோக்கினால் ஓரிலக்கணக் கலைஞனுக்கு இருக்கும் அறிவைப் புரிந்துகொள்ளலாம். இதன்வழி மும்மொழி இலக்கணக் கலைஞர்களின் உறவுகளை அறியமுடிகின்றது. அதனைப் பின்வரும் வரைபடம் சுட்டிக்காட்டும்

துணைநின்றன

 1. அகத்தியலிங்கம் ச., 2011, தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சென்னை.
 2. அறவேந்தன் இரா., 2009, செவ்வியல் அழகியல், பாவை பதிப்பகம், சென்னை.
 3. ஆனைவாரி ஆனந்தன் (மொ.ஆ.), 1999, பரவஸ்து சின்னையா சூரி, சாகித்திய அக்காதெமி, சென்னை.
 4. இளையபெருமாள் மா., 1977, கேரள பாணினீயம், கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.
 5. சண்முகம் செ.வை., 1992, மலையாள மொழியின் முதல் இலக்கணம் (சமூக மொழியியல் ஆய்வு), மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
 6. சத்தியராஜ் த., இலக்கணவியல் ஒப்பியல் அடிப்படையில் தொல்காப்பியமும் பாலவியாகரணமும் (அச்சில்)
 7. சுப்பிரமணியன் ச.வே. (பதி.), 2009, தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.
 8. சுப்பிரமணியன் ச.வே. (பதி.), 2004, திராவிட மொழி இலக்கியங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
 9. சுப்பிரமணியம் ஜே.பி.(பதி.), 1947, நன்னூல் விருத்தியுரை, வித்தியாநுபாலன யந்திர சாலை, சென்னை.
 10. தேவநேயப் பாவாணர் ஞா., 2009, திரவிடத்தாய், தமிழ்மண் அறக்கட்டளை, செனனை.
 11. நீலாம்பிகை யம்மையார் தி., 1938, வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை.
 12. பரவத்து சின்னயசூரி, 2002, பாலவியாகரணம், பாலசரசுவதி புத்தகாலயம், சென்னை.
 13. ஜகந்நாத ராஜா மு.கு., 2005, தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி

கோவை, தமிழ்நாடு, இந்தியா

9600370671

inameditor@gmail.com

www.meyveendu.blogspot.in

www.inamtamil.com