காப்பியங்கள் காலத்தைக் கடந்து கருத்துக்களைத் தாங்கிச் செல்லும் வரலாற்றுப் பெட்டகமாகும்.  பழந்தமிழ்க் காப்பியங்களுக்கு உரையாசிரியா்கள் செய்துள்ள தொண்டு அளப்பரியது.  அவ்வகையில் காப்பியத்திற்குத் தொண்டாற்றிய புலமைச் செல்வா்களை நூலாசிரியா், உரையாசிரியா், கற்பிக்கும் ஆசிரியா் என மூவகைப்படுத்தலாம்.  இம்மூவருள் நூலாசிரியரின் உள்ளக்கிடக்கையை உய்த்துணா்ந்து கற்பிக்கும் ஆசிரியா்களுக்குத் தெளிய அறிவிக்கும் நுண்மாண் நுழைபுலமும் சொல்வளமும் ஒரு சேரப் பெற்றவா்கள் உரையாசிரியா்களேயாவா். அத்தகைய உரையாசிரியரான அரும்பத உரைகாரரின் வரலாறு, இவா் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதுவதற்கான காரணம், அதற்கான சமூகப் பின்புலங்கள் போன்றவற்றினை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியம் குறிப்பிடும் உரை வகைகள்

மூலநூலின் சிறப்பினை வெளிப்படுத்துவது உரை ஆகும். தொல்காப்பியா் காலத்திலேயே உரைநடை தோன்றிவிட்டதென்பதற்கு,

                   அவற்றுள்

                   நூல் எனப்படுவது நுவலும் காலை

                   முதலும் முடிவும் மாறுகோள் இன்றி

                   தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

                   உள்நின்று அகன்ற உரையொடு புணா்ந்து

                    நுண்ணிதின் விளக்கல் அதுஅதன் பண்பே (தொல்.பொருள்.செய்யு.159)

எனும் தொல்காப்பியம் சான்றாகும். இதனால் நூலின் உட்பொருளை விளக்குவது உரையின் பண்பு என்பது அறியப் பெறுகிறது.

அரும்பத உரையாசிரியா் வரலாறு

சிலப்பதிகாரத்திற்குக் காலத்தால் முந்திய உரையாசிரியா் அரும்பதஉரைகாரர் ஆவா்.  இவ்வுரைகாரரை அரும்பத உரைகாரா் என்று முதன்முதலில் குறிப்பவா் அடியார்க்கு நல்லார்.  சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையில்,

ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்

                        அரச குமரரும் பரத குமரரும்

                        கவா்பரிப் புரவியா் களிற்றின் தொகுதியா்

                        இவா்பரித் தேரினா் இயைந்தொருங்கு ஈண்டி     (சிலம்பு.5:157-160)

எனவரும் அடிகளில் எண்பேராயம் குறித்து மொழிகையில் கரணத்தியல்வா், கருமகாரா், கனகச் சுற்றம், கடைகாப்பாளா், நகரமாந்தா், நளிபடைத் தலைவா், யானை வீரா், இவுளி மறவா் இனையரெண்பேர் ஆயமென்ப எனுமிவா் இனி சாந்து பூ…….. அவைக்களத் தாரைந்து (157 உரை) எனக் காட்டுவா் அரும்பதவுரையாசிரியா் எனக் குறிப்பதன்வழி அறிய இயலும்.

அரும்பதவுரைகாரர் பெயா்ககாரணம்

ஒரு காலத்தில் அரும்பதவுரைக்குச் சிறப்புப்பாயிரம் இன்மையாலும் பிற வரலாறுகள் இன்மையாலும் அடியாருக்கு நல்லார் உரை போல எல்லோரும் படித்துப் பயனடையுமாறு இல்லாது கற்றோர் மட்டுமே பயன்படத்தக்க சுருக்கவுரையாக இருத்தலாலும் இவருடைய வரலாறு விளக்கம் பெறவில்லை என்று கருதுவதற்கு இடமுண்டு.  இருப்பினும் நீா்ப்படை காதையில்,

செயிர்த்தொழின் முதியோன் செய்தொழில் பெருக

                        உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற் றிரட்டியென்

                        றியாண்டு மதியு நாளும் கடிகையும்

                        ஈண்டுநீா் ஞாலங் கூட்டி யெண்கொள      (சிலம்பு.27:7-10)

என வரும் அடிகளுக்கு அரும்பதவுரைகாரர்,  கூற்றுவன் செல்கின்ற உயிரைக் கவரும் தொழில் பெருகும்படியாக, உயிர்த்தொகை உண்டவனாகிய ஆண்டும் மதியும் நாளும் கடிகையும் ஒன்பதிற் றிரட்டியென்று அவற்றோடே கூட்டியெண்ண தேவாசுர யுத்தம் பதினெட்டாண்டிலும், இராம இராவண யுத்தம் பதினெட்டு மாதத்திலும், பாண்டவ துரியோதன யுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனக விசயரும் செய்த யுத்தம் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தவெண்ண என்று உரை எழுதியுள்ளார்.  இந்த யுத்தங்களை இதே முறையில் கலிங்கத்துப் பரணியில் செயங்கொண்டார்,

தேவாசுர ராமாயண மாபாரதம் உளவென்று

ஓவா உரை ஓயும்படி உளதப்பொரு களமே (களம் பாடியது-9)

என்றுரைப்பார்.  இதைக்கொண்டு செயங்கொண்டாரே அரும்பத உரைகாரா் என்று சிலா் குறிப்பிடுவா்.  ஆயின் இது பொருத்தமன்று. செயங்கொண்டார் முதற் குலோத்துங்கன் காலத்து வாழ்ந்தவா். அரும்பதவுரைகாரா்  இராசராசன் காலத்து வாழ்ந்தவா்.  இருவரும் ஏறக்குறைய 80-100 ஆண்டு இடைவெளியிட்ட காலத்தில் வாழ்ந்தவா்கள். அன்றியும் “தேவாசுர யுத்தம் என்ற கருத்து தமிழ் இலக்கியப் பரப்பில் சிந்தாமணியிலும்” வேறுயிடங்களிலும் வருவதால் அரும்பதவுரைகாரா் செயங்கொண்டார் எனக் கொள்வதில் பொருத்தமின்மை புலப்படும்.

அரும்பதவுரைகாரரின் காலம்

அரும்பதவுரையாசிரியா் காலத்தை அறிவதற்குத் திட்டமான ஆதாரங்கள் இல்லை.  இருப்பின் உரையின் தொடக்கத்தில் விநாயகா் வணக்கம் இருப்பதைக் கொண்டு இவா் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று இலக்கிய வரலாற்று அறிஞா்கள் குறிப்பிடுவா்.  ஆயின் இதில் ஐயப்பாடு உள்ளது.  இவா் மேற்கோள் காட்டும் இலக்கியங்களில் புறப்பொருள் வெண்பாமாலை முதலிடம் பெறுகிறது.  அந்நூலின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு ஆதலின் இவா் ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கூறலாம்.  அத்திரி – எனும் சொல்லுக்கு கழுதை என்று திவாகரமும், ஒட்டகம் என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.  ஆனால் திவாகரமும், பிங்கலமும் 9,10 ஆம் நூற்றாண்டினது.  9-ஆம் நூற்றாண்டில் கழுதையாக இருந்த சொல்லினை 12-ஆம் நூற்றாண்டில் ஞானமிர்தவுரை ‘குதிரை’ என்று குறிப்பிடுகிறது. அப்படியானால் ‘கோவேறு கழுதை’ என்று சொல்லுகிற அரும்பத உரைகாரா் காலம் 9-க்கும் 12-க்கும் இடைப்பட்ட காலம் ஆதலின் அரும்பதவுரைகாரா் 11-ஆம் நூற்றாண்டு என்றும் கருதலாம்.

அரும்பத உரைகாரரின் சமயம்

உரைகாரரின் சமூகப் பின்னணி பற்றி ஆய்கையில் சமயம் முதலிடம் பெறுகிறது.  அவ்வகையில் இவ்வுரையாசிரியா் தம் உரைத்தொடக்கத்தில் விநாயகா் காப்பாக ஒரு வெண்பாவை அமைத்துள்ளார். அது,

கரும்பும் இளநீரும் கட்டிக் கனியும்

                        விரும்பும் விநாயகனை வேண்டிஅரும்பவிழ்தார்ச்

                        சேரமான் செய்த சிலப்பதிகார ரக்கதையைச்

                        சாரமாய் நாவே தரி  (கடவுள் வணக்கம்)

என்பதாகும். இதில் இவா் சைவ சமயத்தினா் என்று சொல்லுவா். இதற்கேற்ப ”நெடுவேலோன் குன்று – திருச்செங்கோடு” என்று குறிப்பிடுவதால் இவா் சைவ சமயம் சார்ந்தவா் எனலாம். மேலும் இவா் “அரங்கம் – திருவரங்கம்”, “ஸ்ரீகோயில்”, “மங்கல மடந்தைக் கோட்டம்”, “ஆயிழைக் கோட்டம்” என்று வைணவம், சமணம் சார்ந்த பல்வேறு கோயில்களைக் குறிப்பிடுவதால் இவா் அனைத்து சமய நெறிமுறைகளும் அறிந்தவா் எனக் கருத இடமுண்டு.

உரை எழுதுவதற்கான நோக்கம்

இவா்  தோன்றிய காலம் சைவ சமயம் பெருமலா்ச்சி பெற்று வந்த சோழா் காலம்.  அதாவது முத்தமிழிலும் பெரும்புலமை எய்தியிருந்த இப்பேராசிரியா், தம் புலமை வெளிப்பாட்டுக்குத் தக்க முத்தமிழ்த்திறம் வாய்ந்த காப்பியம் எதுவும் வேறு இல்லாமையால் சிலப்பதிகாரத்தை உரை இயற்றுவதற்கு உரியதாகக் கொண்டார் என்பது இவா் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதக் காரணம் எனக் குறிப்பிடலாம். இளங்கோவடிகள் செய்த காப்பியமும் விரிந்த  சமய நோக்குடையதாய் இருந்தமையும் இவா் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதத் தோ்ந்துகொண்டார் எனலாம்.

முடிவுரை

காலத்தால் முற்பட்ட சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய பெருமைக்குரியவா் அரும்பதவுரைகாரா் என்று  முதன்முதலில் குறிப்பிட்டவா் அடியார்க்கு நல்லார் ஆவார்.  அவரது வரலாற்றை ஆராயுமிடத்து அவா் காலம் 11-ஆம் நூற்றாண்டு என்பதும், சைவ சமயத்தைச் சார்ந்தவா் என்பதும் பெறப்படுகிறது.  மேலும் அவா் காலத்தில் முத்தமிழ்த் திறம் வாய்ந்த காப்பியம் சிலம்பைத் தவிர வேறு ஏதும் இல்லாமையே அவா் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதத் தோற்றுவாயாக அமைந்தது எனலாம்.

துணைநூற்பட்டியல்

  • சாமிநாதையர் உ.வே (உரை.), 2009(ஏ.ப.), சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும், டாக்டர் உ.வே சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகா, சென்னை.
  • புலியூர்க்கேசிகன் (உரை.), 2009, கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை.
  • மலர்விழி மங்கையர்க்கரசி இராம(உரை.), 2008, சீவக சிந்தாமணி மூலமும் உரையும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.

முனைவா் சே.செந்தமிழ்ப்பாவை                                          பெ.குபேந்திரன்

பேராசிரியா்  & இயக்குநா்                                                               முனைவா் பட்ட ஆய்வாளா்

தமிழ்ப் பண்பாட்டு மையம்                                    &                    தமிழ்ப் பண்பாட்டு மையம்

அழகப்பா பல்கலைக்கழகம்,                                                     அழகப்பா பல்கலைக்கழகம்

காரைக்குடி-3.                                                                                       காரைக்குடி-3.