சி.வை.தா.வின் பிறப்பு ஈழதேசத்தில் அமைந்தாலும் தம் வாழ்நாளின் எழுபது சதவீத நாட்களை அவர் இந்திய தேசத்தில் (தமிழகத்தில்) தான் செலவிட்டுள்ளார். 1832இல் பிறந்த சி.வை.தா. 1854வரையே ஈழத்தில் வாழ்ந்துள்ளார். அதன் பிறகு தமிழகத்தில் குடியேறியவர் தன் வாழ்நாளின் இறுதிவரை தமிழகத்திலேயே வாழ்ந்துள்ளார். இடைப்பட்ட காலங்களில் குடும்பப் பொறுப்புக் காரணமாக ஈழதேசம் சென்றாலும் அப்பயணம் மாதக்கணக்கு எனும் காலஅளவில் தான் நிகழ்ந்துள்ளது. தினவர்த்தமானியின் ஆசிரியப் பொறுப்பேற்கச் சென்னை வந்த சி.வை.தா. சென்னைப் பல்கலைக்கழத்தில் கல்வி கற்றுப் பல்வேறு பொறுப்புகளுக்கு உரியவராகின்றார். அவ்வகையில் சி.வை.தா. வகித்துள்ள பணிகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

பணிநிலை

 

ஆசிரியப்பணி                                                      ஆசிரியரல்லாப்பணி

சென்னை மாநிலக் கல்லூரி                                                    இதழாசிரியர்

 

கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரி              வரவுசெலவுக் கணக்கு அலுவலர்

 

 

வரவுசெலவுக் கணக்கு ஆய்வாளர்

 

 

வழக்கறிஞர்

 

நீதிபதி

மேற்குறித்த பணிகளுக்கிடையிலும் பணி ஓய்வு பெற்ற பின்பும் தான் சி.வை.தா. பதிப்புப் பணிகளைத் திறம்படச் செயலாற்றியுள்ளார். இந்நிலையில் இவர்தம் பணிகளைப் போற்றும் வண்ணம், அடுத்தடுத்த தலைமுறையினரும் இவரது பணிகளை நினைவுகூரும் வண்ணம் ‘உரிய அடையாளம்’ உருவாக்கப் பெற்றுள்ளனவா என்பது பற்றியும் விவாதிக்க வேண்டியுள்ளது. ‘ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதைபோல’ என்றொரு நாட்டார் வழக்கமொழி உண்டு. ஆனால் சி.வை.தா.வின் வாழ்வில் மட்டும் இவ்வழக்கமொழி தலைகீழாகவே தொழிற்பட்டுள்ளது. அவர் ஈழதேசத்தார் என்பதற்காகவும் கிறித்தவத்திலிருந்து மதம் மாறியவர் என்பதற்காகவும் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்குப் பல்வேறு நிலைகளில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அவர்தம் பணிகளை மட்டந்தட்டும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. (உ.வே.சா.விற்கு அமைந்ததுபோல்) வலுவான மாணவர் பரம்பரை அமையாததும் இவரது பணியை வெளியுலகம் அறியக் காலதாமதம் ஏற்பட்டது எனலாம். ஆசிரியப் பணியில் குறைந்த காலமே செயலாற்றி, எஞ்சிய காலங்களில் நிருவாகத்துறை, நீதித்துறையில் செயலாற்றியதால் இவர்க்கெனத் தனி மாணவர் பரம்பரை உருவாக வாய்ப்பின்றிப் போனது. இவரது பணிகளைப் பாராட்டும் வகையில் இலங்கை அரசு முப்பதாண்டுகளுக்கு முன்பு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

தமிழக அடையாளம் : செய்தன

தமிழகத்தில் சி.வை.தா.வுக்கான காட்சி வடிவிலான, கருத்து வடிவிலான அடையாளங்கள் ‘அரிது’ என்று தான் சொல்லமுடியும். (ஆய்வாளரின் அறிவுநிலைக்கு எட்டிய வகையில்) சி.வை.தா.வுக்கான தமிழக அடையாளங்கள் இப்பகுதியில் முன்வைக்கப் பெறுகின்றன.

 • சென்னைப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டிடத்தில் பல்கலைக்கழக முதல் பட்டதாரிகள் நால்வருள் ஒருவர் எனும் அடையாளத்துடன் சி.வை.தா.வின் ஆளுயர நிலைப்படம் பொருத்தப்பட்டுள்ளது.
 • தஞ்சையில் உருவாக்கப் பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்தமிழறிஞர் வரிசைஎனும் நிலையில் சி.வை.தா.வின் நிலைப்படம் பொருத்தி வைக்கப் பெற்றுள்ளது.
 • கருத்து வடிவ அடையாளம் எனும் நிலையில் சென்னைஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சி.வை.தா.வின் பதிப்புப் பணிகளை மதிப்பிடுவதாக ஒரு கருத்தரங்கமும் (2004) ஓர் அறக்கட்டளைச் சொற்பொழிவும் (2010) நிகழ்ந்து, அவை, முறையே 2008, 2010 ஆம் ஆண்டுகளில் நூல்வடிவம் பெற்றுள்ளன. குறிப்பாக, .வே.சா. பெயரில் நிறுவப் பெற்றுள்ள அறக்கட்டளைச் சொற்பொழிவில் சி.வை.தா.வைப் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தப் பெற்றிருப்பது போற்றுதலுக்குரியதாக அமைகின்றது.
 • ஆங்கிலேய அரசாங்கம் சி.வை.தா.வுக்குராவ்பகதூர்எனும் உயரிய பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தவிர்க்கவியலா நிலையில் (வாசகப் புரிதல் கருதி) உ.வே.சா.வுக்கான தமிழக அடையாளங்கள் ஒப்பீட்டுக்காகப் பின்வருமாறு முன்வைக்கப் பெறுகின்றன (உ.வே.சா.வை வம்புக்கிழுக்கும் முயற்சியல்ல இது).

 • பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்திலேயே காலத்தால் அழிக்கவியலாக் கருத்துவடிவிலான ‘தமிழ்த் தாத்தா’ எனும் அடையாளம்.
 • பணியாற்றிய கல்லூரியின் முகப்பில் முழுவுருவச் சிலை.
 • உ.வே.சா. பிறந்தகமான உத்தமதானபுரம் நினைவு இல்லத்தைப் பாரம்பரிய அடையாளமாக அரசு ஏற்றுப் போற்றி வருதல் (அதேவேளை, உ.வே.சா. வாழ்ந்த தியாகராச விலாசம் – இல்லம் கேட்பாரற்றுக் கிடக்கின்ற நிலைமை! ).
 • தனி அறக்கட்டளையின்கீழ் இயங்கும் வகையிலான (இந்தியக் குடியரசுத் தலைவரால் திறக்கப் பெறும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்ற) நூலக உருவாக்கம். அதன்வழி, உ.வே.சா. பதிப்பித்த நூல்களை மீள்பதிப்புச் செய்தல்.
 • பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நினைவு அறக்கட்டளை உருவாக்கம். அதன்வழிச் சொற்பொழிவு நிகழ்த்தம்.
 • தனிமனித விருப்ப நிலையில் ‘உ.வே.சா. : சங்க இலக்கியப் பதிப்புகள்’, ‘உ.வே.சா. : காப்பியப் பதிப்புகள்’ எனும் வரிசையில் நூல்கள் வெளியிட்டுள்ளமை.
 • உயராய்வு நிறுவனங்கள் கருத்தரங்கம் நிகழ்த்தி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 16,17.3.2011) ஆய்வுக் கோவைகள் வெளியிடல்.
 • இந்திய அரசு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளமை.
 • இணையப் பயன்பாட்டு நிலையில் உ.வே.சா. பெயரில் ‘செம்மொழித் தரவகம்’ உருவாக்கம்.
 • கல்வெட்டு, சுவடி தொடர்பான தொல்லியல்சார் ஆய்வாளர் ஒருவருக்கு 2011 முதல் மாநில அரசு சார்பில் ‘உ.வே.சா.’ விருது வழங்கி வருகின்றமை.
 • இன்ன பிற…

[.வே.சா.வைப் போற்றும் வகையிலான மேற்குறித்த அடையாளங்களுக்கு உ.வே.சா. முழுமையும் தகுதி வாய்ந்தவர் என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.]

அடையாளம் : சி.வை.தா.வுக்குச் செய்ய வேண்டுவன

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பெற்ற தமிழ்நூல்களின் பதிப்புப்பணி நாளுக்கு நாள் பல திருத்தங்கள் பெற்றுச் செம்மையுற்றது. இதற்குக் காரணமானவர்கள் நால்வர். ஒருவர் ஆறுமுகநாவலர். இவர் பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் தந்தவர்; அடுத்தவர் தாமோதரம்பிள்ளை. இவர் சுவர் எழுப்பியவர்; மூன்றாமவர் கூரை வேய்ந்து நிலையம் கண்டவரான உ.வே.சாமிநாதய்யர்; நாலாமவர் பதிப்பாசிரியர் உலகின் வான்மணியெனத் திகழும் வையாபுரிப்பிள்ளை.                                   –  திரு.வி.க.

ஓர் இல்லத்தைக் காலத்தால் அழியாமற் காக்க அதன் மேற்கூரையை பாதுகாத்தல் வேண்டும். அதேவேளை, கூரையைப் பராமரித்தால் மட்டும் போதாதல்லவா? நிலைக்கால்களும் சுவர்களும் பராமரிக்கப்படல் வேண்டுமே! அவ்வகையில், ‘பழந்தமிழ்ப் பதிப்பு’ எனும் இல்லத்துக்குச் சுவர் கண்ட சி.வை.தா.வின் அரும் பணிகளையும் அடுத்தடுத்த தலைமுறையினரை அறியச்செய்தல் இன்றைய தலைமுறையினரின் அவர் பெயரை ஆய்வுலகம் அசை போடுவதற்குப் பின்வரும் அடையாளங்களை உருவாக்குவது இன்றியமையாததாகும்.

 • பழந்தமிழ் இலக்கியக் காவலர் எனும் நிலையில் சி.வை.தா.வின் பெயரைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது.
 • தமிழ் இலக்கியம் பயிலும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்க்கு மட்டுமின்றிப் பகுதி-1 தமிழ் பயிலும் பிறதுறை மாணவர்களும் சி.வை.தா.வின் அரும்பணிகளை அறியும்வகையில் உரிய கட்டுரைகளைப் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கற்பிப்பது.
 • பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ் உயராய்வு நிறுவனங்களில் சி.வை.தா. பெயரில்ஆய்வு இருக்கைநிறுவுவது.
 • செம்மொழித் தரவகம் சி.வை.தா. பெயரிலும் உருவாக்குவது.
 • பிறந்த நாள் விழாவினை அரசு விழாவாகக் கொண்டாடுவது. குறைந்த பட்சம் தமிழ் உயராய்வு மையம் செயல்படும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தோராவது பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடிச் சிந்திப்பு நிகழ்த்துவது.
 • ஆவணப்படுத்தத்தில் ஈடுபடும் அறிஞர்க்குச் சி.வை.தா. பெயரில் தமிழ்க் காவலர் விருது வழங்குவது.
 • தன்னார்வ அடிப்படையில் புரவலர்கள் சி.வை.தா. பெயரில் அறக்கட்டளை உருவாக்குவது. அதன்வழிச் சொற்பொழிவு நிகழ்த்துவது.
 • சி.வை.தா.வின் பதிப்புநூல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நிலையில் சி.வை.தா. – பதிப்புக் களஞ்சியம்உருவாக்குவது.
 • சி.வை.தா.வின் பதிப்புரைகளுள் விடுபட்டனவற்றை உள்ளடக்கி வரலாற்றுநிலையில் வரிசைப்படுத்திப் புதிய பதிப்புரைநூல் உருவாக்குவது (இதற்கான நன்முயற்சியைச்சாமிநாதம்கண்ட முனைவர் ப.சரவணன் மேற்கொண்டிருப்பதாகச் செவிவழிச் செய்தி!).
 • சி.வை.தா. 1854இல் நீதிநெறி விளக்கத்தை உரையெழுதி முதன் முதலில் பதிப்பித்தார் எனும் கருத்தானது தமிழகத்தில் எழுத்தளவிலும் பேச்சளவிலும் மட்டுமே உள்ளது. எனவே, அந்நூலைக் கண்டெடுத்துப் படியெடுத்து அடையாளப்படுத்துவது.
 • சி.வை.தா. எழுதிய எஞ்சிய நூல்கள் பலவும் பெயர் மட்டும் அறிந்து கொள்ளும் நிலைத்துயில் தான் உள்ளன. அந்நூல்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்துவது. (அண்மையில், சி.வை.தா. எழுதிப் பதிப்பித்தகட்டளைக் கலித்துறைஎனும் இலக்கண நூலை மீள்பதிப்புச் செய்த முனைவர் ய.மணிகண்டன் அந்நூல் பதிப்பிக்கப் பெற்ற காலத்தைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்).
 • சி.வை.தா.வின் வரலாற்றை உள்ளடக்கி டி..இராஜரத்தினம் எழுதிய சி.வை.தாமோதரம்பிள்ளை சரித்திரம் எனும் நூலின் இருவேறுபட்ட பதிப்புகளில் இடம் பெற்றுள்ள மாறுபாட்டுச் செய்திகளின் உண்மைத்தன்மையை நிறுவுவது.
 • சி.வை.தா.வின் பரம்பரையில் வந்தோர் தமிழகத்தில் இருப்பின், அவர்க்குக் கல்வி, பணிநிலையில் (இட ஒதுக்கீட்டைக் கருத்திற் கொள்ளாது) வாய்ப்பு வழங்குவது.
 • சி.வை.தா.வைப் பற்றி வெளிவந்துள்ள கட்டுரைகள், நூல்களைத் தொகுத்து அவற்றைக் காய்தல் உவத்தலின்றி மறுமதிப்பீடு செய்வது.
 • சி.வை.தா.வால் சேகரிக்கப்பெற்ற சுவடிகளின் நிலை, பரிசோதிப்புக்கு உட்படுத்தி நிறைவேறாத தரவுகளின் கதி பற்றிய விவரத்தை உலகோர் அறியச் செய்வது.
 • இன்ன பிற

மு.முனீஸ்மூர்த்தி

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி -17