மொழியின் தோற்றமானது உயிரினப் பரிணாமங்களில் மனிதனைத் தனித்து அடையாளம் காட்டியது. அத்தகு மனித இனம் கண்ட அனுபவித்த நுகர்ந்தவைகளையெல்லாம் தமது எழுத்தாக்கத்தின் மூலம் உலகிற்கு எடுத்தியம்பினான். அவ்வாறு எடுத்துரைத்த எழுத்தாக்கங்களின் பொருளினை, கல்வியில் நாட்டமுடையோர் கற்று ஐயங்களை நீக்கித் தெளிவுறும் பொருட்டு எழுந்தவையே உரைகளாகும். உலக மொழிகளில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்குப் பலவகையான சிறந்த உரைகள் காலந்தோறும் தொடர்ச்சியாகப் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தமிழில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. உரைகள் தமிழ் மக்களின் சிந்தனையில் வேரூன்றிப் பண்பாட்டில் தழைத்து வளர்ந்து செயல்களில் சிறந்து விளங்குகின்றன. தலைமுறை தலைமுறையாக நூல்களுக்கு உரைகேட்டுப் பழகியவர்களும் தொடக்கத்தில் விரிவான உரையோ விளக்கமோ எழுதவில்லை. முதன்முதலில் தோன்றிய உரையின் வடிவமானது அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறும் முறையிலேயே அமைந்ததென்பர். இத்தன்மை சிறப்புப் பொருந்திய உரையினைக் கணேசையர் கையாண்ட முறை குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

உரை என்பதன் பொருள்

பாடல் அல்லது செய்யுள் வடிவிலுள்ள சூத்திரங்களுக்குப் பொருள் கூறும் மரபு உரை எனப்படுகிறது. ஒரு நூலின் உள்ளார்ந்த கருத்துக்கள் அல்லது செய்திகளை அறியப் பயன்படுவது உரை எனலாம். உரை என்பது ஒரு நூலிலுள்ள செய்யுட்களுக்கு விளக்கம் கூறுவதாகும். “உரை என்பதற்குச் சொல் சொற்பொருள், அறிவுரை, பழிப்புரை, பொன், நூல், புகழ், மாற்று, எழுத்தின் ஒலி, புகழுரை, விரிவுரை, விடை, ஆசிரிய வசனம், ஆகமப் பிரமாணம்”[1] போன்ற பலபொருட்களைத் தருகின்றதென்று கழகத் தமிழகராதி கூறுகிறது.

அதனோ டியைந்த வொப்ப லொப்புரை[2]

உரைத்திற நாட்டங் கிழவோன் மேன[3]

இவ்வாறு உரை என்னும் சொல் உரைத்தல், பேச்சு என்னும் பொருளில் வந்து வழங்குமாற்றை மேற்குறிப்பிட்டுள்ள தொல்காப்பிய நூற்பாக்கள் உணர்த்தி நிற்கின்றன.

உரையாசிரியர்

பல்வேறு வகைப்பட்ட இலக்கிய இலக்கண வளங்களைத் தன்னகத்தே கொண்டது தமிழ்மொழி. தமிழில் தோன்றிய பழமையான படைப்புகள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. செய்யுள் வடிவிலான பழங்கால நூல்களுக்குப் பிற்காலத்தில் உரைநடையில் விளக்கம் எழுதியவர்கள் உரையாசிரியர்கள். பண்டைத் தமிழரின் வாழ்வியற் களஞ்சியமான இலக்கிய இலக்கணங்களின் சிறப்பினை அறிவதற்குப் பெரிதும் துணை நிற்பவர்கள் உரையாசிரியர்கள். “விருப்பு வெறுப்பற்ற நிலையில் இருந்து கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு குற்றமும் குணமும் நாடி மதிப்பிட்ட திறனாய்வாளர்கள் உரையாசிரியர்கள். உரையாசிரியர்கள் பிறர் கருத்தை மதிப்பதிலும், நடுவுநிலைமையோடு பொருள் உரைப்பதிலும் கண்ணுங் கருத்தும் உடையவர்கள், மேலும் இவர்கள் புலமை முதிர்ச்சியும், பன்னூற் பயிற்சியும் உடையவர்களாகத் திகழ்கின்றனர்”[4] என்று மு.வை. அரவிந்தன் குறிப்பிடுகிறார்.

தமிழ்மொழியின் சிறப்பினை உலகறியச் செய்த பெருமை பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கணங்களுக்கு உண்டு. இத்தகைய சிறப்புடைய பண்டைய நூல்களை ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் உலக மக்களிடையே உயிர்ப்புடன் வாழச்செய்த பெருமையும் மேன்மையும் உடையவர்கள் உரையாசிரியர்கள்.

கணேசையரின் உரைத்திறன்

கணேசையரின் பணியையும் ஆக்கப் பூர்வமான செயல்திறன்களையும் உற்றுநோக்கும்பொழுது அவருடைய உரைமுயற்சிகள் சிறப்பானவையாகவும் தனித்துவமுடையவையாகவும் காணப்படுகின்றன. கணேசையர் பாரம்பரிய மரபுவழி உரையாசிரியராகக் காணப்படுகின்ற அதே வேளையில் இருபதாம் நூற்றாண்டிற்குரிய எளிய உரைநடையைக் கையாண்டவராகவும் காணப்படுகின்றனர். ஈழநாட்டின் உரையாசிரியர் என்ற வகையுள் கணேசையரின் திறமையையும் ஆற்றலையும் புலப்படுத்துவனவாக அகநானூற்று உரை அமைகின்றதெனலாம். இவருக்குப் பிற நூல்களை ஒப்பிட்டு ஆராய்வதிலும் ஆழ்ந்து படித்தலிலும், படிப்பித்தலிலும் இருந்த ஆர்வத்தினை இவரது உரைகள் காட்டி நிற்கின்றன.

கணேசையரின் அகநானூற்று உரை சிறப்புற அமைந்தமைக்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று கணேசையர் குமாரசாமிப் புலவரிடம் பெற்ற பயிற்சியும் புலவரை ஒத்த அவரது பாணியும் இரண்டாவது கணேசையர் தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து விளக்கக் குறிப்புரைகள் எழுதிய பின்பு அகநானூற்றுக்கு உரையெழுதியமையாகும். கணேசையருக்குப்            பொருளிலக்கணத்திலிருந்த புலமை முதிர்ச்சியை இவரது அகநானூற்று உரைகளில் பரக்கக் காணலாம்.

அகநானூற்றுச் செய்யுட்களுக்குக் கணேசையர் மிக நேர்த்தியான உரையை எழுதியுள்ளார். கல்வியில் விருப்புடைய மாணவர்களைக் கருத்தில் கொண்டு கருத்துத் தெளிவிற்காக அடைப்புக் குறிக்குள் மேலதிகமான விளக்கங்கள் தந்துள்ளமை கணேசையர் கையாண்ட சிறப்பான வழிமுறையாகும். நீண்ட காலமாக ஆசிரியராக இருந்த அனுபவம் முழுவதும் கணேசையருக்கு உரையெழுதும் போது உதவியிருக்கின்றது எனலாம். கணேசையரின் அகநானூற்று விரிவுரையைப் பின்வருமாறு பகுத்துக் கூறலாம்.

  • சொற்பொருள் விளக்கம்
  • இலக்கணக் குறிப்புகள்
  • உள்ளுறை சுட்டல்
  • இறைச்சி சுட்டல்
  • உரை முரண்கள் சுட்டுதல்
  • மேற்கோள் காட்டுதல்
  • தனித்துவத் துலங்கல்

சொற்பொருள் விளக்கம்

கணேசையர் தமது அகநானூற்று உரையில் இதன் பொருள் என்று குறிப்பிட்டு முதலில் பதவுரையே எழுதுகின்றார். (பதம் – சொல்) அதாவது சொல்லுக்கு ஏற்ற பொருளையே முதலில் எழுதுகின்றார். செய்யுளின் முழுமையான பொருட் புலப்பாட்டிற்கேற்ப எழுவாய் எடுத்துக் கொண்டுகூட்டிப் பொருள் விளக்கம் செய்கின்றார்

பொருள் விளக்கத்தின் பொருட்டுச் சொற்பொருள் இலகுவாக விளங்கும் பொருட்டுப் பதங்களைப் பிரித்துக் காட்டிய பின்னரே சொற்களின் பொருளைக் கூறுகின்றார். இவரது பதவுரை சொல்லோடு பொருளாக அமைகின்றதோடு மட்டுமல்லாமல் செய்யுள் சுட்டும் திரண்ட பொருளை வெளிக்கொணர்வதாகவும் அமைகின்றது. செய்யுளின் பொருட் பொருத்தத்திற்கு இயைபாக ஒருசொல் ஒன்றிற்கும் மேற்பட்ட பொருளில் வழங்குமாற்றை குறிப்பிட்டு விளக்குவது இவரது சொற்பொருள் கூறும் தன்மையின் இயல்பாகக் கொள்ளலாம். சான்றாக,

தைஇ – கைசெய்தல் : ஒப்பனை செய்தல்

படியார் – கீழ்ப்படியாதவர் : வணங்காதவர்

வார்தல் – ஒழுகல் : ஈனுதல்

உன்னம் – உண்ணுதல் : நினைவு

என்பதைக் காட்டலாம். இவ்வாறு பல்வேறிடங்களில் சொற்பொருள் கூறிச்செல்கிறார்.

இலக்கணக் குறிப்புகள்

இலக்கியத்திற்கு இலக்கணம் இயம்பல் என்னும் மரபிற்கிணங்க இலக்கிய நூலொன்றிற்கு இலக்கண வழிநின்று உரையெழுதும் தன்மையை இவரது உரையில் காணமுடிகிறது. செய்யுளின் திரண்ட பொருளை ஐயந்திரிபுற மயக்கமில்லாமல் விளக்கும் பொருட்டே இவர் இலக்கணக் குறிப்புகளைக் கூறிச் செல்கிறார். இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் இடையேயான இறுக்கமான தொடர்பினைக் கண்டறிந்து மிகச் சிறந்த முறையில் விளக்கியுரைத்துள்ளார். சான்றாக,

முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு

பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ    அகம்-4

எனும் பாடலடியைக் காட்டலாம். இப்பாடலில் இல்லத்தையும், கொன்றையையும் ஆகுபெயராக்கிக் கொண்டு அவற்றின் மொட்டுக்கள் என சினைக்காக்கி அவை மெல்லிய பிணிப்பு (கட்டு) விட்டு விரிய எனப் பொருள் கோடல் சிறப்பாகும் என்று ஐயர் குறிப்பிட்டுள்ளார். இங்குக் கணேசையர் குறிப்பிடும் இல்லத்தை என்பது தேற்றா மரத்தின் மொட்டுக்களை ஆகும். இவ்வாறு இல்லத்தையும் கொன்றையையும் ஆகுபெயராகக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும் என்று இலக்கணம் குறித்த மிகத் தெளிவான விளக்கத்தைத் தருகின்றார்.

உள்ளுறை சுட்டல்

அகப்பாடல்களின் உயிராக அமைவது உள்ளுறையாகும். இவ்வுள்ளுறை குறித்துக் குறிப்பிடும்பொழுது கணேசையர் பெரும்பாலும் குறிப்புரைகாரரையும் வேங்கடசாமி நாட்டாரையும் ஒத்தே குறிப்பிட்டுச் செல்வதைக் காணமுடிகிறது. கணேசையரின் அகநானூற்றுரையில் இருபதுக்கும் மேற்பட்ட உள்ளுறைகளைக் காணலாம். சான்றாக,

எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்து

பொரிஅகைந் தன்ன பொங்குபல் சிறுமீன்

வெறிகொள் பாசடை உணீஇயர் பைப்பயப்

பறைதபு முதுசிரல் அசைபு வந்திருக்கும்     அகம் -106

எனும் பாடலடியைக் காட்டலாம். இச்செய்யுளுக்கு விளக்கமளிக்குமிடத்து முதுமையால் பறக்கமாட்டாத சிரல் மீனுக்கு அண்மையில் பாசடை மீதிருந்தும் அதனைக் கவர மாட்டாமலும் ஏனை இளஞ்சிரல் கவர்தற்குப் பொறாமலும் இருத்தல் போல, முதுமையால் எழுச்சி குன்றிய தலைவி தன் மனையகத்தே கணவனைக் கொண்டிருந்தும் அவனை வளைத்துக்கொள்ள மாட்டாமலும், ஏனை இளம் பருவமுடையார் தழுவதற்குப் பொறாமலும், இருக்கின்றாள் என்று இச்செயுளடியில் இடம்பெறும் உள்ளுறையை மிகப் பொருத்தமான முறையில் கூறிச் செல்கிறார்.

உரை முரண்கள் சுட்டுதல்

அகநானூற்றிற்கு எழுந்த உரைகளை நன்கு கற்று அவற்றிலே பொருந்தாத இடங்களைத் தமது உரையில் கணேசையர் குறிப்பிட்டுள்ளார். இவர் பொருந்தா உரைகளைச் சுட்டுமிடத்து ‘என்றல் சிறப்பின்று’ அத்துணைச் சிறப்பின்று’‘எனப் பொருள் கோடல் சிறப்பாகும், என்றிருப்பதே நலம், என்பன போன்ற தொடர்களைக் கையாண்டே உரைமுரண்களைச் சுட்டுகிறார். சான்றாக,

எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென

வம்பு விரித்தன்ன பொங்குமணற் கான்யாற்று          அகம்-11

எனும் செய்யுளைக் காட்டலாம். இச்செய்யுளில் வரும் ‘வம்பு’ என்னும் சொல்லிற்கு வேங்கடசாமி நாட்டார் கொண்ட பொருளின் பொருத்தமின்மையைப் பின்வருமாறு கணேசையர் சுட்டிக்காட்டுகிறார். ‘வம்பு என்பதற்குக் கச்சு எனப் பொருள் கூறுவாருமுளர். அது அத்துணை இயைபின்று’என்று பொருள் கூறிய கணேசையர் ‘வம்பு’ என்பதற்குக் கச்சு’என்று பொருள் கூறியிருப்பது பொருந்தாது என்று குறிப்பிடுகிறார். மேலும் வம்பு என்பதற்குக் கணேசையர் ‘புதிது’ என்று பொருள் கூறிச் செல்கிறார். இவ்விடம் நோக்குமிடத்து கணேசையர் குறிப்பிடுவதே சரியாகத் தோன்றுகிறது. ஏனெனில்,

வம்பே நிலையின்மை   (தொல்.சொல்.உரி.327)

என்கிறது தொல்காப்பியம். மேலும்,

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை

கல்பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய

பருவம் வாரா அளவை நெரிதரக்

கொம்புசேர் கொடிஇணர் ஊழ்த்த

வம்ப மாரியைக் காரென மதித்தே[5]

எனும் இந்தக் குறுந்தொகைப் பாடல்களில் வம்ப மாரி என்பதற்குப் புதிதாகப் பெய்த மழையைப் பார்த்துக் கொன்றைமரம் கார்காலம் வந்துவிட்டது என்று நினைத்ததாகப் பொருள் கூறப்படுகிறது. இதே போன்று அகம் 95ஆம் செய்யுளில் ‘வம்பலர் நீரிடை அழுங்க’ என்பதற்குப் பொருளுரைக்குமிடத்துக் கணேசையரும் வேங்கடசாமி நாட்டாரும் ஒத்த கருத்துடையாவர்களாக வழிச் செல்லும் புதியோர்” என்று பொருளுரைத்துச் செல்வதையும், அகம் 100ஆம் செய்யுளில் வம்பநாரை’ என்பதற்குப் ‘புதிய நாரை’ என்று இருவருமே ஒத்த கருத்துடையவர்களாகப் பொருளுரைத்துச் செல்வதைக் காண முடிகின்றது.

மேற்கோள் காட்டுதல்

கணேசையர் தமது அகநானூற்று விரிவுரையிலே காட்டும் மேற்கோளின்வழி அவரது இலக்கண இலக்கியப் புலமையை அறிய முடிகிறது. சொற்பொருள் விளக்கம் கூறுமிடத்தும், இலக்கணக் குறிப்புகளைக் கையாளுமிடத்தும், அகப்பொருள் விளக்கத்தின் பொருட்டும் (இறைச்சி, உள்ளுறை) பாடபேதம் சுட்டுமிடத்தும் கணேசையர் எண்ணிலடங்கா மேற்கோள்களைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, திருக்கோவையார், தஞ்சை வாணன் கோவை, திருக்குறள், தொல்காப்பியம், நன்னூல் முதலியவற்றிலிருந்து பொருத்தமான மேற்கோள்களைச் சுட்டிச் செல்கிறார்.

இலக்கிய இலக்கணங்களை மேற்கோள் காட்டுமிடத்துத் தெளிவாகவும், முழுமையாகவும் விளக்கியுரைப்பதை இவரது உரையில் காணலாம். தாம் குறிப்பிடும் இலக்கிய இலக்கணத்தின் பெயர், பாடல் இலக்கம் என்றும், தொல்காப்பியம் நன்னூலாக இருப்பின் இன்ன அதிகாரம், இன்ன இயல், இன்ன இலக்கம் என்றும் மிகத் தெளிவாக அடைப்புக் குறிக்குள்ளே தருவது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக அமைகிறது.

முடிவுரை

கணேசையரின் அகநானூற்று விரிவுரையானது முதலில் இதன் பொருள் என்று குறிப்பிட்டுப் பதவுரை கூறிச் செல்வதாக அமைந்துள்ளது. இவரது உரையில் சொற்பொருள் விளக்கம், இலக்கணக் குறிப்புகள், இறைச்சி, உள்ளுறை சுட்டல், உரை முரண்கள், பாடபேதங் காட்டுதல், மேற்கோள் காட்டுதல், பண்பாடு பற்றிய செய்திகள் முதலானவை இடம்பெற்றுள்ளன. கணேசையர் உரைமுரண்களைச் சுட்டுமிடத்தும், பாடபேதங்களைக் குறிப்பிடுமிடத்தும் பெருமளவில் இவர் இலக்கணச் செல்நெறியையே கையாளுகிறார். விளக்கமாகவும், நுட்பமாகவும், மிகவும் நேர்த்தியான முறையிலும் இலகக்கணக் குறிப்புகளைத் தந்து இவர்தம் உரையைச் செம்மைப்படுத்துகின்றார். அகப்பாடல்களின் உயிராக அமையும் திணை, துறை, உள்ளுறை, இறைச்சி, மெய்ப்பாடு முதலியவை பற்றித் தெளிவான கருத்தினை ஐயர் கொண்டிருந்தார் என்பதை இவரது அகநானூற்று உரை தெளிவாகக் காட்டி நிற்கிறது. கணேசையரின் உரைப்போக்கானது உரை தொடர்பான பல செறிவான செய்திகளைப் பெறவும், எதிர்கால ஆய்வாளர்கள் உரை தொடர்பான மீளாய்வை மேற்கொள்ளவும் வழிவகுக்கிறது.

[1] ச.மெய்யப்பன், கழகத்தமிழகராதி.

[2] தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, வேற்று.நூ.74.

[3] தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, அகத்.நூ.41.

[4] மு.வை. அரவிந்தன், உரையாசிரியர்கள்.

[5] குறுந்தொகை 66.

மு.கனிக்குமார்,

முனைவர்பட்ட ஆய்வாளர்,

அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை,

தமிழ்ப் பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர்.