ஆய்வுச்சுருக்கம்

இன்றைய உலகில் விஞ்ஞான தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மனிதனின் அத்தியாவசிய  தேவைகளுக்கு பயன்பட்டாலும் அதன் வரம்பு மீறிய செயல்கள் மக்கள் மத்தியில் ஒழுக்கமீறல்களை ஏற்படுத்தியுள்ளது.  இதன் காரணமாகவே  பிரயோக ஒழுக்கவியலின் தோற்றம் இடம் பெற்றது. பிரயோக ஒழுக்கவியலின் வகைகளில் ஒன்றான  வைத்தியவியலில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களினால் கருமாற்றங்களும், கருத்தடைகளும் புதிதாக வெற்றியளித்துள்ள போதிலும்  கருத்தடை முறைகள் மூலம் இனப்பெருக்கம் தடை செய்யப்படுகிறது. ஆனாலும் இன்றைய நிலையில் நம்பகமான கருத்தடை முறைகள் மூலமாக பாலியலும் இனப்பெருக்கமும் வேறுபடுத்தப்பட்டுள்ளது. அதுவே செயற்கைக் கருத்தரிப்பு முறை ஆகும். இம் முறை குழந்தை பேறில்லாத தம்பதியினருக்கு  நடைமுறைத் தீர்வாக உள்ள போதிலும்    பல்வேறு வழிகளிலும் உளவியல் ரீதியிலான தாக்கங்கள் இடம்பெறுகின்றன.

திறவுச்சொற்கள்

செயற்கை முறைக் கருக்கட்டல் ,    உளவியல் தாக்கங்கள்

1.1 ஆய்வுத்தலைப்பு

செயற்கைமுறை  கருக்கட்டலினால் ஏற்படும் தாக்கங்கள்  :  ஓர் உளவியல் நோக்கு

1.2 ஆய்வு  அறிமுகம்

செயற்கை முறையிலான கருக்கட்டல் என்பது இயற்கையான முறையில் கருத்தரிக்க  தாமதிக்கும் தம்பதிகளுக்கு சிகிச்சைகள் மூலம் விந்தணுவையும், சூல்முட்டையையும் சேரவைத்துக் கருக்கட்டலுக்கு உதவும் முறை ஆகும். செயற்கை முறையிலான கருக்கட்டல் மூன்று முறைகளில்  மேற்கொள்ளப்படும்.

1.2.1  செயற்கைக் கருத்தரிப்பு முறையின் வகைப்பாடுகள்

 1. IUI – INTRAUTERINE INSEMINATION (கருப்பையகமான கருவூட்டல் முறை )
 2. IVF – IN VITRO FERTILISATION; (ஆய்வு கூடச்சோதனை முறை மூலமான கருத்தரித்தல் முறை)
 3. ICSI – INTRA – CYTOPLASMIC SPERM INJECTION (குழிய முதலுருவுக்குரிய விந்து ஊசி உட்செலுத்தும் முறை )
 4. 1. IUI – INTRAUTERINE INSEMINATION (கருப்பையகமான கருவூட்டல் முறை )

திருமணமாகி குறுகிய காலத்தில் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு இம்முறை சிறந்ததாகும். இம்முறையின்  வெற்றிக்கு ஒழுங்கான சூல் முட்டை வளர்ச்சி, அடைப்புகள்  இல்லாத பலோப்பியன் குழாய், கருவை தாங்கக்கூடிய கருப்பை போன்றன அவசியம்.

 (IUI) முறையின் படிமுறைகள்

பெண்களுக்கு கருமுட்டை உருவாகுவதற்கான மருந்துகளைக் கொடுத்து அதனூடாக அவர்களுக்கு    Ovulation  (  அண்டவிடுப்பு) இ னைத் தூண்டுதல்.

 • கணவனின் விந்தை எடுத்து சுத்தப்படுத்திப் பெண்ணின் கருப்பையினுள் செலுத்துதல்.
 • மருந்துகள் சிகிச்சைகள் மூலம் சூல் முட்டையின் வளர்ச்சியைத் தூண்டி பன்னிரண்டு நாட்களில் Scanning முறை மூலம் சூல் முட்டையின் பருமனை அறிதல்.
 • சூல்முட்டையின் பருமன் (18-20mm) ஆக இருந்தால் ஹேர்மோன் ஊசியை வழங்கி முட்டையினை வெளியேற்றுதல்.
 • 36மணித்தியாலயங்களில் விந்துக்களை செறிவாக்கி ஊசி மூலம் கருப்பையினுள் செலுத்துதல். சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுதல்.
 1. IVF – IN VITRO FERTILISATION (ஆய்வு கூடச்சோதனை முறை மூலமான கருத்தரித்தல் முறை )

நீண்டகாலமாகக் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினருக்கு இம்முறை பொருத்தமானது. அதாவது  பலோப்பியன் குழாய்கள் இரண்டும் முற்றாக அடைக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்களுக்கும், விந்தணுக்கள் குறைவான ஆண்களுக்கும், IUI முறையினை பல தடவைகள் மேற்கொண்டு தோல்வியடைந்தவர்களுக்கும் இம்முறை சிறந்தது. உடலுக்கு வெளியே ஆய்வு கூடத்தில் பெண்ணின் முட்டையினைச் சினைப்படுத்தி அதனால் உண்டாகும் கருவைக் கருப்பையில் பதித்து இயற்கையாக வளரச் செய்யும் முறை இதுவாகும். அதாவது  ஓர் ஆணின் விந்தணுவையும் பெண்ணின் கரு முட்டையையும் ஒன்றாகச் சேர்த்து ஆய்வுகூடத்தில் கருத்தரிக்கச் செய்யும் முறை இதுவாகும்.

  (IVF)  முறையின்  படிமுறைகள்

 • நன்கொடையாளருடைய ஆரோக்கியமான விந்தணுவை எடுத்தல்
 • விந்தணுவைக் கண்ணாடிப்பாத்திரத்தினுள் இடுதல்.
 • ஆய்வுகூடப் பரிசோதனை
 • கருவுற்ற பெண்ணின் முட்டைகளைப்  பெண்ணின் கருப்பைக்குள் ஊசி மூலம் செலுத்துதல்.
 • கருப்பைச் சுவரில் பதித்;து வெற்றிகரமாக ஒரு கருவாக வளர்வதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுதல்.
 1. ICSI – INTRA – CYTOPLASMIC SPERM INJECTION (குழிய முதலுருவுக்குரிய விந்து ஊசி உட்செலுத்தும் முறை

ICSI ( குழிய முதலுருவுக்குரிய விந்து ஊசி உட்செலுத்தும் முறை ) முறையிலான கருக்கட்டல் என்பது ஒரேயோரு ஆரோக்கியமான விந்தணுவைத் தேர்ந்தெடுத்துக்  கருப்பையினுள் செலுத்தும் முறை இதுவாகும்.

1.2.2  செயற்கை முறை  கருத்தரிப்பின் முக்கிய  படிமுறைகள்

 1.    கருமுட்டை சேகரித்தல்
 2.    கருவாக மாற்றுதல்
 3.   கருவை உட்செலுத்தல்
 4. கருமுட்டை சேகரித்தல் செயற்பாடுகள்
 • பெண்ணை நேராகப் படுக்க வைத்தல்.
 • பெண்ணின் கர்ப்பப்பை, முட்டைப்பைகளை SCAN மூலம் கண்டறிதல்.
 • பெண்ணின் முட்டைப் பைகளுக்குள் இருக்கும் Follicle ( நுண்ணறை) களைக் கண்டறிந்து அதனுள் இருக்கும் கருமுட்டையை கண்டறிதல்.
 • ஊசி மூலமாக Follicle (நுண்ணறை)  இல் இருக்கும்  கருமுட்டையைச்  சேகரித்தல்.

 

 1. கருவாக மாற்றும் செயற்பாடுகள்
 • தம்பதியினரின் முழு சம்மதத்துடன் தானம் செய்பவரின் விந்தணுவைச் சேகரித்தல்.
 • சேகரிக்கப்பட்ட ஆணின் விந்தணுவுடன் கருமுட்டைகளைச் சேர்த்துக் கருவாக மாற்றுதல்
 • கருமுட்டையினுள் விந்தணுவைச் செலுத்துதல்.
 • விந்தணுவை உட்செலுத்தியதும் கரு இரட்டிப்பான முறையில் மாற்றமடைதல்.
 • தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கருவின் வளர்ச்சி கண்காணிக்கப்படுதல்.
 • நன்கு வளர்ந்த கருவை பெண்ணின் கருப்பையினுள் செலுத்துதல்.

 

 1. கருவை உட்செலுத்தும்  செயற்பாடுகள்
 • பெண்ணின் யோனியில் கர்ப்பப்பை வாசலைக் கண்டறிதல்.
 • சிறிஞ் மூலம் கருவை கர்ப்பப்பையினுள் செலுத்துதல்.
 • 15 நாட்களுக்குப் பின்னர் இரத்தப்பரிசோதனை செய்து கொள்ளுதல்.
 • 30 நாட்களுக்கு பின்னர் Scanமுறை மூலம் குழந்தை கருவில் இருக்கிறதா? குழாயில் இருக்கிறதா? என்பதனைக் கண்டறிந்து சிகிச்சைகளை மேற்கொள்ளுதல்.

1.3  ஆய்வுப் பிரச்சினைகள்

 1.   சம்பிரதாய நடைமுறைகளுக்கு முதன்மை கொடுக்கும் சமூதாயத்திற்கு இம்முறை     பொருத்தமற்றதாக  உள்ளமை.
 2.   செயற்கைக்குழந்தைப் பேற்றினால் உருவாக்கப்பட்ட குழந்தைக்கும், தாய், தந்தையருக்குமிடையில் அன்னியோன்னிய உறவு கட்டியெழுப்பப்படாமை.
 3. செயற்கைக் கருத்தரிப்பினால் உருவாக்கப்பட்ட  குழந்தையால் குடும்பத்தின்   பரம்பரை அலகுகளில் (DNA )  மாற்றங்கள் ஏற்படல்.
 4.  செலவு அதிகம்.

1.4  ஆய்வு நோக்கங்கள்

 1. செயற்கைக் கருக்கட்டல் முறையினை அறிமுகப்படுத்தலும், அதன் வகைகள் மற்றும்   செயற்பாடுகளை இனங்காணுதலும்.
 2. செயற்கைக் கருக்கட்டலின் முறையினால் உருவாக்கப்பட்ட குழந்தை சமூதாயத்தில் எதிர்கொள்ளும் சவால்களைக்  கண்டறிதல்.
 3.   செயற்கைக் கருக்கட்டல்  செயன்முறையின் போது நிகழும் உளவியல் ரீதியிலான தாக்கங்களைக்  கண்டறிதல்.
 4. செயற்கை கருக்கட்டல் செயன்முறையின்  பின்னரான உளவியல் ரீதியிலான தாக்கங்களைக் கண்டறிதல்.

1.5 ஆய்வின் முக்கியத்துவம்

 1. இன்றைய நிலையில் திருமணமாகி நீண்டகாலமாகக் குழந்தைப் பேறில்லாத தம்பதியினர் சமூகத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கும், உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இத்தகைய தம்பதியினருக்கு இம்முறை சிறந்த தீர்வாகும்.
 2. விN~ட திறன்களையுடைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இம்முறை பொருத்தமானது.
 3. உடலுறவை விரும்பாத தம்பதிகளுக்கு ஏற்புடையது.

1.6 ஆய்வு முறையியல்

இவ் ஆய்விற்கான தரவுகளும், தகவல்களும் இரண்டாம் நிலைத்தரவுகள் மூலம் பல்வேறு வழிகளில் சேகரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத்தரவுகள் என்பது ஏற்கனவே திரட்டப்பட்டு வெளியிடப்பட்டவையாக உள்ளவை ஆகும். அந்தவகையில் இணையத்தளம் மூலம் பெறப்பட்ட  தரவுகள், தகவல்களைப்  பயன்படுத்தியே  இவ் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1.7 ஆய்வுக் கருதுகோள்

செயற்கைக் கருத்தரிப்பு மகப்பேற்றிற்கு  சிறந்த முறையாக இருந்தாலும்  அதிக அளவிலான  உளவியல்   தாக்கங்களுக்கும் இம் முறையே காரணமாகவும் உள்ளது.

1.8  தரவின் பகுப்பாய்வும் வியாக்கியானமும்

செயற்கைக் கருத்தரிப்பினால் இரண்டு நிலைகளில் உளவியல் ரீதியிலான தாக்கங்கள் இடம்பெறுகின்றன.

1.8.1 செயற்கைக் கருக்கட்டல்  செயன்முறையின் போது நிகழும் உளவியல் ரீதியிலான தாக்கங்கள்

1.8.2 செயற்கைக் கருக்கட்டல் செயன்முறையின்  பின்னரான உளவியல் ரீதியிலான தாக்கங்கள்

1.8.1 செயற்கைக் கருக்கட்டலின்  செயன்முறையின் போது நிகழும் உளவியல் ரீதியிலான தாக்கங்கள்

செயற்கைக் கருத்தரிப்பின்  மூன்று முக்கிய படிமுறைகளில் (கருமுட்டை சேகரித்தல், கருவாக மாற்றுதல், கருவை உட்செலுத்தல்) குழந்தை உருவாக்கப்படும் போது குழந்தையின் உருவாக்கம் வெற்றியளிக்குமா? இல்லையா? என்ற நிலையில் தம்பதியினருக்கு இடையில் பல்வேறு வழிகளிலும் மன அழுத்தங்கள் ஆரம்பிக்கின்றன. மேலும் இந்நிலையில் இவர்கள் பல்வேறு வகையிலான உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்கு ஆளாகின்றனர்.

 • கருச்சிதைவு

செயற்கைக் கருத்தரிப்பு முறை மூலம் அதிக வயதுடைய பெண்கள் கருத்தரிக்கும் சந்தர்ப்பத்தில்  கருப்பையில் வளர வேண்டிய கரு பலோப்பியன் குழாயில் அல்லது கருப்பைக்கு வெளியில் தங்கும் தங்குவதால் கருச்சிதைவு ஏற்படும். இந்நிகழ்வு கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்திலும், கர்ப்பத்தின் போதும் ஏற்படலாம். இவ்வாறு ஏற்படுவது தம்பதியினருக்கு உளரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

 • பலகரு வளர்ச்சி

   செயற்கைக் கருத்தரிப்பு முறை மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட கருவுற்ற முட்டைகள் கருப்பையில் செலுத்தப்படும் போது இரட்டைக்கரு உருவாகும் நிலை ஏற்படும். இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் உடல், உள நலம் சார்ந்த  பிரச்சினைகளைத்  தோற்றுவிக்கும்.

 • சினைப்பை மிகைத் தூண்டல் நோய்த் தொகுப்பு

செயற்கைக் கருத்தரிப்பு முறையில் சினைப்பை அளவுக்கு மீறித் தூண்டப்படுகிறது. இதனால் சினைப்பைகள் பெரிதாகி வலி ஏற்படும். இதன் காரணமாகப் பெண்கள் மனரீதியாகப் பல தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர்.

 • குறைப் பிரசவம்

செயற்கைக் கருத்தரிப்பு முறையில்  ஒன்றுக்கு மேற்பட்ட கருவுற்ற முட்டைகள் பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட கரு உருவாகும். இதனால் குறைப்பிரசவத்தில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை உருவாகும். இது குழந்தையின் நிறையிலும், வளர்ச்சியிலும் தாக்கத்தைச் செலுத்தும். மேலும்  ஒன்றுக்கு மேற்பட்ட கருக்களைக் பெண்கள் கருப்பையில் சுமப்பதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மகப் பேற்றின் போதான வலிப்பு முதலான பல்வேறு வகையிலான பாதிப்புக்களை அதிகம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இதனால்  இரும்புச்சத்துக்  குறைபாடு, இரத்தச்சோகை முதலியன  நோய்கள் ஏற்படும்.

 • விN~ தேவையுடைய குழந்தைகள்

செயற்கைக்  கருத்தரிப்பு முறையினால் விN~ட தேவையுடைய குழந்தைகள் பிறக்கின்றன. மேலும் இம்முறை மூலம் உருவாக்கப்படும் ஆண் குழந்தைகள் தரம் குறைந்த விந்தணுவினாலும் பாதிப்படைகின்றன. இத்தகைய செயற்பாடுகள் உளவியல் ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

 • நோய்த் தொற்றுக்களால் உளரீதியாக பாதிப்படைதல்

செயற்கைக் கருத்தரிப்பு முறையினால் கரு இடமாற்றப்படுவதனால் நோய்த் தொற்றுக்கள் அதிகளவில் ஏற்படுகின்றது. இந்த நோய்த் தொற்றுக்களால் தாய்  மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுவார்.

1.8.2 செயற்கைக் கருக்கட்டல் செயன்முறையின்  பின்னரான உளவியல் ரீதியிலான தாக்கங்கள்

செயற்கைக் கருத்தரிப்பு முறை மூலம்  குழந்தை உருவாக்கப்பட்ட பின்னர் குழந்தை உட்பட இம்முறையினை நாடும் தம்பதியினர். பல்வேறு வகையிலான உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்கு ஆளாகின்றனர்.

 • தந்தை உயிரியல் தந்தை என்கின்ற தகுதியினை இழத்தல்

நன்கொடையாளருடைய விந்தினால் மனைவி குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் போது தந்தை குழந்தையின் உயிரியல் தந்தை என்ற தகுதியினை இழக்கின்றார். அதாவது குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு இரண்டு  தந்தைகள் (சமூகத்தந்தை , உயிரியல் தந்தை) இவர்களில்  குழந்தை எவரைத் தந்தையாக அழைப்பது? விந்தினை வழங்கியவரையா? அல்லது சமூகத் தந்தையையா? என்ற ஒழுக்க ரீதியான பிரச்சினைகள் இம் முறையில் அதிகம் இடம்பெறும். இதனால் இது தந்தை பிள்ளை உறவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

 • தாய்மை இரு கூறாக்கப்படுதல்

செயற்கைக் கருத்தரிப்பு முறை மூலம் பெண்ணிற்குக் கணவனின் விந்து செலுத்தப்பட்டாலும் குழந்தையைப் பெற்றெடுப்பவள் அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு பெண்ணாகும். இங்கு தாய்மை இரு கூறாக்கப்படுகின்றது.  இந்நிலையில்  குழந்தை பெற்றெடுத்தவளுக்கா? அல்லது  சமூகத் தாய்க்கா?  என்ற கேள்வி எழுகின்றது. இது தற்போது உள்ள குடும்ப அமைப்பிற்கு சவாலாக அமைந்துள்ளதோடு சொத்துரிமையிலும், தாய் தந்தை மரபிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

 • பாலியல் உறவு

செயற்கைக் கருத்தரிப்பு முறை உடல் உறவை அவசியமற்றதாக்கியுள்ளது. ஏனெனில்  இன்றைய உலகில் மகப்பேறு வியாபார நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுவதோடு விந்து வங்கிகளில் விற்பனை செய்யப்படுகிறது.  இவ்விந்தினைச் செயற்கைச் சினைப்படுத்தலின் மூலமாகப் பெண்ணிற்குச் செலுத்திக்  குழந்தை பெற்றுக் கொள்ளும் போது பிறக்கின்ற குழந்தைக்கு தந்தை இல்லாத நிலைமை ஏற்படும். இதனால் குழந்தை வளர்ந்து வருகின்ற போது சமூகத்தினால் பல்வேறு  பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

 • பதில் தாய் 

செயற்கைக் கருத்தரிப்பு முறைக்கு பெண்கள் ஏற்பாடு செய்யப்பட்டுப் பிறிதொரு ஆணின் விந்தின் ஊடாகக் குழந்தையைப் பெற்றெடுப்பதனால் சமூகத்தில்  பெண்கள் பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய பெண்கள் திருமண வாழ்க்கையை  வெறுப்பவர்களாகவும், விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களாகவும் விளங்குவர். இதனால் இவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி  ஓரங்கட்டப்படுவர்.

 • குழந்தைக்கு உரிமை கோருபவர் இல்லாத தன்மை

செயற்கைக் கருத்தரிப்பு முறை மூலம் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர்  பதில் தாய் ஒருவரை ஏற்பாடு செய்து குழந்தையைப்  பெற்றெடுப்பதற்கு முன்னர்த் தவிர்க்கமுடியாத காரணத்தினால் அத் தம்பதியினர் பிரிந்தால் அக்குழந்தை யாருக்குச் சொந்தமானது? என்ற கேள்வி எழுகின்றது. இதனால்  குழந்தைக்கு உரிமை கோருபவர் இல்லாத தன்மை  ஏற்படும். இந்நிலை குழந்தையின் எதிர்காலத்தில் தாக்கத்தை செலுத்தும்.

 • விந்திற்கு உரிமை கோருபவர் இல்லாத தன்மை

விந்து வங்கியில் பாதுகாப்பாக வைப்புச் செய்யப்பட்டுள்ள கணவனின் விந்தினைக் கணவன் இறந்த பின்னர்  மனைவி தனக்குரியதென உரிமை கோரி அதன் மூலம் குழந்தையினைப் பெற்றுக் கொள்வதனால் பிறக்கின்ற குழந்தைக்கு தந்தை இல்லாத குறை ஏற்படுகின்றது. இது   உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்கு  வழிவகுக்கின்றது.

 • குழந்தையின் வளர்ச்சியும்சமூதாய பார்வையும்

சம்பிரதாய நடைமுறைகளை மீறி செயற்கைக் கருத்தரிப்பு முறையால்  உருவாக்கப்பட்ட குழந்தை சமூதாயத்தோடு இணைந்து வாழும் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் உளவியல் தாக்கங்களுக்கு முகம் கொடுக்கின்றது.  இது குழந்தையின் கல்வி, நடத்தைகள், உரிமைகள், எதிர்காலம் முதலியனவற்றில் செல்வாக்குச்  செலுத்துகிறது.

 • செலவு அதிகம்

செயற்கைக் கருத்தரிப்பு முறை மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கான  செலவு அதிகமாக உள்ளமையால் ஏழைகளுக்கு இம்முறை சாத்தியமற்றது. இதனால் ஏழைகள் உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர்.

1.9   முடிவுரை

ஒரு சந்ததியின் இருப்பினைத் தீர்மானிக்கும்  பிரதான காரணிகளுள் ஒன்றாகக் குழந்தைப்பேறு உள்ளது. திருமணமான தம்பதிகளுக்குக் குழந்தைப்பேறு இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்களின் சந்ததி கேள்விக்குறியாகிறது. இந்த நிலையில் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் அதீதமான வளர்ச்சியினால் செயற்கை முறை மூலமான கருக்கட்டல் குழந்தைப்பேற்றினை சாதகமாக்கியுள்ளது. எனினும் இம்முறையால் பல்வேறு வகையிலான உளவியல் தாக்கங்கள் ஏற்படுவதோடு,  ஆராக்கியமான குழந்தையினை இம் முறை மூலம் பெற்றுக்கொள்ளலாமா? என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே திருமணமாகிக் குழைந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் இம் முறையினை நாடுவதனால் பல்வேறுபட்ட உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாவதை வெளிப்படையாகக் காணலாம்.

1.10   துணைநின்றவை

திரவியராசா நிரஞ்சினி

முதுகலைமாணி

பேராதனைப்பல்கலைக்கழகம்

இலங்கை.

[email protected]

&

மா. யோகராஜ்

முதுகலைமாணி

பேராதனைப்பல்கலைக்கழகம்

இலங்கை.

[email protected]