தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் என்பனவற்றைச் சிலவாயிரம் ஆண்டுகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் நீள்மரபுத் தொடர்ச்சி கொண்டு வாழ்ந்த பல இனக்குழுக்களின் வாழ்நிலை ஆவணங்கள் எனலாம். அச்சிலவாயிரம் ஆண்டுகால இடைவெளியில் ‘நாடுபிடித்தல்’ என்ற போரியல் நடவடிக்கைகளன்றிப் பண்பாட்டுப் படையெடுப்புகளும் மிகுதியாக நிகழ்ந்துள்ளன. வேட்டைச் சமூகம், இனக்குழுச் சமூகம், வேளாண் சமூகம், நிலவுடைமைச் சமூகம், வாரிசு சொத்துரிமைச் சமூகம், அரசுருவாக்கம் என்ற சமூகப் படிநிலை வளர்ச்சியினை ஆங்காங்குச் சங்க இலக்கியங்கள் பரவலாகச் சுட்டிச் செல்கின்றன. தமிழ்ச் செவ்வியல் நூல்களில் சிலவற்றில் மட்டுமே கூட்டுப் புலமைத்துவ சிந்தனை மரபு [school of thought] காணப்பெறுகின்றன எனக் கருத இடமுண்டு. ஏனைய பல செவ்வியல் தொகுப்புப் பனுவல்களில் கூட்டுப் புலமைத்துவ சிந்தனை மரபற்ற இனக்குழுக்களின் வாழ்நிலை விழுமியங்கள் தனித்து அடையாளப் படுத்தப் பெற்றுள்ளன. அரிய சில இனக்குழுக்களின் பல பண்பாட்டு அசைவுகள் ஆய்வாளர்களால் வெளிக்கொண்டு வரப்பெறாமல் சங்க இலக்கியங்களை ஒரே வெற்றுத்தளத்தில் வைத்து நோக்கி ஆய்வு செய்து வருவதென்பது தமிழியல் ஆய்வுக்குறை. மூலநூலான தொல்காப்பியத்தில் குறிக்கப்பெற்ற சொற்பயன்பாடுகள், வழக்காறுகள், பொருள்கொள்ளல் முறைமைகள், தொல் சடங்குமுறைகள், பண்பாட்டுக் கூறுகள் பல செவ்வியல் பிரதிகளில் காணப்பெறாமல் விடுபட்டமை அல்லது காலவட்டத்தில் திரிக்கப் பெற்றமை இதற்குத் தக்க சான்று. குறிப்பிட்ட பனுவல் புனையப்பெற்ற காலத்திற்கும் அப்பனுவலுக்கு உரையெழுந்த காலக்கட்டத்திற்கும் உண்டான சமூகவியல் வேறுபாடறியாமல் ஆய்வுகளை நகர்த்திச் செல்லும் சில ஆய்வாளர்களால் சில தவறான வரலாற்றுக் கருத்துகள் முன்வைத்துச் செல்லப் பெறுகின்றன. இவ்வகையில் பரத்தை, பரத்தமை, காமக்கிழத்தி என்ற சொல்லாடல்கள் குறித்த சமூக வரலாற்றுப் பார்வையினை இலக்கண, இலக்கியப் பதிவுகள் வழி ஆய்வு செய்யும் முகமாக இக்கருத்துரை அமைகின்றது.

பரத்தமை

     பரத்தை, காமக்கிழத்தி, பரத்தமை குறித்துப் பலவாறான விளக்கங்கள் முன்வைக்கப் பெறுகின்றன. தொல்காப்பியர் பரத்தையரின் பெயர்க்காரணம், வகைகள் குறித்துச் சுட்டவில்லை. பரத்தையர், காமக்கிழத்தியர் என இரு பெயர் கொண்டு வழங்குகின்றார். கற்பில் கூற்று நிகழ்த்துவோரில் ஒருவராகப் பரத்தையரைக் குறிக்கின்றார்.  காமக்கிழத்திக்கெனத் தனியே நூற்பா ஒன்றும் வகுத்துள்ளார். பரத்தையர், காமக்கிழத்தியர் இவ்விருவரையும் தொல்காப்பியர் ஒருவராகக் கருதுகின்றார் என எஸ்.சிதம்பரம்பிள்ளை தம் ஆய்வேட்டில் குறிக்கின்றார். பரத்தையர் யார் எனவும் எத்தனை வகைப்பட்டவர்கள் எனவும் உரையாசிரியர்கள் சில விளக்கங்களை முன்வைத்துச் சென்றுள்ளனர்.

பரத்தையர் யாரெனின் அவர் ஆடலும் பாடலும் வல்லாராகி அழகும் இளமையும் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர்மாட்டும் தங்காதார்

என இளம்பூரணர் குறிப்பர்.

அவர் கூத்தும் பாட்டும் உடையவராகியவரும் சேரிப்பரத்தையரும் குலத்தின்கண் இழிந்தோரும் அடியவரும் வினைவல பாங்கினரும் ஆவார்கள்

என நச்சினார்க்கினியர் குறிப்பர். இவ்விளக்கத்தைத் தொடர்ந்து ஒத்த கிழத்தியர், இழிந்த கிழத்தியர், வரையப்பட்டோர் எனப் பாகுபடுத்தி ஒத்த கிழத்தியர் என்பவள் தம் குலத்தைச் சார்ந்தவள்; இழிந்த கிழத்தியர் என்பவள் தம் குலத்தைவிட இழிவானவள்; வரையப்பட்டோர் என்பவள் கணிகை குலத்தைச் சேர்ந்தவள் என்றும் விளக்கமளிக்கின்றார். பரத்தையர்கள் தலைவனோடு தேரில் சென்று நீராடுதலும் அவனைத் தம்மிடத்தே ஈடுபடச் செய்தலும் தலைவியைப் பழித்தலுமாகிய செயல்களை உடையவர்கள் என்று உ.வே.சா. தம் குறுந்தொகை நூலின் ஆராய்ச்சி முன்னுரையில் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் இற்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பரத்தையரை மூவகைப் படுத்துகின்றார்.  பரத்தையர் என்பதற்கு ஆண்மையால் எங்கும் பரந்து சென்று பொருள் ஈட்டும் ஆண்மக்கள் போலத் தமது பெண்மை நலத்தால் பொருளுடைய செல்வந்தரைப் பரந்து பற்றிப் பொருள் செய்து கொள்ளும் இவர்கள் பரத்தையர் எனப்படுவர் என ஔவை சு. துரைசாமிப்பிள்ளை நற்றிணை உரையில் குறிக்கின்றார். பரத்தை, பரத்தமை, காமக்கிழத்தி குறித்துத் தொல்காப்பியம் தவிர்ந்த மேற்கூறிய பழையவுரையாசிரியர்கள், 18 ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்கள் குறித்துச் சென்றுள்ள கருத்தமைவுகளை அவர்கள்தம் சமகாலத்துச் சமூகவியல் பார்வையாக மட்டுமே கண்ணுற முடியும். தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை உருவாக்கம் பெற்ற காலக்கட்டத்தின் சமூகநிலை எனக் கருத முடியாது. இதனை சிலம்பு நா.செல்வராசு தம் நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் பரத்தமை தோற்றம் பெற்றமைக்கான காரணங்களாக முன் ஆய்வாளர்கள் சுட்டிச்சென்ற கருத்துகளைத் தொகுத்தளித்துள்ளார். அவை வருமாறு

பரத்தையர் என்பதற்கு அயலவர் என்று பொருள் கொள்ளப் பெற்றுள்ளது. பர+ஸ்திரி-பரத்தி-பரத்தை; குற+ஸ்திரி-குறத்தி என்றாற்போல பர+ஸ்திரி-பரத்தி=பரத்தை என்றாயிற்று எனப் பரத்தை என்ற சொல்லிற்கு விளக்கம் கூறப்பெற்றுள்ளது [க.ப.அறவாணன்]. பரத்தை என்பது தமிழ் வேர்ச்சொல் அன்று என இறையனார் களவியலுரை கூறும் [35]. பிற நாட்டிலிருந்து கொணரப்பட்ட மகளிர் பரத்தையாக்கப் பட்டனர். இதற்குப் போர்நெறி வழிவகுத்தது. முற்காலத்தில் போர் வெற்றியின் போது பொருள்களோடு பெண்களும் கவரப்பட்டனர்.

வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர்

      பல்லிருங் கூந்தல் முரற்சியால்

      குஞ்சர வொழுகை பூட்டி

என்ற பதிற்றுப்பத்துப் பதிகத்தின் [பதி.ப.5] செய்தி மகளிரை அடிமைப்படுத்திய நிலையை விளக்குகின்றது. போரில் கைப்பற்றிய பொருள்களைப் பட்டியலிடும் கலிங்கத்துப் பரணி ‘நவநிதிக்குவை, மகளிர்’ என்று மகளிரையும் குறிப்பிடுகின்றது. மிகப் புராதன காலத்தே போரில் வெற்றி பெற்றோர் தோல்வியடைந்தோரைக் கொன்றொழித்தனர். அவர்தம் பெண்களைப் பணிவிடைக்காகக் கைப்பற்றினர். அவ்வாறு கைப்பற்றப்பெற்ற மகளிரையே கொண்டிமகளிர் என்று பழைய தமிழ்ச் செய்யுட்கள் குறிப்பிடுகின்றன என்ற கருத்தும் எண்ணத்தக்கன [க.கைலாசபதி].

இவ்வாறு போரில் கொணரப்பட்ட மகளிர் அடிமைகளாக்கப் பெற்றுப் பரத்தைமைக்கு பயன்படுத்தப் பெற்றனர். கிரேக்க உரோம பாபிலோனிய அசீரிய நாகரிகங்கள் அனைத்திலும் பரத்தமை செழிக்க இருந்துள்ளது. அடிமைகளைச் சார்ந்தே வளர்ந்துள்ளது என்ற அறிஞர்தம் கருத்தும் எண்ணத்தக்கது [க.ப.அறவாணன்]. sex in ancient rome என்னும் நூலில் உரோம நகரங்களில் பரத்தையாக இருந்தவர் பெரும்பாலும் முன்னைய அடிமையர், அயல்நாடுகளிலிருந்து கொணரப்பட்டவர் என்ற கருத்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது. Sexual life in ancient Greece என்ற நூலில் கிரேக்க நாட்டில் பரத்தமை கோயிலைச் சார்ந்து வளர்ந்துள்ளது என்று கூறப்பெற்றுள்ளது [சிலம்பு நா.செல்வராசு, 2009].

     மேற்கூறிய பகுதியின் வழிப் பரத்தையர் என்பதற்கு அயலவர், போர் நெறியின்போது பல நாடுகளிலிருந்தும் கொண்டுவரப் பெற்ற கொண்டிமகளிர் என்ற விளக்கங்கள் பெறப்படுகின்றன. பரத்தை என்ற சொல்லில் அமைந்த பர என்ற சொல் பல என்ற பொருண்மையில் வழங்கப் பெற்று வந்திருக்கலாம். பல நாடுகளுக்கும் சுற்றி வணிகம் செய்து வந்தோரை பலதேசிகள் என்பர். பரதேசி என்பதற்கு பிற நாட்டான் எனப் பொருள் தருவார் தொ.பரமசிவன். தேசி என்பது வணிகச் சாத்துகளைக் குறித்தெழுந்த சொல்லாகும். நானாதேசிகள் என்று இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் பகரும். பலதேசி என்ற சொல் நாளடைவில் பரதேசி என்றானது போல் பல தேசங்களிலிருந்தும் போர் நெறியின் பொருட்டுக் கொண்டு வரப்பெற்ற பெண்கள் [ஸ்திரி] பர+ஸ்திரி = பரஸ்திரி,பரத்தி என்றானது எனலாம். அவ்வாறே பர என்ற சொல் உயர்ந்த என்ற பொருண்மையினையும் ஏற்று நிற்கின்றது. பரலோகம் என்ற சொல்லிற்கு உயர்ந்த உலகம் என பைபிளின் தமிழ்ப்பெயர்ப்புகள் பொருள் தருகின்றன. இச்சொல்லிற்கு சொர்க்கம், வானுலகம் என்ற பொருண்மையும் கொள்ளமுடியும். வானுலகத்தில் உள்ள தேவர்களுக்குப் பணி செய்ய அடியவர்களை [பெண்கள்] சூலக்குறியிட்டு கோவிலுக்கு நேர்ந்து விட்டமையினைச் சோழர்காலச் சமூக நிலை சுட்டுகின்றது. திருவிழாக் காலங்களில் இசை, கூத்து நிகழ்த்தவும், சாதாரண நாட்களில் கோவில் பணிகள் செய்யவும் கோவில்களில் தேவரடியார்கள் நியமிக்கப் பெற்றிருந்தனர். இவர்களின் கால்களில் சூலக்குறியிடும் வழக்கம் இருந்தது [ஆ.இராமகிருட்டினன், தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், பக்.198]. கோயில்கள் அந்நியப் படியெடுப்பினால் கொள்ளையடிக்கப் பெற்றபோது அங்குப் பணியிலிருந்த பெண்கள் ஆதரவற்று நின்றிருந்தனர். அவர்களைப் பிற்காலச் சமூகம் பாலியல் கண்ணோட்டம் கொண்டு [தேவர் + அடியவர் = தேவரடியவர், தேவடியாள்] நோக்கியமையினைத் தமிழ்ச் சமூகம் நன்கறியும். ஆனால் சோழர்காலத்தில் தேவரடியார்கள் உயர்நிலையில் மதிக்கப்பெற்றிருந்தனர். கோயில் வழிபாடுகளில் அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப் பெற்றிருந்தது. சோழமன்னன் ஒருவன் தேவரடியார் ஒருவரை மணம் செய்து கொண்டமையும் அறிகின்றோம். நாயக்கர் காலம் வரையில் இவர்கள் நன்மதிப்பு அடைந்திருந்தனர் எனக் கருத முடிகின்றது. கூத்தையும் பாட்டையும் பிற்காலம் வரை பாதுகாத்து வந்த மரபினர் என்றும் கூறலாம். இவர்களுக்கு இறையிலி நிலம் போன்று நிலங்கள் வழங்கப் பெற்றமையினை அறிகின்றோம். நாயக்கர் காலத்தில் மதுரை சித்திரைத் திருவிழாவின் போது கூத்தாடஎழுநாட்டு நங்கைஎனும் ஆடல் நங்கைக்கு நிலம் அளிக்கப்பட்டது பற்றிப் புதுக்கோட்டை கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது [ஆ.இராமகிருட்டினன், தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், பக்.237].

     ஆக இவ்விடத்தில் பர என்ற சொல்லை உயர்வான என்ற நிலையில் பொருள் கொள்வது தவறாகாது. ஆனால் சங்கப் பனுவல்களுக்கு உரையெழுதப்பெற்ற காலங்களில் பரத்தையர் சமூகநிலை கீழானதாக இருந்திருத்தல் வேண்டும். இவற்றை உள்வாங்கி நச்சினார்க்கினியர், இளம்பூரணர் உள்ளிட்டோர் உரைகொண்டிருக்க வேண்டும். நாயக்கர் காலத்தின் இறுதியில் கோயில்களில் அமைந்த கூத்து, பாட்டு ஆகிய கலைப்பணிகள் கீழானதாகவும் அவற்றைச் செய்துவந்த பெண்கள் கணிகையர் என்ற நிலையில் பொருள் படைத்தோரால் போகப் பொருளாகவும் பார்க்கப் பெற்றனர். சாதியம் என்பதும் கோயிலோடு பின்னப் பெற்றிருந்தது. உரையாசிரியர்கள் சங்க இலக்கியப் பரத்தையர்களுக்குத் தரும் விளக்கங்களான கூத்தும் பாட்டும் உடையவர், கணிகையர், குலத்தின்கண் இழிந்தவர், சேரிப் பரத்தையர் என்ற பொருண்மையேற்பு இத்தகைய பின்புலம் கொண்டது. கிரேக்க நாட்டில் பரத்தமை கோயிலைச் சார்ந்து வளர்ந்தது என்பதை நாயக்கர் காலத்தையை பரத்தமை சூழலோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யவியலும். ஆனால் சங்க இலக்கியப் பரத்தையர் பதிவுகளை அவ்வாறு ஒப்புநோக்கவியலாது. உ.வே.சாமிநாதையர், ஔவை சு. துரைசாமிப் பிள்ளை ஆகியோரும் பழைய உரையாசிரியர்களின் கருத்துகளைப் பின்பற்றிப் பொருள் கொண்டனர். மேலும் பரத்தமை என்பது மருதநிலம் சார்ந்த வேளாண் பண்பாட்டு சமூகத்தின் வெளிப்பாடு எனபதை ஆய்வாளர்கள் பலர் நிறுவியுள்ளனர். இவ்விடத்தில் தொ.பரமசிவனின் பரத்தமை குறித்த கருத்தாக்கம் மனங்கொளத்தக்கது.

காட்டிலே வாழும் வேட்டுவ வாழ்க்கையை விடவும், கால்நடை வளர்க்கும் காட்டு வாழ்க்கையை விடவும், நன்செய் வேளாண்மையை மையமாகக் கொண்ட மருதநில செல்வ வாழ்க்கையில் வசதியுடையோர் வீட்டுப்பெண்கள் உடலுழைப்பில் இருந்து விலக்கப்பட்டனர். எனவே உழைப்பு சார்ந்த ஆடல் பாடல் போன்ற கலைகளிலிருந்தும் அவர்கள் அயன்மைப் பட்டனர்.வேளாண் நாகரிக ஆண்களின் திரண்ட செல்வக்குவியல் ஆடல்பாடல் வல்ல பழைய பாண்மரபினரைப் பரத்தையர் ஆக்கியது. [பண்பாட்டு அசைவுகள், பக்.160]

     தனது கருத்திற்கு அரண் சேர்க்க கா.சிவத்தம்பியின் திணைக் கோட்பாட்டினையும் முன்வைக்கின்றார்.

மருதத்தின் ஒழுக்க முறையான ஊடலின் சமூகப் பொருளாதார முக்கியத்துவம் எளிதில் புரியக்கூடியதே. மருதத்தின் வேளாண்மையின் வளர்ச்சியானது விரிவான தனி நிலவுடைமை வளர்ச்சிக்கு அடிகோலியது. பொருளாதார ஆதிக்கத்தின் அடிப்படையான உபரி உற்பத்தியினைமிகுந்த அளவில் நெல்லைச் சேமித்து வைப்பதனைச் சில பாடல்கள் வெளியிடுகின்றன. இத்தகைய செழுமையான நிலப்பிரபுத்துவ அமைப்பில், வீரயுகத்தின் பெண்குலக் கலைஞர்கள் பரத்தையர்களாக மாறினார்கள். பரத்தமை சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட , மண உறவுக்கு வெளியே இன்பம் காணும் வாயிலாக விளங்கிற்று. ஏனெனில் சொத்துரிமைக்கும், குடும்பப் பரம்பரை உரிமைக்கும் இடையூறு செய்யாத ஒரு தனியுரிமையாக இது திகழ்ந்தது. அப்படி இருந்த போதிலும் இது ஒரு மனிதாபிமானச் சிக்கலாகவும் அறைகூவலாகவும் மனையில் வாழும் கிழத்திக்கு இருந்தது. இது போன்ற உறவுமுறையில் ஊடல் ஆதிக்கம் செலுத்துகின்றது. சைவம் நிலவுடைமை சார்ந்து வளர்ந்த மதம் என்பதை ஆர்.பானர்ஜி, ஜி.எஸ்.குரே போன்றவர்கள் விரிவாகவே எடுத்துக் காட்டி உள்ளனர். எனவே நிலவுடைமை சார்ந்து வளர்ந்த பரத்தமை என்ற நிறுவனத்தைச் சைவ சமயம் கண்டிக்கவில்லை; மாறாகத் தேவரடியார், பதியிலார், உருத்திர கணிகையர், மாணிக்கத்தார், தளியிலார் என்ற பெயரோடு சோழ, பாண்டிய அரசுகளின் எழுச்சிக் காலத்தில் பரத்தமை கோயிலோடு சேர்க்கப் பட்டது. தேவார மூவரில் ஒருவரான சுந்தரர் திருவாரூர்க் கோயிலில் ஆடுமகளிர் மரபில் வந்த பரவை நாச்சியார் என்ற பெண்ணைக் கண்டு காதல் மணமும் செய்து கொள்கின்றார். இக்கதை தொடங்கி பல்வேறு வகையில் சைவமரபுகள் பரத்தமையை அங்கீகாரம் செய்கின்றன. கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தஞ்சைக் கோயிலில் ஆடல்வல்ல, நானூறு பணி மக்களை அமர்த்திய முதலாம் இராசராசன் அவர்களுக்குத் தனித்தனியே வீட்டுவசதி அளித்த செய்தியினையும் தஞ்சைக் கோயில் கல்வெட்டுகளால் அறிகின்றோம். [பண்பாட்டு அசைவுகள், பக்.160]

      மேலும் அவர் கள ஆய்வில் கண்டறிந்த நாட்டுப்புறப் பாடலின் வழி சொக்கர் எவ்வாறு நிலவுடைமைக் கடவுளானார்; சைவம் எவ்வாறு பரத்தமையினை ஏற்றுக் கொண்டது. மிகுதியான செல்வக்குவியல் நிலக்கிழாராகத் தாசி வீட்டிற்குச் சொக்கரை அழைத்துச் சென்றமை முதலியனவற்றை விளக்கி நிலப்பிரபுத்துவம், உபரிப் பொருள் உற்பத்தி ஆகியன சமூகத்தில் பக்தி இயக்கத்தோடு இணைத்துப் பரத்தமையினை உருவாக்கம் செய்தமையினை விளக்குகின்றார்.

தொல்காப்பியர் சுட்டும் பரத்தமை

தொல்காப்பியம் பரத்தையர் குறித்தும் காமக்கிழத்தியர் குறித்தும் நூற்பாக்களைக் குறித்துச் செல்கின்றது. அவை வருமாறு

பரத்தையின் அகற்சியின் பிரிந்தோள் குறுகி

இரத்தலும் தெளித்தலும் என இருவகையோடு

உரைத்திற நாட்டம் கிழவோன் மேன [தொல்.987]

தொல்காப்பியர் பரத்தை பற்றிக் குறிப்பிடும் முதலிடம் இதுவாகும். பரத்தையின் பிரிவால் தலைமகளிடம் தலைமகனுக்குக் கூற்று நிகழும் எனக் குறிக்கின்றார்.

பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்

      பிரிவின் நீக்கிய பகுதிக் கண்ணும் [தொல்.1092]

கற்பியலில் தலைமகன் கூற்று நிகழும் போது குறிக்கின்றார். பிரிவின்போது இருவர் புலம்புவதாகவும் அவ்விருவரில் ஒருவர் முறைப்படித் திருமணம் செய்து கொண்ட மனைவி எனவும் மற்றொருவர் காமக்கிழத்தி எனவும் இதற்கு இளம்பூரணர் உரை தருகின்றார். ஓரில்லத்தின் கண் அமைந்து இருவர் புலம்பியதாகத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றாரேயன்றி அவ்விருவர் யாரெனக் கூறவில்லை. ஊகத்தின் அடிப்படையில் ஒருவள் மனைவி மற்றொருவள் காமக்கிழத்தி எனவும் இளம்பூரணர் கருதியிருக்கலாம்.

தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி

      எங்கையர்க்கு உரைஎன இரத்தற் கண்ணும்

      செல்லாக்காலைச் செல்கென விடுத்தலும்

      காமக்கிழத்தி தன்மகத் தழீஇ

      ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும் [தொல்.1093]

என்ற நூற்பாவில் காமக்கிழத்தியின் சில இல்லறச் செயல்பாடுகளால் தலைவிக்குக் கூற்று நிகழும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அதே நூற்பாவின் பிற்பகுதியில்

காதல் எங்கையர் காணின் நன்று என

      மாதர் சான்ற வகையின் கண்ணும்

      தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை

      மாயப் பரத்தை உள்ளிய வழியும்

      தன்வயின் சிறைப்பினும் அவன்வயின் பிரிப்பினும்

      இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும்

      காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய

      தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் [தொல்.1093]

உன்காதலை உடைய எம் தங்கையர் நீ என்னிடம் கெஞ்சுதலைப் பார்த்தல் நன்று எனக் கூறும் போதும் தன்புதல்வனை அணிகள் அணிவிக்கச் செய்து அனுப்பிய பரத்தையரை [சகோதரி மாயப்பரத்தை] நினைக்கும் போதும் தலைவிக்குக் கூற்று நிகழுமெனக் குறிக்கின்றார். இவ்விடத்தில் பரத்தையரைத் தலைவிக்குச் சகோதரி முறைமை கொண்டு தொல்காப்பியர் குறிக்கின்றார்.

புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்

      இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும்

      பல்வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும்

      மறையின் வந்த மனையோள் செய்வினை

      பொறையின்ற பெருகிய பருவரற் கண்ணும்

      காதல் சோர்வில் கடப்பாட்டு ஆண்மையின்

      தாய்போல் கழறித் தழீஇய மனைவியைக்

      காய்வின்று அவன் வயின் பொருத்தற் கண்ணும்

      இன்நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து

      பின்னர் வந்த வாயிற் கண்ணும்

      மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்

      மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும்

      எண்ணிய பண்ணை என்று இவற்றொடு பிறவும்

      கண்ணிய காமக் கிழத்தியர் மேன   [தொல்.1097]

தொல்காப்பியர் காமக்கிழத்தியர்க்கு எனத் தனியே நூற்பா ஒன்று வகுத்துள்ளது என்பது தொடக்ககாலத் தமிழினத்தின் வாழ்வியல் சார்ந்த சமூகவியல் ஆய்விற்கு அடித்தளமிடக் கூடியது எனலாம். இந்நூற்பா ஒரே இல்லத்தின்கண் இருவருடன் வாழ்க்கை நடத்திய தலைவனைக் குறித்தமைகின்றது. காமக்கிழத்திக்குத் தலைவனுடன் கூற்று நிகழுமிடங்களை இது சுட்டிச் செல்கின்றது. இருவருக்கும் புலவி முயக்கம் நிகழும் பொழுது அதைத் தடுத்தற் பொருட்டும் தலைவன் வேறொரு பரத்தையின் கண் தொடர்பு கொண்டு இல்லற ஒழுக்கத்திலிருந்து வழுவும் பொழுதும் தலைவனுக்குப் பிறந்த பல குழந்தைகளைக் கண்டு மனம் மகிழும் பொழுதும் தலைவனுக்கும் தலைவிக்கும் ஊடல் நிகழ்ந்து பிரிந்திருக்கும் வேளையில் தாயின் இடத்தில் அமர்ந்து அவ்விருவரையும் ஒன்று சேர்த்து வைக்கும் பொழுதும் தலைவன் தலைவிக்குப் பிறந்த குழந்தைக்கு அணிகலன்கள் அணிவித்து  மகிழும் பொழுதும் இன்னபிறவிடங்களிலும் காமக்கிழத்திக்குக் கூற்று நிகழுமெனத் தொல்காப்பியர் சுட்டுகின்றார். ஆக இக்கூற்றினை நோக்குமிடத்துப் பரத்தை என்பவளும் காமக்கிழத்தி என்பவளும் வேறானவர்கள் என்பது வெளிப்படை. காமக்கிழத்தி என்பவள் யாரென்று ஆய்வு செய்யப் புகுவோமேயானால் புதிய கருதுகோள்களை முன்வைக்க முடியும். காமக்கிழத்தி என்ற சொல்லாடலில் உள்ள மொழிப்பொருண்மையினை உற்றுநோக்கலாம். காமம் என்ற சொல்லிற்குத் தொல்காப்பியர் காலந்தொட்டு வள்ளுவர் காலம் வரையில் அன்பு என்ற பொதுப்பொருண்மையே ஏற்கப் பெற்றுள்ளது. இடைக்காலங்களுக்குப் பிறகே காமம் என்பது உடலின்பம் [lust] என்ற பொருண்மையில் வழங்கப் பெற்று வருகின்றது. காமம் குறித்த வ.சு.ப.மாணிக்கனாரின் கருத்து வருமாறு:

காமம் என்ற சொல்லுக்கு மெய்யுணர்ச்சி என்பது பொருள். ‘மெய்யில் தீரா மேவரு காமம்என்பார் கபிலர் [அகநானூறு] இச்சொல் ஈண்டு நற்பொருளில் பயின்றது. பாலுறவைக் காமக்கூட்டம் என்றும், காதலனைக் காமக்கிழவன் என்றும் கூறுவர் தொல்காப்பியர். திருக்குறள் மூன்றாவது பால் காமத்துப்பால் என வழங்கப்பெறும். காமம் பிறப்பின் இயல்பானது, நல்லது, இனியது, இன்றியமையாதது என்பது தமிழியம். சங்ககாலம் காமவின்பத்தை மாசற்ற இன்பம் எனப்போற்றி வளர்த்த காலம். அதனால் காம மெய்ப்பாடுகளை மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் வகைபட நூற்பித்தார். சங்கப்பாட்டு எதுவும் அன்புக் காமத்தை இழிவெனச் சுட்டியதில்லை. [தமிழ்க்காதல், 454-458]

கிழத்தி என்ற பழஞ்சொல் தலைமை சான்ற பெண்ணைக் குறித்தமைகின்றது. இந்நாளில் கிழவி என்ற நிலையில் இழிசொல்லாகக் கருதப்பெறுகின்றது. ஆகக் காமக்கிழத்தி என்பது சங்க காலத்தில் உடல்வேட்கை தணிக்கும் ஆசை நாயகி என்ற பொருண்மையில் வழங்கப் பெற்றிருக்கவில்லை. பின்வரும் கருதுகோளை முன்வைத்து இச்சொல்லை ஆய்விற்குட்படுத்த முடியும்.

 1. தலைவனோடு காதல் கொண்டு உடன் போக்கில் வந்த தலைவிக்குக் குழந்தைப்பேறு இல்லாத காரணத்தினால் தலைவனைப் பிரியாது அவனோடு நிலையாகத் தங்கி இருந்து காமக்கிழத்தி என்ற இல்லறக் கடமையேற்று ஒழுகியிருக்கலாம். ஏனெனில் போரியலுக்கு முதன்மை கொடுக்கும் வீரயுகப்பண்பாட்டுச் சமூகத்தில் குழந்தைப் பேறு என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. போரில் நிகழும் உயிரிழப்புகளைச் சமன் செய்வதற்கும் இனக்குழுப் பெருக்கத்தின் தேவை கருதியும் இது அவசியமான ஒன்று. அதன் பிறகு அறத்தின் [திருமணம்] வழி வந்தவள் இங்குத் தலைவியென முன்னிருத்தப் பெற்றிருக்கலாம். இதன் காரணமாகவே காமக்கிழத்தியானவள் உரிமையுடன் இல்லறத்தின் கண் அமைந்து குடும்பப் பொறுப்பேற்று ஒழுகியிருக்கக் கூடும். குழந்தைப்பேறு என்பது அச்சமூகத்தில் அவசரத் தேவையாக அமைந்திருந்தது. காமக்கிழத்திக்குரிய கூற்றினைத் தொடர்ந்து வைக்கப்பெற்றுள்ள நூற்பாவின் வழி இதனை உணர இயலும்.

பூப்பின் புறப்பாடு ஈரறு நாளும்

நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்

பரத்தையின் பிரிந்த காலையான [தொல்.1113]

தலைவிக்குப் பூப்புத் தோன்றிய பன்னிரெண்டு நாட்களும் தலைவன் தலைவியுடன் பிரிவின்றி இணைந்திருப்பான். பன்னிரெண்டு நாட்கள் என்ற கணக்கீடு கருவுருதல் தொடர்பான தமிழர்களின் நுண்ணறிவாகும். பூப்பு [மாதவிலக்கு] தோன்றிய முதல் பதினைந்து நாட்கள் கணவன் மனைவி இணைந்திருந்தால் கருவுருதல் நிகழும் என்பது தற்பொழுதைய அறிவியல் உலகம் கண்டறிந்த உண்மை. கருமுட்டை 12,13,14,15 ஆம் நாட்களில் நன்கு முதிர்ச்சியடைந்திருப்பதோடு உயிரணு கருமுட்டையினைத் துளைக்கும் வண்ணம் மென்மையடைந்திருக்கும். மாதவிலக்குத் தொடங்கியதிலிருந்து பன்னிரெண்டு நாள் என்றாலும் முடிந்ததிலிருந்து பன்னிரெண்டுநாள் என்றாலும் இன்றைய அறிவியல் கணிப்பிற்கேற்ப தொல்காப்பியம் ஈரறு நாள்[12] என மிகச்சரியாகக் கணித்துள்ளது தொல்தமிழர் அறிவின் உச்சக்கட்டம். இந்தக் கணிப்புமுறையின் நோக்கம் என்னவெனில் தலைவனுக்கு வாரிசு கட்டாயம் என்பது எழுதப்படாத சட்டம் என்பதே. வாரிசு உருவாக்கவியலாத பெண்கள் அதற்காக வேறொரு பெண்ணிற்கு விட்டுக் கொடுக்கவும் செய்துள்ளனர். சிலவிடங்களில் பரத்தையர்களை எங்கையர் எனச் சுட்டுவதால் தலைவியின் உடன் பிறந்த சகோதரியாகவும் இருந்திருக்கலாம். இக்கருத்தை அரண் செய்யும் விதமாக பின்வரும் நூற்பாவின் இருவேறு பகுதிகள் விளங்குகின்றன.

தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி

எங்கையர்க்கு உரையென இரத்தற்கண்ணும் [தொல்.1093]

… … … …

கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி

அடிமேழ் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்

காதல் எங்கையர் காணின் நன்று என

மாதர் சான்ற வகையின் கண்ணும்

தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை

மாயப் பரத்தை உள்ளிய வழியும் [தொல்.1093]

நாட்டுப்புறங்களில் இன்றளவும் இம்முறை கடைபிடிக்கப் பெறுவது குறிக்கத்தக்கது. காமக்கிழத்தி சங்கப்பாடல்களின் சிலவிடங்களில் பின்முறை வதுவை பெருங்குலக்கிழத்தி எனக் குறிக்கப்பெறுவதும் இக்கருத்தைக் குறித்து எழுந்தனவெனலாம். இளம்பூரணர் தம்முரையில் பரத்தையர் குறித்து “இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டும் தங்காதவர் என்பது இவ்விடத்துப் பொருந்தவில்லை எனக் கூறலாம். பொருளிற்காகவும் தலைவனின் இன்ப நுகர்ச்சிக்காகவும் காமக்கிழத்தி இருக்கவில்லை. தலைவனின் புதல்வர்களுக்குப் பரத்தையர்கள் தாயராக இருந்து செயல்பட்டமையும் தொல்காப்பிய நூற்பா வழி அறியவியலும். இவ்விடத்தில் சிலம்பு நா.செல்வராசுவின் ஆய்வுரை முக்கியத்துவம் பெறுகின்றது. அவர் பரத்தையர், காமக்கிழத்தியர், விலைமகளிர் ஆகிய மூவரும் வேறுவேறானவர்கள் என நிறுவுகின்றார். தொல்காப்பியர் கூறும் பரத்தையர் வேறு இளம்பூரணர் குறிப்பிடும் பரத்தையர் வேறு என்பதைத் தக்க சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளார். இளம்பூரணர் தம் சமகாலத்து விலைமகளிர் வாழ்வியல் குறித்த கண்ணோட்டத்தோடு சங்கவிலக்கியப் பரத்தையர்களை நோக்கியுள்ளார் எனப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

காமக்கிழத்தியர், பரத்தையர் இருவரும் வேறுவேறானவரா, அன்றி ஒருவரா என்பது ஆய்விற்குரியது. பரத்தை என்பதற்கு அயலவர் அதாவது தலைமகளின் வேறானவர் என்று பொருள் கொள்வதாயின் அச்சொல் காமக்கிழத்தியரையும் குறிப்பதாகக் கொள்ளலாம். உரையாசிரியர்களும் பரத்தையரைக் காமக்கிழத்தியருள் ஒருவராகக் குறிப்பிடுவது இங்கு நோக்கற்பாலது. எனவே தொல்காப்பியர் வேறு வேறு பெயர்கள் கொண்டு ஒருவரை அதாவது தலைமகள் அல்லாதாரைச் சுட்டியிருக்க வேண்டும். பரத்தையர் விலைமகள் என்ற பொருள் பட எந்த இடத்திலும் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. இது போன்றே பரத்தையர் ஆடவர் பலரோடு தொடர்பு கொண்ட செய்தியும் இடம்பெறவில்லை. மேற்காட்டிய சான்றுகள் வழித் தெரியவரும் கருத்துகள் இளம்பூரணர் கூறும் ஒருவர் மாட்டும் தங்காதவர் என்ற கொள்கையை வலியுறுத்துவனவாக அல்லது விளக்குவனவாக அமையவில்லை. மாறாகத் தலைவனுக்கு ஒருத்திக்கு மேற்பட்ட மனைவியர் அல்லது காமத்திற்கு வரைந்து கொள்ளப்பட்டவர் இருந்ததாகக் கருத வாய்ப்புள்ளது [சிலம்பு நா.செல்வராசு, 2009, பக்.168-169]

மேற்கூறிய ஆசிரியரின் கருத்தில் அமைந்த “தலைவனுக்கு ஒருத்திக்கு மேற்பட்ட மனைவியர் அல்லது காமத்திற்கு வரைந்து கொள்ளப்பட்டவர் இருந்ததாகக் கருத வாய்ப்புள்ளது என்பதில் பல மனைவியர் போர் நெறியின் காரணமாகவும் குழந்தைப்பேறு காரணமாகவும் தலைவனுக்கு இருந்தார்கள் என அறிய முடிகின்றது. ஆனால் காமத்திற்கு வரைந்து கொள்ளப்பட்டவராக இவர்களைக் கருதுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தலைவனின் காம இச்சைக்குக் காமக்கிழத்தியை இல்லத்தில் வைத்திருந்தான் என்பதற்கான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை. எவ்விடத்திலும் தலைவனின் இச்சைக்காகக் காமக்கிழத்தியர் செயல் பட்டிருக்கவில்லை. தலைவிக்கு இணையாக இருக்கவும் அவ்விடத்தைத் தக்கவைக்கவும் உளவியல் பாங்கில் இருவரும் ஊடல் கொண்டிருந்தனர் எனக் கருத இடமுண்டு. குடும்பக் கட்டமைப்பின் பால் மிகுதியான அக்கறையும் பொறுப்பும் காமக்கிழத்தியர்க்கு இருந்தமையினை அறிய முடிகின்றது.

தொல்காப்பியத்தில் மேலும் சிலவிடங்களில் பரத்தையர் குறித்த குறிப்பு அமையப் பெற்றுள்ளது.அவை வருமாறு

பாணன் கூத்தன் விறலி பரத்தை

      யாணம் சான்ற அறிவர் கண்டோர்

பேணுதரு சிறப்பின் பார்ப்பான் முதலா

முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத்

தொன்னெறி மரபின் கற்பிற்குரியர்   [தொல்.1146]

பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் ஆகிய அறுவரையும் கூற்று நிகழ்த்தக்கூடியவர்களாகத் தொல்காப்பியர் குறிப்பர். இவ்விடத்தில் சங்ககாலச் சமுதாய நிலையின் பின்புலம் குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இங்கு பேராசிரியர் கே.முத்தையா அவர்களின் கருத்து மனங்கொள்ளத் தக்கது.

மேற்குறித்த தொல்காப்பிய நூற்பாவிற்கு அவர், இதில் பாணன், கூத்தன், விறலி, பரத்தை, ஆகியோரையும் வருங்காலத்தை அறியும் அறிவு பெற்ற பெரியோரையும் பாராட்டத் தகுந்த சிறப்புடைய பார்ப்பானையும் தலைவன் தலைவிக்கு உதவி செய்பவர்களாகக் கொள்வர் என்று கூறப்படுகின்றது. ’தொன்னெறி மரபின் கற்பிற்குரியோர்’ அதாவது நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் கற்பு நெறி வாழ்க்கைக்கு உரியவர் என்று கூறப்படுகின்றது. பரத்தையையும், விறலியையும் குறிப்பிட்ட தொல்காப்பியர் தொன்னெறி மரபின் கற்புடைய பெண்கள் இருந்தார்கள் என்று குறிப்பிடுகின்றார். எனவே தலைவன் என்று குறிப்பிடும் அவனுக்குக் கற்புடைய மனைவியரும், பரத்தையர்களும் இருந்தனர் என்பது தெளிவு. உடைமை வர்க்கத்தினரின் வாழ்க்கையினையும், அன்றிருந்த சமுதாயத்திலிருந்த பல்வேறுவிதமான பிரிவினரையும் வர்க்கப் பாகுபாட்டினையும் இந்தச் சூத்திரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன [சங்ககாலச் சமுதாயம், பக்.11]. மேலும் தொல்காப்பியத்தில் வரும் சூத்திரங்கள் மூலம் அன்றிருந்த நிலவுடைமைச் சமுதாயத்தைத் தெளிவாகக் காணலாம். அதன் வர்க்கப் பிரிவினை முறைகளையும் அதனால் விளைந்த வறுமையையும் நமது தமிழ்ப்பற்றின் காரணமாக மறைக்க முயல்வது தவறு; தமிழின் மீது பற்றுக் கொள்வது என்பது ஒன்று. அன்றைய சமுதாய நிலையைப் பற்றி தவறான கண்ணோட்டம் கொள்வது பயன் தராது. அன்றிருந்த சமுதாயம் இன்றைய வர்க்க சமுதாயத்தின் ஆரம்பக் கட்டமே. [சங்ககாலச் சமுதாயம், பக்.12]

ஆக, அவர் தொல்காப்பியர் கால, சங்ககாலச் சமுதாயம் என்பது முடியரசுகளும் நிலவுடைமையும் நன்கு பெருகத் தொடங்கிய காலக்கட்டம் என்பதை நிறுவிச் செல்கின்றார். பரத்தமை என்பது மருதநில நிலவுடைமைச் சமூகச் செல்வாக்கினால் நிலைபெற்ற ஒரு பண்பாடு என்பதை உணர முடிகின்றது. காமவின்பத்திற்காகச் செல்வந்தர்களும் நிலச்சுவான் தாரர்களும் பரத்தமை தேடிப் புறப்பட்ட காலக்கட்டம் என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் இனக்குழுப் பண்பாட்டு முறைகளில் இருந்த, பலபெண்களோடு உறவு வைத்து வாழும் [தலைவி, காமக்கிழத்தி, பரத்தை] பண்பாட்டுத் தொடர்ச்சி வீரயுகப்பண்பாட்டுக் காலக்கட்டத்திலும்  தொடர்ந்த நிலையினையே நாம் சங்கப்பனுவல்களில் காணுகின்றோம். இவ்வினக்குழு முறை வாழ்வியலை மருதநில நிலவுடைமைப் பரத்தமையோடு ஒப்பிடவியலாது. சங்கப்பாடல்களில் மிகத் தொன்மையான இனக்குழுவினரின் பதிவு கொண்ட பாடல்களும் கிடைக்கிறன. நிலவுடைமைச் சமூகம் கால்கொண்ட முடியரசு ஆட்சியின் பாடல்களும் தொகையாகக் கிடைக்கப் பெறுகின்றன. சங்கவிலக்கியங்களை ஒரே பொதுமைக் கண்ணோட்டத்தில் காணும் முறைமையினால் தோன்றிய சமூக வரலாற்றுக் குழப்பமே பரத்தமை குறித்த தவறான புரிதலுக்கு வழிவகுத்தது எனலாம். பக்தவச்சலபாரதி தமிழர் மானிடவியல் கோட்பாட்டில் சங்ககாலச் சமூகத்தின் தொடர் வளர்ச்சி நிலையினை தெளிவாக விளக்கிச் சென்றிருப்பார்.

அவ்வாறே தோழி கூற்றில் குறிப்பிடும் பொழுதும் பரத்தை இடம் பெறுகின்றாள்.

பரத்தை மறுத்தல் வேண்டியும் கிழத்தி

      மடத்தகு கிழமை உடைமையானும்

அன்பிலை கொடியை என்றலும் உரியள் [தொல்.1104]

பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே

நிலத்திரிபு இன்று அஃது என்மனார் புலவர் [தொல்.1170]

பொருளியலில் பரத்தையர் பிரிவு நான்கு நிலத்தார்க்கும் உரித்தானது என்பர்.

கற்பு வழிப்பட்டவள் பரத்தை ஏத்தினும்

      உள்ளத்தூடல் உண்டென மொழிப [தொல்.1179]

கற்புவழியில் செல்லும் தலைவி பரத்தையினைப் புகழ்ந்து பேசினாலும் தன் உள்ளத்தில் ஊடல் குறிப்பு உண்டெனக் கருதுவர் தொல்காப்பியர். இவ்விடத்தில் தலைவி பரத்தையினைப் புகழ்ந்து பேசும் நிலை சுட்டப்பெற்றுள்ளது. தலைவன் பரத்தை மீது கொண்ட அன்பின் காரணமாகத் தலைவிக்குப் பரத்தை மீது ஊடல் எப்பொழுதும் உண்டு. இது தலைவிக்கும் காமக்கிழத்திக்கும் உண்டான ஊடலை ஒத்தது. ஆக இம்மூவருக்குமான ஊடல் என்பது தலைவன் யார்மீது அதிக அன்பு கொண்டவன் என்பதை மையமிட்டதேயொழிய இன்ப நுகர்ச்சிக்காகவோ அல்லது பொருளுக்காகவோ அன்று. 15 ஆம் நூற்றாண்டில் கீழான நிலைக்குத் தள்ளப் பெற்ற தேவதாசியரின் வாழ்வியலைச் சங்ககாலப் பரத்தையர், காமக்கிழத்தியருக்கு ஒப்பிட்டு நோக்குவது என்பது பொருத்தமற்றது.

தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும்

      மெய்ம்மையாக அவர் வயின் உணர்ந்தும்

      தலைத்தான் கழறு அறம் எதிர்ப் பொழுதின்றே

      மலிதலும் ஊடலும் அவை அலங்கடையே [தொல்.பொரு.1181]

இந்நூற்பாவில் பரத்தையே வந்து தலைவியிடம் தனது துன்பத்தைக் கூறினாலும் நான் மகிழ்வாக இருக்கும் போதும் கோபமாக இருக்கும் போதும் அன்றி தலைவனை இடித்துரைக்க மாட்டேன் எனத் தலைவி கூற்று நிகழும் போதும் பரத்தையர் பற்றித் தொல்காப்பியர் பேசுகின்றார்.

நற்றிணை, குறுந்தொகைப் பாடல்களில் பரத்தமை

     நற்றிணை, குறுந்தொகை மருதப் பாடல்களும் பரத்தையர் கூற்றுப் பாடல்களும் இப்பகுதியில் எடுத்துக் கொள்ளப் பெறுகின்றன.

     துனிதீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்

      இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல் [நற்.216]

இப்பாடலில் தலைவி பிரிவுத்துயரால் தலைவன் மீது காதல் கொண்டு வாடுவது போல் பரத்தையும் தலைவன் மீது காதல் கொண்ட நிலை மையக்கருத்தாக அமைகின்றது.

எம்நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து

      நல்கினம் விட்டது ஏன நலத்தோன் அவ்வயின் [நற்.176]

இப்பாடலில் தலைவிக்குப் பூப்பு முடிந்து நீராடியமை அறிந்த பரத்தை தன் பெருந்தன்மை காரணமாகத் தலைவனைத் தலைவியிடம் அனுப்புகின்றாள். தலைவி நம்மை நயந்து கொண்டதால் நாமும் தலைவியினை நயந்து கொள்ளுதலே தவிர தலைவியின் மீது கொண்ட அன்பின் காரணமாகவன்று எனப் பரத்தை செவிலியிடம் உரைக்கின்றாள். இது உலகியல் கருதியதாகும் எனக் கருதுவதாகப் பாடற்கருத்து அமைகின்றது. தலைவன் தலைவியிடம் சில நாட்களும் பரத்தையிடம் சில நாட்களும் தங்கியிருக்கும் நிலை சுட்டப் பெறுகின்றது. பூப்பு வந்த காலை தலைவியை விட்டு அகன்றும் பூப்புத் தோன்றிய பன்னிரெண்டு நாள் தலைவியோடு இணைந்தும் இருந்த நிலை ஏற்றுக் கொள்ளப்பெற்ற உலகியலாகவும் கருத இடம் உண்டு. ஏனைய நாட்கள் பரத்தையோடு இல்லறம் நடத்துவதாகக் கொள்ளலாம். தலைவனின் நிலையில் இருந்து கண்ணுரும் பொழுது இவ்விருவரும் ஒரே நிலையில் பேணப்பெற்றமை அறியப் பெறுகின்றது.

கணைக்கோட்டு வாளை கமஞ்சூட் மடநாகு

      துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம் [குறுந்.164]

இப்பாடலில் தலைவிக்கும் பரத்தைக்கும் உண்டான ஊடல் வெளிப்பட்டு நிற்கின்றது. இவ்விருவரும் ஒருவரையொருவர் சமமான நிலையில் நின்று இகழ்ந்துரைக்கின்றனர். தலைவனிடம் முதன்மை பெறுவது இதன் நோக்கமாகும்.

அரிபவர் பிரம்பின் வரிபுற நீர்நாய்

      வாளை நாளிரை பெறூஉம் ஊரன் [குறுந்.364]

இப்பாடலில் மூவரைப் பற்றிய குறிப்பு அமைந்துள்ளது. தலைவி, காமக்கிழத்தி, பரத்தை. இம்மூவரில் இருவர் [தலைவி, காமக்கிழத்தி] தலைவனோடு இல்லத்திலும் ஒருவர் [பரத்தை] வெளியிலும் உள்ளதாகக் குறிப்பமைந்துள்ளது. இல்லத்தில் உள்ள இரண்டாவது பெண்ணை பரத்தை என உரையாசிரியர்கள் கருதுவர். சில பிற்கால உரையாசிரியர்கள் காமக்கிழத்தியர் என்பர். அவ்விரண்டாவது பெண் தலைவியாக அப்பாடலில் கருதப்பெறுபவளின் சகோதரியாக இருக்கலாம். குழந்தைப் பேறு இல்லாத காரணத்தினால் அவள் புறந்தள்ளப் பெற்றுக் காமக்கிழத்தி எனச் சுட்டப் பெற்றிக்கலாம். உண்மையில் தலைவனை முறைவழி முதலில் மணந்து கொண்டவள் அவளாக இருக்க வாய்ப்புண்டு. போருக்கு முதன்மை கொடுக்கும் வீரயுகப் பண்பாட்டுச் சமூகத்தில் குழந்தைப் பேறு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை தொல்காப்பியரின் “பூப்பின் புறப்பாடு ஈரறு நாளும்” [தொல்.1113] என்ற நூற்பா வழியுணரவியலும். ஆக, காமக்கிழத்தி என்பவள் தலைவனின் காம இச்சைக்காக இல்லத்தில் இருப்பவளல்லள். குழந்தைப் பேறு கருதி இரண்டாம் நிலைத் தகுதியினை அப்பெண் பெற்றிருக்கலாம். இன்றும் மதுரை மாவட்டத்தின் நாட்டுப் புறப் பகுதிகளில் இவைபோன்ற நடைமுறைகள் எழுதப் பெறாத சட்டங்களாக இருந்து வருகின்றன.

உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்

      மாரிக்கொக்கின் கூரல் அன்ன [நற்.100]

இப்பாடலில் பரத்தை தலைவனைப் பார்த்து நீ என் கூந்தலைப் பற்றியிழுத்து வளையலை நெறித்த செயலை உனது இல்லத் தலைவியினிடம் கூறுவேன் என்றவுடன் தலைவனின் நெஞ்சு மலையமான் திருமுடிக்காரியின் முரசு போல் அதிருவதாகக் குறிப்பமைந்துள்ளது. இதன்மூலம் தலைவனைப் பணிய வைக்கும் ஆற்றலும் திறமும் பரத்தையிடம் இருந்துள்ளமையினை அறியமுடிகின்றது.

நகைநன்கு உடையள் பாண நும்பெருமகன்

      மிளை வலிசிதையக் களிறுபல பரப்பி

      அரண்பல கடந்த முரண்கொள் தானை [நற்.150]

இப்பாடலில் பரத்தையின் தாயைப் பற்றிய குறிப்பு அமைந்துள்ளது. அவள் கணுக்கள் உடைய மூங்கில் கோலை உடையவளாய் கோபம் கொண்ட நிலையில் காட்டப்பெற்றுள்ளாள். இப்பாடலில் நீண்ட தொடர்பில்லாத பரத்தையிடம் மீண்டும் தொடர்பு கொள்ளும் விதமாகப் பாணனைத் தலைவன் தூதனுப்பியதாக உரையாசிரியர்களால் பொருள் கொள்ளப் பெற்றுள்ளது. “தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது என்பதாக இதன் துறை அமையப்பெறுகின்றது. பிற்காலத்தில் தொகுப்பாசிரியர்களால் அமைக்கப் பெற்ற இத்திணைத் துறைக்குறிப்புகளை மனங்கொள்ளாமல் பனுவலை மட்டும் நோக்கினால் பாடலின் சூழல், திரள்பொருண்மை ஆகியன இது தலைவி கூற்றாக அமைந்திருக்க வாய்ப்புள்ளதாக அறியப் பெறலாம். கோபமாக உள்ள தாயின் நிலையினை இங்கு ஒரு குறியீடாகக் காட்டித் தலைவனைப் பாணன் வழியாக எச்சரிக்கும் தலைவியின் கூற்றாகவும் இப்பாடலை எடுத்துச் செல்லவியலும். ஆக பிற்கால தொகுப்பாசிரியர்கள், உரையாசிரியர்களால் மூலப் பனுவல்கள் கருத்தியல் மாற்றம் செய்யப் பெற்றிருக்கலாம் என அறியவியலுகின்றது. அவ்வாறே பிற்கால உரையாசிரியர்களின் துறைவிளக்கக் கூற்றுப்படி பரத்தையின் கூற்றாகக் கொண்டாலும் பரத்தையின் தாய் பற்றிய குறிப்பு இப்பாடலில் தெளிவாகச் சுட்டப் பெற்றுள்ளது. பரத்தையர்கள், காமக்கிழத்தியர்கள் காமத்திற்காக மட்டும் தலைவனால அணுகப்பெற்றார்கள் என்றும் அவர்களுக்குக் குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை சமூகத்தில் வழங்கப் பெற்றிருக்கவில்லை என்றும் உரையசிரியர்களால் தொடர்ந்து சுட்டப்பெற்று வந்துள்ளது. இப்பாடலில் ஒரு பரத்தையின் பெண்ணாக இப்பரத்தை சுட்டப்பெற்றுள்ளது ஆய்விற்குரியதாக அமைகின்றது. குழந்தை பெற்றுக்கொள்ள உரிமையில்லாத பரத்தை எவ்வாறு குழந்தை பெற்றுக் கொண்டதாக இப்பாடலில் காட்டப் பெற்றாள். காதாசப்தசதியில் குறிக்கப்பெற்றுள்ள விலைமகளிர் வாழ்வியலையும் குறுந்தொகைப் பரத்தையர் வாழ்வியலையும் ஒப்பிட்டு ஆய்வுரை எழுதியுள்ள த.சத்தியராஜ் காதாசப்தசதியில் பரத்தையின் தாய் தன் மகளாகிய பரத்தைக்கு அறிவுரை கூறும் இடங்களைப் பதிவுசெய்துள்ளார். தெலுங்கு நூலாகிய காதாசப்தி சங்க இலக்கியங்களின் சமகாலக் கட்டத்தவை என்ற குறிப்பையும் முன்வைக்கின்றார். காதாசப்தசதி குறிப்பிடும் பரத்தையர் வாழ்வியல் விலைமகளிருக்கான நெறியினைச் சுட்டுவதாகவும் குறுந்தொகைப் பரத்தையர் வாழ்வியல் விலைமகளிருக்கான நெறியினைச் சுட்டாமையினையும் தம் ஆய்வு முடிபாகத் தருகின்றார். இவர் கூற்றுப்படி இவ்விரு இலக்கியங்களும் சமகாலக்கட்டத்தவை என்றால் இவ்விரு இலக்கியங்களில் சுட்டப்படும் பரத்தமை வாழ்வியல் நெறிகளில் முரண்பாடு அமைந்திருப்பதேன்? காதாசப்தசதி எழுந்த காலக்கட்டம் என்பது நிலவுடைமைச் சமூகம் முழுமையாகக் கால்கொண்டு பரத்தமை போகப் பொருளாக்கப் பெற்ற காலக்கட்டமாக இருந்திருக்கலாம். இந்நிலையில் சங்க இலக்கியங்களின் காலத்தையும் [குறுந்தொகை] காதாசப்தசதியின் காலத்தையும் ஒன்றாகக் கருதவியலாது. மேற்குறித்த விரிவான கருத்தாடல்கள் வழி சிலம்பு நா.செல்வராசு சுட்டும் கருத்து இங்கு உறுதிப்படுகின்றது. பரத்தை, பரத்தமை என்பன போன்ற கருத்தாக்கங்களுக்குப் பிற்காலத் தொகுப்பாசிரியர்கள் உரையாசிரியர்கள் தங்களின் சமகாலக்கட்ட சமூகப் புரிதலோடு பழம்பனுவலுக்கு உரைகொண்டுள்ளனர் என அறியப் பெறுகின்றது.

வயல்வெள் ஆம்பல் சூடுதரு புதுப்பூக்

      கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் [நற்.290]

இப்பாடலில் பரத்தையானவள் தலைவியை நோக்கி நீ முன்பு நுகர்ந்த தலைவனை இப்பொழுது நாங்கள் நுகர்கின்றோம். அதனால் உனக்கு இழுக்கொன்றும் இல்லை எனக் கூறுவதாக அமைகின்றது. இது தலைவனை இவ்விருவரும் பாலியல் நிலையில் கொண்ட தொடர்பின் உரிமை பற்றியதாகக் கருதமுடியுமேயன்றி பரத்தை பற்றிய இழிவான பொருண்மையாகக் கொள்ள முடியாது. இவ்விரு பெண்களுக்கான உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த சமூகத்தகுதிபெறல் போராட்டமாக மட்டுமே எண்ணமுடியும்.

ஈண்டு பெருந் தெய்வத்து யாண்டு பல கழிந்தென

      பார்த்துறைப் புணரி அலைத்தலின் புடைகொண்டு

      மூத்துவினை போகிய முரிவாய் அம்பி [நற்.315]

இப்பாடலில் தலைவனோடு தொடர்பு கொண்டிருந்த பெண்களின் [தலைவி, பரத்தை, காமக்கிழத்தி] எதார்த்த வாழ்வியல்நிலை பதிவு செய்யப்பெற்றுள்ளது. சங்ககாலப் பரத்தை, காமக்கிழத்தி ஆகியோரை இழிவான நிலையில் கண்ணுறவியலாது என்பதற்கு இப்பாடலில் கூற்று நிகழ்த்தும் பரத்தையின் அறிவுரையே சான்றாகும். தலைவன் தலைவியைப் பிரிந்து வேறொரு பெண்ணிடம் தங்கியிருந்து வருகின்றான். இதனையறிந்த தலைவி வெகுண்ட நிலையில் அவனை மறுத்தபொழுது இல்லத்திலிருந்த காமக்கிழத்தி தலைவிக்கு சினமுறாதவாறு அறிவுறுத்துவதோடு தலைவனைப் பார்த்து ’முதிர்ச்சியடைந்த பின்னால் என்னைப் போலவே இவளும் பார்க்கப் பெறுவாள். அது எவ்வாறெனில் கடற் தொழிலுக்குப் பயன் படாமல் போன படகு கரையின் ஓரத்தில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தாலும் அதற்குத் தூபம் முதலியன காட்டி மரியாதை செய்து பராமரிப்பர். அவ்வாறே உழைத்து முதிர்ச்சியடைந்த உழவுத்தொழிலுக்குப் பயன் படாத எருதினை புற்கள் நிரம்பிய இடத்தில் கட்டிவைத்துப் பாதுகாப்பர்’ என அறிவுறுத்துகின்றாள்.  முதுமையினைக் காரணம் காட்டி ஒதுக்கிவைக்கப் பெறுதல் என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும் பொதுவான நடைமுறை. ஆனால் பாதுகாக்கப் பெறுதல் என்பது சமூகநீதி. பாலியல் சமூக மதிப்பீடுகளுக்கேற்ப தலைவி, காமக்கிழத்தி, பரத்தை மூன்று நிலையினரும் சமநிலையில் வைத்துப் பார்க்கப் பெற்றுள்ளனர் என்பதோடு முதுமைக்காலங்களில் பாதுகாக்கப் பெற்றுள்ளனர் என்பதும் பாடலில் அமைந்த உள்ளுறை [அம்பி, எருது] வழிப் புலனாகின்றது. மேலும் சங்ககாலச் சமூகத்தில் பின்பற்றப்பட்ட வாழ்வியல் நெறிமுறைகளைக் காமக்கிழத்தி தலைவனுக்கு அறிவுறுத்தும் இடத்தில் நின்று உயர்ந்திருந்தாள் என்பதையும் நோக்கவேண்டும்.  இவ்விடத்தில் காமக்கிழத்தி காம இன்பத்திற்காக மட்டும் பயன்படுத்தப் பெற்றாள் என்ற கருத்து வலுவிழந்து விடுகின்றது. இற்கிழத்தி, காமக்கிழத்தி, பரத்தை முதலிய சொல்லாடல்கள் பிற்காலத்தில் விலைமகள் என்ற நிலையில் நோக்கப் பெற்றது சமூக வரலாற்றுப் பிழை எனலாம். உரையாசிரியர்கள் தங்கள் சமகாலத்தின் சமூக மதிப்பீடுகளை சங்ககாலத்திற்கு அளவுகோலாகக் கொண்டமை இதற்குக் காரணம் என உறுதியாகக் கூறவியலும்.

வாளை வாயின் பிறழ நாளும்

      பொய்கை நீர் நாய் வைகுதுயில் ஏற்கும் [நற்.390]

இப்பாடலில் இளம்பரத்தை அழகிய அணிகள் அணிந்து விழாக்களத்தின் தெருவில் செல்வதைக் கண்டு ஏனைய பெண்கள் பொறமை கொள்வதாகப் பொருள் அமைந்துள்ளது.

கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்

      பழன வாளை கதூஉமூரன் [குறுந்.8]

இப்பாடலில் பரத்தையிடம் சென்ற தலைவன் தயங்கியவாறு மனைவியிடம் வருகின்றான். தலைவி கூறும் மொழிகளுக்குக் கண்ணாடிப் பாவை போலத் தலையை ஆட்டுகின்றான்.

கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்

      பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி [குறுந்.80]

இப்பாடலில் பரத்தை தலைவியிடம் தலைவன் என்னைச் சந்திப்பதை முடிந்தால் தடுத்துக் கொள்; உன் தலைவனைத் தற்காத்துக் கொள் என்று சவால் விடும் தொனிக் குறிப்பு அமைந்துள்ளது.

கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு

      துணைத் தேர்க் கொக்கின் தீம்பழம் [குறுந்.164]

இப்பாடலில் பரத்தை தலைவியை நோக்கி தலைவன் என்னைத் தேடி வருவதற்குக் காரணம் நீ தலைவனுடன் புலத்தலே காரணம் எனக் கூறுவதாக அமைந்துள்ளது.

பொய்கை யம்பலணி நிறக் கொழுமுகை

      வண்டு வாய்திறக்கும் தண்டுறை ஊரனொடு

      இருப்பினும் இருமருங் கினமே கிடப்பின் [குறுந்.370]

இப்பாடலில் பரத்தை தலைவி கூறியதைக் கேட்டுக் கோபம் கொள்ளுவதாகக் குறிப்பு அமைந்துள்ளது.

நிறைவுரை

     பரத்தை, காமக்கிழத்தி, பரத்தமை முதலிய சொல்லாடல்களை விலைமகள் என்ற தற்காலச் சொல்லோடு ஒப்பிட இயலாது.

தொல்காப்பியர் பரத்தையர் குறித்த வகைமையினைச் சுட்டிச் செல்லவில்லை. பரத்தை, காமக்கிழத்தி இவ்விருவரும் தலைவியினின்று வேறானவர் எனக் குறிக்கின்றாரேயன்றி விலைமகள் என்ற நிலையில் இவர்களைக் கருதவில்லை.

உரையாசிரியர்கள் பரத்தை, காமக்கிழத்தி ஆகியோருக்கு அளிக்கும் விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையவில்லை. உரையாசிரியர்கள் தங்களின் சமகாலகட்டச் சமூகப் புரிதலோடு சங்ககால, தொல்காப்பியர் காலப் பரத்தையினை அணுகியுள்ளனர் என அறியமுடிகின்றது.

காமக்கிழத்தி என்பவள் தலைவனின் காம இச்சைக்காக இல்லத்தில் தங்கப் பெறுபவள் என்ற கருத்தாக்கம் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தலைவியின் சகோதரியாக இருக்க வாய்ப்புண்டு. குழந்தைப்பேறு இல்லாத காரணத்தினால் முதலில் முறைப்படி வந்தவள் இரண்டாம் நிலைத் தகுதி பெற்றுக் காமக்கிழத்தி எனச் சுட்டப்பெற்றிருக்கலாம். காமக்கிழத்தியானவள் பனுவல்களின் பலவிடங்களில் தலைவனுக்கும் தலைவிக்கும் உண்டான ஊடலைத் தீர்த்து வைப்பவளாகவும் தலைவனுக்கு ஒழுக்கத்தையும் உலகியலையும் அறிவுறுத்துபவளாகவும் காட்டப் பெறுவது அவளுக்கு இல்லத்தில் தரப்பெற்ற முதன்மையினை உணர்த்துவதாக அமைகின்றது.

பரத்தையர்கள் தலைவனுக்குப் பிறந்த குழந்தையினைப் பாதுகாப்பதும் கொஞ்சி விளையாடுவதும் அணிகலன் அணிவித்து மகிழ்வதும் எனத் தலைவிக்கு இணையான சமூக மதிப்பைப் பெற்றிருந்தனர் என்பதைச் சங்கப் பாடல்கள் வழி அறிய இயலுகின்றது.

பரத்தைக்கும் தலைவிக்குமான ஊடல்களும் ஏச்சுப் பேச்சுகளும் மிகுதியாகப் பனுவல்களில் காணப் பெறுவதன் வழி இவ்விருவரும் சமநிலையில் தலைவனிடம் முதன்மை பெறுவதற்கான போட்டியில் ஈடுபட்டனர் எனக் கருதலாம்.

பரத்தை, காமக்கிழத்தி, தலைவி இம்மூவரும் சமூகத்தில் ஒரே தளத்தில் வைத்து நோக்கப் பெற்றவர்களாகக் கருத இடமுண்டு. பிற்காலத் தொகுப்பாசிரியர்களால் வகுக்கப் பெற்ற திணை, துறைக்குறிப்புகளை அகற்றிவிட்டுப் பனுவல்களை நோக்கினால் பனுவல்களின் பொதுமைக் கருத்துகளை மாற்றுக் கண்ணோட்டத்தில் அணுகலாம்.

பரத்தையர் சங்ககாலச் சமூகத்தில் குழந்தைப்பேறு கொள்வது ஏற்றுக் கொள்ளப்பெறவில்லை என்ற கருத்தாக்கம் வலுப்பெறாதவாறு பரத்தையின் தாய் பற்றிய குறிப்பு அமையப் பெறுகின்றது. தலைவி, காமக்கிழத்தி, பரத்தை ஆகிய மூவருக்கும் முதுமைக் காலத்தில் ஒரே இடம் கொடுக்கப் பெற்றமையும் பாதுகாப்பு வழங்கப் பெற்றமையும் காமக்கிழத்தியின் கூற்றாக உள்ளுறை வழி எடுத்துக் காட்டப் பெறுகின்றது.

சங்கப்பாடல்களில் மிகத் தொன்மையான இனக்குழுவினரின் பதிவு கொண்ட பாடல்களும் கிடைக்கின்றன. நிலவுடைமைச் சமூகம் கால்கொண்ட முடியரசு ஆட்சியின் பாடல்களும் தொகையாகக் கிடைக்கப் பெறுகின்றன. சங்கவிலக்கியங்களை ஒரே பொதுமைக் கண்ணோட்டத்தில் காணும் முறைமையினால் தோன்றிய சமூக வரலாற்றுக் குழப்பமே பரத்தமை குறித்த தவறான புரிதலுக்கு வழிவகுத்தது எனலாம்.

இனக்குழுப் பண்பாட்டு முறைகளில் இருந்த, தலைவி தவிர்ந்த பிற பெண்களோடும் உறவு பூண்டு வாழும் [தலைவி,காமக்கிழத்தி,பரத்தை] பண்பாட்டுத் தொடர்ச்சி வீரயுகப்பண்பாட்டுக் காலக் கட்டத்திலும்  தொடர்ந்த நிலையினையே தொடர்பறுந்த நிலையில் ஆங்காங்கு நாம் சங்கப்பனுவல்களாகக் காணுகின்றோம்.

வீரயுகப் பண்பாட்டுக் காலத்தில் போருக்கு முதன்மை கொடுக்கும் சமூகமாகத் தமிழ்ச்சமூகம் விளங்கியமையால் குழந்தைப்பேறு பெறுபவள் சமூகத்தில் முதன்மை பெறுகின்றாள். குழந்தை பெறுதல் என்பது போரினால் ஏற்படும் உயிரிழப்புகளை சமன் செய்வதாகக் கருதப்பெற்றது. தலைவன் வழியாக முதலில் குழந்தை பெற்றவள் தலைவி என்ற இலக்கியத் தகுதி பெற்றவளாகப் பனுவல்களில் புனையப் பெற்றுள்ளாள் எனக்கருத இடமுண்டு.

துணை நின்றவை

 • தர்ஸ்டன், எட்கர்(தமிழில் க.ரத்னம்), 1986-2005(1909), தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 • பக்தவத்சல பாரதி, 2008, தமிழகப் பழங்குடிகள்(இ.ப.), அடையாளம் பதிப்பகம், திருச்சி.
 • …, 2002, தமிழர் மானிடவியல், அடையாளம் பதிப்பகம், திருச்சி.
 • …, 2011, பண்பாட்டு மானிடவியல், அடையாளம் பதிப்பகம், திருச்சி.
 • …, 2005, மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம் பதிப்பகம், திருச்சி.
 • பரமசிவன், தொ., 2001, பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
 • மாதையன் பெ., 2007(மு.ப.), சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
 • …, சங்க இலக்கியத்தில் வேளாண்சமூகம், சென்னை.
 • சாமி, பி.எல்., 1980, தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு, என்.சி.பி.ஹெச்.பதிப்பகம், சென்னை.
 • ராஜன், கா., 2010, தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
 • நாராயணசாமி ஐயர் அ., 1915, எட்டுத்தொகையுளொன்றாகிய நற்றிணை, சைவவித்தியா நுபாலனயந்திரசாலை, சென்னை.
 • துரைசாமிப் பிள்ளை ஔ சு., 1966, நற்றிணை மூலமும் விளக்கவுரையும், அருணா பப்ளிகேசன்ஸ், சென்னை.
 • செல்வராசு சிலம்பு நா., 2005, சங்க இலக்கிய மறுவாசிப்பு, காவ்யா, சென்னை.
 • முத்தையா கே., 2009, சங்க கால சமுதாயம், பாரதி புத்தகாலயம், சென்னை.
 • சண்முகம் பிள்ளை மு., குறுந்தொகை மூலமும் உரையும்,சென்னை
 • ராஜம் மர்ரே எஸ்., குறுந்தொகை, மர்ரே அண்ட் கம்பெனி, சென்னை.
 • மாணிக்கம் வ.சு.ப., தமிழ்க்காதல், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.
 • மாடசாமி ச., 2005, தமிழர் திருமணம், பாரதி புத்தகாலயம், சென்னை.
 • சங்கரன் கி.இரா., 2013, தென்னகம் அரசும் சமூகமும், என்.சி.பி.கெச்., சென்னை.
 • சத்தியராஜ் த., 2016, ஒப்பியல் உள்ளும் புறமும், விசால் பதிப்பகம்.
 • தமிழண்ணல், 2008, தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும், மதுரை.

முனைவர் .பாலாஜி

தமிழ்த்துறைத் தலைவர்

கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர் – 641 042.