இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடமொழி மரபுக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் வலுவடைந்தன. இந்தியப் பெருநிலப் பரப்பின் விடுதலைக்காகப் போராடிய காங்கிரசு இயக்கத்தின் தமிழ்நாடு கிளைக்குள்ளேயே எதிரெதிர் முகாம்கள் அமையும் அளவுக்கு இக்குரல்கள் வலுவடைந்தன. இவ்வாறு எழுந்த வடமொழி மரபுக்கு எதிரான போக்கினைக் கூர்மைப்படுத்திய நிகழ்வுகளில் முதன்மையானதாகக் கருதப்படுவது சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் ஆகும்.

இக்குருகுலப் போராட்டமே இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தில் சமத்துவச் சிந்தனை பெருகுவதற்கும், பார்ப்பனரல்லாதார் என்ற அடையாளத்தோடு தமிழ் மக்கள் அரசியல், சமூக, பொருளியல் தளங்களில் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கும் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சேரன்மாதேவி குருகுலத்தின் தொடக்கக்கால நிகழ்வுகள் குறித்த வரலாற்றுப் பதிவுகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.

குருகுலத் தோற்றம்

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கில அரசால் தேடப்பட்டு வந்த வ.வே.சு. ஐயர், பிரெஞ்சு ஆட்சியில் இருந்த புதுச்சேரியில் தங்கியிருந்தார்; ஆங்கில அரசின் பொது மன்னிப்புக்குப் பிறகே அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பகுதிக்குள் வந்து வெளிப்படையாக இயங்கத் தொடங்கினார். இதனை ரா.அ. பத்மநாபன், ‘வ.வே.சு. ஐயர்’ என்ற நூலில் பின்வருமாறு குறித்துள்ளார்:

ஐயர் 1920-இல் பொது மன்னிப்பு வந்த பின்பே பிரிட்டிஷ் இந்தியாவுக்குத் திரும்பினார். பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் திருச்சிராப்பள்ளிக்குத் திரும்பிய அவர் புதிதாக எதிலும் ஈடுபடுவதற்கு முன் இந்தியா முழுதும் யாத்திரை போய் வருவதென்று தீர்மானித்தார். புனா, பம்பாய், நாஸிக், ஸபர்மதி (அஹமதாபாத்தில் காந்தி ஆசிரமம் உள்ள இடம்), டெல்லி, ஆக்ரா, அயோத்தி, கயை, காசி முதலிய ஊர்களுக்குப் போய் வந்தார் ஐயர். காசியில் அவர் இரண்டு விரதங்கள் எடுத்துக் கொண்டார். ஒன்று தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுவது; இரண்டு காங்டியில் உள்ள ஆரிய ஸமாஜ குருகுலம் போலத் தமிழ் நாட்டில் ஒரு கல்வி நிலையம் துவக்குவது. (ரா.அ. பத்மநாபன், 1991:188, 189)

ஆங்கிலக் கிறித்தவக் கல்விக்கு மாற்றாக மரபுவழிக் குருகுலக் கல்வியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று பாரதியார், திரு.வி.க. போன்றோர் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை ஒத்த சிந்தனையுடையவராகவே வ.வே.சு. ஐயரும் இருந்துள்ளார். இதனை இவர் காசியில் எடுத்துள்ள விரதங்கள்வழி அறிய முடிகிறது. காசியில் மேற்கண்டவாறு உறுதி எடுத்துக் கொண்ட வ.வே.சு. ஐயர், 1920 சூன் திங்கள் சென்னை திரும்பினார். அப்போது ‘தேசபத்தன்’ ஆசிரியர் திரு.வி.க. வுக்கும் அதன் நிர்வாகி சுப்பராய காமத்துக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்திருந்தன. எனவே திரு.வி.க. ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக வ.வே.சு. ஐயரை ஆசிரியர் பொறுப்பேற்குமாறு சுப்பராய காமத் வேண்டினார். இந்நிலையில் 1920 சூலை 31-ஆம் நாள் ‘தேசபக்தன்’ ஆசிரியராக வ.வே.சு. ஐயர் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றதிலிருந்து ஒன்பது திங்கள் வரை வெளிவந்த ‘தேசபக்தன்’ அதன் பின்னர் நிர்வாகச் சிக்கல்களால் நின்றுபோனது. வ.வே.சு. ஐயர், ‘தேசபக்தன்’ ஆசிரியராக இருந்த போது அவ்விதழில் வெளியான தலையங்கத்தின் பொருட்டு ஆங்கில அரசு அவரைக் கைது செய்து  ‘பெல்லாரி’  சிறையில் அடைத்தது. ஒன்பது திங்கள் சிறை வாழ்க்கை முடிந்து தமது சொந்த ஊரான திருச்சிராப்பள்ளி வரகனேரிக்கு வந்து சேர்ந்தார் வ. வே.சு. ஐயர். வந்தவுடன் ஏற்கனவே தாம் காசியில் எடுத்த உறுதியின்படி குருகுலம் அமைப்பதில் நாட்டம் செலுத்தினார்.

தாம் ஆரம்பிக்க விரும்பிய கல்விக் கூடத்துக்குத் தக்க இடம் தேடி, ஐயர் பல இடங்களைப் பார்த்தார். சென்னையில் கோடம்பாக்கம், மன்னார்குடி, வெண்ணாற்றங்கரை (தஞ்சாவூர்) முதலிய ஊர்களில் அவர் பார்த்த இடங்கள் திருப்தி தரவில்லை. இந்தச் சமயம் திருநெல்வேலி ஜில்லாவில் கோயில்பட்டியில் ஒரு காங்கிரஸ் மகாநாட்டில் தலைமை வகிக்கும்படி ஐயரை அழைத்தார்கள். மகாநாடு முடிந்தபின், அவர் அதே ஜில்லாவில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊருக்குப் போக நேர்ந்தது. கல்லிடைக்குறிச்சி தாலுக்கா போர்டு பள்ளிக்கூட ஆசிரியர்கள் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து அந்தப் பள்ளியில் வேலை செய்வதில்லையென்று தீர்மானித்து விட்டார்கள். அவர்கள் பிறகு தாங்களே சொந்தமாக ‘திலகர் வித்தியாலயம்’ என்ற தேசீயப் பள்ளிக் கூடத்தை ஆரம்பித்தார்கள். ஐயர் கல்லிடைக் குறிச்சிக்குப் போனபோது திலகர் வித்தியாலயத்தை எடுத்துக் கொண்டு நடத்தும்படி எல்லாரும் அவரை வேண்டினார்கள் ஐயர் சம்மதித்தார். (மேலது, 1991:215, 216)

‘திலகர் வித்தியாலயம்’ வ.வே.சு. ஐயரின் பொறுப்புக்கு வந்த பின்னர் ‘தமிழ்க் குருகுல வித்தியாலயம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. இக் குருகுலத்தை நடத்துவதற்குப் பாரத்வாஜ ஆசிரமத்தையும் ஐயர் தோற்றுவித்தார்.

வ.வே.சு. ஐயரால் நடத்தப் பெற்ற தமிழ்க் குருகுல வித்தியாலயத்தின் தோற்றம் குறித்து அறிஞர்களிடம் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. ரா.அ.பத்மநாபனும் (மேலது, ப. 227) புலவர் அரசும் (1966, ப. 86.) பழ. அதியமானும் ( 2013, ப. 23) குருகுலம் 1922-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.  பெ.சு. மணியும் ( 2003, ப. 166) கோ.செல்வமும் (2000 ப.9), குருகுலம் 1923-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.

குருகுலத் தொடக்கவிழாக் குறித்து, குருகுலவாசியான ஸ்ரீராமநந்தன் 15.12.1922 (துந்துபி ஆண்டு கார்த்திகை 30-ஆம் தேதி) நாளிட்ட நவசக்தி வார இதழுக்கு அனுப்பிய செய்தியில்,

இன்று (கார்த்திகை, 23உ) வித்தியாலயமானது ஊருக்கு (கல்லிடைக் குறிச்சிக்கு)த் தென்புறத் திலுள்ள ஓர் அழகிய தோப்பில் திறந்து வைக்கப் பட்டது. நேற்றே தோப்பிலுள்ள கட்டடத்தில் புண்ணியா விவாசனம் வேதமுறைப்படி நடந்தது. இன்று காலை 4 மணிக்கு ஸ்ரீமான் வ.வே. ஸூப்ரமண்ய ஐயரும் ஸ்ரீமகா தேவய்யரும் சிஷ்யர்களும் குருகுல மாணாக்கர்களும் இதுவரையில் இருந்து வந்த கிருகத்திலிருந்து பஜனை செய்து கொண்டு தோப்புக்குச் சென்றார்கள். தேசீயப் பள்ளிக்கூட உபாத்தியாயர் ஸ்ரீமான் கிருஷ்ணய்யர் பனியை லட்சியம் செய்யாமல் ஆசிரமத்தின் கிருகப் பிரவேச காலத்திலேயே வந்து உதவினார். புதிய இடத்தில் எல்லோரும் பஜனை செய்துவிட்டுத் தாமிர பரணியின் நிர்மலமான தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்து விட்டுத் திரும்பி வந்து காலை 8 மணிக்கு எல்லோரும் பஜனை செய்து கொண்டு உஞ்சவிருத்தி செய்தார்கள். ஜனங்கள் மிக உற்சாகத்தோடு அரிசி பிட்சை இட்டார்கள். சாயங்காலம் 5 மணிக்கு லட்சுமீவராக ஸ்வாமி ஸன்னிதானத்தில் ஸ்ரீமான் வ.வெ.ஸூ. ஐயர் குருகுலத்தைப் பற்றி 1 மணி நேரம் ஒரு பிரசங்கம் செய்தார்……….. பாட வகுப்புகள் தை மாதம் முதலே முறையாகத் துவக்கப்படும். அப்போது தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (நவசக்தி, 15.12.1922)

என்று கூறியுள்ளார். இச்செய்தியின் தொடக்கத்தில் உள்ள ‘கார்த்திகை 23-ஆம் தேதி’ என்ற குறிப்பை வைத்துக் கணக்கிட்டால் 8.12.1922 அன்று குருகுலம் தொடங்கப்பட்டது உறுதியாகிறது. குருகுலம் தொடங்கப்பட்டது குறித்த மேற்கண்ட நால்வரின் குறிப்புகளில் பழ. அதியமானின் குறிப்பு மேற்குறித்த மேற்கோள் செய்தியுடன் ஒத்து உள்ளது. அவர் குருகுல தினசரிக் குறிப்பேட்டைச் சான்று காட்டி இம் முடிவுக்கு வந்துள்ளார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் அடிப்படைத் தரவுகள் இன்றிக் கூறியுள்ளனர்.

சேரன்மாதேவியில் குருகுலம்

கல்லிடைக்குறிச்சியில் தமது குருகுலத்தைத் தொடங்கிய வ.வே.சு.ஐயர், குருகுலத்தைப் பெரிய அளவில் நடத்துவதற்காகத் தக்க இடம் தேடிக் கொண்டிருந்தார்.

திருநெல்வேலியை அடுத்த சேரமாதேவியில் ஒருவர் தமது முப்பது ஏக்கர் நிலத்தை விற்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். ஐயர் அந்த நிலத்தைப் போய்ப் பார்த்தார். முப்பது ஏக்கருக்கும் ரூபாய் மூவாயிரம் விலை சொன்னார்கள். ஐயர் அந்த முப்பது ஏக்கர் நிலத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார். பத்திரிகைகளில் ஒரு வேண்டுகோள் விடுத்தார். செட்டி நாட்டில் உள்ள கானாடுகாத்தான் என்ற ஊரில் வயி.சு. சண்முகனார் என்ற இலட்சியவாதி ஒருவர் இருந்தார். அவர் காந்தியடிகளிடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்…………… காந்தியவாதியான ஐயர் காந்தியடிகளின் நெறிமுறையில் குருகுலம் நடத்துவார் என்று எண்ணிய சண்முகனார் சற்றும் காலம் தாழ்த்தாது குருகுலம் அமைக்க நிலம் வாங்குவதற்கு வேண்டிய தொகை மூவாயிரத்தையும் உடனடியாகக் கொடுத்து உதவினார். ( நாரா நாச்சியப்பன், 1994:32–34)

நிலம் வாங்கியபின் தமிழ் மக்களின் ஆதரவுடன் குருகுல அமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்றன. கல்லிடைக்குறிச்சியில் இயங்கிய குருகுலம் சேரன்மாதேவிக்கு மாற்றப்பட்டுப் புதுப்பொலிவுடன் தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில் வ.வே.சு. ஐயரால் புதுவையில் நடத்தப்பெற்ற அச்சுக்கூடம் சேரன்மாதேவி குருகுலத்துக்கு மாற்றப்பட்டது. மூவாயிரம் நூல்கள் அடங்கிய நூல்நிலையம் ஒன்றும் குருகுலத்தில் உருவாக்கப்பட்டது. வ.வே.சு. ஐயரை ஆசிரியராகக் கொண்ட ‘பாலபாரதி’ என்ற திங்கள் இதழ் குருகுலத்திலிருந்து வெளியாயிற்று.

நன்கொடை திரட்டும் முயற்சி

கல்லிடைக்குறிச்சியில் குருகுலத் தொடக்கவிழா நடைபெறுவதற்கு முன்பே வ.வே.சு.ஐயர் தாம் தொடங்க இருக்கிற குருகுலத்தின் நோக்கத்தையும் செயல்திட்டத்தையும் அதனைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டியதன் இன்றியமையாமையும் விளக்கி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையின் பிற்பகுதி,

வித்தியாலயத்தின் உத்தேசங்களனைத்தையும் நிறை வேற்ற லக்ஷhதி லக்ஷ ரூபா மூலதனமாக வேண்டும். ஹரித்துவாரத்திலுள்ள ரிஷிகுலத்தையும் குருகுலத் தையும் ஸ்ரீரவீந்திரநாத டாகூரின் சாந்தி நிகேதனத்தையும் மகாத்மாவின் சந்தியாக்கிரக ஆசிரமத்தையும் குஜராத் வித்யாபீடத்தையும் ஆதரிக்க வடநாட்டுச் செல்வர் மூலதனம் உதவி வருகிறது போலத் தமிழ்நாட்டுச் செல்வரும் நமது வித்தியாலயத்தை ஆதரித்துப் போஷிக்க முன் வருவார்கள் என்று நம்புகிறோம். ஹரித்துவார குருகுலத்துக்கு ஒரு மிராசுதார் எழுநூறு ஏக்ரா பூமி உதவினார். குஜராத் வித்யாபீடத்துக்கு ஒரு மாதத்திற்குள் பத்து லக்ஷ ரூபா மூலதனமாகச் சேர்ந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இத் தமிழ்நாட்டுக் குருகுலத்துக்குத் தங்களால் இயன்ற உதவி புரிந்து தமது பேரை அழியாப் புகழுடையதாகச் செய்யும்படி தமிழ்நாட்டுச் சீமான்களை வேண்டுகிறோம்.

வித்தியாலயத்துக்கு உதவி செய்ய விரும்பு கிறவர்கள் அடியிற் கண்ட வழிகளுள் ஒரு வழியால் அல்லது பல வழிகளாலும் உதவி புரியலாம்.

(க்) மூலதனத்துக்காக மொத்தத் தொகையாக ஒரு தொகை கொடுத்துவிடலாம்.

(ங்) பூமிகள் தானம் செய்யலாம்.

(ச்) வருஷா வருஷம் ஒரு தொகை அனுப்பி வரலாம்.

(ஞ்) தங்கள் வருமானம் அல்லது லாபத்தில் ஒருபாகத்தை மகமைப் பணமாக எடுத்து வைத்து அதை மாதாமதம் ஆசிரமத்துக்கு அனுப்பி வரலாம்.

(ட்) தினம் ஆசிரமத்துக்கென ஒரு பையில் கொஞ்சம் அரிசி எடுத்து வைத்து மாதா மாதம் அல்லது வாராவாரம் ஆசிரமத்தின் வசூல்தாரர்களிடம் கொடுத்து வரலாம்.

(ண்)விவாகம் முதலிய சந்தர்ப்பங்களில் ஆசிரமத்துக்குச் சம்பாவனைகள் செய்தனுப்பலாம்.

(த்) அறுவடையாகும்போது ஆசிரமத்துக்குக் களத்திலேயே நெல் முதலிய தானியங்கள் தானமாகக் கொடுக்கலாம்.

முதல் வருஷத்தில் எதிர்பார்க்கப்படும் செலவு பின்வருமாறு :

    ரூ.

வித்தியாலய மாணவர், உபாத்தியாயர், அவர்கள் குடும்பம் ஆகிய

இவர்களின் சாப்பாட்டுச் செலவு சுமார் ௩ழ பேருக்கு                 –     ௫௪oo

வேலைக்காரர்                                           –     oo

விளக்கு                                                –     oo

புத்தகங்கள்                                             –     oo

சிகிச்சைச் சாமக்கிரியைகள்                                 –     oo

அச்சுக்கூலி, பிரயாணச் செலவு, தபால், காகிதம் முதலிய செலவுகள் –    oo

பர்ணசாலைகள் கட்ட                                           –     ooo

பாடசாலைத் தளவாடங்கள்                                –     oo

பயிர்த்தொழிலுக்கு வேண்டிய மூலதனம்                      –     கooo

ராட்டினங்கள், பருத்தி                                    –     oo

ஆக மொத்தம் ரூ.                                        –     o,oo

      அன்பர்கள் செய்ய உத்தேசிக்கும் உதவியைத் தாமதமில்லாமல் ஸ்ரீ.வ.வே. ஸூப்ரஹ்மண்ய ஐயரின் அடியிற் கண்ட விலாசத்துக்கு அனுப்பும்படி வேண்டுகிறோம். அனுப்பும் பணங்களின் கணக்கு சென்னை தினசரிப் பத்திரிக்கைகளில் வெளியிடப்படும். வித்தியாலயத்துக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்ப விரும்புவோரும் வித்தியாலயத்தில் உபாத்தியாயராய்ச் சேர விரும்புவோரும் அடியிற் கண்ட விலாசத்துக்கே எழுதிக் கொள்ளவேண்டும்.

வ.வெ. ஸூப்ரஹ்மண்ய ஐயர், ‘பாரத்துவாஜ ஆசிரமம்’,கல்லிடைக் குறிச்சி, திருநெல்வேலி ஜில்லா.( நவசக்தி, 17.11.1922)

என்று அமைந்துள்ளது. வ.வே.சு ஐயரின் இவ்வறிக்கையை 17.11.1922 நாளிட்ட நவசக்தி வார இதழின் முதல் பக்கத்தில் திரு.வி.க. வெளியிட்டதுடன் குருகுலத்துக்கு ஆதரவாகத் தாமும் ஓர் அறிக்கையை அவ்விதழிலேயே வெளியிட்டார். அவ்வறிக்கையில் திரு.வி.க.,

நமது நாட்டின் விடுதலைக்கு முப்பத்தாறு ஆண்டுகளாக நாம் பல வழிகளிலும் முயன்று வந்தோம். இப்பொழுது சத்தியாக்கிரக நெறியில் தேசீய வாழ்வில் விடுதலை விளங்குவதைக் கண்டோம். சத்தியமும் சுதேசமும் பாரத மாதாவின் கட்டை அறுக்குஞ் சிறந்த கருவி களாகும். இவ்விரண்டை அடிப்படையாகக் கொண்டே ஒத்துழையாமை இயங்குகிறது. இவ்வொத் துழையாமையால் வெற்றி நிகழ வேண்டுமாயின் நாம் இரண்டு பொருள் நாடி உழைத்தல் வேண்டும். ஒன்று கதர்; மற்றொன்று நாட்டுக்கல்வி. நாட்டுக் கல்வியால் நமது நாடு ‘நாடாகும்’ என்பதில் சிறிதும் ஐயமில்லை. நாட்டுக்கல்வி என்று சொல்லிக் கொண்டே மேல் நாட்டுக் கல்விமுறையில் நமது நாட்டை நுழைப் பதனால் நமது நாடு காடாகும் என்று உறுதியாகக் கூறுகிறோம். நமது நாட்டுக் கல்வியை நமக்குரிய குருகுல முறையில் போதித்தல் வேண்டும். வட இந்தியாவில் பல குருகுல வித்தியாலயங்கள் காணப்பட்டு ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் குருகுல வித்தியாலயங்களில்லையே இல்லையே என்று வருந்திக் கொண்டிருந்தோம். இப்பொழுது தமிழ்க் குருகுல வித்தியாலயம் கல்லிடைக்குறிச்சியில் காணப்பட்டிருப்பதைக் கேட்டு நாம் வரம்பிலா இறும்பூதெய்துகிறோம். அதைப் பற்றிய அறிக்கை முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. நேயர்கள் அதை வாசிக்க. அன்பர்கள் அறிக்கையை வாசிக்கும் அளவோடு நின்று விடாது, வேண்டுவன செய்ய எழுச்சி கொள்வார்களாக. கல்லிடைக்குறிச்சி குருகுலம் ஸ்ரீமான் வ.வே. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் தலைமையின் கீழ் நடைபெறுமென்பதை மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறோம். குருகுலத்துக்குத் தக்க தலைவர் கிடைத்தது தமிழ்நாட்டின் அதிர்ஷ்டமென்றே கூறலாம். ஸ்ரீமான் வ.வே.சு. ஐயர் அவர்கள் மேல்நாட்டு மொழிகளில் – ஏறக்குறைய நான்கு மொழிகளில் புலமை பெற்றவர்; கீழ் நாட்டு மொழிகளில் நான்கு ஐந்து மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்; நமது தாய்மொழியாகிய தமிழில் பெருங்காதலுடையவர். பன்மொழிப் புலமையோடு ஐயர் அவர்கள்பால் வைதிக ஒழுக்கமும் தேச பக்தியும் தியாகமும் அடக்கமும் மலர்ந்திருப்பதைக் குறித்து நாம் விரித்துக் கூற வேண்டுவதில்லை. இத்தகைய பெரியார் ஒருவர் தமிழ் நாட்டுக்குப் புத்துயிர் வழங்கக் குருகுலத்தை நடத்துமாறு வெளிவந்துள்ள இச்சமயத்தைத் தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். வடஇந்தியாவிலுள்ள குருகுல வித்தியாலயங்களுக்கு ஆங்குள்ளவர்களால் இலட்சக் கணக்காகப் பொருள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்காக வாவது பொருள் வழங்க லாகாதா? தமிழ் நாட்டில் வீண் வழக்குகளில், களியாடல்களில், ஆலயங்களில், அபிஷேகங்களில், திருவிழாக்களில் எவ்வளவு பொருள் செலவழிக்கப் படுகிறது அவ்வளவில் ஒரு பகுதியாவது குருகுல வித்தியாலயத்துக்கு செலவழிக்கலாகாதா? போதிய நிதி உதவ நேயர்கள் முற்படுவார்களாக. பண்டைக் காலத்தில் தேசத்தில் தருமம் வளர்ந்தது; இக்காலத்தில் அதர்மம் வளர்கிறது என்று சொல்லப்படுகிறது. பண்டை நாளில் குருகுல வித்தையால் தருமம் வளர்ந்தது. இந்நாளில் அஃதின்மையால் அதர்மம் வளர்கிறது. ஆதலால் நேயர்கள் குருகுலத்தின் அவசியத்தை யுணர்ந்து போதிய உதவி புரிவார்களாக.           ( மேலது )

என்று வேண்டுகோளும் விடுத்திருந்தார்.

டாக்டர் வரதராசுலு நாயுடு தமது ‘தமிழ்நாடு’ இதழின் வாயிலாகக் குருகுலத்துக்கு ஆக்கந் தேடினார். குமரன், சுதேசமித்திரன், இந்து ஆகிய இதழ்களும் குருகுலத்துக்கு ஆதரவாக எழுதின. இந்நிலையில் குருகுலத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

ஆரம்பித்த நான்கு மாதங்களை உத்தேசித்து வளர்ச்சி மிகத் திருப்திகரமாக இருந்தும், குஜராத்து நாடு தனது வித்தியா பீடத்தை கவனித்தது போலத் தமிழ்நாடானது தன்னதாக இருக்கிற இவ்வித்தியாலயத்தை இன்னும் கவனிக்கத் துவங்காமலிருப்பது பரிதபிக்கத் தகுந்த விஷயமாக இருக்கிறது. வெளிநாடுகளில் அங்கங்கேயுள்ள தமிழரும் நகரத்தாரும் ஆசிரமத்தின் மீதும் வித்தியாலயத்தின் மீதும் அபிமானம் காட்டி வருவதற்காக ஆசிரமம் அவர்களுக்குப் பெரிதும் நன்றி காட்டுகிறது. ஐக்கிய மலேய நாடுகளிலுள்ள சுங்கேசிப்பட்டில் வசிக்கும் ஸ்ரீவீராசாமி என்பவர் இக்குருகுலம் ஸ்தாபிக்கப் பட்டதாகக் கேள்வியுற்றதினின்று ரயிலில் இரண்டாவது வகுப்பு வண்டிகளில் ஏறுவதில்லை யென்றும் ரிக்ஷா வண்டி கூட அனாவசியமாக ஏறுகிறதில்லையென்றும் சங்கற்பித்துக் கொண்டு அவ்விதம் மூன்றாவது வகுப்பில் ஏறிச் செல்வதாலும் பாதசாரியாகச் செல்வதாலும் ஏற்படக்கூடிய லாபத்தை ஆசிரமத்துக்கு அனுப்பி விடுகிறதாகத் தீர்மானித்து இதுவரையில் இம்மாதிரியாக நூறு ரூபா மிகுத்து நமக்கனுப்பி யிருக்கிறார். இவருடைய அபிமானத்தையும் உதவி செய்ய முயலும் போக்கையும் தமிழராய்ப் பிறந்த அனைவருக்கும் உதாரணமாய் எடுத்துக் காட்ட விரும்புகிறோம். ஒவ்வொருவரும் தங்களுடைய பழக்கவழக்கங்களில் சில சாமானியமான மாறுதல்கள் செய்து கொண்டு ஆசிரமத்துக்கு வெகு இலேசாக ஸ்திரமான மூலதனம் சேருவதற்கு உதவி புரிந்துவிடலாம். எவ்வளவுக் கெவ்வளவு சீக்கிரம் ஸ்திரமான வரும்படியளிக்கத் தக்க மூலதனம் சேருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரம் வித்தியாலயம் கல்வியனைத்துக்குமே ஒரு தாயகமாக விளங்கித் தமிழ்நாட்டுக்கு மாத்திர மல்லாமல் பாரத நாடனைத்துக்கும் உலகப் பொதுவுக்கும் கூட எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி வழியைக் காட்டும் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கும்.

      தற்பொழுது ஆசிரமத்துக்காகச் சேரமாதேவியில் சுமார் 40 ஏக்கர் விஸ்தீர்ணமுள்ள ஒரு பூமி வாங்க ஏற்பாடு செய்தாகிவிட்டது. அதில் பர்ண சாலைகளும் கெட்டிக் கட்டடமாக ஒரு புஸ்தக சாலையும் அமைக்க வேண்டும். கல்வி புகட்டற்குரிய நவீன சாதனங்களும் சாமக் கிரியைகளும் வாங்க வேண்டியிருக்கிறது. வித்தியார்த்திகளுக்கு ஒரு தொழிற்சாலையும் அச்சடுக்கக் கற்பிப்பதற்கும், ஒரு பெரிய மாதாந்தரப் பத்திரிக்கையும் தமிழ் நூல்களும் அச்சிடுவதற்கும் ஓர் அச்சுக் கூடமும் தேவையாக இருக்கிறது. இவையனைத்துக்கும் இவ்வருஷத்தில் குறைந்தது முப்பதினாயிரம் ரூபா வேண்டியிருக்கிறது. தவிர ஆசிரமம் நிலைபெற்று நிற்பதற்கு மூலதனம் ஐந்து லட்ச ரூபாயாவது வேண்டும். தமிழ் நாட்டவர் அவர்களுடைய இயற்கைக் குணமாகிய கொடைக் குணத்தைக் காட்டி ஆசிரமத்தின் பெரு நோக்கங்களை நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்புகிறோம். ஆசிரமவாசிகள் தங்களால் இயன்ற தியாகம் அனைத்தும் காட்டி வருகிறார்கள். உபாத்தியாயர் ஊழியமாக ஒன்றும் பெறவில்லை. உபாத்தியாயர்களின் பத்தினிகளோ யாதொரு பிரதிப் பிரயோஜனத்தையும் எதிர்பாராமல் இதுவரையில் சமையற் கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள்.

      ஆசாரியார் ஸ்ரீ.வ.வே. ஸூப்ரஹ்மண்ய ஐயர் அவர்கள் தமக்குச் சொந்தமான குறள், கம்பராமாயண ஆங்கில விமரிசனம் ஆகிய இரண்டு நூல்களின் பதிப்புரிமை யனைத்தையும் ஆசிரமத்துக்கே தத்தம் செய்து விட்டார்கள். இவற்றின் மதிப்பு ரூ.8000 ஆகிறது. தவிர தமக்காகக் கிடைக்கும் பணத்தையெல்லாம்  ஆசாரியார், ஆசிரமத்தின் நிதிக்கே சேர்த்து விடுகிறார். சிங்கப்பூரிலுள்ள செந்தமிழ்த் திலகமான ஸ்ரீ மகேச குமார சர்மா தம்முடைய அரிய நூல்களான வால்மீகி விஜயம், வர்த்தமான பாரதம் ஆகிய இரண்டு நூல்களிலிருந்தும் கிடைக்கும் பணத்தில் சரி பகுதியை ஆசிரமத்துக்கெனத் தத்தம் செய்துவிட்டார்கள். தங்கள் கையைக் குறுக்காமல் தாராளமாய் உதவி செய்து இந்தத் தியாகங்களை யெல்லாம் பயனுள்ள தியாகமாக்கித் தமிழ் நாட்டுக்கு அழியாப் புகழ்தேடி வைக்க வேண்டும் என்று தமிழ் நாட்டவரை மறுபடியும் வேண்டிக் கொள்வோம். (மேலது, 4.5.1923)

என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகு சூழலில் வ.வே.சு. ஐயர் குருகுல வளர்ச்சிக்கு நிதி உதவி செய்யுமாறு தமிழ்நாடு காங்கிரசிடம் விண்ணப்பித்தார்.

அடுத்துக் கூடிய செயற்குழுவில் இவ்விண்ணப்பம் ஆலோசனைக்கு வைக்கப்பட்டது . . . . குருகுலம் ஒரு தேசீய நிறுவனம். எனவே அதன் வளர்ச்சிக்கு காங்கிரஸ் செயற்குழுவிலிருந்து பத்தாயிரம் வழங்குவதென்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. முதல் பகுதியாக ரூபாய் ஐயாயிரம் வழங்குவதாகவும் சிறிது காலம் கழித்து ஐயாயிரம் கொடுப்பதாகவும் செயலாளர் பெரியார் அறிவித்தார். உடனடியாக காங்கிரஸ் பணத்திலிருந்து ரூபாய் ஐயாயிரத்துக்குச் செக் வழங்கப்பட்டது. (நாரா நாச்சியப்பன், 1994:35-37)

இந்நிலையில் வ.வே.சு. ஐயர் ‘பாலபாரதி’ முதல் இதழில் குருகுலத்துக்குத் தமிழ் மக்களின் ஆதரவு இன்னும் பெருக வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்தி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவ்வேண்டுகோளில்,

காலக்கிரமத்தில் புதிய யந்திரங்கள் நிர்மாணிக்கத் தகுந்த கூரிய அறிவுள்ள மாணவர்கள் இவ் ஆசிரமத்தில் தோன்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் தமிழ்நாட்டு வியாபாரிகள் இவ் ஆசிரமத்திற்கு ஓர் நியதமான வருவாயை ஏற்படுத்தித் தர இருக்கிறார்கள். இதற்கென ஓர் ‘மகமையை’ எடுத்து வைப்பது அவர்களுக்கு அசாத்தியமில்லை. இவ்வாறு ஏற்படுத்தித் தந்துவிட்டார்களானால் ஓர் சிறந்த கொல்லு பட்டடை வைத்து மாணவர்களுக்கு யந்திரங்களை அமைக்கும் ஆற்றலை உண்டாக்கித் தர ஏற்பாடு செய்வோம். அப்பொழுது அவர்களது ஜயம் தமிழ் நாட்டின் ஜயமாகும். அப்பொழுது நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் இங்கிலாந்தில் தோன்றிய யந்திர சிருஷ்டனை இயக்கமும், அதனால் பெருகிய கைத்தொழில் அபிவிருத்தியும், அவற்றின் குற்றமின்றி, இன்றைக்கு நம் செல்வத் திருநாட்டில் தோன்றும் வியாபாரிகள் எடுத்து வைக்கும் சிறு ‘மகமை’ இத்தனை வேலை செய்து விடும்.

      குருகுலத்துக்குப் பொருள் ஈட்ட ஆசிரமவாசிகள் பல இடங்களுக்கும் எப்பொழுதும் போய்க் கொண்டிருத்தல் அசாத்தியமாக இருக்கும். ஆகையால் தமிழபிமானிகளும் தேசாபிமானிகளும் நாங்கள் வந்து கேட்காமலே தங்களால் கூடிய உதவிகளைச் செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுவேன்.

      சிங்கப்பூர் முதலிய கீழ்நாடுகளுக்குப் பழுத்த தேசாபிமானியும் இக்குருகுலத்தின் உபாசிரியரு மான பிரம்மஸ்ரீ மகாதேவய்யர் தமது சொந்தக் காரியங்களையெல்லாம் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். தன்னலம் கருதா அவருடைய தேசாபிமான தர்மாபிமானங்களின் பயனாக அந்தப் பிரதேசத்துத் தமிழபிமானிகள் இது வரையில் சுமார் கo,ooo(பதினாயிரம்) வெள்ளிகள் அவரிடம் குருகுலத் துக்காக உதவி செய்திருக்கிறார்கள். தொகைகள் இன்னும் வசூலாகிக் கொண்டு வருகின்றன. ஆனால் பொது நிதிக்கு மொத்தமாக உதவுவதுடன் இம் மாகாணத்திலும் கீழ் நாடுகளிலும் உள்ள குருகுல அபிமானிகள் குருகுலத்துக்காக ஓர் சிறு ‘மகமை’ யை எடுத்து வைத்து, அதை விடாமல் குருகுலத்துக்கு அனுப்பி வந்தால் அது அமோகமாய்ப் பெருகி, சாஸ்திர வகுப்புகளும் தொழிற்சாலைகளும் வைத்து விமரிசையாக நடத்த எமக்குச் சக்தியைத் தரும். நமது நாட்டு மடங்களும் கோபுரங்களும் இதே மாதிரி ‘மகமை’ யினாலேயே வெகு லேசாகக் கட்டப்பட்டும் காக்கப்பட்டும் வந்தன என்பதை உணர்ந்து தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் வருமானத்திலும் இலாபத்திலும் அவர்களுக்குத் தோன்றிய பிரகாரம் ரூபாய்க்கு இத்தனை பைசா என்று எடுத்து வைத்து, வருஷத்தில் நான்கு தடவைகளிலோ அல்லது சௌகரியப்பட்ட பிரகாரமோ குருகுலத்துக்குச் சேர்ப்பித்து வரவேண்டும் என்று மிகவும் வேண்டிக் கொள்ளுவேன். (பாலபாரதி, அக். 1924)

என்று கூறியுள்ளார். குருகுல வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு காங்கிரசு செய்த உதவி, தலைவர்களின் ஆதரவு, வ.வே.சு. ஐயரின் உருக்கமான வேண்டுகோள் ஆகியவற்றால் குருகுலம் ஓர் இலட்சிய நிறுவனம் என்று நாட்டு மக்கள் நம்பினர். விடுதலை பெற்ற ஒரு சமத்துவ நாட்டை உருவாக்கக் கிடைத்துள்ள அருமருந்து என அவர்கள் நினைத்தனர். அதன் வளர்ச்சிக்குத் துணை நின்றனர். நன்கொடைகள் குவியத் தொடங்கின. புதுப்பொலிவுடன் குருகுலம் இயங்கத் தொடங்கியது. இவற்றின் பயனாகக் குருகுலத்தில் மாணவர்களின் எண்ணிக்கை கூடியது.

மாணவர் சேர்க்கை

வ.வே.சு. ஐயர் தாம் நடத்திய குருகுலத்தில் பயில விரும்பும் மாணவர்களுக்கான தகுதிகள், மாணவர்களுக்குரிய கட்டணம், மாணவர்கள் உடன் எடுத்து வர வேண்டிய பொருட்கள் ஆகியன குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது இதழ்களின் வாயிலாக வெளியிட்டு வந்தார்.

மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கல்வி கற்பிக்கக் கடமையுணர்வும் தியாக உள்ளமும் கொண்ட ஆசிரியர்கள் தேவையாதலால் அத்தகைய ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியப் பயிற்சி வகுப்பு ஒன்று குருகுலத்தில் தொடங்கப்பட்டது. அப்பயிற்சி வகுப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்துக் குருகுல நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இப்பொழுது ஒரு பத்து மாணவருக்குத் தேசிய முறையில் கல்வி போதிக்கும் முறையைக் கற்பிப்பதற்காக ஒரு போதனாமுறை வகுப்பு வருகிற பங்குனி மாதம் 14ந் தேதி துவக்கப் போகிறோம். தேசியக் கல்விக்காக உழைக்க விரும்பும் வாலிபர் இவ்வகுப்பில் சேர்ந்து பயில விரும்பினால் நமது குருகுலக் காரியஸ்தருக்கு எழுதிக் கொள்ளலாம்.

அபேஷகர்கள் ஸ்கூல் பைனல் அளவு வரையாவது படித்திருக்க வேண்டியது. தமிழிலக்கியம் படித்திருக்கிற அபேக்ஷகர் அதிகமாகப் பாராட்டப்படுவர். பயில விரும்புகிறவர்கள் சாப்பாட்டுக்காகவும் குடியிருப் புக்காகவும் கல்விக்காகவும் சேர்த்து மாதம் ரூ.15 கொடுக்க வேண்டியது. பிரவேச மனுவில் அபேக்ஷகர் தங்கள் யோக்கியதை (அதாவது எதுவரையில் படித்திருக்கிறார்கள் என்பது), முன்னே செய்துள்ள தற்காலம் பார்க்கின்ற அலுவல்கள், தற்கால வயது ஆகிய இவைகளைக் குறித்து அனுப்ப வேண்டியது. அவர்களுடைய சீலத்தையும் ஒழுக்கத்தையும் பற்றி அறிந்திருக்கிற சில கிரகஸ்தர்களின் பெயர்களையும் அபேக்ஷகர் குறித்தனுப்ப வேண்டும். மனுவோடு அவர் களுடைய சீலத்தைக் குறித்து ஒரு நற்சாக்ஷிப் பத்திரமாவது சேர்த்தனுப்பப் படவேண்டும். பயில வேண்டிய காலம் ஒரு வருஷமாகும். கையினால் வேலை செய்யப் பின்வாங்காதவர் தாம் ஆசிரம வாழ்க்கைக்கு அருகராவார் என்று நாம் சொல்லாமலே அபேக்ஷகர் அறிந்து கொள்வார் என நம்புகிறோம். (நவசக்தி, 9.2.1923)

என்று கூறப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, குருகுலத்தில் ஆசிரியப் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் தமிழ் இலக்கியம் படித்தவர்களாகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் உடல் உழைப்புக்குத் தயங்காதவர்களாகவும் தேசியக் கல்விக்காக உழைக்க விரும்புபவராகவும் இருக்க வேண்டும் என்ற வ.வே.சு. ஐயரின் எதிர்பார்ப்பை அறிய முடிகிறது.

மேலும் ஆசிரியப் பயிற்சி அல்லாத பிற படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பது குறித்துக் குருகுல நிர்வாகம் அவ்வப்போது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தது. குறிப்பாக 4.5.1923 தேதியிட்ட நவசக்தி வார இதழில் குருகுலத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

குழந்தைகளை இங்குச் சேர்க்க விரும்புகிறவர்கள் எத்துணைச் சிறிய பிராயத்தில் இங்கு அனுப்ப முடியுமோ அத்துணைச் சிறிய பிராயத்திலேயே அனுப்ப வேண்டும். வயதாக ஆகப் பிள்ளைகளை நல்வழிப் படுத்தும் சிரமம் அதிகமாகிறது. பிரமசாரிகளுக்காக மாதம் பன்னிரண்டு ரூபாயும் பிரமசாரிணிகளுக்காக மாதம் பதினைந்து ரூபாயும் முன்பணமாக அனுப்பி வருவது முறையாக இருக்கிறது. தவிர ஒவ்வொரு வித்தியார்த்திக்காகவும் அவர்களுடைய சில்லறைச் செலவுகளுக்காகப் பத்து ரூபா ஆசிரமத்தில் முன்பணமாகக் கொடுத்து வைக்க வேண்டியது. வித்தியார்த்திகளின் உடை, வைத்தியச் செலவு, புஸ்தகங்கள், லேகனங்கள் முதலிய செலவு களுக்காக இது உபயோகப்படும். இது செலவானதும் மறுபடியும் அதே மாதிரி முன்பணமாகப் பணம் அனுப்ப வேண்டியது. வித்தியார்த்திகள் வரும்போது டம்ளர் உள்ள வெண்கலக் கூஜா, ருத்திருணி, மடிசஞ்சி, சாரணருக்கேற்ற பை, ஒரு ஜமக்காளம், தலையணை, வஸ்திரங்கள், நல்லதோர் பெட்டி, இரண்டங்குலப் பூட்டு முதலியன கொண்டுவருவது நலம். வஸ்திரங்கள் முதலியவனைத்தும் கைநூலாடையாக (கதராக) இருக்க வேண்டியது. (நவசக்தி 4.5.1923)

என்று கூறப்பட்டுள்ளது. இவ்வறிக்கை இளமைக் கல்வியின் இன்றியமையாமை, குருகுலக் கட்டண முறை, மாணவர்கள் உடன் எடுத்து வரவேண்டிய பொருட்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

1924-ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள், 1925-ஆம் ஆண்டு ஜனவரி, மார்ச், ஏப்ரல், சூலை, ஆகசுடு ஆகிய திங்கள்களில் வெளியான ‘பாலபாரதி’ இதழ்களில் குருகுல மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பெற்றுள்ளன. (1925 ஆம் ஆண்டு சூலை, ஆகசுடு ஆகிய திங்கள்களில் வெளியான இதழ்கள் வ.வே.சு. ஐயர் மறைவுக்குப் பின் சுத்தானந்த பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளியானவை.) இவற்றுள்,

புதிய கல்வி வருஷம் தை š ரு ஆரம்பித்து விட்டது. ஆங்கிலத்தில் பி.ஏ. வகுப்புக்குச் சரியான கல்வி வரையில் கொடுக்கப்படுகிறது. தமிழில் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் வரையில் கற்கலாம்.  ஐரோப்பிய முறையில் ஆராய்ச்சிகள் செய்யவும் மாணவர் பயிற்றப்படுகின்றனர். கணிதம், தேச சரித்திரம், சம்ஸ்கிருதம், ஹிந்தி முதலிய பாடங்கள் செவ்வையாக நடக்கின்றன.

      நெசவுத்தொழில் கற்பிக்கப்பட்டு வருகின்றது. பயிர்த் தொழில் செய்யவும் வசதி ஏற்படுத்தித் தரப்படுகிறது. பிள்ளைகளை இலக்கியக் கல்வியும் ஓர் தொழிலும் அப்பியாசிக்கச் செய்ய விரும்பும் தந்தையர் உடனே முந்துக.

      விவரங்களுக்குக் காரியஸ்தனுக்கு எழுதித் தெரிந்து கொள்ளுக.

என்ற அறிவிப்பு இங்குக் குறிப்பிடத்தக்கது.

குருகுல நிர்வாகம் நன்கொடை வழங்குதல் குறித்தும் மாணவர் சேர்க்கை குறித்தும் அவ்வப்போது இதழ்களின் வாயிலாக வெளியிட்டு வந்த அறிக்கைகளை உற்று நோக்குமிடத்து அவை இந்தியத் தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிட்டிருப்பது தெளிவாகிறது.

முடிவுகள்

 1. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக் குறிச்சியில் 8.12.1922 அன்று வ.வே.சு. ஐயர் தமிழ்க் குருகுல வித்தியாலயத்தைத் தோற்றுவித்தார். அது பின்னாளில் ‘சேரன்மாதேவி குருகுலம்’ என்று அழைக்கப்பட்டது.
 2. வெளிநாடுகளில் வாழும் தமிழர் – குறிப்பாக நகரத்தார் சேரன்மாதேவி குருகுலத்திற்காக மிகுதியான பொருளுதவி செய்துள்ளனர்.
 3. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பலர் தங்களின் வாழ்க்கையில் சில மாறுதல்களைச் செய்து கொண்டு அவற்றின் வாயிலாக திங்கள்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் குருகுலத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 4. வ.வே.சு. ஐயர் தமது குறள், கம்பராமாயண ஆங்கிலப் பதிப்பு ஆகிய நூல்களின் பதிப்புரிமையைக் குருகுலத்துக்குக் கொடுத்துவிட்டார். சிங்கப்பூரைச் சேர்ந்த மகேச குமார சர்மா என்பவர் தமது வால்மீகி விஜயம், வர்த்தமான பாரதம் ஆகிய இரண்டு நூல்களில் இருந்து கிடைக்கும் பணத்தில் சரிபாதியைக் குருகுலத்துக்குக் கொடுத்து வந்தார்.
 5. தமிழ்நாட்டு வணிகர்கள் தங்கள் வருமானம் அல்லது இலாபத்தில் ஒரு பங்கை மகமைப் பணமாக எடுத்து வைத்து அதை மாதாமாதம் குருகுலத்துக்கு அனுப்பி வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.
 6. குருகுல வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு காங்கிரசு செய்த உதவி – தலைவர்களின் ஆதரவு – வ.வே.சு. ஐயரின் உருக்கமான அறிக்கைகள், செயல்கள் ஆகியவற்றால் குருகுலம் ஓர் இலட்சிய நிறுவனம் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் தோன்றியது. அதன் பயனாகக் குருகுலத்துக்குப் பல வழிகளிலிருந்தும் நன்கொடைகள் குவியத் தொடங்கின.
 7. சேரன்மாதேவி குருகுலத்தின் நோக்கங்களுக்கு ஆதரவாக வ.வே.சு.ஐயரால் 1924ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் முதல் ‘பாலபாரதி’ என்ற திங்கள் இதழ் வெளியிடப்பெற்றது.

துணை நின்றவை

நூல்கள்

 • அதியமான் பழ., 2013 முதல் பதிப்பு, சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் – 1.
 • அரசு., 1966 மறுபதிப்பு (முதல் பதிப்பு 1957), வ.வே.சு ஐயர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை – 1.
 • செல்வம் கோ., 2000 முதல் பதிப்பு, வ.வே.சு ஐயர், சாகித்திய அக்காதெமி, இரவீந்திர பவன், புதுதில்லி – 110 001.
 • நாச்சியப்பன் நாரா., 1994 முதல் பதிப்பு, குருகுலப் போராட்டம், அன்னை நாகம்மை பதிப்பகம், பாலவாக்கம், சென்னை – 600 041
 • பத்மநாபன் ரா.அ., 1991 இரண்டாம் பதிப்பு (முதல் பதிப்பு 1981) வ.வே.சு. ஐயர், நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியா, கிரீன் பார்க், புதுதில்லி -110 016.
 • மணி பெ.சு., 2003 முதல் பதிப்பு, வ.வே.சு ஐயர் கடிதங்கள், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை – 600 108.

இதழ்கள்

நவசக்தி –    17.11.1922

15.12.1922

09.02.1923

04.05.1923

27.02.1925

13.03.1925

01.05.1925

08.05.1925

22.05.1925

26.06.1925

சிதைந்த இதழ்

 

பாலபாரதி – அக்டோபர் – 1924

நவம்பர் – 1924

டிசம்பர் – 1924

ஜனவரி – 1925

பிப்ரவரி – 1925

மார்ச் – 1925

ஏப்ரல் – 1925

மே – 1925

ஜூன் – 1925

ஜூலை – 1925

ஆகஸ்ட் – 1925

செப்டம்பர் – 1925

முனைவர் அ.புவியரசு

பட்டதாரித் தமிழாசிரியர்

தூய சேவியர் மேனிலைப்பள்ளி

புறத்தாக்குடி – 621 111

திருச்சிராப்பள்ளி மாவட்டம்.