சண்முக வேலாயுதம் சுப்பிரமணியனின் பவளவிழாவை முன்னிட்டு “ச.வே.சு.75” எனும் தொகுப்பு நூல் 2004ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்தொகுப்பில் பேரா.தாயம்மாள் அறவாணன் ’தமிழூர் செல்லுங்கள்’ எனும் தலைப்பில் இருபக்க அளவில் கட்டுரை ஒன்றை வடிவமைத்திருந்தார். அத்தலைப்பை யொட்டியே “சென்றேன் தமிழூர்” எனும் தலைப்பில் யான் சென்ற / கண்ட அனுபவங்களை வெளிப்படுத்தும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது.  

இருமுறை ’’ச.வே.சு. அய்யாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து மனம் நெகிழ்கிறேன். தமிழ்ச் சான்றோர்களிடம் அருகில் இருந்தாலே அவர்களின் குணாதியசங்கள் சிறிதளவாவது பெற்றுக் கொள்ளலாம் என்ற அருந்தவத்தத்தினை எதிர் நோக்கும் எண்ணம் எப்போதும் என் அகச்சிந்தையில் நிறைந்தே காணப்படும்.

2014ஆம் ஆண்டு முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த காலம். காலையில் எப்போதும் நூலகம் சென்று நூல்களைத் தேடிக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பது வழக்கம். நூலகத்தில் ஆய்வாளர்கள் அமர்ந்து குறிப்பெடுக்கக்  கிழக்குத் திசையை நோக்கி நாற்காலி அமர்த்தப்பட்டிருக்கும். அவற்றுள் ஒன்றில் சாய்வாக அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். கடிகாரத்தின் முள் சிறிதுசிறிதாய் நகர்ந்தது. நகர்ந்த நேரத்தைக் கவனியாது நானும் ஆழ்ந்த வாசிப்பில் மூழ்கினேன். எதார்த்தமாக இடப்பக்கமாய்த் திரும்பிப் பார்க்க நேரிட்டபோது வெள்ளைநிற ஆடையணிந்து வயதான ஒருவர் அமர்ந்து கொண்டு நூலகப் பணியாளரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இவர் யாராக இருப்பார்…? என்ற சிந்தை என்னை ஆட்டிப் படைத்தது. என்னைச் சுமந்து கொண்டிருந்த நாற்காலிக்குச் சற்று ஓய்வு கொடுத்து, வெள்ளையாடை அணிந்திருக்கும் பெரியவர் பக்கம் தலைசாய்க்கலானேன். அருகில் வந்தேன். முகத்தைப் பார்த்தேன். எங்கேயோ புத்தக அட்டைப்படத்தில் பார்த்த ஞாபகம் மட்டும் என்னைத் தொற்றிக்கொண்டு யாரென்று விசாரிக்கத் துடித்தது மனம். இப்படிக் குழம்பிக் கொண்டிருந்த வேளையில் நூலகப் பணியாளர் புத்தக அலமாரிப் பக்கம் மெதுவாய் நடந்து வந்தார். அவருக்குத் தெரியாமல் அவரைப் பின்தொடர்ந்தேன். சார்… அங்க உட்காந்திருக்காருல அவரு பேரு என்ன சார்னு கேட்டேன். தம்பி… அவருதான் ச.வே.சு.னு சொன்னார். இல்ல இவர எங்கேயோ பார்த்த ஞாபகம், அதான் சார் கேட்டேன். நன்றி சார்னு சொல்லிவிட்டு அய்யாவை நெருங்கினேன்.

அய்யா வணக்கம். என் பேரு முனியசாமி.. இங்கதான் முனைவர் பட்டம் மேற்கொண்டு வரேங்கையா… சொன்னதும் தம்பி உக்காருப்பானு பக்கத்துல இருந்த நாற்காலியைக் காட்டினார். பெரியவங்க கிட்ட அமர்ந்து பேசுவதென்றால் தனி அலாதிதான். வாய்ப்புக் கிடைத்தது. விடுவேனா என்ன? என மனசுக்குள் பேசியவாறே அய்யாவின் அருகில் அமர்ந்தேன். தான் வாசித்துக் கொண்டிருந்த நூலுக்குச் சற்று ஓய்வு கொடுத்து என்னிடம் முகமுகமாய்ப் பேசினார். என்ன ஆய்வு என்றெல்லாம் விசாரித்து, நல்லா பண்ணுங்கனு சொன்னார். கிட்டத்தட்ட அவரு கிளம்புவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது என்பதை என்னால் அறிய முடிந்தது. அய்யா உங்களோடு சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமானு கேட்டேன். சரியென சம்மதம் தெரிவித்ததும் அருகிலுள்ள நூலகரிடம் ஒரு ஸ்டில் எடுங்க சார்னு சொல்லி செல்போனைக் கொடுத்தேன். மூன்று நான்கு கிளிப்ஸ் எடுத்தது மட்டுமின்றி  என்னையும் அய்யாவிடம் சேர்த்து ஒரு போட்டோ எடுங்கனு சொல்லக் கேட்டதும் அவர் பாணியில் இருவரையும் போட்டோ எடுத்தேன். சிறிது நொடிகளில் அய்யா விடைபெற்றார்.

நான்கைந்து மாதங்கள் கழித்து இந்துக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் முனைவர் மு.அய்யப்பன் ஆய்வுத்தரவுகள் திரட்ட ஒரு வாரம் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தார். அவரிடம் நட்புறவு ஏற்பட்டதின் விளைவால் ஒருமுறை ச.வே.சு.அய்யாவின் இல்லமான தமிழூருக்கு வாப்பா… அய்யா வீட்டின் மாடியில் ஒரு நூலகம் இயங்குகின்றது. அங்கே பல அரிய நூல்கள் கிடைக்குமெனக் கூறினார். கண்டிப்பா வருகிறேன் எனக் கூறினேன். கூறிய நாளிலிருந்து எப்போது செல்வது என்ற சிந்தைக்கு ஆட்பட்டேன்.

இப்படியாக இரண்டு மாதம் கழிந்தது. திருநெல்வேலியில் பெரியம்மா, மாமா எனப் பல சொந்தங்கள் இருப்பதனால் அவர்கள் வீட்டில் தங்கிவிட்டு அப்படியே அய்யா இல்லத்தில் அமைந்திருக்கும் நூலகத்திற்குச் செல்லலாமெனத் திட்டம் தீட்டினேன். திட்டம் தீட்டிய நாளும் நெருங்கியது. ஆகஸ்டு பதினைந்து (2014) அய்யாவையும் அய்யாவின் நூலகத்தையும் காண விரைந்தேன். அதற்கு முன்பதாகவே முனைவர் மு.அய்யப்பனிடம் தமிழூர் செல்வதற்கான பேருந்து எண், பேருந்து நிறுத்தம், முகவரி எனப் பலவற்றைச் சேகரித்தேன். அவர் அளித்த தகவலின்படியே சரியாகக் காலை 10மணியளவில் அய்யாவின் இல்லத்திற்குச் சென்றேன். முதன்முதலில் எம் பல்கலைக்ழக நூலகத்தில் பார்த்த அதே வெள்ளை ஆடை உடுத்தியிருந்தார். ஆனால் அவர் சட்டைப்பைக்கு நேராகத் தேசியக்கொடி ஒன்றை இணைத்திருந்தார். இது மட்டும் அவரை வேறுபடுத்திக் காட்டியது. மற்றவை எல்லாம் முன்பு கண்ட நிலையிலே காணப் பெற்றேன்.

அருகில் உள்ள பள்ளி ஒன்றில் கொடியேற்றி அப்போதுதான் வீட்டிற்கு வந்திருக்கிறார். மறுபடியும் மற்றொரு நிகழ்விற்குச் செல்ல உள்ளார் என்பதை மட்டும் அங்கே குழுமியவர்கள் பேசிக் கொண்டிருப்பதை  என்னால் அறிய முடிந்தது. வணக்கம் அய்யா…. என என்னை அறிமுகம்செய்து, வந்த நோக்கத்தைக் கூறினேன். “ஓ… அப்புடியா.. சரி மேலே போய் நூல்களைப் பார்” என உரைத்ததும் சரியெனத் தலையசைத்தேன். வந்த நோக்கத்தில் ஒன்று நிறைவேறியது என்ற மகிழ்ச்சியில் இரண்டாம் நோக்கத்தை நிறைவேற்ற மாடிப்படி ஏறிச் சென்றேன். பல ஆய்வாளர்கள் தமக்குத் தேவையான நூல்களிலிருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் எனக்குச் சற்று வியப்பாக இருந்தது. நூல்களை மட்டும் நேசிக்காது நூல்களோடு மாணவர்களையும் நேசித்ததன் விளைவால்தான் இந்நூலகம் உருவாகியுள்ளது என்ற உண்மை புலப்பட்டது. ஒருபுறம் ஆழ்மனது அய்யாவிற்கு நன்றியைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

சரியாக இரண்டு மணிநேரம் அங்குமிங்கும் தேடி, ஆய்விற்குத் தேவையான நூல்களைக் கைப்பற்றினேன். எடுத்த நூல்களைப் படியெடுக்க வேண்டுமென்றபோது இரண்டு நாட்களாக அய்யாவின் இல்லத்தின் அருகே அமைந்துள்ள ஜெராக்ஸ் கடையில் இயந்திரம் பழுதானதன் நிமித்தமாகக் கடை அடைக்கப்பட்டிருந்தது. வேறு எங்கே எடுக்கலாம் எனக் கேட்டபோது.. கொஞ்ச தூரத்தில காலேஜ் ஒன்னு இருக்கு. அங்க போய் அய்யா நூலகம் வந்தேன் ஜெராக்ஸ் எடுக்கனும்னு சொல்லுங்க… எடுத்துத் தருவார்கள்’’என்று நூலகத்தில் இருக்கும் நண்பர் கூறினார். நடந்து சிறிது தொலைவில் கல்லூரியை அடைந்தேன். படி எடுக்க வேண்டிய நூல்களைக் கையில் எடுத்து அய்யாவின் பெயரைச் சொல்லிச் சூழலைக் கூறினேன். எவ்வித மறுப்பின்றி நூல்களை வாங்கிக் கொண்டு பக்கத்துல உக்காருங்க, முடிச்சிட்டுக் கூப்பிடுறேனு சொன்னார். நாற்பது மணித் துளிகளிருக்கும். படியெடுத்த நூல்களை வாங்கிக் கொண்டு கூறிய பணத்தை அளித்து விட்டு நன்றியோடு கல்லூரியைக் கடந்து அய்யாவின் நூலகத்திற்கு வந்தேன். தேவையான நூல்களில் குறிப்பெடுத்து அய்யாவைச் சந்தித்து நன்றி கூறி விடைபெற்றுச் செல்லலாமென நினைத்து வீட்டிற்குச் சென்றேன். காலையில் சென்றவர் இன்னும் வரவில்லை என்ற செய்தி அறிந்ததும் அய்யாவை மறுபடியும் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் கடந்து சென்றேன் தமிழூரை! இனி எங்காவது காண முடியுமா அவரை? அவரைப் போன்ற மனிதரை? காலம் பதில் சொல்லலாம்.

சே.முனியசாமி

முனைவர்பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி

தமிழ்ப் பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர்.