பாரதம் முழுவதும் பக்திமார்க்கம் பன்னெடுங்காலமாக விளங்கி வருகிறது. மக்களிடையே பக்தியும் ஆன்மீகமும் இருபெருந் துருவங்களாகத் தலையெடுத்தன. அசாமில் சங்கரர், வங்காளத்தில் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகான் நிஜகுண சர்வயோகி, தொண்டாட சித்தலிங்கேஷ்வரர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றோர் ஆன்மீகத்தைத் துளிர்க்கச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இதேகாலத்தில் மனிதர்களிடையே வகுப்புவாதம், சாதி வேறுபாடு, தீண்டாமை, நம்பிக்கை அற்ற சடங்குகள், மூடநம்பிக்கைகள் போன்றவையும் காணலாயின. இந்நிகழ்வுகள் நடந்தவற்றைக் கண்கூடாகப் பார்த்து மக்களிடையே சிதறிக் கிடந்த அறியாமை, ஒழுக்கமின்மை போன்றவற்றினைப்  போக்குவதற்காக ஊர்ஊராகச் சுற்றித் திரிந்தவர் சர்வக்ஞர். அவரின் வாழ்க்கை வரலாற்றை இக்கட்டுரை முன்வைக்கிறது.

பிறப்பும் காலமும்

சர்வக்ஞரின் வாழ்வு குறித்த உண்மையான செய்திகள் இதுவரையும் புலப்படவில்லை. அவரின் பெற்றோர் பற்றியும் எந்தச் செய்தியும் கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும் 17 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு அவரைப் பற்றிப் பேசிய கதைப்பாடல்கள் காணப்படுகின்றன. ஏறக்குறைய 14 பாடல்கள் சான்றுகளாகக் கிடைப்பதை வைத்து அவர் வாழ்க்கை முறை இவ்வாறு அமைந்து இருக்கும் எனக் கணிக்க முடிகின்றது. சமகாலத்தில் வாழ்ந்த பல்வேறு புலவர்களில் ஒருவர்கூட இவரைப் பற்றிக் கூறாதது கவனிக்கத்தக்கது. சர்வக்ஞர் பற்றிய குறிப்பு ஏன் குறிப்பிடவில்லை என்பது இன்றுவரை கேள்வியாகவே இருக்கின்றது. ‘ஜனன நினைவுகள்எனும் தலைப்பில் அவர் குறித்த சில செய்திகள் கிடைத்துள்ளன. அதில் தன்னுடைய பிறப்பு, பெற்றோர், இளம் பருவத்தில் வீட்டைவிட்டு ஊர் சுற்றியதற்கான காரண காரியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் அவரின் பிறந்த ஊர் தார்வாட் மாவட்டத்தில் அம்பாளூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆராத்ய பிராமணர், மாலி என்பவர் இவரது பெற்றோர். பசவரசா என்பது இவரது பெயராக உள்ளது. குயவர் குலத்தைச் சேர்ந்தவர் என்று பிறப்பு பற்றிய கதையை விளக்குகின்றது.

தார்வாட் மாவட்டத்தில் ஹமரகரூர் அருகில் மாசூர் என்னும் ஊரில் பசவரசா பிறந்தார். அக்கமல்லமாளும் அவரும் இனிமையான குடும்ப வாழ்க்கையினை நடத்தி வந்தனர். இருப்பினும் அவர்களுக்குக் குழந்தையில்லாதது குறையாகக் காணப்பட்டது. தெய்வநம்பிக்கை உள்ளவராக இருந்ததால் தம் கணவரைக் காசிக்குச் சென்று விசுவநாதரின் அருள் பெற்று வரவேண்டுமெனப் பரிந்துரைத்தாள். மனைவியின் ஆசையை நிறைவேற்றக் காசிக்குச் சென்று வந்தார். ஊர் திரும்பி நெருங்கும் நேரத்தில் எதிர்பாராத நிலையில் மேகம் திரண்டது. அவரது பயணத்தைத் தொடர முடியவில்லை. அம்பளூர் எனும் ஊரில் அருகிலிருந்த ஒரு வீட்டில் தங்கும்படி சூழல் ஏற்பட்டது. அவ்வீடு குயவனின் வீடு என்பதால் பசியைப் போக்குவதற்கு உணவு சமைப்பதற்கு அவ்வீட்டிலுள்ள பெண்ணிடம் சில பாண்டங்களை வாங்கினார். அவ்வீட்டின் தலைவனின் பெயர் மாலன். அவனது மனைவியின் பெயர் மாலி. அன்றிரவு அங்கே தங்கும் சூழல் நேரிட்டது.

மாலியின் கணவன் தொலைதூரமாகச் சென்றிருந்ததால் மாலியே பசவரசாவுக்குப் பணிவிடை செய்யும் நிலை ஏற்பட்டது. பசவரசா பிராமணன் என்பதால் அவளும் மிகுந்த மரியாதையுடனும் பரிவுடனும் பணிவிடை செய்தாள். அவளுடைய பக்தியும் வசீகரப் பண்பும் பசவரசாவைப் பெரிதும் கவர்ந்தன. அவ்வேளையில் மழை அதிகமாக வந்து வீடு ஒழுகியதால் அவரை எவ்விதக் குறையும் இன்றிக் கூடவே இருந்து கவனித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் இரவு ஒரே இடத்தில் இருவரும் தங்கும் நிலை ஏற்பட்டதால் அவர்களுக்குள் காதல் உணர்வு உண்டாகியது. நாள்கள் செல்லச் செல்ல மாலிக்குக் குழந்தை பிறந்தது. தம் கணவன் மாலன் தனக்குப் பிறந்ததாக எண்ணி மிக்க மகிழ்ச்சியடைந்தாள். குழந்தை வளர வளர அறிவுள்ளவனாகத் திகழ்ந்தது. பிராமணரான பசவரசாவால் கொடுக்கப்பட்ட காசி விசுவநாதனின் பிரசாத அருளால் பிறந்ததாகத் தாய் சொல்லச் சர்வக்ஞர் பின்னர் அறிந்து கொண்டார். சர்வக்ஞர் குழந்தையாக இருக்கும்போதே பசவரசா வீட்டுக்கு வந்து சென்றிருந்தார். இதனால் மாலிக்கும் பசவரசாவிற்கும் உள்ள கள்ளத் தொடர்பினை ஊர் மக்கள் ஏளனம் செய்து பேசினர். இதன் விளைவாக அறிவார்ந்த குழந்தையான சர்வக்ஞரது மனம் வேதனைக்குள்ளாகியிருக்கலாம். இருப்பினும் சிறுபிள்ளையாக இருந்தாலும் துணிச்சல்காரராகவும் ஒளிவு மறைவு அற்றவராகவும் அவர் திகழ்ந்தார். தம் தாய்மீது மிகுந்த அன்பும் அளவற்ற பாசமும் கொண்டிருந்தார். அவருடை பண்பும் குணமும் உயரிய விதமாகக் காணப்பட்டதால் அவற்றை எண்ணி வியப்படைந்து தனக்கு அப்பண்பின் தோற்றம் வெளிப்படுவதில் மிகுந்த அளவிற்குப் பெருமை கொண்டார். சில நாள்களில் எதிர்பாராத காரணங்களினால் மாலி தன் கணவனுக்கு இழைத்த துரோகத்தை எண்ணி அஞ்சினாள். இதனால் கணவனுக்குத் தெரிந்துவிடுமென எண்ணிச் சர்வக்ஞரைத் திட்டி வெளியே துரத்திவிடுகின்றனர். இவ்வாழ்க்கை வரலாற்றைப் பதினான்கு பாடல்களால் (பாடல்1-14) அறிய முடிகின்றது.

புராணப் புனைவு

பெற்றோரால் துரத்தப்பட்ட சர்வக்ஞரின் வாழ்வு இவ்வாறு எப்படி அமைந்தது என்பதற்குச் சரியான விளக்கங்கள் எதுவும் இல்லை. தவசால சர்வக்ஞர் என அழைக்கப்பட்டார். முந்திய பிறவியில்வரருசிஎனும் வடமொழிக் கவிஞராக இருந்தாரென்றும் அதற்கு முந்திக் கைலாசத்தில் புஷ்பதுத்தர் என்ற பெயருடையவராக இருந்தவரென்றும் கூறப்படுகின்றது. இது பின்பு புராணப் புனைவாக மாறிவிடுகிறது.

பள்ளிப் படிப்பு

பெற்றோரால் துரத்தப்பட்ட சர்வக்ஞர் வீட்டைவிட்டு வெகுதூரம் செல்லும் நிலை ஏற்பட்டது. மனம்போன போக்கிலும் கால்போன போக்கிலும் அங்கங்கு அலைந்து திரிந்துள்ளார். வறுமை வாட்டியெடுத்துப் பசி ஏற்பட்டுள்ளது. பசிக்கு உணவிட்டவர்கள் இவர் என்ன சாதி என்பதை அறிந்து கொள்வதில் முனைப்பு காட்டினர். பல இடங்களில் இந்நிலை தொடர வாழ்க்கையினை வெறுத்தார்.

உலகத்தோடு உலா வருவதன் மூலம் மக்களின் நிலையினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் தன்மை பெற்றிருந்தார். அவருக்கு உலகம் பள்ளியாகவும் வாழ்க்கை பாடப் புத்தகமாகவும் அனுபவம் ஆசிரியனாகவும் விளங்கின.

தன் அனுபவத்தைக் கொண்டு இளமைக் காலத்தில் ஊர் ஊராக அலைந்து வந்தபோது அவரைக் கண்ட யாரோ ஒருவர் தாயன்புடன் அவரை அரவணைத்து அவரைப் பள்ளியில் படிக்க வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறு வடமொழி கற்று நூல்களை ஆழ்ந்து படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கலாம் எனவும் கருதலாம்.

இல்லற வாழ்க்கை

சர்வக்ஞர் மணம் செய்து இல்லற வாழ்வினை நடத்தியிருக்கலாம் என்பது கே.பி. பிரபு பிரசாத் கருத்து. சிதறிக் கிடந்த பாடல் அடிகளில் கண்ட குறிப்பினை வைத்து இவ்வாறாகக் கூறியுள்ளார். இருப்பினும் இவை ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது மக்களின் நம்பிக்கையாகும். மேலும் தொடக்கக் காலத்தில் மணம் முடித்த பின்ப வாழ்க்கைமீது வெறுப்பு ஏற்பட்டு வறுமை, துன்பம் போன்றவற்றால் மனைவிக்கும் இவருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கலாம். ஒருவேளை மனைவி அவரைப் புரிந்து கொள்ளாதவளாகவும் இருந்திருக்கலாம். மனைவிக்குத் தேவைப்பட்ட பணத்தைத் தன்னால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கலாம். இவற்றை மையமாக வைத்து

இதம் தரும் மனை ஏராளமாய்ப் பணம்

மனத்துக்குகந்த மனைவி சர்வக்ஞா இவை உனக்கு கிட்டுமாயின்

எங்கோ இருக்கும் சொர்க்கத்தை எரிமூட்டி கொளுத்திடுவாய்

இப்பாடல் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சர்வக்ஞர்பெயர் விளக்கம்

இவர் ஊர் பேரில்லாதவர் எனக் கூறினாலும் மக்கள் அவரது ஞான வாழ்விற்கு ஏற்ப அனைவரும் புரிந்துகொண்ட விதமாக அவருக்கு ஒரு பெயரையும் வழங்கி உள்ளனர். ஆனால் அப்பெயர் யாரால் வழங்கப்பட்டது எனச் சான்றுகள் இல்லை. இருப்பினும் அவருடைய ஆழ்ந்த ஞானத்தால் அவரின் அரிய பேச்சுக்களின் சொற்களால் கவர்ந்த எவரோ ஒருவர்தான் இப்பெயரை வைத்திருப்பர் எனக்  கூறமுடிகின்றது. சர்வக்ஞர் என்பதற்குச் சகலமும் அறிந்த ஞானி, முற்றறிஞன், முற்றுமுணர்ந்தோன், எல்லாமறிந்தவன், வாலறிவன், முழுஞானி எனப் பல்வேறு பொருளைக் கொண்டுள்ளது.

சர்வக்ஞரின் சிறப்புப் பெயர்

வள்ளுவனைப் போலச் சர்வக்ஞருக்கும் பல சிறப்புப் பெயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவை திரிபதிய திரிவிக்ரமன், சகலமும் அறிந்த ஞானி, புரட்சிக் கவி சர்வக்ஞர், உலகக் குடிமகன், பிறவிக்கவிஞர், ஊர் சுற்றும் ஞானி, பிணி போக்க வந்த மருத்துவர், அறநெறியாளர், சீர்திருத்தவாதி, முக்காலமும்ள உணர்ந்த யோகி, மானிடம் பாடும் வானம்பாடிள, ஞானத்துறவி போல்வன.

உலக வாழ்க்கையில் மக்கள் நடுவில் ஓர் அடையாளத்தினை ஏற்கும் முகமாக ஒரு பெயர் தேவைப்பட்டது. அதுவே சர்வக்ஞராகத் திகழ்ந்தது என்பதாகக் கூறப் படுகிறது. பலரும் இப்பெயரின் பொருத்தத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘ஐயா எல்லாம் அறிந்த ஞானாசிரியரான நீங்கள் சர்வக்ஞரேஎனவும் நேரிடையாகவே அவரிடம் கூறி மகிழ்ந்தனர். இதைக் கேட்ட சர்வக்ஞர் இந்த அறிவு எனக்கு எதனால் கிட்டுகிறது என்பதை நீங்களே அறிவீர்கள் என்று கூறுவதை

ஆணவத்தின் விளைவோ நினதறிவு சர்வக்ஞா

அவரிடமும் இவரிடமும் ஆர்வத்துடன் கேட்டு

இவன் ஞான மலையானான் சர்வக்ஞா

இப்பாடல் விளக்குகின்றது. இதன் மூலம் அவரின் பணிவான குணம் நமக்குப் புலப் படுகிறது.

சர்வக்ஞரின் காலம்

சர்வக்ஞரின் காலம் அறுதியிட்டுக் கூறமுடியாதது. அவரது காலத்தை ஆணித் தரமாகக் கூறுவதற்கு அவரது பாடல்களோ அவரது வரலாற்றுக் குறிப்புகளோ கிடைக்காததால் காலத்தைச் சரியாகக் கூறச் சிக்கல் ஏற்படுகிறது. பல்வேறு அறிஞர்களின் கூற்றுப்படி 15 ஆம் நூற்றாண்டிற்கும் 18 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக்கூடும் எனத் தெரிய வருகிறது. கி.பி.ரைஸ், எப்.டாக்டாட், ஆர்.எஸ்.முகளி, ஆர்.நரசிம்மாச்சாரி, ஜி.எம்.உமாபதி சாஸ்திரி, சென்னப்ப உத்தாங்கி, டாக்டர் .பசவராஜு, சித்தைய்யா புராணிக், எஸ்.சிவண்ணா போன்ற ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி சர்வக்ஞர் 16 ஆம் நூற்றாண்டின் முதல் அரை நூற்றாண்டுக் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என அறுதி செய்ய முடிகிறது. ‘விரக்த் தொண்டாத்திரியர்தொகுத்த அனாதி வீர சைவ சங்கரஹம்எனும் நூல் அவரது பாடல்களே முதன்முதலராகப் பேசும் நூலாகும். இவர் கி.பி. 1560 ஆம் ஆண்டில் வாழ்ந்தவர். 1504 ஆம் ஆண்டைச் சார்ந்த விராட மகாலிங்கர் என்பவர் இயற்றிய கவிதை நூலானபோதாம்ருதாசர்வக்ஞரின் கவிதை ஞான தாக்கத்தோடு உள்ளாகிய படைப்பு என்பது தெளிவுபடுகின்றது. இவர் சர்வக்ஞர் காலத்தில் வாழ்ந்த மூத்த ஞானியர். இவர் சர்வக்ஞரின் குருவாகவும் இருந்திருக்கக்கூடும் எனும் கருத்தும் ஒன்று உண்டு. இது குரு போதாம்ருதத்தில் காணப்படுகின்றது.

சமுதாய நிலை

மக்களின் வாழ்வு பொருளற்ற, குறிக்கோளில்லாத வாழ்க்கையாக இருந்த காலம். வகுப்புவாதம், சாதிவெறி, தீண்டாமை, பிறரை ஏமாற்றும்ள செயல், பேராசை கொண்ட மனிதர்களும் பூசாரிகளும் போலிச் சாமியார்களும் காணலாகினர். மனிதனை மனிதன் அழிக்கும் எண்ணம் சமூகத்திலே பரவிக் காணப்பட்டது. பணம் மட்டும் இருந்தால் எதையும் செய்துவிடலாம் என்ற அதிகாரமும் தான் மட்டுமே அனைத்தும் அனுபவிக்க வேண்டுமென்ற தன்னலமுள்ள வாழ்க்கையும் பரவியும் விரவியும் காணப் பட்ட காலம். அரசியல், பதவி, அதிகாரம், ஆளுமை எனப் பல்வேறு கோணங்களில் வெறிபிடித்தவர்களாகவும் பழி பாவங்களுக்கு அஞ்சாமல் ஈவு இரக்கமின்றி வாழ்ந்து வந்தனர். சுய சிந்தையை முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலை. அரசர்களும் படைத் தலைவர்களும் அதிகார  வெறியும் பதவி வெறியும் பிடித்தவர்கள் வாழ்ந்த காலம். உயர் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டனர். ஏழை மக்கள் குறிப்பாகப் பெண்களும் இவ்விதச் சமூகத்தால் இரையாயினர். பசி, வறுமை, அச்சம், காமம், வன்முறை போன்ற கீழ்த்தரமான ஈனசுகங்கள் வாழ்ந்த காலம். இப்படிப்பட்ட மக்களின் வாழ்வினைச் சீர்படுத்த வேண்டும் எனும் நெறியினை அதிரடி நம்பிக்கை கொண்டவராகவும் சமுதாயப் பிணி நீக்குபவராக வந்தவர்தான் சர்வக்ஞர்.

சமுதாயத் தொண்டு

பிறந்த அனைவராலும் சமூகத்தைப் பற்றியோ சமுதாய மக்களைப் பற்றியோ அக்கறையுள்ளவர்களாக இருப்பது குறைவு. அவ்வாறு அக்கறையுள்ளவர்கள் தன் நலமில்லாமல் பொது நலனுள்ளவர்களாய்க் காண்பர். சர்வக்ஞர் ஒரு சமூகத் தொண்டு ஆர்வலராக விளங்கியுள்ளார். மனிதகுலம் முழுவதற்கும் பொதுமையான குறிக்கோள்களையும் இரக்கக் குணத்தையும் கொண்டிருந்தார். தமது வாழ்வின் குறிக்கோளாகச் சமுதாயத் தொண்டே என்ற கருத்தியல் உடையவராகத் திகழ்ந்து உள்ளார்.

சர்வக்ஞர் பற்றிய குறிப்பும் அவர்தம் படைப்பும்

கி.பி.1560 ஆம் ஆண்டில் வாழ்ந்த விரக்த தொண்டாத்திரியர் என்பவர் தொகுத்த அனாதி வீரசைவ சங்கராஹம் எனும் நூல் சர்வக்ஞர் எழுதிய பாடல்களைப் பற்றிக் குறிப்பிடப்படும் முதனூலாகும். கி.பி.1868 ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சார்ந்தவர்த்என்பவர் சர்வக்ஞர் இயற்றிய 300 பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார். அவருக்குப் பின் 1924 ஆம் ஆண்டு சர்வக்ஞர் படைப்புகள் அனைத்தையும் தொகுத்து உத்தங்கி சென்னப்பா வெளியிட்டார்.

உத்தங்கி சென்னப்பா ஓலைச்சுவடிகளில் மறைந்திருந்த சர்வக்ஞர் பாடல்களைத் தொகுத்துள்ளார். கண்ட இடங்களிலெல்லாம் கடைத்தெரு, பதிப்புகளாகவும் தூசி பரந்த இருண்ட முனைகளிலும் சிதறிக் கிடந்த ஓலைகளைச் சேகரித்து வெளியிட்டுள்ளார். இந்நூலுக்குச் சென்னப்பா சிறந்த ஆய்வுரை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலில் ஏறக்குறைய 2100 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் சர்வக்ஞரின் இலக்கிய ஆளுமை வெளிப்படுகின்றது. இந்தச் சென்னப்பா பதிப்பே ஆதாரபூர்வமானது. இதுபரமார்த்தர்என்ற பெயரில் அவர்தம் அனைத்துப் பொன்மொழிகளும் பல்கலைக்கழகம் வசம் இருந்துள்ளது. மேலும் பனை ஓலைச்சுவடிகளிலிருந்து கையாண்டு பதிப்பிக்கப்படும் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இப்பதிப்பினைக் கன்னடப் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்த பசவராசு என்பவரால் பதிப்பிக்கப்பெற்றது. இவர் குறிப்பிடத்தக்க பல ஆராய்ச்சி நூல்களின் ஆசிரியராகவும் விளங்கினார். 1980 ஆம் ஆண்டு சர்வக்ஞர் படைப்புகள் அனைத்தையும் தொகுத்து ஆய்வுரையுடன் வெளியிட்டார். அந்நூலில் சிறப்பு யாதெனில் சர்வக்ஞர் இயற்றியதாகக் கருதப் படுகின்ற இடைச்செருகல்களாக அமைந்த பாடல்களையும் பாட வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதாகும்.

இப்பதிப்பில் 943 +554 மூன்று அடிப் பாடல்கள் சர்வக்ஞரின் உண்மையான கவிதைகள் என ஏற்றுக் கொள்ளப்பட்ட பாடல்களும் அடங்கியுள்ளன. இதில் அடங்கி உள்ள மற்றொரு வியப்பு யாதெனில் பாடலின் இறுதி அடியில் சர்வக்ஞர் எனக் குறிப்பிடப்படாமல்பராமார்த்தர்என்ற பெயர் குறிப்பிடப்பட்டு இருந்ததாகும். இந்தப் பாடல் ஒன்றில்தான்பரமார்த்தர்என்னும் பெயர் இயற்றியவர் பெயராகக் குறிப்பிடப் பெறுகிறது. இதனால் உண்மையில் பாடலாசிரியர் யார் என்ற வினா எழுந்தது. இருப்பினும்பரமார்த்தர்என்ற பெயரே சர்வக்ஞரின் உண்மையான பெயராக இருக்க வாய்ப்புண்டு என்றார் பசவராசு. பரமார்த்தரா சர்வக்ஞரா என்பதில் சுதேச வேற்று ஏற்படினும் பின்னர் எற்றுக்கொண்டார்.

சர்வக்ஞரின் காலமும் குழப்பங்களும்

சர்வக்ஞரின் காலத்தைக் குறித்துத் தெளிவானது இஃது எனக் குறிப்பிடல் ஆகாது. இருப்பினும் பல்வேறு ஆய்வு அறிஞர்கள் பல வகைக் கருத்துக்களைப் பொதிந்துள்ளனர். விஜயநகரம் வீழ்ச்சியடைந்த காலம் கி.பி.1365 ஆம் ஆண்டு. கி.பி.1763 மற்றும் 1799 ஆகிய ஆண்டுகளில்இக்கேரிஎன்னும் குறுநில வீழ்ச்சியும் ஸ்ரீரங்கப்பட்டணம் ஆங்கிலேயர் வசமான நிகழ்வும் நடந்தேறின.

 • இவற்றைக் கருத்தில் கொண்ட ஐரோப்பிய மதபோதகரான பாதிரியார் ரெவரெண்ட் கிட்டில் (Rev.F.Kittil) என்பவர் கன்னட இலக்கிய வரலாறு எனும் நூலில் சர்வக்ஞரின் காலம் கி.பி.1800 என்று குறிப்பிட்டுள்ளார்.
 • கி.பி.1800 க்குப் பின்னர்க் கிடைக்கப்பெற்ற சர்வக்ஞர் உரைப்பாவின் ஓலைச்சுவடிகளில் பழங்கன்னட எழுத்தான ‘ற’ எனும் வடிவமானது ஆர் நரசிம்ம ஆசாரியரைச் சிந்திக்க வைத்தது. இந்த எழுத்து கன்னட மொழியில் வழக்கில் இருந்த காலத்தை உறுதிப்படுத்திச் சர்வக்ஞர் வாழ்ந்த காலம் க.பி.1700 க்குப் பின்னராக இருக்காது என்னும் முடிவுக்கு வருகிறார்.
 • சம்பாதனேயள சித்த வீரண்ண ஆசார்யா என்பவர் ‘சர்வக்ஞமூர்த்தி’ நிலுபிசித்த திரிபதி’ என்னும் ஓலைச்சுவடி கண்டெடுத்தவர் ஆவார். இவர் கி.பி.1600 க்கு முன்னரே சர்வக்ஞர் வாழ்ந்ததாகக் கருத முடியாது எனக் கருதினார்.
 • ஐரோப்பிய மதபோதகரும் கன்னட ஆய்வாளருமான கே.பி.ரைசு (K.P.Rice) என்பவர் கன்னட இலக்கிய வரலாற்றில் சர்வக்ஞர் காலம் கி.பி.1600 என்பதை ஐயத்துடனே பதிவு செய்துள்ளார். சர்வக்ஞர் ஆய்வுக்காகவே தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்ட சென்னப்பா என்பாரும்கூட 16 ஆம் நூற்றாண்டே என்பதைக் கூறி உள்ளார்.
 • எச்.தேவிரப்பா என்பவர் சர்வக்ஞர் வாழ்ந்த காலம் கி.பி.1500 முதல் கி.பி.1600 வரையில்ள இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இவருடைய கூற்றும் சென்னப்பா கூற்றும்ள நெருங்கிய தொடர்பு உள்ளதென அறிய முடிகிறது.
 • எல்.பசவராசு என்பவர் சர்வக்ஞரின் காலத்தினைப் புதியதொரு கோணத்தில் கூறியுள்ளார். பிட்டமண்டேன் பிரபு என்பவரின் காலமான கி.பி.1530 ஆண்டைச் சர்வக்ஞர் காலம் எனக் குறிப்பிடுகின்றார்.
 • ஆவணங்களை ஆய்ந்தவரான எம்.எம்.கலபுர்சியோ சர்வக்ஞரின் காலத்தைக் கி.பி.1474 என உறுதிப்படுத்துகிறார்.

இவ்வாறு பல கோணங்களில் சர்வக்ஞரின் காலத்தை விளக்குகின்றனர். எது எப்படிக் கூறினாலும் சர்வக்ஞர் வாழ்ந்ததும் அவர் இயற்றிய பாடல்களும் உண்மை என்பது ஆணித்தரமாக உள்ளது.

மூன்று அடிப் பாடல்

சர்வக்ஞரின் கவிதைகள் மூன்று அடிகள் கொண்டனவாகத் திகழ்கின்றன. இம்மூன்று அடிக் கவிதைகளைக் கன்னடத்தில்திரிபதிஎன்று குறிப்பிடுவர். கன்னட இலக்கியத்தில் நாட்டுப்புற இலக்கியத்தின் வரவாக இந்த மூன்று அடிக் கவிதைகள் அமைந்துள்ளன. தாம் எண்ணியகூற வேண்டிய செய்திகளை மிகச் சிறந்த முறையில் தம் ஆளுமையால் வெளிப்படுத்தியுள்ளார். எனவே இவர்திரிபதிய திரிவிக்ரமன்என்று சிறப்புப் பெயரினைப் பெற்றுத் திகழ்ந்துள்ளார். ஏழை எளிய மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகத் தன் கருத்துக்களைத் தந்துள்ளார். எனவேதான் ஏழை எளிய மக்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் அறிவுரைக் களஞ்சியமாகத் திகழ்ந்து உள்ளார். தமிழில் இதே அமைப்பு கொண்ட மூன்று அடிப் பாடல்களும் அமைந்து உள்ளன. அதனைக்கண்ணிஎனக் குறிப்பிடுவர். இலக்கிய நடையும் படிப்பவரின் மனங்களைக் கவர்வது இவரின் சிறப்பாகும். அதே போல் பா வகைகள் தமிழில் அதிகம் இருப்பினும் ஆசிரியப்பாவுக்குச் சிறந்த இடம் உண்டு.

ஆசிரியப் பாட்டின் அளவுக்கு எல்லை

ஆயிரம் ஆகும் இழிவு மூன்றடியே

என ஆசிரியப்பாவிற்கு அடிச் சிறுமை மூன்றடிதான் என இலக்கணம் உள்ளது.

இவரது காலத்தில் சமயக் கருப்பொருள் அடிப்படையான பல்வேறு காவியங்கள் நீண்ட வடிவத்தில் தோன்றின. அவை தம்முடைய தார்மீகச் சமயக் கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாகப் பிற கவிஞர்கள் பின்பற்றினர். பிற கவிஞர்கள் தம் புகழுக்காகவும் இன்ப வாழ்விற்காகவும் அரசவையில் இடம்பெற்றுத் தமது திறமைகளை வெளியிட்ட காலமாகத் திகழ்ந்தது. அப்படிப்பட்ட காலத்திலும் சர்வக்ஞர் பிற கவிஞர்களைப் போலத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முனையவில்லை. அதேபோல் இலக்கிய உலகிலும் அரசவைக் களத்திலும் தனக்குப் புகழ் வேண்டுமென்ற எண்ணம் சர்வக்ஞருக்கு இல்லாமல் இருந்தது. மாறாக மக்களுக்கு அறக் கருத்துக்களை அறிவித்தும் சமுதாயத்தைச் சீர் செய்ய வேண்டும் என்கிற குறிக்கோளோடும் திகழ்ந்தார். பெரும்பாலும் கிராமத்து மக்களை நோக்கி அவர் கண் சென்றது. எனவேதான் எவரும் எளிதில் அறியும்படிக்கு மூன்று அடிகளில் தம் பாடல்களை எடுத்தியம்பியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.

வள்ளுவரைப் போன்று தன் பாடலை இயற்றி உள்ளார். அவரது பாடலில் கருப்பொருள் பலவாகத் திரிந்து காணப்படுகின்றன. அவை மனித வாழ்க்கையோடு தொடர்புடையனவாகவும் இன்றியமையாத அனைத்துச் செய்திகளையும் பதிவு செய்துள்ளார். குடும்பம், சமுதாயம், அரசியல், பொது நிர்வாகம், பொருளாதாரம், வேளாண்மை, கைவினைக் கலைகள், பல்வேறு தொழில்கள், வாணிபம், சுகாதாரம், பேச்சு, இசை, மருத்துவம், கல்வி, ஒழுக்கம், சோதிடம், தர்க்கம், சாதி, மதம், சமயம் போன்ற பல்வேறு நிலைகளில் தன் பாடலைப் பாடியுள்ளார். தெளிவாகவும் தெளிந்து முடிவுகளோடும் விடைகள் காணப்படுவது அவரின் இலக்கிய ஆளுமைகளாக வெளிப்படுகின்றன. வள்ளுவர் தன் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என மூன்று பாடல்களை இட்டது போன்று இவரும் தன் பாடலில் மூன்று தலைப்பினை மையமாக வைத்துச் சுட்டியுள்ளார். 1.உலகியல் கோட்பாடு, 2.அறக்கோட்பாடு, 3.ஆன்மீகக் கோட்பாடு எனும் அடிப்படையில் இவற்றினைப் பகுத்து 34 துணைப் பிரிவுகளின்கீழ் வரிசைப்படுத்தியுள்ளார் (பத்ததி என்பதற்குப் பலரும் நடந்து தடமாக நிலைத்திருக்கும்ள பாதை என்பது பொருள்.).

உரைப்பாக்கள்

சர்வக்ஞரால் எழுதப்பட்ட பாடல்களைப் பல்வேறு வகையில் திரட்டி ஒன்று சேர்த்தவர் உத்தங்தி சென்னப்பா என்பவர் ஆவார். இவர் ஏறக்குறைய 1928 உரைப்பாக்களைக் கி.பி.1924 இல் சேகரித்தார். அவற்றில் சர்வக்ஞரால் இயற்றப் பட்ட மூன்று அடிப் பாடல்கள் 1309 மட்டுமே என்றும் மீதமுள்ள 619 பாடல்கள் இடைச் செருகல்கள் எனக் கூறினார். அதன் பின்னர் இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறையினருக்காக 1960 இல் உரைப்பாக்களை மேலும் சேர்த்தார்.

 • அக்பர் அலி என்பவர் 1980 இல்ள சர்வக்ஞர் உரைப்பாக்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றர். இவர் தனது ஆய்வின் மூலமாகளச் சர்வக்ஞரின் மொத்தப் பாடல்கள் ஏறக்குறைய 2000 என்று கூறி உள்ளார்.
 • வெங்க என்பவரின் ஓலைச்சுவடிகளின் மூலம் 937 உரைப்பாக்கள் மட்டுமே உள்ளன எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
 • எல்.பசவராசுள என்பவர் நூறு முதல் நூற்றிருபது வரை சேர்த்தாலும் சர்வக்ஞரின் உரைப்பாக்களின் எண்ணிக்கை 1050 மட்டுமே என்று கூறுகின்றார்.
 • சிதானந்த மூர்த்தி என்பவர் பிறருடைய உரைப்பாக்களைச் சர்வக்ஞர் உரைப்பாக எனப் படிப்பதால் பிழையில்லை. அவ்வாறன்றிச் சர்வக்ஞர் உரைப்பாக்களைப் பிறருடையதெனத் தள்ளிவிட்டால் அதனின் பாதிப்புப் பெரிதாகும் என்று கூறியுள்ளார்.

சர்வக்ஞருக்கு முன்னோடியாக விளங்கிய பசவண்ணர், அல்லம்ம பிரபு போன்றவர்களின் பாடல்களுடைய இறுதிச் சீர்களில் தாங்கள் வழிபட்ட கடவுள் பெயர் கூறும் முறை மரபாக இருக்கின்றமையைக் காண முடிகின்றது. அல்லம்ம பிரபு தன் பாடல்களில்ள இறுதியாகக்குகையீசனேஎனவும் பசவண்ணர் தன் பாடலில் இறுதியில்கூடல சங்கமதேவஎன்றும் பாடியதைப் போலவே சர்வக்ஞர் தனது உரைப்பாவின் இறுதியில்சர்வக்ஞஎன முடிக்கிறார். இவை கன்னட இலக்கியத்தின் மரபாக உள்ளது என அறியலாம்.

ஊர் சுற்றிக் கருத்துரைத்தல்

சமுதாயத்தின்மீது அக்கறை எல்லா மனிதர்களிடமும் காணலாகாது. தன்னலம் மிக்க மனிதர்களிடமும் சமுதாயத்தைப் பற்றி அக்கறை காணப்படாது. பொதுநலமிக்க எல்லாராலும் சமூகத்தோடு இயைந்து பணியாற்றுவதும் அரிது. தன்னலம் மறந்து சமூகத்தைப் பேணிக் காக்க வேண்டுமெனப் பொறுப்பு எந்தவோரிடத்தில் இருப்பது தனிச் சிறப்பாகும். அந்த ஒருவர் சர்வக்ஞர் ஆவார். மக்களிடையே அறக் கருத்துக்களை எடுத்தியம்புவதற்குப் புறப்பட்ட இவரை அறச்சூறாவளி எனலாம். சிவ சிந்தனையும் அழகு கொண்ட உள்ளம் படைத்த இவ்வுலகில் வாழ்ந்து வந்தார். காடு, மலை, வயல் எனப் பார்க்காமல் கால் செல்கின்ற இடங்களுக்கெல்லாம் வெகு தொலைவுள நடந்தே சென்று மக்களைக் காண்கின்றார். மிகுதியான மக்கள் வட்டத்தினை அதிகமாக விரும்பியவர் சர்வக்ஞர். தனக்கெனள ஒரு நிலையான இடத்தினைப் பற்றிக் கொண்டால் அனைத்து மக்களையும் காண முடியாது என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியிருக்கலாம். அதனால் என்னவோ மனம் நினைக்கும் இடங்களுக்குச் சென்றுள்ளார். தன் நீண்ட பாதநடைப் பயணங்கள் ஒரு கோவிலிலோ ஒரு கிராமப்புறத்திலோ ஓரிரு நாளில் தங்கி ஓய்வெடுத்துப் பழையபடி தனது நடையைத் தொடங்கும் பழக்கம் உடையவராகத் திகழ்ந்துள்ளார். மக்கள் கூட்டங்களைக் கண்டதும் சில நேரங்களில் உடனே வர முடியாத அளவிற்குப் பேச்சில் ஆழ்ந்து போகும் நிலைகளில் அங்கே தங்கும் சூழல் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் சூழலானது ஒரு வாரமோ அதற்கு மேற்பட்ட நாள்களோ என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதவர். இவ்வாறு ஊர் ஊராய்ச் சென்று அவர் கூறிய அறச் செய்திகள் அவரின் பாடல்கள்வழி வெளிப்படுகின்றன.

பசியுற்றோர்க்கு உணவு படைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இவ்வாறு வடக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் சென்று நாடு நகரமெல்லாம் சுற்றித் திரிந்த யாத்ரீகராகள வாழ்ந்தார் யோகி சர்வக்ஞர். தனது பாடல்களில் சென்று வந்த உள்ளூர்ப் பழக்க வழக்கங்கள், உணவு, உடை போன்ற செய்திகள் பற்றி இங்கும் அங்குமாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். உணவு என்பதைப் பற்றி உயர்வாகத் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார். அதனை

அன்ன தானம்போல் பிறதானம் உண்டோசொல்

அனைத்தினு முயர்ந்தது யாதுமிலஉலகில்

அன்னமேள உயிராம் சர்வக்ஞ          (..361)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இப்பாடலில் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளார். ஊர் ஊராய் அலைந்த நேரங்களில் அவருக்குப் பசிள ஏற்பட்டிருக்கலாம். உணவு உண்பதற்குப் பொருளாதாரம் இல்லாமலும் இருந்திருக்க வாய்ப்புண்டு. பசிக்கொடுமை தாங்க முடியாத நிலையில் பசி பற்றிய பாடல்களைள இயற்றியிருக்கலாம் எனக் கருத முடிகிறது. அன்னமே உயிர் என்று குறிப்பிட்டு உள்ளதால் அந்நிலை ஏற்பட்டிருக்கின்றது எனக் கணிக்க முடிகின்றது.

எளிமையான வாழ்க்கை முறை

தம் ஒற்றைப் பயணத்தில் கிராமத்தை அணுகும்போது அனைத்து மக்களும் திரண்டு அவரை வரவேற்கிறார்கள். அப்பொழுது பேசிப் பார்த்துச் சென்ற சர்வக்ஞர் பல ஆண்டுகளுக்குப் பின்புதான் காண முடிகிறது. மீண்டும் அதே மனிதர்கள் பார்க்கும் போது வேறு எவ்வித மாற்றமும் இல்லாமல் முன்பு போலவே காணப்படுகின்றார். மழுங்க வழித்த மொட்டைத்தலை, பளீரென்ற முகம், ஒளி உமிழும் கண்கள். ஒரு கோவணத்தைத் தவிர அவர் உடுத்தும் ஆடை வேறு ஒன்றுமில்லை. தன் உடம்பை மூடிய தோற்றம். தோள்களிலிருந்து தொங்கிய முரட்டுக் கம்பளிப் போர்வை ஒன்று. கையில் நீண்ட வளமையான கோல் ஒன்றினைப் பிடித்த காட்சியாக இருந்துள்ளார். ஒரு முறை மக்களிடம் பேசிக்கொண்டிருக்கையில்ஐயா எல்லாம் அறிந்த ஞானாசிரியரான நீங்கள் சர்வக்ஞரே என்று அவரைக் கூறிப் பெருமைப் படுத்தினார்கள். அதனையறிந்த அவர்வாஸ்தவம்தான் நீங்கள் சொல்வது. ஆனால் இந்த அறிவு எனக்கு எவ்வாறு கிட்டுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா என அவர்களைப் பார்த்துப் பெருமிதப்படாமல் பணிவுடன் கூறியுள்ளார். அவரின் எளிமையானள வாழ்க்கை முறையினை வெளிப்படுத்தும் முகமாக

ஆவணத்தின் விளைவோ நினதறிவு சர்வக்ஞ

அவரிடமும் இவரிடமும் ஆர்வத்துடன் கேட்டு

இவன் ஞான மலையானன் சர்வக்ஞ                       (சர்வக்ஞர்:.19)

எனும் பாடலடிகள் விளக்குகின்றன.

இவ்வாறு அவர் ஒரு பிறவிக் கவிஞராக இருந்தும் ஒரு கவிஞனின் புகழுக்காக அவர்ள பேசியது இல்லை. அரசவை மரியாதைகளுக்காகவும் வெகுமதிகளுக்காகவும் அவர் ஆசைப்பட்டவராகத் திகழவில்லை. தனக்கு வாய்க்கப்பெற்ற இத்திறமையை வைத்து எளிய முறையில் ஏழை எளிய மக்களைப் பார்த்து ஒரு சரியான மனப் போக்கைத் தனது கவிதையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளார்.

மக்களின் ஆர்வம்

மனத்திற்குப் பிடித்தவர்களாயினும் ஒரு குறிப்பிட்ட நேரம்தான் அவர்களின் பேச்சு ஆர்வத்தைத் தரும். நீண்ட நெடிய நேரங்கள் பேசுவதால் சலிப்பு ஏற்படக்கூடும். சர்வக்ஞரின் பேச்சு அவ்வாறில்லாமல் அனைவரையும் எவ்வளவு நேரமாயிருந்தாலும் அசராமல் கேட்க வைக்கும். சிறியவர், இளையவர், பெரியோர் என எல்லாத் தரப்பினரையும் தனது பேச்சின் திறத்தால் கவர்ந்திழுத்தார். பகற்பொழுதில்ள வேலைக்குச் சென்று அந்தி வேளையில் ஆசிரமத்தின் முற்றத்திலோ கோயிலிலோ அவரைச் சூழ்ந்து கொள்கின்றார்கள். அனைத்து மக்களும் அவரிடமிருந்து மேலும் அறிவு பெற விரும்புகிறார்கள். இதனால் தங்கள் பணிகளை விரைவாக முடித்துக் கொண்டு வருகின்றனர்.

உதவும் மனப்பான்மையும் நற்குணமும்

அவரது வாழ்க்கையின் அமைப்பும் எளிய தோற்றமும் கிராமத்து மக்களைத் தன் சார்பு ஈர்த்தன. எப்பொழுதும் சுறுசுறுப்பான ஏதாவது ஒரு பணியில் தன்னை ஈடு படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக அவர் சும்மா இருந்து யாரும் கண்டதில்லை என்ற கூற்று அனைவராலும் பேசப்பட்டது. தனது பணி நிறைவடைந்ததும் தனக்கென ஓய்வு பெறாமல் குடியானவர் முதல் குயவன் வரை உதவி செய்யும் உள்ளம் கொண்டவர். நெசவுத் தொழில் செய்யும் மனிதனுக்குத் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து உள்ளார். அது மட்டுமல்லாது இல்லத்தில் தனியாகக் கிடந்து  வேதனைப்படும் நோயாளிக்கு மருத்தும் செய்து பாரம் தாங்க முடியாமல் கடினப்படும் மூதாட்டிக்கு இரக்கம் காட்டியுள்ளார். தனது பசியைப் போக்குவதற்கு யாரையும் நாடிச் செல்வதில்லை. அவர்மீது பற்று வைத்த யாராவதுள ஒருவர் தனது இல்லத்திற்கு அழைக்கச் சென்று விருந்துக்கு அழைக்கிறார். அவ்விருந்தில் ஆடம்பர உணவோ பழைய கஞ்சியோ எதுவாயிருப்பினும் வழங்குபவர் உள்ளம் மகிழ்ச்சி அடைய மகிழ்ச்சியாய் உண்பார்.

நெசவுத் தொழில் செய்வோர்க்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொடுப்பார். அவ்வாறு நெசவுத் தொழிலில்ள ஈடுபடும்போது அவற்றின் சிறப்பினைப் போற்றும் விதமாக

அழகு ஏழைக்கு வலிமை அழகு வண்ணானுக்கு ஊற்று

அழகு மடுவின் வயல் உழவுக்குசெய்வோனுக்கு

அழகு சுழலும் தறியாம் சர்வக்ஞ                             (..798)

எனும் பாடல் அமைகிறது.

சர்வக்ஞர் உலக ஆசையற்றவர். தன் சொந்த ஆசாபாசங்களிலிருந்து தன்னை விடுவித்தவர். செயல், எண்ணம், சொல் இம்மூன்றிலும் பரிசுத்தர். அனைத்து உயிர்கள்மீதும் பேரன்பு மிக்கவர். பெரும்பாலும் அவர் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஊர்ஊராகத் தொண்டு செய்து உலா வந்தவர். தன்னைக் கொடையாளியாக அர்ப்பணித்தார். அதே நேரத்தில் பணி செய்யாமல் உண்டு கொடுத்தோரை அச்சம் இன்றிக் கடிந்து பேசியுள்ளார். தன்னுடைய தேவைக்குப் பிறரிடம் கைநீட்டாமல் முடிந்த வரை நாளும் உழைத்து வந்தவர் என்பது அவரின் நற்குணமாகத் திகழ்கின்றது. எச்சமயத்தின் மடங்களில் தன்னை அடிமைப்படுத்தாதவர். மக்களிடையே காணுகின்ற அனைத்து மாயைகளையும் கண்டு குமுறியவர். மாயக்காரரின்ள செயலை உணர்த்தும் விதமாகக்

கடனாளி தட்டான் நெய்வோனை நம்பலாம்ள

உடனிருக்கும் மாயக் காரன்பால் கருணையறம்

உடனிருக்காது எக்காலும்                                   (..791)

எனும் பாடலடிகள் காணப்படுகின்றன.

சர்வக்ஞர் குரு, ஈஸ்வர ஆகிய இருவரின்மீது அளவற்ற பக்தியுடையவராகத் திகழ்ந்துள்ளார். தனது வாழ்க்கையில் ஏற்படும் துயர நிகழ்வுகளைக் கண்டு சிறு துளியும் கலங்காமல் வாழ்க்கையை நேசித்து வந்தார். நற்செயல்களைச் செய்யும் மனிதரைப் போற்றுவதில் சிறந்தவர். அதே நேரத்தில் தீமையையும் தீமை செய்வோரையும் கண்டு நேரடியாகக் கண்டிக்கத்தக்கவராகவும் திகழ்ந்தார்.

சர்வக்ஞரும் எண்ணங்களும்

சிறுவயதிலே பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டவர் எனக் கருதும் இவர் வெகு தொலைவு ஊர் ஊராய்ச் சுற்றித் திரியும் நிலைக்கும் கட்டுப்பட்டுள்ளார். கால் போன போக்கிலும் மனம் போன போக்கிலும் சென்றுள்ளார். பசி ஏற்படும் நேரம் எங்காவது யாரிடமாவது வாங்கிச் சாப்பிட்டுள்ளார். பசிக்காக உணவு கொடுத்த ஒவ்வொருவரும் அவரை முதலில் கேட்ட வினா நீ என்ன சாதி என்பதுதான். இதைக் கண்டு அவரின் மனம் வெதும்பியது. எலும்பும் தோலும் காணுகின்ற இவ்வுடலுக்குச் சாதி எப்படி வந்தது என்ற எண்ணம் உருவாகியதன் விளைவாக

என்புதோல் போர்த்திய மலமூத்திர குட்டைக்கு

ஜாதி என்ன சொல்வாய் சர்வக்ஞ

ஜாதி என்ன சொல்வாய்              (சர்வக்ஞர், .25)

எனும் பாடல் உணர்த்துகிறது.

இளமைப் பருவத்தில் சாதி என்ற ஒன்று எவ்வாறு மனிதனிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது என வியப்புக்குள்ளானார். இருப்பினும் சாதியை அவர் விரும்பவில்லை. மாறாக வெறுத்தார். உயர்ந்தோன்தாழ்ந்தோன், பக்தன்நாத்திகன் எனும் மெய்ப்பாடல்கள் எவ்வாறு வந்தது என வியந்துள்ளார்.

மெய்யுறுப்புகள் ஒத்தன மாந்தருக் கெனில்

உயர்ந்தோன் தாழ்ந்தோன் பக்த நாத்திகானனும்

பொய்ப்பாடல்கள் வந்ததெஙெ்கே       (..535)

எனும் அடிகள் மனிதப் பாகுபாட்டினை விளக்குவதாக அமைந்துள்ளன.

நிலம் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது. அந்நிலப் பகுதியிலிருந்து வரும் தண்ணீர் யாவருக்கும் பொதுவானதாகும். இருப்பினும் பொதுவான நீரை எடுத்துச் சமைத்துக் கீழோர், மேலோர் என்ற பாகுபாட்டால் அருகில் அமர்ந்து உண்ணுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மனிதர்களின் உறவு தேவையில்லை என்றும் தம் பாடலில் கடிந்துள்ளார். அதனைப்

பருகுகின்ற பொதுநீரைக் கொண்டு சமைத்தே

அருகருகே அமர்ந்துண்ண மறுக்கும் மாந்தரின்

நெருங்கிய உறவுமேன் சர்வக்ஞ         (..537)

எனும் பாடல் விளக்குகின்றது.

இவ்வாறாகச் சர்வக்ஞர் சாதி எனும் குறுகிய எல்லைக்கு அப்பாற்பட்டவராகத் திகழ்ந்துள்ளார். குறுகிய விருப்புணர்வோ கோட்பாடுகளோ கொண்டதாக இல்லாமல் அனைத்து மக்களிடமும் இயல்பாய்ப் பழகும் உள்ளம் கொண்டவராக விளங்கி உள்ளார். பிராமணர்கள்தாம் பிறப்பில் உயர்ந்தவர்என்று கூறும் கருத்தையும்ள நாங்களே வேதஞானத்திற்குரியவர் என்று கூறும் வாக்குகளைக் கடுமையாக விமர்சித்தும் எச்சரித்தும் இருக்கிறார். விண்ணுலகப் பாதையினைப் பார்ப்பனர் மட்டும்தான் அறியக் கூடுமோ மேன்மையாகத் திகழும் பெண்ணாலும் விண்ணுலகத்தின் பாதையினைக் காட்டுவர் என்று பார்ப்பனரின் சொற்களைக் கடிந்து உள்ளார். அதனை

விண்ணுலகப் பாதையைப் பார்ப்பனரே அறிவரோ

மண்ணில் மேன்மைச் செயலாற்றும் பெண்ணும்

விண்ணுலகைக் காட்டுவாள் சர்வக்ஞ          (..538)

எனும் பாடலில் விளக்கியுள்ளார்.

அதுபோலவே மனித குலத்தில் கீழ்ச்சாதி, தீண்டத்தகாதவர், ஒடுக்கப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போன்றவற்றைக் கூறுவதைப் பழித்துள்ளார். இறைவன் அருள் பெற்றவனே மேலோர் என்று கூறியுள்ளார். இதனை     

மணம் நிறைந்திருக்க எம்மவர் இருந்தென்ன

மண்சாதியில் மேல்கீழென வேண்டற்கஇறையருளுள்

மணந்தவனே மேலாம் சர்வக்ஞ         (..541)

எனும் அடிகள் உயர்வு, தாழ்வு இல்லையென்பதை உணர்த்துகின்றது.

சாதிகளைப் பற்றிக் கடுமையாக எச்சரித்த சர்வக்ஞர் அவ்வாறு ஈடுபட்டு உள்ளவர்களை வெறுத்துள்ளார். இவ்வாறாகச் சாதி எனும் மூட நம்பிக்கையினைக் கடந்த மாமனிதனாகத் திகழ்ந்துள்ளார்.

பிணி போக்க வந்த மருத்துவர்

இவரது காலத்தில் ஆன்மீக நெறியைப் பின்பற்றும் மக்கள் குறைந்தே காணலாயினர். உலக வாழ்க்கைக்கு ஆசை கொண்டு கீழ்த்தரமான செய்கைகளும் நடத்தைகளும் விரவிக் காணப்பட்டன. பணம் மட்டும் நன்று இருப்பின் அவரை எச் செயலிலும் (தீய) ஈடுபடலாம் எனும் விதி உருவாகியிருந்தது. பிறரை ஏமாற்றித் துன்பப்படுத்தும் செயல் நிறைவாகவே காணப்பட்டது. தான் மட்டுமே அனைத்தும் அனுபவிக்க வேண்டுமென்கிற எண்ணம் பரவியிருந்தது. குறிப்பாக அரசியல், பதவி, சாதிகள் போன்றவற்றில் மதம் பிடித்த யானையாகத் திரிந்தனர். பழி, பாவங்களுக்கு நாணாமல் தன் கட்டுப்பாட்டினை இழந்து தனக்காக யாவற்றையும் செய்து முடிக்கும் உயிர்களாகத் திகழ்ந்தனர். நியாயம்அநியாயம், நல்லதுகெட்டது, சரிதவறு போன்றவற்றைப் பகுத்தாராயும் எண்ணம் முற்றிலும் மழுங்கிப் போயிருந்தது. பணமும் பொருளும் மட்டும் போதும். எதையும் அடைந்துவிடலாம் என்ற உல்லாசத்தில் அலைந்தனர். அரசர்களுக்கும் அரண்மனையில் பொறுப்பேற்றுத் திகழும் முக்கியத் தலைவர்களுக்கும்ள பதவி, அதிகாரம் போன்றவற்றில் வெறிபிடித்து அலைந்தனர். முதல்நிலை அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரையிலும் பொருள்களையும் பணத்தையும் அபகரிக்கும் எண்ணத்திற்கு உள்ளாயினர். உழைக்கும் வர்க்கமான ஏழைகளும் குறிப்பாகப் பெண்களும் நலிவற்ற பிரிவினர் போன்றவர்கள் எல்லாரும் ஊழல் சமூகத்திற்கு உணவாயினார்கள். இதனால் நேர்மையாய் வாழ்ந்த மக்களையும் வழிதவறி நடக்கும் சூழலுக்குத் தள்ளியது. பாலியல் ஆசையும் வன்முறை வெறியும் இருபெரும் கோட்டைகளாகத் திகழ்ந்தன. இவற்றினைக் கண்டு மனம் கொதித்து எழுந்தார். மனிதன் இவ்வாறெல்லாம் இருக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டார். சமூகத்தைச் சீர்குலைக்கும் கரும்புள்ளிகளை அழிப்பதற்குத் தான் முடிந்த வரை அறக்கருத்துக்களைக் கூறி வந்தார்.

சர்வக்ஞரும் தமிழ்ப் புலவர்களும்

சர்வக்ஞரின் கருத்துக்களும் தமிழ்ப் புலவர்களின் கருத்துக்களும் ஒற்றுமையாகத் திகழ்கின்றன. இவ்விரு மொழி வேறுபாட்டாலும் கருத்துக்கள் ஒரே தன்மையுடையனவாக விளங்குகின்றன. குறிப்பாக வள்ளுவர், ஔவையார், திருநாவுக்கரசர் போன்றோரின் கருத்துக்களில் ஒன்றுபடுகின்றனர்.

ஈசன் தன்னுள்ளேயே இருக்கிறான் என்று உணராமல் கங்கை ஆற்றில் நீராடினேன். காவிரி ஆற்றில் மூழ்கினேன். குமரித் துறையிலே ஆடினேன் என்று சொல்வதில் எப்பயனுமில்லை. இப்படிப்பட்டவர்கள் ஈசனை அறியாதவர்கள் என்று திருநாவுக்கரசர் கூறுகின்றார். அதனை விளக்கும் முகமாக,

கங்கை ஆடில்என் காவிரி ஆடில்என்

கொங்கு தண்கும ரித்துதறை ஆடில்என்

ஓங்கு மாகடல் ஓதம்நீர் ஆடில்என்

எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே

எனும் பாடல் விளக்குகின்றது. இதே கருத்தினை வெளிக்காட்டும் முகமாக

கங்கை கோதாவரி துங்கபத்ரா ஆறுகளில்

பங்கமின்றி மூழ்கிப் பயனென்னமங்காத

தன்பால் இலிங்கத்தின் மெய்ம்மை அறியாதோன்

என்செய்தால் என் சர்வக்ஞ    (.வெ.164)

எனும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

திருவள்ளுவரின் கருத்துக்களைத் தம் திரிபாதியில் எடுத்துரைத்துள்ளார். தீயினாலே சுட்ட தோற்காயம் ஆறக்கூடும். ஆனால் நாவினால் பேசும் கடுஞ் சொல்லால் உண்டாகும் உள்காயம் எப்போதும் ஆறவே ஆறாது என்பதனைத்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு

என வள்ளுவர் கூறுகிறார். இதனைப் போலவே சர்வக்ஞர் பாடலின்

கத்தியிலாம் காயம் மருந்துகொண்டு போக்கிடலாம்

சுற்றி சுழலும் சுடுநாக்கால்உற்றபுண்

என்றைக்கும் ஆறா திறுதிவரை சர்வக்ஞ

நின்றுவிடும் மாறா வடு          (.வெ.1162)

இவ்வடிகளும் ஒத்துப் போகின்றன. பல்வேறு வகையில் ஏமாற்றித் தொழில் செய்யும் மக்களைக் குறிப்பிட்டுத் தன் பாடலில் அவர்களின் தவறுகளைச் சுட்டியுள்ளார். பொற்கொல்லர்கள்ள குணத்தை வெளிப்படுத்தும் முகமாகப்

புடமெனக் காட்டியே சாம்பலுள் மறைப்பான்

படர்தீயில் சுட்டுச் சோப்பான்பிறதங்கம்

தீட்டுகையில் திருடுவான் சர்வக்ஞ     (.வெ.783)

எனும் பாடலடிகள் விளக்குகின்றன.

பிறரின் பொருள்மீது ஆசை கொள்வோர், மதுவுண்பவர், பாம்பினை வைத்துப் பிறருடைய வீட்டினை அபகரிப்போர் இம்மூவர்க்கும் நல்ல சாவு ஏற்படாது என்பதை

எரிவீட்டில் பொருள்தேடுவோர் உயர்வான மதுவுண்போர்

ஊரும் நாகமொடு பிறன்மனையை கைப்பிடிப்போர்

துர்மரணம் தப்பார் சர்வக்ஞ           (..702)

எனும் பாடடிலகளில் காணலாம். மண்ணாசை, பெண்ணாசை எனக் கொண்டவர்களுக்குப் பாடம் புகட்டும் விதமாகப் பிறர் திருந்துதல் வேண்டுமென்பதை வலியுறுத்தும் முகமாக

மண்ணும் பெண்ணும் ஆள்வோர் எனவேண்டா

பெண்ணால் கெட்டவன் இலங்கைத் துரியன்

மண்ணால் கெட்டான் சர்வக்ஞ         (..692)

எனும் பாடலடிகளின் மூலம் தெளிவுறுத்துகின்றார். இதுபோன்ற பலவகையில் குறுக்கு வழியில் ஈடுபட்டவர்களைக் கண்டு இனிமேல் இவ்வாறு இருக்கக்கூடாது என்ற எண்ணமுள்ளவராகத் திகழ்ந்து அறக்கருத்துக்களைப் பாடியுள்ளார். பண முதலாளிகளின் போலி மற்றும் வறட்டுக் கௌரவம், அறிவுடையோரின் கர்வம், படைவீரர்களின் திமிர் பிடித்த போக்கு, ஏழைகளின் மனத் துயரம், வாணிகர்கள், அதிகாரிகள் போன்றவர்களின் நேர்மை இன்மை சிதறியிருந்ததைக் கண்டு மாய்ந்துள்ளார். நலிந்து கிடக்கும் சமூகத்தை உயர்த்த வேண்டுமென்பதில் இருபுறமும் பட்டை தீட்டிய கருவியாகத் திகழ்ந்தார். நலிந்து கிடந்த சமூகத்திற்கு அறநெறியும் ஆன்மீகக் கருத்துக்களும் சமுதாயப் புரட்சிக்கான செயல்களும் தேவையாக இருந்தன. இதை நிறைவு செய்யும் முகமாகச் சர்வக்ஞர் தன் அறப்பாடல்களை அதிகமாக மக்களுக்கு வழங்கினார். இவ்வாறாக வழங்கிய அமுதமானது பிணி போக்கும் மருந்தாகத் திகழ்ந்தது.

கருப்பொருள்

அறக்கருத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது சர்வக்ஞரின் நோக்கம். அதனை எவ்வாறு சொல்வது என்ற மதிநுட்பத்தினை நன்றாகக் கையாண்டு உள்ளார். திருவள்ளுவருக்கும் இவருக்கும் இடையே உள்ள கருத்து ஒற்றுமை மிகவும் நெருக்கமானது. வேறுபாடு யாதெனில் அவர்களின் கருத்துக்களை வெளிக் கொணர்ந்த விதம்தான். அதாவது வள்ளுவர் மென்மையாகவும் அன்பாகவும் பேசி உள்ளார். சர்வக்ஞர் தான் கூற வந்ததை அப்படியே கூறுவார். குடும்பம், சமுதாயம், பொது நிருவாகம், அரசியல், வேளாண்மை, பல்வேறு தொழில்கள், வாணிபம், சுகாதாரம், மருத்துவம், பேச்சு, இசை, பருவக் காலங்கள், கல்வி, ஜோதிடம், தர்க்கம், சாதி, மதம், ஆன்மீகம், மகளிர் நிலை, நாடு, கேடு பயப்பன போன்ற கருப்பொருள்களில் பாடியுள்ளார்.

மொழிபெயர்ப்பு

கன்னடத்தில் சர்வக்ஞர் பாடல்களைப் பல அறிஞர் தொகுத்துள்ளனர். அவற்றில் மிகச் சிறப்பான தொகுப்பு எனக் கருதுவது உத்தங்கி சென்னப்பாவின் நூல். இவர் தொகுத்த பாடல்களைக் கையாண்டு தமிழில் இறையடியான், கிருட்டினமூர்த்தி எனும் இருவர் மொழிபெயர்த்துள்ளனர்.

இறையடியான் மொழிபெயர்த்த 1194 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. உத்தங்கி சென்னப்பா இட்ட தலைப்புகளைப் பின்பற்றியதை இவரும் கையாண்டுள்ளார்.

இறையடியானின்சர்வக்ஞர் உரைப்பாஎனும் மொழிபெயர்ப்பு நூலில் 31 தலைப்புகளின்கீழ் 1194 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இரு பகுதியாகப் பிரித்து முதல் 20 தலைப்புகள் ஒரு குறிப்பிட்ட பொதுவான வரையறைகளை 684 பாடல்களில் தந்துள்ளார். அவையாவன கடவுள் வாழ்த்து, குருவின் சிறப்பு, இலிங்கத்தின் மேன்மை, இலிங்க வழிபாடு, இறைப்பெயர், பக்தியின் மேன்மை, ஈசனின் மேன்மை, ஞான வழி, யோகம், சிவயோகம், அறம், அரசநீதி, நட்பு, ஊழ், அந்தணர், சமணம், மூடர், கால அறிவு, கேடு, நடுவுநிலைமை என்பன.

இரண்டாவது பகுதியாகப் பிரிக்கப்பட்ட பாடல்கள்பல்வேறு தலைப்புகள்என்று 11 தலைப்புகளின்கீழ் 684 பாடல்கள் தந்துள்ளார். அவையாவன : பெண், மண், கண், நா, பெயரிடுதல், பிள்ளை, மாந்தர் நிலை, உறக்கம், அபின், மது, நீர்ப்பானம், புகை பிடித்தல், தாம்பத்யம், சூதாட்டம், ஒழுகுகின்ற வீடு, கல்விப்பணி, சாதனை, பாடகன், படித்தல், வெற்றுச் சொற்கள், சொல்வன்மை, நகைப்பு, உழவு, பசுக்கன்று, கோடை, வறுமை, பணிப்பெண், கடன்காரர், பெயர் சொல்வகை, தச்சன், தையற்காரன், வணிகன், பாதகன், மாயக்காரன், அடம்பிடிப்போர், அச்சமுடையோர், கண்ணாடி, வாணிகன், நெசவு, வேடன், வன்கண்ணர், கழைக்கூத்தாடி, வரி தண்டுவோர், இழிந்தோர், புறங்கூறல், பரத்தையின் தாய், மாந்தர் வகை, உயர்வு, பட்டறிவு, நாடு, பெண்பிரிவுகள், இருண்ட வீடு, கணிகைத் தொழில், வேசியர், உணவு, மருந்து, மதிநுட்பம் போல்வன.

தமிழில் இரண்டாவதாகச் சர்வக்ஞர் பாடல்களை மொழிபெயர்த்த மொழி பெயர்ப்பு நூல்சர்வக்ஞர் வெண்பாஆகும். இதனை மொழிபெயர்த்தவர் தா.கிருட்டினமூர்த்தி என்பார். சர்வக்ஞருடைய பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் அவற்றை வெண்பாவால் தமிழுலகிற்கு அளிக்கும் முயற்சியில் இவர் வெளியிட்டுள்ளார்.

சர்வக்ஞர் தான் எழுதிய பாடலில் மூன்று அடிகளில் மட்டுமே எழுதியுள்ளார். இது போலவே தமிழில் மொழிபெயர்த்த இறையடியான் என்பாரும் மூன்று அடியில் சர்வக்ஞர் உரைப்பாவை மொழிபெயர்த்துள்ளார். இருப்பினும் தா.கிருட்டினமூர்த்தி அவர்கள் நான்கு அடிகளில் (வெண்பா வடிவில்) இயற்றியுள்ளா். இவ்வாறு ஏன் இயற்றினார் என்பதற்கு விடை காணும்போது

“தமிழில் அற நூல்கள் பெரும்பான்மையும் நாலடி வெண்பாக்களிலேயே பாடப்பட்டுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் நீங்கலாக மற்ற அற நூல்கள் அனைத்தும் நாலடி வெண்பாக்களாலேயே யாக்கப்பட்டுள்ளன. கன்னட மொழியில் சர்வக்ஞர் மிகச் சிறந்த அறவாணர். அவர்தம் வசனங்களும் விழுமிய அறக்கருத்துக்களை உட்கொண்டனவாக உள்ளன. அதனால் தமிழின் இயல்புக்கு ஏற்ற அறத்தின் பிழிவாக உள்ள சர்வக்ஞர் வசனங்களை நாலடி வெண்பாக்களில் பொதிந்து வைப்பதே பொருந்துவது என்று கருதினேன்”

எனத் தனது முன்னுரையில் பகர்ந்துள்ளார்.

சர்வக்ஞர் வெண்பா எனும் இந்நூலில் 384 தலைப்புகளின்கீழ் 1892 வெண்பாக்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. சர்வக்ஞரின் பாடல்கள் முழுவதையும் தொகுத்து மொழிபெயர்ப்பு செய்ய வேண்டுமென்ற இவரின் இலக்கு நிறைவேறியுள்ளது. வெண்பாக்களில் உள்ள கருத்துக்கள் மிக நுணுக்கமாகவும் சான்றெண் விளக்கத்தோடும் எடுத்துரைத்துள்ளார்.

பார்ப்பனிய எதிர்ப்பு

ஊரெங்கும் பல்வேறு இடங்களையும் சுற்றித் தன் அறக்கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். இருப்பினும் அவர் சென்ற இடங்களில் சாதி வேறுபாடு காணப்பட்டு உள்ளது. பார்ப்பனிய்கள் தமக்கும் கீழான மக்களை இழிவாகவும் தீண்டாமையோடும் பார்த்துள்ளனர். இவற்றைக் கண்டு சர்வக்ஞர் மனம் வெதும்பியுள்ளார். தனது பாடல்களில் பார்ப்பனர்களை முன்வைத்து அவர்களின் குணம், இலக்கணம் போன்றவற்றினை விளக்கியுள்ளார்.

அனைத்து மலர்களிலும் மணம் நிறைந்திருக்கின்றது. மணம் வேறாயினும் மலர்கள் அனைத்தும் ஒரே இனத்தைச் சார்ந்தவையே. அதுபோல் மண்ணுலகில் மேல்சாதி, கீழ்ச்சாதி எனப் பாகுபடுத்த வேண்டாம் எனவும் இறையருள் மணந்தவரே மேலானவர் என்பதை

மணம் நிறைந்திருக்க எம்மலர் இருந்தென்ன

மண்சாதியில் மேல்கீழென வேண்டற்கஇறையருள்

மணந்தவளே மேலாம் சர்வக்ஞ         (..541)

எனும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

உலகிற்கு நீர் என்பது பொதுவானதாகும். சுற்றுகின்ற உலகம் ஒன்றே. தாகம் தணிக்கும் நீரும் ஒன்றே. அதுபோல் சுடுகின்ற தீயும் ஒன்றே. இவ்வாறு உலகத்தை இயக்கக்கூடிய அனைத்துப் பொருளும் சமமாகக் கருதப்படும்போது சாதியும் குலமும் என்றவை நடுவில் புகுந்து மனிதரை ஆட்டிப் படைப்பது ஏனென்று தன் பாடலில் விளம்புகின்றார். இதனைச்

சுழலும் உலகொன்றே பருகும் நீரொன்றே

சுடுகின்ற தீயொன்றே சாதியும் குலமும்

நடுவே புகுந்தெவன் சர்வக்ஞ           (..536)

எனும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

சமுதாயத்தில் நிலவிய குறைபாடுகளை வெறுத்தும் வன்மையாகவும் கண்டித்து உள்ளார். நீராடிப் புனல் தரித்து வேள்வி செய்தால் சொர்க்க வீட்டை அடைந்திடலாம் என மக்களை ஏமாற்றி வரும் பார்ப்பனர்களைத் தன் அடிகளால் சர்வக்ஞர் அடி கொடுத்துள்ளார்.

பிறப்பால் அனைவரும் சமம். கீழோர் மேலோர் என யாரும் கிடையாது என்பதை வலியுறுத்துகின்றார். எழுவகைத் தாதுக்களாகக் குருதி, தோல், தசை, நிணம், நரம்பு, எலும்பு, விந்து, ஐவகைப் பூதங்களான நிலம், நீர், தீ, வளி, வான் இவை எல்லாம் இயற்கையாய் அமைந்திருக்கச் செயற்கையாய் அமைந்த சாதி மட்டும் எங்கிருந்து வந்தது எனச் சாடுகின்றார். இதனை

தாதுக்கள் ஏழு கொண்டு பூதங்கள் ஐந்த மைத்துப்

பேதம் ஏதுமின்றிக் கட்டிநன்குவேதித்த

வாதஉடல் தாங்கும் மனிதர்க்குச் சர்வக்ஞ

சாதி வந்த தெங்கிருந்து சர்வக்ஞ         (.வெ.913)

எனும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

முடிப்பு

தனது வாழ்க்கையை அர்ப்பணித்து மக்களின் நலனை நோக்கி ஊர் சுற்றித் திரிந்தவராகத் திகழ்ந்துள்ளார். சர்வக்ஞர் அன்று அவர் போட்ட இவ்வறக் கருத்துக்களின் விதையானது வளர்ந்து அனைவரும் பின்பற்றும் வண்ணம் அமைந்துள்ளது. மொழியின் இலக்கியத்தையோ இலக்கணத்தையோ அறிந்து கொண்டு அதனைப் ஒப்பீடு செய்வது தற்கால நடையாகும். ஒப்பீடு இன்னும் அறியப்படாத பிற புலவர்கள் தன்மையை அறிய வழி செய்கிறது.

துணைநூற் பட்டியல்

 • இறையடியான், . (மொ..), சர்வக்ஞர் உரைப்பா, 2004, உலகத் தமிழாராச்சி நிறுவனம், சென்னை
 • கிருட்டினமூர்த்தி, தா. (மொ..), சர்வக்ஞர் வெண்பா, 2011, மணிவாசகர் பதிப்பகம், சென்னை
 • பிரபு பிரசாத், கே.பி., சர்வக்ஞர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்), 2009, சாகித்திய அகாதெமி, புதுடெல்லி.

சே.முனியசாமி

உதவிப் பேராசிரியர்

ஜெ.பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

அகரக்கட்டு, தென்காசி 627852