முனைவர் சி.சாவித்ரி | Dr.Ch.Savithri[1]

Abstract: Caldwell, who is widely regarded as the fictional father. He first wrote “A Comparative Grammar of the Dravidian languages” which is on comparing Dravidian languages. In this book, Caldwell described the Telugu language and its grammatical features as one of the languages of Dravidian. The article discussing about the Telugu language caariyai as which he mentioned in his works.

Keywords: A Comparative Grammar of the Dravidian Languages, Caldwell Dravidian, கால்டுவெல்; ஒப்பிலக்கண நூல், கோத்த, கோண்டி, கூயி, கூர்க், ராஜ்மஹால், திரவிடியன்.

*******

கால்டுவெல் திராவிட மொழிகளை ஒப்பிட்டு முதன்முதலாக A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN LANGUAGES என்ற ஒப்பிலக்கண நூலை எழுதினார். இந்நூலில் திராவிட திருந்திய மொழிகளில் ஒன்றான தெலுங்குமொழிச் சிறப்புக்களையும், அதன் இலக்கணக் கூறுகளையும் சான்றுகாட்டி விளக்கியுள்ளார். அவற்றில் கால்டுவெல் குறிப்பிட்டுள்ள தெலுங்குமொழிச் சாரியைகளைப் பற்றி இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

சமஸ்கிருதத்தில் உள்ள த்ராவிட, த்ரவிட என்ற சொற்கள் தமிழ்மொழியினையும் தமிழர்களையும் குறிக்கின்றன.  ‘பஞ்ச திராவிட’ என்ற சொல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குசராத்தி ஆகிய மொழிகள் பேசுபவர்களைக் குறிக்கின்றது.  இந்த திராவிட மொழிகளுக்கு முதன் முதலில் ஒப்பிலக்கணத்தை வகுத்தவர் கால்டுவெல்லாக இருந்தாலும் எல்லீஸ் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.  இருப்பினும் முழுமையான ஆய்வைக் கொண்டு வந்ததில் பெரும்பங்கு கால்டுவெல்லைச் சாரும்.

திராவிடச் சொல்லில் இருந்து வந்த ‘திரவிடியன்’ என்ற சொல்லை இம்மொழிக் குடும்பத்திற்குச் சூட்டியுள்ளார் கால்டுவெல்.  இவரைப் பின்பற்றியே மற்ற மொழி அறிஞர்களும் இச்சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர் (பி.எஸ்.சுப்பிரமணியம், 2006, ப. 3).

கால்டுவெல் காலத்தில் தற்போது நாம் அறிந்த திராவிட மொழிகள் கண்டறியப்படவில்லை.  அவர் 12 மொழிகளை மட்டுமே திராவிட மொழிகளாகக் குறிப்பிட்டுள்ளார்.  அவற்றில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, கொடகு மொழிகளைத் திருந்திய மொழிகளாகவும், கோத்த, கோண்டி, கூயி, கூர்க், ராஜ்மஹால் மொழிகளைத் திருந்தா மொழிகளாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிராஹூயி மொழியில் திராவிட மொழித் தன்மைகள் இருந்தபோதிலும், அம்மொழியைச் சிதியன் மொழியாகக் கருதி அதில் திராவிட மொழித் தன்மைகள் பிராஹூயியில்  கலந்துவிட்ட பழங்கால திராவிட இனத்தின் எச்சங்களாக எண்ணியுள்ளார். இருப்பினும் இம்மொழி திராவிடமொழியாகக் கருதப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கால்டுவெல் திராவிட மொழி ஒப்பிலக்கணத்தின் நோக்கங்களாகக் கீழ்வரும் நான்கு முக்கிய கருத்தியல்களைக் குறிப்பிடுகிறார் (பி.எஸ்.சுப்பிரமணியம், 2006, ப. 67).

 1. கால்டுவெல் அவர் காலத்தில் கண்டறியப்பட்ட 12 மொழிகளை ஒரு மொழிக்குடும்பமாக உறுதி செய்து, அம்மொழிக் குடும்பத்திற்குத் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்று பெயரிடுவது (சமஸ்கிருதத்தில் ‘திராவிட’ என்ற சொல் குறிப்பாக தமிழையும், தமிழர்களையும் மட்டுமே குறிப்பதாகும். அதைக் கால்டுவெல் மொழிக் குடும்பத்திற்குப் பயன்படுத்தியது).
 2. திராவிட மொழிகளின் சிறப்புகளை விளக்கிக்கூறி திராவிட மொழிகளுக்கும், சமஸ்கிருதத்திற்கும் உள்ள வேறுபாட்டினை விளக்கி, இவை சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை அல்ல என்று உறுதி செய்வது.
 3. திராவிட மொழிகளுக்கு முதன்முதலில் மிகவும் விளக்கமான ஒப்பிலக்கணத்தை உருவாக்கியது.
 4. சில திராவிடமொழிச் சொற்கள் சமஸ்கிருதத்தில் சேர்ந்துள்ளன என்ற கோட்பாட்டை உருவாக்கி இக்கருத்தியலில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது.

கால்டுவெல்லுக்குப் பிறகு 19ஆம் நூற்றாண்டில் எந்த ஒப்பாய்வுகளும் பெரிதளவில் நடைபெறவில்லை எனலாம்.  இதற்குக் காரணம் அக்கால இந்திய மக்களுக்கு இவ்விதமான ஆய்வுகளில் திறமையும் ஆர்வமும் இல்லாமல் போனதே.  மேலும் கால்டுவெல் கோட்பாடுகள் ‘சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்’ என்ற பழைய கோட்பாட்டையே நம்பிய அக்காலப் பண்டிதர்களிடம் போய்ச் சேராமை,  அக்காலத்தில் அயல் நாட்டவரான மிஷனரிகள், அரசு ஊழியர்கள் ஒப்பீட்டு ஆய்வுகளுக்குப் போகாமல் இருப்பது, இலக்கியம் அற்ற மொழிகளுக்கு சுருக்க இலக்கணங்கள், அகராதிகள் இயற்றுவதிலேயே திருப்தி அடைந்தனர்.

கால்டுவெல் கப்பலில் பயணம் மேற்கொண்ட தருணத்தில் சி.பி.பிரௌன் என்பவரைச் சந்தித்தார். சி.பி.பிரௌன் ஆரிய மொழியையும், தெலுங்கையும் நன்கு அறிந்தவர்.  அவர் தெலுங்கு மொழிக்கும் இலக்கியத்திற்கும் தொண்டாற்றியவர்.  அவரிடம்தான்  கால்டுவெல் முதன்முதலில் ஆரியம் பயின்றார்.

கால்டுவெல்லும் தெலுங்கு மொழியும்

கால்டுவெல் தமிழ்மொழியின் தனித்தன்மைகளை எடுத்துரைப்பதற்காக 1856ல் ‘எ கம்பரேடிவ் க்ராமர் ஆஃப் த்ரவிடியன் லாங்வேஜஸ்’ என்ற நூலை எழுதி இருக்கின்றார்.  இதற்காக அவர் ‘இடையன்குடி’யில் இருக்கும்போது 1840 – 1872 இடைப்பட்ட காலத்தில் தமிழோடு தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளைக் கற்றார் (The Hindu, February 18, 2011.  கலைஞர் கருணாநிதி அவர்களின் உரை).

கால்டுவெல், ஓசைநயத்தில் திராவிட மொழிகள் அனைத்திலும் தெலுங்குக்கே முதலிடம் பெறத்தக்க தன்மையுடையது என்றாலும், பழமைப் பெருமையிலும், சொற்பெருக்கத்திலும் திராவிட மொழி வரிசையில் தெலுங்கு, தமிழை அடுத்தே வைக்கப்படும் என்கிறார்.

இவர் தெலுங்கு தொடர்பான கருத்துக்களைத் தெளிவுபெறத் தம் நூலில் பதிவு செய்துள்ளார். அவை கீழ்வருமாறு :

 • ஆலந்து நாட்டவர் மொழியிலிருந்து தோன்றியதான ‘ஜெண்டோ’ என்ற பெயரினாலும் ஒரு காலத்தில் இந்தியர் அனைவரையும் குறித்து, நாளடைவில் தெலுங்கரை மட்டுமே குறித்த ‘ஜெண்டில்ஸ்’ என்ற பெயரினாலும் இம்மொழி பெயரிடப்பட்டிருந்தது.
 • தெலுங்கு பேசும் மக்களைக் குறிப்பிடும் பகுதிகளாகப் பல இடங்களைக் கூறியபோதிலும் குறிப்பாக உள்நாட்டில் மராட்டிய மொழி புலங்கும் மாவட்டங்களிலும் கிழக்கு எல்லை வரை பரவிய மைசூர் மாநிலம், கடப்பை, கர்னூல் மாவட்டங்கள், ஹைதராபாத், நாகபுரி மாவட்டங்கள், கோண்ட் வனத்தில் ஒரு பகுதி ஆகிய இப்பெருநிலப் பரப்பில் புலங்கியதும் தெலுங்கே.
 • மேற்கூறிய நிலப்பரப்பை முகமதியர்கள் ‘தெலங்கான’ எனப் பெயரிட்டு அழைத்தார்கள்.
 • தெலுங்குமொழி, சமஸ்கிருத எழுத்தாளர்களால் ‘ஆந்திரம்’ அதாவது ஆந்திரர் புலங்கும் மொழி என்று அழைக்கப் பெற்றுள்ளது. பண்டைய காலம்தொட்டே இரண்டு இனங்களாகப் பிரிந்து வாழ்ந்த தெலுங்கர்களில் ஓரினத்தவர் ஆந்திரர். மற்றோர் இனத்தவர் கலிங்கர்.
 • ஆதி ஆரியர்க்கு கலிங்கரைக் காட்டிலும் ஆந்திரரே நன்கு அறியப்பட்டிருந்ததாகத் தெரிகின்றது. ஐத்தரேய பிராமணத்தில் ஆந்திர அரச இனத்தவர் இந்தியாவை ஆண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
 • மெகஸ்தனீஸுக்குப் பிறகு வாழ்ந்த பிளைனியால், ஆந்திரர் ஆற்றல் மிக்க இனத்தவர் எனக் கூறப்பட்டது.
 • கங்கையின் வடதிசை நாடொன்றில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் ஆசிரியரால் அறியப்பட்ட பல்வேறு இனத்தவருள் ஆந்திரரும் ஒருவராக அக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.
 • நான் அறிந்தவரையில் வெளிநாட்டவரால் இம்மொழி அறிந்து குறிப்பிடப்பட்ட முதல் நிகழ்ச்சி, கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இடையில் இந்நாட்டிற்கு வந்து, “ஆந்திரர் வழங்கும் மொழி மத்திய இந்திய மக்கள் வழங்கும் மொழிகளிலிருந்து வேறுபடுகின்றது. ஆனால், அவ்விருவரின் எழுத்துருவங்கள் மட்டும் பெரும்பகுதி ஒன்றாகவே உள்ளன” என்று கூறும் சீன யாத்திரிகன் யுவான்ஸ்வாங்கின் ‘நினைவு அலைகள்’ என்னும் குறிப்பில் இடம்பெற்றிருப்பதேயாகும்.  இதனால், தெலுங்கு மொழியின் நாகரிகம், சிறப்பாக ஆந்திரர் வழங்கும் தெலுங்குமொழியின் நாகரிகம், மதிக்கத்தக்க அளவு வளர்ந்திருக்கின்றது என்பது புலனாகும் என்று கால்டுவெல் கூறுகின்றார்.
 • தெலுங்கர் தங்கள் மொழிக்கு இட்ட பெயர் ‘தெலுகு’. அப்பெயரின் பிற வடிவங்கள் ‘தெலுங்கு, தெலிங்க, த்ரிலிங்க, தெனுகு, தெனுங்கு’ என்பனவாம்.
 • தங்கள் மொழியை உணர்த்தும் பொதுவான பெயராகிய ‘தெலுகு’ அல்லது ‘தெலுங்கு’ என்பதற்கு அம்மொழிப் பண்டிதர்கள் விரும்பி மேற்கொள்ளும் பிறப்பியல் முறை, லிங்க வடிவம் அமைந்த மூன்று கோயில்களை எல்லைக் கற்களாகக் கொண்டு விளங்கும் ‘த்ரிலிங்க’ நாட்டு மொழி என்று பொருள்படும் ‘த்ரிலிங்க’ என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகக் கொள்வதேயாகும். பேராசிரியர் கேம்பெல் அவர்கள் இக்கூற்றை ஏற்றுக் கொள்வார்.  ஆனால் பேராசிரியர் பிரௌன் அவர்கள் ‘இக்கூற்று, இக்காலத்தவர் கண்டுபிடித்த ஒரு வெற்றுரை. ‘தெலுகு’ என்று அச்சொல்லுக்குத் தெரிந்த வேறுசொல் ஏதும் இல்லை’ என்று கூறுகின்றார்.  கோயில்களின் பெயர்களோடு இணைத்துக் கூறப்பட்ட இக்கொள்கை பெரும்பாலும் பெயர் ஆராய்ச்சிக்கு உட்படாமலே தள்ளப்பட்டது போலும்.  ஆனால், லிங்கம் எனும் அச்சொல் எப்பொருளில் ஆளப்படுகின்றது என்பது குறித்து ஏதும் கருதாமல் ‘த்ரிலிங்கம்’ என்பதிலிருந்தே ‘தெலுகு’ பிறந்தது என்ற முடிவு அறவே கைவிடப்படும். அந்நிலை ஆராய்ந்து காணும் தகுதியுடையதே யாகும் என்று கால்டுவெல் தனக்குக் கிடைத்த தரவுகள் அடிப்படையில் தெலுங்குக்கு இணையான சொற்கள் பற்றிய கருத்தியல்களையும் தெலுங்கு மக்களின் பண்புகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.
 • வடதிசையில் வாழும் மக்கள் என்பதால் தமிழர்கள் இவர்களை ‘வடுகர்’ என்று அழைத்தார்கள்.
 • மேலும், ஐரோப்பியர்கள் மதத்தைப் பரப்புபவர்களாகவும், அரசு ஊழியர்களாகவும் பணிபுரியும் நிலையில் நம் நாட்டுக்கு வந்து அவர்கள் இந்திய மொழிகளைக் கற்றறிந்தனர். தெலுங்கு மொழியைக் கற்றறிந்த மிஷனரிகளும் சிவில் சர்வெண்ட்டுகளும் தெலுங்கு மொழி கற்பது மட்டுமின்றித் தெலுங்கு மொழிக்கு அகராதிகளையும் இலக்கண நூல்களையும், வாசகங்களையும் உருவாக்கினார்கள். இவற்றில் அவர்கள் இயற்றிய இலக்கண நூல்களின் தலைப்புகளை மட்டுமே ஆராய்ந்தால் அவர்கள் தெலுங்கு மொழியை என்னென்ன பெயர்கள் கொண்டு அழைத்தனர் என்பது புலனாகும்.   சான்றாகச் சில நூல்கள் இங்குக் குறிப்பிடப் படுகின்றன.
 1. பெஞ்ஜமின் ஸ்கால்ஜின் ‘வரூகியன் க்ராமர்’ (1728), க்ரமடிக தெலுகிக (1728) (Grierson.G. A Linguistic survey of India – vol.IV,1967)
 2. ஆசிரியர் பெயர் தெரியாத ‘எ க்ராமர் ஆஃப் தி ‘ஜெந்தோ’ லாங்வேஜ்’ (1807) (Grierson.G. A Linguistic survey of India – vol.IV,1967. page.581)
 3. வில்லியம் கரியின் ‘எ க்ராமர் ஆஃப் தி தெலிங்க லாங்வேஜ்’ (1814). இவர் தெலுங்கைத் ‘தெலிங்க’ என்று குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி இவர் தெலுங்கு மொழி சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தமொழி என்று கருதுவதால்1 ‘தேசிய’ச் சொற்களின் தோற்றம் தெரிய வருவதில்லை[2] என்று குறிப்பிட்டார்.  தெலிங்க, கர்னாடக, தமிளம், மலயாளம், சிங்கலீஸ் – இந்த ஐந்து மொழிகளில் தெலுங்கு மிகவும் வளர்ச்சி பெற்ற மொழியாகக் காணப்படுகிறது என்றும் தெலுங்கு மொழி கற்பதற்குக் கடினமாக இருந்த போதிலும் கற்கவேண்டிய மொழிகளில் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.  இது வேற்றுமைகளைக் கொண்டுள்ளதால், சரள சுந்தர பொருள் வெளிப்பாட்டிற்கு அனுகூலமாக உள்ளது என்ற தன் கருத்தை வெளிப்படுத்தினார்.
 4. எ.டி.கேம்பெல்லின் ‘எ க்ராமர் ஆஃப் தெலோகோ லாங்வேஜ்’ (1816). இவர் தெலுங்கு இலக்கிய, வழக்கு மொழிகளை நன்கு அறிந்து ‘ஆந்திர மொழி சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது அன்று’ என்று உறுதி செய்து தம் கருத்தை வெளிப்படுத்துவதற்குத் தயங்கினார்(ஜி.லலித, 1996, ப. 245).  இதற்குக் காரணம் தெலுங்கு மொழி தத்ஸமச் சொல்மயமாவதே.  சமஸ்கிருத எழுத்து வடிவங்கள் தெலுங்கு எழுத்து வடிவங்களைக் காட்டிலும் மாறாக உள்ளதால் தெலுங்கு தனிமொழி என்று அவர் கூறுகின்றார்.
 5. வில்லியம் பிரௌனின் ‘எ க்ராமர் ஆஃப் தி ஜெந்தோ லாங்வேஜ்’ (1817). இவர் தெலுங்குக்கு இணையான சொல்லாக ‘ஜெந்து’ என்று கூறினார். முதன் முதலில் தெலுங்கை ‘ஜெந்து’ என்று கூறியவர் இவரேயாவார். கி.பி. 1648-இல் இந்த ஜெந்து சொல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது[3].         சி.பி.பிரௌன் இது பொருளற்ற சொல் என்று புறக்கணித்து விட்டார்[4].
 6. ஜெ.ஸி.மொர்ரிஸிஸ் ‘தெலோகோ செலக்சன்ஸ் வித் ட்ரான்ஸ்லேஷன்ஸ் அண்ட் க்ரமடிகல் அனலைஸிஸ்’ (1823).
 7. டபிள்யூ.எம்.ஹாவெல்லின் ‘கம்பெண்டியம் ஆஃப் தி ஆந்திர வியாகரணம்’ (1834).

கால்டுவெல்லின் தெலுங்குச் சாரியைகள்

சாரியை விளக்கம்

திராவிட மொழிகளில் பெயர்ச்சொற்கள் சிலவற்றுக்கு (எண், பதிலிடு பெயர்களுடன்) இரண்டாம் மற்றும் பிற வேற்றுமைகளில் சில உருபுகள் வந்து சேருகின்றன. இவற்றைத் தெலுங்கில் ‘ஔப விபக்திகாலு’ (துணை வேற்றுமைகள்) என்பர்.

இவற்றைக் கால்டுவெல் Inflectional increments என்று கூறியுள்ளார்.  சிலர் Augments என்று சொல்கின்றனர்.  தமிழ் இலக்கணங்கள் இவற்றைச் ‘சாரியை’ என்கின்றன.  இவற்றுக்குத்  தனித்த பொருள் ஏதுமில்லை. ஆனால் இவற்றின் பயன் இவற்றுக்குப் பின்பு வேற்றுமைகள் வரும் என்பதைக் காட்டுவதேயாகும் (பி.எஸ்.சுப்பிரமணியம், 2006, ப. 252).

தொல்காப்பியர் சாரியை வரும் இடத்தைப் பற்றிக் கூறுங்கால்-

அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே     (புணார்ச்சி:16)

(சொல்லப்பட்ட உயர்திணை அஃறிணைப் பெயர்களின் பின்பே சாரியைச் சொற்கள் வரும்)

(எ-டு) : ஆடூஉவின்கை, மகடூஉவின்கை, பலவற்றுக்கோடு

சாரியை வரும் இடங்களைப் பற்றிக் குறிப்பிட்ட தொல்காப்பியர் சாரியைகளின் வகைகளைப் பற்றி அடுத்த நூற்பாவில் கூறியுள்ளதாவது :

அவைதாம்

இன்னே வற்றே அத்தே அம்மே

ஒன்னே ஆனே அக்கே இக்கே

அன்னென் கிளவி உளப்படப் பிறவும்

அன்ன என்ப சாரியை மொழியே              (புணரியல், 17)

இந்நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிட்ட சாரியைகள் இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக், இக், அன் என்ற ஒன்பதுமாகும்.

தெலுங்கு இலக்கண ஆசிரியர்களும் மொழியியலாளர்களும் இச்சாரியைகளை ‘ஔப விபக்திகாலு’ (துணை வேற்றுமைகள்) என்றே கூறுகின்றனர்.  தெலுங்குமொழியில் உள்ள சாரியைகள் மூன்று. அவை -இ, -டி, -தி என்பனவாகும். இவையல்லாமல் சில பெயரடிகளுக்கும் இரண்டாம் மற்றும் பிற வேற்றுமைகளுக்கும் வருகின்ற சில எழுத்துகளையும் துணை வேற்றுமைகளாகக் கொள்ளலாம் (பி.எஸ்.சுப்பிரமணியம், 2006, ப. 259).

தமிழ்மொழியில் பெயருக்கு முன்பு வரும் பண்புப் பெயர்களைப் பெயரடை என்றும் வினைக்கு முன்பு வருபனவற்றை வினையடை என்றும் கூறுவது போலத் தெலுங்கு அறிஞர்கள் வேற்றுமைகளுக்கு முன்பு வருவதால் சாரியைகளைத் துணை வேற்றுமைகள் என்கின்றனர்.

தமிழில் சுட்டிய ஒன்பது சாரியைகளையும் தெலுங்கில் சுட்டிய மூன்று சாரியைகளையும் கொண்டு கால்டுவெல் திராவிட மொழிகளில் குறிப்பிட்ட சாரியைகள், அவற்றுக்கு அவர் தரும் விளக்கங்களை எடுத்துரைத்துக் கால்டுவெல் குறிப்பிட்ட சாரியைகளின் பின்புலம் என்னவாக இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கள் இங்குப் பதிவு செய்யப்படுகின்றன.

கால்டுவெல் குறிப்பிட்டுள்ள சாரியைகள்

கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் சாரியைகளைப் பற்றி விளக்கியுள்ளார் (Caldwell R. , 1856, pp. 321 – 341).  அவர் குறிப்பிட்ட சாரியைகளின் வகைகள் மொத்தம் ஏழு.  அவை :

 1. ‘இன்’ சாரியை
 2. ‘அத்’, ‘அர்’ சாரியைகள்
 3. ‘டி’ சாரியை
 4. ‘அத்து’ அல்லது ‘அற்று’ச் சாரியை
 5. ஈற்று மெய் இரட்டித்து வல்லொலியாதல்
 6. ‘இ’ கரச் சாரியை
 7. பன்மைச் சாரியை

என்பனவாம். அவர் குறிப்பிட்டுள்ள ஏழு சாரியைகளுள் ‘இன்’, ‘அத்து’ என்ற இரண்டும் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.  ‘டி’ ‘இ’ என்பவை தெலுங்கு மொழிக்குரியவை.  ஏனைய நான்கு சாரியைகள் கால்டுவெல் குறிப்பிட்டவை. அவற்றின் விளக்கங்களை இனிக் காண்போம்.

 ‘இன்’ சாரியை

கால்டுவெல் திராவிட மொழிகளில் ‘இன்’ சாரியையைப் பற்றிக் குறிப்பிடும்போது முதலில் “இன்” வடிவம் தமிழ், கன்னட மொழிப் பெயர்ச்சொற்கள் சிலவற்றில் வரும் என்று கூறி இதற்கு ஒப்பாகத் தெலுங்கில் ‘நு, நி’ என்பவை சாரியைகளாக வரும் என்கின்றார்.  இவையனைத்தும் இயல்பால் ஒரே தன்மையுடையவை என்று கூறி,  ‘இன்’ சாரியை தமிழில் ஒருமை, பன்மை ஆகிய இரண்டு இடங்களிலும் ஒரேவகையாக வருகின்றது என்றும்  இவற்றின் வேலை உருபேற்கும் பெயரடிகளை உருவாக்குவதே என்கிறார்.

‘இன்’ என்பதன் இனமான தெலுங்குச் சாரியைகளாகிய ‘நி, ந’ இரண்டும் சில பெயர்ச்சொற்களில் உடைமைப் பொருள் உணர்த்துவதோடு சில பெயர்ச் சொல்லடிகளோடு அவை வேற்றுமை உருபுகள் ஏற்பதன்முன் சாரியைகளாக இணைக்கப்படுவது உண்டு என்று தீனிகி = இதற்கு, குருவுனகு = குருவிற்கு என்பனவற்றைச் சான்று காட்டியுள்ளார்.  இச்சாரியைகளெல்லாம் தெலுங்கில் ஒருமைப் பெயர்களோடு மட்டுமே இணைக்கப்பெறும். தெலுங்கின் ‘நி’ சாரியையும் தமிழ், கன்னடத்தில் ‘இன்’ சாரியையும் பிறப்பால் ஒரே தன்மை என்பதில் சிறிதும் ஐயமில்லை என்று கூறுகின்றார்.

அத், அர் சாரியைகள்

தெலுங்கில் அழகிய பெண் என்ற பொருளில் வரும் ‘சொகஸுராலு’ (சொகஸு + ர் + ஆலு) என்பது போன்ற சில இடங்களில் பெயரடியாக வரும் பண்புப்பெயரையும், பெண்பால் விகுதியாகிய ‘ஆலு’ என்பதையும் இணைக்க வரும் ஒலித்துணை கருதிய ‘ர’கர மெய்யைக் கன்னட ‘அர்’ என்பதோடும், அதையொட்டி ‘அத்’ என்பதோடும் முடிவாக அஃறிணைச் சுட்டோடும் உறவு உடையதாகத் தொடர்புபடுத்தலாம்.  ஆனால் ‘ர’கர மெய்யை உடம்படுமெய்யாகக் கொள்வதே சிறப்பு என்றார் கால்டுவெல். இவர் இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

 1. இவர் தெலுங்கு மரபிலக்கணங்களை ஆராய்ந்து பார்த்திருக்கலாம். ஏனெனில் தெலுங்கு இலக்கணங்கள் ‘ஆலு’ என்பதைப் பெண்ணைக் குறிக்கும் சொல்லாக மட்டுமே பயன்படுத்தியுள்ளன.

 சான்று :

‘பேதாதி சப்தம்புலகு ஆலு சப்தம்பு பரம்பகுனபுடு கர்மதாரயம்புநந்து ருகாகமம்பகு’                                           (பாலவியாகரணம்: சந்தி-30)

(பேதா வாய்பாட்டிற்கு ஆலு சொல் சேரும்போது கர்மதாரய (பண்பு) தொகையில் ‘ர’கரம் தோன்றும்)

கால்டுவெல் ‘ர’கரத்தை உடம்படுமெய்யாகக் கூறுவதற்குக் காரணம்:

அ. தெலுங்கில் ‘ஆலு’ என்பது ‘பெண்’ என்பதற்கு நிகரான சொல். பெண்ணின் பண்புகளைக் கூறும் நிலையில் இந்த ‘ஆலு’ என்ற
பெயர்ச்சொல் முன் ‘ர’கரம் தோன்றியதால் இதை உடம்படுமெய் என்று கருதியிருக்கலாம்.

ஆ. தெலுங்கு இலக்கணங்கள் ‘ஆலு’ என்ற சொல்லை வேற்றுமை உருபாகக் கூறவில்லை.  ஆகையால் அதற்கு முன் வந்த ‘ர’கரம் சாரியையாக எண்ணலாகாது என்று நினைத்திருக்கலாம்.

 1. சமஸ்கிருத்தில் இந்த அமைப்பு இருக்கிறது. ‘பெண்’ என்ற சொல்லுக்கு நிகராகச் சமஸ்கிருத்தில் ‘அதிவ’ என்ற சொல் உள்ளது. பெண்ணின் பண்புகளைக் குறிக்கும் நிலையில் பெயரடைகளாக வரும் நிலையில் “வ”கரம் உடம்படுமெய்யாக வருகிறது.

சான்று : சௌபாக்கியவதி

    குணவதி

  சௌந்தர்யவதி

கால்டுவெல் சமஸ்கிருத மொழி அமைப்பினை நன்கு அறிந்தவராக     இருப்பதால் சமஸ்கிருதத்தில் ‘வ’ கரம் உடம்படுமெய்யாகவும், தெலுங்கில் ‘ர’கரம் உடம்படுமெய்யாகவும் வந்திருகிறது என்பதை உணர்ந்திருக்கலாம்.  ஆகையால், ‘ர’ கரம் சாரியை என்று முதலில் கூறினாலும் பின்னர் அதை உடம்படுமெய்யாகக் கருதினார்.

’டி’ சாரியை

தெலுங்கில் அஃறிணை ஒருமைப் பெயர்களின் சாரியையாக, முறையாகவும் பெரும்பான்மையாகவும் பயன்படுவது ‘டி’ அல்லது ‘தி’.  தமிழில் ‘அத்து’ச் சாரியை வருவது போல், இச்சாரியை தெலுங்கில் உருப்பெற்றும் பெயரடிகளோடும் இணைக்கப்பெறும் சாரியையாக மட்டுமே இல்லாமல் இடத்தின் தேவைக்கேற்ப ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருளும், பெயரடைப் பொருளும் உணர்த்தும் பெயரடியாகவும் காணப்படுகின்றது.

தெலுங்குமொழிச் சாரியையாகச் சொற்களின் ஈற்றில் வரும் சொல்லுருபு, தொடக்கத்தில் ‘தி’ என்பதே. ‘டி’ என்பதன்று. ஈற்றெழுத்து ‘ர’கரம் அல்லது ‘ல’கரமாக வரும் சொற்களை, ‘ட’கரம் ஒன்றே தொடர்வதற்கு இதுவே காரணமாகும்.  ‘த’கரம், ‘ர’கரம் அல்லது ‘ல’கரத்தின் பின்பு வந்தால், அவ்விரண்டு எழுத்துகளும் அம்மொழி இயல்பை யொட்டி இரண்டறக் கலந்து, ‘ட’கரமாக மாறும்.

வல்லினமான ‘த’கரம், ஏனைய மெய்யெழுத்துகளோடு இணைக்கப்பெறின் இயல்பாகவே நாவினமாகும். ஆனால் நாவினம் வல்லினமாக மாறுவது அரிது.  இத்தெலுங்குச் சாரியை தொடக்கத்தில் ‘தி’ என்பதே, ‘டி’  என்பதன்று என்று முடிவு செய்தால் ‘அத்’ என்ற கன்னடச் சாரியையும் ‘அத்து’ என்ற தமிழ்ச் சாரியையும் தமிழ், கன்னட அஃறிணைச் சுட்டாகிய ‘அது’ என்பதோடு தொடர்புபடுத்துவதைப் போன்றே, ‘தி’ என்ற இத்தெலுங்குச் சாரியையும் அம்மொழி அஃறிணைச் சுட்டாகி  ‘அதி’ என்பதோடு தொடர்புபடுத்துவதும் பொருந்தும்.

ஈற்றுமெய் இரட்டித்து வல்லொலியாதல்

தமிழ்ப் பெயர்ச்சொற்கள் ‘டு’வையும் ‘று’வையும் ஈறுகளாகக் கொண்டு வேற்றுமையுருபேற்க அவ்வீறு ‘ட’கரமும், ‘ற’கரமும் இரட்டிக்கப்பெறும் என்கிறார் கால்டுவெல்.

சான்று :

காடு – காட்டில்

ஆறு – ஆற்றில்

தெலுங்கில் இவ்வினப் பெயர்களின் ஈற்றுப் பெயர்கள், சாரியை அல்லது வேற்றுமையடிகளாக மாறும்போது வல்லொலியாக ஆக்கம் பெறுகின்றன.  ஆனால், இரட்டிக்கப்பெறுவதில்லை.  ஆறு எனப் பொருள்படும் ‘ஏறு’ என்ற சொல், சாரியை ஏற்பின் ‘ஏட்டி’ என ஆகாது ‘ஏடி’ என்றே ஆகும். சில இடங்களில் ‘ற்ற்’ என்ற மெய்களைக் கொண்ட பெயர்ச்சொற்களை உருபேற்கும் பெயரடிகளாக மாற்றினால் அம்மெய்களை ’ற்த்’ என மாற்றுவதில் தெலுங்கு, தமிழ் மொழியை அடியொற்றி நிற்கிறது. கழுத்து எனப் பொருள்படும் ‘அற்று’ என்ற சொல்லின் சாரியை வடிவம் ‘அற்தி’ என்று வரும்.

 1. ’இ’கரச்சாரியை

தெலுங்கு உயர்திணை இருபாற் பன்மைச் சுட்டுப் பெயர்களின் சாரியையாக ‘இ’கரம் வரும் என்கிறார் கால்டுவெல். அவர் எனப் பொருள்படும் ‘அவரு’
என்பதிலிருந்து பெற்ற ‘வாரு’ என்ற பெயர், வேற்றுமை உருபேற்கும் பெயரடியாக மாறி ‘வாரி’ என்றாகிறது.  சாரியை ஏற்ற உயர்திணை ஆண்பாற் சொல் ‘வானி’ என்பதன் ஈற்று ‘இ’கரம், தெலுங்கு மொழி ஆண்பாற் பெயர்களின் இயல்பான சாரியையாகிய ‘னி’ என்பதின் ஒரு பகுதியன்று.  ‘வாரி’ என்பதன் ஈற்றில் வந்த ‘இ’கரச் சாரியை போன்றதே இந்த ‘இ’கரச் சாரியையாகும்.  அவர்களுடைய எனப் பொருள்படும் உடைமைப்பொருள் குறித்த சுட்டுப் பெயராகிய ‘வாரிதி’ என்ற சொல்லை, அதே பொருள்படும் ‘அவரது’ என்ற தமிழ்ச் சொல்லோடு ஒப்பிட்டு நோக்கின் இரு மொழிகளிலும் அச்சொற்களில் ஈறு, தமிழில் ‘அது’ எனவும், தெலுங்கில் ‘அதி’ எனவும் வரும் அஃறிணைச் சுட்டே ஆகும். இச்சொல்லின் ஈற்று ‘இ’கரத்தின் முன் நிற்கும் ‘இ’கரமும், தெலுங்குக்கே உரிய இயல்பாகத் தன்னைத் தொடர்ந்து வருவதும் ‘அதி’ என்ற அஃறிணைச் சுட்டின் ஈற்றெழுத்தாய் வருவதுமாய் ‘இ’கரத்தினின்றே பெறப்பட்டது என்பதும் அறியப்படும். ஆகவே, வாரி என்பதன் ‘இ’கர ஈற்றினை, ‘அதி’ என்பதன் சுருங்கிய வடிவமாகவோ அதிலிருந்து தோன்றிய ஒரு சொல்லுருபாகவோ கொள்ளலாம்.

பன்மைச் சாரியை ‘அ’

தெலுங்கு பேச்சுமொழியில் பெரும்பாலான பெயர்ச்சொற்களின் பன்மைச் சாரியையாக ‘அ’கரம் வரும்.   தெலுங்குமொழியில் எல்லா அஃறிணைப் பெயர்களிலும் உயர்திணைப் பெயர்கள் சிலவற்றிலும் பன்மை விகுதியாக வருவது ‘லு’ என்பதே. ‘லு’ என வரும் அவ்வீற்றினை ‘ல’வெனத் திரிப்பதால் அவை உருபேற்கும் பெயரடைகளாக   மாறுகின்றன. இந்த ‘அ’கரச் சாரியையின்  பின்னரே, எல்லா வேற்றுமை உருபுகளும் இணைக்கப்பெறும்.  ‘கத்துலு’ (கத்திகள்), கத்துல (சாரியை ஏற்ற பெயர்) ‘கத்துல சேத’ (மூன்றாம் வேற்றுமை உடைமைப்பொருள் உருபாகிய ‘அ’கரத்தோடு உறவுடையதாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை) நடைமுறையில் வெறும் சாரியையாகவே பயன்படினும் இச்சாரியையும் தொடக்கத்திலே ஆறாம் வேற்றுமைப் பொருள் உடையதே.

இப்பொருள் பற்றிய ஆராய்ச்சியினை முடிப்பதன் முன் பெயரையும் சாரியையும் பெயரையும் வேற்றுமை உருபையும், சாரியையும் வேற்றுமை உருபையும் ஒன்றிணைக்க அவற்றினிடையே நின்று உதவ வரும், ஒலிநயம் குறித்த சொல்லுருபு குறித்துச் சிலவற்றைக் கூறுகின்றார் கால்டுவெல்.

கர உடம்படுமெய்

தமிழில் இரு உயிர்கள் இணையும்போது (முன் கூறியதைப் போல) அந்த உயிர்களிடையே உடம்படுமெய்யாக ‘வ’கரம் அல்லது ‘ய’கரம் தோன்றும். அம்முறையை யொட்டி உயிரீற்றுப் பெயர்களுக்கும், உயிர் முதற்சாரியை அல்லது உருபுகளுக்கும் இடையே அவ்வுடம்படுமெய்கள் தோன்றும்.  ஆனால் தெலுங்கில் ‘வ’கரத்திற்குப் பதிலாக ‘ன’கரம் உடம்படுமெய்யாக வரும் என்கிறார் கால்டுவெல்.

முடிவுரை

 1. பிராஹூயி மொழியைத் திராவிட மொழிகளில் ஒன்றாகக் குறிப்பிடாமை. இன்றைய திராவிட மொழி அறிஞர்கள் ப்ராஹூயி மொழியைத் திராவிட மொழிகளில் ஒன்றாகவே குறிப்பிட்டுள்ளனர்.
 2. தெலுங்குக்கு உள்ள பெயர்களையும் தெலுங்கு மக்களைப் பற்றியும் சான்று காட்டிக் கூறியது.
 3. தெலுங்கு மொழிக்குத் தெலுகு, ஆந்திரம், த்ரிலிங்க, ஜெந்து, வடுக போன்ற சொற்கள் உள்ளதாக அறிவது.
 4. தெலுங்கு சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது அன்று என்ற கால்டுவெல்லின் கருத்தியலுக்கு எ.டி. கேம்பெல்லின் கருத்து ஒத்துப் போகிறது. ஆனால் விலியம் கேரி இதை மறுக்கின்றார்.
 5. ‘டி’ சாரியையை ‘தி’ சாரியையாகக் குறிப்பிட்டு அதைத் தமிழ், கன்னட மொழிகளோடு தொடர்புபடுத்தி ‘டி’, ‘தி’ இரண்டும் ஒன்றே என்று கூறுவது. ஆனால் தெலுங்கு இலக்கணிகளும், மொழியியல் அறிஞர்களும் ‘டி’, ‘தி’ இரண்டையும் தனித்தனிச் சாரியைகளாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.

சான்றாக :

“டிவர்ணம்பு கொன்னிடிகி அந்தாக்ஷரம்புநகு ஆதேசம்புனு, கொன்னிடிகி அந்தாகமம்புனு, கொன்னிடிகி பர்யாயம்புன ரெண்டுனு ப்ராயிகம்புகானகு  (பாலவியாகரணம்-ஆச்சிக பரிச்சேதம் – 31)

ஆதெசம்-ஏறு-ஏடினி

ஆகமம்-எநிமிதி-எநிமிதிடிநி

இரண்டும்-ரெண்டு-ரெண்டிநி,ரெண்டி3டிநி

விபக்தி பரம்பகுநபுடு கோயி ப்ரப்ருதுலு துதி  யக்ஷரம்பு தி வர்ணகம்பகு  (பால- ஆச்சிக-35)

(எ-டு) : கோயி – கோதுலு -கோதிநி, கோதுலநு

சேயி  –  சேதுலு   –  சேதிநி,  சேதுலநு

கால்டுவெல் குறிப்பிட்டுள்ள சாரியைகளை ஆராய்ந்து பார்க்கும்போது அவர் தெலுங்கு இலக்கண நூல்களைப் படித்ததாக எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. ஆகையால் அவர் வழக்கில் உள்ள மொழிகளை மட்டுமே நன்கு ஆராய்ந்து அதில் கிடைக்கப்பெற்ற தரவுகளை ஆதாரமாக்கிக் கொண்டு சாரியைகளை விளக்கியுள்ளார் என்று கருதலாம்.

துணைநின்றவை

Brown C.P. (1985). A Grammar of the Telugu Language. New Delhi: Asian Educational services.

Caldwell, R. (1856). A comparative grammar of Dravidian on South – Indian Family of Languages. Landon: Paa Mall.

Caldwell, R. (n.d.). Wikipedia. Retrieved from Wikipedia: //en.wikipedia.org/wiki/Robert_Caldwell

அப்பாதுரை, ச. க. (2011). கால்டுவெல் ஒப்பிலக்கணம், க்ரியர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புகள். சென்னை: சாரதா பதிப்பகம்.

சேதுப்பிள்ளை, ர. (தே.இ). கிருஸ்துவத் தமிழ்த் தொண்டர். திருநெல்வேலி: எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பப்ளிஷர்ஸ் .

பி.எஸ்.சுப்பிரமணியம். (2006). திராவிட பாஷலு. ஹைதராபாத்: பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்குப் பல்கலைக் கழகம்.

புலவை கோவிந்தன், (2011). டாக்டர் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், நான்கு பாகங்கள். சென்னை: சாரதா பதிப்பகம்.

ஜி.லலித. (1996). தெலுகு வ்யாகரணமுல சரித்ர. சென்னை: தி வெலகபூடி ஃபௌடேஷன்.

………………….

[1] இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். [email protected]

[2] “The languages of India are principally from the Sanskrit.  The structure of most of the   languages in the middle and north of India, is generally in the same, the chief difference in them lies in the termination of the nouns and verbs : and in those deviations form Sanskrit orthography which custom has gradually established in the countries where they are spoken …” என வில்லியம் கேரியின் தெலுங்கு இலக்கண   முன்னுரையில் உள்ளதாக டா.சல்லா ராதாகிருஷ்ண அவர்கள் ‘தெலுகு விந்து’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் (ஜி.லலித, 1996, ப. 244).

[3] According to Bishop caldwell (a. note furnished by C.P.Brown) Gentoo   as a name of the  Telugu people was first used in A.D.1648 in Jehan Van Twist’s General Besclririj of vinge van Indian.  Printed in Amsterdam- Linguistic Survey of India. Vol.IV, 1967.

[4] It is high time to abolish the absurd name Gentoo which was introduced in the Portuguese” (C.P.Brown, A Grammar of telugu Language, Book First, Page.13)

……………….

 

Date of submission: 2019-03-20

Date of acceptance: 2019-03-30

Date of Publication: 2019-05-02

Corresponding author’s

Name: முனைவர் சி.சாவித்ரி

Email: [email protected]