ஆய்வு அறிமுகம்

மெய்யியலில் முக்கிய எண்ணக்கருவாக ஆராயப்படுவது அமைப்பியல்வாதம். இது சமூகத்தில் காணப்படக்கூடிய பல விடயங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிக்கலான அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு முயலும் ஒரு அறிவியல் சார்ந்த அணுகுமுறையாகும். இவ் அணுகுமுறையின் முன்னோடியாக சுவிட்ஸ்சர்லாந்து மொழியியலாளர் சசூர் (Ferdinand.De.Saussure) விளங்குகின்றார். இவரே மொழிக் கட்டமைப்பு ரீதியான ஆய்வினை முதன்முதலில் நிகழ்த்தியவராவார்.

அமைப்பியல்வாத சிந்தனையாளர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ரோலன் பாத் (Roland Barthes), லூயிஸ் அல்தூசர் (Louis Althusser), பூக்கோ (Faucault), லகான் (Lacan), லெவிஸ்ட்ராஸ் Levi strauss போன்றோர் சசூரின் மொழிக் கட்டமைப்புக்கள் கருத்துருவ மாதிரிகளைக் கொண்டு மொழியின் மேலோட்டமான நிகழ்வுகளை (Parole), அதற்கு அடிப்படையாகவுள்ள முறைமையினை(Langue) குறியீடுகளைக் கொண்டு ஆராய்கின்ற விஞ்ஞானத்தை (Semiology) முழு வளர்ச்சியடையச் செய்தனர்.

அமைப்பியல்வாதமும் சசூரும்

சசூர் மொழி பற்றிய அமைப்பியத்தை இனங்கண்டு விரிவுபடுத்தி, தம் அமைப்பியத்தில் மொழிக்கும், பேச்சுக்கும் (Language and Speech) உள்ள வேறுபாட்டினை நுணுகி ஆராய்ந்தார். மொழியின் பன்முக வெளிப்பாடாகிய பேச்சானது மொழியின் உறுப்புக்களை (Constituents) அமைப்பியல் சிதைவின்றிப் பல்வேறு வகைகளில் இணைத்து எண்ணற்ற வாக்கியங்களை அமைக்கின்றது. ஒரு மொழிக் குறியானது (Linguistic Sign) தான் நிகழும் இடத்தையும் தான் உணர்த்தும் பொருளையும் கொண்டு இரண்டு நிலைகளில் உறவாடுகிறது என்பதைச் சசூர் ஆராய்ந்தார். இம்மொழிக் குறிகள் தொடரனில் (Syntax) எழுவாயாகவும், பிற வேற்றுமை உறுப்புகளாகவும் (case constituents) இவற்றை இணைக்கும் வினையாகவும், அடுத்தடுத்து ஒரு கிடைவரிசையில் தொடரனியற் சங்கிலியாக (syntagmatic chain) அமைந்து பொருண்மையையும் கொடுக்கின்றன என்பதையும் உணர்ந்தார்.

உதாரணம் The women Threw the ball மேற்கூறிய தொடரில் கிடை வரிசையில் அமைந்த இலக்கண உறவில் கட்டுண்ட சொற்களில் (மொழிக் குறிகள்) ஏதாவது ஒன்று நீக்கப்பட்டு வேறொரு சொல் அங்கு இணைக்கப்படும் போது அது ‘செங்குத்து உறவு (Paradigmatic Relation) ஏற்படும்.

உதாரணம்   Child threw the ball

Woman found the ball

இவ்வாறான முறையில் மொழியானது ‘கிடை உறவிலும்’ (syntagmatic)> ‘செங்குத்து உறவிலும்’ (paradigmatic) அமைப்பாக்கம் பெற்றுப் புதியபுதிய தொடர்களையும், புதிய புதிய அர்த்தங்களையும் உருவாக்குகின்றது. இவ்வாறான சிந்தனையைச் சசூர் உள்வாங்கி மொழியின் அமைப்பியலை விளக்கினார்.

முறைமை கட்டமைப்பு ஏற்கனவே உள்ளது என்றும் புதியதல்ல என்றும் உருவாக்கப்பட்டதல்ல என்றும் எல்லா மொழிகளுக்கும் பொதுமையானது என்றும் சசூர் கூறுகின்றார். நாங்கள் மொழியினைப் பேசுகின்றோம் என்பதனை விட நாங்கள் மொழியுடன் பேசுகின்றோம் என்பதுதான் உண்மை. இந்த மொழிக்கட்டமைப்பு நாம் எழுதுகின்ற வாக்கியம், வசனம் போன்றவற்றை அர்த்தமுடையதாக மாற்றுகின்றது. மேலும் மொழிக்கட்டமைப்பு வார்த்தைகளை (Units) இலக்கண விதிகளுக்கு (Role) ஏற்ப ஒழுங்கமைக்கின்றது. இந்த முறைமை எமது மனதிலுள்ளது என்றும், இந்தக் கட்டமைப்பு முறைமை வார்த்தைகளைச் சரியான ஒழுங்கில் இட்டு உச்சரித்து இலக்கண விதிகளுக்கு ஏற்ப அர்த்தமுள்ள வசனமாக மாற்றுகின்றது. சசூரின் கருத்துப்படி மொழி இரு கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றார். அவையாவன:

1.மொழியின் மொத்தக் கட்டமைப்பு அல்லது முறைமை அல்லது அகமொழி (Langue)

2.நாம் பேசும் வார்த்தை அல்லது எழுத்து அல்லது புறமொழி (Parole) என வகைப்படுத்துகின்றார்.

அகமொழியானது பல்வேறு நிலைகளில் புறமொழியாக அதாவது பேச்சு மொழியாக மாற்றம் பெறுகின்றது. ஒரு மொழிச் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் அம்மொழியின் இலக்கணத்தை நன்கறிந்தவர்களாவும், குழந்தைப் பருவத்திலேயே மொழியின் இலக்கணத்தை தன்வயப்படுத்தி விடுகின்றனர். இந்த இலக்கணத்தைக் (அகமொழி) கொண்டு ஒவ்வொருவரும் அவர்கள் உருவாக்கிக் கொண்டுள்ள சொற்களஞ்சியத்தின் துணைகொண்டு Selectional restriction, strict sub- categorization ஆகிய உத்திகளின் துணைகொண்டும் தம் புறமொழியை (பேச்சு) உருவாக்கிக் கொள்கின்றனர்.

மொழியின் அமைப்பிலே புதை நிலை, புற நிலை உருவாக்கங்கள் அமைந்துள்ளன.

உதாரணம்

1.புலிகொல் யானை – புறநிலை

 

 

புலி கொன்ற யானை            – புதை நிலை

புலியைக் கொன்ற யானை

புதைநிலையின் மொழியமைப்பை அம்மொழி பேசுநர் தன் சொல் தேர்வின் மூலம் தொடரியல் விதிகளை (Phrase structure rules) அமைத்துக் கொள்வதன் மூலமும் அவற்றைப் பல்வேறு விகாரங்களுக்கு (Transformation) உட்படுத்துவதன் மூலமும் புறநிலையை (பேச்சு) உருவாக்கிக் கொள்கின்றார்.

உரு 1.1   அகமொழி (இலக்கணம்) – LANGUAGE (Deep Language)

–          Phrase structure component

–          Selectional rules

 

–          Transformational Component

–          Phonological Component

 

1.         தொடரியல் பகுதி

2.        தேர்வு விதிகள்

 

 

விகாரப் பகுதி

 

  புணர்ச்சியியல் பகுதி

 

 

 

 

 

 

 

 

 

 

புறமொழி (பேச்சு)          PAROLE (Surface language)   (பக்தவத்சலபாரதி, 2005:203)

 

ஒரு மொழிச் சமூகத்தார் அனைவரும் ஒரே மொழியைப் பேசுவதால் அவர்கள் அனைவரும் அம்மொழியின் இலக்கணத்தை உள்வாங்கிக் கொண்டவர்களாக உள்ளனர். அகமொழியை அனைவரும் சமமாகக் கொண்டிருப்பவர்களாக உள்ளனர். பேச்சு எனும் செயற்பாட்டின் வழியே ஒவ்வொரு நபரும் வேறுபட்டவர்களாக உள்ளனர். உதாரணமாக-மின்னணுவியல் அடிப்படையில் இயங்கும் கடிகாரத்தினை கொண்டு நோக்குகையில் பூச்சியத்தின் வடிவத்தினை அடிப்படையாகக் கொண்டே ஏனைய 1-9 வரையுள்ள எண்கள் அமையும். இங்கு பூச்சியம் புதை நிலையாகவும் 1-9 வரையான எண்கள் புறநிலையாகவும் நோக்கப்படுகின்றது.

உரு 1.2 

 

 

 

 

 

 

 

 

(பக்தவத்சல பாரதி, 2005:205).

  1. ir- irregular

un – unnecessary

non – available

இவற்றில் வருகின்ற ir, un, non என்பவை வடிவத்தில் வேறுபட்டாலும் அடிப்படையில் எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றது.

சசூரின் கருத்துப்படி ஒருமொழியில் அடிப்படையான சிறிய பகுதியாக இருப்பது குறியீடாகும். இக்குறியீடு (sign) இரு பகுதிகளிலானது.

1.குறிப்பான் (Signifier) – ஒரு வார்த்தையின்ஃ ஒரு எழுத்தின் ஒலி வடிவமும், வரி வடிவமும் ஆகும். தன்னைக் குறிப்பதைக் ‘குறிப்பான்’ (Signifier) என்று கூறுகின்றார்.

  1. குறிப்பீடு ((signified) – குறிக்கப்படும் பொருளின் அர்த்தம். குறிக்கப்பட்ட ஒரு வார்த்தையின் அர்த்தம் எண்ணக்கருவினைக் குறிக்கின்றது. பிறிதொன்றைச் சுட்டுவதைக் ‘குறிப்பீடு’ (Signified) என்றும் பெயரிட்டழைக்கிறார். (கிருஷ்ணராஜா, 2006:40)

இவை இரண்டும் பிரிக்க முடியாதபடி ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இணைந்துள்ளன என்கின்றார். குறிப்பான் – குறியீடு என்ற வகைப்பாட்டில் இவர் குறிப்பானுக்கு முதன்மை இடம் கொடுத்து குறியீடு அதனைத் தொடர்வதாக எடுத்துக் காட்டினார். சொல்லும் அதற்கான அர்த்தமும் நகமும் சதையும் போன்று ஒன்றொடொன்று இணைந்திருப்பது அல்ல. மாறாக அது நகக்கண்ணையும் வளரும் நகத்தையும் போன்றது. வெட்டிப் பிரிக்க முடியும். வெட்ட வெட்டத் துளிர்க்கவும் செய்யும். அர்த்தம் நிலையற்றது. ஒவ்வொரு சொல்லும் தனது அர்த்தத்துக்காக இன்னும் பல சொற்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. வந்து சேரும் புதிய சொற்களும் இன்னும் பல புதிய சொற்களைக் கோரி நிற்கின்றன. அகராதியைத் திறந்து பார்த்தால்,‘படி’ என்ற ஒற்றைச் சொல்லுக்கு ‘படித்தல்’,‘படிக்கட்டு’,‘படிப்படியாக’,‘படியச்செய்தல்’ போன்ற பல அர்த்தங்கள் கிடைக்கின்றன. இந்தச் சொற்களைத் தனித்தனியே பார்க்கும் போது இவையும் இன்னும் பல புதிய சொற்களை அர்த்தங்களாக முன்வைக்கின்றன.

உதாரணம் பனை என்ற ஒலியமைப்பு ‘குறிப்பான்’; பனை என்ற அந்தப் பொருள் ‘குறிப்பீடு’.

இங்கே குறிப்பானுக்கும் அது குறிக்கின்ற பனை என்ற பொருளுக்கும் எந்தவிதமான காரண காரிய உறவுமில்லை என்பதுதான் சசூரின் விளக்கமாகும்.  அதாவது, குறிப்பானுக்கும் குறிப்பீட்டிற்கும் நேரடித் தொடர்பு இல்லை. அவ்விரண்டும் நம்முடைய மூளையின் செயல்பாட்டால்தான் இணைக்கப்படுகின்றன.  தொடர்ந்து சசூர் மொழி எவ்வாறு அர்த்தம் தருகிறது என்று மற்றொரு முறையில் விளக்குகிறார். மொழி பல அலகுகளால் ஆனது.  இந்த அலகுகள் ஒன்றுடன் மற்றொன்று கொள்கிற உறவின் மூலமாகத்தான் மொழிக்கு அர்த்தம் கிடைக்கிறது. இந்த உறவு பெரும்பாலும் ‘வேறுபடுத்துதல்’ என்கிற செயல்பாட்டின் மூலம் அமைகிறது. கண் என்ற ஒலி வடிவம், மண் என்ற ஒலி வடிவத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் காணும்போதுதான் இரண்டுமே அர்த்தம் பெறுகின்றன. ஒரு ஒலி அது அமைந்திருக்கும் சூழல் அமைப்பை வைத்து அது அர்த்தம் பெறுகிறது.

அமைப்பியல் சிந்தனையின் குறிப்பிடத்தக்க இயல்பாகக் கருதப்படுவது ‘இணைமுரண்கள்’ (Binary oppositions) குறித்த கருத்தாக்கம் ஆகும். இருநிலை எதிர்வு என்றும், துருவ முரண்பாடுகள் என்றும் பலவாறு தமிழில் மொழிபெயர்க்கப்படும் இந்தக் கருத்தாக்கம் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். பகல் – இரவு, வெப்பம் -குளிர், மழைக்காலம் – கோடைக்காலம், நன்மை – தீமை, தோற்றம் – முடிவு, உண்மை – பொய்மை, தலைவன் – கொடியவன், இயற்கை – செயற்கை, கறுப்பு – வெள்ளை முதலிய இணைமுரண்கள் எல்லா மொழிகளிலும் அமைந்து இருக்கின்றன. இந்த உலகளாவிய பண்பு, மனித மூளைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகவே அமைந்து இருக்கிறது.  இணைமுரண்கள் மூலமாக வேறுபாட்டை நிலைநாட்டி மொழி இயங்குகிறது.  இதுதான் குழந்தை மூளையில் நிகழும் முதன்முதல் உத்திபூர்வமான செயல்பாடாகும். இத்தகைய இணைமுரண் மூலம் வேறுபாட்டை நிறுவி, புறப்பொருளைப் புரிந்துகொள்ள முயல்கிறது மூளை.  ‘தீமை’ என்பதைப் புரிந்துகொள்ளாமல் நன்மை என்பதைப் புரிந்துகொள்ள முடியாது’ என உதாரணம் கூறினார் சசூர். எனவே அமைப்பியலின் மிக அடிப்படையான கருத்தாக்கம் இந்த ‘இணைமுரண்’ என்பதைப் புரிந்துகொள்ளலாம். (கிருஷ்ணராஜா, 2006:42)

இவரது மொழி ஆய்வில் எழுத்துக்குப் பதிலாகப் பேச்சிற்கு முதன்மை கொடுக்கின்றார். சப்தம் உண்மையின் உருவமாக, நம்பத்தக்கதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது உயிர்ப்பற்றதும், வழிநிலையானதுமான எழுத்திற்கு மாறாக, சுய பிரசன்னமும், உயிர்ப்புமுடையது. எழுத்து பேச்சின் தரத்தை தாழ்த்துவதாகவும், சுயம் பிரகாசமாகிய உண்மைக்கு எழுத்து பெரும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றதென்கின்றார் சசூர்.  மரம் என்ற சொல்லில் இரண்டு தளங்கள் உள்ளன. ஒன்று ‘ம-ர-ம்’ என்ற ஒலித்தளம். ஒருவன் அதை உச்சரிக்க அது ஒலி அலைகளாக மாறி  செவிப்பறையை வந்து சேர்கின்றது. இது குறிப்பான் (signifier) அல்லது ஒலித்தளம். மற்றொன்று பொருண்மைத்தளம். ‘ம-ர-ம்’ என்ற ஒலியை உச்சரித்த மனிதன் அதன் மூலம் குறிக்க விரும்பிய பொருள் அல்லது விடயம் மனப்படிமம். இதனைச் சசூர் குறி-படு-பொருள் (signified) என்பார். முதலில் குறிப்பிட்ட ‘ம-ர-ம்’ என்ற ஒலிக்கும் மரம் என்ற மனப்படிமத்திற்கும் எந்த ஒரு நேரடித் தொடர்பும் கிடையாது.  அவை வேறு வேறான, தொடர்பற்ற இரண்டு தளங்கள் குறிப்பான் தளத்திற்கும், குறி-படு-பொருண்மைத் தளத்திற்கும் உள்ள உறவு இடுகுறித்தன்மை கொண்டது என்கின்றார் சசூர். (கிருஷ்ணராஜா, 2006:47)

சசூரின் பேச்சுமொழி என்ற கருத்தாக்கம் அமைப்பியலின் அடிப்படைக் கோட்பாடாகும். பேச்சுமொழி என்பது மனிதர்கள் தமக்கிடையில் பேசிக் கொள்ளும் மொழியாகவும், பேசிக் கொள்ளும் மனிதர்களின் அகவயச் சார்பு கொண்டதாகவும், உணர்ச்சிப் பாங்கு கொண்டதாகவும், அவரவர் அனுபவம் சார்ந்ததாகவும், நிலையற்றதாகவும் உள்ளது. மொழியியலில் பேச்சு மொழியைத் தனது பயில் பொருளாகக் கொள்ள முடியாது. மொழியமைப்பு என்பது மொழியின் உட்கட்டமைப்பாகும். ஒப்பீட்டு ரீதியாக நிரந்தரமானதாகவும், சமூகத் தன்மை கொண்டதாகவும், வரலாறற்றதாகவும் அமைகின்றது. மொழி அமைப்பின் தனிமனித வெளிப்பாடே பேச்சுமொழி தனிமனித தற்சார்பு, அனுபவங்கள் ஆகியவற்றைக் கடந்த நிலையில் மொழியின் அமைப்பு கண்டறியப்படுகின்றது.

உதாரணம் போக்குவரத்து ‘சிக்னல்’ விளக்குகளில் சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற வர்ணங்களை நாம் எப்படிப் பயன் படுத்துகிறோமோ அதே போல்தான் நாம் மொழியைப் பயன் படுத்துகிறோம். தனிப்பட்ட முறையில் அந்த வர்ணங்களுக்கு அர்த்தம் ஏதும் இல்லை. சிவப்பு என்ற வர்ணத்துக்கு ‘நில்’ என்றோ, பச்சை வர்ணத்துக்குச் ‘செல்’ என்றோ அர்த்தம் இல்லை. ஆனால், இந்த மூன்று வண்ணங்களும் வரிசையாக வைக்கப்பட்டு ஒன்றை ஒன்று சார்ந்து நிற்கும் போதுதான் இந்த அர்த்தங்கள் பொருள்படுத்திக் கொள்ளப்படுகின்றன. இந்த வண்ணங்களுக்குப் பதிலாக ஆரஞ்ச், வெள்ளை, ஊதா போன்ற வண்ணங்களைப் பயன்படுத்தினால் கூட அவையும் இதே அர்த்தங்களைக் கொடுக்கும். எனவே, அர்த்தம் என்பது சார்புநிலை கொண்டது.

பின்அமைப்பியல்வாதமும் சசூரும்

கட்டமைப்பு வாதத்தின் தோல்வி பின்கட்டமைப்பு வாதத்தின் ஆரம்பமாக உள்ளது. 1960 களின் பின் பிரான்சில் தோன்றிய ஒரு அணுகுமுறையாகவும், கட்டமைப்பு வாதத்தின் அடுத்த வளர்ச்சியாக இது பார்க்கப்படுகின்றது. டெறிடாவின் கட்டவிழ்ப்பு வாதம், வார்த்தை மைய வாதமும், லக்கானின் உளப்பகுப்புக் கொள்கையும், பூக்கோவின் கலாசாரக் கோட்பாடு போன்றவை பின் கட்டமைப்பு வாத சிந்தனையில் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் காணப்படுகின்றது.

எந்தவோர் இலக்கியம் சம்பந்தமாகவோ அல்லது ஒரு முறைமை சம்பந்தமாகவோ ஒரு முழுமையான அல்லது ஒரு ஒழுங்கிசைவான விவரிப்பினை வழங்க முடியாது என்பதைப் பின் கட்டமைப்புவாதிகள் ஏற்றுக் கொள்கின்றனர். புறவயமான அறிவினை ஒருவர் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் ஒருவர் தன்னைப் பற்றி அறிந்து கொள்ளுதல் ஆகிய விடயங்கள் பற்றிய நீண்ட கோட்பாட்டு ரீதியான விடயங்கள் சம்பந்தமான விமர்சனமாகப் பின்கட்டமைப்புவாதம் காணப்படுகின்றது. மேலும் எல்லா அர்த்தங்களும் புரிந்து கொள்ளல்களும் தற்காலிகமானதாகவும் சார்புநிலைப்பட்டதாகவும் உள்ளன என்பதே பின்கட்டமைப்புவாதத்தின் அடிப்படையாக உள்ளது.

பின்கட்டமைப்புவாத சிந்தனையில் “தற்காலிகத் தன்மை” என்பது முக்கியத்துவமுடையதாக மாறிவிடுகின்றது. கட்டமைப்புவாதம் அர்த்தத்திற்கு அடிப்படையாக உள்ள கட்டமைப்புக்கள் மாறாததாகவும் அடிப்படையாகவும் கருதப்படுவது. பின்கட்டமைப்புவாதத்தின்படி அர்த்தம் என்பது தற்காலிகமானதாகவும் மாறக் கூடியதாகவும் உள்ளது.

டெறிடாவின் வேறுபாடு என்ற எண்ணக்கரு மாறுகின்ற தற்காலிக அர்த்தத்தினைக் குறிப்பதாக உள்ளது. இதேபோல் பாத்தின் படைப்பாளரின் இறப்பு இதனையே குறிக்கிறது. ஒரு படைப்பின் அர்த்தம் ஒரு குறிப்பிட்ட படைப்பினால் மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக அதனை ரசிக்கும் ரசிகர்களினாலும் உருவாக்கப்படுகின்றது. இவர் சசூரின் எண்ணக்கருக்களை விருத்தி செய்ததோடு, அவரிலிருந்து வேறுபட்டு குறியீடுகள் பற்றிய இவரது தனிப்பட்ட கருத்தினைத் தற்காலச் சமூகங்களினதும், அவற்றின் செயற்பாடுகளிலும் நோக்கி விளக்கினார். மொழி என்பது எந்தவொரு குறியீட்டு முறைக்கும் அடிப்படையாகக் காணப்படுகின்றது என்றும், மொழி முறைமை சிறந்த கூறுகளை ஒன்றிணைத்து வெளிப்படுத்திக் கொள்கின்றது என்றும் கூறுகின்றார். (கிருஷ்ணராஜா, 2006:84) சசூர் ஒரு வார்த்தைக்கு (குறிப்பான்) ஒரு அர்த்தம் (குறிக்கப்படும் பொருள்) இருப்பதாகவும், மொழி முறைமை என்பது அதிகம் வரையறுக்கப்பட்ட, மூடப்பட்ட பொதுவான தத்துவங்களைக் கொண்டு செயற்படுவதாகவும் கருதியமையை ரோலன்ட்பாத் தறானவை என எடுத்துக்காட்டினார்.

உதாரணம் ஓர் இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் இலக்கியத்தை வாசிக்கும் வாசகர்கள் எல்லோரும் அதனை எழுதிய எழுத்தாளர்கள் கொண்ட அர்த்தத்தினைத்தான் புரிந்து கொள்வார்கள் என்பதல்ல. பல வாசகர்களுக்கிடையிலே அவை ஒன்றிற்கு மேற்பட்ட, அர்த்தங்களைக் கொடுத்து விடுகின்றன.

வரையறுக்கப்பட்ட குறிப்பானையும், குறிக்கப்படும் பொருளையுமே சசூர் எடுகோள்களாகக் கொண்டிருந்தார். ஆனால் குறிப்பான் வரையறை அற்ற வகையில் ஒன்றிற்கும் மேற்பட்ட குறிக்கப்படும் பொருளைக் கொண்டிருக்க வேண்டும் என ரோலன்ட்பாத் வாதிட்டார். இதனால் சசூரின் குறிப்பான்- குறிக்கப்படும் பொருள் பற்றிய தெளிவான வரையறைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இத்தகைய கருத்துக்கள் பின்கட்டமைப்பு வாதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

அமைப்பு வாதம் மனிதனின் அனைத்து தொடர்புகளையும் மொழியியல் சார் குறியீடுகளாக ஏற்றுக் கொண்டதனடிப்படையில் செயற்படுகிறது. இச்செயற்பாடு மிகக் குறுகியதொரு நிலைப்பாடென மிகவிரைவிலேயே உணரப்பட்டதால் பிறிதொரு கருத்தாக்கத்தை பயன்படுத்த வேண்டிய தேவை உணரப்பட்டது. 1960களில் பூக்கோ தனது ஆய்வுகளை மொழியினை முதன்மைப்படுத்திய சொல்லாடல்களாக அணுகினார். இவ்வணுகு முறையில் விடயம் வெற்றுப் பொருளாக விடப்பட்டமை உணரப்பட்டதால், மொழிநிலைப்பட்ட நோக்கு நிலையைத் தவிர்த்து “மேலாதிக்கம்” என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் தன்னாய்வுகளை மேற்கொண்டார். மேலாதிக்கத் தொடர்புகளால் தனிநபர்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்றும், சமூக யதார்த்தத்தின் அடிப்படைத் தத்துவம் மேலாதிக்கமே என்றும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

சொல்லாடலுடன் கூடிய நிபந்தனைகளும், நிலைமைகளும் காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் என்றும் பூக்கோ குறிப்பிடுகின்றார். மனிதன் மட்டுமே மிக அண்மைக் காலத்தை உட்கொண்டு மாற்றங்களைக் கிரகிக்கத்தக்க ஒரு படைப்பு என்றும், மனிதனது முடிவு என்பது மனிதனாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது என்றும் விளக்கமளிக்கின்றார். இதனை அவருடைய “The Archaeology of Knowledge” எனும் நூலில் காணலாம்.

பூக்கோவினுடைய பால்நிலை மற்றும் மொழியின் அர்த்தம் பற்றிய படைப்புக்கள், அதிகாரம் பற்றிய உரையாடல்களில் காணப்படும் வரலாற்று ரீதியான பகுப்பாய்வு போன்றவை பின்அமைப்பியல் சிந்தனையில் நோக்கப்பட வேண்டியவையாகும். இவை சசூரினுடைய மொழிக் கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டு விளங்கிக் கொள்ளப்படக் கூடியவை. சசூரின் கருத்தான வாழும் சமூகம்ஃ இந்த உலகு ஒழுங்குபடுத்திய ஒன்றாக இருப்பதில்லை என்றும், மாறாக எமது மனம் இந்த உலகினை சமூகத்தை ஒழுங்குபடுத்தித் தருகின்றது என்று குறிப்பிடும் கருத்தினை பூக்கோவின் படைப்புக்களில் ஆய்வு செய்துள்ளமையினைக் காணலாம். அமைப்பியல் என்பது மொழியைப் பற்றிய ஒரு விசாரணை மட்டுமே. ’மொழி தன்னைத் தானே சுட்டிக் கொள்வது’ என்கிறார். (கிருஷ்ணராஜா, 2006:89)

‘மொழி என்பது சுயபிரதிபலிப்பு’ என்றனர் பின்அமைப்பியல் வாதிகள். மொழி என்பது குறிகளால் தொகுக்கப்பட்ட தனிக் குறிப்பீடுகளின் உற்பத்தி என்கிறது அமைப்பியம். மொழியைப் பயன்படுத்த மனிதன் தேவை அல்லவா? அந்த மனிதன் ‘நான்’ என்னும் தனிமனித சிந்தனை கொண்டவன். குறிப்பானையும், குறிப்பீட்டையும் தனிக்குறிப்பீடுகளாக உருவாக்கி வாக்கியங்களை எழுதுபவனும் அவனே. அவனைப் பற்றி அமைப்பியல் ஒன்றும் கூறவில்லை.

‘புலி’ என்ற சிந்தனை குறிப்பான் ஆகும். அந்தச் சிந்தனையைச் சொல்லாக மொழிபெயர்க்கும் போது கிடைக்கும் சொல்லான ‘புலி’ என்பது குறிப்பீடு ஆகும். புலி என்ற குறிப்பானுக்கு ஒவ்வொரு மொழியிலும் வேறு வேறான குறிப்பீடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, புலி என்ற குறிப்பானுக்கு இந்தியில் ‘டேர்’ என்றும் ஆங்கிலத்தில் Tiger என்றும் குறிப்பீடுகள் உள்ளன. இந்தக் குறிப்பீடுகளின் தொகுதியே மொழி என்று அழைக்கப்படுகிறது. அமைப்பியம் சொல்லையும் அதற்கான பொருளையும் சேர்த்து வைத்தே பார்த்தது. அந்த நிலவரத்தை வைத்தே மொழியின் மீதான விசாரணையை மேற்கொண்டது. பின்அமைப்பியம் சொல்லையும், அதன் பொருளையும் ஒன்று சேர்த்துக் கட்டி வைத்த கயிற்றை அறுத்து எறிந்தது.

பின்கட்டமைப்பு வாத சிந்தனையில் பிரான்சிய சிந்தனையாளரான டெறிடா மிக முக்கியமானராகக் கருதப்படுகின்றார். மொழியின் இயல்பு பற்றி டெறிடாவின் கொள்கையில் ‘அழிதலின் அடியில்’ (Under erasure) என்ற கருத்தாக்கம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. டெறிடா வார்த்தை மைய வாதம்; ஒலி மையவாதம் போன்றவை சம்பந்தமாகக் கேள்வி எழுப்புகின்றார். சசூரின் குறிப்பான் குறிக்கப்படும் பொருள், குறியீடு போன்ற எண்ணக் கருக்களை அவர் கட்டவிழ்ப்பு செய்கின்றார். குறிப்பான் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்டிப்பதை டெறிடா சுட்டிக்காட்டுகின்றார். Chair எனும் ஆங்கிலப் பதமானது பல்வேறு அர்த்தங்களைக் கொண்டதாக எடுத்துக் காட்டப்படுகின்றது.

உதாரணம் (Chair) Signifier குறிப்பான்

(குறிக்கப்படும் பொருள்) Signified – II          Signified – II          Signified – III

நாற்காலி        பதவி        தலைமைத்துவம்

இங்கு chair என்ற வார்த்தைக்கு வரையறுக்கப்பட்ட அர்த்தம் இல்லாமை சுட்டிக்காட்டப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட குறிக்கப்படும் பொருள் (chair) கருதப்படும் பல குறிக்கப்படும் பொருள்களைக் கொண்டு வரையறுக்கும் போக்கினைக் கொண்டு காணப்படும்.

சசூரின் கட்டமைப்பு வாதம் மொழியின் குறிப்பான், குறிக்கப்படும் பொருள் என்பவற்றிக்கு இடையிலான தொடர்பு பொதுமையானது என்றும் நிர்ணயிக்கப்பட்டது என்றும் கருதுகின்றது. ஆனால் இத்தகைய எடுகோள் பின் கட்டமைப்பு வாதத்தில் கேள்விக்குறியாக்கப்படுகின்றது. இதன்படி குறிப்பான்கள் நன்கு வரையறுக்கப்பட்ட குறிக்கப்படும் பொருட்களைக் கொண்டிருப்பதில்லை என வாதிடுகின்றது. அர்த்தம் கட்டமைப்பு வாதம் கருதுவது போல் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. ஒரு குறிப்பான் பல குறிக்கப்படும் பொருள்களையும் ஒரு குறிக்கப்படும் பொருள் குறிப்பான்களாக மாறுவதன் காரணமாக ஒரு வரையறுக்கப்பட்ட அர்த்தத்தினைப் பெறமுடியாத நிலை ஏற்படுகின்றது.

சசூர் பேச்சு மொழியினை எழுத்து மொழியினைக் காட்டிலும் முக்கியத்துவப்படுத்தியதன் மூலம் வார்த்தை மைய வாதசிந்தனையில் மூழ்கி இருப்பதாக டெறிடா குறிப்பிடுகின்றார். மேலும் குறிப்பானும் குறிக்கப்படும் பொருளும் பேச்சு செயன் முறையில் கலந்திட்டதாக சசூர் கருதுவதாக டெறிடா குறிப்பிடுகின்றார். (கிருஷ்ணராஜா, 2006:82)

பேச்சு மைய வாதத்தினைத் தாக்கி எவ்வாறு மொழி செயற்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்கு பேச்சு மைய வாத முறை சிறப்பானது என டெறிடா கூறுகின்றார். அதாவது குறிப்பான்களுக்கிடையேயான தெளிவான தன்மையினை பேச்சு வழக்குடன் ஒப்பிடும் போது எழுத்து வடிவம் கொண்டிருப்பதாக டெறிடா கூறுகின்றார். இதிலிருந்து எழுத்து மொழியில் இருக்கும் தெளிவுத் தன்மை பேச்சு மொழியில் இல்லை என்பதனை டெறிடா எடுத்துக்காட்டுகின்றார்.

உதாரணம்

1.Hang not leave him – தூக்கில் போடு அவனை விடு

Hang not leave him – தூக்கில் போடாதே அவனை விடு

2.அவனைக் கொன்று வா

அவனைக் கொண்டு வா

இவ்வாறு இரண்டிற்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்ட, ஒரே மாதிரியான ஒலி வடிவத்தைக் கொண்ட சொற்களைப் பயன்படுத்தும்போது அதன் அர்த்தம் குழப்பமானதாகவும் மாறி விடுகின்றது.

டெறிடாவின் கருத்துப்படி இரண்டும் வேறுபட்ட வெளிப்பாட்டு முறைகளைக் கொண்டிருந்தாலும் பேச்சுமொழியினை விட, எழுத்துவடிவ மொழி மொழியியல் ரீதியான தோற்றப்பாட்டைச் சிறப்பாக விளக்கும் ஆற்றல் வாய்ந்தது. எழுத்து வடிவம் என்பது பேச்சினை முழுமைப்படுத்தும் விடயமல்ல. பேச்சு என்பது ஒரு வகை எழுத்து வடிவமாகும். எவ்வாறாயினும் இவற்றிற்கிடையே வேறுபாடு உண்டு என்பதை டெறிடா மறுக்கவில்லை. பொதுவாக ஒரு சொல்லானது இன்னொரு சொல்லின் மூலம் வேறுபடுத்தப்படுகிறது அல்லது புரிந்து கொள்ளப்படுகின்றது.

உதாரணம்: இன்பம் என்ற சொல்லை விளக்க துன்பம் என்ற சொல் அவசியம். அதாவது இன்பம் என்ற சொல்லின் அர்த்தம் துன்பம் என்ற சொல்லினால் முழுமையாக விளக்கப்படுகின்றது.

எல்லா விதமான இருமைகளிலும் காணப்படுகின்ற ஆழமான கட்டமைப்பு முரண்பாடுகளை டெறிடா வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றார். ஒவ்வொரு எண்ணக்கருவும் அதன் எதிர்மறையான எண்ணக்கருவினால் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதுடன் குறிப்பிட்ட எண்ணக்கரு இல்லாமல் அர்த்தம் பெறாமல் விளங்கிக் கொள்ள முடியாது என்றும் கூறுகின்றார்.

அமைப்பியல் வாதம் ஒரு விமர்சனமாக ஒரு இலக்கியத்தின் அர்த்தம் என்பது அது இடம் பெறும் வாக்கியத்தின் அர்த்தம் உடன்பாடு மற்றும் எதிர்மறை என்ற இரண்டினைக் கொண்டதாகவும் அதன் அர்த்தம் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருப்பதாகவும், சார்புடையதாகவும், தற்காலிகமாகவும் காணப்படுகின்றது. அதன் அர்த்தம் முழுவினை இலக்கியங்கள் உறுதியற்ற தன்மையினைக் கொண்டதாகவும் கேள்விக்கு உட்படுத்தும் தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது. இலக்கியம் ஒரு வெங்காயம் போன்றது ஏனெனில் வெங்காயம் உரிக்க உரிக்க தோல் வருவது போல் இலக்கியமும் படிக்க படிக்க புதிய புதிய அர்த்தங்களைத் தருகின்றன.

டெறிடாவினுடைய பின்அமைப்பியல் கருத்துக்களைச் சசூரினுடைய மொழிக்கட்டமைப்பினைக் (இணை முரண்கள், பேச்சுமொழி – எழுத்து மொழி, குறிப்பான் – குறிப்பீடு என்பதனை) கொண்டு விளங்கிக்கொள்ள முடிகின்றது.

குறிப்பானுக்கும், குறியீட்டிற்கும் இடையிலான தொடர்பு நிலையானதெனச் சசூர் நம்பினார். இதனால் குறிப்பானுக்கும், குறிப்பீட்டிற்கும் இடையிலான தொடர்பை மாறாவண்ணம் நிலை நிறுத்தி மொழிக் குறியீட்டமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாமென வாதிடுகின்றார். ஆனால் லகானோ சொல்லாடலிலிருந்தே அர்த்தம் பிறக்கின்றதென்றும், இது குறிப்பானின் இடப்பெயர்ச்சியினால் ஏற்பட்ட விளைவாகும் எனவும் கருதினார். டெறிடாவைப் போல லக்கானும் குறிப்பான்களும், குறிப்பீடாகப் பயன்பட வல்லவை எனக்கருதினார். அது போலவே குறிப்பீடுகள் ஒவ்வொன்றும் தத்தம் இயல்பிற்கேற்ப குறிப்பான்களாகத் தொழிற்படும் சுபாவமடையவை. இதன்படி குறிப்பான்கள் குறிப்பீடுகளாகவும், குறிப்பீடுகள் குறிப்பான்களாகவும் மாறிமாறி இயங்கவல்லவை என்பதால் மொழியினர் எதனையும் நிரந்தரமாகச் சுட்ட முடியாத நிலை ஏற்படுகின்றது.

லக்கானின் மொழிக் கொள்கைப்படி ஒரு குறிப்பான் எப்பொழுதும் பிறிதொரு குறிப்பானையே சுட்டும். சொற்களின் உருவக இயல்பே இதற்குக் காரணமாகின்றது. ஒரு குறிப்பானால் பிறிதொரு குறிப்பானைச் சுட்டுவது உருவகம் எனப்படும். சொற்களில் உருவக இயல்புடையவை, உருவக இயல்பற்றவை என எதுவுமில்லை. இதனால் அர்த்தம் ஒரு குறிப்பானிலிருந்து பிறிதொரு குறிப்பானுக்கு நழுவிச் செல்லும் நிலை ஏற்படுகின்றது.

முடிவுரை

சசூரினுடைய மொழியியல் கட்டமைப்பானது மொழியானது எந்தவொரு சைகைக்கும் ஒரு நேரான சுயமான அர்த்தம் என்பது கிடையாது என்கிறது. உண்மையில் மொழிக்கூறுகளின் ஊடாகச் சுட்டி உணர்த்தப்படும் சைகைகளுக்கு இடையிலான வித்தியாசங்களின் விளைவாகவே பொருள் கொள்ளமுடியும் என்றும் வாதிடுகின்றது. பின்கட்டமைப்புவாதிகளோ “வித்தியாசம்” என்கின்ற விடயத்தையே அழுத்திக் காட்டுகின்றனர். அர்த்தம் தொடர்பான ஒன்றிப்பில் ஸ்திர தன்மையும் காணப்படும் என்கின்ற கட்டமைப்பு வாதிகளின் அபிப்பிராயத்தை நிராகரிக்கின்றனர். சசூரின் பார்வையிலே ஒரு பிரதி (Text)) என்பது முழுமையானதாகவே நோக்கப்படும். சொல்லிற்கும், அதனது குறியீட்டுக்கும் இடையிலான உறவானது குறியீட்டுத்தன்மை கொண்டது என்றும், நிலையான ஒன்று என்றும், குறிப்பான், குறியீட்டுக்கு இடையிலான உறவினை மாறாத வண்ணம் நிலை நிறுத்தி ஒரு மொழிக் குறியீட்டு அமைப்பொன்றினை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் சசூர் தனது மொழிக் கோட்பாட்டில் வாதிட்டார். பின்அமைப்பியலில் பிரதி என்பது குறைபாடானது, பூரணமற்றது, மூலமற்றது, மாறிச் செல்வது, கட்டவிழ்ப்புக்கு இடம் வழங்குவது என்றவாறாக நோக்கப்படும்.

சசூரினுடைய மொழியமைப்புக் கட்டமைப்பினுடைய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பின்அமைப்பியம் வளர்ச்சியடைந்தது. குறிப்பான்- குறிப்பீடுகள், அகமொழி- புறமொழி, குறுகிய கால மொழியாய்வு- வரலாற்றுச் சார்பற்ற மொழியாய்வு ஆகியவற்றினை மேலும் விரிபுபடுத்துவதாகவும், கலந்துரையாடுவதாகவும், விளக்குவதாகவும் பூக்கோ, டெறிடா, லக்கான், பார்த் போன்றோரின் பின்அமைப்பியல்சார் கருத்துக்கள் அமைகின்றன. பின்அமைப்பியத்தின் நீட்சியாக பின்நவீனத்துவம் வளர்த்தெடுக்கப்பட்டது. பின்அமைப்பியல்வாதிகள் பலர் பின்நவீனத்துவ வாதிகளாகவும் பரிணாமம் பெற்றுள்ளமையினையும் சமூகவியல் வரலாறு புலப்படுத்துகின்றது. எனினும், பின் அமைப்பியல் வாதமானது, பின்நவீனத்துவத்தைவிட அதிகளவில் கோட்பாட்டியல் சார்பும், தத்துவச் சார்பும் மிக்கதாக இருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

துணைநின்றவை