காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்ற காலங்களிலேயே ஐயா ச.வே.சு. அவர்களை நாங்கள் நன்கு அறிவோம். சில ஆய்வரங்குகளுக்கு வருகை தரும் ஐயா அவர்களின் சரளமான தமிழ் அனைவருக்கும் புரியும் வகையில் அமையும்.  நூறோடு ஒருவராக இருந்து அவரின் பேச்சைக் கேட்கும் அனுபவம்தான் காரைக்குடியில் இருந்த காலங்களில் எனக்குக் கிடைத்தது என்றாலும், முனைவர் பட்டம் செய்யும் போது எழுதப்பெற்ற நூலால் தான் அவரிடம் நெருங்கிப் பேசும் அனுபவமும் எனக்குக் கிடைத்தது.

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரிப் பணியில் இருந்தபோது 27.12.2012 முதல் 29.12.2012 வரையிலான மூன்று நாட்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து, ‘செவ்வியல் இலக்கியங்கள் காட்டும் மேலாண்மை நடைமுறைகள்’ எனும் பொருண்மையிலான மூன்று நாள் கருத்தரங்கை நிகழ்த்தினோம். அந்தக் கருத்தரங்கின் தொடக்க விழாவிற்கு ஐயா ச.வே.சு. அவர்கள் சிறப்புரையாளராக அழைக்கப்பெற்றிருந்தார்.

தொடக்க விழாவிற்கு வருகை தந்த ஐயா அவர்கள் விழா தொடங்கும் முன்பே வருகை புரிந்து துறையில் அமர்ந்திருந்தார். கருத்தரங்கப் பணி தொடர்பாகக் கல்லூரி அலுவலகத்திற்குச் சென்று வந்து துறைக்குள் நுழைந்தபோது ஐயா அவர்கள் என்னைப் பார்த்து,

“இங்கே வா. ‘அகநானூறு : பதிப்பு வரலாறு’ எழுதிய பரமசிவன் நீதானே. புத்தகத்துக்குப் பின்னால இருக்கும் உன் படத்தை வைச்சுத்தான் அடையாளம் கண்டுபிடிச்சேன்”

என்று கூறினார். தொடர்ந்து,

“அறவேந்தன் மாணவன் தானே நீ! கடுமையான உழைப்புடா. உன் புத்தகத்தைப் பார்க்கும்போதே எனக்குத் தெரியுது. தொடர்ந்து எழுதிக்கிட்டே இரு. உன்னைப் போல ஆய்வாளர்களை உருவாக்கியதற்கு உன் வாத்தியாருக்கும் என்னோட பாராட்டுக்கள்”

என்றும் குறிப்பிட்டார். அப்போது, முதல்வர், துறைத்தலைவர் உள்ளிட்ட அனைவரும் உடனிருந்தனர். மேலும், அன்றைய நிகழ்விற்கு மற்றொரு சிறப்புரையாளராக வந்திருந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அப்போதைய பொறுப்பு அலுவலர் பேரா.க.இராமசாமி ஐயா அவர்களிடமும் அந்த நூலைப் பற்றியும் அந்த நூலுக்கான உழைப்பு, பேரா.க.இராமசாமி ஐயா அவர்களின் அணிந்துரை பற்றியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார் ச.வே.சு. ஐயா. மேலும், தமது கருத்தரங்கச் சிறப்புரையில் மாணவர்களைப் பார்த்து,

“இதோ இங்க இருக்கும் உங்க வாத்தியார் பரமசிவன் அகநானூற்றுப் பதிப்பு தொடர்பான ஒரு அருமையான நூலைக் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ளார். அவரையெல்லாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; விட்டுவிடாதீர்கள்”

என்றும் கூறினார். இது, நற்பண்புடையவர்கள் சிலர் செய்யக் கூடியதுதான் என்றாலும் ஐயா ச.வே.சு. அவர்களை மாமனிதராகக் குறிப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.

ஐயா அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 31 ஆம் தேதியை மையமாகக் கொண்டு ஆண்டுதோறும், அவர் உருவாக்கி வாழ்ந்து கொண்டிருந்த தமிழூரில் மணிவாசகர் பதிப்பகத்துடன் இணைந்து ஒரு கருத்தரங்கம் நடத்தித் தமிழ் நூல்களை வெளியிடுவார். இந்த வகையில் தமது 81ஆம் வயதில் 81 நூல்களை வெளியிட்டுப் பெருமை சேர்த்தார் ச.வே.சு. ஐயா. அந்த வரிசையில் 2012 இல் டிசம்பர் 29, 30 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் கருத்தரங்கத்தை நிகழ்த்தினார்.

எங்கள் கல்லூரியில் நிகழ்ந்த செம்மொழிக் கருத்தரங்கிற்குப் பயிற்றுரையாளராக வந்திருந்த, சிவகாசியின் ஒளவை என்று நாங்கள் அன்புடன் அழைக்கின்ற முனைவர் பொ.நா.கமலா அம்மா அவர்கள்,

“ச.வே.சு. ஐயா அவர்கள் நடத்துகின்ற கருத்தரங்கிற்கு 30ஆம் தேதி (30.12.2012) நான் போறேன். நீங்களும் வர்றீங்களா? நான் மட்டுந்தான் போறேன். வேற எதுவும் முக்கியப் பணி இல்லன்னா நீங்களும் வாங்க. கார்லே போயிட்டுக் கார்லே வந்திடலாம்”

என்று கூறினார். அதற்குச் சம்மதித்து நாங்கள் இருவரும் 30.12.2012 அன்று தமிழூர் சென்றோம். சென்றபோது கருத்தரங்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஐயா அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் உரை நிறைவுற்ற பின்னர் ஆய்வாளர்கள் ஐயா அவரிடம் சென்று அவர் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றுக் கொண்டிருந்தனர். 82 வயது நிறைவடைந்து 83 வயது (31.12.2012 அன்று) தொடங்க இருக்கின்ற, தமிழுக்காக வாழுகின்ற ஐயா அவர்களிடம் ஆசி பெறுவதென்பது ஒரு சிறப்புத்தானே என்று எண்ணி நானும் அவர் அருகில் சென்றேன். பொ.நா.கமலா அம்மா அவர்கள் ஐயா அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் சென்ற நான் அவர் காலில் விழப்போனேன். அப்போது, என்னைக் குணிய விடாமல் தடுத்து, என்னைக் காலில் விழவிடாமல் பிடித்து விட்டார் ஐயா ச.வே.சு. அவர்கள். தடுத்துப் பிடித்த அவர்,

“நீ ஒரு ஆய்வாளன். யார் காலிலும் எதற்காகவும் விழக்கூடாது. கடைசி வரை நீ ஒரு ஆய்வாளனாக மட்டும்தான் இருக்க வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் அடிபணிபவனாக இருக்கக் கூடாது”

என்று கூறினார். இன்றும் அந்த வார்த்தைகள் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ஓர் ஆய்வாளன் அடிபணியக் கூடாது என்று கூறியதோடு மட்டுமின்றி 82 வயதுப் பெரியவர் 27 வயது இளைஞனைக் காலில் விழவிடவில்லை என்பதில் வெளிப்படுகிறது தமிழையும் தமிழ் ஆய்வையும் அவர் நேசிக்கின்ற பாங்கு.

சிறியவராக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, தமிழ் ஆய்வாளர்களை மதிக்க வேண்டும் என்று கருதிய ஐயா அவர்களின் கருத்தும் சிந்தனையும்தான் அவரை மாமனிதராக்குகிறது. இத்தகைய மாமனிதரை இழந்து வாடுவதென்பது மிகுந்த வேதனைக்குரியது. இன்னும் சிலகாலம் அவர் இருந்திருந்தால் தமிழூரை உருவாக்கியதுபோல, 15 ஆண்டுகளுக்கும் மேலாக மணிவாசகர் பதிப்பகத்துடன் இணைந்து கருத்தரங்கம் நடத்திச் சாதனை புரிந்தது போல, 80ஆம் வயதில் 80 நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்ததுபோல இன்னும் பல சாதனைகளைத் தமிழுக்காகச் செய்திருப்பார். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அந்த மாமனிதரை நாம் இழந்திருந்தாலும் அவருடைய பண்பை நாம் பின்பற்றுவது தமிழ்ச் சமூகத்திற்கு நலம் பயக்கும் என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

முனைவர் மா.பரமசிவன்

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை

காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி