சங்கத்தமிழ்ச் சமூக அமைப்பினைச் சங்க இலக்கியம்வழி உய்த்துணர முடிகின்றது. தொழில்நிமித்தமாகப் பல்வேறு நாட்டினர் தமிழகத்து நிலப்பரப்புகளில் தற்காலிகமாய்க் குடியேறியுள்ளனர். புகார், மதுரை, கருவூர், வஞ்சி உள்ளிட்ட நகரங்கள் தொழில்நகரங்களாகத் திகழ்ந்துள்ளன. பெரும்பான்மையான மக்கள் சிற்றூர்களில் அவரவர்க்குரிய தொழில்களைச் செய்து வாழ்ந்துள்ளனர். ஒவ்வொரு மக்களின் அடிப்படைத் தேவையாகிய உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இவை மூன்றும் அவரவர்க்கான தொழில்களை மேற்கொள்வதன் மூலம் கிடைக்கின்றன. அவ்வகையில், பழந்தமிழர் மேற்கொண்ட முதன்மையான தொழில்களைச் சங்க இலக்கியம்வழி அடையாளப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.

தொழிற்பிரிவினர்

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனும் நால்வகைப் பிரிவினர் சமூகத்தின் முதன்மை அங்கமாய்த் திகழ்ந்துள்ளனர். இவர்களைத் தவிர, சமூகத்தின் தேவைகளுக்கு உதவும் பல்வேறு தொழிற்பிரிவினர் இருந்துள்ளனர். நிலவியல் அடிப்படையில் குறிஞ்சி நிலத்தவர் குறவர் குறத்தியர் என்றும், முல்லை நிலத்தவர் ஆயர், ஆய்ச்சியர் என்றும், மருத நிலத்தவர் ஊரன், உழத்தியர் என்றும் நெய்தல் நிலத்தவர் பரதவர் என்றும் அழைக்கப் பெற்றுள்ளனர். தொழில்நிலையில் தச்சர், கொல்லர், குயவர், உமணர், ஆடை வெளுப்போர், பறையர், கடம்பர், துடியர், பாணர், வேட்டுவர், கணியர் முதலிய பல வகுப்பினர் தமிழகத்தில் வாழ்ந்துள்ளமையைச் சங்க இலக்கியங்கள்வழி அறிய முடிகின்றது. செல்வர் மனைகளில் குற்றேவல் புரியும் மக்களும் இருந்துள்ளனர். வினைவல பாங்கினர் என்று இவர்கள் வழங்கப்பெற்றுள்ளனர்.

உழவுத்தொழில்

மனித வாழ்வில் உணவு குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெறுகின்றது. உணவு இல்லையேல் உயிர் இல்லை. விஞ்ஞானம் விண்வெளியைக் கையகப்படுத்திய போதும் மனிதன் உண்பதற்கான உணவை மண்ணில் பயிரிட்டுத் தான் பெற முடியும். மனிதரின் உணவை எந்திரங்களால் உற்பத்தி செய்ய இயலாது. அதேவேளை ஆயிரம் தொழில்கள் இருந்தாலும் உழுதுண்டு வாழும் வேளாண்மையே முன்னிலையானது. இதனை,

உழுதுண்டு வாழ்வ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

            தொழுதுண்டு பின்செல் பவர்          (1033)

என்று வள்ளுவர் சுட்டுவார்.

சங்கத் தமிழர் சுற்றுப்புறச் சூழல் கெடாமல் இயற்கை முறையில் வேளாண்மை செய்துள்ளனர். வேளாண்மைக்குத் துணையாக ஆடு, மாடு, கோழிகளை வளர்த்துள்ளனர். சிறிதளவு நிலத்தில் அதிகளவு விளைச்சலை உற்பத்தி செய்துள்ளனர். இதனைப் புறநானூறு பின்வருமாறு பதிவு செய்கின்றது.

ஒருபிடி படியும் சீறிடம்

            எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே        (புறம்.40)

“ஒரு பெண்யானை படுத்துறங்கும் சிறிய இடத்தில் ஏழு ஆண்யானை உண்ணத்தக்க விளைபொருள் விளையும் வளம்மிக்க நாட்டுத் தலைவனே!” என்று புலவர் பாடியுள்ளார். இக்குறிப்பின்வழி, சிறிய நிலப்பகுதியில் அதிக விளைச்சல் காணுகின்ற உழைப்பு, ஆற்றல் பழந்தமிழர்களுக்கு இருந்திருக்கின்றது எனும் செய்தி பெறப்படுகின்றது.

நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர்

            பாடுசிலம்பு மிசையேற்றத்

            தோடுவழங்கும் அகலாம்பியிற்

            கயனகைய வயல்நிறைக் குடம்      (மதுரைக்.89-92)

தொழுவர் ஆற்றுநீரை மேட்டு நிலங்களுக்கு ஏற்றத்தால் இறைத்துப் பாய்ச்சியுள்ளனர். நீரிறைக்கும்போது அவர்கள் பாடிய பாட்டிசை எங்கும் முழங்கியது என்பதை மேற்காண் மதுரைக்காஞ்சிப் பாடலடிகள் சுட்டியுள்ளன.

நெசவுத்தொழில்

நெசவுத்தொழிலில் பண்பட்ட பேரினங்களுள் தமிழினமும் ஒன்று. தமிழகத்து ஆடைகளுக்கு அயல்நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது. பருத்தி, பட்டு, உரோமம் முதலியவற்றால் ஆடைகள் நெய்யப்பட்டுள்ளன. ஆடைகள் பாலாவி, மூங்கில் தோல், பாம்புரி, எண்ணெய், நுரை ஆகியவை போல் இருந்துள்ளன. கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய இழைகளால் நெய்யப்பட்ட ஆடைகளுக்கு வண்ணமூட்டப் பெற்றுள்ளது.

வில்லெறி பஞ்சியின் வெண்மழை தவழும்

            கொல்லை தைஇய குறும்பொறை மருங்கில்        (அகம்.133)

எனும் அகநானூற்றுப் பாடலில் வில் அடித்து பஞ்சிலிருந்து விதை நீக்கப்பட்டதாகவும் விதை நீக்கப்பட்ட பஞ்சு வெண்மேகம் பாலக் காணப்பட்டதாகவும் குறிப்பிடப் பெற்றுள்ளது.

பாம்பு உரித்தன்ன வான்பூங் கலிங்கமொடு

            மாரி யன்ன வண்மையின் சொரிந்து          (புறம்.397)

எனும் புறநானூற்றுப் பாடல்வழி, பாம்பு உரித்த சட்டை போன்ற பூவேலைப்பாடுகள் செய்த உயர்ந்த ஆடைகளை உருவாக்கியுள்ளமையை அறிய முடிகின்றது.

கண்ணால் காண முடியாத மெல்லிய நூலால் நெய்யப்பட்டு அழகான பூவேலைப்பாடுகளால் செய்யப்பட்டது, பாம்பின் தோலைப் போல் மென்மையும் வழவழப்பும் பளபளப்பும் அமைந்த மெல்லிய துணி என்று பொருநராற்றுப்படை அக்காலத்தில் நெய்யப்பட்ட ஆடையைப் பற்றி

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து

            அரவுரி யன்ன அறுவை                   (பொருநர்.83-84)

எனும் அடிகளில் குறிப்பிடுகின்றது. ஆடைக்கு அறுவை என்றும் பெயர். அறுவை – அறுக்கப்படுவது, நீளமாக நெய்து துண்டாக்கப்படுவது என்று பொருள்.

அக்காலத்துத் தமிழர் அழகிய பட்டாடைகள் நெய்தனர். பணம் படைத்தவர்கள் பட்டாடைகள் அணிந்தனர். கரையிட்ட ஆடை நெய்வதில் தமிழர்கள் கைதேர்ந்துள்ளனர்.

கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப்

            பெறலருங் கலத்தில் பெட்டாங் குண்கென            (பொருநர்.155-56)

எனும் அடிகளால் இதனை அறியலாம்.

தச்சுத்தொழில்

தமிழ்நாட்டுத் தச்சர்கள் மன்னர்க்கும் மக்களுக்கும் வேண்டிய வாகனங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.  நால்வகைப் படைகளுள் தேர்ப்படையும் ஒன்றாக இருந்ததால் தேர் செய்வது அன்றைய தச்சர்களின் தலையாய கடமையாக இருந்துள்ளது. அதியமானின் படைவலிமையைக் கூறவந்த ஔவையார்,

வைகல் எண்தேர் செய்யும் தச்சன்

            திங்கள் வலித்த கால்அன் னோனே            (புறம்.87)

“நாளொன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன், ஒரு மாதம் முயன்று பாடுபட்டுச் செய்த ஒரு தேர்க்காலைப் போன்ற வலிமையுடையவன் அதியமான்” என்கிறார்.

சிறுவர் நடைபயிலும், ஓட்டி விளையாடும் நடைவண்டிகளும் சிறுதேர்களும் அக்காலத்தில் செய்யப்பட்டுள்ள குறிப்பினைச் சங்க இலக்கியங்களில் காண முடிகின்றது. தச்சன் செய்த சிறுமா வையம், முக்காற் சிறுதேர் என அவை வழங்கப்பெற்றுள்ளன. தச்சனின் புதல்வர்களும் இவ்வண்டியைச் செய்யும் திறன் பெற்றிருந்தனர் என்பதை,

தச்சர் சிறாஅர் நச்சப் புனைந்த

            ஊரா நற்றேர் உருட்டிய புதல்வர்   (பெரும்பாண்.248-49)

எனும் பாடலடிகளின்வழி அறிய முடிகின்றது.

கொல்லுத் தொழில்

தமிழர் உலோகத் தொழிலிலும் மேம்பட்டிருந்துள்ளனர். இரும்புசெய் கொல்லரும் பொன்செய் கொல்லரும் தனித்தனியே பேசப்பெறுகின்றனர். போர் நிறைந்த அக்காலத்தில் வாளும் வேலும் பிற போர்க்கருவிகளும் செய்ய எண்ணற்ற கொல்லர்கள் தேவைப்பட்டிருப்பர்.

கருங்கைக் கொல்லன் இருப்புவிசைத்து எறிந்த

            கூடத் திண்ணிசை வெரீஇ மாடத்து           (பெரும்பாண்.437-38)

எனும் பாடலடிகளில் அரண்மனைக்கு முன்னால் கொல்லர் போர்யானைகளின் தந்தங்களுக்குக் காப்பு வளையல்கள் போடுவதற்காக உலைக்கூடத்தில் தட்டும் இரும்பின் ஓசையைக் கேட்டு வெருவி அங்குள்ள மாடப்புறாக்கள் பறக்கும்போது திருமகள் வாழும் திருக்கோயில் போன்ற காட்சியை உடையதாகும் என்ற குறிப்பைக் காண முடிகின்றது.

தமிழர் அணிந்த எண்ணற்ற அணிகளைப் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. கண்ணகியின் காற்சிலம்பு ஒன்றே அக்காலக் கொல்லரின் கைத்திறனுக்கு ஏற்ற சான்றாய் அமைந்து விடுகின்றது.

மண்பாண்டத் தொழில்

பண்டைய நாளில் பெரும்பான்மை மாந்தர் மண்பாண்டங்களையே புழங்கியுள்ளனர். உணவு சமைப்பதற்கு மட்டுமின்றி, இறந்த உடலைப் புதைப்பதற்கும் மண்தாழிகள் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

இருள்திணிந் தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை

            அகலிரு விசும்பின் ஊன்றுஞ் சூளை                      (புறம்.228)

எனும் புறநானூற்றுப் பாடலடிகள் “இருளெல்லாம் ஒன்றுதிரண்டு ஓரிடத்தில் குவிந்தது போலக் கருமைநிறப் புகை ஆகாயத்தில் சென்று தங்கும் சுடுகின்ற சூளையை உடைய அகன்ற ஊரிலே மண்கலம் வனைகின்றனர்” எனும் குறிப்பினைத் தருகின்றது.

தமிழர்களின் மட்கல உருவாக்கத் தொழில்திறமையை நெடுநல்வாடையின் பின்வரும் பாடலடிகள் உணர்த்தி நிற்கின்றன.

கல்லென் துவலை தூவலின் யாவரும்

            தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்

            பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர                     (நெடுநல்.64-66)

குவிந்த வாயையுடைய நீருண்ணும் மண்பாண்டம் தொகுவாய்க் கன்னல் எனப் பெயர் பெற்றது. கூதிர்காலத்தில் குளிரைப் போக்க விரிந்த வாயையுடைய பெருத்த தாழிகளில் நெருப்பை வளர்த்து அதன் வன்மையை நுகர்வர். பல்வேறு நிலைகளிலும் தேவைக்கேற்ற வகையில் மண்பாண்டங்கள் புழக்கத்திலிருந்ததை அறியும்பொழுது பண்டைத் தமிழர் மட்கலத் தொழிலில் பெற்றிருந்த மேன்மையை அறிய முடிகின்றது.

ஆடை வெளுக்கும் தொழில்

ஆடைகளை வெளுத்துத் தூய்மையாக்குவோர் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஆடை வெளுப்போரை இழிநிலையில் வைத்தே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. புலையர் – சண்டாளர், இழிந்தோர். ஆடை வெளுப்போரைப் புலையர், புலைத்தி என்றே சங்க இலக்கியங்களில் குறிப்புக் காணப்பெறுகின்றது.

வறன்இல் புலைத்தி நெடிது பிசைந்தூட்டிய

            பூந்துகில் இமைக்கும் பொலன்காழ் அல்குல்        (அகம்.387)

என்னும் குறிப்பால் ஆடையை ஒருவகைப் பசையிட்டுக் காயவைத்தமை புலனாகின்றது. ஆடை வெளுப்போரின் வறுமைநிலையை அகநானூறு பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

வறனில் புலைத்தி எல்லித் தோய்த்த

            புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு         (நற்.90)

உவர்நிலத்தில் ஊற்றுக் கிணறுகளைத் தோண்டி அவர்கள் ஆடைகளை வெளுத்தனர் என்பதை,

களர்ப்படு கூவல் தோண்டி நாளும்

            புலைத்தி கழீஇய தூவெள் ளருவி                           (புறம்.311)

எனும் பாடலடிகள் உணர்த்தி நிற்கின்றன.

தொகுப்புரை

பழந்தமிழர்கள் நிலவியல் அடிப்படையில் பல்வேறு இனங்களாகப் பிரிந்து வாழ்ந்துள்ளனர். அவ்வச்சமூகத்தின் வளத்தினை அவர்தம் உடை, உணவு, உறைவிடம் ஆகியவற்றின் ஆக்க முறைமைகளால் அறிய முடிகின்றது. உழவு, நெசவு, தச்சு உள்ளிட்ட அடிப்படைத் தொழில்களில் தமிழர்கள் தேர்ந்த நிலையில் இருந்துள்ளதனைச் சங்க இலக்கியங்கள்வழி அறிய முடிகின்றது.

துணைநின்றவை

  • கதிர்முருகு (உரை.), 2002, பத்துப்பாட்டு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை.
  • சண்முகம் பிள்ளை மு., 2005, சங்கத் தமிழர் வாழ்வியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  • சிதம்பரனார் சாமி., 2003, பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும், அறிவுப் பதிப்பகம், சென்னை.
  • மாணிக்கவாசகன் ஞா. (உரை.), 2010, புறநானூறு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை.

முனைவர் கு.சரஸ்வதி

தமிழ் – உதவிப் பேராசிரியர்

சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி

மண்ணச்சநல்லூர்

திருச்சிராப்பள்ளி.

[email protected]