ஒரு நாட்டின் வரலாற்றினை நன்கறியத் துணைபுரிவனவற்றுள் சிறப்பு மிக்கவை அந்நாட்டு இலக்கியங்கள். சங்க இலக்கியங்களில் மூவேந்தர்கள், சிற்றரசர்கள், வள்ளல் பெருமக்கள் ஆகியோர் பற்றிய செய்திகளும் அந்நாளைய பழக்க வழக்கங்களும், பழம் பெரும் நகர்கள் பற்றிய குறிப்புகளும் இன்னபிற செய்திகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. அவற்றுள் நெய்தல் பாடல்களுள் காணப்படுவனவும், ஏனைய திணைகளில் காணப்படும் நெய்தல் நிலச் சார்புடையனவுமான செய்திகளில், குறிப்பிடத்தக்கன ஈண்டு அடையாளப்படுத்தப் படுகின்றன. நெய்தல் நிலத்தே பல போர்கள் நடந்துள்ளன. நெய்தல் நிலம் போர்க்களமாயிருந்ததற்குச் சாலச் சிறந்த இடமாகும். ‘தும்பை தானே நெய்தலது புறனே’ என்னும் தொல்காப்பியச் சூத்திர உரையில், இருபெரு வேந்தரும் ஒரு களத்துப் பொருதலின் அதற்கு இடம் காடும் மலையும் கழனியும் ஆகாமையானும், களரும் மணலும் பரந்த வெளி நிலத்துப் பொருதல் வேண்டுமாதலானும், அந்நிலம் கடல் சார்ந்த வழியல்லது இன்மையானும்இளம்பூரணரும் போர்க்களமாயிருந்ததற்கு நெய்தலே சாலச் சிறந்தவிடம் என்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். பல போர் நிகழ்ச்சிகள் நெய்தலில் காணப்படுகின்றன. அப்போர் நிகழ்ச்சிகளையும், பிற சிறப்புச் செய்திகளையும் ஈண்டுக் காண்போம்.

மன்னர்களும் போர் நிகழ்ச்சிகளும்

நெய்தல் நிலத்துக்குரிய புன்னைமரமானது திதியன் என்னும் குறுநில மன்னனின் காவல் மரமாயிருந்துள்ளது (அகம். பாலை. 45:9-11). அன்னி என்னும் குறுநில மன்னன் வலிமிக்க ஊர்களையும், வேற்படையினையுமுடைய எவ்வியென்னும் சிற்றரசனது அறிவுரையையும் பொருட்படுத்தாமல், அத்திதியனைக் “குறுக்கைப் பறந்தலை” என்னுமிடத்தே எதிர்த்து அவனது காவல் மரமாகிய அப்பழம்பெரும் புன்னையைத் துணித்தான். அதனைப் பொறாத திதியன், அன்னியைக் கொன்றொழித்தான். குறுக்கைப் பறந்தலை நெய்தல் நிலத்தின் சிறந்த பதியெனவும், நெய்தல் நிலத்திற்குரிய மரமான புன்னையைக் காவல் மரமாகக் கொண்டிருந்தான் என்ற காரணத்தால் திதியன் நெய்தல் நிலத்தையுள்ளிட்ட நாட்டின் தலைவன் எனவும் கொள்ளலாம்.

திருமுடிக்காரி

முள்ளூரை ஆண்ட குறுநில மன்னன் மலையமான் திருமுடிக்காரி என்று வழங்கப்பட்டான். இவனது குதிரையின் பெயரும் காரியே. இவன் வல்வில் ஓரியென்பானொடு போர்புரிந்து அவனைக் கொன்ற பெருமையுடையவன். முள்ளூர்க்கு மன்னனாகிய இக்காரி, தன் குதிரையின் துணையுடன் இரவோடிரவாக ஆயர்தலைவர்களின் பசுக்களைக் கவர்ந்ததும் அவர்கள் வருந்திய நிலையினையும் நற்றிணைப் பாடலொன்று குறிப்பிடப்படுகிறது.

மா இரு முள்ளுர் மன்னன் மாஊர்ந்து

      எல்லித் தரீஇய இனநிரைப்

      பல் ஆன் கிழவரின் அழிந்த (நற். 291:7-9)

தித்தன் வெளியன் கடற்றுறை

வீரை என்பது கடற்றுறை. அடுபோர் வேளிர், வீரை முன்துறை (அகம் 206:13-14). மருதத்திலும் போரில் வல்ல வேளிர்களுள் சிறந்த வெளியனின் மைந்தன் தித்தனுக்குரியது இத்துறை வீரை வேண்மாள் வெளியன் தித்தன் (நற்.58). இத்துறையின்கண் பரந்துவிரிந்து கிடக்கும் உப்பளத்தில் விளைந்த வெள்ளுப்பு, குன்றெனக் குவிந்து கிடக்கும். அவ்வீரை நகரின் கண்ணுள்ள முரசுகட்டில்களில் மாலை வேளையில் வரிசையாக விளக்குகள் சுடர்விட்டெரியும் அவ்வரிசையொழுங்கு கடற்கரைக்கண் நிரையுறக் கிடந்து முழங்கும் சங்கங்களைக் காணும். தித்தன் உறையூர்க்கண்ணிருந்து நாடுகாவல் புரிந்தவன் என்பதால் அவ்வீரைத்துறை, சோழ நாட்டுக் கடற்கரையதாகலாம். இவனது துறைமுகப்பட்டினம் கானலம் பெருந்துறை. தன்னைப் புகழ்ந்து பாடிய பாணர்க்குப் பரிசுபல அளித்தவன். வீரமிக்க காலாட்படையினை யுடையவன். இவனது பட்டினத்துக்குப் பொன்னை ஏற்றிக்கொண்டு வந்து கொடுத்து, இந்நாட்டுப் பொருள் பல பெற்றுச் சென்ற வணிகச் செய்தியையும் சங்கப் பாடல்களில் காணமுடிகிறது (அகம்.152:5-8).

பெண்கொலை புரிந்த நன்னன்

நன்னன் குறுநில மன்னன் என்பதும் பெண்கொலை புரிந்தவன் என்பதும் சங்க இலக்கியங்கள் வழியே கண்ட வரலாற்றுச் செய்தியாகும். இவன் வேற்படை தாங்கிப் போர்புரிவதில் வல்லவன். விரைந்தோடும் குதிரைப் படையினையுடைய பிண்டன் முதலான சிற்றரசர்களைத் தோற்கடித்தவன் வேந்தரின் மகளிர் கூந்தலைக் களைத்த கொடுமையையும் பின்வரும் பாடலின் வாயிலாக அறிய முடிகிறது.

 … பொற்புடை

விரிஉளைப் பொலிந்த பரியுடை நன்மான்

வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்

கூந்தல் முரற்சியின் கொடிதே     (நற். 270:7-10)

அம்பலும் அழுங்கல் ஊரும்

புறையாறு என வழங்கும் புறந்தை புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள் மலிந்த சோழ நாட்டுக் கடற்கரை நகர். பெரியன் என்னும் குறுநில மன்னனின் தலைநகர். பெரியன் குதிரைகளைப் பூட்டிய தேர்ப் படையையுடையவன். தன்னை நாடி வருபவர்களுக்குப் பரிசுகள் பல வழங்கும் வள்ளல் தன்மையுடையவன் என்று இப்பாடல் குறிப்பிடுகிறது.

ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும்

பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்

பரியுடை நல்தேர்ப் பெரியன் விரிஇணர்ப்

புன்னைஅம் கானல் புறந்தை      (அகம்.100:10-13)

விச்சிக்கோ

இவன் குறுநில வேந்தன், விற்போரில் சிறந்து விளங்கியவன். வேந்தரோடு போர்க்களத்தில் இருந்து போர் புரிந்தகாலை போர்ப் பரணி பாடப் பாணர்கள் சென்றனர். கடுமையாகப் போர் இருந்ததால் காண்பவர்கள் நிலையை மாற்ற சிங்கப்பார்வை இருபுறமும் பார்த்தனர். அங்கெழுந்த பேரொலி, ஆரவாரம் மிக்க குறும்பூர் என்னும் ஊரில் எழும் பேரொலியினும் மிக்கு முழங்கியது என்று குறுந்தொகைப் பாடலொன்று (328:5-8) கூறுகின்றது. இந்த விச்சிக்கோ புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் புலவர்கள் பாடிப்புகழும் வள்ளல் விச்சிக்கோவாக இருக்கலாம் என உ.வே. சாமிநாதையர் கருதியுள்ளார்.

இராமாயண இதிகாசச் செய்தி

இராவணனுடன் போர்புரிந்து சீதையை மீட்டுவர இராமன் இலங்கை மாநகர்க்குச் சென்ற செய்தி நெய்தல் நிலப் பாடல்களில் வரலாற்றுச் செய்தியாக (அகம் 70:13-17) இயம்பப்படுகிறது. இராமன் இலங்கையை நோக்கித் தன் சேனையோடு புறப்படுதற்கு முன்னர்ப் பழமைமிக்க திருவாணைக்கரையில் (தனக்கோடியில்) ஆலமரத்தடியில் தங்கித் தம் துணைவர்களோடு ஆலோசனை நடத்தியபோது மரத்தில் தங்கிய பறவைகளின் ஒலி இடையூறாயிருந்தமையால் பறவைகளின் ஒலியை நிறுத்தினர் என்ற இதிகாசச் செய்தியும் அந்தக் கோடியக்கரை பாண்டியர் ஆட்சியில் அன்று இருந்ததென்ற உண்மையும் காணமுடிகிறது.

வென்வேற் கவுரியர் தொல்முது கோடி

      முழுங்கிரும் பவ்வம் இரங்கும் முன்துறை

      வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

      பல்வீழ் ஆலம் போல

      ஒலிஅவிந் தன்று     (அக.70)

பதிகளும் பட்டினங்களும்அலைவாய்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரைக்கண் பொலியும் முருகன் திருக்கோவிலான திருச்செந்தூர் திருச்சீரலைவாய் என இலக்கியத்தில் குறிப்பிடப் பெறுகிறது. அலைகள் மிகுந்து காணப்படுவதால் இதற்கு திருச்சீர் அலைவாய் எனப்படும். உழவனின் ஓசைக்கு அஞ்சிய மயில் அலைகளின் ஓசை அதிகம் உள்ள இடத்தில் வந்து தங்கின அச்சீரலைவாயமர்ந்தவன் வன்மைமிகு முருகன் என்று அகப்பாடல் ‘திருமணி விளக்கின் அலைவாய்ச்’ (அகம் 266:16-21) குறிப்பிடுகிறது.

குடந்தை

சோழ மன்னர்கள் வேற்படையில் சிறந்தும் மாற்றரசர்களை மாய்த்தும் பல வெற்றிகளைப் பெற்றனர். மன்னர்கள் பலர் தம்மிடம் தோற்றும் அவர்கள் அரசிறையாகப் பெற்ற பெருஞ்செல்வத்தை பாதுகாப்புடன் குடவாயில் நகரில் வைத்திருந்த செய்தி என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்று பின்வரும் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

வெல்வேல்

கொற்றச் சோழர் குடந்தை வைத்த

 நாடுதரு நிதியினும் செறிய        (அகம்.60:12-14)

கொற்கை

கொற்கையைத் துறைமுகமாய்க் கொண்டு ஆண்ட மன்னன் பாண்டியன். இவனது தலைநகர் மதுரை. மலை போன்ற மாடமாளிகைகளைக் கொண்டும் கூடல் நகர் என்றும் பெயர் பெற்றது. அம்மாநகரில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றி எனும் பெரிய வேற்படையும், யானைப் படையும், நெடிய தேர்ப்படையும் என இவ்வகை வலிமை படைத்த படையுடன் பல மன்னர்களைத் தோற்கடித்த செய்தியும் கொற்கை நகர் பற்றிய குறிப்பும் குறிப்பிடத்தக்கன (அகம் 296:10-12). மேலும் (அகம். 201:2-4, அகம். 27:6-9) ஆகிய பாடலடிகள் பாண்டியரின் அறநெறி பிறழாது செங்கோல் செலுத்திய சிறப்பையும் வெண்கோட்டு வெற்றிக் களிறுகளைத் திறையாகப் பெற்ற செய்தியையும் கொற்கையின் வரலாற்றினையும் பாண்டிய மன்னர்களின் போர்த்திறனையும் அறிய உதவுகின்றன.

பேர்இசைக் கொற்கைப் பொருநன் வெண்வேல்

      கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்

      மலைபுரை நெடுநகர்க் கூடல்       (அகம்.296)

 

பொன்னின்

      அவிர்எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை

      வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்           (அகம். 201)

பொறையன் தொண்டி

சேரநாட்டின் ஒப்பற்ற துறைமுகமாகத் தொண்டி விளங்கியது. இது அயல்நாடுகளுடனான வணிகத் தொடர்பு கொண்டதாகும். உலகம் போற்றக் கூடியதாக அமைந்தது தொண்டி துறைமுகமாகும் (அகம்.60:8), பொறையன் தொண்டி என்றும் (நற்.8:9), குட்டுவன் தொண்டி (குறு.128:2) பொறைநாடு என்றும், வெண்தந்தங்கள் பொலியும் பெருங்களிற்றுப் படையினையுடையவன் (அகம் 290:12), திண்ணிய தேர்ப்படையுடன் திகழ்ந்தவன் என்றும் (அகம் 60:8), குதிரைப் படையினையும் தேர்ப் படையினையும் கொண்டு விளங்கிய குட்டுவன் என்றும் அறிய முடிகின்றது(அகம். 270:8-9). மேலும், தொண்டி இன்றும் குறும்பொறை நாட்டின் ஒரு சிற்றூராகவே இருந்து வருகிறது. இவ்வகையானும் பொறையன், குட்டுவர் குடவர் பொறையர் கடுங்கோ இவர்கள் சேர அரசகுடி வகைகளில் ஒருவன் என்ற கருத்தினை ஒளவை துரைசாமிப் பிள்ளை நற்றிணை விளக்க உரையில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பவத்திரி

என்றைக்கும் எக்காலத்தும் கெடாத இனிமையான புகழினையும், பொன்னவிர் பூணினையும் பூண்டிருந்த திரையன் என்ற மன்னன் பல்வண்ணப் பூக்கள் பூத்துப் பொலிந்த பொழில்பல சூழ்ந்த பவத்திரி நகரைத் தலைநகராய்க் கொண்டு செங்கோல் செலுத்திச் சிறப்புற ஆட்சி செய்த செய்தியைப் பின்வரும் பாடலடிகளில் காண முடிகிறது.

செல்லா நல்லிசை பொலம்பூண் திரையன்

      பல்பூங் கானல் பவத்திரி         (அகம்.340:6-7)

முடிவுரை

நெய்தல் நிலம் என்பது பரதவர்களின் வரலாற்றினைச் சுட்டும் நிலம் மட்டுமன்று அதற்கு அப்பாற்பட்ட நிலையினைப் பார்க்கும்போது, நெய்தல் நிலத்தில் நடந்த போர்நிகழ்ச்சிகள், நெய்தல் நிலத்தை ஆண்ட மன்னர்கள், மற்றும் குறுநில மன்னர்கள், வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஊர்கள், குறிப்பிடத்தக்க சிறப்பு நிகழ்ச்சிகள் இதுபோன்ற செய்திகளும் நெய்தல் நிலத்தை மையப்படுத்திய சங்கப்பாடல்களின்வழி அறியப்பெறுகின்றன.

துணைநின்றவை

  • சுப்பிரமணியன், ச.வே.(உரை.), 2013(12ஆம் பதிப்பு), தொல்காப்பியம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-8.
  • …………………………,(உரை.), 2003(மு.ப.), பத்துப்பாட்டு, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
  • தமிழண்ணல்(உரை.), 2002(மு.ப.), குறுந்தொகை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
  • மகாதேவன் கதிர்.(உரை.), 2003(மு.ப.), நற்றிணை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
  • மீனவன் நா. (உரை.), 2004(மு.ப.), அகநானூறு, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
  • முத்துக் கண்ணப்பன் தி., 1978, சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம், அதிபந்தர் பதிப்பகம், சென்னை.

பெ.ராஜா

தமிழ் – முனைவர் பட்ட ஆய்வாளர்

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 620 017.