மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வரிக்கேற்ப தமிழ்ச்சமூகம் பல பரிணாமங்களைப்பெற்று வந்துள்ளது அல்லது வருகின்றது. அந்தவகையில் நாடோடிச் சமூகமாகத் தன் வாழ்க்கையை வாழத்தொடங்கிய ஆதிகாலத் தமிழ்ச் சமூகம் படிப்படியாக நிலவுடைமைச் சமூகத்திற்கு உருமாறுகிறது, இந்நிலவுடைமைச் சமூகம் உருமாறுவதற்கு, நீரிடங்களை நோக்கிய மக்களின் புலம் பெயர்வே முக்கியக் காரணமாக அமைகிறது. இப்புலம்பெயர்வு தொல்பழங்காலம் தொட்டு இப்பின்நவீனத்துவ காலம் வரை தன் தேவைகளை ஏதோ ஒருவகையில் பூர்த்திசெய்துகொள்ளவே நிகழ்ந்தேறியுள்ளது எனலாம்.

நீர்நிலை உருவாக்கத்தில் உடைமைகளும் சாதிகளும் எனும் இந்நூலினை ஐந்து இயல்களாக பகுத்து ஆராய்கின்றார் நூலாசிரியர் முனைவர் ம.லோகேஸ்வரன் நீரிடங்களை மையமிட்ட புலம்பெயர்வு எனும் முதல் இயலில் மனித சமுதாயம் எப்படி உருப்பெற்றது அதாவது குரங்கிலிருந்து மனிதன் எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று நாடோடிச் சமூகத்திலிருந்து வேட்டைச் சமூகத்திற்கு மாறினான் பிறகு எவ்வாறு நிலவுடைமைச் சமூகத்திற்கு மாறினான் என்பன பற்றி விளக்குகிறது. இந்நிலவுடைமைச் சமூகத்தின் மூலம் ஆற்றங்கரையின் ஓரங்களில் நிலையான குடியிருப்பினைப் பெற்றதோடு, பயிர்த்தொழிலுக்கு வேண்டிய நீர்ப்பாசன முறைகளையும் எளிதில் கற்றுக்கொண்டான். தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய நீர்நிலைகளை தெய்வநிலைக்குக் கொண்டுசென்றான் என்பதைப் பல அறிஞர்களின் கருத்தாக்கங்கள் கொண்டு நிறுவியுள்ளார். இவ்வியல் நூலின் நுழைவாயிலாக அமைவதோடு வாசகர்களுக்குப் புலம்பெயர்வு குறித்த புரிதலைத் தருகின்றது.

சங்க இலக்கியத்தில் நீரிடங்கள் எனும் இரண்டாம் இயலில் தொல்பழங்காலத்திலிருந்தே நீர்நிலைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஓர் இணக்கமான உறவு இருந்துள்ளது. அது வேளாண்மையளவிலே நின்றுவிடாது மக்களின் அன்றாட வாழ்வியலிலும் நீர்நிலைகள் முக்கிய வினையாற்றியுள்ளன.

இனக்குழு வாழ்க்கைக்கு முன்னதாகவே தோன்றிய இயற்கை வழிபாடு பிற்காலங்களில் நீர், நெருப்பு, காற்று, நிலம், வான் என்று தனித்தனி நிலைகளில் அவரவர் சூழலுக்கேற்ப வழிபடப்பெற்றுள்ளன என்கிறார் ஆசிரியர். மேலும், நீரிடங்கள் குறித்து பிங்கல நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, சூடாமணி நிகண்டு, ஆசிரிய நிகண்டு (பக்.11-12) போன்ற நிகண்டுகளில் கொடுக்கப்பெற்றுள்ள விளக்கங்களை எடுத்தாண்டுள்ளவிதம் சிறப்பு.

சங்க இலக்கியங்களில் குளம், இலஞ்சி, குண்டு, கயம், சூழி, வாவி (பின்னிணைப்பு – 1  பக்.142 – 148) ஆகிய சொற்கள் நீர்நிலைகளைக் குறிக்க பெரும்பான்மையாக கையாளப்பெற்றுள்ளன என்கிறார். இந்நீர்நிலை தொடர்பாக நிகண்டுகளில் சுட்டப்பெற்றுள்ள பெரும்பான்மையான சொற்கள் இன்று வழக்கில் இல்லை. தென்மாவட்டங்களில் மட்டும் ஒருசில சொற்கள் இன்னும் வழக்கில் உள்ளன அவை குளம், குண்டு என்பதாகும். இச்சொற்கள் பெருவழக்கில் உள்ளதைக் களஆய்வில் கண்டறிந்து எடுத்துரைத்துள்ளவிதம் மிகவும் பாராட்டுக்குரியது. ஏனெனில் களஆய்வு  செய்து நூல் எழுதும் பழக்கம் படைப்பாளிகளிடம் வெகுவாகக் குறைந்துவருகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தென்மாவட்ட நீரிடப்பெயர்களும் சமூகக்கட்டமைப்பும் எனும் மூன்றாம் இயலில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குளம், கண்மாய், ஊருணி, சேங்கை, ஏந்தல், தெப்பக்குளம், குட்டை, குண்டு, தாவு, தம்பம் முதலான பெயர்களில் நீர்த்தேக்கங்கள் வழக்குப்பெற்றுள்ளன. இவற்றுள் கண்மாய், ஊருணி எனும் பெயரிலான நீர்த்தேக்கங்களே மிகுதி (ப.19) என்கிறார். கண்மாய், ஊருணி, தெப்பக்குளம், குளம் போன்றவை பற்றி விரிவான விளக்கமும் தந்துள்ளார் (பக்.20-25).

நீரிடப்பெயர்கள் – ஊர்ப்பெயராய்தல் எனும் தலைப்புக்குக்கீழ் சிவகங்கை, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்கள் மற்றும் ஊர்களையும் அடைவுபடுத்தியுள்ளது (பக்.26-37) சிறப்புக்குரியது.

கண்மாய் என்பது தென்மாவட்டங்களில் மிகுதியாகக் காணப்படுகின்ற நீரிடமாகும். இப்பெயர் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பெருவழக்காக உள்ளது. இதனைக் கிராமம், மாவட்டம் எனும் அடிப்படையில் தொகுத்து வகுத்து நான்கு பக்கங்களுக்குச் சான்றுகளாகக் கொடுத்திருக்கின்றார். இதுமட்டுமல்லாது நூலுக்கு  வலிமை சேர்க்கும் பொருட்டுப் பிற ஆய்வாளர்களின் கருத்துகளை மேற்கோளாகக் கொடுத்திருக்கின்றார் (பக்.41-42). தேவையான இடங்களில் ஊர்ப்பொதுமக்களிடம் நேர்காணல் கண்டு அந்நேர்காணலையும் நூலில் பதிவுசெய்திருக்கின்றார் (ப.43). இவ்வணுகுமுறைகள் ஆய்வாளரின் ஆய்வுப்போக்கை மிளிரச்செய்கின்றது.

நீர்நிலை உருவாக்கத்தில் உடைமையும் சாதியும் (கல்லல் ஒன்றியம்) எனும் நான்காம் இயல் இந்நூலின் மிகமுக்கியமான பகுதியாக அமைகிறது. இப்பகுதிதான் இந்நூலின் உயிரோட்டம் என்றே கூறலாம். காடுவெட்டிக் குளம் பெருக்கிய வரலாறு தமிழருடையது என்றாலும் நீர்த்தேக்கங்களை மையமிட்ட புலம்பெயர்வு, நீர்த்தேக்கங்களுக்குப் பெயரிடப்பெற்ற காலம், நீரிடப்பெயர்கள் ஊர்ப்பெயராக்கப்பெற்ற காலம் (அ) பின்புலம் முதலானவற்றைத் துல்லியமாக அறிந்துகொள்ள வரலாற்றில் இடமில்லை. ஆனால், இவற்றினூடாக நிலவுடமைச் சமூகத்தைச் சார்ந்த பொருளியல்சார் நகர்வு தீவிரமடைந்துள்ளது என்பதை மட்டும் அறிதியிட இயலுகிறது என்ற ஆசிரியரின் கருத்தாக்கம் (பக்.50-51) கவனத்தில் கொள்ளத்தக்கது.

நீரிடங்களை மையமிட்டு நகரத் தொடங்கிய மனித சமுதாயம் முதலில் குழுக்களாகவும், சேரிகளாகவும், குடியிருப்புகளாகவும், ஊர்களாகவும் தமது இருப்பினை நிலைப்படுத்திக் கொண்டது. சாதியப் பின்புலத்தில் ஆதிக்கச் சாதியினரைக் குறிக்கின்ற நீரிடங்கள், தாழ்த்தப்பெற்ற சாதியினரைக் குறிக்கின்ற நீரிடங்கள் எனும் இருபெரும் பிரிவாகப் பகுத்துக் கொண்டு இப்பிரிவுகளுக்கிடையே நிலவுகின்ற சாதி, சமய வேறுபாடுகளை ஆசிரியர் தோலுரித்துக்காட்டியுள்ள விதம் போற்றுதற்குரியது.

கல்லல் ஒன்றியத்திற்குப் பாத்தியப்பட்ட மக்களின் வருணாசிரமமாகிய செட்டியார், பார்ப்பனர், கணக்கன், அம்பலார், வண்ணார், பண்டாரம், பறையர், பள்ளர், இடையர், நாவிதர், சாணார், வலையர், ஆண்டியர், பஞ்சகருமார் போன்ற சாதிகளை வகுப்புவாரியாகப் பிரித்து அவர்களது பூர்வீகக்குடி எது? கிளைப்பிரிவுகள் என்னென்ன? என்பதையும் விளக்கியிருப்பது ஆசிரியரின் ஆராய்ச்சி நுணுக்கத்தை வெளிப்படுத்துகிறது.

நிகழ்வுகளை மையமிட்ட நீரிடங்கள், காரணப்பெயரில் அமைந்துள்ள நீரிடங்கள் எனும் பகுதியில் (பக்.88-97) ஊருணிகளுக்கு ஆசிரியர் விளக்கம் தந்திருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. ஏனெனில் பல ஊர்களுக்கு இலக்கணத்தைக் காரணம் காட்டியும் அகராதிகள் தரும் விளக்கத்தைக் காரணம் காட்டியும் பொருள் தருகிறார். இக்காரணம் எவ்விதத்தில் சாத்தியமென்று தெரியவில்லை. அதற்காக நம் முன்னோர்கள் கல்வியறிவு அற்றவர்கள் என்றுரைக்கவில்லை. பெரும்பாலும் நம் முன்னோர்கள் ஊருணிகளுக்கும் ஊர்களுக்கும் காரணப்பெயர்களே வைத்துள்ளனர். அந்தவகையில் கே.ஆத்தங்குடி எனும் ஊரிலுள்ள குமிலாங்கண்மாய்க்கு ஆசிரியர் இவ்வாறு விளக்கம் தருகிறார். குமிலம் என்றால் பேரொலி, ஆரவாரம், சத்தியம் ஆகிய பொருள்களைக் குறிக்கின்றன தமிழ் அகராதிகள். நீர் சத்தமிகு கண்மாய் என்றே பொதுவாகப் பொருள்கொள்ள இயலுகிறது என்கிறார் (பக். 92-93). இக்காரணம் சாத்தியமன்று, மாறாக அங்குக் குமில மரங்கள் நிறைந்திருக்கலாம். ஆகையால் குமிலங்கண்மாய் எனப் பெயர் பெற்றிருக்கலாம். காரணம் இட்டிசேரி எனும் ஊரிலுள்ள ஊருணிக்கு வன்னி ஊருணி எனப் பெயர். இப்பெயர்பெற அங்கு வன்னி மரங்கள் நிறைந்திருந்ததே காரணம். அவ்வகையில் இக்காரணத்தைப் போலவே, அனைத்து ஊருணிகளும் காரணப்பெயர் பெற்றிருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு.

கல்லல் ஒன்றியம் நீரிடங்களும் பண்பாட்டு நிகழ்வுகளும் எனும் ஐந்தாம் இயலில் மக்களின் வாழ்க்கை முறைகளையும் நீரிடங்களையும் தனித்துப்பார்க்க முடியாது, நிலவுடமைச் சமுதாயத்திற்கு உட்பட்டும் வேளாண்மைக்கு அப்பாற்பட்டும் நீரிடங்கள் மக்களின் வாழ்வியலோடும் தொடர்பு கொண்டிருந்தன என்பதை உணவு உற்பத்தி, மீன் பிடித்தல், மீன்பிடித் திருவிழா, நண்டு, நத்தை பிடித்தல், கிழங்கு எடுத்தல், முளைப்பாரி, ஊருணிப் பொங்கல், கார்த்திகை தீபம், பொங்கல், புனித நீராடல், மஞ்சள் நீராடல், தச்செய்தல், நீர்மாலை எடுத்தல், விளையாட்டு எனப் பல பரிணாமங்களில் நீரிடங்கள் பண்பாட்டோடு தொடர்பு கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

சிறுபகுதியை ஆய்வு எல்லையாக வரையறை செய்துகொண்டு பன்முக நோக்கில் பொருளுரைக்க வேண்டும். அவ்வகையில் இந்நூலுக்கான எல்லை குறித்தும் திட்டமிடல் குறித்தும் ஆசிரியர் தன் சொற்கசிவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்தல் எனும் முயற்சியில் துவங்கி அது இயலாது எனும் முடிவுக்கு வந்தபிறகு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் ஊராட்சி ஒன்றியத்தை மட்டும் கணக்கில் கொண்டு இவ் ஆய்வு நகர்த்தப்பெற்றது. சரி, அதுவாவது நிறைவு பெற்றதா? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். நீர் நிலைகளில் தமிழனின் பண்பாட்டுப் பதிவுகள் தேங்கிக் கிடக்கின்றன என்பது உணரப்பட்டதே தவிர அவற்றை விரிவாக இவ் ஆய்வில் பேச இயலவில்லை. முழுக்க முழுக்க கல்லல் ஊராட்சி ஒன்றிய நீர்நிலைகளை அடையாளப்படுத்தி அப்பெயர்களினூடாக காரண காரியங்களைத் தொடர்புபடுத்திப் பார்க்க முற்பட்டுள்ள சிறு முயற்சியே இந்நூல் என விளம்பும் ஆசிரியரின் இக்கூற்று நிறைகுடம் தழும்பாது என்ற தன்னடக்கத்தை வெளிப்படுத்துகிறது.

சிவகங்கை மாவட்டக் கல்லல் ஒன்றியத்தில் மொத்தம் 44 ஊராட்சிகள் அடங்கியுள்ளன. இந்த 44 ஊராட்சிகளில் மொத்தம் 930 நீரிடங்கள் காணப்பெறுகின்றன. இவற்றுள் கண்மாய், ஊருணி எனும் பெயரிலான நீரிடங்கள் மிகுதியாகவும் அதற்கடுத்த நிலையில் ஏந்தல், தம்பம், குண்டு, தாவு எனும் பெயர்களிலும் நீரிடங்கள் காணப்படுவதாகச் சுட்டும் புள்ளிவிவரங்கள் வருங்கால ஆய்வுக்குத் துணைபுரிவதோடு வரலாற்றுச் சான்றாகவும் அல்லது வரலாற்று ஆவணமாகவும் அமையும்.

நீரிடங்கள் விளைநிலங்களாகவும் வீடுகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றம் பெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களிடமும் மாணாக்கர்களிடமும் நீரிடங்கள் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் நாளைய தலைமுறையினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்றெண்ணி ஆதங்கப்படுவதோடு அந்நீரிடங்களை மீட்க வேண்டி அரசுக்கு அறைகூவலும் விடுகின்றார். இவர் விடும் அறைகூவலைத் தமிழ் படித்தவரும் நாளைய தலைமுறையினரைக் காக்க விரும்புவோரும் தமிழகம் முழுவதும் பரவலாக்கம் செய்வதோடு சுற்றுச்சூழல் அலுவலர்களின் கவனத்திற்கும் கொண்டுசெல்லல் வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே ஆதித் தமிழனின் நாகரிகத்தைத் தாங்கியுள்ள நீரிடங்களைப் பதுகாக்கமுடியும்.

நூலின் இறுதிப்பகுதியாக அமைந்துள்ள பின்னிணைப்புகள் பற்றிக் கூறாமல் இருக்கமுடியாது. ஏனெனில் ஓர் ஆய்வாளன் தன் ஆய்வுக்குத் தேவையான தரவுகளை எந்த அளவிற்குத் தேடித் தொகுத்துள்ளான் என்பதைப் பின்னிணைப்புகள்தான் பறைசாற்றும். அந்தவகையில் இந்நூலுக்குப்பின் கொடுக்கப்பெற்றுள்ள பின்னிணைப்புகள் ம.லோகேஸ்வரனின் கடுமையான களஆய்வு உழைப்பையும் அறிவுசார் புலமையையும் பிரதிபலிக்கின்றன.

பார்வை

முனைவர் ம. லோகேஸ்வரன், நீர்நிலை உருவாக்கத்தில் உடைமைகளும் சாதிகளும் (கல்லல் ஒன்றியம் – சிவகங்கை மாவட்டம்), காவ்யா வெளியீடு, சென்னை, டிசம்பர் 2015.

முனைவர் ந.இராஜேந்திரன்,

தமிழ் – உதவிப்பேராசிரியர்,

மகாராஜா இருபாலர் கலை அறிவியல் கல்லூரி,

பெருந்துறை – 638 052