காலந்தோறும் பல்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றி இலக்கியங்களை ஆய்வு செய்யும் வேளையில், அடுத்த தலைமுறை ஆய்வாளர்க்கும் மாணாக்கர்க்கும் ஆய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை, காணவேண்டிய நுட்பங்களைக் குறித்து அறிவுறுத்திச் செல்ல வேண்டியதும் தேவையான ஒன்றாகின்றது. அவ்வகையில், பழந்தமிழிலக்கிய ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை முன்வைப்பதாக இவ்வுரை அமைகின்றது.

(இக்கட்டுரையைப் படங்களுடன் வாசிக்க கையாவண நூல் (PDF) பார்க்கவும்)

பதிப்பும் மறுபதிப்பும்

மூலப்பாடலும் உரையுமாக அமையும் பழந்தமிழ் இலக்கியங்களுக்குக் காலந்தோறும் புதிய உரைகளும் மறுபதிப்புகளும் தோன்றுவது என்பது அவ்விலக்கியங்களின்மீது சமகாலத்தைச் சேர்ந்தவர் செலுத்தும் ஈடுபாட்டைக் குறிப்பதாக அமையும். முன் தோன்றிய ஒரு நூலை மறுபதிப்புச் செய்தல் எனும் மறுஉற்பத்தி நிகழ்வில் வணிகநோக்கும் இல்லாமல் இல்லை. தமிழ்ப்பணி புரிந்த தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் தமிழக அரசும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கி வருகின்றமையும் மறுபதிப்பு நூல்களின் பெருக்கத்துக்கு ஒரு காரணியாகின்றது.

இத்தகு மறுபதிப்பு நூல்கள் மூலப்பதிப்பை எவ்வாறு சமகாலத்துக்கு அளிக்கின்றன என்பது விவாதிக்கப்பெற வேண்டிய ஒன்றாகின்றது. இம்மறுபதிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுலகில் பரவலாக விவாதம் நடத்தப்பெறுவது தேவையான ஒன்றாகும்.

முதற்பதிப்புமறுபதிப்புக் குளறுபடிகள்

குறிப்பிட்ட ஓர் ஆண்டில் முதற்பதிப்பாக வெளிவந்த நூல் பிற்காலங்களில் மறுபதிப்பாகவோ, திருத்தம் செய்யப்பெற்ற புதிய பதிப்பாகவோ வெளிவரும்போது அந்நூல்களுள் சில நூல்கள் முந்தைய பதிப்பிலிருந்து முரண்பட்ட தரவுகளையும் பிழையான குறிப்புகளையும் இருட்டடிப்புத் தன்மைகளையும் கொண்டு விளங்கும் பாங்கைச் சான்றுகளுடன் விளக்கும் விதமாக இனிவரும் பகுதி அமைகின்றது.

     விவாதம் : ஒன்று

1999 இல் வர்த்தமானன் பதிப்பகம் அறிஞர்குழுவின் துணையுடன் முதன்முதலில் சங்க இலக்கியங்கட்கு உரையெழுதி வெளியிட்டது. 2009 ஆம் ஆண்டில் அந்நூல்களின் மறுபதிப்பை வெளியிட்டது. ஆனால் 2009 ஆம் ஆண்டில் வந்த மறுபதிப்பின் எந்த நூலிலும் முதற்பதிப்புக் குறித்த தகவலும் இல்லை; மறுபதிப்பு வெளிவந்த ஆண்டு விவரமும் இல்லை (2009இல் மறுபதிப்பு நூல்கள் வெளிவந்துள்ளதனை அப்போதைய நாளிதழொன்றில் இப்பதிப்பகத்தார் அளித்துள்ள நூல்விளம்பரத்தின் வழியாகவே அறிந்து கொள்ள முடிகின்றது).

 

1999 – முதற்பதிப்பு (வர்த்தமானன்)

2009(?) (வர்த்தமானன் பதிப்பு)

     விவாதம் : இரண்டு

புலியூர்க்கேசிகனின் கலித்தொகை உரைநூல் முதன்முதலில் 1958 இல் வெளிவந்துள்ளது. இந்நூலின் மறுபதிப்புகள் 1965, 1978 ஆகிய ஆண்டுகளில் பாரி நிலையம்வழி வெளிவந்துள்ளன. 2009 இல் சாரதா பதிப்பகம்வழியும் இவர்தம் கலித்தொகை உரைநூல் வெளிவந்துள்ளது.

“தணந்தனை எனக்கேட்டுத் தவறுஓராது எமக்குநின்

குணங்களைப் பாராட்டும் தோழன்வந்து ஈயான்கொல்”

(கலி.71:17-18) எனும் பாடலடிகளிலுள்ள தோழனை 2009இல் வெளிவந்த புலியூர்க்கேசிகனின் உரைநூல் தலைவியின் தோழன் எனவும் முந்தைய ஆண்டுகளில் வெளிவந்த உரைநூல்கள் தலைவனின் தோழன் எனவும் குறிப்பிடுகின்றதனைக் காண முடிகின்றது. இவ்விடத்து மரபு கருதி ‘தலைவியின் தோழன்’ எனல் பிழை எனக் கொண்டு அப்பதிவு அச்சுப்பிழையே எனும் முடிவுக்கு வரலாம்.

(1958, 1965 – புலியூர்க்கேசிகன் உரைநூல்)

(2009 – புலியூர்க்கேசிகன் உரைநூல்)

விவாதம் : மூன்று

அழுதுஓவா உண்கண்’ (கலி.70:11) எனும் பதிவிலுள்ள “உண்கண்” என்பதற்கான உரை 2009இல் வெளிவந்த உரைநூலில் “எம்மையுண்ணும் கண்கள்” எனவும் முந்தைய ஆண்டுகளில் வெளிவந்த உரைநூல்களில் “எம் மையுண்ணும் கண்கள்” எனவும் இடம்பெற்றுள்ளன.

 

 

 

(2009 – சாரதா பதிப்பகம்)

(1958, 1965 – தேனருவி, பாரி நிலைய வெளியீடுகள்)

2009இல் வெளிவந்த உரைநூலை வாசிக்கும் ஒருவர் இக்குறிப்பை “எம் மையுண்ணும் கண்கள்” எனவும் “எம்மை யுண்ணும் கண்கள்” எனவும் இருவேறாகப் பிரித்துக் குழப்ப நிலையையே அடைவார்.

விவாதம் : நான்கு

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

      ஐயர் யாத்தனர் கரணம் என்ப

எனும் தொல்காப்பியச் சூத்திரம் (தொல்.பொருள்-கற்பு.4) குறிப்பிடக்கூடிய ‘ஐயரை’ 1961இல் பாரி நிலையம்வழி வெளிவந்த புலியூர்க்கேசிகனின் உரைநூல் தமிழகச் சான்றோர் (தலைமையுடையோர்) எனக் குறிப்பிட,

2012இல் சாரதா பதிப்பகம்வழி வெளிவந்த புலியூர்க்கேசிகனின் தொல்காப்பியம் முழுமைக்குமான உரைநூலில்‘சான்றோர் (தலைமையுடையோர்)’ எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது; தமிழர் எனும் அடையாளம் இருட்டடிப்புச் செய்யப் பெற்றுள்ளது.

17.4.1992இல் புலியூர்க்கேசிகன் மறைந்து விட்டார் என்பதும் இவ்விடம் கவனிக்கப்பெற வேண்டிய ஒன்று.

தமிழாய்வு செழுமை பெற

இயன்றவரை முதற்பதிப்புகளை அணுகுவதும், ஆசிரியர் உயிருள்ள காலங்களில் வெளிவந்துள்ள பதிப்பு, உரைகளுக்கு முதன்மை அளிப்பதும் கழிவு விலைக்குக் கிடைக்கப்பெறும் ‘பதிப்பு நெறிமுறை’ சிறிதும் பின்பற்றப்பெறாத நூல்கழிவுகளைப் புறந்தள்ளுதலும் ஆய்வாளர்தம் நோக்கங்களாக அமையும்போது தமிழாய்வும், ஆய்வாளர்தம் ஆய்வுப்போக்கும் மேலும் செழுமை பெறும் என்பது திண்ணம்!

துணைநின்றவை

  • கௌமாரீஸ்வரி எஸ்.(பதி.), 2009(மு.ப.), கலித்தொகை மூலமும் புலியூர்க்கேசிகன் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை.
  • …………………,(பதி.), 2012(மு.ப.), தொல்காப்பியம்: எழுத்து – சொல் – பொருள் (புலியூர்க்கேசிகன் உரை), சாரதா பதிப்பகம், சென்னை.
  • புலியூர்க்கேசிகன் (உரை.), 1958(மு.ப.), கலித்தொகை தெளிவான உரையுடன், தேனருவிப் பதிப்பகம், தியாகராய நகரம், சென்னை.
  • ………………,1965(இ.ப.), கலித்தொகை தெளிவுரை, பாரி நிலையம், பிராட்வே, சென்னை.
  • ………………,1978(நா.ப.) கலித்தொகை தெளிவுரை, பாரி நிலையம், பிராட்வே, சென்னை.
  • மாணிக்கம் அ. (உரை.), 1999(மு.ப.), சங்க இலக்கியங்கள் மூலமும் தெளிவுரையும் – கலித்தொகை, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
  • மாணிக்கம் அ. (உரை.), 2009(?), சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும் – கலித்தொகை, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.

 மு.முனீஸ் மூர்த்தி

தமிழ் – உதவிப் பேராசிரியர்

பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி)

திருச்சிராப்பள்ளி – 17.