பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள ‘ஆண்டலை’ எனும் உயிரினத்தைப் பற்றி விளக்கம் தரும் உரையாசிரியர்கள் ‘ஆந்தை’ எனவும் ‘கோழி’ எனவும் (குழப்பத்துக்குள் நுழைய விரும்பாமல்) ‘ஆண்டலைப்புள்’ எனவும் குறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஆண்டலை எனும்  உயிர் எவ்வினத்தைச் சேர்ந்தது என்பதை நிறுவும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

ஆண்டலை : இலக்கியப் பதிவுகள்                                                                                  ஆண்டலை குறித்த இலக்கியப் பதிவுகளாகப் பின்வருவன அமைகின்றன.

“பசும்பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின்

ஆண்டலை வழங்கும் கானுணங்கு கடுநெறி” (பதிற்.25:7-8)

“ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகனே” (கலி.94:6)

“சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்

புலவூண் பொருந்திய குராலின் குரலும்

ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும்” (மணி.6 : 75-77)

“அழுகுரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்” (பட்டினப்.258)

“மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்

ஆண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர” (முருகு.226-27)

“கூகையோடு ஆண்டலை பாட ஆந்தை

கோடதன் மேற்குதித்து ஓட…” (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்-3)

“ஊமைக் கூகையும் ஓரியும் உறழ்உறழ் கதிக்கும்

யாமத் தீண்டி வந்த ஆண்டலை மாண்பில அழைக்கும்” (நீல.தரும.29)

“நீண்டபலி பீடத்தில் அரிந்து வைத்த

நெடுங்குஞ்சிச் சிரத்தைத் தன்னினம் என்றெண்ணி

ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ” (கலிங்கத்.4:16)

ஆண்டலையின் இயல்புகள்

மேற்குறித்துள்ள பாடற்குறிப்புகளின்வழி ஆண்டலையின் இயல்புகளாகப் பின்வருவனவற்றை வருவிக்க முடிகின்றது.

 • ஆண்டலை கொடிய காட்டில் வாழும் உயிரி.
 • இது பிணங்களை உணவாகக் கொள்ளும் உயிரி.
 • கூகையோடு சேர்ந்து ஆண்டலை ஒலியெழுப்பும்.
 • இது யாமத்திலும் ஒலியெழுப்பும் உயிரி.
 • பலிபீடத்தில் நேர்த்திக்கடனாக அரிந்து வைக்கப்படும் வீரர்களின் தலையைத், தன் இனத்தைச் சேர்ந்த உயிரியின் தலையோ என ஐயுற்றுப் பார்ப்பது. எனவே, இது ஆணின் தலை போன்ற தலையுடைய உயிரி.

ஆண்டலை : இலக்கியப் பதிவும் உரைக்குறிப்பும்

திருமுருகாற்றுப்படையில் இடம்பெறும் ‘ஆண்டலை’ பற்றிய குறிப்புக்கு ஓர் உரையாசிரியர் கோழி என்றே மயங்கிப் பொருள் கூறினார் என்பார் பி.எல்.சாமி (1976:303). முருகாற்றுப்படையில் இடம்பெறும் குறிப்பானது ‘ஆண்டலைக் கொடி’ என அமைவதால் (227) ‘கோழிக் கொடியோன்’ என வழங்கப்பெறும் முருகப் பெருமானின் கொடியை இக்குறிப்பு அடையாளப்படுத்துவதாக எண்ணி அவ்வுரைகாரர் ஆண்டலைக்கொடி என்பதற்குக் கோழிக்கொடி எனப் பொருள் கொண்டிருக்கலாம்.

“ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகனே” எனும் கலிப்பாடலடியில் இடம்பெற்றுள்ள ஆண்டலைக்குப் பொருள் கூற வந்த உரையாசிரியர்களுள் சிலர்,

 • ஆண்டலைப்புள் (நச்சினார்க்கினியர், புலியூர்க்கேசிகன், சுப.அண்ணாமலை, ச.வே.சுப்பிரமணியன்)
 • ஆந்தை (பொ.வே.சோமசுந்தரனார், அ.மாணிக்கம், தமிழமுதன்)
 • கோழி (இரா.சரவணமுத்து)

என முத்திறப்படப் பொருள் கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

பட்டினப்பாலையில் இடம்பெறும் ஆண்டலை பற்றிக் குறிப்பிடும் உரையாசிரியர் ரா.இராகவையங்கார்,

கூகையும் ஆண்டலையும் இராப்புட்கள். நரி, கூகை, ஆண்டலை, பேய் இவை கூறியதனால் முன் யாழ் ஓர்த்தது இரவில் என்பது தெளியக் கிடத்தல் காண்க… ஓரி, கூகை, ஆண்டலை, கூளி இவையும் பிணந்தின்பனவே யாம் (2013:206-07)

என்கிறார். பறவைநூலாராகிய க.ரத்னம் ஆண்டலையை ‘HAWK – OWL BROWN’ என ஆந்தை இனத்தைச் சேர்ந்த ஓர் உயிரியாகவே அடையாளப்படுத்துகின்றார் (1998:46).

உரையாசிரியர்களுள் ஒரு சிலர் ஆண்டலையைக் கோழி எனப் பொருள் கொள்வதற்கு நிகண்டுக் குறிப்பும் காரணியாகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்று.

குருகுகால் ஆயுதம் போர்க்குக்குடம் ஆண்டலைப்புள்

பெருகுவா ரணம்என்றைந் தும்பேசிய கோழியாமே

(விலங்கின் பெயர்த்தொகுதி – 58)

[கோழியின் பெயர் = குருகு, காலாயுதம், குக்குடம், ஆண்டலைப்புள், வாரணம்]

எனும் சூடாமணி நிகண்டுக் குறிப்பை(1938:72) உள்வாங்கிச் சங்கப்பாக்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களுள் ஒருசிலர் ‘ஆண்டலைப்புள்’ என்பதற்குக் ‘கோழி’ எனப் பொருள் கொண்டிருத்தல் வேண்டும்.

கூகைக்கோழி

கூகை எனும் சிறப்புப்பெயரையும் கோழி எனும் பொதுப்பெயரையும் உள்ளடக்கிக் ‘கூகைக்கோழி’ எனும் புள்ளினப் பெயர் குறித்த பதிவு பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்று.

கூகைக் கோழி வாகைப் பறந்தலை

… ஆர்ப்பினும் பெரிதே                (குறுந்.393:3)

முதுமரப் பொத்திற் கதுமென இயம்பும்

கூகைக் கோழி …                     (புறம்.364:12)

ஆகிய இரு பதிவுகளில் புறநானூற்றுப் பதிவு கூகைக்கோழியின் இருப்பிடத்தைச் சுட்டி நிற்கின்றது. அதாவது, கூகைக்கோழி முதுமரப் பொந்தில் இருந்துகொண்டு ஒலியெழுப்பும் என்கிறது. இங்கே கூகைக்கோழியைக் காட்டுக்கோழியாகக் கொள்ளலாமெனில், காட்டுக்கோழி பொந்தில் வாழும் உயிரி அல்ல.  இதன் பெயரிடுமுறை பற்றிக் குறிப்பிடும் பி.எல்.சாமி, ‘காட்டுக்கோழியைப் போலவே கூவும் வேறொரு வகை ஆந்தையும் உள்ளது. இந்த ஆந்தை காட்டுக்கோழி கூவுவது போலக் கூவும். இந்த வகை ஆந்தை காட்டுக்கோழி வாழும் சூழலில் இயற்கையில் காணப்படும். இதைப் பறவைநூலார் ‘Barred Jungle Owlet’ என்றழைப்பர். இந்த ஆந்தையையே பெரும்பாலும் கூகைக்கோழி என்று அதனுடைய குரலில் காணப்படும் ஒற்றுமை நோக்கிச் சங்ககாலத்தில் அழைத்திருக்கலாம். இந்த ஆந்தையைத் தமிழில் சின்ன ஆந்தை என்றும் தெலுங்கில் அடவிப் பகடிகண்டெ என்றும் அழைப்பர். இந்தி மொழியில் காட்டு ஆந்தை என்ற பொருளில் பெயரிட்டு அழைக்கின்றனர். காட்டில் கோழி போல் கூவுவதால் கூகைக்கோழி என்றனர்’ என்கிறார் (1976:307).

எனவே, ஆண்டலைப் பறவையை ஆந்தை இனத்தைச் சேர்ந்த உயிரியாகக் கொள்வதே ஏற்புடையது. ஆணின் தலை போன்று உள்ள ஆந்தையினத்தைச் சேர்ந்த ஒரு பறவையை, அதன் வடிவ இயல்பு நோக்கி ஆண்டலைப் பறவை எனப் பழந்தமிழர் காரணப்பெயரிட்டு அழைத்துள்ள முறைமை பெருமிதம் கொள்ளத்தக்கது.

துணைநின்றவை

 • இராகவையங்கார் ரா., 2013, பெரும்பாணாற்றுப்படை பட்டினப்பாலை – ஆராய்ச்சி உரை, சாரதா பதிப்பகம், சென்னை.
 • சாமி பி.எல்., 1976, சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
 • தாமோதரம் பிள்ளை சி.வை. (பதி.), 1887, நல்லந்துவனார் கலித்தொகை, ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை.
 • ரத்னம் க., 1998, தமிழில் பறவைப் பெயர்கள், உலகம் வெளியீடு, சூலூர், கோவை.
 • ……………………………….., 1938, சூடாமணி நிகண்டு மூலமும் உரையும், திருமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை.
 • …………………………………, 2014 (எ.ப.), நா.கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, சாரதா பதிப்பகம், சென்னை.
 • THOMAS LEHMANN AND THOMAS MALTEN (ED.), 1993, A WORD INDEX FOR CANkAM LITERATURE, INSTITUTE OF ASIAN STUDIES, CHENNAI.

மு.முனீஸ் மூர்த்தி

தமிழ் – உதவிப்பேராசிரியர்

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 17.

[email protected]