ஆலயங்களில் ஐந்தின் பங்கு என்ற தலைப்பில் ஐந்து என்பது ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் ஆகும். ஆதிகாலத்தில் மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் காலப்போக்கில் மிருகங்களை நண்பனாக்கி, பிறகு தெய்வமாக்கி வணங்கத் தொடங்கினான். நாகரிகத்தின் வளர்ச்சியால் கோயில்கள் உருவாகத் தொடங்கின. கோயில்கள் மூலம் இயல் இசை நாடகம் மட்டுமல்லாமல் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை மாபெரும் வளர்ச்சி பெற்றது. சங்ககாலம் பல்லவர்காலம் சேர, சோழ, பாண்டியர் காலம் நாயக்கர்காலம் என அத்துனை மன்னர்கள் காலத்திலும் கட்டிய ஆலயங்களில் விலங்குகளின் சிற்பம் அதிக அளவில் காணக்கிடைக்கின்றன. பாம்பைப் பார்த்துப் பயந்தவன் அதற்குச் சிலைகள் வைத்தான். பல்லியைப் பார்த்து சகுனம் பார்த்தவன் பாவுக்கல்லில் சிலை வடித்தான். எருமையை எமனுக்கு வாகனம் ஆக்கினான். மயிலைச் சுப்ரமணியனுக்கு வாகனமாக்கினான். எலியை விநாயகருக்கும் புலியை ஐயப்பனுக்கும் சிங்கத்தை அம்மனுக்கும் யானையை இந்திரனுக்கும் பசுவை பரமனுக்கும் கழுகை கருடனாக்கி பெருமாளுக்கும் வாகனமாக்கினான். குரங்கை அனுமனாக்கினான். உலகின் பண்டைய பண்பாட்டினைத் தாங்கி நிற்கின்ற முக்கிய நாகரிகங்களான எகிப்து மெசபடோமியா சீன நாகரிகங்களுக்கு இணையான நாகரிகமாகச் சிந்துசமவெளி நாகரிகத்தில் கிடைத்துள்ள நாணயங்கள் சின்னங்கள் சிலைகள் அனைத்திலும் விலங்குகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளன. சிந்துசமவெளி நாகரிகம் நகரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு மாறாக வேதகாலப் பண்பாடு கிராமம் மேய்ச்சல் நிலம் இவற்றைச் சார்ந்திருந்தது. சிந்துவெளி இலச்சினைகளில் பல விலங்கினங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஆனால் குதிரை மட்டும் அவற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலச்சினைகளின் சித்திரப்பதிவுகள் வெளிப்படுத்தும் சிந்து சமயம் என்பது எருமைக்கொம்பு அணிந்த ஆண்தெய்வம், தாய்த்தெய்வங்கள், அரசமரம், பாம்பு மற்றும் லிங்கச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இத்தகைய வழிபாட்டு முறைகள் இந்து சமயத்தில் ஆதிக்குடிகளின் வழிப் பெறப்பட்டவை. சிந்து சமயம் ரிக்வேதம் காட்டும் சமயத்திற்கு முற்றிலும் அன்னியமானது. இப்பகுதிகளில் கிடைக்கும் முத்திரைகளில் காட்டெருமையும் திமிலுடைய எருதும் மீன்களின் சின்னமும் கிடைத்துள்ளன. ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றிலும் நிலத்திற்குத் தகுந்த இயற்கைச் சூழலில் வாழ்ந்த விலங்குகள் பற்றிச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைத்துள்ளன. மனித உடலும் விலங்குகளின் தலையும் அல்லது மிருக உடலும் மனிதத் தலையும் கலந்து அதிகமான உருவங்கள் கிடைக்கின்றன.

நந்திகேஸ்வரர் – மனித உடல் பசுவின் தலை

வராகர்        – மனித உடல் பன்றியின் தலை

நரசிம்மர்      – மனித உடல் சிங்கத்தின் தலை

கருடர்        – மனித உடல் பருந்து முகம்

அனுமான்      – மனித உடல் குரங்கின் தலை

வராகி – மனித உடல் பன்றியின் தலை

கிம்புருடர்     – மனித உடல் குதிரையின் தலை

மச்சவதாரம்    – மீன் உடல் மனிதத் தலை

கூர்மவதாரம்    – ஆமையின் உடல் மனிதத் தலை

ராகு கேது     – பாம்பின் உடல்  மனிதத் தலை

கின்னரர்      – பறவையின் உடல் மனிதத் தலை

காமதேனு – பசுவின் உடல் மனிதத் தலை

 1. மச்ச அவதாரம் இவ்வுலகில் தோன்றிய முதல் உயிரினம். கடலில் தோன்றிய unicellular   உயிரினமாகிய கடல் உயிரினம்.
 2. கூர்ம அவதாரம் – ஊர்வன அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சி. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்.
 3. வராக அவதாரம் – mammals, பாலூட்டி உயிரினம். பரிணாம வளர்ச்சியின் அடுத்தக்கட்ட வளர்ச்சி விலங்கு உயிரினம்
 4. நரசிம்ம அவதாரம் – பாதி மிருகம் பாதி மனிதன் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக்கட்டம்.
 5. வாமன அவதாரம் – குள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன்.
 6. பரசுராம அவதாரம் – மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சி அவனை வேட்டையாட வேல் கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.
 7. ராம அவதாரம் – விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனைத் தாய் தந்தை மக்கள் மனைவி சமூகம் என்ற சமுதாய மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தான்.
 8. பலராம அவதாரம் – வேட்டையாடி ஒரு சமூகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான்.
 9. கிருஷ்ண அவதாரம் – சமூகம் விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான் வாழ்க்கை நெறிமுறைகள் தர்மம் அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தான்.

மாமல்லபுரச் சிற்பங்களில்

மாமல்லபுரம் சாளுவான் குப்பம் எனுமிடத்தில் புலிக்குகை உள்ளது. தெய்வ உருவங்களின்றி முற்றுப்பெறாத நிலையில் காணப்படுவதும் யாளித் தலைகள் சூழ வியத்தகு முறையில் அமைந்த செவ்வக வடிவான மண்டபம் பெற்றிருப்பதும் கல்வெட்டு ஏதுமின்றியிருப்பதும் தேய்வுற்ற நிலையில் தெய்வ உருவங்கள் உள்ளன. அம்பாரிகளைக் கொண்ட யானைகளையும் குதிரைகளையும் கொண்டுள்ளன. திருமூர்த்தி குடைவரையின் பின்புறம் நான்கு யானைகள் நீராடி மகிழும் எழில்மிகு காட்சி செதுக்கப்பட்டுள்ளது. ஒரு யானை பேருருவில் காட்டப்பட்டுள்ளது. அதன்கீழ் இரு யானைகளும்  மேலே பின்புறம் ஒரு யானைத் தலை மட்டும் காணப்படுகின்றன. இச்சிற்பத்தொகுதி அர்ச்சுனன் தபசு சிற்பத்தொகுதி யானைக் கூட்டத்தை ஒத்துள்ளது. இதில் யானை ஒன்று ஏறக்குறைய தலைகீழாக நின்று துதிக்கையின் துணையின்றி வாயால் நீர்பருகும் யானை பொரிய அர்ச்சுனன் தபசு யானைக்கூட்டத்தில் இடம்பெறவில்லை. பொதுவாக யானை குறிப்பிட்ட வயது வரை துதிக்கையால் நீர் அருந்தாமல் வாயால் நேரடியாக உறிஞ்சும். இதனை ஆராய்ந்து சிற்பி தனது படைப்பில் காட்டியிருப்பது வியப்பான ஒன்றுதான். அர்ச்சுனன் தபசுக் காட்சியில் கிட்டத்தட்ட அனைத்து வகையான மிருகங்களும் இயற்கை எழிலுடனும் கலை நுணுக்கத்துடனும் செதுக்கப்பட்டுள்ளன. யானைகள் – 14 ; யாளிகள்-சிங்கங்கள் – 16; வானரகங்கள் – 4; பூனை – 1 ;மான்கள் – 9; ஆடுகள் – 2; பன்றி – 1; முயல் – 1; உடும்பு – 1; ஆமைகள் – 2; அன்னங்கள் – 20; கோழிகள் பருந்து நாரைகள் – 2; வாத்து – 1; மயில்கள் – 5; எலிகள் – 13 ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. நாகராசன் சிலைகள் மேல்பகுதி மனித உருவிலும் கீழ்பகுதி பாம்பு வடிவிலும் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஒருதலை, மூன்றுதலை, ஐந்துதலை நாகங்கள் காணப்படுகின்றன. கின்னரர் என்போர் தேவகனங்கள் பதினெட்டனுள் ஒருகனத்தினர். இவர்கள் குதிரை முகம் மனித உடலும் உடையவர்கள். நான்முகனின் பிரதிபிம்பத்தில் பிறந்தவர்கள். கிம் – நரர் என்பது மனித வடிவமுடையவர் என்னும் பொருளில் கின்னரர்என வழங்கப்படுகிறது. இவர்கள் குச்சிதநரர் எனவும் வழங்கப்பெறுவர். விகாரமடைந்த மனித உருவங்கள் கொண்டவரென்பது குச்சிதநரர் என்பதன் பொருளாகும். ஆண் பெண் இணைந்த கின்னரர்கின்னர மிதுனம் எனப்படுவர். சிற்ப நூல்கள் கின்னருக்கும் கிம்புருடருக்குமுள்ள உருவ வேறுபாடுகளை விளக்குகின்றன. மனித உடலும் குதிரை முகமும் இருந்தால் கிம்புருடர் எனவும் மனிதமுகமும் பறவையின் கால்களும் அமையப் பெற்றிருந்தால் கின்னரர்எனவும் கூறுவர். யானைகள் கூட்டமொன்று கங்கையாற்றில் நீரருந்தியும் நீந்தி விளையாடியும் மகிழ்கின்ற காட்சி அதிஅற்புதமானது. இக்கூட்டத்தில் பத்து யானைகள் உள்ளன. இரு யானைகள் பேருருவத்துடன் முன்னிற்க ஏனைய தூரம் புலப்படும் வண்ணம் பின்புறமும்  தொலைவிலும் நிற்கின்றன. முன் நிற்கும் யானையே கூட்டத்தின் தலைவனாக எண்ணத்தக்கது. அது பெரிய தந்தங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது தன் நீண்ட துதிக்கையினால் நீரினை உறிஞ்சிய வண்ணம் நிற்கின்றது. அதன் முன்னங்கால்களுக்கும் துதிக்கைக்கும் ஊடாக தொலைவில் தெரியும் வண்ணம் மற்றொரு யானையும் நீரினை உறிஞ்சிகிறது. பெரிய யானையின் அடிவயிற்று ஊடாகப் பார்க்கும்போது தொலைவில் மூன்று யானைகள் தென்படுகின்றன. அவற்றுள் முன்னுள்ள யானை நீரிலோ அல்லது கரையிலோ மண்டியிட்டு நீரினைப் பருகத் துதிக்கையை வளைக்க எத்தனிக்கிறது. பின்னுள்ள யானை முன்னுள்ள யானையின் முதுகுப்புறமாகத் தலைஉயர்த்தி உறிஞ்சிய நீரை வாயினுள் பாய்ச்சிக்கொள்ள துதிக்கையைக் கொண்டு செல்கிறது. பாலருந்தும் இரண்டு சிங்கங்கள் உட்பட பதினான்கு சிங்கங்கள் உள்ளன. இவற்றுள் சில நிறைந்த பிடாரிமுடி கொண்ட ஆண் சிங்கங்களாகவும் ஏனைய சிங்கங்கள் பெண் சிங்கங்களாகவும் காட்டப்பெற்றுள்ளன. குரங்குகள் இடதுப்புறப் பாறையில் இரண்டு வலதுப்புறப் பாறையில் இரண்டுமாக நான்கு குரங்குகள் காட்டப்பட்டுள்ளன. அடர்ந்த முடியுடன் குரங்குகள் காட்டப்பட்டுள்ளன. அடர்ந்த முடி கொண்ட குரங்கு கன்னத்தில் கை வைத்து மிகநேர்த்தியுடன் வடிக்கப்பட்டுள்ளன. மான்கள்  இணை ஒன்று மேல்நோக்கிய காதுகளுடனும் மூன்று சிறு கிளைகளைக் கொண்ட கொம்புகளுடனும் காட்டப்பட்டுள்ளது. பக்கப்பார்வையாக காட்டப்பட்டுள்ளதால் ஒரு கொம்பு மட்டுமே காட்டப்பட்டுள்ளது. வயிறு சற்றுப் புடைப்புடன் காணப்படுகிறது. மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் பன்றியின் உருவம் தனியே செதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் அனைத்திலும் பசுக்களின் உருவம் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது. கடவுள்களையும் விலங்குகளையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இரண்டும் இணைந்தே காணப்படுகிறது. ஆலயங்களில் ஏதாவது ஒரு வடிவத்தில் விலங்குகள் அமைந்துள்ளன.

ஆலயங்களில் விலங்குச் சிற்பங்கள்

ஆலயங்களில் வரக்கூடிய உபபீடம் கண்டம் அதிஸ்டானம் பாதம் வியாழ வாரிகள் கொடுங்கை கபோதகம் விமானம் ஆகிய அனைத்து உறுப்புகளிலும் விலங்குகளின் உருவத்தைப் பயன்படுத்தியுள்ளனர். யாழி என்ற உருவத்தை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர். சேர சோழ பாண்டியர் பல்லவர் நாயக்கர் என அத்துனை மன்னர் ஆட்சி காலத்திலும் இந்த யாழி உருவத்தைக் காணமுடிகிறது. யாழி உருவம் சிங்கத்தின் உடலும் புலியின் நகங்களும் யானையின் துதிக்கையும் அமைந்திருக்கும். இதில் துதிக்கையில்லாமல் சிங்கத்தின் முகம் மட்டும் உள்ள யாழிகளும் உண்டு. இதேபோன்று வித்தியாசமான உருவம் கொண்ட மகரம் என்றொரு மிருகம் உள்ளது. மீனின் உடலும் யானையின் துதிக்கையும் சிங்கத்தின் கால்களும் குரங்கின் கண்களும் பன்றியின் காதுகளும் கோரைப்பற்களும் பறவையின் இறக்கையும் பல்வகை இலை தழை கொடிகள் கொண்ட வாலும் உடைய ஓர் உருவம். ரிஷபக் குஞ்சரம் காளையும் யானையும் இணைந்து அமைந்த கற்பனை கலந்த ஒரு சிறப்பான உருவம். தாராசுரத்தில் அமைந்துள்ளது. இன்னும் பல கோயில்களில் பார்க்கமுடிகிறது. இது மட்டுமல்லாது விலங்குகள் தனி உருவச்சிலைகளாகவும் அமைந்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் பன்றியின் உருவம் கர்ப்பகிரகத்தைச் சுற்றி வரும் பாதையில் நீர் தொட்டியின் நடுவே அமைந்துள்ளது. காளையின் உருவம் சுற்றுப்புறச் சுவாரில் நீண்ட வாரிசையாக அமைந்துள்ளது. தெற்குப்பக்கம் சிங்கம் ஒன்று உள்ளது. அதன் மையப்பகுதியில் மகிஷமர்த்தினி சிலையும் அதன் தொடை மீது வீரனின் அமர்ந்த சிலையும் உள்ளது. சிங்கத்தின் அருகில் மான்ஒன்று அமர்ந்திருக்கிறது. ஆனால் அதன் தலை வெட்டுண்டு தனியே கிடக்கிறது. மான் மிகவும் உயிர்ப்புடன் வடிக்கப்பட்டுள்ளது. பஞ்சபாண்டவர் ரதம் என்று அழைக்கப்படுகின்ற கோயில்களுக்கு அருகே யானை சிங்கம் மற்றும் காளையின் தனி உருவச்சிலைகள் மிக அழகாக வடிக்கப்பட்டிருக்கும். பொதுவாக ஆலயங்கள் அனைத்திலும் கர்ப்பகிரகத்தின் முன்பாக அந்தெந்த தெய்வங்களின் வாகனங்கள் மூலவரை நோக்கி அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கும்.

சிவனுக்கு முன் காளை

பெருமாளுக்கு முன் கருடன்

அம்பாளுக்கு முன் சிங்கம்

முருகனுக்கு முன் மயில்

விநாயகருக்கு முன் மூஷிகம்

இவ்வாறு அந்தந்தத் தெய்வங்களின் வாகனங்கள் அமைந்திருக்கும். இது மட்டுமல்லாது திருவிழாக் காலங்களில் மூலவருக்குப் பதிலாக உற்சவர் திருஉருவம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும். அவ்வாறு எடுத்துச் செல்லும்போது வாகனங்களாக விலங்குகள் மரத்தினாலோ அல்லது தங்கம் வெள்ளி தாமிரம் போன்ற உலேகாத்தினாலோ செய்யப்பட்டிருக்கும் சிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. கொடிமரத்தின் மேலே சிறிய உருவமாகவும் அவரவரர் வாகனமாகிய விலங்குகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு தெய்வ சிலைகளின் கைகளிலும் விலங்குகள் ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அஜந்தா, அமராவதி, காஞ்சி, சித்தன்னவாசல், நார்த்தாமலை, பொன்செய்யும்வயல், அய்யம்பேட்டை, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், திருவையாறு, திருக்குறுங்குடி,  மதுரை மீனாட்சி ஆகிய கோயில்களிலும் விலங்குகள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் ஓவியத்தில்

தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயிலில் தெற்கு உட்சுவரின் தெற்கு நோக்கிய ஓவியம் பெரிய கோயிலின் தென்பகுதியில் விமானத்தின் மாடத் தெய்வமாக விளங்கும் ஆலமர் செல்வருக்கு அடுத்துள்ள பெரிய சாளரத்திற்கு இரும்பு ஏணியின் வழியாகச் சென்றால் அமர்ந்த நிலையில் உள்ள அகோரமூர்த்தியின் நெடிய சிற்பத்தை அடுத்த உட்புறச் சுவரில் தெற்குப் பகுதியில் ஓவியம் காணப்படுகிறது.

இவ்ஓவியத்தில் அகத்தியர் போன்ற உருவமும் அவர் பின்புறம் ஆலமரமும் அதன் மீது குரங்குகளும் பறவைகளும் வியப்புடன் அங்கும் இங்கும் ஓடுவது போல் காட்சியளிக்கின்றன. காட்டுப்பன்றி மான் யானைக்கூட்டம் ஆகியவை பாங்குடன் இவ்ஓவியத்தில் காட்சியளிக்கின்றன. யானைகளில் ஒன்று மரக்கிளையை ஒடிக்கின்ற காட்சி அருமையாக உள்ளது. மற்றொரு யானை தன் துதிக்கையால் மரக்கிளையைத் தூக்கியவாறு மலைமேல் ஏறுகின்ற காட்சி அருமையாக உள்ளது. சிங்கங்கள் இரண்டு வேட்டையிடக் காத்திருக்கிறது. சிறுத்தைப்புலியும் இங்கு இடம்பெற்றுள்ளது. படம் எடுக்கும் பாம்பைக் கண்டு மிரளும் குரங்கும் தன் தன் தாயின் மடியில் அமர்ந்துள்ள குரங்கும் தன் கண்ணை அகல விரித்து விழிக்கின்ற ஆந்தையும் மரக்கிளைகளில் காணப்படும் மயில்கள் அணில், மான் அமர்ந்திருக்கிறது. முனிவருக்கு அருகில் பூனை ஒன்றும் அமர்ந்துள்ளது. பைரவர் நின்ற உருவமும் அவர் அருகில் அவரது வாகனமான நாயும் உள்ளன. இது மட்டமல்லாது பாறை ஓவியங்களில் அதிக அளவு விலங்கு உருவம் காணப்படுகின்றன. குதிரை மீது அமர்ந்தும் யானை மீது அமர்ந்தும் வேல் கொண்டு தாக்குவது போன்றும்  உள்ள ஓவியங்கள் தென்னகத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆனால் வட இந்தியாவில் மனிதர்கள் ஈட்டி எறிவேல் எறிபடை போன்றவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடுவது போன்று பல காட்சிகள் இடம்பெறுகின்றன. பொதுவான இந்தியக் குகை ஓவியங்களில் இவ்வகை ஓவியங்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. பாறை ஓவியங்களில் குதிரை அதிக அளவில் பெறுவது சிறப்பாகும்.போர்க் காட்சிகளில் குதிரை இடம்பெறுகின்றது. பாறை ஓவியங்களின் காலத்தினைக் கணிக்க குதிரை உதவுகின்றது. உலகின் பல்வேறு இடங்களில் குதிரையின் ஓவியங்கள் உள்ளன.பிம்பெட்கா சிங்கண்பூர் பிச்மாரி போன்ற இடங்களில் காணப்படும் ஓவியங்கள் சிறப்புடையன. சிங்கண்பூரில் காட்டெருதும் கலைமானும் வேட்டையாடுதல் போன்றுள்ளதும் ஈட்டி எறிவேல் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி வன விலங்குகளைத் தாக்குகின்ற காட்சிகளும் நடன நிகழ்ச்சிகளும் சிறப்புடையன.இந்தியப் பாறை ஓவியங்களில் சிறப்புடன் திகழ்கின்ற மான் வேட்டைக் காட்சியைச் சோன் பள்ளத்தாக்கிலுள்ள விக்குனியா பாறை உறைவிடங்களிலும் தென்னாட்டிலும் காணலாம். கோர்மங்கர்  எனும் இடத்தில் காணப்படும் ஓவியங்களில் ஆறு மனிதர்கள் ஒன்று சேர்ந்து காண்டாமிருகத்தை வேட்டையாடுவது போன்ற காட்சி சிறப்புடையதாகும். இவ்வகை ஓவியங்கள் சிங்கண்பூர் ஹாரின் ஹானா ரூப்பில் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் ஆந்திரம் கர்நாடகம் தமிழகம் கேரளம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காட்டெருதுகளின் சண்டை யானைகள் பறவைகள் திமிலும் கொம்புமுள்ள எருதுகள் ஆகிய ஓவியங்கள் பல்லாரி மாவட்டத்ரிலுள்ள குப்கல்லு என்னுமிடத்தில் உள்ளன. நீர் வாழ்கின்ற சில பிராணிகளின் வடிவங்கள் இடம் பெறுகின்றன. குறிப்பாக மீன் வடிவத்தையும் முதலையின் வடிவத்தையும் காணமுடிகின்றது. சிறுமுலை ஓவியத்தில் இவ்வினத்து ஓவியத்தினைக் காணலாம். பாறை ஓவியங்களில் விலங்கினங்களை வேட்டையாடும் நிலையில் நாய் வடிவம் இடம்பெறுகின்றது. மயிலின் வடிவமும் பாறை ஓவியத்தில் இடம்பெறுகின்றது. சீகூர், சிறுமலை, மல்லசமுத்திரம் ஆகிய இடங்களில் இவற்றைக் காணலாம். பாறை ஓவியங்களில் அதிகம் இடம்பெறுபவை விலங்கின வடிவங்களே. சில பாறை ஓவியங்களில் அப்பகுதியில் காணப்படும் விலங்கினங்களின் உருவம் இடம்பெறும். அத்தகைய ஓவியத்தைக் கொண்டு அப்பகுதியில் காணப்படும் விலங்கினங்களை நாம் அறியமுடிகிறது. சிறுமலை ஓவியத்தில் பன்றி இடம்பெறுகின்றது. மலைசார்ந்த பகுதிகளில் முள்ளம்பன்றி எனும் வகையைச் சார்ந்த விலங்குகள் அதிகம் வாழும்.

விலங்குகளைப் பாதுகாக்க இன்றைக்குப் பல தன்னார்வ அமைப்புகள் இருந்தாலும் 5000 வருடங்களுக்கு முன்னரே நம் முன்னோர்கள் அதனோடு வாழ்ந்தும் பாதுகாத்தும் வந்துள்ளார்கள் என்பது உண்மை. வெளிநாட்டில் இருந்து ஏதோ ஒரு அமைப்பு சொல்லித் தர வேண்டிய அவசியம் தமிழருக்கு இல்லை. நம் கலாச்சாரம் பண்பாடு கலை இலக்கியம் மொழி ஆகியவற்றின் தொன்மைகளையும் பெருமைகளையும் அடுத்த தலைமுறையினருக்குத் தொடர்ந்து எடுத்துரைப்பதின் மூலமே கலாச்சாரச் சீரழிவிலிருந்து  நம் இனத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பார்வை நூல்கள்

 1. பாறை ஓவியங்கள் -இராசு.பவுன்துறை மெய்யப்பன் பதிப்பகம்
 2. அர்ச்சுனன் தபசு – சா.பாலுசாமி  காலச்சுவடு பதிப்பகம் டிசம்பர் – 2009
 3. கலையியல் ரசனைக் கட்டுரைகள் – குடவாயில் பாலசுப்பரமணியன் அகரம் பதிப்பகம் – 2014
 4. ஸ்ரீதத்துவநிதி – ராஐஸ்ரீ கிருஷ்ணராஐமஹாராஜ அவர்களால் இயற்றப்பட்டது. ஸ்ரீரங்கம் ஸ்ரீவாணி விலாஸ பதிப்பகம்

மா.சிதம்பரேஸ்வரர்

கௌரவ உதவிப்பேராசிரியர், கட்டடக்கலைத் துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.